Thursday, October 23, 2014

கத்தி கபடா

நான் கத்தி படத்தை இன்னமும் பார்க்கவில்லை. இன்று திமுக அன்பர்கள் ஒரு சின்ன பிட் ஃபேஸ்புக்கில் போட்டிருந்தார்கள். அதில் 2ஜி பற்றி வருகிறது. மேலும் தொலைக்காட்சியில் டான்ஸுக்கு மார்க் போடுவீர்களே தவிர, ஒரு விவசாயியின் தற்கொலையைப் பற்றிப் பேச மாட்டீர்கள் என்று வருகிறது. அது கலைஞர் டிவியின் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியைக் குறிக்கிறது என்று அன்பர்கள் கவலைப்படுகிறார்கள். அவர்கள் கவலை அவர்களுக்கு. என் கவலை எனக்கு.

அந்த ஆறு நிமிடப் பேச்சு முழுவதுமே அபத்தம். எதை சினிமாட்டிக்காகச் சொன்னால் மக்கள் கை தட்டுவார்கள், வசூல் அள்ளும் என்பதுதான் தமிழ் சினிமாவின் இலக்கணம். யாருக்கும் மனத்தில் எதுவும் பதியப்போவதில்லை. என் பங்குக்கு, அதில் உள்ள சில உளறல்களை மட்டும் குறிப்பிடுவதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

(1) ஆறு நதிகளை மூடிட்டாங்க, இத்தனை குளத்தை மூடிட்டாங்க, அத்தனை ஏரியை மூடிட்டாங்க....

யாருங்க சார்? கார்ப்பரேட்டா? இந்த கார்ப்பரேட் என்ற பாவப்பட்ட வில்லன் இந்தக் கோமாளிகளிடம் மாட்டிக்கொண்டு படவேண்டிய துன்பம் இருக்கிறதே, தாங்க முடியவில்லை. நீர்வளம் காக்கப்படாமல் போனதில் பெரும் பங்கு அரசுகளுக்கும் கிராம மக்களுக்கும் விவசாயிகளுக்கும்தான். கார்ப்பரேட் பாவிகளை மன்னித்துவிடுவோம். சில இடங்களில் ஆற்று நீரை மாசுபடுத்தியிருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் அதை விடுத்துப் பார்த்தால் மக்கள் தங்கள் பாரம்பரிய நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தவறியுள்ளனர். மழை நீர் சேமிப்பு என்பதை கிராமங்கள் முழுவதுமாக மறந்தன. இன்று திண்டாடுகிறார்கள். ஆற்று நீரைப் பொருத்தமட்டில், மேல்நிலையில் அதிக நிலம் விவசாயத்துக்கு வருவதால் கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு நீர் கிடைப்பதில்லை. நகரங்கள் பெரிதாகும்போது நகர மக்கள் குடிக்கத் தண்ணீர் வேண்டும். ஒரு சில வகைத் தொழிற்சாலைகளுக்கு நிறைய தண்ணீர் தேவை. எலெக்ட்ரானிக் சிப், சிமெண்ட், உரம் போன்ற அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் நீர் தேவை. மொபைல் ஃபோன் வேண்டாம், வயலுக்கு உரம் வேண்டாம், வீடு கட்ட சிமெண்ட் வேண்டாம் என்று விஜய் உரக்கச் சொல்லட்டும். தண்ணீரை வயல்கள் வேண்டும் அளவுக்குத் தந்துவிடலாம்.

நீர்ப் பங்கீடு என்பது முக்கியமான பிரச்னை. நீண்டகால நோக்கில் நீரைச் சேமித்துவைக்கும் திட்டங்களில் முதலீடு செய்வது முக்கியமானது. ஆனால் அபத்தக் களஞ்சியமாய் வீரவசனம் பேசிவிட்டுப் போவதில் பிரயோசனமே இல்லை.

