Wednesday, February 06, 2013

டோண்டு ராகவன்

காலை அலுவலகத்துக்கு வரும்போது சுமார் 8.30 மணி அளவில் ட்விட்டரைப் பார்த்தபோது டோண்டு ராகவன் மறைவு என்ற செய்தி கண்ணில் பட்டது.

இணையம் மூலமாக அறிமுகமானவர். அவர் மொழிமாற்றல் வேலைகளைச் செய்துவந்ததால் தொடர்ந்து NHM Writer, NHM Converter தொடர்பான சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டே இருப்பார். ‘பாமினில ஒரு வேலை வந்திருக்கு’ அல்லது ‘லதா ஃபாண்ட்ல டைப் அடிக்கணும்’ என்ற மாதிரியாக அந்தக் கேள்விகள் இருக்கும். அவருடைய பிரதானமான மொழிபெயர்ப்பு வேலைகள் பிரெஞ்ச், ஜெர்மன், ஆங்கிலம் என்றாலும் அவ்வப்போது தமிழ் மொழிபெயர்ப்பு வேலைகளையும் செய்துதருவார்.

போனில் பேசும்போது எப்போதுமே, ‘நான் டோண்டு ராகவன் பேசறேன்’ என்றுதான் ஆரம்பிப்பார். டோண்டு என்பதற்கான பெயர்க்காரணத்தை அவரே தன் வலைப்பதிவில் கொடுத்துள்ளார்.

கடைசியாக நாங்கள் சந்தித்துக்கொண்டது சுமார் நான்கைந்து மாதங்கள் முன்பாக என்று நினைக்கிறேன். சத்தியம் தொலைக்காட்சியில் ஒரு நேரலை விவாத நிகழ்ச்சியில் இருவரும் பங்கெடுத்துக்கொண்டோம். அப்போதுதான் அவருடைய உடல் நலக்குறைவு பற்றித் தெரிந்துகொண்டேன்.

ஹாரி பாட்டர் தொடர் புத்தகங்களில் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை ஜெர்மன் மொழியில் படிக்கவேண்டும் என்றும் அந்தப் புத்தகத்தை வாங்கித் தரமுடியுமா என்றும் என்னிடம் கேட்டிருந்தார். அந்தப் புத்தகத்தை எங்கிருந்து சோர்ஸ் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அதனைக் கடைசிவரை வாங்கித் தரமுடியவில்லை. நிறையப் புத்தகம் படிப்பவர். எப்போதும் கையில் ஒரு புத்தகத்துடனேயேதான் இருப்பார்.

பார்ப்பனர்கள், பிற சாதிகள் பற்றி அவருக்குப் பல்வேறு கருத்துகள் இருந்தாலும் பிற சாதியினர்மீது அவருக்கு எந்த வெறுப்பும் இருந்ததுபோல் நான் உணரவில்லை. வெறுப்பு நோய்க்கு மரணம்தான் மருந்து என்பதாக ஒருசிலர் கொண்டுள்ள கருத்து அதிர்ச்சி அளிக்கிறது.

போலி டோண்டு விவகாரம் வந்த நேரத்தில் டோண்டு ராகவன் நிறைய நேரத்தை வீணடித்து வெட்டிச் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். அவற்றையெல்லாம் மிக எளிதாகக் கடந்து சென்றிருக்கலாம். அதேபோல ஒரு சில போலிப் பெயர்களை அவர் பயன்படுத்தியது தொடர்பான சர்ச்சையும் தேவையற்ற ஒன்று. கடும் உழைப்பாளியான அவர் இந்த நேர விரயங்களில் ஈடுபட்டிருக்கவேண்டாம். எல்லா இணையர்கள் சந்திப்பிலும் எப்படியோ ஆஜர் ஆகிவிடுவார்.

இன்று காலை அலுவலகம் வந்ததும் 9.29 மணிக்கு ஃபோன் அடித்தது. டோண்டு ராகவன் என்று பெயர். ஒருவேளை இந்த மரணச் செய்தியே ஒரு புரளியோ என்று ஒரு கணம் நினைத்தேன். ஆனால் எடுத்துப் பேசியது டோண்டு ராகவனின் மனைவி. இறப்பு செய்தியை என்னிடம் தெரிவிப்பதற்காக அழைத்திருந்தார். இதுபோன்ற நேரத்தில் அவரிடம் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று தெரியவில்லை. தகவல் காலையிலேயே தெரிந்துவிட்டது என்று சொன்னேன். என் இரங்கலைத் தெரிவித்தேன். காலையில் அவர் வீட்டுக்குச் செல்ல முடியவில்லை. பின்னர் ஒருநாள் பொறுமையாகப் போய்ப் பார்த்து அவர் மனைவியிடம் பேசவேண்டும்.

12 comments:

  1. Dondu Sir will be missed...Farewell to the hard working, indefatigable fighter.

    ReplyDelete
  2. வித்தியாசமான அடைமொழியுடன் இணையங்களில் முதல் முறை பார்த்த நபர்களில், மனதில் தங்கிய சிலறில் டோன்டுவும் ஒருவர். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  3. He Helped a lot when I approached him for translating a piece of Writing from German to English / Tamil

    My Condolence and prayers to Lord to bless the family of Dondu Raghavan , with courage and calmness to bear the Loss

    May his Soul rest in Eternal Peace

    ReplyDelete
  4. Sorry to read this news.

