Wednesday, September 01, 2010

வீடு - 2

சிங்கப்பூர் சென்றிருந்தபோது தேசிய நூலகத்தில் ஓர் ஆவணப்படம் பார்த்தேன். அந்த ஆவணப்படத்தைப் பார்த்தபின் எழுதியிருந்த வரிகள் சில.
யேமெனில் மண்ணால் செய்யப்பட்ட வீடுகள் இருக்கும் இடத்தில் இப்போது காங்கிரீட் வீடுகள் வருவதுபற்றிய படம். ‘காங்கிரீட் 100 ஆண்டுகள் வரைகூடத் தங்காது, ஆனால் மண் பல நூறு ஆண்டுகள் தாங்கும்’ என்று ஒரு வயதானவர் சொன்ன விவரம் மனத்தைவிட்டு அகலவில்லை.
முதலில் ஒரு பொறியியல் மாணவனாக, இந்தச் செய்தி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. களிமண் என்றால் நமக்குத் தோன்றும் எண்ணம், அது தரமற்றது என்பதுதான். ஆனால் சிமெண்ட் என்றால், அது உலகின் மிக உயரிய பொருள்; அழிவற்றது, நிரந்தரமானது.

ஆனால் உண்மை முற்றிலும் மாறானதாக உள்ளது. இந்தியா வந்தபின் இங்குள்ள பல அகழ்வாய்வு நிபுணர்கள் மற்றும் விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டபோது அவர்களும் இதைத்தான் சொன்னார்கள். களிமண்ணால் கட்டினால் அந்தக் கட்டடம் பல நூறாண்டுகள், ஏன், ஆயிரம் ஆண்டுவரைகூட இருக்கும். இண்டாக்கின் (INTACH) சுரேஷ், தஞ்சாவூர் அருகே களிமண்ணால் கட்டிய ஒரு கட்டடத்தை இடிக்கமுடியாமல் அப்படியே விட்டுவைத்திருப்பதாகச் சொன்னார். அதேபோல சுதையால் (சுண்ணாம்புக் கலவை) கட்டப்படும் சிலைகள், கோபுரங்கள், வீடுகள் பல நூறு ஆண்டுகள் இருக்கக்கூடியவை. நாம் இன்றும் பார்க்கும் கோயில்கள் பலவற்றுக்கும் அடிப்பகுதி கல்லாலும் (கிரானைட்) மேல்பகுதி செங்கல்+சுதை கொண்டும் கட்டப்பட்டவையே. சில நூறு ஆண்டுகள் தாங்கியும் மிகக் குறைவான அழிவுடன் அப்படியே நிற்கின்றன.

ஆனால் சிமெண்ட் நூறு ஆண்டுகள் கூடத் தாங்காது; 60 ஆண்டுகளில் உதிர்ந்து வீணாகத்தொடங்கிவிடும் என்கிறார்கள் நிபுணர்கள்.

பின் என்ன காரணத்தால் இப்படி சிமெண்ட், காங்கிரீட் என்று விழுந்தடித்துக்கொண்டு ஓடுகிறோம்?

சிமெண்ட், முக்கியமாக இரும்புக் கம்பிகள் (முறுக்கேறிய இரும்புக் கம்பிகள் என்றால் இன்னும் சிறப்பு) செருகப்பட்ட சிமெண்ட், கட்டுமானத் துறையில் ஒரு சிறப்பான பொருள்தான். அதனால் இழுத்தல், அழுத்தல் என இரண்டு விசைகளையும் தாங்கிக்கொள்ள முடியும். முறுக்கேறிய கம்பிகள் என்றால் திருகல் விசைக்கும் நல்ல எதிர்ப்பைக் காண்பிக்கும். எனவே உயரமான, பல அடுக்கு கொண்ட கட்டடங்களைக் கட்ட இவை பொருத்தமானவையே. ஆனால் இந்தக் கட்டடங்கள் குறுகிய காலம் மட்டுமே தாங்கக் கூடியவை. சிமெண்ட் உதிர்ந்து பலமிழந்துபோகும்போது, கட்டடத்தின் ஆயுளும் முடிந்துவிடும். அப்போதுதான் பிரச்னையே ஆரம்பமாகும். இந்தக் கட்டடத்தை அழிப்பது பெரும்பாடு. மாபெரும் இயந்திரங்கள் கொண்டு இடிப்பதுதான் ஒரே வழி. அல்லது வெடி கொண்டு தகர்ப்பது. ஏனெனில் உறுதிக்குத் தேவையான இரும்புக் கம்பிகளே இப்போது அழிப்பதற்கும் தடையாக இருக்கும்.

