வினவு தளத்தில் குற்றவாளிக் கூண்டில் பத்ரி சேஷாத்ரி என்று ஒரு பதிவு எழுதியிருந்தனர். அவர்களது குற்றச்சாட்டுகள் இரண்டு:
(1) வங்கதேசத்தில் குறுங்கடன் என்ற முறையை அறிமுகப்படுத்திப் பெரிதாக்கிய கிராமீன் வங்கியின் தந்தை முகமது யூனுஸ் என்பவரை நான் பாராட்டி எழுதியது, பேசியது... இப்போது யூனுஸ் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே மக்களின் பணத்தைத் திருடும் ஒரு குற்றவாளியை நான் ஆதரித்துள்ளேன்.
(2) குறுங்கடன் என்னும் திட்டத்தை ஆதரிப்பது. அதற்காக ஒரு வலைப்பதிவையே உருவாக்கியிருப்பது. இந்தத் திட்டம் ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சுவது.
===
சுமார் பத்தாண்டுகளுக்குமுன் மைக்ரோஃபைனான்ஸ் பற்றி அறிந்துகொள்ள முற்பட்டபோதுதான் முகமது யூனுஸ் பெயரை நான் கேள்விப்பட்டேன். அதனையடுத்து அவரைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்தேன். வங்கதேசத்துக்குப் பலமுறை நேரில் சென்றுள்ளேன். அங்கே நிலவும் ஏழைமை எனக்குத் தெரியும். இந்தியாவைவிட மோசமான நிலையில் இருக்கும் நாடு. அத்துடன் அந்நாட்டில் நிலவும் பெண் விரோதப் பார்வையும் சேர்ந்துகொண்டிருப்பதால், அங்குள்ள பெண்களின் நிலை இந்தியாவில் இருப்பதைவிட மோசம். அப்படிப்பட்ட நாட்டில் பெண்களை மட்டுமே அடிப்படையாக வைத்து ஒரு மாபெரும் இயக்கத்தைக் கட்டியெழுப்பியவர் யூனுஸ்.
அவர்மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுகளில் சில உண்மை இருக்கலாம். அவை பரிசீலிக்கப்படவேண்டியவை. அவர் அரசியலில் ஈடுபட விரும்பியபோது தற்போதைய பிரதமரான ஷேக் ஹசீனா அவரை எப்படியெல்லாம் ‘டேமேஜ்’ செய்யமுடியுமோ அப்படியெல்லாம் செய்தார். கிராமீன் வங்கியிருந்து யூனுஸ் தூக்கி எறியப்பட்டார். யூனுஸ் மீதான குற்றச்சாட்டுகளை வங்கதேச அரசியலின் அடிப்படையிலும் ஹசீனா-யூனுஸ் உரசலின் அடிப்படையிலுமே பரிசீலிக்கவேண்டும்.
ஆனால் யூனுஸ்மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் அவர் உருவாக்கிய குறுங்கடன் திட்டத்தை எவ்வகையிலும் நீர்த்துப்போகச் செய்யாது என்பதே உண்மை.
குறுங்கடன் தொடர்பான என் வலைப்பதிவுகளை நான் 2009-லேயே நிறுத்திவிட்டேன். அந்த வலைப்பதிவை நடத்தத் தேவையான நேரம் என்னிடம் இல்லை. நான் தற்போது குறுங்கடன் கம்பெனி ஒன்றில் இயக்குனராக இருக்கிறேன். அந்நிறுவனத்தில் எனக்குப் பங்குகள் இல்லை. இண்டிபெண்டண்ட் டைரக்டர். அவ்வளவே. அதனால் இந்தியாவில் குறுங்கடன் தொடர்பாக என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஓரளவு நன்கு அறிவேன்.
குறுங்கடன் குறித்து வினவு பதிவில் எழுதப்படுவது அத்துறை பற்றித் துளியும் அறியாதவர்களுடைய கற்பனையே.
