Saturday, November 01, 2014

கருப்புப் பணத்தின் நதிமூலம் எது? - தி இந்து எடிட்டோரியல்

இன்று தி இந்து பத்திரிகையில் வந்த தலையங்கம் இது. முழுவதுமாகப் படித்துவிடுங்கள்.

இந்தத் தலையங்கத்தை எழுதியது யார் என்று தெரியவில்லை. இதில் உள்ள சில தவறுகளைச் சுட்டிக்காட்ட முனைகிறேன்.
\\முதலில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கருப்புப் பணம் என்பது வெளிநாட்டு வங்கிகளில் மட்டும் தூங்க வில்லை, உள்நாட்டிலேயே தாராளமாகக் கண்ணெதிரில் ‘நடந்து’ கொண்டிருக்கிறது. வருமான வரிச் சலுகை, கம்பெனிகள் வரிச் சலுகை, ஏற்றுமதிச் சலுகை, இரட்டை வரிவிதிப்பிலிருந்து விலக்கு தரும் சலுகை என்று பெருநிறுவனங்களுக்கும் பெரும் செல்வந்தர் களுக்கும் அரசு தரும் சலுகைகள் ஏராளம். முறையான ரசீது இல்லாமலேயே பொருட்களைப் பெரிய பெரிய கடைகளும் விற்கும் வாய்ப்பும் தாராளம். அதுமட்டுமல்ல, அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர், பெருமுதலாளிகளுக்கு எத்தனை பினாமிகள் இங்கே உலவிக்கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன! முதலில் இங்கே திரிந்துகொண்டிருக்கும் கருப்புப் பணத்தை நாம் என்ன செய்யப்போகிறோம்?\\
நான்கைந்து விஷயங்களை ஒன்றாகச் சேர்த்துப் போட்டுக் குழப்பும் வித்தை இது.

1. “கருப்புப் பணம் என்பது வெளிநாட்டு வங்கிகளில் மட்டும் தூங்க வில்லை, உள்நாட்டிலேயே தாராளமாகக் கண்ணெதிரில் ‘நடந்து’ கொண்டிருக்கிறது.”

உண்மையே.

2. “வருமான வரிச் சலுகை, கம்பெனிகள் வரிச் சலுகை, ஏற்றுமதிச் சலுகை, இரட்டை வரிவிதிப்பிலிருந்து விலக்கு தரும் சலுகை என்று பெருநிறுவனங்களுக்கும் பெரும் செல்வந்தர் களுக்கும் அரசு தரும் சலுகைகள் ஏராளம்.”

இந்த வாக்கியம் இங்கு ஏன் வருகிறது? வரிச் சலுகை வேறு, வரி ஏய்ப்பு வேறு. கணக்கில் காட்டப்படாத பணம்தான் கருப்புப் பணம். இங்கே அரசு தரும் வரிவிலக்கு, வரிச் சலுகை போன்றவை கணக்கில் தெளிவாகக் காட்டப்படுவதுதானே. அது எப்படிக் கருப்புப் பணத்தில் சேரும்? அதை ஏன் இங்கே போட்டு சேர்க்கிறார்கள்?

3. “முறையான ரசீது இல்லாமலேயே பொருட்களைப் பெரிய பெரிய கடைகளும் விற்கும் வாய்ப்பும் தாராளம்.”

ரசீது தருகிறார்களா இல்லையா என்பதைவிட, வரும் வருமானத்தைச் சரியாகக் கணக்கு காண்பிக்கிறார்களா, நியாயமான வரி கட்டுகிறார்களா என்பதைத்தான் நாம் கவனிக்கவேண்டும். (ரசீது தரவேண்டியது குறித்து வேறு சட்டங்கள் உள்ளன. அது வேறு விஷயம்.) இங்கு “பெரிய பெரிய கடைகள்” என்ற ஆபரேட்டிவ் வார்த்தை இருப்பதைக் கவனியுங்கள். உண்மையில் சிறிய கடைகள்தான் இந்த ஜகஜ்ஜால வித்தையைச் செய்கிறார்கள். பெரிய கடைகள் நான் பார்த்தவரை நியாயமாக கம்ப்யூட்டர் பில் போட்டுத்தான் தருகிறார்கள். பில் இல்லாமல், விற்பனை வரி இல்லாமல் கேஷுக்குத் தங்கம் வாங்குவது நம்மூரில் சாதாரணமாகப் பெரும்பாலான கடைகளில் நடக்கிறது. ஆனால் தனிஷ்க்கில் அது சாத்தியம் இல்லை.

