Friday, November 12, 2010

சொல்லாமல் விட்டவை

கோவை குழந்தைகள் கடத்தல், கொலைச் செய்தியைக் கேட்டதும் என் மகள் கொஞ்சம் பயத்தில் இருந்தாள். நியாயமே. பள்ளிக்கூடப் பிள்ளைகள் இதைப்பற்றி நிறைய விவாதிக்கிறார்கள் என்று தெரிகிறது. என்கவுண்டர் கொலை பற்றி அவளது கருத்து என்ன என்று இன்னமும் கேட்கவில்லை.

என்கவுண்டர் நியாயமற்றது - இப்போது மட்டுமல்ல, எப்போதுமே. Due process of law தாமதமாகிறது, ஓட்டைகள் உள்ளன என்றால் ஓட்டைகளை அடைப்பதுதான் முக்கியம். கொலைகள் ஏற்கப்படா.

***

ஒபாமாவின் உப்புச் சப்பில்லா பயணம் முடிவுற்றது. இந்தியர்களுக்குத் தர அவரிடம் ஒன்றுமே இல்லையா? அமெரிக்காவின் நிலைமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் இடையில் அவர் இந்தியாவில் ரீடெய்ல், விவசாயம் ஆகியவற்றிலும் அந்நிய முதலீட்டைக் கொண்டுவருவது பற்றியெல்லாம் யோசிக்கிறார் என்றால், ஐயோ, பாவம் என்றுதான் தோன்றுகிறது. தன் நாட்டு மக்களை மனத்தில் நினைப்பதோடு தான் யாருடன் உறவு கொள்ள விரும்புகிறோமோ அந்த நாட்டு மக்களுக்கு தன்னால் என்ன நன்மை செய்யமுடியும், அதைச் செய்தால் தனக்கு என்ன லாபம் கிடைக்கும் என்றுதான் ஒரு நல்ல சேல்ஸ்மேன் யோசிப்பான். ஒபாமா இந்தியாவுக்கு எதை விற்கலாம் என்று துளியும் யோசித்துப் பார்த்தாரா?

ஹெட்லி மேட்டர், பாகிஸ்தான், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர சீட் எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். நியூக்ளியர் லயபிலிட்டி பில்லில் மாற்றங்கள் செய்யுமாறு கேட்க ஓர் ஆசாமிக்கு எப்படிப்பட்ட தார்மீக நியாயங்கள் இருக்கமுடியும். புஷ் என்றால் ஓகே; ஆனால் ஒபாமா அப்படிப் பேசினால் அசிங்கமாக உள்ளது. அவுட்சோர்சிங் வேலைகளைத் தடை செய்ய அவர் முயற்சி செய்தால் அதனை நான் ஆதரிப்பேன். ஓரளவுக்கு புரொடெக்‌ஷனிசத்தை நான் ஆதரிப்பவன். முற்றிலுமான தடையற்ற வர்த்தகம் உதவாது. அதனால்தான் என் விவசாயத்தை நான் பாதுகாப்பேன்; அவரது சாஃப்ட்வேர் வேலைகளை அவர் பாதுகாத்துக்கொள்ளட்டும். பிரச்னை இல்லை. ஆனால் அதைச் செய்வேன், இதை நீ செய்யக்கூடாது என்று ஒருவர் பேசுவது முட்டாள்தனம். இனியும் இதுபோன்ற ராவடி வேலைகளைச் செய்யும் அளவுக்கு அமெரிக்கா தாதா அல்ல...

ராணுவத் தளவாடங்களை மட்டும் ஏற்றுமதி செய்தால் போதாது. இந்தியாவுக்கு வேறு என்னவெல்லாம் வேண்டும், அவற்றை எப்படி இந்தியாவுக்கு அனுப்பி காசு பார்க்கலாம் என்று கொஞ்சம் ரிசர்ச் செய்துவிட்டு ஒபாமா வந்திருக்கலாம்.

