Monday, February 11, 2013

அஞ்சலி: மலர்மன்னன்

எழுத்தாளர் மலர்மன்னன் இரு தினங்களுக்குமுன், சனிக்கிழமை காலை 4.45 மணிக்கு இறந்துபோனார். கிழக்கு பதிப்பகத்துக்காக ஆரிய சமாஜம், திமுக உருவானது ஏன், திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் ஆகிய மூன்று நூல்களை எழுதியுள்ளார். இது தவிர, பிற பதிப்பகங்கள்மூலம் அவருடைய பல நூல்கள் வெளிவந்துள்ளன.

அவர் சென்ற வாரம் என் அலுவலகத்துக்கு வந்ததுகூட அவர் எழுதி, பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ள ‘நாயகன் பாரதி’ என்ற புத்தகத்தின் பிரதியைக் கொடுத்துவிட்டுச் செல்லத்தான். பாரதியின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை மையமாக வைத்து, அவற்றையே கதைபோல எழுதியிருந்தார். அந்தக் கதைகள் சிலவற்றுடன் அவருடைய வேறு சில கதைகளையும் சேர்த்து பழனியப்பா பிரதர்ஸ் இந்தப் புத்தகத்தைக் கொண்டுவந்துள்ளது.

என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, தனக்கு நெஞ்சு வலி அதிகமாக ஆகியிருப்பதாகச் சொன்னார். உடனடியாக மருத்துவமனை செல்லச் சொன்னேன். ஆனால் நெஞ்சு வலி தொடர்பான சிகிச்சை என்றால் நிறையப் பணம் செலவாகுமே என்றார். அவருக்கு தற்போதைய அரசியல் அமைப்பில் பதவி வகிக்கும் சிலரை நெருக்கமாகத் தெரியும். அவர்கள் ஒரு வார்த்தை சொன்னால் சென்னை அரசு பொது மருத்துவமனையிலேயே நல்ல சிகிச்சை தருவார்கள் என்று சொன்னேன். சில ஆண்டுகளுக்கு முன் பத்திரிகையாளர் ஞாநி பொது மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டதைப் பற்றி எழுதியிருந்தார். அதை மலர்மன்னனிடம் குறிப்பிட்டேன். சரி, பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அடுத்த இரு தினங்களில் நான் தில்லி சென்றுவிட்டேன். தில்லியில் இருக்கும்போது வெள்ளிக்கிழமை இரவு அவரிடமிருந்து போன் வந்தது. அவரைப் பார்த்துக்கொள்பவர்தான் பேசினார். வலி அதிகமாகியிருப்பதாகவும் பொது மருத்துவமனைக்குச் செல்லலாமா அல்லது ஒரு தனியார் மருத்துவமனை பெயரைக் குறிப்பிட்டு அந்த மருத்துவமனைக்குச் செல்லலாமா என்றும் கேட்டார். நான் மீண்டும் மலர்மன்னனுக்கு நன்கு தெரிந்த, (பதவியில் இருக்கும்) ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியின் பெயரைச் சொல்லி அவரிடம் பேசினீர்களா என்று கேட்டேன். அவரிடம் பேசியாயிற்று என்றும் பொது மருத்துவமனைக்கு அவரும் தகவல் சொல்லி, உடனடியாகப் போய் சேர்ந்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டார் என்றும் சொன்னார்.

ஆனால் சனி காலை 5 மணிக்கு போன் வந்தது, அவர் இறந்துவிட்டார் என்று. மருத்துவமனை சென்று சிகிச்சை ஆரம்பம் ஆவதற்கு முன்னதாகவே உயிர் போய்விட்டது. அவர் கொஞ்சம் முன்னேற்பாடாக மருத்துவமனைக்கு உடனே சென்றிருந்தால் தன் உயிரை ஒருவேளை காப்பாற்றியிருக்கலாம்.

