Friday, June 01, 2012

சாயிநாத்தின் பொருளாதாரப் பொங்கல் - 1

ஏழைப் பங்காளன் இதழாளர் சாயிநாத்துடைய பேனாவுக்கு அவ்வளவு சக்தி. அவர் சாட்டையைச் சொடுக்கினால் மாண்டேக் சிங் அலுவாலியாகூட அலறுவார்.

இடதுசாரிக் கதையாடலை முன்னெடுத்துச் செல்வதில் சாயிநாத்தின் கட்டுரைகளுக்கு முக்கிய இடமுண்டு. வினவு உடனே அந்தக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்துப் போடுவதிலிருந்தே இதனை நீங்கள் உணரலாம். அதேபோல தொலைக்காட்சியில் உரையாடும் இடதுசாரிகள், சாயிநாத் கட்டுரையின் சாரத்தை மேற்கோள் காட்டும்போது நீங்கள் அந்த வாதத்தை எதிர்கொள்ளத் திணறுவீர்கள். சாயிநாத்தே சொல்லிவிட்டார், அதுவும் தி ஹிந்துவிலேயே வந்துவிட்டது. பிறகென்ன?

சாயிநாத்தின் சமீபத்தில் தி ஹிந்துவில் எழுதிய ஒரு கட்டுரையில், இந்திய அரசு முதலாளிகளுக்கு கடந்த ஏழு ஆண்டுகளில் 25 லட்சம் கோடி ரூபாய் அள்ளிக் கொடுத்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். இந்திய பட்ஜெட்டில் “ரெவின்யூ ஃபோர்கான்” (வேண்டாமென்று விடப்பட்ட வருமானம்) என்று கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளிவிவரத்தைத்தான் அவர் எடுத்துக் கொடுத்துள்ளார். எனவே சாயிநாத்தைக் குற்றம் சொல்ல முடியாது. இந்த எண்ணை முன்வைத்து சாயிநாத்தின் வாதம் இப்படியாக உள்ளது.
என்னவோ தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாயைக் கொடுப்பதற்குப் போய் மூக்கால் அழுகிறீர்களே, உங்களுக்குத் தெரியுமா பெரும் பணமுதலைகள் எவ்வளவு பெறுகிறார்கள் என்று? 25 லட்சம் கோடி ரூபாய். இப்போது முகத்தை எங்கே வைத்துக்கொள்ளப்போகிறீர்கள்?
இதைப் படிக்கும் பலரும் நடுங்கிப் போய்விடுவார்கள். உண்மையா? முதலாளிகள் இப்படி அள்ளி எடுத்துக்கொண்டு போகிறார்களா? அடப்பாவிகளா! நாசமாப் போக! ஏழைகள் வயிற்றில் அடித்துவிட்டு, இப்படி அநியாயம் பண்ணுகிறீர்களே...

கொஞ்சம் தகவலை ஆராய்வோம். ஏழு வருடங்களுக்கு 25 லட்சம் கோடி ரூபாய். ஒரு பக்கம் ஓராண்டு எண்ணை வைத்துக்கொள்கிறார். மற்றொரு பக்கம் ஏழாண்டு எண்ணை வைத்துக்கொள்கிறார். ஆப்பிள், ஆரஞ்ச். எனவே ஓராண்டை மட்டும் எடுத்துக்கொள்வோம். 2011-12 ஆண்டில் சாயிநாத் கொடுத்துள்ள புள்ளிவிவரத்தின்படி,

    கார்பொரேட் வருமான வரிக்குக் கொடுத்த விலக்கு 51,292 கோடி ரூபாய்
    ஆயத்தீர்வை விலக்கு: 2,12,167 கோடி ரூபாய்
    சுங்கவரி விலக்கு: 2,23,653 கோடி ரூபாய்
    மொத்தம்: 4,87,112 கோடி ரூபாய்

கவனியுங்கள், இதில் மிகப் பெரும் பகுதி மறைமுக வரிகளில் கொடுக்கப்பட்டுள்ள விலக்கு. மொத்த விலக்கில் வெறும் 10% மட்டுமே நேரடி வரியில் விலக்கு.

இதை எப்படிப் புரிந்துகொள்வது? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதலாவதாக சுங்க வரி (கஸ்டம்ஸ்).

முதலில் அரசு அனைத்துத் துறைகளுக்கும் சுங்க வரியை விதிக்கிறது. அதிலிருந்து எவ்வளவு வருமானம் வரும் என்று ஊகிக்கிறது. பிறகு, சில இறக்குமதிகளுக்கு மட்டும் சுங்கவரியை விலக்கிக்கொண்டால் தன் வருமானம் எவ்வளவு குறையும் என்று பார்க்கிறது. அந்தக் குறைச்சலைத்தான் ‘ரெவின்யூ ஃபோர்கான்’ என்று மதிப்பிடுகிறது.