***

இன்னும் எந்திரன் பார்க்கவில்லை. அய்யா, சத்யத்திலிருந்து படத்தைத் தூக்கிராதீங்கய்யா! இன்னும் ஒரு ரெண்டு வாரமாவது வெச்சிருங்க. பாத்துடறேன்.

***

ஆபரேஷன் ப்ளூஸ்டார் - சீக்கியர்களின் தங்கக் கோவிலின்மீதான இந்திய ராணுவத்தின் தாக்குதல் பற்றி ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அவ்வளவு ஆச்சரியமான தகவல்கள். சம்பவம் நடந்து இரு மாதங்களில் வெளியான இந்தப் புத்தகத்தில் சேகர் குப்தா, தவ்லீன் சிங் கட்டுரைகள் அபாரம். மிகச் சிறப்பான ஜர்னலிஸ்டுகள் இவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ரோலி புக்ஸ் வெளியீடு.

***

ஸ்டீபன் ஹாக்கிங்கின் The Grand Design புத்தகம் வந்துவிட்டது. அடுத்து அந்தப் புத்தகம்தான். ஆர்ட் பேப்பரில் அடித்துள்ளனர். வெறும் 190 சொச்சம் பக்கங்களுக்கு கனம் ஜாஸ்தி. அழகாக புக் பிரிண்ட் பேப்பரில் அடித்தால் போதாதா? கலர் படங்கள் வேண்டும் என்றால் நடுவில் இணைத்தால் போதுமே?

***

நான் வாங்கிய ஆண்ட்ராய்ட் டேப்லட், பேட்டரி தவிர ஓகே. இப்போது அதில் பிடிஎஃப் கோப்புகளைப் படிக்க முடிகிறது - ஆனால் ஸ்லோ. fring உதவியுடன் ஸ்கைப், கூகிள் டாக் எல்லாம் செய்யமுடிகிறது. தேவலாம். டொக்கு டொக்கு என்று ட்விட்டரிலோ மெஸஞ்சரிலோ தட்டுவது உபயோகமாகத் தெரியவில்லை. ஆனால் யு.எஸ்.பி கீபோர்டை இணைக்க முடிகிறது. அதை யார் கையில் தூக்கிக்கொண்டு அலைவது? முன்னர் பாம் பைலட்டுடன் வேலை செய்த அழகான, மடிக்கக்கூடிய கீபோர்ட் இருந்தால் வசதி.

***

3ஜி சேவையை வோடஃபோன் அளிக்கும்வரை நான் காத்திருப்பதாக முடிவு செய்துள்ளேன். போன் நம்பரை மாற்ற விருப்பம் இல்லை. போன் நம்பரை மாற்றுகிறேனோ இல்லையோ, போனை மாற்றியாகவேண்டும்... ஆங்காங்கே பிய்ந்து, பேட்டரி சொங்கிப்போய் பாவமாக இருக்கிறது, அதைப் பார்க்க.

***

கிரந்த எழுத்துகள் தொடர்பான விவாதம் எதிர்பார்த்ததுபோலவே ‘பார்ப்பானை, தமிழ் எதிரியை’ அடி என்ற ரீதியில் செல்வது மனத்துக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதுவும் விடுதலை, உண்மை கட்டுரைகள் பிரமாதமாக உள்ளன. இதற்கிடையில் தினமணி அபத்தமாக உளறி, முதுகில் நெளியுது பூணூலு என்று பேச வைத்து, புண்ணியம் கட்டிக்கொண்டது. பார்ப்பான்தான் தமிழனின் நிஜமான பிரச்னையா என்று கொஞ்சம் தீவிரமாகவே யோசிக்கவேண்டும்.

