Friday, September 10, 2010

பாகிஸ்தானில் இயற்கைப் பேரழிவு

(23 ஆகஸ்ட் 2010 அன்று எழுதியது)

முன்பெல்லாம் சினிமா தியேட்டரில் படம் ஆரம்பிப்பதற்குமுன் நியூஸ் ரீல் போடுவார்கள். அது எப்போதுமே ‘பிகாரில் வெள்ளம்’ என்றுதான் ஆரம்பிக்கும் என்பது என் நினைவு.

இந்த ஆண்டு பிகாரில் ஒரே வறட்சி. மாநிலம் முழுவதுமே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார் மாநில முதல்வர் நிதீஷ் குமார்.

ஆனால் சேர்த்துவைத்ததுபோல பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம். ‘மெதுவாகக் கட்டவிழும் ட்சுனாமி’ என்று இதனைக் குறிப்பிடுகிறார் ஐ.நா சபைத் தலைவர் பான் கி மூன். கடுமையான மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் 1.2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் என்கிறார்கள். பல லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம். பல லட்சம் ஆடு மாடுகள் பலி. மனிதர்கள் சில ஆயிரம் இறந்திருக்கலாம்.

இன்னும் ஐந்து முதல் எட்டு ஆண்டுகள், கிட்டத்தட்ட 15 பில்லியன் டாலர் செலவழித்தால்தான் பாகிஸ்தான் மீண்டும் தான் இருந்த நிலைமைக்கு வரும் என்கிறார்கள். இப்போது உடனடி நிவாரணத்துக்கே 500 மில்லியன் டாலர் வேண்டும். ஆனால் கொடுக்கத்தான் ஆள் இல்லை.

இந்த நிலையில், பக்கத்து நாடான இந்தியா 5 மில்லியன் டாலர் கொடுக்க முன்வந்தது. ஆனால் பாகிஸ்தான் அதனை வாங்க மறுத்தது!

ஆமாம். நீங்கள் நேரடியாகக் கொடுத்தால் நாங்கள் வாங்கமாட்டோம்; வேண்டுமானால் ஐ.நா சபையிடம் கொடுங்கள், அவர்கள் எங்களிடம் கொடுக்கட்டும் என்றது.

சரி, அதற்கும் நாங்கள் தயார் என்று இந்தியா சொன்னது. ஆனால் அதற்குள்ளாக அமெரிக்கா உள்பட்ட பிற நாடுகள் பாகிஸ்தானை வற்புறுத்தின. இந்தியாவுடன் பிரச்னைகள் இருக்கலாம், ஆனால் அதற்காக வெள்ள நிவாரணத்துக்கு என்று கொடுக்கப்பட்ட பணத்தைப் பெற்றுகொள்வதுதான் சரியான மனப்பான்மை என்றன அந்த நாடுகள்.

வேறு வழியின்றி பாகிஸ்தான் இப்போது அந்தத் தொகையைப் பெற்றுக்கொண்டுள்ளது. பாகிஸ்தானில் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் நல்லெண்ணம் காரணமாக தாங்கள் அந்தத் தொகையைப் பெற்றுக்கொள்வதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ராஸா கிலானி தெரிவித்துள்ளார்.

*

பாகிஸ்தானின் நிலைமை இன்று படுமோசம்.

மாறி மாறி வரும் ராணுவ ஆட்சி, குடியாட்சிக்கு இடையே நாட்டில் உள்ள மக்களுக்கு தங்களது உரிமைகள் என்ன என்பதே தெரியவில்லை. அரசியல் அமைப்புச் சட்டம் என்பது அங்கு அமலில் இல்லாத நேரமே அதிகம். ராணுவம் ஆட்சியில் இல்லாவிட்டாலும், அவர்கள் கையில்தான் பெருமளவு அதிகாரம்.

மற்றொரு பக்கம், அவர்கள் தூண்டிவிட்ட தாலிபனே அவர்களைப் பதம் பார்க்கின்றது. ஏன், எதற்கு என்று தெரியாமலேயே அந்த நாட்டு மக்கள்மீது கொலைவெறி வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆஃப்கனிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள தன்னாட்சி பெற்ற மாகாணங்களில் கோலோச்சிவரும் அல் காயிதா, தாலிபன் தீவிரவாதிகள்மீது பாகிஸ்தான் ராணுவம் தன் விருப்பத்துக்கு மாறாக, அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகிறது.

நாட்டின் பொருளாதாரம் கடுமையாகச் சீரழிந்துள்ளது. அந்நியச் செலாவணிக் கையிருப்பு படு மோசமாக உள்ளது. பிற நாடுகளிடம் கையேந்தினால்தான் அடுத்த மாதம் பெட்ரோல் வாங்கக் காசிருக்கும் என்ற நிலை.