சரி ஐயா, எதற்கெல்லாம் இந்த பட்ஜெட்டில் சுங்க வரியை விலக்கிக்கொண்டுள்ளனர் என்று பார்த்தேன்.
No change is proposed in peak rate of customs duty of 10 per cent on non-agricultural goods. Import of equipment for fertilizer projects are being fully exempted from basic customs duty of 5 per cent for 3 years. Basic customs duty is also being lowered for a number of equipment used in agriculture and related areas.

In the realm of infrastructure, customs relief is being given to power, coal and railways sectors. While steam coal gets full customs duty exemption for 2 years (with the concessional counter-veiling duty of 1 per cent), natural gas, LNG and certain uranium fuel get full duty exemption this year. Different levels of duty concessions are being provided to help mining, railways, roads, civil aviation, manufacturing, health and nutrition and environment. So as to help modernization of the textile industry, a number of equipment are being fully exempted from basic customs duty, and lower customs duty is being proposed for some other items used by the textile industry.
அதாவது எங்கெல்லாம் சுங்க வரியை விலக்கிக்கொள்கிறார்கள்?
    * உரத் தயாரிப்புக்காக இறக்குமதி செய்யப்படும் எந்திரங்களுக்கு
    * விவசாயத்துக்கும் தொடர்பான துறைகளுக்கும் தேவையான கருவிகளை இறக்குமதி செய்ய
    * மின்சார உற்பத்திக்கான இயந்திரங்கள்
    * கரியைத் தோண்டி எடுக்கும் இயந்திரங்கள்
    * ரயில்வே துறைக்குத் தேவையான இயந்திரங்கள்
    * இயற்கை எரிவாயு, யுரேனியம் எரிபொருள்
    * மொத்தத்தில் சுரங்கம், ரயில்வே, சாலைகள், விமானப் போக்குவரத்துத் துறை, உற்பத்தித் துறை, மருத்துவத் துறை, சுற்றுச் சூழல் துறை ஆகியவற்றுக்குத் தேவையான எந்திர இறக்குமதிகளில்.
    * நெசவுத் தொழில் துறையின் வளர்ச்சிக்காக அந்தத் துறைக்குத் தேவையான பொருள்களை இறக்குமதி செய்வதில்.
    * கச்சா எண்ணெய்க்கான சுங்க வரி, பொதுவான பிற பொருள்களை விடக் குறைவு

சரி, இதனால் யாருக்கு நன்மை? உரத் தயாரிப்பு மெஷினுக்கு இறக்குமதி வரியை நீக்கினால் அதனால் நேரடி லாபம் யாருக்கு? உரத்தைப் பயன்படுத்தும் விவசாயிக்கு விலை குறையும். சொல்லப்போனால் இதனால் பலன் பெறப்போவது அரசுதான். எனெனில் அரசுதான் அந்த உரத்துக்கு மானியம் கொடுக்கிறது. விவசாயி கொடுக்கும் காசு குறைவுதான். சுங்க வரி விதித்து அரசு தன் வருமானத்தைப் பெருக்கிக்கொண்டால், உர நிறுவனம் உரத்தின் விலையை அதிகரிக்கும். அதிகரித்த அந்த விலைக்கு ஏற்ற மானிய அதிகரிப்பையும் அரசு கொடுத்தாகவேண்டும்.

இப்படியே ஒவ்வொரு துறையையும் எடுத்துக்கொள்ளலாம். மின்சாரம் தயாரிக்கத் தேவையான எந்திரங்கள். ஏற்கெனவே மின்சாரத்துக்கு விலை ஏற்றினால் மக்கள் குதிக்கிறார்கள். உங்கள் ஊரில் உள்ள மின்சார உற்பத்தி நிலையம் வாங்கப்போகும் இயந்திரத்தின் விலை சுங்கவரியால் அதிகமானால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்? அந்த விலை ஏற்றத்தை உங்கள் தலையில் கட்டப்போகிறார்கள்.

நெசவு இயந்திரங்களை இறக்குமதி செய்யும் சுங்க வரியை அதிகரித்தால் என்ன ஆகும்? கோவை பகுதியில் வேலை வாய்ப்புகள் பிரமாதமாக இருக்கும். ஏற்கெனவே மின்சாரம் குறைவாலும் NREGA போன்ற பல பிரச்னைகளாலும் நெசவுத் தொழில் மிகப் பிரமாதமாக இருக்கிறது. சாயிநாத்தை நிதி அமைச்சராக்கினால், ‘ஏத்துடா வரியை!’ என்பார். கடைசியில் சாயிநாத்தின் நெருங்கிய நண்பர்களான விதர்பா பருத்தி விவசாயிகளும் சேர்ந்தே பூச்சி மருந்தைக் குடிக்கவேண்டி வரும்.