***

மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஆ.இராசா மீது அநியாயமான தாக்குதல்கள்! ஆனாலும் நம் பார்வைக்கு இன்னும் வலுவான கேஸ் ஒன்று கட்டி எழுப்பப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன். சும்மாவாவது அடி அடி என்று ஒருவரைப் போட்டு அடிப்பது நியாயமல்ல. இதைப்பற்றி நான் முன்னமேயே எழுதியுள்ளேன். இராசா தவறே செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. செய்தாரா இல்லையா என்று தெரியாது. ஆனால் செய்தார் என்பதற்கு வலுவான சாட்சியங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையே? இப்படிச் செய்ததால் இத்தனை கோடி இழப்பு என்றுதான் bean counter அக்கவுண்டண்டுகள் பேசுவார்கள். ஆனால் கொள்கை முடிவு எடுக்கும்போது இழப்பைப் பற்றிப் பேசவேண்டியதில்லை. தினம் தினம் பெட்ரோல் மானியத்திலும், உர மானியத்திலும் பல கோடிகள் ‘இழக்கிறது’ அரசு. அது விரும்பி இழக்கப்படும் தொகை.

செல்ஃபோன் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு ஏலம் இல்லாமல், குறிப்பிட்ட கட்டணத்துக்கு ஸ்பெக்ட்ரம் அளிக்கப்படும் என்று அரசு முடிவெடுத்தால் அதனால் ஏற்படுவதை இழப்பு என்று சொல்லக்கூடாது. அதனால்தான் இன்று இந்தியாவில் செல்ஃபோன் கட்டணம் இவ்வளவு குறைவாக உள்ளது. எண்ணற்ற ஏழை மக்கள் பயன் அடைகிறார்கள். (பணக்காரர்கள் பெரிதாக ஒன்றும் பயன்பெறுவதில்லை!) டாரிஃப் குறைந்தால் அதன் பயன் ஏழைகளுக்கே அதிகம் சென்றடையும். இத்தனை ஸ்பெக்ட்ரத்தையும் ஏலத்தில் விட்டால் 1,75,000 கோடி ரூபாய் அரசுக்குக் கிடைக்கும் என்று கேனையன் ஒருவன் கணக்கிட்டால், அதையும் அனைவரும் நம்புகிறீர்களே!

நாம் சுவாசிக்கும் காற்றை நாள் ஒன்றுக்கு தலைக்கு ஒரு ரூபாய் என்று வரிவிதித்தால், அரசு சம்பாதிக்கும் தொகை நாள் ஒன்றுக்கு நூறு கோடி. ஆண்டுக்கு 36,500 கோடி ரூபாய். அதை இலவசமாகக் கொடுத்து அத்தனை கோடியை இழந்த பிரதமர் மன்மோகன் சிங் ஊழல்காரர் என்றும் அடுத்து சொல்வார்கள்!

ஆ.இராசா குற்றவாளி என்று என்னை கன்வின்ஸ் செய்ய என்ன செய்யவேண்டும்? அவர் யாரிடம் எவ்வளவு லஞ்சம் பெற்றார் என்பதற்கான ஆதாரங்களைக் காட்டவேண்டும். இல்லை என்றால், இது விட்ச் ஹண்ட்.

***

தமிழ் பேப்பரில் நான் எழுதிவந்த தொடர் ‘யாழ் மண்ணே வணக்கம்’ முடிவுற்றது. ஏழு பாகங்கள். மேலும் எழுதியிருக்கலாம். ஆனால் சோர்வு. படிக்க விரும்புபவர்கள், இதுவரை படித்திராதவர்கள், இங்கே செல்க.

***

16 comments:

  1. சிறுமியை கொன்றவன் இறந்தான் என தெரிந்ததும் , சிறுமியின் அனுதாபிகள் சற்று ஆறுதல் அடைந்தனர் . உடனே அவர்கள் அனைவரும் முட்டாள்கள் போலவும் , என்கவுண்டர் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண விரும்புவது போலவும் நம் மேதாவிகள் பொரிந்து தள்ளிவிட்டனர் . அந்த பாணியில் நீங்களும் மக்களுக்கு அட்வைஸ் கொடுப்பீர்கள் என நினைத்தேன் . அப்படி இல்லாமல் நிதானமாக எழுதியதற்கு நன்றி

    ReplyDelete
  2. Mr.Raja's wife made 700 crores in a yr. Unless you start something like facebook, this is impossible to do.