(2) மீத்தேன் பிரச்னை

இது உண்மையான பிரச்னை. நாகை/தஞ்சை மாவட்டத்தில் நரிமணம் பெட்ரோலியம் தோண்டுவதால் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனைச் செய்தது ஏதோ ‘தனியார்’ கார்ப்பரேட் அல்ல. நம் அரசின் ஓ.என்.ஜி.சி. அதாவது நமக்கு நாமே குழிதோண்டிக்கொள்ளும் திட்டம் இது. ஆயில் வேண்டுமென்றால் வயல்கள் பாதிப்படையும். வேறு வழியே இல்லை. பிரச்னை, அரசும் அரசியல்வாதிகளும் மக்களிடம் கலந்து பேசாமல் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதன் விளைவு. இதில் அரசியல்வாதிகளை நோக்கிச் சுட்டாமல், யாரோ ஒரு தனியார் கார்ப்பரேட்மீது கை காண்பித்துவிட்டு தப்பிப்பது சாமர்த்தியம் என்பதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை.

மீத்தேனைக் கடத்தப் பதிக்கும் குழாய்கள் வயல்கள் ஊடாகச் செல்லலாமா கூடாதா? சமீபத்தில் ஆந்திராவில் நடந்த விபத்தைப் பார்க்கும்போது, இந்தக் குழாய்களை வயல்கள் வழியாகப் பதிக்காமல் சாலைகள் அல்லது தரிசுகள் வழியாகப் பதிக்கலாம். எண்ணெய்க் குழாய்களும் எரிவாயுக் குழாய்களும் அமைப்பது முக்கியம். நம் விவசாயிகளுக்கும் இவை பயன் தரும். இதற்கும் போய் கார்ப்பரேட்டுகள்மீது எதற்குத் தாக்குதல்? மீத்தேன் வாயுக் குழாய் பதிக்கும் வேலையை அரசு நிறுவனமான கெயில்தான் செய்கிறது.

மாயவரத்தான் ஃபேஸ்புக் பதிவை அடுத்து, புதிதாக எழுதிச் சேர்த்தது:

“மீத்தேன் விவகாரம்” என்று நான் எழுதியதில், கொச்சியிலிருந்து பெங்களூருக்கு தமிழகம் வழியாக அரசு நிறுவனமான கெயில் நிறுவனம் பதிக்கும் குழாய்களைப் பற்றிய பிரச்னை என்று நான் எடுத்துக்கொண்டேன். மாறாக படம், தஞ்சாவூர் மாவட்டத்தில் கோல் பெட் மீத்தேன் எடுக்கும் திட்டம் குறித்துப் பேசுகிறது. அதில் ஒரு தனியார் கம்பெனி ஈடுபட்டிருக்கிறது. தரையிலிருந்து ஹைட்ராலிக் பிராக்கிங் மூலம் மீத்தேன், ஷேல் எரிவாயு ஆகியவற்றை எடுக்கும்போது கட்டாயமாக அருகில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படும். நரிமணத்தில் எண்ணெய் எடுக்கும்போது இதுதான் நிகழ்ந்தது. இங்கு அரசோ, தனியாரோ, இதனைச் செயல்படுத்துவதை அனுமதிக்காமல் மக்கள் போராடினால், அதில் மக்கள் பக்கம் முழு நியாயம் உள்ளது.

(3) கோக கோலா, தாமிரவருணி

நியாயமான பொங்குதல். அதே கோக கோலா கம்பெனிக்காக விஜய் விளம்பரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்று நான் சொல்ல மாட்டேன், வினவு சொல்லும். தண்ணீரைப் பங்கிடுவதில், கோக கோலா போன்ற கம்பெனிகளுக்கு முதல் உரிமையாக இல்லாமல் கடைசி உரிமையாகத் தருவதில் எனக்குப் பிரச்னை இல்லை. எந்த அளவுக்குத் தண்ணீர் எடுக்கிறார்களோ அதைவிட அதிகமாகச் சேமிக்கவேண்டும் என்ற கடுமையான கட்டளைகளை அவர்களுக்கு இடலாம்.

(4) தொழிற்சாலையே வேண்டாம்னு சொல்லலை... கேரட்டிலிருந்து செய்யும் ஃபேர்னெஸ் கிரீம் வேண்டாம்னு சொல்றோம், etc. etc.