இப்படியே சுங்க வரி விலக்கு ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். அந்த வரியை ஏற்றினால் நிச்சயமாக அரசின் வருமானம் அதிகரிக்கும். ஆனால் அது நேராக கட்டுமானத்தைப் பாதிக்கும் அல்லது மிக முக்கியமான துறைகளான விவசாயம், நெசவு, உடல் நலம் ஆகியவற்றைப் பாதிக்கும். அதனால் மொத்த இந்திய மக்களை - ஏழைகளையும் சேர்த்து - பாதிக்கும்.

கச்சா எண்ணெயைப் பற்றி நாம் சொல்லவே வேண்டியதில்லை. இன்னும் குறையுங்கள் என்றுதான் சொல்கிறோம். அப்போதுதான் நம் கையில் கிடைக்கும் பெட்ரோலின் விலை குறையும்.

இந்த ஆண்டு தங்கத்தின்மீது சுங்க வரி விதிக்கப்படுவதாக இருந்தது. அதனை நான் தனிப்பட்ட முறையில் வரவேற்கிறேன். ஆனால் தங்க வியாபாரிகள் மட்டுமல்ல, பொதுமக்களும் சேர்ந்து அதனை எதிர்த்தனர். கடை அடைத்துப் போராடினர். சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினர். சுங்க வரி வாபஸ் பெறப்பட்டது. இது தவறு. தாலிக்குத் தங்கம் விலை அதிகரித்தாலும் தங்கத்தின்மீதான சுங்க வரியை நீக்கியிருக்கக்கூடாது. நான் நிதி அமைச்சராக இருந்தால் கட்டாயமாக இதை நீக்கியிருக்க மாட்டேன்.

இதைத் தவிர, உபயோகமான எதன்மீதாவது சுங்க வரி நீக்கப்பட்டு அம்பானி, டாடா பணத்தில் கொழிக்கிறார்கள் என்று சாயிநாத் காட்டுவாரா?

அடுத்து எக்சைஸ் எனப்படும் ஆயத்தீர்வை.

சுங்கத்துக்கு இணையானது ஆயத்தீர்வை. இந்தியாவில் உற்பத்தி ஆகும் பொருள்களுக்கு உற்பத்தி ஆகும் இடத்திலேயே விதிக்கப்படும் வரி ஆயத்தீர்வை. இதில் எந்தெந்தப் பொருள்களுக்கெல்லாம் விலக்கு அளிக்கப்பட்டது?

* ஆறு உயிர் காக்கும் மருந்துகள், தடுப்புசிகள் ஆயத்தீர்வை நீக்கம்.
* அயோடின் மீதான ஆயத்தீர்வை 6%-லிருந்து 2.5% குறைப்பு.
* LED விளக்குகளுக்கு குறைவான ஆயத்தீர்வை
* மின்சார வண்டிகள் அல்லது ஹைப்ரிட் வண்டிகளுக்குக் குறைக்கப்படுகிறது
* பிராண்டட் வெள்ளி நகைகளுக்கு நீக்கப்படுகிறது.
* பிராண்ட் இல்லாத தெருவோரத் தங்க நகைகளுக்கு ஆயத்தீர்வை சேர்க்கப்பட்டு, போராட்டத்துக்குப் பின் கைவிடப்பட்டது.
* (ஆயத்தீர்வை மொத்தமாக 10%-லிருந்து 12%-மாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் வைக்கவும்!)

வேறு எதற்கெல்லாம் ஆயத்தீர்வை விலக்கு? ஒரு சில பகுதிகளில் எந்தத் தொழில்துறையைத் தொடங்கினாலும் அதற்கு ஆயத்தீர்வை விலக்கு உண்டு என்று அறிவிப்பார்கள். பொதுவாக ஒரு மாநில அரசு மத்திய அரசைக் கெஞ்சி இதைச் செய்துகொள்ளும். உதாரணம் உத்தராகண்ட் மாநிலம். புதிதாக உருவான அந்த மாநிலத்தில் தொழில் துறையே இல்லை. எனவே மாநில அரசு கேட்டுக்கொண்டு மத்திய அரசு இதனைச் செய்கிறது. இதேபோலத்தான் ஹிமாசலப் பிரதேசம், வடகிழக்கு மாநிலங்கள் போன்றவை. ஒரு கட்டத்தில் உத்தரப் பிரதேச நொய்டா பகுதிக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதனால்தான் அங்கு பல தொழில் அமைப்புகள் சென்றன. அதேபோலத்தான் உத்தராகண்ட். ஆனால் தமிழகத்திலோ ஆந்திரத்திலோ குஜராத்திலோ இதுபோன்ற பிளாங்கெட் விலக்கு கிடையாது. பாண்டிச்சேரியில் சில தொழில்துறைகளுக்கு இருக்கலாம். பொதுவாக இதுபோன்ற விலக்குகள் காலக்கெடுவுடன் கூடியவை. அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் அந்த மாநிலத்தில் தொழில் துறைகள் வளர்ந்துவிடும். அதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இதனை இடதுசாரிகள் ஏற்க மறுத்தால் நேராக அந்த மாநில அரசுடன் போராடி, இப்படியெல்லாம் கேட்காதீர்கள் என்று சொல்லுங்கள். ஊருக்குள்ளேயே உங்களை விடமாட்டார்கள்!

