குரு படத்தைப் பற்றி அதிகம் ஜவ்வு இழுக்க விரும்பவில்லை. 'சினிமாவை சினிமாவாகப் பார்க்கணும்', 'அனுபவிக்கணும், ஆராயக்கூடாது', 'எல்லாத்தையும் சொன்னா ஆறு மணி நேரம் ஆகும்', 'சில விஷயங்களைச் சொன்னா நம்ம மக்களுக்குப் புரியாது' என்றெல்லாம் சொல்பவர்களிடம் நான் விவாதிக்கப் போவதில்லை.
மிக அதிகமாகப் படிக்கப்படும் இதழ் ஒன்றில் பத்தி எழுதும் மிக முக்கியமான எழுத்தாளர் ஒருவர் சர்வதேசத் தரத்தில் செய்யப்பட்ட ஒரே படம் இதுதான் என்கிறார். கொஞ்சம் மேவரிக்கான ஓர் எழுத்தாளர் மணிரத்னம் கையில் முத்தமிட வேண்டும் என்கிறார்.
என் சிற்றறிவுக்கு இவையெல்லாம் கொஞ்சம் ஓவராகப் படுகிறது.
ஜெர்ரி மெக்வயர் என்றொரு படம் - 1996-ல் வந்துள்ளது. கஷ்டமான சப்ஜெக்ட். ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங் பற்றி. விளையாட்டு வீரப் பிரபலங்களை மார்க்கெட் செய்யும், நிர்வகிக்கும் நிறுவனம். (சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி போன்றவர்கள் மாதிரி.) அதில் வேலை செய்யும் ஜெர்ரி மெக்வயர் என்பவர் பிரபலங்களை நிர்வகிப்பதில் சில மாற்றுக்கருத்துகளை முன்வைக்கிறார். அதாவது லாபம் என்பதை மட்டுமே முன்வைக்காமல் தாங்கள் நிர்வகிக்கும் விளையாட்டு வீரர்களை மனிதர்களாக மதித்து, குறைவான விளையாட்டு வீரர்களை மட்டுமே நிர்வகிப்பதற்காக எடுத்துக்கொண்டு, அவர்களது தனி வாழ்க்கையிலும் விளையாட்டிலும் நேர்மறையானதொரு மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்பதுதான் அது.
இந்தக் கொள்கையை முன்வைத்ததற்காகவும் வேறு சில தனிப்பட்ட வேறுபாடுகள் காரணமாகவும் வேலையை இழக்கிறார் ஜெர்ரி. அவர் சொல்வது என்ன என்று புரியாத நிலையிலும்கூட சில வாசகங்களால் உந்தப்பட்ட டாரதி என்னும் சாதாரண (கொஞ்சம் அசடான) காரியதரிசியும் தன் வேலையை உதறிவிட்டு ஜெர்ரியுடன் சேர்கிறார்.
ஜெர்ரி தன் குறிக்கோளை நிலைநாட்டக் கடுமையாக உழைக்கிறார். ஒரு செலிபிரிட்டி கிடைப்பதற்குள் திண்டாட்டம். கொள்கைமீதான நம்பிக்கை தடுமாறுகிறது. ஆனால் கடைசியில் ஹாலிவுட் சினிமாக்களுக்கே உரித்தான உச்சகட்டம், எல்லாம் சுபமாக முடிகிறது. தேவையான காதல், செக்ஸ் காட்சிகள், கொஞ்சம் கொஞ்சம் ஹ்யூமர் என்று எல்லாமே உண்டு. அதாவது சராசரி வணிகப்படம்தான். கலைச்சேவை எல்லாம் அல்ல. நல்ல எண்டெர்டெயின்மெண்ட் கதை, அதே சமயம் ஜல்லி அடிப்பது கிடையாது. அதிகம் தெரியாத நீங்கள்கூட அமெரிக்கன் ஃபுட்பால் விளையாட்டு, அதில் விளையாடும் வீரர்களில் ஈகோ, ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங், ஸ்போர்ட்ஸ் ஏஜெண்ட்கள் இயங்கும் முறை என்று அத்தனையையும் - அதாவது கதைக்கு ஆதாரமான சூழலை முழுவதுமாக அறிந்து கொள்ளலாம்.