இதுபோன்ற மோசமான சூழலில் இப்போது நிகழ்ந்திருக்கும் இயற்கைப் பேரழிவு, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு நாட்டைப் புதைகுழியில் தள்ள இதைவிட வேறு வழி கிடையாது.

*

பாகிஸ்தான் நம்மைப் பகை நாடு என்று கருதினாலும் நாம் பாகிஸ்தானை பகைவனாகக் கருதக்கூடாது. பகைவனே ஆனாலும் ‘பகைவனுக்கு அருளும் நன்னெஞ்சு’ நமக்கு வேண்டும்.

இருவரும் ஒரே நேரத்தில் சுதந்தரம் அடைந்தோம். ஆனால் இரு நாடுகளும் வெவ்வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தன. இந்தியா மதச் சார்பற்ற, ஜனநாயக வழிமுறையைப் பின்பற்றியது. பாகிஸ்தான் இஸ்லாமிய மதவழியில், அதிகாரம் ஒரு முனையில் குவிந்திருக்கும் வழியைப் பின்பற்றியது. அதன் விளைவாக, தன் சில கொள்கைகளைச் சாதிக்க, வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதில் தவறு ஏதும் இல்லை என்ற எண்ணம் அந்த நாட்டில் பரவியது. பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பூதத்தை மீண்டும் பாட்டிலில் அடைப்பது கடினம்.

1991-ல் இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்த காலகட்டத்தில் இந்தியா சோசலிசத்தைத் துறந்து சந்தைப் பொருளாதாரத்தைத் தேர்ந்தெடுத்தது. அத்துடன், ஓரளவுக்கு வலுவாக இருக்கும் அரச அமைப்புகள் வழிகாட்ட, வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

பாகிஸ்தானில் வலுவான அதிகாரக் கட்டமைப்புகள் இல்லை. ஜனநாயக முறைமைகள் இல்லை. தீவிரவாதத்துடன், இப்போது இயற்கைப் பேரழிவும் சேர்ந்துள்ளது.
இந்த நிலையில் அந்த நாடு எப்படி மீண்டு வரப்போகிறது என்று பார்க்கவேண்டும். கடவுளிடம் வேண்டுவதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

4 comments:

 1. //கடவுளிடம் வேண்டுவதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. //
  நாத்திகத்தின் மிகக் கனிந்த நிலையில் ஆத்திகம் பிறக்கும் என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை. நிரூபித்திருக்கிறீர்கள். எம்பெருமான் உங்களை என்றும் காப்பார்.

  ReplyDelete
 2. //நாத்திகத்தின் மிகக் கனிந்த நிலையில் ஆத்திகம் பிறக்கும் என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை.//

  ஆத்திகத்தின் மிகக் கனிந்த நிலையில் நாத்திகம் பிறக்கும் என்றும் சொல்கிறார்களே

  :) :)

  ReplyDelete
 3. நீங்க ஆகஸ்டில் எழுதின பழைய அரசியல் பதிவுகள் எல்லாமே நேர்மறையான சிந்தனைகளை மேம்படுத்தும் வகையில் இருக்கே!

  எல்லாரும், எல்லாபதிவுகளையும் இதே மாதிரி எழுதினா நல்லா இருக்கும் :-)

  ReplyDelete
 4. இந்தியராக இருக்க விரும்பாத சில முஸ்லீம்கள் அமைத்துக்கொண்ட தூய நாடு பாகிஸ்தான்.

  அவர்களின் இருப்பின் காரணமே அவர்கள் இந்தியராக இருக்ககூடாது என்ற ஒரே குறிக்கோள் மட்டுமே. நாமே அவர்களை வாழ வைப்பது என்பது பிரித்விராஜ் சௌஹான் முதல் ஜெய்சிங், நேரு வரை வாழ்ந்தவர்கள் செய்த அதே தவறை மீண்டும் செய்வதற்குச் சமம்.

  பாகிஸ்தான் அழிந்தால் சந்தோசம். அது எவ்வளவு சீக்கிரம் அழியுமோ அவ்வளவு நல்லது. குறைந்த உயிர் சேதத்துடன் அப்பாவிகள் பலி கொடுக்கப்படாமல் அது நிகழ்வதற்கு வேண்டுமானால் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.

  சவுதி ஷேக் ஒரு சூதாட்டத்தில் தூக்கி வீசும் தொகையைவிட கம்மியாகத்தான் அரேபியா வெள்ள நிவாரண நிதி கொடுத்துள்ளது. So much for Islamic brother hood ?

  ReplyDelete