Friday, February 20, 2009

கல்லூரி தமிழ்ப் பாடத்திட்டம்

இரண்டு நாள்களுக்குமுன், ஒரு தன்னாட்சிக் கல்லூரியின் தமிழ்த் துறை பாடத்திட்டக் குழுவில் உட்காரச் சொல்லி என்னைக் கேட்டுக்கொண்டனர். என்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வெவ்வேறு கல்லூரிகளின் தமிழ்ப் பேராசிரியர்கள். என்னை எப்படிப் பிடித்தனர், அது அவர்களின் கெட்டகாலமா என்று தெரியவில்லை.

மொத்தம் நான்கு தாள்கள் பற்றி விவாதம். அதில் இரண்டு, 12-ம் வகுப்பு வரை தமிழே படிக்காமல், கல்லூரி சேர்ந்ததும் தமிழ் படிப்பதற்கானது. அதாவது அ - அம்மா, ஆ - ஆடு, இ - இலை விஷயம். அதில் அதிகம் கருத்து சொல்ல ஒன்றும் இருக்கவில்லை. 1-6 வகுப்புகளுக்கான தமிழ்நாடு பாடநூல் நிறுவனப் புத்தகங்களை அடியொட்டி பாடங்களைத் தயாரிக்கலாம் என்று பேராசிரியர்கள் அனைவரும் முடிவெடுத்தனர். நான் என் பங்குக்குத் தலையை ஆட்டி வைத்தேன்.

அடுத்த இரண்டு தாள்கள், 12-ம் வகுப்பு வரை தமிழை ஒரு மொழிப்பாடமாகப் படித்து, பின் கல்லூரியில் தொடர்ந்து தமிழைப் படிக்கப் போகிறவர்களுக்கானது. இந்த மாணவர்கள் தமிழ்த்துறை மாணவர்கள் அல்லர். அறிவியல், வணிகவியல் போன்ற துறைகளில் (B.Sc, B.Com, B.A...) பட்டம் படிக்கச் சேர்ந்தவர்கள்.

இதில் ஒரு தாள், இலக்கிய நயம், இலக்கியம் என்றால் என்ன, இலக்கியக் கோட்பாடுகள், பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இருந்து சில மாதிரிகள் என்று இருந்தது. மற்றொரு தாள், நாடகம்: தோற்றமும் வளர்ச்சியும், ஒப்பனைக் கலை, அண்ணாவின் இரு நாடகங்கள் (வேலைக்காரி, ஓர் இரவு), இந்த நாடகங்களால் சமூகத்தில் என்ன தாக்கம்... இப்படி இருந்தது.

பேராசிரியர்கள் தீவிரமாகப் பேசும்போது, நான் வாய் புதைத்து மௌனியாக இருந்தேன். சொல்வதற்கு என்னிடம் சரக்கு ஏதும் இருக்கவில்லை. கடைசியில், நான் சில மாற்றுக் கருத்துகளைச் சொல்லலாமா என்று அவர்களது அனுமதி பெற்றேன். கீழ்க்கண்டதை அவர்களிடம் சொன்னேன்:

இலக்கியம் என்றால் என்ன, இலக்கிய நயம் என்றெல்லாம் மாணவர்களை போரடிக்காதீர்கள். அதுவும் இவர்கள் தமிழ்த்துறை மாணவர்கள்கூடக் கிடையாது. அதற்குபதில், இன்றைய தேவையான புதுவகைத் தமிழை - முக்கியமாக உரைநடைத் தமிழை மாணவர்களுக்குக் கொண்டுவாருங்கள். உதாரணத்துக்கு பத்திரிகைகளில் பத்தி எழுதுவது எப்படி, பத்திரிகை, இதழியல் கட்டுரைகள் எழுதுவது எப்படி, தலையங்கம் எழுதுவது எப்படி, தலைப்பு வைப்பது எப்படி, அறிவியல்-வணிக-தொழில் விஷயங்களை தமிழில் எழுதுவது எப்படி (இந்த மாணவர்கள் எல்லோருமே அறிவியல், வணிகம், கணக்கு படிப்பவர்கள்), விளம்பரத் தமிழ் (விளம்பர ஏஜென்சி காபிரைட்டிங்), திறமையாக பொருளை விற்பனை செய்யத் தோதாகக் கடிதங்கள் எழுதுவது - ஆகியவற்றைப் பாடமாக வைக்கலாமே?