நடுநடுவே காதல், கோபம், வெறுப்பு, பாசம், அன்பு என்று தேவையான அளவுக்கு பிற மேட்டர்களையும் அள்ளித் தெளித்திருப்பார்கள்.
இதேமாதிரி குருவை எடுத்திருக்க முடியாதா? நிச்சயமாக முடியும். செய்யவில்லை.
குருவின் ஆதாரக் கதை கிராமத்திலிருந்து வந்த இளைஞன் அந்த 50-60களின் லைசென்ஸ், கோட்டா, பெர்மிட் ராஜில் சாதனை புரிந்தான் என்பதுதான் என்கிறார்கள். ஆனால் லைசென்ஸ், கோட்டா, பெர்மிட் ராஜ் என்பது எத்தகையது என்பது ஒரு கணத்தில்கூட விவரிக்கப்படவில்லை. இந்தக் கதைக்கு முக்கியமான சோஷலிச அரசு, அதன் அதிகாரிகள், மந்திரிகள், கொள்கை முடிவுகளை எடுப்பவர்கள் (திட்டக் கமிஷன்) ஆகியோர் படத்தில் எங்குமே வருவதில்லை. ஒரு சீனில் வரும் நியாயமான மந்திரி மிரட்டப்படுகிறாரா (பிளாக்மெயில்?) என்பதும் விளக்கமாகச் சொல்லப்படவில்லை.
இந்தச் சூழலில் இயங்கிய பிற நிறுவனங்கள் என்ன செய்தார்கள், என்ன செய்யவில்லை, குரு எதைத் திறமையாகச் செய்தார், யாரைவிடத் திறமையாகச் செய்தார் என்று சொல்லப்படவில்லை. சொல்லப்போனால் குருவின் ஓயாத பேராசை (Undying Ambition) என்ன என்பதுகூட படத்தைப் பார்க்கும்போது எனக்கு விளங்கவில்லை. 'இன்னமும் நாலு தொழிற்சாலை கட்டுவோம்' போன்ற பாமரத்தனமான ஸ்டேட்மெண்ட் மட்டும்தான் காதில் விழுகிறது.
பாலியெஸ்டர் சங்கதிதான் குருவின் வளர்ச்சிக்கு ஆதாரம் என்றால் அது ஏன், எப்படி என்று சொல்லப்படுவதில்லை. எந்த விதத்தில் அன்றைய இந்தியாவில் ரேயான் முதலிய செயற்கை இழைகள் மக்கள் மனத்தில் இடம் பிடித்தன என்று சொல்லப்படுவதில்லை. (இன்று ரேயானை சும்மா கொடுத்தால்கூட யாரும் வாங்கி தைத்துப் போட்டுக்கொள்ள மாட்டார்கள். இன்றைய ஃபேஷன் பருத்தி. ஏன் அன்று ரேயானுக்கு அவ்வளவு மவுஸு என்று தெரியுமா?) குரு செய்ததை வேறு யாரும் செய்திருக்க முடியாதா?
செங்கல் செங்கல்லாக ஷக்தி நிறுவனத்தைக் கட்டுவதைக் காண்பிக்கச் சொல்லி நான் கேட்கவில்லை. ஜெர்ரி மெக்வயர் தன் கொள்கை சரியானதுதான் என்று காண்பிக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியுள்ளது என்பதுதான் அந்தக் கதை எனும்போது அதற்குத் தேவையான டிரீட்மெண்ட் அந்தப் படத்தில் வருகிறது அதேபோல 30,000 ரூபாய் பணத்துடன் மும்பைக்கு வந்த குரு எப்படி பிரம்மாண்டமான நிறுவனத்தைக் கட்டினார் என்பதுதான் இந்தக் கதை என்றால் எப்படி என்பது திரைக்கதையில் கட்டாயம் காண்பிக்கப்படவேண்டும்.