    ReplyDelete
  3. what Government and CAG and all other world need to do convince mighty Badri. If you got convinced then Raja got hanged? if not will he become CM or PM of India? because you are supporting him? I have the opinion of yourself being atleast common view about this. But I understand as Publsiher and need Tamilnadu Government Income you cant pretend to be like this. But this much Jalra I didnt expect from you. Sorry.

    ReplyDelete
  4. The real issue is unitech which got the spectrum for 1400 crores sold 50% stake to telenor the very next day for 20k crores.
    Without a single subscriber.The argument that people benefit with low spectrum charges is frivolous, as it has been resold to much higher value.

    ReplyDelete
  5. நன்றி! உண்மையிலேயே எனக்கு கிரந்த எழுத்துக்கள் கணினியில் தட்டச்சு செய்ய எழுத்துரு வேண்டும்! பத்ரி உங்களுக்கு தெரிந்தாலோ, அல்லது இதைப் படிப்பவர்களுக்குத் தெரிந்தாலோ எனக்கு மெயில் பண்ணுங்களேன்! நன்றி. shankaranar@gmail.com ! நன்றி!

    ReplyDelete
  6. எனக்கு ஒன்னும் புரியல.
    1.கிரந்த எழுத்துகள்(எழுத்துக்கள் இல்லை) என்றால் என்ன? அதை ஏன் தமிழன் பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினா என்ன விளைவுகள் ஏற்படும். தமிழனாகிய எனக்கு சாப்பாடு கிடைக்காதா? தயவு செய்து யாராவது சொல்லுங்கப்பூ.
    2. அவன் தான் கடத்தி கற்பழித்து கொலை செய்தது உண்மைனா அவனை போலீஸ் கொன்றது தவறு. பத்ரியை பொறுத்தவரை. இலவசங்களில் வாழும் மற்ற தமிழர்களின் சந்தோஷத்தை மோகனகிருஷ்ணனை பெறாமல் செய்த கோபம்தான் அவரை இப்படி எழுத வைக்கிறதோ?
    3.உங்கள் வீட்டு குழந்தைகளை இப்படி மற்றவர் செய்தால் அப்போதும் இப்படிதான் எழுதுவாரா? கிழக்கு பதிப்பக தந்தை?

    ReplyDelete
  7. பத்ரி, இவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்-- மணல் கொள்ளை நடப்பதால்தான் நடுத்தர வர்க்கம் வீடு கட்ட முடிகிறது; ஆற்றுநீர் சுரண்டப்படுவதால்தான் ஏழைகள் கொகோ கோலா குடிக்க முடிகிறது; சந்தன மரம் திருடப்படுவதால்தான் சாமானியர்களால் ஊதுபத்தி கொளுத்த முடிகிறது! ஏழை, எளிய மக்கள் மேல் நம் அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு அக்கறை!

    ReplyDelete
  8. //செல்ஃபோன் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு ஏலம் இல்லாமல், குறிப்பிட்ட கட்டணத்துக்கு ஸ்பெக்ட்ரம் அளிக்கப்படும் என்று அரசு முடிவெடுத்தால் அதனால் ஏற்படுவதை இழப்பு என்று சொல்லக்கூடாது.//

    இது கொள்கை முடிவல்ல. guidelines ஐ மீறியும் கடைசி தேதியை திடீரென ஒரே நாளுக்குள் சுருக்கியும் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? வாங்கியவர்களும் அதற்கு முன்பு ஈடுபட்டவர்களோ அல்லது பின்னர் ஈடுபடும் எண்ணமோ இன்றி ஒரே நாள் கால அவகாசத்திற்குள் பெற்றதோடு, அப்படியே வெளியில் விற்றுவிட்டார்கள். ஏலத்தில் ? குறைந்த விலைக்கு பெற்றுவிட்டு பிறகு அதிக விலைக்கு விற்கும் எண்ணம் எப்படி வந்தது? பின்னர் அதிக விலைக்கு வாங்கியவர்கள் ஏலத்தில் இவர்களை விட அதிக விலைக்கு எடுக்க தயாராக இருந்திருப்பார்களே?

