Thursday, February 05, 2004

கிரிக்கெட் பயிற்சி மையங்கள் - 2

3. என் பையன் தொலைக்காட்சி பார்த்து அப்படியே திராவிட்/டெண்டுல்கர் மாதிரி நன்றாக விளையாடுகிறான். வயது அதிகமானவர்களுடன் விளையாடும்போதும் சிறப்பாக விளையாடுகிறான். அடுத்து என்ன செய்வது?

பெற்றோர்களுக்கு, தன் பிள்ளைகள் எது செய்தாலும் சிறப்பானதாக இருப்பதாகவே தோன்றும். மூன்று வயது முதற்கொண்டே முக்கால்வாசி இந்தியக் குழந்தைகள் தொலைக்காட்சியைப் பார்த்து 'அது தெந்துல்கர் மாமா' என்று மழலையில் கலக்கும் (என் மகள் சேர்த்து). ஒரு பையனுக்கு (பெண்குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவது பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன். பெண்களுக்கான கிரிக்கெட் வாய்ப்புகள் இன்றைய தேதியில் வெகு குறைவு) கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் ஈடுபடுவது எளிது. இன்றைய தேதியில் கிரிக்கெட் நட்சத்திரங்கள், திரைப்படத்துறையினரைக் காட்டிலும் அதிக மதிப்புடையவர்கள். கிரிக்கெட் வீரர்கள் இன்று சோப்பு, சீப்பு, கண்ணாடி, செல்பேசி, கோதுமை மாவு, கோகா கோலா என்று எல்லாவற்றையும் விற்கிறார்கள். இன்றைய சிறுவனின் 'ஹீரோக்கள்' கிரிக்கெட் வீரர்களே.

அதனால் வீட்டில் சிறுவர்கள் கையில் கிடைத்த நியூஸ்பேப்பரைச் சுருட்டி வைத்துக் கொண்டு, பிரெட் லீ பந்தை எதிர்கொண்டு திராவிட் அடிக்கும் கவர் டிரைவ் போல ஒரு 'ஆக்ஷன்' விடுவார்கள். அதைப் பார்த்து பெற்றோர்களும் 'ஆஹா, என் மகன்தான் அடுத்த திராவிட்' என்ற கோட்டையைக் கட்டாமல், நேராக ஒரு கிரிக்கெட் பயிற்சியாளரை அணுக வேண்டும்.

ஆரம்பநிலையில் பயிற்சியாளரால் ஒரு சிறுவனது உள்ளார்ந்த திறமை எந்தத் துறையில் உள்ளது என்பதை உடனடியாகச் சொல்ல முடியாது. பேட்டிங், பவுலிங், இரண்டிலும்?... பேட்டிங் என்றால் தடுத்தாடும் தொடக்க ஆட்டமா, இல்லை அடித்தாடும் இடைநிலை ஆட்டமா? பவுலிங் என்றால் வேகப்பந்து வீச்சு, சுழல்பந்து... சுழல்பந்தென்றால் விரலால் சுழற்சி அல்லது மணிக்கட்டால் சுழற்சி... வேகப்பந்து என்றால் 12 வயதில் என்ன வேகம் போட முடியும்? இப்படிப் பல குழப்பங்கள்.

அதனால் பயிற்சியாளர் ஒரு சிறுவனை பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கவனத்தைச் செலுத்தச் சொல்வார். இயல்பான திறமை எங்கு வெளிப்படுகிறது என்பதை கவனிப்பார். பின்னர் அந்த ஒரு துறையில் அதிக கவனம் அளிக்க முயல்வார். இதெல்லாம் ஒரு மாதப் பயிற்சி முகாமில் கண்டறிவது கஷ்டம்.

