Friday, March 08, 2013

எதிர்காலம் இந்தப் பெண்கள் கையில்

நுங்கம்பாக்கம் அரிமா சங்க (லயன்ஸ் கிளப், நுங்கம்பாக்கம்) உறுப்பினரும் என் நண்பருமான ஆர்.கே ஒரு நிகழ்ச்சிக்காக நேற்று என்னை அழைத்திருந்தார். அவர்களுடைய சங்கம் ஆண்டுதோறும் 50 பெண்களுக்கு ஸ்பான்சர் செய்து மருத்துவச் செவிலியர் பணியைக் கற்றுத் தருகிறது. ஓராண்டுப் பயிற்சி முடிந்ததும் அவர்களுக்கு வேலை வாங்கித் தருகிறது. இந்தப் பெண்கள் 12-ம் வகுப்பு படித்து முடித்தவர்கள். அனைவரும் கிராமங்களில் வசிப்பவர்கள். பெரும்பாலும் வட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழக எல்லையின் ஆந்திரப் பகுதியிலிருந்தும் சிலர் வந்திருந்தனர்.

இவர்களுடைய வீடுகளில் இவர்களை இதற்குமேல் படிக்க வைக்கமாட்டார்கள். கிராமத்திலேயே இருந்தால் இந்தச் சிறு வயதிலேயே திருமணம் செய்துவைத்தும் விடுவார்கள். இவர்களுக்கு மேல் படிப்புக்கான வாய்ப்பு பெரும்பாலும் கிடைக்காது.


இந்த செவிலியர் பயிற்சி என்பதும்கூட செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் சேர்த்து அல்ல. சென்னையில் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வேலையில் இருந்தபடியே பெறும் பயிற்சி. பயிற்சி முடிந்ததும் சென்னையில் வெகுவேகமாக வளர்ந்துவரும் தனியார் மருத்துவமனைகளில் இவர்களை அரிமா சங்கத்தினரே வேலைக்குச் சேர்த்துவிடுகிறார்கள். இதுவரையில் ஐந்து ஆண்டுகள் இதேபோல் பயிற்சிகள் தரப்பட்டு, இப்போது ஆறாவது பேட்ச். இவர்களுக்கு ஆரம்பத்தில் மாதச் சம்பளமாக ரூ. 4,500 கிடைக்குமாம். சென்னையில் இந்தச் சம்பளத்தில் உயிர்வாழ்தல் கடினமானதே. ஆனால் அதிலும் இந்தப் பெண்கள் மாதம் 2,000 ரூபாய் வரை சேமித்துவிட முடியும் என்றனர். கஷ்டம் என்று நினைக்கிறேன். முயற்சி செய்தால் 1,000 ரூபாய் வரை மாதம் சேமிக்கலாம்.

சென்ற ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரியின் என்.எஸ்.எஸ் மாணவர்களுடன் திருவள்ளூரின் ஜமின் கொரட்டூர் என்ற கிராமத்துக்கு முகாமுக்குச் சென்றிருந்தது குறித்து இந்த பெண்களிடம் விளக்கமாகப் பேசினேன். அவரவர் கிராமங்களில் பொதுச் சுகாதாரம் எப்படி உள்ளது என்பது குறித்தும் கிராமத்தின் அடிப்படை வசதிகள் குறித்தும் பேசினேன்.


முதலாவதாக இவர்கள் அனைவருடைய கிராமங்களிலும் - ஒன்று விடாமல் - யார் வீட்டிலும் கழிப்பறைகள் கிடையாது. இதுதான் ஜமின் கொரட்டூரிலும் நான் பார்த்தது. இதனால் பெண்களுக்கு எவ்வளவு வாழ்க்கைச் சிக்கல் என்பதைப் பெண்கள் மட்டுமே அறிவார்கள். யார் கண்ணிலும் படாமல் ஒதுங்குவது, இரவு நேரம், போதிய தண்ணீர் இல்லாமல் திண்டாடுவது, மாதவிலக்கு காலங்கள், பூச்சி பொட்டு கடித்தால் என்ன செய்வது என்று பல விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஜமின் கொரட்டூரில் அரசுப் பணத்தில் பெண்களுக்கான பொதுக் கழிப்பிடம் ஒன்றைக் கட்டியுள்ளனர். ஆனால் ஒருமுறை கூடப் பயன்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர். பொதுக் கழிப்பிடம் என்பது அபத்தமான கருத்து. அவசரமாகப் போகவேண்டும் என்றால் அரை கிலோமீட்டர் நடந்தா செல்வீர்கள்?

ஒரு கிராமப் பஞ்சாயத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுப்பதில் பெண்களுக்கான பங்கு மிகக் குறைவாக உள்ளது; சொல்லப்போனால் ஆண் மைய இந்திய கிராமங்களில் பெண்களுக்குக் குரலே இல்லை. ஜமின் கொரட்டூரில் நாங்கள் இருந்த காலம் வரை அந்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் என்று ஓர் ஆண் எங்களுக்கு அறிமுகமானார். கடைசிவரை நாங்களும் அவர்தான் அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவர் என்று நினைத்திருந்தோம். அந்த ஊரில் உள்ள அனைவருமே அவரைத்தான் பஞ்சாயத்துத் தலைவர் என்று அடையாளம் காட்டினர். ஊர்க் கூட்டம் ஒன்று நடைபெற்றபோதும் அவர்தான் உட்கார்ந்திருந்தார். கடைசியில் நாங்கள் எழுதவேண்டிய ஆவணத்துக்காக அவரைப் படம் எடுக்க முனைந்தபோது, “ஐயோ, நான் இல்லிங்க, என் மனைவிதான் பஞ்சாயத்துத் தலைவர்” என்றார். அந்தத் தொகுதி, ஒதுக்கீட்டின் அடிப்படையில் தலித் பெண் தொகுதி. ஆனால் நடைமுறையில் பெண்ணுக்கும் மதிப்பில்லை. தலித்துக்கும் மதிப்பில்லை. விரைவில் இதுகுறித்து என்.எஸ்.எஸ் மாணவர்கள் எழுதியுள்ள ரிப்போர்ட்டை வெளியிடுகிறேன்.