எனவே சிறுசிறு கட்டடங்கள், அதுவும் முக்கியமாக, இரண்டு தளங்கள் மட்டுமே கொண்ட கட்டடங்கள் என்றால் அதைக் கட்ட சிமெண்டும் காங்க்ரீட்டும் தேவையே இல்லை. களிமண், செங்கல் கொண்டு கட்டி, நல்ல தரமான மேல்பூச்சுக்கு ஒரு வழி செய்துவிட்டால் அற்புதமான வீடு கிடைத்துவிடும். வாழும் காலத்தில் அழிவில்லாமல் இருக்கும். மேல் பூச்சுக்குக்கூட சிமெண்டைத் தவிர்த்து, சுதை (காரை) கொண்டு பூசி, இன்று கிடைக்கும் தரமான பெயிண்டுகளை மேலே அடித்துவிடலாம். அல்லது இந்த பெயிண்டுகளையும் விடுத்து, நல்ல சுண்ணாம்புப் பூச்சை மேலே அடித்து அழகான தாவர வண்ணங்களைக் கொண்டு அலங்கரிக்கலாம்.

தரைத் தளத்தின் கூரையாக மச்சு வீடுகள் என்று முன்னால் சொல்லப்பட்டிருந்த அதே முறையில் சுதை கொண்டே ஓடுகளை ஒட்டலாம். அதில்கூட மேலும் சில சோதனை முயற்சிகளை மேற்கொண்டு காங்க்ரீட் இல்லாமல் செய்யமுடியும். இதுபற்றி மேலும் யோசிக்க சிவில் எஞ்சினியரிங் படிக்காத என்னால் முடியவில்லை. சிவில் எஞ்சினியரிங் துறை வல்லுனர்கள் இதுபற்றிச் சிந்திக்கலாம்.

செங்கற்கள் என்றால், இந்தோ சாரசெனிக் பாணிக் கட்டடங்கள் சென்னையில் பல காணக் கிடைக்கின்றன. அவற்றில் பயன்படுத்தப்பட்டதுபோல நல்ல தரமான, கெட்டியான, glazed செங்கற்களைப் பயன்படுத்தினால், மேல் பூச்சு என்பதே தேவை இல்லை என்று தோன்றுகிறது.

நம் நாட்டில் நல்ல தரமான கட்டுமானக் கலை இருந்துள்ளது. பின்னர் அவை திரிந்து, தரமற்ற கைவினைஞர்கள் கையில் மோசமான கட்டடங்களாக மாறியுள்ளது. அந்த நிலையில் மேற்கிலிருந்து வந்த சில தொழில்நுட்பங்கள்தான் நமக்கு முற்றுமுழுதான தீர்வு என்று எடுத்துக்கொண்டு, அதே மோசமான கைவினைஞர்களைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு மோசமான கட்டடங்களையும் அழகுணர்ச்சி சிறிதும் இல்லாத கட்டடங்களையும் நாம் இன்று எழுப்புகிறோம்.

எனவே இன்றைய தேவை, நம் சூழலுக்கு (வெப்பமண்டலச் சூழலுக்கு) தேவையானபடி கட்டுமானக் கலையில் சில மாற்றங்களைக் கொண்டுவருவது.