அதனால் பெற்றோர்கள் தங்கள் வீடுகளின் அருகில் முன்னாள் ரஞ்சி, அல்லது முதல் டிவிஷன் லீக் ஆட்டக்காரர் யாராவது இருக்கிறாரா என்று தேடிக் கண்டுபிடித்து அவரிடம் தன் பையனை அழைத்துக்கொண்டுபோய் பேச வைக்க வேண்டும். வெறும் களப்பயிற்சி மட்டும் போதாது. முதலில் சிறுவர்களுக்கு என்னவெல்லாம் சாத்தியம் என்பது பற்றிய போதனை தேவை. ஆஸ்திரேலியாவில் இடதுகை மணிக்கட்டு சுழற்சி மூலம் பந்து வீசும் ஓரிரு இளம் வீரர்கள் தோன்றியுள்ளனர் (மைக்கேல் கிளார்க், மைக்கேல் பெவான் கூட இப்படித்தான்). இந்தியாவில் எனக்குத் தெரிந்தவரை இப்படியொரு பந்துவீச்சாளர் ரஞ்சிக்கோப்பை அளவில் தற்போது விளையாடுவதில்லை. தென்னாப்பிரிக்க அணியில் பால் ஆடம்ஸ் (கழுத்தை ஒருமாதிரி திருப்பிக் கொண்டு பந்து வீசுபவர்) முதன்முதலில் சர்வதேச அளவில் (கடந்த பத்து வருடத்திற்குள்) இம்மாதிரி பந்து வீசியவர்.

இப்படி யாராவது இடதுகை மணிக்கட்டு சுழற்சியில் பந்து வீச வந்தால் நம்மூர்ப் பயிற்சியாளர்கள் அந்தச் சிறுவர்களை பயமுறுத்தி, விரல் சுழற்சி மூலம் பந்து வீசுமாறு செய்து விடுகிறார்கள். இதனால் நஷ்டம் நமக்குத்தான். இந்தியாவில் இடதுகை விரல் சுழற்சிப் பந்து வீச்சாளர்கள் (பிஷன் சிங் பேடி போல்) பல்லாயிரம். உருப்படியான வலதுகை மணிக்கட்டு சுழற்சி லெக் ஸ்பின் பந்து வீச்சாளர்களே வெகுவாகக் குறைந்து விட்டார்கள்.

அதேபோல் நம்மூர்ப் பயிற்சியாளர்கள் வேகப்பந்து வீசும் ஒவ்வொருவனையும் எப்படியெல்லாம் குளறுபடி செய்யமுடியுமோ செய்து, "வேகம் அவசியமல்ல, 'லைன் & லென்த்'தான் முக்கியம்" என்று மிதவேகப் பந்து வீச்சாளர்களாக்கி விடுகிறார்கள். இதனாலேயே பிரெட் லீ போன்ற அதிவேகப் பந்துவீச்சாளர்கள் நம்மிடையே இல்லை.

எனக்கு, கீழ்நிலையில் இருக்கும் இந்தியப் பயிற்சியாளர்கள் மீது சிறிதும் நம்பிக்கையே இல்லை. இந்தியாவிற்குத் தேவை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் உள்ளது போல் கற்று, தேர்வெழுதி, சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள். இப்படிச் சான்றிதழ் பெற்றவர்களும் ஒவ்வொரு வருடமும் மேற்படிப் பயிற்சிக்காக ஓரிடத்தில் குழுமி, அதிகம் தெரிந்தவர்களிடம் கற்க வேண்டும். கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

பாகம் ஒன்று

Wednesday, February 04, 2004

கிரிக்கெட் பயிற்சி மையங்கள் - 1

பொதிகையில் கிரிக்கெட் கதை
என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளைப் பொதுவாக இப்படி வகுக்கலாம்:

1. எங்கள் ஊரில் பயிற்சி மையம் உண்டா? சென்னையில் எங்கெல்லாம் பயிற்சி தருகிறார்கள்? என் பையனை எங்கு சேர்ப்பது?