ஆக, சுங்கமோ, ஆயத்தீர்வையோ, பொதுமக்களுக்கு நன்மை என்பதால் மட்டும்தான் விலக்கு அளிக்கப்படுகிறது. சாயிநாத் சொல்வதுபோல பெரு வியாபாரிகள் கொள்ளை அடிப்பதற்காக அல்ல.

அடுத்து கடைசியாக மொத்த விலக்கில் வெறும் 10% மட்டுமே இருக்கும் கார்பொரேட் இன்கம் டாக்ஸ் விஷயத்துக்கு வருகிறேன். அது தனிப் பதிவாக.

சாயிநாத்தும் பிற இடதுசாரிகள் அனைவரும் கெப்பல்ஸ் (கோயபல்ஸ் என்றி தமிழகத்தில் அழைக்கப்படுவார்) விதியைப் பயன்படுத்தி ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருப்பதன்மூலம் மக்களைக் குழப்புகிறார்கள்.

இது தொடர்பாக சுவாமிநாதன் ஐயரின் கட்டுரை கட்டாயமாகப் படிக்கப்படவேண்டியது.

மீதம் அடுத்த பதிவில்.

21 comments:

 1. வினவு தளத்த மட்டும் படிச்சா தலைய பிச்சுக்க வேண்டிதான்...ஏதோ நீங்க இருக்கீங்க அதனால நாங்கல்லாம் தெரிஞ்சுக்க முடியுது நெறையா விஷயங்கள :)

  ReplyDelete
 2. அருமையான பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete
 3. சாய்நாத்தின் அறச்சீற்றங்கள் உணர்வுகளின் அடிப்படையில் எழுபவை, உண்மையான தகவல்கள்/புரிதலின் அடிப்படையில் அல்ல.இருப்பினும் அவை இடதுசாரிகளுக்கு உதவியாக உள்ளன.
  சாய்நாத் ஒரு புறம்,இன்னொரு புறம் சந்தை அமைப்பை ஒரே தீர்வாக சித்தரிக்கும் வலதுசாரிகள்.உண்மையை இவர்கள் எழுதுவதிலிருந்து அறியமுடியாது.

  ReplyDelete
 4. ஸ்வாமினாமிக்ஸ் கட்டுரைகள் தொகுப்பு நூல் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. அதைத் தமிழில் கிழக்கு கட்டாயம் வெளியிட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் கட்சி வேறுபாடின்றி அனைவரிடமும் பொதுவில் இன்னும் காணப்படும் இடதுசாரி ரொமான்டிசிஸ மாயை விலகும். தனியார் = கொள்ளை, எனவே எல்லாம் அரசு மயமாக இருக்க வேண்டும், அதிலும் அரசு நஷ்டப்பட்டுக் கொண்டு மலிவு விலையிலோ, இலவசமாகவோ தன் சேவைகளைத் தரவேண்டும். இதற்குப் பணம் எங்கிருந்து வரும் என்றால் 'பணக்காரனுக்கு வரி போடு!' என்ற பாமரத்தனமான பதில்தான் வரும்.

  சரவணன்

  ReplyDelete
 5. சுங்க வரி, ஆயத் தீர்வை பற்றியெல்லாம் நீங்கள் ரொம்ப மேலோட்டமாகப் படித்துவிட்டு எழுதியிருக்கிறீர்கள். உண்மையில் அப்படி அல்ல. ஆக்ரோ போன்ற துறைகளுக்குத் தரும் விலக்கு மிகச் சொற்பமானது.