குறுங்கடன் வட்டி விகிதம் அதிகமானதுதான். ஆனால் கந்துவட்டியைவிட மிக மிகக் குறைவானது. ஓரளவு வசதி படைத்தவர்கள் வாங்கும் பெர்சனல் லோன் வட்டி விகிதத்தைவிடச் சற்றே அதிகமானது. அவ்வளவுதான்.
குறுங்கடன், கந்துவட்டியைப் போல பாஸ்போர்ட், ரேஷன் கார்ட், லைசென்ஸ் என்று எதையும் பிடுங்கி வைத்துக்கொள்ளாது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப நடந்துகொள்ளவேண்டும். கடனைத் திரும்பக் கொடுக்காதவர்களை ஆள் வைத்து மிரட்ட முடியாது. இதனை ரிசர்வ் வங்கி மிகத் தெளிவாகவே சொல்லியிருக்கிறது. திரும்பக் கிடைக்காத பணம் வாராக்கடனாகத்தான் கருதப்படவேண்டும். அதற்கு ஏற்ப ஒவ்வொரு நிறுவனமும் புரொவிஷன் ஏற்படுத்தியிருக்கவேண்டும்.
எந்தத் தொழில் செய்யவேண்டும் என்றாலும் அதற்கான முதலீடு மூன்று வகையில் வரவேண்டியிருக்கும். (1) பங்கு முதலீடு, (2) கடன், (3) தொழிலிருந்தே கிடைக்கும் லாபம் (internal accruals). மிகச் சிறிய தொழிலாக இருக்கும் பட்சத்தில் சொந்தப் பணமும் உறவினர், நண்பர்கள் பணமும்தான் பங்கு முதலீடாக வரும். கடன் பெறுவதற்கு சிறு நிறுவனங்களுக்கு இன்று வழியே இல்லை. எந்த வங்கியும் கை விரித்துவிடும். அப்பளம் இட்டு விற்க, கூடை முடைந்து விற்க, இஸ்திரிப் பெட்டியும் வண்டியும் வாங்கித் தொழில் நடத்த, தெருவில் தள்ளுவண்டி சாப்பாட்டுக் கடை நடத்த, பூ வாங்கித் தொடுத்து விற்க, காய்கறி, இளநீர் விற்க, ஜூஸ் கடை நடத்த என்று இன்று லட்சோபலட்சம் மக்களுக்கான வாழ்க்கை ஆதாரத்தை நடைமுறைப்படுத்த கடன் தேவை. இந்தக் கடனை பாரம்பரியமாக அதிக வட்டியில் கந்துவட்டிக்காரர்கள் கொடுத்துவந்தனர். இவர்கள் ஆண்டுக்கு 36% முதல் 120% வரை வசூலிக்கக்கூடியவர்கள். உலகின் பல பாகங்களில், உதாரணமாக தென்னமெரிக்காவில், 70%-க்குமேல் வட்டி வசூலிக்கும் குறுங்கடன் நிறுவனங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவில் ரிசர்வ் வங்கியிடம் Non Banking Finance Corporation - Microfinance (NBFC-MF) என்று பதிந்துகொண்டிருக்கும் நிறுவனங்களால் அப்படிச் செய்ய முடியாது. 30%-க்கும் கீழாகத்தான் வட்டி வசூலிக்க முடியும். அதிலும் மேற்கொண்டு பல கட்டுப்பாடுகள் உள்ளன. உங்கள் நிறுவனம் பெறும் கடனுக்கான வட்டி விகிதத்திலிருந்து 10%-க்குமேல் இருக்க முடியாது. இன்று நீங்கள் பெறும் கடன் 16% வட்டியிலானது என்றால், நீங்கள் 26% வட்டிதான் வசூலிக்க முடியும்.