அதேபோல, நாடகம் நல்ல விஷயம்தான். ஆனால் இன்று திரைக்கதை எழுதுவது என்பது மேலும் சுவாரசியமான ஒரு விஷயம் ஆயிற்றே? தொலைக்காட்சி நெடுந்தொடர் முதற்கொண்டு சினிமாவரை, கதையை திரைக்கதை, வசனம் என்று மாற்றி அழகாகக் கொண்டுசெல்கிறார்களே, அதை ஏன் சொல்லித்தரக்கூடாது? ஒரு சில புகழ்பெற்ற இயக்குனர்கள், சினிமா, தொலைக்காட்சி எழுத்தாளர்களை அழைத்துவரச் சொல்லி, அவர்களிடம் நேரடியாகப் பாடம் கற்கலாமே? அசைன்மெண்ட் என்றால் இரண்டு சினிமா பார்த்து, அதன் திரைக்கதை அமைப்பைப் பற்றிக் கட்டுரை எழுதச் சொல்லலாமே? நான் கடவுள் vs Slumdog Millionaire - திரைக்கதை அமைப்பை அலசுக...

இன்னும் மு.வரதராசனார் காலத்திலேயே நாம் இருக்கவேண்டுமா? நாவல் என்றால் கரித்துண்டு. நாடகம் என்றால் அண்ணாத்துரை. நம் மாணவர்களுக்கு வேறு போக்கிடமே இல்லையா?

ஒரு கட்டத்தில் பேராசிரியர்கள் எனது கருத்திலும் ஓரளவுக்கு நியாயம் உள்ளது என்று ஏற்றுக்கொண்டனர். பாடத்திட்டத்தை எனது பரிந்துரைகளின்படி மாற்றுவது பற்றிப் பரிசீலிக்கலாம் என்று எழுதிக்கொண்டனர். மாறுமா, மாறாதா என்று இனி வரும் மாதங்களில் தெரிய வரும்.

இதனைப் படிக்கும் தமிழ்ப் பேராசிரியர்கள், என்மீது முட்டை உடைத்து ஆம்லெட் போடாதிருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.

(பி.கு: இந்தக் கூட்டத்துக்குப் பிறகு என்னை அடித்துத் துரத்திவிடுவார்கள் என்று நினைத்தேன். மேலும் ஒரு கல்லூரியில் தமிழ் வகுப்பு மாணவர்களிடம் பேச அழைத்துள்ளார்கள். அவர்கள் நிலையை நினைத்தால்...)

12 comments:

 1. வர வர ரொம்ப காமெடி பண்றிங்க பத்ரி..

  டூ..மச்..

  ReplyDelete
 2. //இதனைப் படிக்கும் தமிழ்ப் பேராசிரியர்கள், என்மீது முட்டை உடைத்து ஆம்லெட் போடாதிருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.//

  ஹி ஹி ஹி

  ReplyDelete
 3. ”நான் கடவுள் vs Slumdog Millionaire” -இவ்வாறு அசென்மெண்ட் இருந்தால் நிச்சியமாக ஈடுபாட்டுடன் பணியாற்றலாம்.

  ReplyDelete
 4. பத்ரி,
  நல்ல கருத்துக்கள். நடைமுறைப் படுத்தப்பட் வேண்டிய எண்ணங்கள் !!

  இதெல்லாம் செய்தால் இப்பொழுது இருக்கும் தமிழாசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு போய்விடும் என்ற் எண்ணத்தில் அவர்கள் இதைச் செய்யாமலும் இருக்கலாம். இந்தக் கருத்துக்களை பிரபல ஊடகங்களில் பேசிப் பேசித்தான் வளர்க்க வேண்டும்..

