Tuesday, December 24, 2013

சாதாரணனின் அசாதாரண சாதனை

அர்விந்த் கெஜ்ரிவால் தில்லியின் முதல்வர் ஆவது குறித்து எனக்குப் பெருத்த மகிழ்ச்சி. கட்சி ஆரம்பித்து ஒராண்டிலேயே ஒரு மாநிலத்தின் தேர்தலில் நின்று, இரு முனைப் போட்டியை உடைத்து, மூன்றாவது அணியை மாற்றாக முன்வைத்து, இரண்டாவது அதிக எண்ணிக்கை கொண்ட தொகுதிகளைக் கைப்பற்றி, மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீக்ஷித்தை வீழ்த்தியது என்பது சந்தேகமே இல்லாமல் மாபெரும் சாதனை.

இதில் பாஜகவுக்குப் பெரிய வருத்தம் இருப்பது நியாயமே. அர்விந்த் கெஜ்ரிவால் இல்லை என்றால் பாஜக 45-50 தொகுதிகளை அள்ளிக்கொண்டு போயிருக்கும். பாஜக தொண்டர்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருவது சகஜமே. ஆனால் அதற்காக அவர்கள் ஆம் ஆத்மி கட்சியைக் கரித்துக்கொட்டுவது சிரிப்பை வரவழைக்கிறது. காங்கிரஸின் ஊழலை எதிர்த்தவர் இப்போது காங்கிரஸின் ஆதரவை ஏற்பது குற்றம் என்கிறார்கள். எந்தக் கட்சிக்கும் ஆதரவு தரமாட்டோம், எந்தக் கட்சியிடமிருந்தும் ஆதரவு பெறமாட்டோம் என்று கெஜ்ரிவால் சொன்ன ட்வீட்டையும் வீடியோ ஆதாரங்களையும் போட்டு, சொன்ன சொல்லிலிருந்து வழுவிய துரோகி என்கிறார்கள்.

உண்மையில் கெஜ்ரிவால் வாயைப் பொத்திக்கொண்டு இருந்திருக்கவேண்டும். ‘என் பிள்ளைகளின்மீது சத்தியம்’ என்றெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்து பேசியிருந்திருக்கக்கூடாது. ஆனால் புதிதாகக் கட்சி ஆரம்பித்திருக்கும் ஒருவரின் அதீத ஆர்வக்கோளாறு என்று இதனை மன்னித்துவிடலாம்.

கட்சி அமைப்பது, ஆட்சியைப் பிடிப்பது இரண்டுமே, அரசியல் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கே. சிறுபான்மை எண்ணிக்கையை வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடித்தாலும் பல மாற்றங்களைக் கொண்டுவரலாம். அந்த மாற்றங்கள் நீடித்து நிலைப்பவையாக இருக்கலாம். உதாரணமாக லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டுவருவதன்மூலம் (கெஜ்ரிவால் ‘அண்ணாவின் ஜன் லோக்பால்’ என்றே சொல்லிவருகிறார்) நீடித்த ஒரு மாற்றத்தை தில்லியில் நிறுவலாம். தனக்கும் பிற அமைச்சர்களுக்கும் பந்தோபஸ்து, பந்தா ஆகியவற்றை விலக்குவதன்மூலம் காங்கிரஸ், பாஜக அரசியல்வாதிகளின் வெறியாட்டத்துக்கு ஒரு முடிவு கட்டலாம்; குறைந்தபட்சம் அவர்களில் ஒரு சிலரையேனும் வெட்கப்படச் செய்யலாம். (பாஜகவின் டாக்டர் ஹர்ஷவர்தன் எளிமையானவராகத்தான் தோற்றமளிக்கிறார்.) ஊழல் எளிதில் புகுந்துவிடாமல் இருக்க சில நிர்வாக மாற்றங்களைக் கொண்டுவரலாம். மின்சாரமோ, தண்ணீரோ, மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து அவற்றைத் தர முயற்சி செய்யலாம். கடந்த 15 ஆண்டுகளில் ஷீலா தீக்ஷித் இவை அனைத்திலும் தோற்றுள்ளார் என்பது மக்களின் கோபத்திலிருந்து தெரிகிறது.

