Friday, September 10, 2010

பாகிஸ்தான் கிரிக்கெட் ஊழல்

(31 ஆகஸ்ட் 2010 அன்று எழுதியது)

என்னவோ, பாகிஸ்தானுக்கு நேரமே சரியில்லை. ஒருபக்கம், ஆட்டம் காணும் அரசியல் நிலைமை. குடியாட்சி அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருக்கும் நாட்டில் எப்போது வேண்டுமானாலும் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டு, யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது என்று சொல்லக்கூடும்.

மறுபக்கம், நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு கிடையாது. கஜானாவில் பணமும் கிடையாது. எப்படி அடுத்த மாதம் நாட்டை நடத்துவது என்றும் யாரிடம் கையேந்தலாம் என்றும் நாட்டின் பிரதமர் யோசித்துக்கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம், நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள். தாலிபன், அல் காயிதா இருவரும் பாகிஸ்தானைத் தங்கள் முகாமாக வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். தீவிரவாதிகளை நசுக்க முற்பட்டால், நாடெங்கும் தற்கொலைக் குண்டுவெடிப்பு. நசுக்காவிட்டால் அமெரிக்காவின் அச்சுறுத்தல்.

இவை போதாது என்று சென்ற மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வீடிழந்து, உணவும், இருப்பிடமும், குடிக்க நீரும் இன்றித் திண்டாடுகின்றனர். நாடு மீண்டும் பழைய நிலைக்கு வர ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் ஆகலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

இவ்வளவு பிரச்னைக்கு நடுவில் கிரிக்கெட் ஆட்டம் ஒரு கேடா என்று நீங்கள் கேட்கலாம். ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் அதனால் யாரும் கவலைப்படப்போவதில்லை. ஆனால் நிலைமை இங்கே முற்றிலும் வேறு.

கிரிக்கெட்மீது சூதாட்டம் நிகழ்வதும், அது தொடர்பாக ஆட்டக்காரர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு ஆட்டத்தின் முடிவுகள் மாற்றப்படுவது பற்றியும் நமக்கு ஓரளவுக்குத் தெரியும்.

பல நேரங்களில் ஓர் ஆட்டத்தின் வெற்றி தோல்வியை, ஒரு சில வீரர்களால் மட்டுமே தீர்மானித்துவிட முடியாது. ஆனால் ஆட்டத்தின் சில நிகழ்வுகளை ஒரு அணியின் தலைவரால் தீர்மானிக்கமுடியும். உதாரணமாக இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும் ஓர் அணியில் யார் முதலில் பந்துவீசப் போகிறார் என்பதை அணித்தலைவர்தான் தீர்மானிக்கிறார். யாருமே எதிர்பாராதவகையில் ஆட்டத்தின் முதல் ஓவரை வீச ஒரு ஸ்பின்னரைக்கூட கேப்டன் அழைக்கலாம்.

அணித்தலைவரும் பந்துவீச்சாளரும் உள்கை என்றால் மேலும் பல விஷயங்களைச் செய்யலாம். தான் வீசும் ஓவரின் மூன்றாவது பந்தை நோபால் அல்லது வைட் ஆக வீசுலாம்.

இதனால் யாருக்கு என்ன லாபம்? இதனால் ஆட்டத்தின் போக்கு பெரிய அளவில் மாறப்போவதில்லை. ஆனால் சூதாட்டப் பணத்தின் போக்கு எந்தப் பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம்.

இதற்குப் பெயர்தான் ஸ்பாட் ஃபிக்ஸிங் என்று பெயர். சூதாட்ட அமைப்புகள் (சட்டபூர்வமானவை, சட்டபூர்வமற்றவை என இரண்டுமே) ஒரு நிகழ்வு நடப்பதற்கு இன்ன odds என்று சொல்லும். அதாவது, மூன்றாவது ஓவரில் முதல் பந்து நோபாலாக இருப்பதற்கு 1-க்கு 3 என்று சொன்னால், நீங்கள் 1 ரூபாய் கட்டினால், அந்த நிகழ்வு நடந்தால், உங்களுக்கு சூதாட்ட நிறுவனம் 3 ரூபாய் கொடுக்கும். எனவே முன்னதாக அணித்தலைவரிடமும் பந்துவீச்சாளர்கள் சிலரிடமும் பேசி வைத்துக்கொண்டால், அவர்கள் கொடுக்கும் சிக்னலுக்கு ஏற்ப நீங்கள் பெட் கட்டலாம். பணத்தை அள்ளலாம். அதில் கொஞ்சத்தை விளையாட்டு வீரர்களுக்கும் வெட்டலாம்.