தமிழகத்தில் சென்னையை விட்டால் கோவை, திருச்சி, மதுரை போன்ற இடங்களிலேயே சரியான, தரமான பயிற்சி முகாம்கள் நடப்பதில்லை. இப்படி ஒரு/இரண்டு மாதப் பயிற்சி முகாம்களே ஒழுங்காக நடக்காத போது, வருடம் முழுதும் நடக்கும் பயிற்சி மையங்கள் இருக்காது.

சென்னையிலும் எனக்குத் தெரிந்தவரை 4-5 முழுநேரப் பயிற்சி மையங்கள் உள்ளன. வி.பி.சந்திரசேகர் நடத்தும் 'நெஸ்ட்', ராபின் சிங் நடத்தும் ஒரு மையம், சுரேஷ் குமார், அப்துல் ஜப்பார் போன்ற ரஞ்சிக்கோப்பை விளையாடியவர்கள் நடத்தும் மையங்கள் போன்றவையே. ஆனால் கோடை காலத்தில் (மார்ச் ஆரம்பித்து ஆகஸ்டு வரை) பல பயிற்சி முகாம்கள் எங்கு பார்த்தாலும் முளைக்கும்.

இந்த கிரிக்கெட் பயிற்சியாளர்கள் அனைவரும் எந்தத் தேர்வும் எழுதித் தேர்ந்த பயிற்சியாளர்கள் இல்லை. ஆனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கென்றே தேர்வு நடத்தி அதற்கான சான்றிதழும் வழங்குகிறார்கள். இதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டும் (ECB), கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் (CA), ஒவ்வொரு வருடமும் தங்கள் நாடுகளில் உள்ள கிரிக்கெட் பயிற்சியாளர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி, சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்துகின்றனர்.

இது எதுவும் இந்தியாவில் நடைபெறுவதில்லை.

2. எத்தனை வயதில் தீவிர கிரிக்கெட் பயிற்சி ஆரம்பிக்கப்பட வேண்டும்? எப்படி என் மகன் இந்திய அணியில் சேர முடியும்?

பனிரெண்டு வயதிலிருந்தே தீவிரமான பயிற்சியினை ஆரம்பிக்க வேண்டும். இந்தியாவிற்காக விளையாடக் கனவு கண்டால், முதலில் ஒரு ரஞ்சி அணியில் விளையாட முயற்சி செய்ய வேண்டும். அதற்கு முன்னர் பள்ளிக்கூட அணியில் ஆரம்பிக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு 12 வயதுப் பையன் சென்னையில் ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்...
  • பள்ளிக்கூட அணி
  • சென்னை u-13 அணி
  • தமிழ்நாடு u-13 அணி
  • தமிழ்நாடு u-16 அணி
  • தமிழ்நாடு u-19 அணி ... இந்தியா u-19 அணி
  • தமிழ்நாடு ரஞ்சி அணி [இங்கெல்லாம் இருக்கும் போதே முதல் டிவிஷன் கிரிக்கெட் போட்டிகளில்]
  • கல்லூரி கிரிக்கெட் அணிகள்
  • சவுத் ஸோன் (South Zone) அணி
  • இந்தியா-A அணி
  • இந்தியா அணி
இப்படி ஒரு பெரிய போட்டிக்களம் உள்ளது. u-13 விளையாடாவிட்டால் என்னால் இந்திய அணிக்கு வரமுடியாதா என்ற கேள்வி எழலாம். அப்படியெல்லாம் கிடையாது. ஆனால் கிரிக்கெட்டைத் தீவிரமாக எடுத்துக் கொண்டால் அப்பொழுதிருந்தே தொடங்க வேண்டும். இந்த அணிகளில் தேர்ந்தெடுக்கப்பட முயற்சி செய்ய வேண்டும். 12 வயதிலிருந்தே பயிற்சி மையம் எதிலாவது சேர வேண்டும். பெற்றோர்களில் ஆதரவு வேண்டும். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களின் ஆதரவு வேண்டும். பள்ளிக்கூடத்திலேயே கிரிக்கெட் ஒரு முக்கிய விளையாட்டாகக் கருதப்பட்டு, அதற்கான ஆடுகளம் முதலியவை இருத்தல் வேண்டும்.

