Tuesday, March 05, 2013

விஸ்வரூபம் 1 + 1

சனிக்கிழமை மாலை இரா. முருகனின் விஸ்வரூபம் நாவல் வெளியீட்டு விழா மைலாப்பூர், ஆர்க்கே மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.

ஆர்க்கே மாநாட்டு அரங்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். மிக அற்புதமான இடம். கச்சேரிகள் நடத்தத் தோதான இடம். மிக அற்புதமான ஒலித் தன்மை கொண்ட அரங்கு. சுமார் 125 பேர் வரை உட்காரலாம். பெரும்பாலான புத்தக நிகழ்வுகளுக்கு அதற்குமேல் கூட்டம் வரப்போவதில்லை. நல்ல ஏசி. நல்ல டாய்லெட். அருகில் ஒட்டிய இடத்தில் காஃபி, டீ தர இடம் உள்ளது. நல்ல மேடை. நின்று பேசும் இடத்துக்கு நேராக மிக நல்ல விளக்குகள்/வெளிச்சம். உள்ளே வை-ஃபை இணைய வசதி. புரொஜெக்டர் வசதி. வீடியோ எடுத்து திரையில் லைவாகக் காண்பிக்கிறார்கள். லைவ் வீடியோ ஸ்ட்ரீமிங் வசதி உண்டு. இனி புத்தக வெளியீட்டு விழாக்கள் மட்டுமல்ல, கிழக்கின் அனைத்து விழாக்களையும் இந்த இடத்தில்தான் நடத்துவதாக முடிவெடுத்துள்ளேன். 150 பேருக்குமேல் வரப்போகிறார்கள் என்றால்தான் வேறு இடத்தைப் பார்க்கவேண்டும்.

இரா. முருகன் புத்தகத்தை பி.ஏ.கிருஷ்ணன் வெளியிட ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார். க்ரேஸி மோகன், சுப்ரபாரதி மணியன், ராஜகுமாரன் ஆகியோர் பேசினர். இரா. முருகன் ஏற்புரை. அனைத்தையும் முழுதாக வீடியோவில் இங்கே பார்க்கலாம்.


சனி இரவே ஒரு ‘நீயா, நானா’ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றேன். நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது தகவல் சொல்கிறேன். ஷூட்டிங் ஆரம்பித்தது இரவு 11.30 மணிக்கு. நிகழ்ச்சி முடிந்தது அடுத்த நாள் அதிகாலை 3.00 மணிக்கு. வீடு சென்று சேர்ந்தபோது ஞாயிறு காலை 3.40 மணி.

ஞாயிறு காலை 9.00 மணிக்கு சத்யம் தியேட்டரில் விஸ்வரூபம் சினிமா பார்க்க டிக்கெட் வாங்கியிருந்தேன். அதிகம் தூங்காமல் கிளம்பிப் படம் பார்க்கச் சென்றேன்.

படத்தின் அடிப்படை லாஜிக் ஓட்டையைத் தவிர்த்துவிட்டு (ரா ஏஜெண்டு(களு)ம் எம்.ஐ 6 ஏஜெண்டும் அமெரிக்க சி.ஐ.ஏவுக்குத் தெரியாமல் அமெரிக்காவைக் காப்பாற்ற முயற்சி செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவர்...) பார்த்தால், நன்றாகத்தான் இருந்தது. அமெரிக்க ஆதரவுப் படம், முஸ்லிம் எதிர்ப்புப் படம் என்றெல்லாம் என் மண்டைக்குத் தோன்றவில்லை. இரண்டாம் பாதியில் படத்தை ஸ்லோவாக்கியிருப்பது ரசிகர்களுக்குப் புரியாவிட்டால் என்ன ஆவது என்ற பயம்தான் என்று நினைக்கிறேன். இந்த பயம் இருக்கும்வரை கோலிவுட்டால் ஹாலிவுட் ரேஞ்சுக்குப் படம் எடுக்கவே முடியாது. சின்னச் சின்ன சொதப்பல்களையெல்லாம் தாண்டி, தொழில்நுட்ப அளவில் உச்சத்தை எட்டியுள்ள தமிழ்ப் படம் இது என்று தாராளமாகச் சொல்லலாம். படம் பல இடங்களில் பா. ராகவனின் பல புத்தகங்களை நினைவுபடுத்துகிறது என்று யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.

படம் பார்த்துவிட்டு வந்து தூக்கம், தூக்கம், தூக்கம்.

4 comments:

 1. [Sorry for typing in English]

  What about the second time? :-)

  /// என் எதிர்ப்பைப் பதிவு செய்ய இந்தப் படத்தை இரண்டு தடவையாவது தியேட்டர் சென்று பார்ப்பது என்று முடிவு செய்துள்ளேன்.///
  (http://www.badriseshadri.in/2013/01/blog-post_29.html)

  Saravanan

  ReplyDelete
 2. Yes, as u said i reminded me Nilamellam Ratham of PARA

  ReplyDelete
 3. Haran Prasanna can open up a bit :)

  ReplyDelete