Friday, March 09, 2012

ராஹுல் திராவிட்

காவஸ்கர், விஷ்வநாத், வெங்க்சர்க்கார், மொஹீந்தர் அமர்நாத், சந்தீப் பாடில், கபில்தேவ் ஆகியோர் நான் கிரிக்கெட் பார்த்து ரசித்த முதல் தலைமுறை (மட்டை) ஆட்டக்காரர்கள். அடுத்து என் நினைவில் பதிந்தவர்கள்  கிருஷ் ஸ்ரீகாந்த், சஞ்சய் மஞ்ச்ரேகர், மொஹம்மத் அசாருத்தீன். அடுத்து தன்னந்தனியாக உள்ளே இறங்கியவர் வயதில் மிகவும் இளையவரான சச்சின் தெண்டுல்கர். இன்னமும் ஆடிக்கொண்டிருக்கிறார். அடுத்த கட்டத்தில் உள்ளே வந்தவர்கள்தாம் ராஹுல் திராவிடும் சவுரவ் கங்குலியும். அதன்பின் விவிஎஸ் லக்ஷ்மண், விரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், மொஹம்மத் காயிஃப், மஹேந்திர சிங் தோனி, இப்போதைய நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி என்று பலர் வந்துள்ளனர்.

இந்த நீண்ட கிரிக்கெட் பாரம்பரியத்தில், சச்சின் தெண்டுல்கரையும் சேர்த்து அனைத்து பேட்ஸ்மன்களிலும் நான் மிகவும் மதிப்பது ராஹுல் திராவிடைத்தான். அவர் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நாம் பார்க்கும் மட்டை ஆட்டக்காரர்கள் அனைவரும் நம் மனத்தில் சில பிம்பங்களை விதைத்திருப்பார்கள். அது உண்மையோ இல்லையோ, அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் நம் மனத்தில் அந்த பிம்பம்தான் தெரியும்.

தெண்டுல்கர் ஆடும்போதெல்லாம் அடுத்த பந்திலேயே இவர் அவுட் ஆகிவிடுவாரோ என்ற பயத்துடனேயே இருப்பேன். ஆனால் ராஹுல் திராவிடைப் பார்க்கும்போதெல்லாம் இவரை நிச்சயமாக யாராலும் அவுட் ஆக்கமுடியாது என்று நிம்மதியாக இருப்பேன்.

ராஹுல் திராவிடின் வெற்றிகளைவிட அவருடைய தோல்விகளிலிருந்தே அதிகம் கற்றுக்கொள்ள முடியும். எத்தனையோ தினங்கள் அவருடைய கையும் காலும் நினைத்த திசைக்குப் போகாமல் இருக்கும். அப்போதெல்லாம் அவருடைய முகத்திலிருந்து கொட்டும் வியர்வையும் அவருடைய முகத்தில் தெரியும் ஆழ்ந்த கவனமும் ஆச்சரியம் தரும். அது தன்னுடைய நாள் இல்லை என்றாலும் அன்று தன் விக்கெட்டை எளிதில் விட்டுக்கொடுக்கக்கூடாது என்று நின்று போராடும் அந்தக் குணம் எனக்கு மிகவும் பிடித்தது.

ராஹுல் டெஸ்ட் ஆட்டக்காரர். அதற்கான சரியான டெம்பரமண்ட் - மனநிலை வாய்த்தவர். அவருடைய ஆரம்பக் காலங்களில் அவர் அடிக்கும் ஸ்ட்ரோக்குகள் நேராக தடுப்பாளர்கள் கைக்குப் போய்க்கொண்டே இருக்கும். பிளேஸ்மெண்ட் கிடைக்க மிகவும் கஷ்டப்படுவார். பின்னர் மிகுந்த பிரயாசைக்குப் பிறகு அதில் வெற்றி கண்டார். தடாலடியாக நான்கு ஷாட்கள் அடித்து ஃபோரும் சிக்ஸுமாக ஜனங்களுக்குக் கிளுகிளுப்பூட்டும் ஆசாமி அல்லர் திராவிட். அவருடையது காபி புக் கிரிக்கெட் என்று சொல்லப்படுவது. இப்படித்தான் ஒருவர் இந்த ஆட்டத்தை, இந்த ஸ்ட்ரோக்கை ஆடவேண்டும் என்று புத்தகத்தில் எழுதிவைத்திருந்தால் அது எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட ஆட்டம் திராவிடுடையது.