யூனுஸின் கிராமீன் நிறுவனம், வங்கி என்னும் அந்தஸ்து கொண்டது. அதனால் அது வைப்பு நிதிகளைப் பெற முடியும். சேமிப்புக் கணக்கை மக்களுக்குத் தர முடியும். அந்தப் பணத்தையெல்லாம்கூடக் கடனாக வெளி ஆட்களுக்குத் தரலாம். இதனால் வங்கிகளுக்கு cost of funds குறைவாக உள்ளது. ஆனால் NBFC-MF நிறுவனங்களால் வைப்பு நிதிகளைப் பெற முடியாது. அவர்கள் முதலில் ஒரு குறிப்பிட்ட ஈக்விடியுடன் நிறுவனத்தை ஆரம்பிக்கவேண்டும். பின்னர் அவர்கள் வங்கிகளிடம் கடன் வாங்கவேண்டும். அவர்கள் வாங்கும் கடனுக்குப் பிணை இருக்கலாம். ஆனால் அவர்கள் கொடுக்கும் கடனுக்குப் பிணை கிடையாது! இப்போது இந்தியாவில் மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கு வங்கிகள் கொடுக்கும் கடன் 15-16% வட்டியில் கிடைக்கிறது. அதற்குமேல் மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்களுக்குச் செலவு இருக்கிறது. அந்தச் செலவைச் சரிக்கட்டி லாபம் சம்பாதிக்கவேண்டிய அளவுக்கு அவர்கள் வட்டி விகிதத்தை வைக்கவேண்டியிருக்கிறது. அதனால்தான் மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனக் கடன்களின் வட்டி 26-27% என்று இருக்கிறது.
இந்தியாவின் பணவீக்கம் காரணமாக இங்கே ரிசர்வ் வங்கியின் ரெபோ ரேட் (7.5%) அதிகமாக இருக்கிறது. அதனால் வங்கிகளின் பிரைம் லெண்டிங் ரேட் (பி.எல்.ஆர்) அதிகமாக இருக்கிறது. ரெபோ ரேட் 3-4% என்று வந்துவிட்டால், மைக்ரோஃபைனான்ஸ் வட்டி விகிதம் 20%-க்கும் கீழாகப் போகும். இங்கு பிரச்னை பொருளாதாரத்தைச் சார்ந்தது. ஏழைகளை ஏமாற்றிச் சுரண்டவேண்டும் என்ற எண்ணத்தால் வருவதல்ல இந்த வட்டி விகிதம்.
கலெக்டிவ் ரெஸ்பான்சிபிலிடி என்ற வகையில் ஐந்தைந்து பேர்களை - பெண்களை - குழுக்களாக ஆக்கி, அந்தக் குழுவில் உள்ளவர்கள் அனைவருக்கும் கடன் தரப்படுகிறது. அனைவரையும் வட்டியையும் முதலையும் கட்டவைக்கவேண்டியது குழுவின் கடமை. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளின்படி ஒருவருக்கு ரூ. 15,000/-க்குமேல் கடன் கொடுக்க முடியாது. மேலும் ஒருவர் அதிகபட்சம் மூன்று குறுங்கடன்களை மட்டுமே ஒரே நேரத்தில் வாங்கியிருக்க முடியும். கொஞ்சம் கொஞ்சமாக சிபில் போன்ற டேட்டாபேஸில் ஒருவர் வாங்கிய கடனை ஒழுங்காகக் கட்டுகிறாரா இல்லையா என்ற தகவல் போய் உட்கார்ந்துகொள்கிறது. அந்த அடிப்படையில் ஒழுங்காகக் கடனைக் கட்டுபவர் என்பவருக்குத்தான் கடன் தரப்படுகிறது.
இந்தக் கடனை வாங்கும் மக்களில் பலரும் தொழிலை அபிவிருத்தி செய்வதைவிட, கல்யாணம், மருத்துவம், கல்வி போன்றவற்றுக்குச் செலவழித்துவிடுகிறார்கள். பின்னர் தங்கள் பிற வருமானத்தைக் கொண்டு கடனை அடைக்கிறார்கள். அதே நேரம் மிகப் பலர், தங்கள் தொழிலை மேற்கொண்டு வளர்க்க இந்தக் கடனைப் பயன்படுத்துகிறார்கள்.
வங்கிகள் இம்மக்களைக் கண்டுகொள்வதே இல்லை. இவர்களுக்குப் பெரும்பாலும் வங்கியில் கணக்குகூடக் கிடையாது. (இப்போது ஜன் தன் யோஜனா மூலம் ஒருவேளை கணக்குகள் கிட்டலாம்.) இப்படிப்பட்ட மக்கள் வாழ்வில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் குறுங்கடன் நிறுவனங்களைப் பற்றி நொள்ளை சொல்ல வினவு வரிந்துகட்டிக்கொண்டு வருவதேன்?