  ஒரு சதவீதம்கூட சுங்கவரி இல்லாமல் எவ்வளவு துறைகள் இறக்குமதி செய்கிறார்கள் என்பதெல்லாம் நீங்கள் படித்த பக்கங்களில் இருக்காது. கொஞ்சம் இறங்கித் தேடணும் :-)

  அப்புறம், கீழிருப்பதும் ரொம்ப misleading ஆனது :-)

  /ஆயத்தீர்வை மொத்தமாக 10%-லிருந்து 12%-மாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் வைக்கவும்!)/

  முதலில் ஆயத்தீர்வை என்பது 10 சதவீதம் இல்லை. அது 16%. 2008-09 ஒரே ஆண்டில் அதைப் படிப்படியாக 8 சதவீதம் ஆக்கிவிட்டு, இப்போது மறுபடி ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். 2010ல் 10% ஆக்கினார்கள், இப்போது இன்னொரு 2%. உண்மையில் 2% கூடுதல் அல்ல, 4 சதவீதம் குறைவு.

  ReplyDelete
  Replies
  1. என்றோ 16% இருந்து அதை 8%-ஆகக் குறைத்து, பின் 12% ஆக்கினால், உண்மையில் ஏற்றவில்லை, குறைத்துள்ளனர் என்கிறீர்களே, இது நியாயமா? அப்படியென்றால் சுதந்தர இந்தியாவின் முக்தல் பட்ஜெட்டில் எத்தனை பொருள்களுக்கு கலால் இருந்தது? அதன் அடிப்படையில் பார்த்தால் அனைத்துமே அதிகரிப்புதானே?

   பெட்ரோல் விலை நாளை குறைந்தது என்றால், இல்லை, என்றோ ஒரு நாள் லிட்டர் ஒரு ரூபாய் இருந்தது, எனவே அதிகரித்துள்ளது என்பீர்களா?

   ***

   அந்தெந்தப் பொருள்களையெல்லாம் ரகசியமாக 1%-ல் இறக்குமதி செய்கிறார்கள் என்று சொல்லுங்கள், சைகரியமாக இருக்கும். என் படிப்பு எல்லாமே மேலோட்டமானதுதான். துறை எக்ஸ்பர்ட்கள் எல்லாம் வாயை மூடிக்கொண்டு இருக்கும்போது ஏதோ இருக்கும் கொஞ்சநஞ்ச விஷயஞானத்தை வைத்துக்கொண்டு கடையை நடத்தப் பார்க்கிறேன். எக்ஸ்பர்ட்ஸ் எல்லாம் எழுத ஆரம்பித்தால் நான் வேறு விஷயத்தை எழுதப் போய்விடப் போகிறேன். இது ஒரு பிரச்னையா, என்ன?

   Delete
  2. "ஒரு சதவீதம்கூட சுங்கவரி இல்லாமல் எவ்வளவு துறைகள் இறக்குமதி செய்கிறார்கள் என்பதெல்லாம் நீங்கள் படித்த பக்கங்களில் இருக்காது. கொஞ்சம் இறங்கித் தேடணும் :-)"

   கண்டிப்பாக இப்படி இறக்குமதி ஆகும் பொருள்கள் / துறைகள் பற்றி சில உதாரணங்கள் அல்லது சில லின்க்குகளேனும் ஜ்யோவ்ராம் சுந்தர் கொடுப்பார் என்று எதிர்பார்கிறேன்.இல்லை போகிற போக்கில் மேம்போக்காக சொன்ன ஒரு கருத்தென்றால் அது சரியல்ல.

   ச சங்கர்

   Delete
  3. என்றோ இருந்தது இல்லை. தொடர்ந்து 16% என்றே வைத்திருந்தார்கள். 2008-09 ஒரே வருடத்தில் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அதைப் படிப்படியாக 8% ஆகக் குறைத்தார்கள். இப்போதும் 16%தான் ஆப்டிமம் என்பதுதான் அவர்களது கருத்து. அதனால்தான் 12% என்பது 2 சதவீதம் கூடுதல் இல்லை, 4% குறைவு என்றேன்.

   சங்கர் சார், ஒவ்வொரு வருடம் வரும் பட்ஜெட் பேப்பர்களில் மட்டும் இம்மாதிரியான விஷயங்கள் இருக்காது என்று சொல்ல வந்தேன். உங்களுக்குப் பட்டியல் வேண்டுமானால், கீழே தருகிறேன் :

   1. EOU
   2. STP / EHTP
   3. SEZ

   மேலுள்ள வகையினர் 1% கூட சுங்க வரியோ, கலால் வரியோ கட்டத் தேவையில்லை. stp / ehtp யூனிட்களில் வரும் லாபத்தில் வருமான வரிகூடக் கிடையாது. மூன்றாவது வகையினர் சேவை வரிகூடக் கட்டத் தேவையில்லை.

   இதைத்தவிர நிறுவனங்கள் எந்திரங்களை இறக்குமதி செய்தால், epcg ஸ்கீமில் 0% சுங்க வரியில் எடுத்துச் செல்லலாம். DEEC, DEPB என்று பல ஸ்கீம்கள் உண்டு. பெரும் நிறுவனங்கள் சில குறிப்பிட்ட (project imports) அப்படிச் செய்கிறார்கள்.