இந்த இடத்தில் “பெரிய” கடை என்று போட்டு யார்மீதோ பழியைத் தள்ளிவிடப் பார்க்கிறார்கள் தி இந்து நண்பர்கள். பிரச்னை பெரிய கடைகளில் இல்லை. சின்னக் கடைகளில்தான்.

4. “அதுமட்டுமல்ல, அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர், பெருமுதலாளிகளுக்கு எத்தனை பினாமிகள் இங்கே உலவிக்கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன!”

அரசியல்வாதிகள் - சரி.

அதிகாரவர்க்கத்தினர் - என்றால் அரசு அதிகாரிகள் என்று எடுத்துக்கொண்டால் - ஓகே.

பெருமுதலாளிகள் என்று போடுவதன் நியாயம் என்ன? பெரு, சிறு, நடு முதலாளிகள் என அனைவரையும் போடுங்கள். ஏன் ஓரவஞ்சனை? உண்மையில் இன்றைய புதிய கார்ப்பரேட் முதலாளிகள்தான் அதிகமாக ‘கிளீன்’ ஆக இருப்பவர்கள். அதிலும் பட்டியலிடப்பட்ட பப்ளிக் லிமிடெட் நிறுவனத்தைக் கொண்டிருப்பவர்கள் என்றால், தம் நிறுவனத்தின் முழு வருவாயையும் ஒழுங்காகக் காட்டினால்தான், லாபத்தைச் சரியாகக் காட்டினால்தான், அவர்களுடைய நிறுவனப் பங்குகளின் விலை உயரும். பங்கு விலைகள் உயர்வதால் அவர்களுக்குக் கிடைக்கும் பணம் அதிகம். எனவே வருவாயைக் குறைத்துக் காட்டுவதில் அவர்களுக்கு லாபம் ஏதும் இல்லை. மேலும் சிறுபான்மைப் பங்குதாரர்கள் இந்த விஷயம் தெரிந்தால் கொதித்தெழுந்துவிடுவார்கள்.

ஆனால் பங்குச்சந்தைப் பட்டியலில் இல்லாத நிறுவனங்களின் விஷயம் வேறு. அங்கு லாபத்தைக் குறைத்துக் காட்டினால் அதன் பலன் முழுதும் முதலாளிக்கே போய்ச் சேரும். அவர்கள் இரண்டு கணக்குப் புத்தகங்களை வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றுவது எளிது.

5. “முதலில் இங்கே திரிந்துகொண்டிருக்கும் கருப்புப் பணத்தை நாம் என்ன செய்யப்போகிறோம்?”

என்ன செய்யவேண்டும்? தடுத்து நிறுத்தவேண்டும். இதனால் நம் அரசுக்கு ஏற்படும் நட்டம், வரி வருமான இழப்பு மட்டுமே. ஆனால் இந்தக் கருப்புப் பணம் இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படையில் இருந்துகொண்டு ஏதோ ஒருவிதத்தில் நாட்டுக்கு நன்மை செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் வெளிநாட்டுக்கு ஓடும் பணம் இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு பெரும் ஓட்டையைப் போட்டுக்கொண்டிருக்கிறது.