ஆனால் தில்லியின் பிரச்னைகள் இவற்றுக்கெல்லாம் மேலானவை. அங்கே இந்தியாவெங்கிலிருந்து ஏழை மக்கள் சாரி சாரியாகப் படையெடுத்துச் சென்று தங்கள் வாழ்க்கையைத் தொடர நினைக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வேலை கொடுக்கும் அளவுக்கு தொழில் நிறுவனங்கள் அங்கில்லை. தில்லியின் அண்மைய மாநிலங்கள் உத்தரப் பிரதேசமும் ஹரியானாவும் விளை நிலங்களையெல்லாம் கூறு கட்டி வசிப்பிடங்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. வேலையில்லா, திறனில்லா, படிப்பில்லா இளைஞர்கள் தெருவில் உலா வருகிறார்கள். பெண்களைக் கொலைவெறியுடன் அணுகி அழிக்கிறார்கள். இதனை வெறும் சட்டம் ஒழுங்கு மட்டும் கொண்டு அடக்கிவிட முடியாது. தில்லியின் ஏற்றத்தாழ்வு அளவுக்கு வேறு எந்த நகரிலும் இருக்காது என்று நினைக்கிறேன். எண்ணற்ற சேரிகள் இருக்கும் அதே நகரில்தான் ஏக்கர் கணக்கிலான நிலத்தை வளைத்து தில்லியில் நடுவில் பங்களாக்களும் உள்ளன. இன்றைய இந்திய சொத்துரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இந்த நிலங்களையெல்லாம் கைப்பற்றி அனைத்து மக்களும் வாழக்கூடியதற்கான இருப்பிடங்களை எளிதில் கட்டிவிட முடியாது. ஆனால் எங்கோ ஆரம்பிக்கவேண்டியிருக்கும்.

அடுத்து தில்லியின் ஸ்டேடஸ். தில்லி ஒரு யூனியன் பிரதேசமாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஓரிடமாக உள்ளது. தில்லியின் காவல்துறை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. அதனைத் தன் கையில் எடுத்துக்கொள்ளாமல் தில்லி அரசால் சட்டம் ஒழுங்கைச் சரியாகக் காக்க முடியாது. இது மாறவேண்டும் என்றால் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபடவேண்டும். தில்லி யூனியன் பிரதேசத்தை முழுமையான மாநிலமாக மாற்றினால் என்னென்ன சிக்கல்கள், என்னென்ன நன்மைகள் என்பது குறித்து நான் யோசிக்கவில்லை. அதுகுறித்து யோசிக்கத் தேவையான அடிப்படைத் தரவுகள்கூட என்னிடம் கிடையாது. ஆனால் அந்தத் தேவை குறித்து தேர்தல் அறிக்கைகளில் வரத்தொடங்கியிருப்பது முக்கியமானது என்று நினைக்கிறேன். இது ஒரு விவாதத்தை ஏற்படுத்தும்.

