சென்னை எங்கும் பல இடங்களில் கடந்த ஒரு வாரமாகத் திருவிழாபோல் கொண்டாட்டம். பல வலைப்பதிவர்கள் இதைப் பற்றி எழுதி வருகிறார்கள். இது தமிழர் பாரம்பரியக் கலைகளைக் கொண்டாடவா, அல்லது சென்னையில் உள்ள மக்கள் (தமிழர், வந்தேறிகள், இன்னபிற என்று கட்டம் கட்டாமல்) பல்வேறு கொண்டாட்டங்களிலும் பங்குபெறவா என்று தெரியவில்லை. ஆங்காங்கு கர்நாடக இசைக் கச்சேரிகளும் உள்ளன, கானா இசைக்குழுக்களும் உள்ளன, ஜாஸ், மேற்கத்திய இசையும் உண்டு. கரகாட்டம், காவடியாட்டம், கதை சொல்லல், வில்லுப்பாட்டு ஆகியனவும் உள்ளன.
நிகழ்ச்சி நடத்தும் குழுவில் ஒருவரான மைலாப்பூர் டைம்ஸ் வின்செண்ட் டிசோசா பத்திரிகை நிருபர் ஒருவரிடம் பேசும்போது கேட்டேன். "To make use of open spaces" என்று வின்செண்ட் பேசிக்கொண்டிருந்தார். ஆங்காங்கு இருக்கும் வெட்டவெளித் திடல்களை மக்கள் மனமகிழ்வுக்குப் பயன்படுத்துவது என்ற எண்ணம் புரிந்தது. இதற்கு என்ன செலவாகும், யார் பயனடைகிறார்கள் என்ற பல கேள்விகள் வருகின்றன. அரசு பணம் செலவழித்துள்ளது (சுற்றுலாத்துறை மூலமாக). பல ஸ்பான்சர்கள் பணம் உதவியுள்ளனர். விவாதங்கள் இருக்கும், ஆனால் ஆரோக்கியமான விவாதங்களாக இருந்தால் நல்லது.
மரினா கடற்கரைக்கு எதிரில், ராணி மேரி கல்லூரிக்கு அருகில் உள்ள வெட்டவெளித் திடல் - நெய்தல் திடல் - என்ற பெயரில். அங்கு சில நிகழ்ச்சிகள். நான் போன நேரத்தில் கிராமீய முறையில் ராமாயணம் கதை சொல்லல் - வில்லுப்பாட்டு. அப்பொழுதுதான் தாடகை வதம் நடந்துகொண்டிருந்தது.
நிகழ்ச்சியைப் பார்க்கும் கூட்டத்தின் ஒரு பகுதி இங்கே.
பக்கத்தில் உணவுக்கடைகள். தோசை, பஜ்ஜி, தண்ணீர் விற்கும் இடங்கள். அவற்றுக்கு நடுவே புழுங்கல் அரிசிச் சேவை (தேங்காய், எலுமிச்சை சுவைகளில்) - ரூ. 10. அலுமினியத் தாளில் சுற்றிய பிள்ளையார் கொழுக்கட்டை (ரூ. 4).
பாவைக்கூத்துக்கு திரையும் வெளிச்சமும் தயார் நிலையில். மக்கள் எதிர்பார்ப்புடன் உட்கார்ந்திருந்தனர். ஆனால் நான் கிளம்பும் வரையில் நிகழ்ச்சி ஆரம்பிக்கவில்லை.
-*-
சங்கமம் பற்றிய பிற பதிவுகள் சில:
பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சி!
நேரடி ரிப்போர்ட்
சென்னை சங்கமம் - தொடக்க விழா!
சென்னை சங்கமம் - 2
வாழ்க சென்னை சங்கமம்!!!!!
பண்பாட்டு மறுமலர்ச்சிக்கு உதவுமா?
http://www.chennaisangamam.com/
ReplyDelete