திராவிடின் ஃபிட்னெஸ் அபாரமானது. ஆனால் பல ஆட்டங்களில் 400 பந்துகளுக்குமேல் நின்று ஆடும்போது கிராம்ப்ஸ் வந்து திண்டாடியுள்ளார். ஆனாலும் வலியைப் பொறுத்துக்கொண்டு எப்படியாவது நின்று ஆடி முடித்துவிட்டுத்தான் உள்ளே வருவார்.

ஒரு நாள் ஆட்டம் அவருக்குப் பிடிபட நாளானது. தெண்டுல்கர் போல இயல்பான ஜீனியஸ் அல்லர் திராவிட். எனவே ஆரம்பத்தில் அவருக்கு ஒரு நாள் போட்டிகளில் அவ்வளவாக இடம் தரப்படவில்லை. பின்னர் சிறிது சிறிதாக ஒரு நாள் போட்டிகளிலும் தன் இடத்தை வலுப்படுத்திக்கொண்டார். ஆனாலும் பல நேரங்களில் அவரால் ஒரு நாள் போட்டிக்குத் தேவையான அதிரடி ரன் சேகரிப்பைத் தர முடியாமல் போயுள்ளது. அப்போது அணியிலிருந்து நீக்கப்படுவார். பின்னர் வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் வரும். அங்கு ஒரு நாள் போட்டிகளில் விளையாட பிற flat wicket bullies-ஆல் முடியாது என்பதால் மீண்டும் திராவிடை ஒரு நாள் போட்டிக்கான அணியில் சேர்த்துவிடுவார்கள். அப்படித்தான் சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது நடந்தது. இதுபோல் மீண்டும் நடக்கக்கூடாது என்பதால்தான் அவர் தான் இனி ஒரு நாள் போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்று அறிவித்தார்.

சமீபத்திய ஆஸ்திரேலியப் பயணம் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிக மோசமாகவே இருந்தது. மீண்டும் மீண்டும் ஆடுகளத்தின்மீதெல்லாம் குற்றம் சுமத்திப் பிரயோசனமில்லை. ஒரு டெஸ்ட் தொடருக்கான முன்பயிற்சி இல்லாமல், ஏதோ பீச் கிரிக்கெட் விளையாடப் போவதுபோலப் போனால் உருப்பட முடியாது. ஆனால், தனிப்பட்ட முறையில் திராவிடுக்கு இந்தப் பயணம் மிக மோசமாக இருந்தது. ரன்கள் வராதது பெரிய விஷயமில்லை; அதற்கு முந்தைய இரண்டு தொடர்களில் மேற்கிந்தியத் தீவுகளிலும் இங்கிலாந்திலும் பட்டையைக் கிளப்பியிருந்தார். அவராலேயே தாங்க முடியாதது அவர் தொடர்ந்து கிளீன் போல்ட் ஆகிக்கொண்டே இருந்தது. அப்படியானால் உங்கள் ஸ்டம்ப் எங்கே இருக்கிறது என்ற புரிதல் உங்களிடம் இல்லை என்று பொருள்.

அந்த நேரத்தில்தான் திராவிடுக்கு இது தோன்றியிருக்கவேண்டும். பிறர் நம்மைக் கேவலமாகத் திட்டுவதற்குமுன் நாமே அணியிலிருந்து விலகிவிடுவது சிறந்தது!

அதன்படி மிகச் சரியான ஒரு முடிவை எடுத்திருக்கிறார் ராஹுல் திராவிட். அவரைப் போன்ற திறனும் அறிவும் உள்ள ஒரு கிரிக்கெட்டரைப் பார்ப்பது கடினம்.

ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் அவரைப் பெரும்பாலும் மோசமாகவே நடத்தியுள்ளனர். ஆரம்பத்தில் அணியில் சரியான ஓரிடத்தை அவருக்குத் தரவில்லை. அவருடைய நியாயமான இடம் நம்பர் 3. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னிடத்தை அவர் ஸ்தாபித்ததும், திடீரென அவரை ஓப்பனிங் எல்லாம் விளையாடச் சொன்னார்கள். அணிக்காகப் பொறுத்துக்கொண்டு அதனைச் செய்தார். ஒருநாள் போட்டிகளில் பேலன்ஸ், மண்ணாங்கட்டி என்று அவரை விக்கெட்கீப்பிங் செய்யச் சொன்னார்கள். அதையும் செய்தார்.