"Guru represents the “new” emerging India of that era that was still mired deeply in conservative, laidback systems." குருதான் புதிய இந்தியாவின் பிரதிநிதி என்பது எனக்கு பயத்தைத் தருகிறது. அந்த பயத்தை மட்டும்தான் நான் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
மற்றபடி சரியான ரிசர்ச் செய்யப்படாமல் பல இடங்களில் லாரி லாரியாக ஜல்லி கொட்டி நிரப்பியிருக்கிறார்கள். ஜஸ்டிஸ் டிபார்ட்மெண்ட் என்ற ஒன்று இந்தியாவில் இருப்பதாக எனக்குத் தெரியாது. ஒரு நிறுவனம் தவறு செய்திருந்தால் அதைப் பல தளங்களில் விசாரிக்க முடியும். பங்குச் சந்தை அளவில் ஊழல் என்றால் செபி, வருமான வரியில் தில்லுமுல்லு என்றால் வருமான வரித்துறை, ஆயத்தீர்வையில் பஜனை என்றால் செண்ட்ரல் எக்ஸைஸ், அந்நியச் செலாவணியில் அல்லது ஏற்றுமதி/இறக்குமதியில் திருட்டுத்தனம் என்றால் ரிசர்வ் வங்கி அல்லது கஸ்டம்ஸ் - மொத்தத்தில் நிதியமைச்சரின் கையின்கீழ் வரும். அவர் ஏன் விசாரணைக் கமிஷன் அமைக்கிறார் என்று யாராவது கேட்டுச் சொன்னால் சரி.
எல்லா நாள்களும் ரகசிய விசாரணையும் கடைசியில் ஒரு கிளைமாக்ஸ் காட்சிக்காக டிவி கேமராக்கள் முன்னிலையில் விசாரணையும் என்பது புதுமையாக நாம் யாருமே கேட்டிராத, கண்டிராத செய்தியாக இருக்கிறது. நம்மூர் சினிமாவில் மட்டும்தான் புருஷன் பொண்டாட்டி மட்டும் விசாரணை போது தாங்களே வாதாடுவார்கள். வக்கீல்கள் தேவையே கிடையாது.
நிறுவனங்களில் நடக்கும் தில்லுமுல்லுகளுக்கு பதில் சொல்வது பங்குதாரர்களின் வேலை கிடையாது. நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் - CEO அல்லது மேனேஜிங் டைரக்டர், ஃபைனான்ஸ் டைரக்டர், கம்பெனி செக்ரட்டரி, அல்லது நிறுவனத்தின் போர்ட் 'ஆத்தரைஸ்' செய்யும் பிரதிநிதிகள், வக்கீல்கள்... ஆனால் குருவின் மனைவி "ஹோல்டிங் கம்பெனியில் 50% பங்குதாரர்" என்ற ஒரே காரணத்தால் விசாரணையின்போது உடன் இருக்க அனுமதிக்கப்படுகிறார். அப்படியானால் ஷக்தி நிறுவனத்தின் எந்த ஷேர்ஹோல்டரும் அந்த விசாரணையின்போது உடன் இருக்கலாம்! அப்படியானால் லட்சக்கணக்கான (வாங்க்கெடே ஸ்டேடியம் முழுக்க நிரம்பக்கூடிய) பங்குதாரர்களும் உள்ளே இருக்கலாம்!
இப்படி சின்னச் சின்னதாக, பெரிது பெரிதாக என்று ஓட்டைகளைக் காண்பித்துக்கொண்டே போகலாம். ஆனால் இதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் சர்வதேசத் தரத்தில் படம், கைக்கு முத்தம், விரலுக்கு மோதிரம், இதோ ஆஸ்கார் விருது என்று பேசி நம்மை நாமே தாழ்த்திக்கொள்வது கேலிக்கூத்து.