    ReplyDelete
  9. சுப்புரதினம்Sat Nov 13, 02:42:00 PM GMT+5:30

    //செல்ஃபோன் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு ஏலம் இல்லாமல், குறிப்பிட்ட கட்டணத்துக்கு ஸ்பெக்ட்ரம் அளிக்கப்படும் என்று அரசு முடிவெடுத்தால் அதனால் ஏற்படுவதை இழப்பு என்று சொல்லக்கூடாது. அதனால்தான் இன்று இந்தியாவில் செல்ஃபோன் கட்டணம் இவ்வளவு குறைவாக உள்ளது//

    ஏலம் எடுத்த நிறுவனம் பன்மடங்கு இலாபத்துக்கு விட்டதாக கேள்வி....

    ReplyDelete
  10. //நாம் சுவாசிக்கும் காற்றை நாள் ஒன்றுக்கு தலைக்கு ஒரு ரூபாய் என்று வரிவிதித்தால்,//

    Stupid argument, didnt expect from you....

    ReplyDelete
  11. //
    நாம் சுவாசிக்கும் காற்றை நாள் ஒன்றுக்கு தலைக்கு ஒரு ரூபாய் என்று வரிவிதித்தால், அரசு சம்பாதிக்கும் தொகை நாள் ஒன்றுக்கு நூறு கோடி. ஆண்டுக்கு 36,500 கோடி ரூபாய். அதை இலவசமாகக் கொடுத்து அத்தனை கோடியை இழந்த பிரதமர் மன்மோகன் சிங் ஊழல்காரர் என்றும் அடுத்து சொல்வார்கள்!
    //


    ஸ்பெக்ட்ரம் என்பது நாட்டின் சொத்து என்றெல்லாம் கொஞ்ச காலம் முன் நீங்கள் இங்கே எழுதியதாக நினைவு. ஸ்பெக்ட்ரமும் சுவாசிக்கும் காற்று போல் இன்றியமையாத ஒன்று என்று நீங்கள் சொல்வது கேடுகெட்ட வாதம்.

    அரசுக்கு ஏலத்தில் கிடைக்கவேண்டிய தொகையை நடுவில் ஒரு மாமாப்பயல் (புரோக்கர்) அடித்துவிட்டுப் போயிருக்கான். அந்த மாமாப்பயல் தானே அத்தனையும் அடித்தானா என்றால் இல்லை. தமிழ் நாட்டு முதல் குடும்பம் முதல் இந்தியாவின் முதல் குடும்பம் வரை அனைவருக்கும் அதில் பங்கு இருந்திருக்கும். ராசா ஏன் மந்திரியாக இத்தனை நாள் இருந்திருக்கிறார் என்பது 12 ம் வகுப்பு ஃபெயில் ஆனவனுக்கும் இன்னேரம் விளங்கியிருக்கும்.

    ReplyDelete
  12. பத்ரி, உங்களை போன்று ஒரு கற்றவரிடம் இருந்து spectrum ஊழலை பற்றி இதுபோன்ற ஒரு வருந்ததக்க ஒரு ஆய்வு வரும் என்று நான் எதிர்பார்கவில்லை.

    "spectrum " ஊழலை பற்றி பல மதிப்புமிக்க பத்திரிக்கையாளர்கள் மிகவும் நுணுக்கமான ஆய்வு செய்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை படித்த எனக்கு உங்களுடைய பதிவு மிகவும் அபத்தமாக தெரிகிறது.

    ஊழலை நிரூபணம் செய்ய எந்தவித சாட்சியும் இல்லை என்பதே உங்களின் கூற்றாக தெரிகிறது. இந்தியாவிலேயே ஊழலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் தி.மு.க திருடர்கள் . 1967 இல் தொடங்கி சுமார் 43 ஆண்டுகள் இதில் அனுபவம் கொண்டவர்கள். அவர்கள் செய்யும் ஊழலில் நேர்முக ஆதாரம் எதிர்பார்ப்பது அபத்தம்.