ஆம் ஆத்மி கட்சி எதற்கெடுத்தாலும் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவதைப் பலர் கேலி செய்கிறார்கள். இது புதுமாதிரியான அரசியல் என்பதால் இப்படித் தோன்றுகிறது. ஆனால் ஆம் ஆத்மியின் வழிமுறைகள் உண்மையிலேயே மிகவும் ஜனநாயகமானவை. தெருவில் போகிறவன் வருகிறவன் என்று பொதுமக்களை கேலி செய்வது அசிங்கமானது. அவர்கள் வாக்களித்துவிட்டுப் போய்விடவேண்டும், பிறகு முடிவுகளையெல்லாம் தாங்களே எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அரசியல்வாதிகள் கருதினால் அதற்கான மரண அடி இப்போது கொடுக்கப்பட்டுவிட்டது. ஆம் ஆத்மி தெருவெங்கும் சென்று மக்களை அரசியல்படுத்தும் முயற்சி வரவேற்கப்படவேண்டிய ஒன்று. பாஜகவும் காங்கிரஸும் இதனைக் கையில் எடுத்துக்கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆம் ஆத்மி கட்சியின் வழிமுறைகளைக் கேலி செய்தால் நாளை இவர்களே கேலிக்கு உள்ளாகவேண்டிவரும். மக்களுக்கான எந்தத் திட்டமுமே மக்களிடம் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்படுவதுதான். அதனை ஆம் ஆத்மி கட்சி மாற்றினால் அக்கட்சிக்கு என் முழு ஆதரவும் உண்டு.

ஆம் ஆத்மி எல்லாம் தில்லியில் மட்டும்தான் சரிப்படும்; பிற மாநிலங்களில் உள்ளூர் விஷயங்கள் குறித்து அவர்கள் கருத்தென்ன; ஈழப் பிரச்னை குறித்து, கூடங்குளம் குறித்து அவர்கள் கருத்தென்ன என்று அடுத்து தமிழ்நாட்டு அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். நல்ல விஷயமெல்லாம் வெளியிலிருந்து உள்ளே வந்துவிடுவதா; அதுவும்கூட பெரியார், அண்ணா(துரை)யிடமிருந்து வந்தால்தான் ஏற்றுக்கொள்வோம் என்பது அவர்கள் கருத்துபோலும். ஆம் ஆத்மி கட்சியினர் தில்லியில் தில்லியின் உள்ளூர்ப் பிரச்னைகளைப் பற்றிப் பேசித்தான் வாக்குகளை சேகரித்தனர். தமிழகத்தில் தமிழகத்தின் உள்ளூர்ப் பிரச்னைகளைப் பற்றிப் பேசித்தான் வாக்கு சேகரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

அடுத்து மோதி vs கெஜ்ரிவால். அர்விந்த் கேஜ்ரிவாலை நான் ஆதரித்தாலும், நாடாளுமன்றத் தேர்தலில் என் ஆதரவு நரேந்திர மோதிக்குத்தான். மத்தியில் கெஜ்ரிவாலால் எந்தப் பெரிய மாறுதலையும் ஒப்போதைக்குச் செய்துவிட முடியாது என்பது ஒன்று. இரண்டாவது, கெஜ்ரிவாலின் இடதுசாரிச் சாய்வு இந்தியப் பொருளாதாரத்துக்கு உகந்ததல்ல என்பது. ஆனால் மாநில அரசியலில் கெஜ்ரிவால் அல்லது அவர்போன்ற மக்கள் சார்ந்த, பெரும் குழாமை அரசியல்மயப்படுத்தும் இயக்கத்துக்கான தேவை மிக வலுவாக உள்ளது. ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்த தில்லி மக்களே, நாடாளுமன்றத் தேர்தலில் மோதிக்குத்தான் வாக்கு என்று சொல்லியிருப்பதாக exit polls சொல்கின்றன. கெஜ்ரிவால் வரவால் மோதிக்கு ஆதரவு குறைந்துவிட்டது, மோதி அலை என்று ஒன்று இல்லவே இல்லை, அல்லது அந்த பலூன் வெடித்துவிட்டது என்று நினைப்பவர்கள் கருத்து முழுமையாகத் தவறு என்று நான் நினைக்கிறேன்.

மோதிக்கான ஆதரவும் கெஜ்ரிவாலுக்கான ஆதரவும் கிட்டத்தட்ட ஒரே புள்ளியிலிருந்துதான் தோன்றுகின்றன: காங்கிரஸின் ஊழல் ஆட்சியும், பொறுப்பற்ற தன்மையும், மக்களை மதிக்காத அரசியலும். அதற்கான அடிப்படை அந்தக் கட்சியின் குடும்ப அரசியலில் உள்ளது. அதன் அலட்சியப் போக்கில் உள்ளது. தகுதியற்றவர்களாக இருந்தாலும் தங்கள் மகனும் மகளும்தான் கட்சியின் அடுத்த வாரிசுகள் என்று கட்சியினர் அனைவரையும் பேசவைப்பதில் உள்ளது.