***

மலர்மன்னன் பலமுறை என் அலுவலகம் வந்துள்ளார். பொதுவாக அவர் எங்களுக்காக எழுதும் புத்தகத்தைப் பற்றி மட்டும்தான் அவருடன் பேசுவேன். அவருடைய தீவிர இந்துத்துவக் கொள்கை எனக்கு ஏற்புடையதன்று. ஒரிஸ்ஸா கந்தமால் விவகாரம் பற்றி அவருடன் வாதிட்டிருக்கிறேன். அயோத்தி ராமர் கோவில் விவகாரம் பற்றிப் பேசியிருக்கிறேன். கோத்ரா சம்பவம் பற்றிப் பேசியிருக்கிறேன்.

அவருடைய இளம் வயதில் அவர் எப்படி இருந்திருப்பார் என்று தெரியாது. அவர் சட்டை அணிந்து நான் பார்த்திருக்கிறேன் என்று ஞாபகம், ஆனால் திடீரென சட்டை அணிவதைத் துறந்து, சந்நியாசிகளுக்கான காவி உடுப்பும் மேலே ஒரு துண்டும், பூணூல் இல்லாமலும், நீண்ட தாடியுமாகக் காட்சியளிக்கத் தொடங்கினார். ஒரு முறை நான் கேட்டபோது இப்ப நான் சந்நியாசிதான் என்று சொன்னார். ஒருமுறை உணவு பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது ‘ஒரு சந்நியாசியாக யாராவது எனக்கு என்ன பிட்சை போட்டாலும், அது மாமிசமாக இருந்தால்கூட அதை நான் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்’ என்றார்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிப்போய் காலில் புண் வந்து நடப்பதற்கு மிகவும் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அந்த நிலையிலும் என் அலுவலகத்துக்கு ஒரு புத்தகத்தைக் கொடுத்துவிட்டுப் போக வந்திருந்தார். ஏன் இப்படி வலியிலும் அலைகிறீர்கள் என்று கேட்டேன். ‘வலி நல்லது. நான் உயிருடன் இருப்பதை அது எனக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது. வலி இல்லை என்றால் எனக்கு உயிர் போய்விட்டது என்று பொருள்’ என்றார். அப்போது அவரிடம் நான் அரசுப் பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு புத்தகங்களை இலவசமாகத் தந்து அவர்களைப் படிக்கவைக்கவேண்டும் என்ற என் திட்டத்தைச் சொன்னேன். ‘அப்படியானால் என்னுடன் வா’ என்று சென்னை மேயர் சைதை துரைசாமியிடம் என்னை அழைத்துச் சென்றார். அதன் தொடர்ச்சியாக சென்னை கார்ப்பரேஷன் பள்ளிகளில் இந்தத் திட்டத்தை பைலட் முறையில் செயல்படுத்த உதவியாக இருந்தார்.

சென்னை மேயர் அலுவலகத்தில் நாங்கள் காத்துக்கொண்டிருந்தபோது அருகில் ஒரு வயதான பெண் விண்ணப்பப் படிவம் ஒன்றை நிரப்ப உதவி கேட்டார். அந்தப் பெண் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கு மாறியவர் என்பது தெரிந்ததும் மலர்மன்னன் மிகக் கோபம் அடைந்தார். ‘ஏம்மா இப்படிச் செய்யறீங்க, தாய் மதத்துக்குத் திரும்ப வாங்கம்மா’ என்று அங்கேயே சத்தம் போட ஆரம்பித்துவிட்டார். நான் அவரிடம் உடனேயே விவாதத்தில் இறங்கினேன். அப்போது அவர், இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கு மாறிய பலரை தான் மீண்டும் இந்து மதத்துக்கு மாற்றியுள்ளதாகவும் அப்படிச் செய்வதுதான் சரியானது என்றும் வாதிக்கத் தொடங்கினார். கிறிஸ்தவர்களின் மதமாற்றக் கூட்டங்கள் பற்றியும், ‘சாது something’ என்ற பெயரில் பிராமணப் பெயர்கொண்ட ஒருவரைப் பற்றியும் என்னிடம் நிறையப் பேசினார். இந்துக்கள் மதம் மாற்றப்படுவது குறித்து அவருக்குக் கடுமையான கோபம் இருந்தது. அது ஏன் நடக்கிறது என்பது தொடர்பாக அவரிடம் முழுமையான பார்வை இருந்ததா என்று எனக்குத் தெரியாது. அது குறித்து அவரிடம் நிறைய விவாதிக்க எண்ணியிருந்தேன். ஆனால் அது கடைசிவரை நடக்கவில்லை.