இதுபற்றி சிந்திக்கும் சிவில் எஞ்சினியர்கள் எங்கே இருக்கிறார்கள்?

(தொடரும்)

19 comments:

 1. சிமென்ட் ஆலைகள் அதிபர்களின் லாபி , களிமண் கட்டிடங்கள் பற்றி புரளி கிளப்பி விடுவார்களே.
  உங்கள் பதிவு மிக அருமை. எனக்கு தெரிந்து ஸ்ரீவைகுண்டத்தில் கோட்டை பிள்ளைமார் சத்திரம் என்று ஒரு கட்டிடம் உள்ளது. அது முழுக்க முழுக்க கல், க்ரானைடே, களிமண்ணால் கட்டப் பட்டது. நான் அங்கு சென்றுள்ளேன், அங்கு 1200 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுகள் சிறிய கல்வெட்டுகளில் உள்ளது. அந்த கட்டடம் எண்ணூறு ஆண்டுகள் வரை நிலைத்து இருக்கிறது.

  ReplyDelete
 2. Dear Mr.Badri,
  I am also a Civil Engineer.
  I am working as a scientist(!) for this World.
  My inventions are at www.avasaramda.blogspot.com
  Pls enter at ur relax time.
  Thank u.
  yours truly,
  Ravi.P

  ReplyDelete
 3. கீரின் கான்செப்ட் என்ற பெயரில் மீண்டும்,முன்பு நாம் இழந்தவற்றை திரும்ப அடையும் முயற்சிகள் தொடர்கின்றன! இன்றைய சூழலில் - கடன் போன்ற பிரச்சனைகளில் - இது போன்ற பரிசோதனை முயற்சிகள் எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை ஆனாலும் ஆர்வத்தோட செயல்படுத்திடவும் முயன்றுகொண்டிருக்கின்றனர்!

  //இதுபற்றி சிந்திக்கும் சிவில் எஞ்சினியர்கள் எங்கே இருக்கிறார்கள்?//

  செயல்படுத்த இயலா சூழலில் பல நினைப்புக்களோடு - இருக்கிறோம் :))

  ReplyDelete
 4. 70-களின் இறுதிவரை சிமெண்ட் மிக குறைந்த அளவே பயன்பாட்டில் இருந்தது.80-களுக்கு பிறகு சிமெண்டிற்க்கு ஒரு மாற்று இல்லாமல் போனது

  ReplyDelete
 5. இப்போதைய புவி மற்றும் வளி மண்டல மாற்றங்களுக்கு களிமண் கட்டுமானம் தாக்குப்பிடிக்குமா?கேரளாவில் லாரி பேக்கர் முன்னெடுத்த சிறுவீடு திட்டம் பற்றி படித்துப்பாருங்கள்.

  ReplyDelete
 6. //களிமண்ணால் கட்டினால் அந்தக் கட்டடம் பல நூறாண்டுகள், ஏன், ஆயிரம் ஆண்டுவரைகூட இருக்கும்//

  ஆச்சர்யமான தகவல்.

  // நல்ல தரமான, கெட்டியான, glazed செங்கற்களைப் பயன்படுத்தினால், மேல் பூச்சு என்பதே தேவை இல்லை //

  உண்மை. கீழ்க்க‌ண்ட‌ ப‌திவுக‌ளைப் ப‌டித்தால் தெரியும்.

  http://venkatesh-kanna.blogspot.com/2010/02/blog-post_22.html
  http://venkatesh-kanna.blogspot.com/2010/04/02.html

  //இன்றைய தேவை, நம் சூழலுக்கு (வெப்பமண்டலச் சூழலுக்கு) தேவையானபடி கட்டுமானக் கலையில் சில மாற்றங்களைக் கொண்டுவருவது//

  மேலே உள்ள‌ சுட்டியில் இதுகுறித்து சிந்திப்ப‌வ‌ர்கள் சிலரின் த‌ள‌ங்க‌ளின் முக‌வ‌ரிக‌ளும் இருக்கின்ற‌ன‌.