கெஜ்ரிவால், மோதி இருவருமே அதற்கான மாற்றை முன்வைப்பவர்கள். மக்கள் சார்ந்த, கருத்தியல் சார்ந்த அரசியலை முன்வைப்பவர்கள். மோதி மக்களுக்குப் பல நல மாற்றங்களைச் செய்துகொடுத்திருக்கிறார். அவருடைய டிராக் ரெகார்ட் வலுவானது. குஜராத்துக்கு வெளியே இருப்போரும் மோதியால் தங்களுக்கும் நல்ல மாற்றத்தைக் கொடுக்கமுடியும் என்று நம்புகிறார்கள்.

கெஜ்ரிவால் ஒரு நம்பிக்கையை முன்வைக்கிறார். மக்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கமுடியும் என்றும் அவர்களிடம் ஆலோசனைகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கப்படும் என்றும்  சொல்வதன்மூலம் மக்கள் தங்கள்மீதான தன்னம்பிக்கையை, சுயமரியாதையை அதிகப்படுத்துக்கொள்ள அவர் ஒரு வாய்ப்பை அளிக்கிறார்.

அதனால்தான் இருவரும் மக்களிடையே நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். இருவருக்கும் அதனாலாயே மக்கள் மனங்களைப் பிடிக்கப் போட்டி இருக்கும். ஆனால் இருவரும் இப்போதைக்கு இயங்கும் தளங்கள் வேறு வேறு. இருவரும் நேரிடையாக மோதிக்கொள்ளப்போவதில்லை. அந்தமாதிரியான ஒரு மோதல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டுதான் பாஜக ஆதரவாளர்கள் தேவையின்றி கெஜ்ரிவாலைச் சிறுமைப்படுத்தும் ஒரு சிறுபிள்ளைத்தனமான விளையாட்டை ட்விட்டரில் செய்துவருகின்றனர்.

இப்போதைக்கு ஜனநாயகத்தை மதிக்கும் அனைவருமே கெஜ்ரிவாலின் முன்னேற்றத்தை, ஆம் ஆத்மியின் வளர்ச்சியை, அது மக்களிடம் தொடர்ந்து உரையாடுவதை ஆரவாரத்துடன் வரவேற்கவேண்டும். கெஜ்ரிவால் தில்லியை ஆட்சி செய்வதில், நல்ல நிர்வாகத்தைத் தருவதில் தடுமாறலாம்; சில தவறுகளைச் செய்யலாம். ஆனால் அவர் தொடர்ந்து மக்களிடம் பேசிவந்தாரென்றால் அவரது தவறுகள் மன்னிக்கப்பட்டு, அவர் தன்னை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுவார். அப்போது வேறு வழியில்லாமல் பிற கட்சிகளின் அரசியல்வாதிகளும் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டிவரும். அதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு. அதுதான் சாமானியனின் வெற்றி.

23 comments:

  1. மிக நல்ல அலசல் ..

    ReplyDelete
  2. மிக மகிழ்ச்சியான வரவேற்கத்தக்க நிகழ்வு - இந்திய ஜனநாயகத்தில்

    ReplyDelete
  3. It is too early to predict anything now? How far he can and really wish to implement his policies ; He should be given sometimes to carry out his his wishes and then only any body can asses his Govt. It all depend on his Ministers and nearby people; WE CAN WAIT AND SEE
    ;

    ReplyDelete
  4. ASSESSING HIS EFFORTS NOW IS TOO EARLY; WE HAVE TO GIVE AT LEAST AN YEARS TIME TO JUDGE HIS GOVT; WE HAVE TO SEE WHETHER HE IS ALLOWED BY HIS MINISTERS AND PART TO IMPLEMENT HIS THOUGHTS WAIT AND SEE

    ReplyDelete
  5. ஆம், இதைத்தான் தமிழகத்திலும் உருவாக்க வேண்டும்.