சமீபத்தில் லண்டனின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் டெஸ்டின்போது, நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் என்ற ஒரு பத்திரிகை பொறி வைத்து, பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் பணம் வாங்கிக்கொண்டு இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டனர் என்பதைக் கண்டுபிடித்து வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து உலக கிரிக்கெட் அரங்கில் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது.

இந்திய, தென் ஆப்பிரிக்க, பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்கள்மீது இதுபோன்ற குற்றங்கள் சாட்டப்பட்டன. இதில் இந்திய, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகங்கள் உடனடியாக தங்கள் கட்டமைப்பைச் சுத்தம் செய்வதில் இறங்கி அதில் பெருமளவு வெற்றியும் கண்டுள்ளனர். அசாருதீன் போன்ற பெருமைமிக்க ஆட்டக்காரர்கள் கிரிக்கெட்டிலிருந்து தூக்கி எறியப்பட்டனர். (இன்று அவரே காங்கிரஸ் கட்சி சார்பாக உத்தரப் பிரதேசத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது கடும் சோகம்!)

ஆனால் பாகிஸ்தானில் மட்டும் இந்த நிலை மாறவேயில்லை. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை அந்த கிரிக்கெட் அணி வீரர்கள்மீது சூதாட்டம், ஆட்டத்தின் போக்கை பணம் பெற்றுக்கொண்டு மாற்றுவது போன்ற குற்றச்சாட்டுகள் வந்துகொண்டே இருக்கின்றன.

மக்களின் குணத்தில் மாறுதல் வந்தால்தான் நாட்டின் குணத்தில் மாறுதல் வரும்.

பாகிஸ்தான் மக்கள் இன்று தங்களைத் தாங்களே ஆழமாகக் கேள்வி கேட்டுக்கொள்ளவேண்டிய அவமானகரமான நிலையில் இருக்கிறார்கள்.

4 comments:

 1. Badri,

  What are you smoking or drinking, when you wrote these (or somebody else in NHM wrote):

  " (பாகிஸ்தான்) மக்களின் குணத்தில் மாறுதல் வந்தால்தான் நாட்டின் குணத்தில் மாறுதல் வரும்.

  இதில் இந்திய, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகங்கள் உடனடியாக தங்கள் கட்டமைப்பைச் சுத்தம் செய்வதில் இறங்கி அதில் பெருமளவு வெற்றியும் கண்டுள்ளனர்.

  என்னவோ, பாகிஸ்தானுக்கு நேரமே சரியில்லை."

  I am disappointed. This post is worst than the pages of commercial (so-called) Tamil investigation journal weeklies. When you became behavioral expert of Pakistan common man. How you know they did not change? What change you need from them? You mean they have to commit suicide. According to you, Indian Cricket is mostly (?) clean, in other words if they can successfully sweep everything under carpet then they become clean. Wow! I like it. Can you please tell your opinions on IPL, Modi and what happened to the investigations on Delhi cricketer Ajay Sharma? Whatever you mentioned in the first 3 paragraphs are not new, those things exists for long time in Pakistan. They are not new negative developments. So, they are not going through bad time now; thats how their life so far.

  Mohan

  ReplyDelete
 2. Pakistan is a failed state. I will be really happy to see pakistan implode and become another afghanistan.

  Why Pakistan government begging for money elsewhere ?
  Why not sell their Atomic bombs, Ghavri, Ghori, or several Afghan, Central asian barbarian named missiles and get money to save its people ?

  A nation conceived on the basis of hatred cannot sustain long. May allah have mercy on the people of land of pure.

  PK cricket...nothing much to say.
  They always wanted to show themselves as equal to india if not more.
  Now they have fallen so deep down by spot fixing. They might as well dismantle their cricket team and save some money to help their people affected by flood.

  Azhar a match fixer, given seat by the most corrupt party of the country is no wonder.

  ReplyDelete
 3. Badri,

  I know you are not like the person who posted the above comment. However, the choice of words and sentences in your post gave something to chew (அவல்) for them. Enjoy!

  Mohan

  ReplyDelete
 4. "இதில் இந்திய, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகங்கள் உடனடியாக தங்கள் கட்டமைப்பைச் சுத்தம் செய்வதில் இறங்கி அதில் பெருமளவு வெற்றியும் கண்டுள்ளனர்."

  - சார்! இந்திய கிரிக்கெட் நிர்வாகம் என்று ஒன்று கிடையவே கிடையாது !
  பிசிசிஐ என்ற தனியார் கேளிக்கை மன்ற அணியின் நிர்வாகம் என்று தான் கூற வேண்டும்.

  எப்பொழுது தான் இந்திய பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும், "டீம் இந்தியா" என்று சொல்வதை நிறுத்துவார்களோ தெரியவில்லை :( .

  ReplyDelete