சுமாரான கேப்டனாக இருந்தார். இருக்கும் அணியை வைத்துக்கொண்டு அவரால் முடிந்ததைச் செய்தார். ஆனால் கேப்டனாக இருக்கும்போது தன்னால் மேற்கொண்டு ஃபார்மைத் தக்கவைத்துக்கொள்ளக் கஷ்டமாக இருக்கிறது என்று தோன்றியவுடனேயே பதவியை விட்டெறிந்துவிட்டார்.

என்னைப் பொருத்தமட்டில், நான் பார்த்து ரசித்த கிரிக்கெட்டர்களில் முதன்மையானவர் திராவிட்தான் என்பேன். டெஸ்ட் கிரிக்கெட் அழிந்துகொண்டிருக்கும் இந்நாள்களில் இனி திராவிட் போல ஒருவர் உருவாகப்போவதில்லை.

20 comments:

  1. தெண்டுல்கர் ஆடும்போதெல்லாம் அடுத்த பந்திலேயே இவர் அவுட் ஆகிவிடுவாரோ என்ற பயத்துடனேயே இருப்பேன். ஆனால் ராஹுல் திராவிடைப் பார்க்கும்போதெல்லாம் இவரை நிச்சயமாக யாராலும் அவுட் ஆக்கமுடியாது என்று நிம்மதியாக இருப்பேன்.

    -- me too!

    ReplyDelete
  2. Dear Badri,

    A nice tribute to Dravid. We cannot see another gentleman cricketer like dravid again. If the board has any sense they should make use of his expertise in some manner.But after the way they have trated Kumble we can be sure it is not going to happen.It is a pity that people who know nothing of cricket are managing the game.

    ReplyDelete
  3. yesterday u endorsed that rahul dravid do not have ability to make individual decisions, Indians are always depend on others decisions.

    today a different story.

    ReplyDelete
  4. Well Said Badri sir. He has been a real gentle man on/off the field.

    ReplyDelete
  5. திராவிட் உலக அளவில் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தை வகிப்பவர்.ஆனால் அதற்குரிய பப்ளிசிடி அவருக்கு இல்லை. தனக்கென அவர் பிரசாரக் கும்பலை உருவாகிக் கொள்ளவில்லை போலும். அவர் பந்தை எதிர்கொள்ளும் போதெல்லாம் முகத்தில் ஏதோ விசனக் குறி தென்படும். ஆங்கிலத்தில் அவரை wall என்கிறார்கள்.தமிழில் அவரை அரண் என்று கூறலாம்.அவர் பந்து வீசியதில்லை என்பதைத் தவிர, விக்கெட் கீப்பராக இருந்திருக்கிறார்.பேட்ஸ்மென் ஆக இருந்திருக்கிறார்.கிரிக்கெட் களத்தில் ஏதாவது ஒரு வகையில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியல்வாதிகளை அண்டி தனக்காக செல்வாக்கைப் பிரயோகிக்க வேண்டும் என்ற போக்கெல்லாம் அவரிடம் கிடையாது.கொஞ்சமும் தலைக்கனம் இல்லாதவர்.ஜெண்டில்மென்.அவர் ஒரு சகாப்தம்.

    ReplyDelete
  6. இவர் ஆடியது ஒரே ஒரு T20 - ஆட்டம் ஆரம்பிக்க முன்னரே தனது ஓய்வை அறிவித்துட்டார். இங்கிலாந்துக்கு எதிரான அந்த ஆட்டத்தில் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுட்த்தார்... அதில் 3 பந்துகளில் 3 சிக்ஸர் அடக்கம்

    ReplyDelete
  7. எல்லாம் சரிதான். ஆனால் டெண்டுல்கர் ஆடுவதற்காக களத்தில் நுழையும்போது நமக்குள் ஏற்படும் எழுச்சி டிராவிட் நுழையும்போது ஏற்படுவதில்லை. கடுப்புதான் ஏற்படும். பலமுறை அணி தோற்காமல் காப்பாற்றியவர் என்ற வகையில் டிராவிட் அணிக்கு 'உபயோகமானவர்'. அவரைப் பற்றி "சுவர்" என்று குறிப்பிடப்படுவதைப் பலரும் 'பாராட்டு' என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது ஒரு விமர்சனமே. என்னைப் பொறுத்த வரையில் டிராவிட் ஒரு "தயிர் சாதம்!" அவ்வளவுதான்.