    ReplyDelete
  6. இன்று பா ஜ க டெல்லியில் எவ்வளவு இடங்களோ அதே இடங்களை அன்று காங்கிரெஸ் பிடித்து அதிக இடங்களை பிடித்த கட்சியாக திகழ்ந்தது.பா ஜ க இன்று AAP எவ்வளவு இடங்களை பிடித்துள்ளதோ அதே இடங்கள்

    முன்னாள் தொலைதொடர்பு மந்திரி சுக்ராமை நீக்க சொல்லி பாராளுமன்றத்தை முடக்கியது பா ஜ க.காங்கிரெஸ் பதவியில் இருந்தும்,கட்சியில் இருந்தும் நீக்கியது.அடுத்து ஹிமாச்சலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் சுக்ஹ்ராமின் கட்சி நான்கு இடங்களை பிடித்தது.அவரின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்தது எந்த கட்சி தெரியுமா

    சுக்ராமை எதிர்த்து போராடி விட்டு ,அவரை காங்கிரெஸ் கட்சி பதவி நீக்கம் செய்ய வைத்து,அதனால் அதிக இடங்களை பிடித்தாலும் ஆட்சி செய்து கொண்டிருந்த காங்கிரெஸ் ஆட்சியை இழந்தது.சுக்ராமோடு சேர்ந்து (வெளியில் இருந்து ஆதரவு கிடையாது)கூட்டணி மந்திரிசபை அமைத்த ரொம்ப நல்லவர்கள் பா ஜ க வினர்


    http://www.frontline.in/static/html/fl1507/15070280.htm

    The elections to the Assembly, held simultaneously with the Lok Sabha elections, threw up a hung verdict. The Congress(I), the single largest party, has 31 MLAs and the support of an independent. The BJP has 28 MLAs of its own (one of the winning candidates died) and the support of four members of the Himachal Vikas Congress (HVC) of former Union Minister Sukh Ram. The two groups are thus tied with 32 MLAs each in the House with an effective strength of 64. Elections for three seats and the byelection for one seat will be held in June. The days that followed the announcement of the election results were marked by sensational political developments. The Governor invited Virbhadra Singh to form a government and he was sworn in Chief Minister. However, just a week into office, he resigned without facing the trial of strength that was slated for March 16.

    The Congress(I) would have secured only 31 votes in a trial of strength as the pro tem speaker, who belonged to the party, could not have cast his vote unless there was a tie. It had tried to wean away two disgruntled HVC MLAs, Prakash Chand and Mansa Ram, who had parted company with the HVC and formed the Himachal Kranti Party. However, this party formally merged with the BJP, raising the latter's strength to 30.

    The BJP, which had suffered a blow with the death before the announcement of results of its candidate in Paragpur, suddenly found itself in a comfortable position. With the support of Sukh Ram, who got elected from Mandi, and another HVC MLA, its effective strength rose to 32.

    ReplyDelete
  7. Nice article... Though Kejriwal's swear is kind of overboard technically he is not very wrong either.. What he is forming is a minority Govt and it is neither tie up nor alliance with congress . Here is the proper explanation https://www.youtube.com/watch?v=86QK9Q6Kr18
    Ram

    ReplyDelete
  8. மோடி சோனியா, ராகுல் பற்றித் தன்நபர் தாக்குதல்களை வழக்கமாகச் செய்துவருபவர். அவருடையது மாற்றுக்கட்சியே தவிர மாற்று அரசியல் அல்ல. கேஜரிவால் முன்வைப்பது மாற்று அரசியல். அவர் ராபர்ட் வத்ராவின் ஊழல்களை வெளிப்படுத்தும்போதுகூட தனிநபர் தாக்குதல்களில் தரக்குறைவாக இறங்கவில்லை.