    2g அலைவரிசை வழங்கியது தொடர்பாக எழப்பட்ட இந்த கேள்விகளுக்கு உங்களிடம் விடை இருந்தால் பதில் சொல்லுங்கள்

    "Flashback: Date and time: January 10, 2008. 2.45 pm. Venue: Sanchar Bhavan in central Delhi. The DoT posts an announcement on its Web site saying letters of intent for telecom licences with spectrum would be issued between 3.30 pm and 4.30 pm that afternoon and that application fees (worth over Rs 1,000 crore or Rs 10 billion) would have to be paid immediately by demand draft together with voluminous supporting documentation.
    Licences are later given to those who deposited their fees first by even a fraction of a second -- using the infamous 'first-come-first-served' system used to sell cinema tickets."

    இந்தியாவின் ஒரு அறிய வளத்தை இப்படி ஒரு அக்கறையற்ற அவசரமான முறையில் விற்க வேண்டியதன் அவசியம் என்ன?
    இதன் பின்னணியில் எந்தவித ஊழலும் இருக்க முடியாது என்று ஒருவர் கருதினால், அவரின் உலக அறிவு சற்று குறைவே என்று தான் கருத முடியும்.

    மேலும் உச்சநீதி மன்றம் "Simply in terms of the scale of money that has been swindled, it is easily the biggest scam that this country has ever seen.A sitting Union Cabinet minister has been found to be directly involved and tapes of his conversations with corporate middlemen are available. The entire investigation being carried out by the CBI has been scuttled to protect vested political interests, corporate and other middlemen involved. " என்று அதன் கருத்தை தெரிவித்துள்ளது.

    உச்சநீதி மன்றம் எந்தவித ஆதாரமும் இல்லாமல் இப்படி ஒரு கருத்தை தெரிவிக்குமா?

    பத்திரிக்கை துறையில் இருக்கும் நீங்கள் இது போன்று ஆய்வுகள் எழுதும் போது நன்கு ஆய்வு செய்தபின் எழுதுவதே நல்லது.

    மேலும் இறுதியாக காற்று சுவாசிப்பதற்கு பணம் கேட்கவில்லை என்றால் ஊழல் ஆகுமா என்று நீங்கள் தெரிவித்திருக்கும் கருத்து என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

    -Muthukumar

    ReplyDelete
  13. //
    நாம் சுவாசிக்கும் காற்றை நாள் ஒன்றுக்கு தலைக்கு ஒரு ரூபாய் என்று வரிவிதித்தால், அரசு சம்பாதிக்கும் தொகை நாள் ஒன்றுக்கு நூறு கோடி. ஆண்டுக்கு 36,500 கோடி ரூபாய். அதை இலவசமாகக் கொடுத்து அத்தனை கோடியை இழந்த பிரதமர் மன்மோகன் சிங் ஊழல்காரர் என்றும் அடுத்து சொல்வார்கள்!//

    அப்படிப்போடு அருவாள !!

    //
    Stupid argument, didnt expect from you.... //

    இதில் என்ன இசுடுபிடு என்று தெரிவித்தால் தெரிந்து கொள்ள தயாராக உள்ளேன் ஐயா

    ReplyDelete
  14. //இதில் என்ன இசுடுபிடு என்று தெரிவித்தால் தெரிந்து கொள்ள தயாராக உள்ளேன் ஐயா//

    இதை கூட விளக்கவேண்டுமா? காற்றை இன்னும் ஏலம் விட ஆரம்பிக்கவில்லை. அப்படி ஏலம் விடும்போது அதை முதலில் புருனோவுக்கு (ஏன்னா அவர் திமுக ஆதரவாளர்)கொடுத்துட்டு எல்லாத்தையும் கொடுத்து அப்புறம் (அப்பா இப்பவே கண்னை கட்டுதே) அவர் இன்னொருத்தருக்கு குடுத்துட்டு கும்மி அடிச்சா மன்மோகன் சிங் ஊழல்காரர்தான். அதைதான் இசுடுபிடு அவர் சொல்லிகிறார்.

    ReplyDelete