மலர்மன்னனிடம் பிராமணீயப் பார்வை ஏதும் இருந்ததாகச் சொல்ல முடியாது. மக்களை சாதிகள் அற்ற, ஒற்றை அடையாளம் கொண்ட ஓர் இந்துக் குழுவாகவும் இந்தியாவை ஓர் இந்து தேசமாகவுமே அவர் பார்த்தார். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அவருடைய இந்து மதம் சடங்குகள் கொண்டதல்ல. சித்தர்கள், அவர்களின் அதிசயச் செயல்கள் ஆகியவற்றை அவர் முழுமையாக நம்பினார்.

அவருடைய இறுதிக் காலத்தில் டிஸ்கவரி போன்ற தொலைக்காட்சி சானல்களுக்கு மொழிமாற்றம் செய்துகொடுப்பதன்மூலம் அவர் வருவாய் ஈட்டிவந்தார். அப்படி ஈட்டிய வருவாயையும் அவர் பிறருக்குத் தூக்கிக் கொடுத்துவிடக்கூடியவராகவே இருந்தார். அவருடைய குடும்பம், உற்றார், உறவினர் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது.

தமிழக அரசியலில் அவருக்கு அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோர்மீது மட்டும்தான் ஈடுபாடு. அவரைப் பொருத்தமட்டில் அண்ணாதுரை தவறே செய்ய முடியாதவர். ஆனால் பெரியார், கருணாநிதி ஆகியோர் கடுமையான எதிரிகள். அவருடைய திமுக, திராவிட இயக்கம் ஆகியவை பற்றிய புத்தகங்களில் இந்தக் கருத்துகளை நீங்கள் காண முடியும். புத்தகம் எழுதுவதற்குக் கடுமையாக உழைக்கக்கூடியவர். புதுக்கோட்டை ஞானாலயா நூலகம் சென்று அங்கேயே தங்கி, குறிப்புகள் எடுத்து, வேகமாக எழுதி, திருத்தி, டிஜிட்டல் கோப்பாக அனுப்பிவிடுவார். எடிட்டிங் செய்யும்போது சில இடங்களில் மாற்றங்கள் வேண்டும், சில இடங்களை நீக்கிவிடலாம் என்று அவரிடம் பேசும்போது மிகவும் தன்மையுடன் நடந்துகொள்வார். அடுத்தடுத்துப் பல புத்தகங்கள் எழுதுவது குறித்து நிறையத் திட்டங்கள் வைத்திருந்தார். சென்ற வாரம் வந்தபோதுகூட, அவர் வேறொரு பதிப்பகத்தில் கொடுத்து இப்போது நின்றுபோயிருந்த இரு புத்தகங்களை மறுபதிப்பு செய்வதுபற்றிப் பேசினார். அதில் ஒன்றில் மிகுதியாக இருக்கும் பிரதிகளை விற்றுத்தருமாறு என்னைக் கேட்டுக்கொண்டார்.

புத்தகப் பதிப்புத் தொழிலில் நான் சந்தித்துள்ள வித்தியாசமான மனிதர்களில் மலர்மன்னன் ஒருவர். அவர் கருத்துகள் பலவும் எனக்கு ஏற்புடையவையாக இல்லாவிட்டாலும் அவர்மீது மிகுந்த மரியாதை உண்டு எனக்கு.