    அடுத்து மோடிக்கு சர்வாதிகார அரசியல் மட்டுமே ஒத்துவருகிறது. முற்றிலும் மாறாக, கேஜரிவால் தனிமனிதனின் குரலுக்கும், கூடி விவாதித்து முடிவெடுப்பதற்கும் முக்கியத்துவம் தருகிறார்.

    மோடி மதச்சார்பற்ற இந்துக்களையும், பிற மதத்தினரையும் அந்நியப்படுத்தவே செய்கிறார், அல்லது தான் அப்படி அல்ல என்று காட்ட பிரம்மப் பிரயத்தனம் செய்கிறார். கேஜரிவால் முற்றிலும் சாதி, மத சார்பு அற்றவர் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

    பிஜேபி-க்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று அவர்களால் சொல்ல முடியாது. அரசியல் கட்சிகளைத் தகவல் உரிமைச் சட்ட வரம்புக்குள் கொண்டுவருவதை எதிர்க்கிறார்கள். ஆம் ஆத்மியோ, வெளிப்படையாக நிதி திரட்டியது; 20 கோடி சேர்ந்ததும் போதும் இனி அனுப்பாதீர்கள் என்று சொல்லிவிட்டது. கட்சிகளை தகவல் உரிமை சட்டத்துக்கு உட்படுத்த வேண்டும் என்கிறது.

    எல்லாவற்றுக்கும் மேல் மோடியின் அலமாரியில் சில பல எலும்புக்கூடுகள் உள்ளன! கேஜ்ரிவால் கணக்கு சுத்தமாக இருக்கிறது.

    (இதில் சிஃபி டாட் காம் இணைய தளத்தில் விஜய் சிம்ஹா எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில கருத்துகள் எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளன காண்க- http://www.sify.com/news/why-arvind-kejriwal-makes-more-sense-than-narendra-modi-news-columns-nmymInifedd.html?source=sifyhome&slot=c1s2.)

    சரவணன்


    ReplyDelete
  9. எனது முகநூல் சுவற்றில் நான் எழுதியிருக்கிறேன்.
    https://www.facebook.com/natarajan.melattur?hc_location=timeline

    என் அரசியல் பார்வையில்....

    பி.ஜே.பி.க்கு ஒரு அறிவுரை

    காங்கிரஸ் என்னும் ஊழல் மிகுந்த கொள்ளை கூட்டத்தை வேரறுக்க நாங்கள் உங்களை எதிர்பார்த்தோம் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதே நேரத்தில், காங்கிரஸ் கொள்ளையின் டில்லி அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து ஒரு நல்ல முன் மாதிரியான அரசியல் களத்தை நமக்கு காட்டிக் கொண்டிருக்கும் ஆம் ஆத்மி கட்சியை கிண்டலடிப்பதும், அந்த முயற்சியை முளையில் கிள்ள நினைப்பதும் உங்களுக்கு அழகு அல்ல.

    நீங்கள்தான் எல்லா பிரச்சனைக்கும் கோட்டுவால் என்று நினைக்காதீர்கள். உங்கள் கட்சியிலும் காங்கிரஸ் போன்ற கட்சியாளர்கள் இருப்பதை நாங்கள் சகித்துக் கொன்டுதான் இருக்கிறோம். அது எல்லை மீறும் போது காங்கிரசுக்கு என்ன நடந்ததோ அதுவே உங்களுக்கும் நடக்கும். கர்நாடகாவில் அதுதான் நடந்தது.

    ஆம் ஆத்மி எடுக்கும் நடவடிக்கைகளில் உங்கள் விமர்சனங்களை வையுங்கள். இன்றைக்கு அவர்கள் சந்திக்கும் சவால்கள் யாராலும் நினைத்து பார்க்க முடியாத அளவில் இருக்கின்றன. உடனடியாக டில்லியில் இன்னொரு தேர்தல் தேவையில்லை என்று பலரும் கருதுவதால்தான் அவர்கள் இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கிறது.