யார் எந்தத் தொழிற்சாலையைக் கட்டலாம், கூடாது என்று சொல்லும் உரிமை கதாநாயகர்களுக்கு வேண்டுமானால் சினிமாவில் இருக்கலாம். அரசியலமைப்புச் சட்டம் நமக்குக் கொடுத்துள்ள உரிமைகளுள் ஒன்று, சட்டத்துக்கு உட்பட்டு எந்தத் தொழிலையும் செய்து பணமீட்டலாம் என்பது. எனவே எதற்குத் தொழிற்சாலை கட்டவேண்டும், எதற்குக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் எந்தப் பொருளைப் பயன்படுத்துவது, எதை பகிஷ்கரிப்பது என்று யார் வேண்டுமானாலும் முடிவு செய்யலாம்.

(5) 5,000 கோடி கடன் வாங்கிய ஒரு தொழிலதிபர், இல்லைன்னு கைவிரிச்சான். தற்கொலை பண்ணிக்கலை. கடன் கொடுத்த வங்கி அதிகாரிகளும் தற்கொலை செய்துக்கலை. ஆனால் 5,000 வாங்கின விவசாயி, பூச்சி மருந்து குடிச்சுச் சாகறான்.

சிறு விவசாயி, சிறு தொழில்முனைவோன், நடுத்தர வர்க்க மாதச் சம்பளக்காரன் என்று எல்லோருக்குமே கடன்களைக் கட்டுவதில் உள்ள சிரமம் பெரும் பணக்காரர்களிடம் இல்லை. முதலில் விஜய் மல்லையா நேரடியாகக் கடன் வாங்கவில்லை. அவருடைய நிறுவனம் வாங்குகிறது. இந்த நிறுவனங்களுக்கு limited liability companies என்று பெயர். இந்த நிறுவனத்தின் கடன்களுக்காக இந்த நிறுவன உரிமையாளர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய முடியாது. (அவர்கள் சொந்த கேரண்டி கொடுத்திருந்தால் மட்டுமே இந்தப் பிரச்னை எழும்.) அதே உரிமையாளர்கள் வேறு சில கம்பெனிகளை நடத்தி அவற்றில் லாபம் சம்பாதித்து சந்தோஷமாக இருக்கலாம். கம்பெனி சட்டம் இப்படித்தான் சொல்கிறது.

ஆனால் சொந்தப் பெயரில் கடன் வாங்கும்போது அதைக் கட்டவேண்டிய தேவை அந்தத் தனி நபரிடம் இருக்கிறது. அதனால்தான் வான் பொய்க்கும்போது அல்லது விவசாயம் திண்டாடும்போது கடன் ரத்து செய்யப்படுகிறது. மேலும் பல சிறு விவசாயிகளின் பிரச்னையே subsistence farming. அவர்களின் மிகச் சிறிய விவசாய நிலத்தில் கிடைக்கும் வருமானம் அவர்கள் உயிர் வாழப் போதுமானதல்ல. அவர்கள் விவசாயத்திலிருந்து வெளியேறுவதுதான் நல்லது. இதனை உணர்வுரீதியாக மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பது சரியல்ல.

ஆண்டுக்காண்டு விவசாயத்திலிருந்து மக்கள் வெளியேறுவதுதான் பொருளாதாரத்தின் அவசியமுமாகும். அவர்கள் திறன்களைப் பெற்று உற்பத்தி அல்லது சேவைத் துறையில் வேலை பெறவேண்டும். நாட்டின் 20% அல்லது அதற்குக்கீழ்தான் விவசாயத்தில் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் விவசாயிகளுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும், பிறருக்கும் நல்ல வேலை இருக்கும். விவசாயத்திலிருந்து வெளியேறிய மக்கள் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு ஒரே வருத்தமாக செண்டிமெண்ட் போடவேண்டிய அவசியம் என்ன? அவர்கள் அனைவரும் சரியான செயலைச் செய்திருக்கிறார்கள் என்று பாராட்டவேண்டும்.