இந்தப் படத்தைப் பார்க்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. எல்லோரும் சந்தோஷமாகப் போய்ப் பாருங்கள். ஆனால் இந்திய சினிமா போகவேண்டிய தூரம் அதிகம் என்று தெரிந்துகொண்டே பாருங்கள். சாதாரண ஹாலிவுட் வணிக சினிமாவை எட்டிப்பிடிக்கவே நாம் பல லட்சம் மைல்களைக் கடக்கவேண்டும்.
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
19 hours ago
நியாயமான கேள்விகள் பத்ரி...
ReplyDeleteஎனக்கும் அந்த ஒரு கேள்வி மட்டும் இருந்தது... பாலியஸ்டர், பாலியஸ்டர்னு சொல்லும் போது அதை வைத்து அவர் மக்கள் மனதில் எப்படி இடம் பிடிக்க போகிறார் என்று ஒன்று இரண்டு டயலாக்குகளை வைத்திருக்கலாம்...
அவர் ஆரம்ப கால வளர்ச்சியை இன்னும் அழகாக சொல்லியிருக்கலாம்... 10 நிமிடம் அதிகமாகியிருக்கும்... அவ்வளவுதான்.
//எல்லா நாள்களும் ரகசிய விசாரணையும் கடைசியில் ஒரு கிளைமாக்ஸ் காட்சிக்காக டிவி கேமராக்கள் முன்னிலையில் விசாரணையும் என்பது புதுமையாக நாம் யாருமே கேட்டிராத, கண்டிராத செய்தியாக இருக்கிறது.//
ReplyDeleteஎன்ன பத்ரி? ஸ்கோர்ஸீஸியின் The Aviator பாருங்கள். ஹோவர்ட் ஹ்யூஸ் இந்தியாக்காரர் இல்லையா பின்னே? ஒருவகையில் இது மணிரத்னத்தின் தூரதிருஷ்டிதான் என்று சொல்லவேண்டும். எதிர்காலத்தில் இப்படித்தான் இருக்கும் என்று யூகித்து, அதைக் கடந்தகாலத்தில் பொருத்தி எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். சுவாரஸ்யமான உத்தி ;-).
அருமையான அலசல் பத்ரி.
ReplyDeleteஏறத்தாழ இதே காரணங்களால்தான் எனக்கும் இப்படம் பிடிக்கவில்லை. டெக்னிக்கலாக நன்றாகவே இருந்தாலும், கதையின் ட்ரீட்மெண்ட்டில் கன்விக்ஷன் தெரியவே இல்லை.
பத்ரி சார்.....
ReplyDeleteநம்ம தோஸ்த்..பார் டெண்டர்..எங்க சார்?
ஆளையே பார்க்க முடியவில்லை?
விசாரிச்சேன்னு சொல்லுங்க சார்!
I complete agree with your argument. The screenplay needs to be developed as close to the reality. The problem is, if you develop and do a movie, then it will not do for masses in India, hence, all shortcuts, and unimaginable sequences.
ReplyDeleteஜெர்ரி மெக்வயர் பார்த்திருக்கிறேன், குரு பார்க்கவில்லை. விமர்சனங்கள் படித்த பிறகு பார்க்கத் தோனவில்லை. உண்மைதான் நாம் இன்னும் நகரவேண்டிய தொலைவு அதிகம் இருக்கிறது.
ReplyDeleteஎனக்கு ஒரு கேள்வி பத்ரி, நீங்கள் பிரபலங்களை(வரலாற்றோ இல்லை மற்ற விஷயங்களாலோ)ப் பற்றி புத்தகம் போடும் பொழுது ஒரு டெம்ப்ளேட்டைப் பின்பற்றுவதாகப் படித்திருக்கிறேன். ஏன் இந்த டெம்ப்ளேட் மணிரத்தினத்திடம் இருக்கக்கூடாது. அவரும் பாவம் படமெடுப்பவர் தானே. பொருளாதார சிக்கல்கள் உடையவர்தானே. இந்த டெம்ப்ளேட்டை வைத்து உபயோகிப்பதை மட்டும் கொஞ்சம் விளக்குங்கள்.