தேவையான கருவிகளைப் பெற்றோர்கள் வாங்கித்தர வேண்டும். பேட்ஸ்மேன் என்றால் நல்ல மட்டைகள் மூன்று/நான்கு வாங்கித்தர வேண்டும். காஷ்மீர் வில்லோ (Kashmir Willow) ஒத்துவராது. அதெல்லாம் தெரு முனையில் தட்ட மட்டுமே லாயக்கு. இங்கிலீஷ் வில்லோவால் (English Willow) ஆன - இந்த மட்டை இங்கிலாந்தில் வளர்க்கப்படும் வில்லோ மரங்களிலிருந்து வெட்டி இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது - மட்டை ஒன்று குறைந்தது ரூ. 3000 ஆகும். அதிலேயே நல்ல மட்டையாக வாங்க வேண்டுமானால் (Grade என்று சொல்லுவோம்... Grade I, II, III, IV என்று இருக்கும். Grade I இங்கிலீஷ் வில்லோ மட்டைகள் ரூ. 6000-7000 ஆகிவிடும்.) இன்னமும் அதிகம் செலவாகும். அத்துடன் கால்காப்பு, தலைக்கவசம், மற்ற முக்கியமான இடத்தின் காப்பு, கையுறைகள் (இரண்டு, மூன்று), அனைத்தையும் அள்ளிக்கொண்டு போக ஒரு பை என்று ரூ. 15,000 வரை இழுத்துவிடும். பல நடுத்தர வர்க்கத்தினரால் இதனைச் சமாளிக்க முடியாது. குறைந்த செலவில் ரூ. 3000க்குள் முழு 'கிட்' வாங்கிக் கொடுப்பர். அதில் காஷ்மீர் வில்லோ பேட் மட்டுமே கிடைக்கும்.

இதுமட்டும் போதாது! இயல்பாகவே விளையாடும் திறமை இருக்க வேண்டும். உன்னிப்பாக கவனிக்கும் தன்மை வேண்டும். சாதிப்பேன் என்ற மன உறுதி வேண்டும். உடல் பயிற்சி வேண்டும். நேற்று என்னிடம் பேசிய ஒரு அம்மா, தன் மகன் நன்றாக விளையாடுகிறான், ஆனால் சாப்பாடு சரியில்லை, உடல் பயிற்சி செய்வதில்லை என்றார். மாத்தியூ ஹேய்டனைப் பாருங்கள் - எருமை மாடு போல வளர்ந்துள்ளார்!:-) வலுவான தசைகள் இருந்தால்தான் பந்துவீச்சிற்கும் உதவும், பேட்டிங்குக்கும் உதவும்.

திறமை, பயிற்சி, ஆதரவான பெற்றோர் இருந்தும், இன்னமும் தேவை அதிர்ஷ்டம், சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பது, ஒரு வாய்ப்பு கிடத்ததும் அதை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்வது.

இன்னமும் தொடரும்.

Tuesday, February 03, 2004

கிரிக்கெட் பயிற்சி மையங்கள் பற்றிய தொ.கா நிகழ்ச்சி

நானும், நிகழ்ச்சி வழங்கும் செல்வியும்
இன்று சென்னைத் தொலைக்காட்சி பொதிகை சானலில் 12.30 மணிக்கு வரும் 'தெரியுமா உங்களுக்கு' என்னும் நிகழ்ச்சியில் என்னைக் கூப்பிட்டிருந்தார்கள். இது ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று வரும் நிகழ்ச்சி. ஒவ்வொரு துறையிலும் உள்ள வல்லுனர்களிடமிருந்து நிகழ்ச்சி வழங்குபவர் நேரிடையாகவும், பொதுமக்கள் தொலைபேசி மூலமும் கேள்விகள் கேட்டு விடைகளைப் பெறும் நிகழ்ச்சி.