விவசாயத்திலிருந்து வெளியேறுபவர்கள் சரியான திறன் இல்லாவிட்டால் நிச்சயம் கஷ்டப்படுவார்கள். எனவேதான் விவசாயக் கூலிகளாக இருப்போர் தம் பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து வேறு வேலைகளை நோக்கி அனுப்பவேண்டும். இதில் அமைப்புரீதியாகப் பல சிக்கல்கள் உள்ளன. லைக்கா, முருகதாஸ், விஜய் ஆகியோர் இந்தச் சினிமாவிலிருந்து பெறும் லாபத்தின் ஒரு பகுதியை விவசாயக் கூலிகளின் பிள்ளைகள் நன்கு படித்துத் திறன் பெறும் வகையில் செலவிட்டார்கள் என்றால் நாம் உண்மையிலேயே மகிழ்வோம்.

16 comments:

  1. I HAVE MIXED FEELINGS.

    ReplyDelete
  2. My first line,
    I am not a Vijay fan,
    Here my comments,
    Your view Methene extract us totally wrong, its not passing the methene pipes, its all about digging or drilling the earth and getting the methene, and for that chemicas need to injected into the methene bore wells, is that are you supporting Methene extract project, and reg the agriculture, you have mentioned as farmers have to come out of agriculture every year and they have to use latest methodologies on Agriculture, are you know that , the world is solwly going back to organic Agriculture.

    I can tell that your views on Methene Project and rag agriculture is out of the reality.

    ReplyDelete
  3. மீத்தேன் பிரச்னை குறித்து நான் எழுதியதில் தவறு உள்ளது என்று மாயவரத்தான் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளார். சுட்டி இதோ. https://www.facebook.com/mayavarathaan/posts/10204287993633656?comment_id=10204287998273772&notif_t=like

    மீத்தேன் விஷயம் குறித்து மேலதிகமாக நான் தெரிந்துகொள்ளவேண்டும். மற்றபடி என் அடிப்படைப் பதிவின் தொனியில் மாற்றம் இல்லை. மீத்தேன் பகுதியை மட்டும், மேலும் தகவல்கள் பெற்று மாற்றி எழுதுகிறேன்.

    ReplyDelete
  4. எனக்குக்கூட ”எங்கவீட்டு பிள்ளை” படம் பார்த்துவிட்டு அம்பேத்கர், நேரு, ஜெஃபர்சன், லெனின், எப்படி சட்டம் அமைக்க வேண்டும் என்று சொல்ல விருப்பம் :-P ஆனால் இதை செய்ய கட்சிகளும் நாளிதழ்களும் இருப்பதால் சும்மா இருக்கிறேன்.

    படத்தை விமர்சனம் செய்வது போல் பொதுமக்களின் சில பொருளாதார மூட நம்பிக்கைகளை களையும் வகையில் கருத்துக்களை முன்வைப்பது நல்ல முயற்சி. ஆனால் சினிமா என்பது பணக்காரர்களால் நடுத்தரமக்களுக்கும் ஏழைகளுக்கும் பொழுது போக்க செய்யப்படும் ஊடகம் - ஊருக்கு பிடித்த பொய்களை சொல்வார்கள். மக்கள் காசுகொடுத்து ரசிப்பார்கள்.

    ReplyDelete
  5. அந்தக் காலத்தில் பணக்காரர்கள் எல்லாம் கெட்டவர்கள் ; ஏழைகள் எல்லாம் நல்லவர்கள் என்று stereotype பண்ணின திரை உலகம் இப்போ தொழிலும் விவசாயமும் எதோ எதிர் அணிகள் போல சித்தரிக்கிறார்கள். என்றைக்கு விவசாயமும் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெறுகிறதோ அன்று தான் நம் சமுகம் வளர்ச்சிக்கு உகந்த நிலைப்பாட்டை அடையும். அதற்கு படைப்பாளிகளே ஒரு தடையாக இருப்பது தான் நம் சீர்கேடு.