12 comments:

 1. <<ஆனால் நெஞ்சு வலி தொடர்பான சிகிச்சை என்றால் நிறையப் பணம் செலவாகுமே என்றார்.
  <<புத்தகம் எழுதுவதற்குக் கடுமையாக உழைக்கக்கூடியவர்.
  இதை படிக்கும்போது மனம் கனத்து போகிற்து. எழுத்தாளர்களின் இந்த நிலை மாற வேண்டும்.

  ReplyDelete
 2. நல்ல அஞ்சலி. அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள். திமுக உருவானது ஏன்? மட்டுமே நான் அவர் எழுதி படித்த புத்தகம், விமர்சனமும் எழுதினேன். அடுத்த இந்திய பயணத்தில் இவரையும் சந்திக்க திட்டமிட்டிருந்தேன். :(

  ReplyDelete
 3. தீவிர பற்றோடு தன வாழக்கை முழுவதையும் தனக்காக என்று எதுவும் செய்து கொள்ளாமல் தான் நம்பும் கொள்கைக்காக வாழ்ந்த மனிதருக்கு அஞ்சலி

  ஒரு குறிப்பிட்ட வர்ணத்தை சார்ந்த ஆப்காஅநிச்டானில் இருந்து பிரிவினையின் போது வந்தவர்கள்,காஷ்மீரில் இருப்பவர்கள்,குஜராத்தில் கன்யாகுமரியில் இருப்பவர்கள் கோத்திரம் ஒரே கோத்திரம் இருப்பது அவர்கள் அனைவரும் ஒரு இடத்தில இருந்து உருவானவர்கள் அங்கிருந்து பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தவர்கள் என்பதை தானே காட்டுகிறது என்ற கேள்விகளுக்கு பதிலாக கோத்திரங்கள் பற்றி விரிவான புத்தகம் எழுதி வருவதாக ஒரு முறை திண்ணையில் எழுதி இருந்தார் .அதை வெளியிட்டால் பல சந்தேகங்களுக்கு விடை கிடைக்கலாம்.அவரின் முடிக்கப்படாத புத்தகங்களையும் தொகுப்புகளாக வெளியிடுவது அவர் கொளகைகளை நம்பும்/எதிர்க்கும் இரு குழுக்களுக்கும் பேருதவியாக இருக்கும்

  ReplyDelete
 4. http://www.thehindu.com/news/states/tamil-nadu/bouquets-for-tamil-nadus-performance-in-health-sector/article4399883.ece

  அரசு மருத்துவமனைகளை பற்றி ஊடகங்களால் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ள எண்ணம் மிகவும் வருத்தம் அளிக்கிறது.பல ஆயிரம் அறுவை சிகிச்சைகள்,பல்லாயிரம் உயிர்களை காக்கும் பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ள,பல கோடி மக்களுக்கு பலன் அளித்த,பலன் அளிக்கும் மருத்துவமனைகளை பார்க்கும் ஒன்றுக்கும் உதவாத இடம்/சிபாரிசு இருந்தால் தான் நல்ல சிகிச்சை கிடைக்கும் இடம் என்று பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டிய கடமைகள் ஊடகங்களுக்கு உண்டு.
  ஒரு நாளைக்கு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.எவ்வளவு சிக்கலான காயங்களில்,நோய்களில் இருந்து மக்கள் அங்கு குணம் அடைகிறார்கள் என்ற எந்த செய்தியும் போய் சேருவதில்லை.மாறாக அங்குள்ள குறைகளே பெரிதும் செய்திகளில் அடிபடுவதால் இந்த நிலை.