கிரிக்கெட் விளையாட்டில் பணம் அதிகமாகப் புழங்குகிறது. தொலைக்காட்சியில் கிரிக்கெட் ஆட்டங்கள் தொடர்ச்சியாகக் காண்பிக்கப்படுகின்றன. இந்திய நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கிரிக்கெட்டில் பணத்தைக் கொட்டுகின்றனர். இதனால் இப்பொழுதெல்லாம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாட்டை நன்றாகப் பயின்று அதனையே ஜீவாதாரமாகத் தேர்ந்தெடுப்பதை வரவேற்கவும் செய்கின்றனர். என் தந்தை நான் பத்தாம் வகுப்பில் படிக்கும்போது கிரிக்கெட் என்று வேளியே சென்றால் காலை உடைத்து விடுவேன் என்று சொன்னார்! இன்று நான் பல பெற்றோர்களுக்கு அவர்கள் பிள்ளைகளை கிரிக்கெட்டில் சேர்த்து விடுவது எப்படி என்று விளக்குவதைப் பற்றி என்ன நினைத்திருப்பார்?

இந்த நிகழ்ச்சி பற்றிய என் பதிவு அடுத்து.

காந்தியின் பலதுறைப் பங்களிப்பு

காந்தியின் பலதுறைப் பங்களிப்பு பற்றிய ராமச்சந்திர குஹாவின் பேச்சிற்குச் சென்றுவந்து அதைப்பற்றி நான் எனது பதிவில் எழுதியிருந்தேன். அதில் ஒருசில விடுபட்டவைகளை சத்யாவின் ஆங்கில வலைப்பதிவில் முழுமையாகப் பார்க்கலாம்.

என்னுடைய பதிவுகள்: ஒன்று | இரண்டு

Monday, February 02, 2004

ழ கணினி அறிமுகம் - 4

இதெல்லாம் போதுமா?

தமிழ் க்னூ/லினக்ஸ் கணினி வருவதில் இன்னமும் பல தடைகளை என்னால் காணமுடிகிறது.

1. இந்தத் தமிழாக்கம் திட்டம் எப்பொழுதும் நடந்துகொண்டே இருக்க வேண்டிய ஒன்று. இது முடிவே அடையாத ஒன்று. எக்ஸ் தமிழ்ப்படுத்தப்பட வேண்டும் (வெறுமே கேடிஈ மட்டும் தமிழ்ப்படுத்தப்பட்டால் போதுமானதில்லை என்று நினைக்கிறேன். ஒருசில error செய்திகள் எக்ஸிலிருந்து நேரடியாக வரும். அவை ஆங்கிலத்திலேயே இருக்கும் என நினைக்கிறேன்). பல நிரலிகள் தமிழ்ப்படுத்தப்பட வேண்டிய பட்டியலில் உள்ளது. ஒவ்வொரு முறை ஒரு செயலியின் version மாறும்போதும் புதிய சொற்கள் தமிழ்ப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு முறை fedora, mandrake distribution புதிதாகும்போதும் பல சொற்றொடர்கள், உதவிக்கோப்புகள் ஆகியவை தமிழ்ப்படுத்தப்பட வேண்டும். அதனால் இதற்கெனத் தனிக்குழு ஒன்று எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

2. இப்பொழுதைக்கு ஆங்கில வெகுஜன உலகில் புழங்கிக் கொண்டிருக்கும் அத்தனை distributionஉம் தமிழ்ப்படுத்தப்பட வேண்டும். பிரபு ஆனந்த் இன்னமும் மாண்டிரேக் தொகுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. ழ குழு பெடோராவைத் தத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. டெபியனுக்கு ஆள் தேவை. (வசீகரன்?)