அவர்களுடைய சித்தாந்தப்படி, முதலாளித்துவ சமூகத்தில் முதலாளித்துவ அமைப்பு எக்காலத்திலும் ஏழைகளுக்கு நன்மை செய்துவிட முடியாது. குறுங்கடன் நிறுவனங்கள் இதற்கு மாறானதாக இருக்கின்றன. அதனால்தான் அதில் என்ன குளறுபடிகள் உள்ளன என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்வையிடுகிறார்கள்.
பிரச்னைகள் இல்லாமல் இல்லை. எஸ்கேஎஸ் மைக்ரோஃபைனான்ஸ் என்ற நிறுவனம், பங்குச்சந்தையில் பட்டியல் செய்யப்பட்டு, அதன் பங்கு விலைகள் விண்ணை நோக்கிப் பறந்தன. இதனால் உண்மையில் ஒட்டுமொத்த மைக்ரோஃபைனான்ஸ் துறைக்கே பிரச்னைதான் ஏற்பட்டது. ஆந்திராவில் கடன்களை வசூல் செய்வதில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக அரசியல்வாதிகள் களத்தில் இறங்கினர். ஆந்திரா தனியான ஒரு சட்டத்தைப் பிறப்பித்தது. ஆந்திராவை மட்டுமே மையமாக வைத்து இயங்கிவந்த மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்கள் திவாலாயின. அதன்பின் ரிசர்வ் வங்கி தலையிட்டு சில பொதுவான கட்டுப்பாடுகளை விதித்தது. கட்டுப்பாடுகள் வரவர, இந்தத் தொழிலில் ஒருவித ஒழுங்கு ஏற்பட்டுள்ளது.
மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்களை நடத்துவதில் கட்டாயம் லாபம் உள்ளது. அதனால்தான் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குகிறார்கள். அதனால்தான் வங்கிகள் இந்நிறுவனங்களுக்குக் கடன் தருகிறார்கள். இந்த நிறுவனங்கள் பல ஆயிரம் பேர்களை வேலைக்கு வைத்துக்கொள்கின்றன. அதற்கெல்லாம் மேலாக பல லட்சம், பல கோடி மக்களுக்குத் தேவையான கிரெடிட்டை வழங்குகின்றன. அவர்களுடைய வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவருகின்றன.
வினவின் செம்புரட்சியால் இப்படி ஏதேனும் நடைபெறுமா என்பதை நான் அறியேன்.
வினவு உங்களை வங்கத்தின் மத்திய வங்கி ஆளுநர்
ReplyDeleteஎன்று நினைத்து விட்டார்களோ
அவர்களுக்கு நல்ல பதில் கொடுத்தீர்கள். இவர்கள் வழியும் சொல்ல மாட்டார்கள், வழி சொன்னாலும், அதில் தவறு சொல்ல மட்டும் தவறமாட்டார்கள்.
ReplyDeletePLEASE IGNORE VINAVU. YOUNUS'S SCHEME FOR A POOR
ReplyDeleteCOUNTRY LIKE BANGLADESH IS A BOON. POLITICS OF SHEIK
HASINA CORNERED YOUNUS. BUT HE IS MUCH MUCH BETTER
THAN OUR MINISTER (central) WHO CONSTRUCTED TELEPHONE
EXCHANGE IN HIS HOUSE AND USED THE FACILITY FOR
HIS BROTHER'S TV BROADCASTING EARNED CRORES OF RUPEES'
THESE PEOPLE IF THEY GET FREE SANDAL PASTE THEY WILL
.APPLY IT TO EVERY PARTS OF THEIR BODIES. (IT IS AN OLD
KANNADA PROVERB) NOW THEIR ASSETS ARE ATTACHED BY ED.
BUT FOR BJP GOVT THESE PEOPLE WOULD HAVE ESCAPED.