   Delete
  4. சுந்தர்ஜி, இறக்குமதி பொருட்களுக்கு கிடைக்கும் வரிச்சலுகைகள் பற்றி பேசப்பட்டிருந்தது. இப்போது சொழிலகங்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் பற்றி குறிப்பிடுகிறீர்கள்.இந்த எடுத்துக்காட்டு சரியானதா ?
   EOU-Export oriented units, SEZ-Special Ecconomic Zones,HTP/EHTP -Electronic HardWare Technology Park- நான் அறிந்த வரை இந்த தொழில் இடங்களில் செயல்படும் நிறுவனங்களுக்கு சலுகை வழங்கப்படுவது ஏற்றுமதியை அதிகரித்து அன்னியச் செலாவணியை அதிகரிப்பதுதான்.இந்த நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் இருப்பது போல் கட்டுப்பாடுகளும் உண்டு.அதாவது எதற்காக உற்பத்தி செய்யப்படுகிறதோ (Declared Intention of the Unit - mainly Export)அதாவது ஏற்றுமதி அதற்கு மட்டுமே இந்தப் பொருள்களுக்கு அனுமதி.அதை உள்நாட்டு சந்தையில் விற்க முடியாது.ஒரு வேளை சிலபல காரணங்களுக்காக ஏற்றுமதி செய்ய முடியாமல் போனால்,அந்தப் பொருள்களை உள்நாட்டு சந்தையில் விற்க வேண்டுமானால் அந்தப் பொருள்களுக்கு கன்செஷனாக கிடைத்த / கட்டாத அனைத்து வரிகளையும் கட்ட வேண்டும்.எனது புரிதல் தவறென்றால் சுட்டலாம்.

   ச சங்கர்

   Delete
  5. சங்கர் சார், என்ன காரணத்திற்காகத் தருகிறார்கள் என்ற விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை. தேசிய வேலை வாய்ப்புத் திட்டத்திற்கும் ஏதாவது காரணங்கள் இருக்குமே - அதனால் அதற்குள் போக வேண்டாம். தருகிறார்கள், அவ்வளவுதான்.

   கலால் வரியை மறுபடி 10% ஆக்கிவிட்டார்கள் என்று முதலில் நான் சொன்னது தவறான தகவல். அதனால் அந்தப் பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன்.

   Delete
 6. எக்சைஸ் தீர்வை விவரம் எல்லாம் பைனான்ஸ் ம்சோதாவில் இருக்கும்.வெளி நாட்டுப் போட்டியைத் தடுத்து உள் நாட்டுத் தொழில்களுக்குப் பாதுகாப்பு அளிக்க எக்சைஸ் தீர்வையை அதிகரிப்பதுண்டு/புதிய தொழில் நுட்பத்தைக் கவருவதானால் எக்சைஸ் தீர்வையைக் குறைப்பதுண்டு.அந்தந்த நிலைமையில் மத்திய நிதி மந்திரி இது பற்றித் தீர்மானித்து எக்சைஸ் தீர்வைகளில் மாற்றம் செய்வதுண்டு.ஆனால் இந்திய உற்பத்தியாளர்கள் தரத்ததை உயர்த்தாமல் புதிய தொழில் நுட்பத்தையும் அறிமுகப்படுத்தாமல் வெளி நாட்டுப் போட்டி என்பதே இல்லாமல் இந்திய மக்களைக் கொள்ளை அடித்து வந்தார்கள் என்பது மறைக்க முடியாத உண்மை.தாராள மயக் கொள்கை அறிமுகப்படுத்தப் பட்ட பின்னர் இந்திய முதலாளிகள் தங்களது கொள்ளை லாபக் கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது கண்டு அவ்வப்போது குய்யோ முறையோ என்று குரல் கொடுக்கிறார்கள். டெலிபோன் துறை முழுக்க முழுக்க அரசு வசமே இருந்த காலத்தில் ஒரு டெலிபோன் இணைப்பு பெற பல ஆண்டுகள் காத்திருந்த நிலைமையை இப்போதைய நிலைமையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்

  ReplyDelete
 7. // நான் நிதி அமைச்சராக இருந்தால் கட்டாயமாக இதை நீக்கியிருக்க மாட்டேன்.//

  அப்படி என்றால் உங்களை நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கியிருப்பார்கள் !!

  ReplyDelete
 8. பெயரிலேயே தெரிகிறது அவரின் குடுமி... சாமிநாத ஐயர்! பார்பான் உண்மை பேசமாட்டான் என பெரியார் சொல்லி இருக்கிறாரே! பெரியாரிஸப்படி பார்ப்பான் உண்மையை பேசமாட்டான், அப்படி பேசினாலும் அதை பொய் லிஸ்டில்தான் சேர்ப்போம். அதுதான் தமிழ்நாட்டு வழக்கம்!