படம் பார்க்கவில்லையாதலால், என்னால் கம்பேர் செய்யமுடியாது. ஜெர்ரி மெக்வயரையும் குருவையும். ஆனால் நீங்கள் சொல்லும் விஷயம் புரிகிறது மாதிரிதான் இருக்கிறது. வேண்டுமானால் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.
>>மிக அதிகமாகப் படிக்கப்படும் இதழ் ஒன்றில் பத்தி எழுதும் மிக முக்கியமான எழுத்தாளர் ஒருவர் சர்வதேசத் தரத்தில் செய்யப்பட்ட ஒரே படம் இதுதான் என்கிறார்.
ReplyDeleteஅட சுஜாதானு நேரடியாக சொல்லுங்களேன். இதில் என்ன தயக்கம். சுஜாதா அவருடைய favorite directors ஆன மணிரத்னம், ஷங்கர் ஆகியோரை பற்றி என்றைக்கு விமர்சனம் செய்திருக்கிரார் ?
If Maniratnam would've taken the movie as per your advice, he should've taken a serial for 13 weeks, not a 3 hour film
ReplyDeleteஅட, இது ஜெர்ரி மெக்வயர் மாதிரி எடுத்த படமா?
ReplyDeleteஇன்னும் பார்க்கலை. ( பதிவைப் படிச்ச பிறகு பார்க்கணுமா? 'ன்னும் இருக்கு)
பத்ரி
ReplyDeleteநானும் படம் பார்க்கவில்லை. நீங்கள் சொல்லும் அனைத்து ஓட்டைகளையும் மணியின் பழைய அன் அபிஷியல் பயோ-பிக் கான 'இருவரில்' கூட பார்க்க முடியும். முன்கதை தெரியாமல் ஒருவர் அந்தப்படத்தைப் பார்த்தால் மண்டையப் பிய்த்துக்கொள்ளவேண்டியதுதான்.
//ஆனால் இதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் சர்வதேசத் தரத்தில் படம், கைக்கு முத்தம், விரலுக்கு மோதிரம், இதோ ஆஸ்கார் விருது என்று பேசி நம்மை நாமே தாழ்த்திக்கொள்வது கேலிக்கூத்து.
//
முற்றிலும் உண்மை. celebration of mediocrity - தான் இன்றைய நடைமுறை. ஒரு சராசரி டைரக்டரான மணிரத்னத்தை ஆகாஓகோவென்று ஏற்றிவிட்டு இன்றைக்கு அவர் பெயர் திரையில் வந்தாலே அது ஆஸ்கார் படம் என்று டிபால்டாக நம்பும் நாடாக போய்விட்டோம். அவரிடம் இதற்கு மேல் எதிர்பார்ப்பது நம் தவறேயன்றி அவருடையதல்ல. இந்த 'ஹைப்' சினிமாவில் மட்டுமில்லை. எல்லாத்துறைகளிலும் பரவியிருப்பதுதான் கவலையைத் தருகிறது.
ஜெர்ரி மெக்வயர் சொன்னீர்கள். எனக்கு "A Beautiful Mind" நினைவுக்கு வருகிறது. இதில் ஜான் நாஷ் ஏன் நோபல் பரிசு வாங்கினார் என்பது உட்பட அவரின் வளர்ச்சி/வீழ்ச்சி அனைத்தும் 'ஜான் நாஷ் என்பவர் யாரென்றே தெரியாமல் படம் பார்த்த என்னைப்போன்றவர்களுக்கும்' புரியும் வகையில் இருக்கும். அதுபோலவே "confessions of a dangerous mind" மற்றும் சமீபத்திய "Ray" யும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஒருவேளை இது திருபாயைப் பற்றிய படமென்று தெளிவாகச் சொல்லி எடுத்திருந்தால் ரிலையன்ஸ் பணமும் கொடுத்திருப்பார்கள்/இன்னும் தெளிவாய் எடுத்திருப்பாரோ?