    Raju-Dubai

    ReplyDelete


  5. அதிர்ச்சியான செய்தி. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    டோண்டு சார் நினைவாக நான் இட்ட பதிவு

    http://suvanappiriyan.blogspot.com/2013/02/blog-post_6.html

    ReplyDelete
  6. /// சத்தியம் தொலைக்காட்சியில் ஒரு நேரலை விவாத நிகழ்ச்சியில் இருவரும் பங்கெடுத்துக்கொண்டோம். ///

    இதன் வீடியோ சத்தியம் டிவி தளத்திலோ, யு-டியூபிலோ (அல்லது வேறெங்காவது) இருந்தால் சுட்டி கொடுக்க முடியுமா?

    சரவணன்

    ReplyDelete
  7. திரு டோண்டு ராகவன் அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

    சினிமா விரும்பி

    http://cinemavirumbi.blogspot.in

    ReplyDelete
  8. சுபமூகா பக்கங்களில் கேள்வி பதில் பகுதி ஆரம்பிக்கும் எண்ணத்தை முன் வைத்த போது மிக உற்சாகமாக பாராட்டி உடனே 'குண்டக்க மண்டக்க' கேள்விகளையும் அனுப்பி வைத்தார். அந்த அருமையான எண்ணத்தை சில பல காரணங்களால் கைவிட்ட போது, என்னைத் தொடர்பு கொண்டு திட்டித் தீர்த்தார். 'விடக் கூடாது சுபமூகா சார், ஒரு வாரம் gap விட்டதே தப்பு. மக்கள் நம்மை மறந்துடுவாங்க!' என்று அவர் தொலை பேசிய வார்த்தைகள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அவர் கேள்வி பதில் பகுதி ஆரம்பித்து வெற்றி பெற்று காட்டினார். சில மணித் துளிகள் தான் அவரிடம் நான் பேசியிருக்கிறேன். ஆனாலும் மனதில் பதிந்து போன ஒரு நட்பு!!

    அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

    ReplyDelete
  9. திரு.டோண்டு ராகவன் அவர்களின் இறப்பு அதிச்சியைத் தந்தது. குடும்பத்திருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  10. டோண்டு என்ற வார்த்தை தமிழ் பிராமண அல்லது ஐயங்கார் மக்களிடையே புழங்கும் வழக்கமான வார்த்தையா? வேறு யாராவது இதே வார்தையைப் பயன்படுத்துவதைக் கேள்விப்பட்டவர்கள் தெரிவிக்க முடியுமா?

    சரவணன்

    ReplyDelete
  11. அவரது பதிவுகளில் என்னைக் கவர்ந்தவை அவரது சில அனுபவப் பதிவுகளே. அந்தக் காலத்தில் (அவரது மொழியில் சமீபத்தில்தான்!) சைக்கிளில் லைட் இல்லாமல் போய் கோர்ட்டில் அபராதம் கட்டியது, ஒரு சோப் கம்பெனியின் விளம்பர வாசகப் போட்டியில் டிவி பரிசு பெற்று, அப்பா சொல்படி அதைத் திருப்பிக் கொடுத்துப் பணமாகப் பெற்று ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டது, பம்பாயில் மெஸ் சாப்பாடு, ஞாயிறு காலை தமிழ்ப் படம் என்று பேச்சலராக வாழ்ந்தது, அவரது தந்தை இறந்த பிறகு அவருக்கு வரவேண்டிய பணத்தை ஹிந்து ராம் உடனடியாக அனுப்பியது, 40 வருடங்களுக்குப் பிறகு சிறுவயதில் வாழ்ந்த பூர்வீக வீட்டுக்கு மீண்டும் குடிபோனது போன்றவை. 'எல்.ஐ.சி.க்கு அனுப்பப்படும் செக்குகளுக்குக் கலெக்ஷன் சார்ஜ் கிடையாது' என்பது போன்ற பல பிரத்யேகமான தகவல்கள் அவர் பதிவுகளில் சகஜமாக இடம் பெறும். சஜ்ஜீவ் குமார் நடித்த பழைய இந்தித் திரைப்படங்கள் சிலவற்றைச் சிலாகித்து எழுதியவையும் நன்றாக இருக்கும்.

    பெரியார், திராவிட இயக்கம், இஸ்ரேல் போன்ற விஷயங்களில் அவரது கருத்துகள், நாம் உடன்பட்டாலும், மாறுபட்டாலும் பிரச்சினைக்குறியவை அல்ல. ரசிக்க முடியாதவை. என்றால் எம்.எஃப்.ஹூசைன்- டாக்டர் ருத்ரன் சர்ச்சைகள், ஒரு பெண் பதிவரை மறைமுகமாகக் குறிப்பிட்ட (வேறொருவர் எழுதிய) ஒரு புனைவு போன்ற விஷயங்களில் அவர் எடுத்த நிலைப்பாடுகளும், அவற்றை முன்வைக்கையில் அவர் பயன்படுத்திய சில சொற்களும் எனலாம்.

    சரவணன்

    ReplyDelete