  ReplyDelete
 5. தி நகரில் உள்ள பப்ளிக் ஹெல்த் சென்டர் மருத்துவமனையில் மிக குறைந்த விலையில் வைத்தியம் செய்து கொள்ளலாம்.
  ஹிந்து மிசன் மருத்துவமனையிலும் அவருக்கு வைத்தியம் கிடைத்திருக்கும்.VHS மருத்துவமனையிலும் குறைந்த வசதியில் மருத்துவம் பார்த்து கொள்ளலாம்.இவருக்கே வைத்தியம் பார்க்க பணம் வாங்கினால் ஹிந்து மிசன் மருத்துவமனை என்ற பெயருக்கே அர்த்தம் இல்லையே
  அவர் பெரிதும் கோவப்பட்ட மதமாற்றத்தின் முக்கிய காரணிகளில் இலவச மருத்துவமும் ஒன்று.இவரின் நிலையே மதமாற்றத்தின் மேல் இருந்த இவர் கோவத்தின் அர்த்தமில்லா நிலையை உணர்த்துவது வேதனை

  ReplyDelete
 6. ஆழ்ந்த அஞ்சலி.

  ReplyDelete
 7. பத்ரி: என்னைப் பற்றிய உங்கள் குறிப்பில் சில தகவல் பிழைகள் உள்ளன. நான் பைபாஸ் சர்ஜரி எதுவும் செய்துகொள்ளவில்லை. ஆஞ்சியோ பிளாஸ்டிதான் தேவைப்பட்டது அது தனியார் மருத்துவமனையில் செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக ஒரு நள்ளிரவில் நெஞ்சுவலி ஏற்பட்டபோது ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றேன். விரைவகவும் சிறப்பாகவும் கவனித்தார்கள். அது பற்றியே என் கட்டுரையில் எழுதியிருந்தேன். மலர்மன்னன் எழுபதுகளில் எனக்கும் பரிச்சயமானவர்தான். கணையாழியில் ஒன்றாக வேலை செய்திருக்கிறோம். அப்போதைய மலர்மன்னனை அறிந்தவர்களுக்கு இப்போதைய அவரது ச்ந்நியாசிக் கோலம் வேடிக்கையாகவே தோன்றும்.அண்மைக் காலங்களில் எனக்கு அவருடன் தொடர்பில்லை. அவர் நிச்சயம் உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்கத்தவறியது வருத்தத்துக்குரியது. அவருடன் தினசரி உறவாடிவந்தவர்கல் இதை கவனித்திருக்கலாம். பொது மருத்துவமனையில் நல்ல சிகிச்சை கிடைக்கிறது. நல்ல மருத்துவர்களும் இருக்கிறார்கள். சூழல் மட்டுமே வசதிக் குறைவானது.

  ReplyDelete
  Replies
  1. ஞாநி: தகவல் பிழைகளுக்கு வருந்துகிறேன். என் ஞாபகத்திலிருந்து எழுதினேன். விளக்கத்துக்கு நன்றி.

   Delete
 8. திண்ணையில் வெளியான கவிதை குறித்து எழுந்த கடுமையான விமர்சனங்களுக்கு அவர் இவ்வாறு பதில் எழுதியிருந்தார். 'இளங்கோ, உங்கள் கவிதையைப் படித்தேன். உங்களுக்குக் கவிதை எழுத வருகிறது. எழுதுங்கள். விளக்கம் அளிக்க வேண்டுமென்கிற கவலை எல்லாம் உங்களுக்கு எதற்கு? நீங்கள் பாட்டுக்கு எழுதிக்கொண்டு போங்கள். நிற்பது நிற்கும்.'
  அறிமுகமில்லாத என் போன்றொருக்கு ஆதரவாய்ப் பேசிய அவரது பெருந்தன்மை என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவரின் மறைவு நிகழ்ந்த விதம் கவலை கொள்ள வைக்கிறது.