Guru is not an utter copy of Dhiru! (Thanks a million for That Way!) I re-read the Ambani book from Kizhakku Pathipagam, and didnt find anything untoward written on the excise fun stuff... Raghavan played safe?
ReplyDeleteWell Mani Rathnam lives on copying others life stories (Iruvar, Bombay - incidents, with Ram temple, Uyire - even a Kashmiri despised that, for glorifying.. etc)
Mani should be made to watch "Fanaa" thousand times..
Theerpu ezhuthapattathu!
Rgds
Kamal
The biggest problem in Tamil cinema is that the directors assume that they produce movies for the Least Common denomintor of the population - They are pretty much convinced that this demographic is pretty dumb - end result - all you get is dumb movies on and on.
ReplyDeleteI challenge Tamil Directors to really focus their efforts to make a smart movie - I am sure it will be well received if the presented the right way.
பத்ரி,
ReplyDeleteநான் புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை. அதனால் கேட்கிறேன். கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்த அம்பானி வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில், நீங்கள் சொன்ன இந்த விஷயங்கள் விரிவாக அலசப்பட்டிருக்கின்றனவா? இருந்தால், சினிமாவை ஒதுக்கிவிட்டு அதைப் படிக்கலாம் என்பதற்காகக் கேட்கிறேன்.
அன்புடன், பி.கே. சிவகுமார்
மன்னிக்கவும் பத்ரி அவர்களே,
ReplyDeleteஎனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் நடைபெற்ற ஒரு உரையாடல் நினைவுக்கு வருகிறது. சில ஆங்கில படங்களை நாம் பார்க்கும்போது இது போல் தமிழ் படங்கள் (அ) இந்திய படங்கள் எப்போது வரும் என்ற ஆசை எல்லோருக்கும் வருவது நியாயம். ஆனால் ஆங்கில படத்தின் திரைவீச்சும், அது பாயும் தொலைவும் அதிகம். உதாரணமாக ஒரு படம் ஹாலிவுட்டில் திரையிடப்படும்போது அதன் மொத்த வசூல், மற்ற நாடுகளில் திரையிடப்படும் மொத்த வசூல் ஆகியவற்றையும் கொண்டே கணக்கு கொள்ளப்படுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சாதாரண ரசிகனுக்கு புரியவைக்க வேண்டும் என்ற சிரத்தை ஷங்கருக்கு உள்ள அளவு மணிரத்னத்திடம் கிடையாது என்று தான் நினைக்க தோன்றுகிறது. முதல் நாள் வசூல், முதல் வார வசூல் ஆகியவற்றை கொண்டே வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. ஆகவே பிரமாண்டம் என்ற சொல்லுக்கும் கதையாடல் என்ற நிலைக்கும் மக்கள் உந்தப்படுகிறார்கள். இதில் பாதிக்கப்படுபவர்கள் தயாரிப்பாளர்களே....
நாம் (அ) இந்திய மக்கள் சகிப்புதன்மைக்கு பெயர் போனவர்கள். உன் வீட்டு அருகில் குப்பை உள்ளது. அது மிகவும் நாற்றம் உடையது என்றால் அதை நாம் சுத்தப்படுத்த மாட்டோம். நாற்றத்தினூடே வாழப் பழகிக்கொள்வோம். காரணம் குப்பை எடுப்பது நம் வேலை அல்ல. காரணம் கேட்டால் அதை செய்யவேண்டியவன் சோம்பேறி ஆகிவிடுவான் என்ற புதுமொழி கூறுவார்கள். இது சினிமாவுக்கும் சிறப்பாய் பொருந்தும் என்பது என் கருத்து. சினிமா எனப்படும் ஊடகம் மட்டுமே மனிதனை இறைவனாய் காட்டுகிறது. ரசிகனை மடையனாக்குகிறது. திரையில் மின்னும் நட்சத்திரம் தான் கடவுள் ஆகிவிட்டதால் அனைவரையும் ஆசிர்வதிக்க புறப்படுகிறான். அவனது அடுத்த படி அரசியல்... :(((
இந்த இடத்தில் இயக்குநரின் பங்கு சாமிக்கு சரியாய் மணி அடிக்கும் பூசாரி வேலை மட்டுமே... என்னால் மணியை அப்படித்தான் எண்ண தோணும்.