  சாயிநாத்தின் சாதி தெரியவில்லை ஆதலால் அவரு சொல்வதுதான் இப்போதைக்கு சரி!

  ReplyDelete
 9. சாய்னாத் ஒரு பக்கம் மட்டும் எழுதுறார்னு நீங்களும் அப்படியே செஞ்சா எப்பிடி ???இந்த சுங்க, ஆயத்தீர்வை எல்லாம் குறைத்ததனால் எந்தப் பொருளின் விலையும் குறையவில்லை. எப்படி என்றால் என்ன அர்த்தம், அரசு அளித்த அந்த பெனிஃபிட்டை அவர்கள் நுகர்வோருக்கு பாஸ் ஆன் செய்யாமல், ப்ராஃபிட் மார்ஜினில் சேர்த்துக்கொண்டார்கள். 75கிராம் எடையுள்ள 10ரூபாய் சோப்பில் ஆயத்தீர்வை குறைவினால் 50பைசா குறைந்தால், சோப் 9.50ரூபாய்க்கு விற்கப்படவில்லை ... மாறாக அதே 10ரூபாய்க்குத்தான் விற்கப்பட்டது. மேலும் சோப்பின் எடையும் குறைக்கப்பட்டு அதே 10ரூபாய்கு 70கிராமாக பல கம்பெனிகள் விற்றன. கேட்டால் இன்புட் காஸ்ட், ரா மெட்டீரியல் விலை உயர்வு என்று கூவுவார்கள் ... உண்மைதான் ..... ஆனால் நியாயப்படி பார்த்தால் இதனால் அவர்களுடைய ப்ராஃபிடபிலிட்டி குறைந்திருக்க வேண்டும் ... அரசு ஆதரவளித்ததால் அவர்களால் அதை காப்பாற்றிக் கொள்ள முடிந்தது .... இதில் நுகர்வோருக்கும் விவசாயிக்கும் பயன் எங்கு வந்தது ??? Show me one product category where these government initiated cuts were passed on to the consumers by reducing the price ???? அடேய் .... விக்கற வெலை வாசில சோப்புக் கம்பெனி வெலைய 14ரூபாய்க்கு ஏத்தியிருக்கும் .... ஏதோ அரசு தீர்வையைக் குறைத்ததால் உன்னால அதே 10ரூபாய்க்கு சோப்பு வாங்க முடியுது. நாத்தமாயிடாம குளிக்க முடியுது !!!..புரியுதா ??? இதுல உனக்குத்தான்டா ஆதாயம் வென்ட்ரு .... இப்பிடி இருக்குது உங்க வாதம் !!! ( நீதி: கம்பெனிக்காரன் வெலை ஏத்தினால் வாங்கும் சக்தி இல்லாத நுகர்வோன் வாங்க மாட்டான். மூலப்பொருட்கள் விலை ஏறிய நிலையில் வெலை அப்பிடியே வெச்சா லாபம் குறையும் ... ஸ்டாக் மார்க்கெட்லையும் அடி விழும் ... சென்செக்ஸ் குறைந்தால் ஏதோ இந்தியா மீது ஒரு அணுகுண்டே வீசப்பட்டது மாதிரி மீடியா கூவும் ..... அது நால ... கம்பெனிக்காரன் லாபம் குறையாம அரசாங்கம் பாத்துக்கும். ஆனா இந்த கேவலமான பிச்சையக் கூடா நாங்க வெளிய சொல்லிக்காம பார்ட்டில கோட் போட்டுக்கிட்டு பேட்டி குடுப்போம் ) Show me one product category where these government initiated cuts were passed on to the consumers by reducing the price ????

  ReplyDelete
 10. //
  சாயிநாத்தும் பிற இடதுசாரிகள் அனைவரும் கெப்பல்ஸ் (கோயபல்ஸ் என்றி தமிழகத்தில் அழைக்கப்படுவார்) விதியைப் பயன்படுத்தி ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருப்பதன்மூலம் மக்களைக் குழப்புகிறார்கள்.
  //

  ஏமாற்றவேண்டும் என்றால் முதலில் நம்பவைக்கவேண்டுமல்லவா ? அதுக்கு தான் இதெல்லாம்!

  ReplyDelete
 11. சாயிநாத்....பயங்கரமாக இடது பக்கமாக சாய்ந்துபோன நாத் என்று தெரிகிறது...! பத்ரி(நாத்) அதனை சுட்டிக்காட்டுகிறார்...ஆனால் அதில் வந்து ஆளாளுக்கு அவர்களோட எக்ஸ்பர்டீஸை விஜய் போல் "காட்டு காட்டு என்று காட்டுகிறார்கள்!"