  ReplyDelete
 9. மலர்மன்னன் தீபம் பத்திரிகையில் 70-களில் எழுதிய பிர்ஸா முண்டா பற்றிய குறுநாவல் இன்றைய சூழ்நிலையில் முக்கியமானது

  ReplyDelete
 10. படிக்கின்ற காலத்தில் சென்ற தலைமுறை,அல்லது களப்பணியாளர்கள் தலைமுறை அறிவு களஞ்சியமாக விளங்கியது போல பலர் பேசுவது,வருந்துவது வியப்பு தான்
  தாம்பரத்தில் ஹிந்து முன்னணி கூட்டங்கள் அதிகம் நடக்கும்.சுவற்றில் கூட ஹிந்து கடைகளிலேயே பொருட்களை வாங்கு என்று எழுதி வைத்திருப்பார்கள்.தமிழ்நாடு மெடிகல்ஸ் ,துணிக்கடை என்று பெயர் வைத்திருந்தால் அது இஸ்லாமியர் கடைகளாக தான் இருக்கும்.அங்கு பொருள் வாங்காதீர்கள் என்று மேடை போட்டு பேசுவார்கள் இன்னும் ஹிந்துக்கள் சுதாரிக்க வில்லை என்றால் இன்னும் பத்து,இருவது வருடங்களில் இஸ்லாமியர் பெரும்பான்மை ஆகி விடுவர் என்று அடித்து விடுவார்கள்.அதை எல்லாம் உண்மை என்று தான் நம்பி கொண்டிருந்தேன்.
  ஹிந்து மிசன் மருத்துவமனைக்கு பள்ளி மாணவர்கள் தெருத்தெருவாக சென்று பணம் சேகரித்து கொடுத்தோம்.VHP மணியன் கையால் மகாபாரத கேள்வி பதில் போட்டியில் பரிசு வாங்கி இருக்கிறேன் .இன்றும் அந்த சான்றிதழ் என்னிடம் உள்ளது
  அப்போது ஏதாவது தொலைகாட்சியில் என்னை அழைத்திருந்தால் முக்கிய பிரட்சினையாக ஹிந்து முன்னணியினர் பேசி வந்த இஸ்லாமியர் ஆக்கிரமிப்பு,மத மாற்றம் தான் என்பதை தான் கிளிபிள்ளை போல ஒப்பித்திருப்பேன்.மதம் மாறியவர்கள் தேச விரோதிகள் எனபது ஆழ பதிந்திருந்தது.கல்லூரியில் கூட நானும் சில நண்பர்களும் சான்றிதழில் ஹிந்துவாகவும் தீவிர இறைபக்தி கிருதுவனாகவும் இருந்த நண்பனை அதை வைத்தே கிண்டல் செய்து கொண்டிருப்போம்.
  வீட்டில் பெற்றோர் மற்றவர்களை/சமூகத்தை பற்றி வைத்திருக்கும் எண்ணம் தான் பெரும்பான்மையான மாணவர்களிடம் வெளிப்படும்.
  ஆசிரியர் ,நண்பர் புலால் உண்பது பாவம் என்றால் உடனே புலால் உண்ணும் போது மிகவும் குற்ற உணர்ச்சி வரும்.
  தானாக இவற்றை ஆராய்ந்து சரி,தப்பு அறிய சொந்தக்காலில் நிற்கும் காலகட்டம் தான் முக்கியம்.சென்ற தலைமுறையில் சிறு வயதில்,பள்ளி படிப்பு முடித்த உடனே வேலைக்கு சென்றவர் அதிகம்.அதனால் இங்கு பேசிய மாணவர்களின் வயதிலேயே அவர்கள் களப்பணியாளர்கள் ஆக கூடிய தகுதியை அடைந்தனர்.
  இந்த மாணவர்களும் பெற்றோர்களின் பாதிப்பில் இருந்து மீளும் போது அவர்களுக்கு தன்னம்பிக்கை வரும்.சொந்தமாக உழைத்து அதில் வாழும் போது களப்பணியாளர்களை தூக்கி சாப்பிட்டு விடும் அளவிற்கு அனைத்து பிரட்சினைகளையும் அலசுவர்.எதிர் கொள்வர்

  ReplyDelete
 11. It is so sad to hear all good writers struggle with money & health.

  ReplyDelete