ஒரு புத்திசாலியும் இப்படி வீணாகிறாரே என்பது என் ஆதங்கம்.
//மிக அதிகமாகப் படிக்கப்படும் இதழ் ஒன்றில் பத்தி எழுதும் மிக முக்கியமான எழுத்தாளர் ஒருவர் சர்வதேசத் தரத்தில் செய்யப்பட்ட ஒரே படம் இதுதான் என்கிறார். கொஞ்சம் மேவரிக்கான ஓர் எழுத்தாளர் மணிரத்னம் கையில் முத்தமிட வேண்டும் என்கிறார்.
என் சிற்றறிவுக்கு இவையெல்லாம் கொஞ்சம் ஓவராகப் படுகிறது.//
நன்றாக படித்தவர்களே இப்படியென்றால் நானெல்லாம் என்ன சொல்வது. வேண்டுமானால் என்னால் முத்தமிட்ட உதட்டில் ஒரு சிகரெட் ஏற்றி பற்ற வைக்க முடியும். :))))))))
சற்று வேலை இருப்பதால் நான் விரிவாய் மீண்டும் வருகிறேன்.
சென்ஷி
பத்ரி
ReplyDeleteநான் குரு இன்னும் பார்க்கவில்லை. மதுர் பண்டார்கரின் கார்ப்பரேட் என்ற இந்தி படம் பார்த்தீர்களா ? அதிலும் நிறைய ஜல்லியடிப்புக்கள் இருந்தாலும் குருவை விட நிறையவே ரியலிசமானது என்பது உங்கள் பார்வையைப் பார்க்கும் பொழுது தெரிகிறது. மணிரத்தினம் மட்டும் அல்ல தமிழ்ப் பட இயக்குனர்கள் அனைவருமே எதையுமே மேம்போக்காக எடுப்பவர்கள்தான். எதையும் ஆழமாகச் சொல்ல வேண்டும், யதார்த்தமாக இருக்க வேண்டும், நிஜத்துடன் ஒத்துப் போக வேண்டும் என்ற அக்கறையெல்லாம் எந்த தமிழ்ப் பட இயக்குனருக்கும் கிடையாது. எப்படி எடுத்தாலும், எந்தக் குப்பையைக் கொட்டினாலும் பார்க்க மூளையை அடகு வைத்த மகாஜனங்கள் நிறையவே இருக்கும் வரை இவர்கள் குப்பை குப்பை மேலும் குப்பைகளைத்தான் தருவார்கள். மணியின் படங்களில் கொஞ்சம் உருப்படியானது என்றால் அஞ்சலியையும், கன்னத்தில் முத்தமிட்டாலையும், ரோஜாவையும், மொளனராகத்தையும் சொல்லலாம். நாயகன் மிகைப்படுத்தப் பட்டதென்றாலும் ரசிக்கக் கூடிய படமே. ஆனால் மணிரத்தினத்தின் திறமைக்கும் வீச்சுக்கும் மசாலா, ஆடல் பாடல்களைக் குறைத்துக் கொண்டு ரியலிசமான , ஆழமான படங்களை எடுக்க முயலலாம். ஏனோ தன் திறமையை இது போன்ற குப்பைகளை எடுத்து வீணாக்கிக் கொண்டிருக்கிறார். ஒரு வேளை மூளைகெட்ட இந்திய ரசிகர்களுக்கு இதுவே ஜாஸ்தி என்று நினைத்து விட்டாரோ என்னமோ??