    ReplyDelete
  6. செம காமெடி சார்! மொதல்ல படத்த பாருங்க! அப்புறமா என்ன வேணா பேசுங்க! உங்க ப்ளாக்க படிக்காமலே நீங்க எழுதறதெல்லாம் அபத்தம்னு யாராச்சும் சொன்னா accept பன்னிடுவேளா? ஒரு படத்தை விமர்சனம் செய்ய குறைந்தபட்சம் அதை முழுசா பார்த்திருக்கணும்! ஏன் முழுசான்னு சொல்றேன்னா சாரு சாரெல்லாம் பத்து நிமிஷத்துக்கு மேல பாக்க முடில! பாத்ரூம் வந்துடுச்சி! அதால வந்துட்டேன்! படம் மொக்கைனு சொல்ற ஆளு! நீங்களுமா! ஒரு ethics வேணாமா? US லாம் போயி படிச்சிருக்கீங்க! படம் பாத்துட்டு பதிவெழுதலாமே! என்ன அவசரம்?

    ReplyDelete
  7. First watch the Movie.Then Write your Review.

    ReplyDelete
  8. எந்த தொழிலை எவன் பண்ணனும்னு சொல்ற உரிமை நடிகனுக்கு வேனும்னா இருக்கலாம் ஆனால் அரசுக்கு கிடையாதுன்னு சொல்றீங்க. சரி. ஆனால் விவசாயி அவன் தொழில விட்டு வெளி வந்து வேற தொழில் பண்றது தான் அவனுக்கு நல்லதுன்னு சொல்ற உரிமைய உங்களுக்கு யாரு சார் கொடுத்தா ? புரியலையே. அவனவன் அவனுக்கு தெரிந்த தொழிலை (சட்டத்துக்கு உட்பட்டு) செய்வதை யாராலும் எதிர்க்கவும் முடியாது, மாத்திக்கச் சொல்வதும் கூடாது. விவசாயி அவனுக்கு தெரிந்த விவசாயத்தை செய்வதற்க்கு அரசு ஒத்துழைக்கனும், அபத்தமான எதிர்வினை சார்.

    ReplyDelete
  9. A typical outburst from a corporate supporter...I dont support the movie becuase its a half baked third rated commercial movie..more than the movie its the view of the article writer that needs to be looked in......INDIA is a corporate backed hindutuva nation.if people stand up against the government they will be stamped as antinational ...

    ReplyDelete
    Replies
    1. //'.INDIA is a corporate backed hindutuva nation.//

      ஐயோ உளறல் சகிக்கலையே !

      //if people stand up against the government they will be stamped as antinational ...//

      எப்படி ? ஹிந்தி/ சமஸ்க்ரிதம் படிங்க அப்படின்னா தமிழ் துரோகி ! அப்படியா ?

      Delete
  10. ஐயா,
    நான் தங்கள் 20% நிலைபாட்டில் இருந்து மாறுபடுகிறேன். யார் இந்த வரம்பை நிர்ணயம் செய்தது. வளர்ந்து வரும் மக்கள் தொகையை கணக்கில்கொண்டு இந்த 20% விவசாயிகளால் மீதம் உள்ள 80% மக்களுக்கு உணவு அளிக்க முடியுமா என்பதை யோசிக்க வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை பெருக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று உணவு பொருட்களின் தேவையை அதிகப்படுத்துவது மற்றொன்று விவசாயிகளுக்கும் மக்களுக்குமான உணவு பாதையை சுருக்குவது ( தேவையற்ற இடை தரகர்களை நீக்குவது, etc ). இதில் இரண்டாவது வழியை பின்பற்ற வேண்டுமே தவிர முதல் வழி மக்களையும் நாட்டு பொருளாதாரத்தையும் பாதிக்கும். நாம் பொதுவாக விவசாயிகள் என்று சொன்னாலும் அதிலே இரண்டு வகை மக்கள் உள்ளனர், சொந்தமாக விவசாய நிலம் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள். கடந்த 50 ஆண்டு புள்ளி விவரங்களை பார்த்தல் விவசாய நிலம் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து அவர்கள் தங்கள் நிலங்களை விற்று விவசாய கூலிகளாக மாறிவருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் விவசாயிகளின் எண்ணிக்கை 20% ஆக குறைந்தால் அதில் எவ்வளவு பேர் கூலிகளாக மட்டும் இருப்பார்கள் எவ்வளவு பேர் நிலம் உள்ள விவசாயிகளாக இருப்பார்கள். இந்த தராசில் ஒருபக்கம் சாய்ந்தே இருக்கும். இவர்களால் 80% மக்களுக்கு உணவு அளிக்க முடியுமா?
    விவசாயத்தை விட்டு வெளியே வரும் மக்களை பாராட்டும் தாங்கள் அவர்களாக விரும்பி வருகிறார்களா இல்லை விவசாயம் செய்யமுடியாமல் வேறு வழியின்றி வருகிறார்களா என்று யோசித்தீர்களா? விரும்பி வரும் மக்களுக்கு சரியான மாற்று வழியை அரசாங்கம் தந்திருகிறதா? வேறுவழியின்றி வருபவர்கள்தான் சென்னை போன்ற நகரங்களில் சேரிகளில் வாழ்ந்து கூலிகளாக தேய்கிரர்கள். ஒரு காலத்தில் தன் சொந்த ஊரில் நிலம் வைத்திருந்த விவசாயி இன்று சென்னையின் ஏதோ ஒரு மூலையில் சாக்கடை நாற்றத்தில் கொடுக்கடியில் தூங்கும்போது எந்த வாகனம் தன்மேல் மோதும் என்று தெரியாமல் தூங்குகிறான். இவர்களைதான் தாங்கள் பாராட்டுகிறீர்களா?
    இப்படி பல கேள்விகள் விடை தெரியாமல் இருக்கையில் விவசாயிகளின் எண்ணிகையை குறைக்கசொல்வது இதுவும் ஒருவகை genocide தான்...