கேள்வி இதுவா, அதுவா என்பதில்லை. இரண்டையுமே அடைக்கவேண்டும்.
என்ன செய்யவேண்டும் என்ற கேள்விக்கு தி இந்து தலையங்கம் உருப்படியான வழிமுறை எதையும் சொல்லவில்லை. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை வரம்பை விரிவாக்கவேண்டும், கடுமையான தண்டனை தரவேண்டும் போன்ற பொதுப்புத்தி விஷயங்களைப் பற்றிச் சொல்கிறது. விஷயம் அவ்வளவு எளிதானதல்ல. அதைவிட மோசம், இறுதிப் பத்தியில் உள்ள இந்த அறிவுரை:
\\நாம் கடைப்பிடிக்கும் உற்பத்தி முறைகளும் பொருளாதார அமைப்பும் தேர்தல் ஜனநாயகமும் வரி ஏய்ப்பையும் கருப்புப் பணத்தையும் அவ்வளவு லேசில் ஒழித்துவிடாது என்பதே உறுதி.\\
இதைப்போல ஜனநாயகத்துக்கு எதிரான, அபத்தமான கருத்தை எங்குமே பார்க்க முடியாது. கம்யூனிச நாடுகளில்தான் வரி ஏய்ப்பும் கருப்புப் பணமும் இருக்காது என்பதுபோன்ற கருத்தை இந்தத் தலையங்க எழுத்தாளர் கொண்டிருக்கிறார். கருப்புப் பணத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ள பெரும்பாலான மேலை நாடுகள் எல்லாமே தேர்தல் ஜனநாயகத்தையும் முதலீட்டிய உற்பத்தி முறைகளையும் பொருளாதார அமைப்பையும் கொண்டவையே. நம்மாலும் அதனைச் செய்ய முடியும்.

3 comments:

  1. இது மிக முக்கியமான ஆய்வு .தெரிந்து கொள்ளவேண்டிய விசயமே .காங்கிரஸ் மற்றும் பிஜேபி இரண்டுக்கும் பொது ஆதரவாளர்களை காப்பாற்றும் முயற்சிதான் புலிவருது ,புலிவருது என்ற கதை .எல்லா அரசுக்கும் இந்த கருப்பு பணத்தை மீட்கும் தார்மீக கட்டாயம் இருப்பதை மறந்து குதிப்பது கேவலமான அரசியல் யுக்தி .

    ReplyDelete
  2. 2. அத்தகு சலுகைகளை பொய் ஆவணம் காட்டி அடையும்போது கருப்பு பணம் உருவாகிறது. எண்ணிலா சலுகைகள் அத்தகு மோசடிகட்கு ஏதுவாகிறது
    / பிரச்னை பெரிய கடைகளில் இல்லை/
    அனைவரிடத்தும்தான் . they engage professionals to fudge the accounts and adopt ingenious methods.
    4. You seem to forget "satyam". How corporates grease officials to procure contracts/favours. Does not corporate engage in real estate transactions? What is the percentage of real estate transactions without a black money component?
    5/இந்தக் கருப்புப் பணம் இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படையில் இருந்துகொண்டு ஏதோ ஒருவிதத்தில் நாட்டுக்கு நன்மை செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் வெளிநாட்டுக்கு ஓடும் பணம் இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு பெரும் ஓட்டையைப் போட்டுக்கொண்டிருக்கிறது. /
    How can you say domestic black money does good to the country. Unless you define country as "black money owners".
    In terms of number they are a miniscule minority.
    BLACK MONEY HARMS THE NATION IN NUMEROUS WAYS.
    I CANNOT THINK OF ONE GOOD USE.
    MAY BE YOU CAN SAY THEY USE PART OF IT FOR CHARITY OR TEMPLES.
    Keeping funds overseas need not be distinguished theoretically.
    We do have significant component of white money parked overseas.
    Domestic or overseas black money is bad for the nation, its subjects and the economy.WE NEED ZERO TOLERANCE TO BLACK MONEY
    . We






    ReplyDelete
  3. //ஆனால் இந்தக் கருப்புப் பணம் இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படையில் இருந்துகொண்டு ஏதோ ஒருவிதத்தில் நாட்டுக்கு நன்மை செய்துகொண்டுதான் இருக்கிறது. //

    சரியில்லாத விவாதம். அந்த பணத்தை வீடு, மனையில் முதலீடு செய்வதால் அதன் விலை சராசரி மனிதன் வாங்க முடியாத அளவு அதிகரிக்கிறது. வியாபாரத்தில், ஒவ்வொரு பொருளும் வரி உள்பட நிர்ணயம் செய்ய சட்டம் செய்தால், வரி செலுத்துவது கட்டாயமாகிவிடும்.

    ReplyDelete