மிகவும் சிக்கலான கதையமைப்புள்ள பல ஆங்கிலப் படங்கள் உள்ளன அவைகள் பெரும்பாலும் எளிமைப்படுத்துகிறேன் பேர்வழி என்று அபத்தக் களஞ்சியமாகக் குப்பை கொட்டுவதில்லை. ஹாலிவுட் வரை கூட போக வேண்டாம், பக்கத்தில் உள்ள மலையாள இயக்குனர்களிடம் நம்ம ஆட்கள் ட்யூஷன் எடுத்துக் கொண்டால் கூட போதுமானது.
நீங்கள் சொல்வது சரிதான் பத்ரி. ஒரு காலத்தில் மணிரத்னம் ஆகியோரது படங்களை நாம் மிகவும் ரசித்திருக்கிறோம். ஆனால், கடந்த 5 வருடங்களில் நம்முடைய ரசனை அதிகம் வளர்ந்துள்ளது. உலக சினிமா மற்றும் இலக்கியத்தின் மீதான நமது அறிவு விசாலமாகியுள்ளது. சிறந்த படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ReplyDeleteதமிழில் பாலாவின் படங்கள் அவ்வாறு எடுத்துக் கொண்ட விசயத்தை அதன் ஆழம் வரை சென்று தேடும் தேடல் உள்ளது. அத்தகைய படங்களை பார்த்த பின் நமக்கு சிறந்த இயக்குனர்களாக அறியப்படுபவர்களின் படங்கள் கூட திருப்தியை எற்படுத்த மாட்டேன் என்கின்றன.
அந்த வரிசையில் 'அந்நியனும்' , 'ஆயுத எழுத்தும்' கூட என்னை சிறிதளவும் பாதிக்கவில்லை. மாணவர்கள் அரசியலில் என்ற கருத்தை ஆயுத எழுத்தை விட எத்தனையோ அழுத்தமாக சொல்லி இருக்க முடியும்.
ஆனால் நம் மக்கள் புகழ் பெற்றுவிட்டவர்களின் செயல்களை அப்படியே சரி என்று ஏற்றுப் புகழ்வார்கள்.
ரசனை எல்லா மட்டத்திலும் வளர வேண்டும். அதுவரை நம் போன்றவர்களுக்கும், கமல் போன்ற கலைஞர்களுக்கும் திண்டாட்டம்தான் !
நன்றி பத்ரி,
ReplyDeleteநான் இன்னும் குரு பார்க்கவில்லை. 'கன்னத்தில் முத்தமிட்டால்' இற்குப் பிறகு வந்த மணிரத்தினம் படங்கள் பார்க்காமல் விட்டுவிட்டேன். ஏனென்றால் அப்படத்தில் ஈழப்போராட்டத்தை வெறும் ஆயுத வியாபாரிகளினால் நடக்கும் போராட்டம் என்பதுபோல் வசனம் அமைத்திருந்தார். ஈழத்தமிழனான எனக்கு இது மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது மட்டுமல்ல்ல இவ்வாறு தான் மணிரத்தினம் மற்றைய படங்களிலும் சம்பவங்களை/மனிதர்களை/உணர்வுகளை மலினப்படுத்துகிறார் என்ற முன்னைய விமர்சனங்களின் ஆதங்கம் புரிந்தது. அதிலிருந்து மணிரத்தினம் என்னை கவருவதே இல்லை.
ஆனாலும் நான் தவறான கருத்துடன் இருக்கிறேனோ என்ன அவ்வப்போது நினைப்பேன். ஆனால் உங்களின் குரு பற்றிய பார்வையும் அதற்கான பின்னூட்டங்களும் எனது கருத்தை உறுதி செய்வதாக உள்ளது.
நன்றி.
படத்தை பார்த்தவன் ( தியேட்டரில் போய்) என்ற முறையில், இது 'நச்' என்ற அலசல்..!!!!
ReplyDelete