    கூர்ந்து கவனித்து அவர்கள் செய்யும், செய்ய நினைக்கும் அரசியல் தூய்மை பணிகளை உங்கள் கட்சியில் கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.

    1. கிரிமினல் பின்னனி உள்ள கட்சி உறுப்பினர்களை தயவுதாட்சன்யம் இல்லாமல் வெளியேற்றுங்கள்.

    2. அரசியலில் அதிகாரத்தை பற்றி பிழைப்பு நடத்தலாம் என்று வந்த உறுப்பினர்களை ஓரம் கட்டுங்கள்.

    3. நகரின் ஒவ்வொரு மூலை இண்டு இடுக்கிலும் களப்பணியாளர்களை நியமித்து, மக்கள் பணி செய்ய துவங்குங்கள்.

    இவைகள்தான் உங்களை இன்னமும் முன்னே எடுத்து செல்லும். அதை விட்டு விட்டு சவலை குழந்தை மாதிரி ஏங்கி ஏங்கி அழுது ஆர்ப்பார்ட்டம் செய்யாதீர்கள்.

    ReplyDelete
  10. Good analysis. But the way Kejriwal challenged the Cong and made some demands and then suddenly revert to a new stand reveals his immaturity in handling the issues. At the same time it is nothing wrong in giving a chance to see his strategy in fulfilling all his electoral promises.

    ReplyDelete
  11. Good one. Except Modi.

    ReplyDelete
  12. தில்லி தேர்தல் ஒரு கார்ப்பரேஷன் தேர்தல் மாதிரியே.கெஜ்ரிவால் மேய்ராகப் போகிறார்.ஏனெனில் தில்லி யூனியன் அரசுக்கு உள்ள அதிகாரம் அவ்வளவு தான்.
    இரு தேசியக் கட்சிகளை தோற்கடித்தது அவரது பெரிய சாதனை. தில்லி யூனியன் பிராந்திய அரசுக்குப் பெரிய அதிகாரம் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் நிறையவே செய்ய முடியும்.ஊழலை ஒழித்தாலே போதும் மக்கள் அந்த அரசைத் தலையில் வைத்துக் கூத்தாடுவர்.
    ஆட்சி அமைக்கத்தான் ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் நின்றது. எனினும் ஆட்சி அமைக்கலாமா என்று கெஜ்ரிவால் மக்களிடம் மறுபடி கருத்து கேட்டார். இதில் முரண்பாடோ தவறோ இல்லை.
    ஆட்சிக்கு வருபவர்கள் புதியவர்கள். போதிய அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் ( ஒரு வகையில் நல்லது தான்).அவர்கள் சிறு தவறுகளையும் செய்யலாம்.அதைப் பெரிது படுத்த இரு தேசியக் கட்சிகளும் காத்திருக்கின்றன.
    ஜன நாயகத்தில் புதிய பரிசோதனைகள் என்றும் வரவேற்கத்தக்கவை.ஆம் ஆத்மி கட்சி பக்கம் இளைஞர் கூட்டம் நிற்கிறது. இது ஒரு நல்ல விஷயம்

    ReplyDelete
  13. "கெஜ்ரிவாலின் இடதுசாரிச் சாய்வு " - Sir, can you lease elaborate, as AK - hsa been pro-honest-initiatives-of-all-forms all along ?

    ReplyDelete
  14. You have clear vision & better understanding. Why don't you put your 1st step like Arvind Kejriwal in TamilNadu.

    ReplyDelete
  15. one of very bad analysis, which do not have vindcative evience. In general, what Mr. badri wrote about aravind kejriwall and and his party acceptable. When you argue against governance of delhi, demography and miggration issue you must have reliable sources to putforth your argument to state what lapses in delhi. I agree, poor migrate for livelihood. But cant simply state with from superficial info. Need strong justification. It is one of very poorest analytical arcticle. Please badri, befor u write read more, collect right info, and mainly think before u utter words on paper.