  ReplyDelete
 12. 2006-2009 பட்ஜெட்களையும் அவற்றை விளக்கி குருமூர்த்தி எழுதிய கட்டுரைகளையும் படியுங்கள்..எவ்வளவு நேர்முக வரிகள் பெரும் கார்பொரேட் கம்பெனிகளுக்காக விலக்கிக் கொள்ளப் பட்டன என்பது புரியும்.

  இந்தியாவின் பொருளாதார நிபுணர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் மிகப் பெரும் பிரச்னை மேற்குலகத்தின் பொருளாதாரத்தை அப்படியே காப்பி அடிப்பது அல்லது மேற்குலக கருத்துருவாக்கத்திற்கு அப்படியே ஆமாம் சாமி போடுவது..

  இன்று ரங்கராசன்(பிரணாப் இடத்தைக் காலி செய்தால் நிதி அமைச்சராக வரக்கூடும் என்று ஊக ஊடகச் செய்தியில் இருப்பவர்) காப்பீடு மற்றும் மல்டி பிராண்ட் ரீடெய்லிங்கில் இந்தியா அன்னிய முதலீடுகளை அனுமதிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

  அன்னிய முதலீடுகளை வரவேற்கும் போது அவை நமது நாட்டுச் சூழலுக்கு எவ்வாறு பலனளிக்கும் என்று சிந்தித்து செயல்படுபவர்கள்தான் மிகச் சிறந்த தலைவர்களாக,வழிகாட்டிகளாக மிளிர்கிறார்கள்..

  சீனா வால்மார்டை அனுமதித்து கனகாலம் ஆகிறது..200 கடைகளுக்கும் மேல் சீனாவில் வால்மார்ட் செயல்படுகிறது;அதைப் பார்த்துக் கூவும் இந்திய பொருளாதார நிபுணர்கள் வால்மார்ட் உலகளாவிய அளவில் விற்கும் பொருள்களில் 70 சதம் சீனாவில் உற்பத்தி செய்யப் பட்ட சீனப் பொருள்கள் என்பதை வசதியாக மறந்து விடுவார்கள்..

  இந்தியாவின் பெருத்த பயனீட்டு மக்கள் தொகை உபயோகிப்பாளர்களை பயன்படுத்தி காசு பார்க்க உள்நாட்டில் வருமானமற்ற மேற்குலக வணிகநிலையங்கள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன.

  உற்பத்தியைப் பெருக்கும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லாமல் இந்திய சந்தையை மட்டும் திறந்து விடும் போக்கு நிச்சயம் ஆபத்தானது.

  ReplyDelete
 13. ஹய்யோ, ஹய்யோ. என்ன ஒரு மேதமை, என்ன ஒரு மேதமை. அண்ணா, இப்படி அடுத்தடுத்து கலக்குறேள், போங்கோ.ஆமா, இந்த பி.ஜே.பி. மாநாட்டுல மோதி, அத்வானில்லாம் அடிச்சுண்டு சாகுறாளே, அது பத்தில்லாம் உங்கள் மூளையைத் திறந்து கொஞ்சம் கொட்ட மாட்டேளா. எனக்கென்னமோ, ரோமாபுரி எரிஞ்சப்ப, நீரோ மன்னன் பிடில் வாசிச்சானாமே. அது இப்போ, ஞாபகம் வந்து தொலைக்கறது.

  ReplyDelete
 14. .........Show me one product category where these government initiated cuts were passed on to the consumers by reducing the price ????.............. இந்த அனானி பின்னூட்டம் கொஞ்சம் லாஜிக்கலாகத்தெரிகிறது .... உங்க கட்டுரையின் கான்டெக்ஸ்டில் இதற்கு பத்லே அளிக்கவில்லையே பத்ரி .... உங்கள் பதில் என்ன ??

  ReplyDelete
 15. Sainath is writing this for long and his basic points are,
  1."There's also the head of ‘machinery' with its own huge customs duty concessions. That includes surely, the crores of rupees of sophisticated medical equipment imported by large corporate hospitals with almost no duty levied on it. The claim of providing 30 per cent of their beds free of charge to the poor — something that has never once happened — is an excuse to dole out these ‘benefits' (amongst others) to that multi-billion rupee industry."
  2."With excise, of course, comes the standard claim that revenues foregone on excise duty translate into lower prices for consumers. There is no evidence provided at all that this has actually happened. Not in the budget, not elsewhere."
  3."Any indirect ‘passing on' to consumers is a speculative claim, not proven."

  His argument is that all the reasons you/govt are giving for this is just excuse and truly "Of course, this being India, every plunder of public money for private profit is a pro-poor measure."

  ReplyDelete