  ReplyDelete
 7. பத்ரி,

  Laurie Baker என்ற ஆர்க்கிடெக்டைப் பற்றி படித்துப் பாருங்கள். நேரமிருந்தால் விரிவாக எழுதுகிறேன்.

  ReplyDelete
 8. இந்தியா போன்ற வெப்ப பிரதேசங்களுக்கு களிமண் தான் சரியானது. ஐரோப்பா போன்ற குளிர் பிரதேசங்களில் களிமண் ஒத்து வராததால் கண்டுபிடிக்கப்பட்டது தான் சிமெண்ட் என்பது லாரி பேக்கர் என்ற புகழ் பெற்ற ஆர்க்கிடெக்டின் கருத்து.

  இவர் இங்கிலாந்தில் பிறந்து கேரளாவில் செட்டி ஆனவர். பல பிரம்மாண்டமான கட்டிடங்களை களிமண் கொண்டு கட்டி இருக்கிறார்.

  http://lauriebaker.net/

  ReplyDelete
 9. பாண்டிச்சேரி ஆரோவிலில் வசிப்பவர்களிடம் சிமெண்ட்
  இல்லாமல் கட்டும் நல்ல கட்டுமான தொழில்நுட்பம்
  உள்ளது.கோயம்புத்துர் ஈஷா தியான நிலையமும்
  பல ஆண்டுகள் இருப்பதற்காக சிமண்ட் இல்லாமல்
  கட்டப்பட்டதே.

  ReplyDelete
 10. களிமண்ணால் கட்டும்போது மாடிகள் எழுப்ப முடியுமா?

  எத்தனை மாடிகள் வரை கட்ட முடியும்?

  கூரையும் களிமண்ணால் ஆக்க முடியுமா?

  ReplyDelete
 11. //முதலில் ஒரு பொறியியல் மாணவனாக, இந்தச் செய்தி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. //

  Me too...

  நல்ல கட்டுரை... தொடரவும்....

  ReplyDelete
 12. ராமதுரை எழுதியது
  அந்த நாட்களில் மாடு கட்டிக் காரை அரைப்பார்கள்.குறுகிய சாக்கடை போன்று வட்ட வடிவப் பள்ளம் இருக்கும்.அதன் குறுக்களவு 30 அடி கூட இருக்கலாம். மையத்திலிருந்து நீண்ட தண்டு.அதன் நுனியில் 4 அல்லது 5 அடி அகலம் கொண்ட --வட்ட வடிவ் பாறாங்கல்.அது அந்தப் பள்ளத்துக்குள் இருக்கும்.வட்டத்தின் நடுவே ஒரு மாடு அத் தண்டை சுற்றிசுற்றி இழுத்துவரும். சாக்கடை வடிவிலான பள்ள்த்துக்குள் மண், சுண்ணாம்பு மற்றும் சில பொருட்கள் போடபபட்டிருக்கும் மாடு சுற்றிச் சுற்றி வரும் போது பாறாங்கல்லுக்கு அடியில் சுண்ணாம்பு அரைபடும். இதை சுண்ணாம்பு அரைப்பது என்று வருணித்ததாக ஞாபகம்.
  அந்தக் கால்த்துக் கட்டிடங்களில் இந்தக் காரை தான் பயன்படுத்தப்பட்டது. கூரிய உளி கொண்டு ஓங்கி ஓங்கி அடித்தாலும் சுவரிலிருந்து மிக்ச சிறிய துண்டு தான் இடம் பெயரும்.
  கண்ணை மூடிக்கொண்டு மேலை நாட்டுத் தொழில் நுட்பத்தை - இன்றும் - காப்பியடித்து வந்துள்ளோம்.சிலவற்றால் பலன் உண்டு.ப்லவற்றால் பலன் இல்லை.
  இப்போது சித்தாள் எல்லாம் காண்டிராக்டர்களாகி இஷடத்துக்கு கான்கிரீட் கட்டுமானங்கள்--வீடுகள் தோன்றி வருகின்றன.