3. டேடாபேஸ் (mysql?) செயலி ஒன்றுக்கு முகம் தமிழில் அமைக்கப்பட வேண்டும். அதற்கு php, apache ஆகியவை மூலம் செய்யலாம். அவ்வாறு செய்யும்போது error message (php/apache/mysql) ஆகியவை தமிழாக்கப்பட வேண்டும். இதில் யாரும் ஈடுபட்டுள்ளனரா என்று தெரியவில்லை. அதைத் தவிர பல்லூடகச் செயலிகள் (கே-பவில் ஒருவர் எம்.பி3 கோப்புகளை வெட்டி, ஒட்டுவதற்கு செயலிகள் தமிழில் கிடைக்குமா என்று கேட்டார்), ஆடியோ, வீடியோ, டிவி டியூனர், தமிழில் ஒளிவகை எழுத்துணரி (OCR), அலுவல் செயலிகளில் பிழை திருத்துவான், போன்று எண்ணற்ற செயலிகள் தேவை. மென்பொருளாளர்களுக்கிடையில் லினக்ஸ் இயங்குதளத்தில் மென்பொருள் செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

4. இத்தனையும் செய்தாலும் தமிழ்க் கணினித் தொகுப்புக்கு ஒரு வலுவான பிராண்ட் தேவை. மாண்டிரேக், பெடோரா ஆகியவை போதாது. தமிழ் நாட்டில் விளம்பரம் செய்வது, மக்களிடையே மைக்ரோசாஃப்ட் கணினியை விட, குறைந்த விலையில் (கவனிக்க: இலவசம் இல்லை) தரமான இயங்கு தளம் இதோ என்று பட்டி தொட்டியெங்கும் பரப்புவது. ழ இதனைச் செய்ய விரும்பினால் அவர்களுக்கு நிறைய மூலதனம் தேவை. ரெட் ஹாட் இந்த மூலதனத்தை வழங்காது என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படியொரு மூலதனம் யாரிடமிருந்தாவது வராத வரையில் ழவின் வளர்ச்சி மிகக் குறைவாகவே இருக்கும். ழ போல் மற்ற பலர் இது போன்ற திட்டங்களில் ஈடுபடலாம். அவர்கள் வேறு சில க்னூ/லினக்ஸ் தொகுப்புகளைப் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு திட்டத்தினர் கொண்டு வந்த மாற்றங்கள் அனைத்தும் மற்ற அனைவருக்கும் செலவின்றியே கிடைக்கும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்! அப்படிப்பட்ட நிலையில் மூலதனம் கொடுக்க வருவோர் என்ன நினைப்பார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

5. இந்தக் கணினியை விற்பது என்பதே ஏதேனும் தொல்லை வந்தால் யாராவது சேவை செய்யப் பக்கத்தில் வருவார்களா என்பதைப் பொறுத்தது. ஆக, யார் தமிழகம் முழுவதும் தமிழ் க்னூ/லினக்ஸ் கணினிகளை install செய்வது முதல், பழுது பார்த்துக் கொடுப்பது வரை அனைத்தையும் எந்த நிறுவனம் செய்கிறதோ, அதைத்தான் மக்கள் நம்பி இந்த க்னூ/லினக்ஸ் தொகுப்புகளை வாங்குவர்.

மொத்தத்தில் தமிழகத்தில் தமிழ் க்னூ/லினக்ஸ் ஆர்வம் வளர நிறைய வாய்ப்பிருக்கிறது. முதலில் தமிழகம் முழுதும் விழிப்புணர்வுக் கூட்டங்களை ஏற்படுத்த வேண்டும். தமிழில் நாப்பிக்ஸ் (knoppix) போன்ற முழுத் தொகுப்பு (முழுதும் தமிழிலேயே அமைந்தது) வேண்டும். (இங்கு ஏதோ முயற்சிகள் நடந்துகொண்டு வருகின்றன என்று கேள்விப்பட்டேன். ழ குழுவும் இப்படி ஒரு குறுந்தகடை வெளிக்கொணர முயற்சி செய்தனராம், ஆனால் முடியவில்லை என்றும் இனிவரும் விழாக்களுக்கு முன்னதாகவே தயாரித்து வைத்திருக்கப் போவதாகவும் சொன்னார்கள்.)

ஒன்று | இரண்டு | மூன்று