    ReplyDelete
  8. He is like A.R Rehman's music... when we hear for first time we dont like it.. but we keep hearing we like it like anything else..

    In the initial days of dravid (one day matches, I didn't like) but when I keep looking at his style I started not just to like,I started to enjoy!!! He is a Rythm.

    That Rythm comes out of his bat. Dot Dot Dot... :)

    ReplyDelete
  9. ராகுல் திராவிட் ஒரு கிரிக்கெட் புத்தகம் என்ற தலைப்பில் நானும் எனது பங்கிற்கு எனது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளேன். பின்வரும் link ல் சென்று பார்க்கவும். அதில் ராகுல் டிராவிட் குறித்த எனது பார்வையையும், அவரின் சாதனைகளையும் பதிவு செய்துள்ளேன்.
    http://lakshmanaperumal.com/2012/03/10/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d/

    ReplyDelete
  10. என்ன பத்ரி,இது உங்களுக்கு தி(டி)ராவிட வாரமா?
    ;-))

    ReplyDelete
  11. அருமையான பதிவு..

    நிச்சயமாக திராவிட் போற்றப்படவேண்டியவர்..களத்திலும், களத்திற்கு வெளியிலும் அடக்கம் பயிலுபவர்..அதற்காகவே அவரை ரொம்ப பிடிக்கும்..

    We Miss You Dravid..

    ReplyDelete
  12. i endorse your views sir, cricket world will miss a technically sound batsmen like dravid. but we have now his heir-apparent in virat kohli who seems now a good replacement
    for rahul dravid

    ReplyDelete
  13. சுமாரான கேப்டனாக இருந்தார்"

    மறுக்கிறேன்.. நல்ல கேப்டனாகவே இருந்தார்.. தொடர்ந்து அதிக போட்டிகளில் வென்ற சாதனை புரிந்தது அவர் தலைமையிலான அணி.. தோனி, பதான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தவர் அவர்.. ஆனால் அவரை தற்காலிக கேப்டன் போலவே ட்ரீட் செய்தனர்...

    ReplyDelete
  14. மிகச் சரியாச் சொன்னீர்கள்....சிறந்தவீரர் மட்டுமல்ல,மனித நேயம் மிக்க மனிதர்.அண்ணன் ராகுலிடம் இருந்து சச்சின் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.....

    சசு.அருள்

    ReplyDelete
  15. Badri,
    I expected some perspective. But you've given a summary round up.

    :-(

    ReplyDelete
  16. தெண்டுல்கர் ஆடும்போதெல்லாம் அடுத்த பந்திலேயே இவர் அவுட் ஆகிவிடுவாரோ என்ற பயத்துடனேயே இருப்பேன். ஆனால் ராஹுல் திராவிடைப் பார்க்கும்போதெல்லாம் இவரை நிச்சயமாக யாராலும் அவுட் ஆக்கமுடியாது என்று நிம்மதியாக இருப்பேன்....

    me too...

    ReplyDelete
  17. ராஹுல் என்று ஏன் இவ்வளவு சிரமப்பட்டு எழுத வேண்டும் என்பது புரியவில்லை;ராகுல் என்பதும் சரியான உச்சரிப்புதானே... :)

    ReplyDelete
  18. சார் டெண்டுல்கர் விளையாடிய சம‌காலத்தில் விளையாடியதால் ட்ராவிட்டின் முக்கியத்துவம் வெளியில் தெரியவில்லை என்பது எனது கருத்து.

    ReplyDelete
  19. //ஆனால் ராஹுல் திராவிடைப் பார்க்கும்போதெல்லாம் இவரை நிச்சயமாக யாராலும் அவுட் ஆக்கமுடியாது என்று நிம்மதியாக இருப்பேன்//

    உண்மைதான். இவர் சீக்கிரம் அவுட் ஆக மாட்டார். ஆனால், கிரிக்கெட்டில் ஒருவர் எவ்வளவு நேரம் அவுட் ஆகாமல் இருக்கின்றார் என்பது போட்டியின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில்லையே.. :-)

    - Suresh Raina fan

    ReplyDelete