  சென்னை போன்ற பூகம்ப வாய்ப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் கட்டடங்கள் உட்பட கான்கிரீட கட்டுமானங்களில் எவ்வளவு ஒரு கடும் பூகம்பத்தைத் தாங்கும் என்பது தெரியாது.
  பூகம்பம் மனிதர்களைக் கொல்வதில்லை. கட்டிடங்கள் தான் கொல்கின்றன என்று சொல்வார்கள். பெரிய கான்கிரீட் பாளங்களின் அடியில் சிக்கியும்-- உரிய நேரத்தில் அவற்றை அகற்ற முடியாத காரணங்களாலும் பெரும் உயிர்ச் சேதம் ஏற்படுகிறது.
  இவையெல்லாம் ஆழ்ந்து ஆராயப்பட வேண்டிய பெரிய பிரச்சினைகள்
  ராமதுரை.

  ReplyDelete
 13. //மணிவண்ணன் said...
  பத்ரி, Laurie Baker என்ற ஆர்க்கிடெக்டைப் பற்றி படித்துப் பாருங்கள். நேரமிருந்தால் விரிவாக எழுதுகிறேன்.//

  http://www.jeyamohan.in/?p=4071
  அன்புடன்
  வெங்கட்ரமணன்

  ReplyDelete
 14. அருமையான கட்டுரை. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. நான் படிச்சிட்டு வெளியில் வந்து ஒரு கட்டிடம் கூட களிமண்ணில் கட்டவில்லை,ஒரே ஒரு முறை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடூட் மாடிக்கு சுன்ணாம்பு + வெல்லம் போட்டு மேற்பூச்சு போட்டோம்.இதிலெல்லாம் வேலைசெய்யாத்தால் முன் அனுபவம் இல்லை.அவ்வளவு களிமண் எங்கு இருக்கும்?செங்கல்லுக்கு மாற்றாக Fly Ash தேவைப்படுகிறது.
  களிமண் என்ன? மூங்கிலாலேயே வீடு கட்டி வாழலாம் என்று கட்டிய சுவாமி ஓம்கார் ஒரு பதிவில் எழுதியிருந்தார்.
  மிச்சமெல்லாம் பலர் பதிலில் இருக்கு.
  1200 sq.ft யில் 3000 sq.ft எப்படி கட்டுவது என்று இடமில்லாத சென்னையில் பலர் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்...களிமண் வீடெல்லாம் கிராமம் பக்கம் என்றால் முயற்சித்து பார்க்கலாம்.உளி + சுத்தியால் அடிச்சாத்தான் கஷ்டமாக இருக்கும் கான்கிரீட் சுவற்றிலேயே ஓட்டை போட்டு திருடும் அளவுக்கு கருவிகள் இருக்கும் இக்காலகட்டத்தில் யாரும் இதில் குடிவாழ வரமாட்டார்கள்.இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்றால் தாராளமாக வாழலாம்.உறுதி இருக்கலாம் ஆனால் பாதுகாப்பாக இருக்காது.

  ReplyDelete
 16. This is true. I lived in same Nagapattinam in one of the old houses for 4 years. I know how tough it was to fix a nail. What ever you do the nail wouldnt even go few mm.
  Murali.

  ReplyDelete
 17. Very revelaing and shocked to note this fact about cement - I think there is a growing Indian young upper middle class who will be willing to buy flats / houses built on these materials - We need only builders who can invest in that type of market - Thanks for the post - Very interesting read - For now I have deferred buying a Flat onstructed using cement !! -Srividhya

  ReplyDelete
 18. have u heard about hasan fathy or about vernacular architecure or about bangalore based artichect kumar.if not google and learn.

  ReplyDelete