    ReplyDelete
    Replies
    1. It is good you asked Badri to read more... but you missed to point out what are non-correct info' he provided so that we (the common) can able to learn something from you.

      Thanks in advance,
      Ravi.

      Delete
  16. எந்த நல்ல முயற்சியும் முதலில் எள்ளி நகையாடப்படும். நாளடைவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது தெரிந்த விஷயமே! ஆனால் பிறர் முதுகில் குத்தும் இயல்புடைய காங்கிரஸ், ஆம் ஆத்மியை எப்போது வரை ஆள அனுமதிக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

    ReplyDelete
  17. 130 years ago Britishers through AO Hume founded Congress as a safety valve. History repeats, AAP is a creation of Congress to split anti-Congress votes.

    ReplyDelete
  18. Why is Sri. Arvind Kejriwal a "Saaadhaaarannan" (comman man)(sic) ? He is an IIT Kharagpur product of yore?

    ReplyDelete
  19. een inthiyaavukku idathu saari porulaathaara kolkai otthuvaraathu entru bathri konjam villkkinaal thevalai

    ReplyDelete
  20. உங்களுக்கும் பாஜகவினருக்கும் ஒரு நல்ல ஒற்றுமை. நீங்களும் அவர்களைப் போல் மோதி குஜராத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்கியுள்ளார் எனக் கூறினாலும் அவர் கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் மற்ற மாநிலங்களை விட எந்தளவுக்கு குஜராத்தை முன்னேற்றிக் காட்டியுள்ளார் என்பதை மட்டும் சொல்வதே இல்லை,

    ReplyDelete
  21. கல்வி ,மருத்துவம் கூட விட்டு விடலாம்.இந்தியாவில் அன்-பெண் எண்ணிக்கையில் மிக மோசமாக இருக்கும் மாநிலங்கள் பா ஜ க வலுவாக உள்ள மாநிலங்கள் தான்.எந்தெந்த மாநிலங்களில் பா ஜ க பூஜ்யமோ அல்லது அதற்க்கு அருகிலோ அங்கு தான் ஆண்-பெண் சதவீதம் அதிகம்.உண்மையிலேயே பார்ட்டி வித் எ டிபிரேன்ஸ் தான்.என் ஒன்று gendersexratio என்பதில் பெரும் மாற்றங்களை உண்டாக்கும் கட்சி
    குஜராத்தில் 2001 சென்சசில் 0-6 வயது ஆண் பெண் சதவீதம் 883-1000 2011 சென்சசில் 886-1000.ஆஹா எவ்வளவு பெரிய சாதனை.
    பா ஜ க ஒரு எம் எல் ஏ சீட்டு வாங்க ததிங்கினதோம் போடும் மாநிலங்கள் எல்லாம் 940 இற்கு மேல்.

    http://puthu.thinnai.com/?p=23313

    எந்த விஷயத்திலும் காரணங்களை அலசி ஆராயும் பரிவாரம்,அதன் தாக்கம் அதிகம் உள்ள பரிசோதனை கூட மாநிலங்களில் சில லட்சம் பெண் குழந்தைகள் ஏன் குறைகின்றன என்பதை பற்றி ஏதாவது ஆராய்ந்திருக்கிறதா என்று எவ்வளவு தேடி பார்த்தாலும் ஒன்றும் கிடைக்கவில்லை.
    சில நூறு பெண்கள் வேறு மதத்தை சார்ந்தவர்களை திருமணம் செய்து கொள்வதால் பெரிய இழப்பு என்று கதறும் அறிவுஜீவிகள் ,கருவிலேயே கொல்லப்படும் லட்சக்கணக்கான பெண் குழந்தைகளை பற்றி கவலைபடாததர்க்கு காரணம் என்ன

    ReplyDelete