  நல்ல விஷயம்.

  சீமாச்சு...
  http://seemachu.blogspot.com

  ReplyDelete
 5. பத்ரி,

  அவர்களுக்குத் தெரிந்ததை மாணவர்களுக்குச் சொல்லித் தரலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மாணவர்களுக்கு வேண்டியதை மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

  Impedance mismatch-க்குத் தமிழில் என்ன? :-)

  ஶ்ரீகாந்த்

  ReplyDelete
  Replies
  1. மாறுமின் மறுப்பு

   Delete
 6. நல்ல விஷயம்! இதனால் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். கற்றது தமிழ் பட ஹீரோ போல புலம்பி திரிய தேவை இல்லை

  ReplyDelete
 7. மொழிப்பாடத்தைப் பொருத்தவரை, மாணவர்களுக்கு எது தேவை என்பதை அவர்களேதான் தீர்மானிக்க வேண்டும்.

  ஆசிரியர்கள் தங்களுக்குத் தெரிந்ததையோ, உங்களைப் போன்றவர்கள் மாணவர்களுக்கு வேண்டியது என்ன என்று நம்புவதையோ அவர்கள் மீது திணிக்கக்கூடாது. அது பாசிசம்.

  ஒவ்வோராண்டும் +2 படிக்கும் மாணவர்களிடம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அறிவியல்பூர்வமான கருத்துக்கணிப்பு முறைகளைப் பயன்படுத்திக் கல்லூரி மொழிப்பாடத்தில் தாங்கள் படிக்க விரும்புவது என்ன என்பதைக் கண்டுபிடித்து அதற்கேற்ப பாடத்திட்டத்தை வடிவமைக்க வேண்டும். செந்தமிழ், தற்காலத் தமிழ், சிற்றிதழ் தமிழ், மசாலா பதிப்பகங்களின் தமிழ், திரைப்பட/தொலைக்காட்சித் தமிழ் என ஒன்றுக்கும் மேற்பட்ட விருப்பத் தெரிவுகளை மாணவர்களுக்கு அளிக்கவேண்டும். இது ஆங்கிலம் மற்றும் பிற மொழிப் பாடத்திட்டத்துக்கும் பொருந்தும்.

  மாணவர்களின் அப்பன் காசில் அல்லது மக்களின் வரிப்பணத்தில் கூலிபெற்று ஜீவனோபாயனம் நடத்தும் ஆசிரியர்கள் மாணவர்களின் விருப்பத்துக்கேற்ப பயிற்றுவிக்கத் தங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டுமே ஒழிய இவர்கள் விருப்பத்துக்கு மாணவர்கள் பயிலவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. இதற்குத் தயாராக இல்லாத தமிழாசிரியர்கள் சட்டம் படித்துவிட்டு வக்கீலாகப் போகலாம்.

  ReplyDelete
 8. Excellent suggestions. I hope they have the wisdom to adopt at least some of them.

  ReplyDelete
 9. உங்களுக்கு கெடச்ச வாய்பை சரிய்யா பயன்படுத்திருக்கீங்க.பாக்கலாம் என்ன நடக்குதுன்னு.

  // இதனைப் படிக்கும் தமிழ்ப் பேராசிரியர்கள், என்மீது முட்டை உடைத்து ஆம்லெட் போடாதிருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.//

  :-))

  ReplyDelete
 10. தன்னடக்கமாக கூறிக்கொண்டாலும், உங்களுடைய கருத்துகள் வரவேற்க்கத் தகுந்தவை!

  நீங்கள் ஒரு outsider ஆக இருந்த பட்சத்தில்தான், இப்படி வரம்பு மீறி வித்தியாசமான ஒரு கருத்தினை வெளிப்படத்த முடிந்தது.

  ReplyDelete
 11. That was good suggestion!

  ReplyDelete