செவிலியர் பயிற்சி முடித்ததும் இந்தப் பெண்கள் சென்னைவாசிகள் ஆகிவிடுவார்கள். இது ஒருவிதத்தில் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு நன்மை பயக்கலாம். ஆனால் அவர்களுடைய கிராமங்களுக்கு நேரடியாக நன்மை ஏதுமில்லை. ஆனாலும் இங்கிருந்தபடியே அவ்வப்போது அவர்களுடைய கிராமங்களுக்குச் சென்று கீழ்க்கண்டவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த முற்படவேண்டும் என்று பேசினேன். அவ்வாறு செய்ய அரிமா சங்கம் அவர்களுக்குத் துணையிருப்பதாக சங்கத்தினர் உறுதியளித்தனர்.
  1. அனைத்து வீடுகளிலும் சுகாதாரமான கழிப்பறைகள் உருவாக்கப்படுவதற்கான அழுத்தம். கழிப்பறை இல்லாத வீடுகளில் வசிக்கமாட்டோம் என்று பெண்கள் போராடவேண்டிய கட்டாயம்.
  2. சுத்தமான குடிநீர் வீட்டருகே கிடைப்பதற்கான வசதிகள். கிராமப் பஞ்சாயத்தின் பணம் இதற்குத்தான் முன்னுரிமையாகச் செலவு செய்யப்படுதல் வேண்டும். ஏனெனில் தண்ணீர் நிர்வாகம் என்பது வீட்டில் பெண்களிடம் விடப்படுகிறது. அவர்கள் படும் கஷ்டத்தைப் பற்றிப் பெரும்பாலும் ஆண்களுக்குக் கவலை இல்லாமல் இருக்கிறது.
  3. பெண்களுக்கான சத்துணவு. அனீமியாவால் (சோகை) பாதிக்கப்படும் பெண்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் எடை குறைவாகவும் சிக்கல்களுடனும் பிறக்கிறார்கள். இந்தக் குழந்தைகள் பெண்களாக இருக்கும்போது இந்தச் சுழற்சி தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
  4. பெண்களைப் பாதிக்கும் நோய்கள், பெண்களுக்கான பிரத்யேக சுகாதாரம், வயதான பெண்களுக்கு வரும் உடல் உபாதைகள் ஆகியவை பற்றி அவரவர் கிராமங்களில் விழிப்புணர்வுப் பிரசாரம்.
இவற்றை முன்வைத்து மேற்கொண்டு பேச உள்ளோம். ஓரிரு இடங்களில் சோதனைமுறையில் ஈடுபடப்போகிறோம்.

3 comments:

  1. //செவிலியர் பயிற்சி முடித்ததும் இந்தப் பெண்கள் சென்னைவாசிகள் ஆகிவிடுவார்கள்// This is a silent killer for TN/India (except Kerala). Everyone moves to Chennai or near by cities and village maintain their status quo interms of growth and facilities.

    ReplyDelete
  2. மிக முக்கியமான படிப்பு.கேரளா இன்று முக்கால்வாசி அளவுகோல்களில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இருப்பதற்கு முக்கியமான காரணம் கேரளா பெண்கள் செவிலைர தொழிலில் பெருமளவில் உள்ளது தான்.இந்தியா,இப்போது உலகமெங்கும் எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் அங்கு கேரள செவிலியர்களை பார்க்காமல் இருக்க முடியாது
    அடிப்படை படிப்பை முடிக்காத கேரள பெண்களுக்கு கூட முதலுதவி பயிற்சிகள் கற்று தந்து, நோயாளிகளின் வீட்டில் தங்கி நோயாளிகளை பார்த்து கொண்டு வேலை செய்து ,சம்பளம் பெற கேரளாவில் பல நிறுவனங்கள் உண்டு. இப்படியும் பல ஆயிரம் பேர் கேரளத்தில் இருந்து பல மாநிலங்களுக்கு சென்று பணி புரிகிறார்கள்.
    செய்யும் தொழிலுக்கும்,அதன் முக்கியதுவதிர்க்கும் கொஞ்சம் கூட தொடோர்பில்லாமல் மிக குறைந்த சம்பளம் பெறும் தொழிலாக இருப்பது செவிலியர்களின் சாபக்கேடு.அது மாறினால் மிகவும் முக்கிய profession ஆன நர்சிங் இன்னும் பல நல மாற்றங்களை உருவாக்கும்
    தனியார் மருத்துவமனைகளில் இலவச,அல்லது குறைந்த வாடகைக்கு தாங்கும் விடுதிகள் இருக்கும்.ஆயிரம் ரூபாயில் ஒரு மாதத்தை கழித்து மீதியை அப்படியே மணி ஆர்டர் செய்யும் பலரை பார்த்திருக்கிறேன்

    ReplyDelete
  3. கழிப்பறை இல்லாத வீட்டு வரைபடங்கள் அங்கீகரிகப் படக் கூடாது.ஒப்புதல் வழங்கக் கூடாது. கழிப்பறை இருந்தால் மட்டுமே மின்சார வசதி கிடைக்கும், தண்ணீர் வசதி கிடைக்கும் என்பது போன்ற சட்டத்திருத்தங்கள் வந்தால் நல்லது.

    ReplyDelete