    ReplyDelete
  11. இங்கு ஒரு விஷயம் யாருக்கும் புரியவில்லை. விவசாயிக்கு விவசாயம் செய்யும் ஆசை அநேகமாகக் குறைந்து விட்டது. பல கரணங்கள் தீவிரமாக அலசப்பட்டு விட்டன. முக்கியமாக ஒன்று பேசப்படவில்லை.

    "நான் சேத்துலே விழுந்து எழுந்து கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை விட நீ பட்டினத்துல வெள்ளையும் சொள்ளையும் போட்டு என்னைவிட அதிகம் சம்பதிக்குறே. அதனாலே இது என்னோட போகட்டும்னு என் புள்ளைய பட்டினத்துக்கு அனுப்பி விட்டேன்''

    இதுதான் இப்போது அநேகமாக பல கிராமங்களின் நிலைமை. அவர்களையும் குறை சொல்ல முடியாது. விவசாயம்தான் செய்ய வேண்டும் என்று தனி மனிதனை கட்டயபடுத்த முடியாதல்லவா.

    என்னதான் வழி இதற்கு என்று என் தம்பியைக் கேட்டபோது ( விவசாயம்தான் செய்ய வேண்டும் என்று நகர் வேலையை விட்டு விட்டு கிராமம் சென்று 15 வருடத்திற்கு பிறகு தோல்வி அடைந்து மீண்டும் நகரம் திரும்பியவன் )அவன் சொன்ன பதில் தூக்கி வாரிப் போட்டது.

    " கார்போரட்டுகள் நினைத்தால்தான் இனி விவசாயத்தை காப்பாற்ற முடியும். இல்லையெனில் அரிசி உன் ஆயுளுக்குள்ளே கிலோ 500 ரூபாய் பார்க்கலாம்."

    ReplyDelete
  12. 100% correct Mr.Badri, 10% is enough to feed balance 90%, it is the land which yields not number of farmers on it. With modernisation already now 10 acres of wet land and 25 of dry land farming has become a norm to survive as a farmer. Small farmers become big farmers (not landlords) by tenancy.
    All this romanticism about farming is bullshit, by making it as a holy one, these so called intellectuals make the small farmers suffer and push them to suicides, so these fellows are murderers by forcing them to stick in a job which is not sustainable.
    Can a farmer live with 5 acres income, even if it gives 50000 per acre, per month it is only 20000, less than grade iv staff.
    Land holding in India is below 2 acres, so all this farmers are leaving farming and nobody can stop this. A farmer's son will not become a farmer and a shepherd's son will not become one, but a poultry business owner son will expand may even become a Suguna Foods !!

    ReplyDelete