Wednesday, February 04, 2004

கிரிக்கெட் பயிற்சி மையங்கள் - 1

பொதிகையில் கிரிக்கெட் கதை
என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளைப் பொதுவாக இப்படி வகுக்கலாம்:

1. எங்கள் ஊரில் பயிற்சி மையம் உண்டா? சென்னையில் எங்கெல்லாம் பயிற்சி தருகிறார்கள்? என் பையனை எங்கு சேர்ப்பது?

தமிழகத்தில் சென்னையை விட்டால் கோவை, திருச்சி, மதுரை போன்ற இடங்களிலேயே சரியான, தரமான பயிற்சி முகாம்கள் நடப்பதில்லை. இப்படி ஒரு/இரண்டு மாதப் பயிற்சி முகாம்களே ஒழுங்காக நடக்காத போது, வருடம் முழுதும் நடக்கும் பயிற்சி மையங்கள் இருக்காது.

சென்னையிலும் எனக்குத் தெரிந்தவரை 4-5 முழுநேரப் பயிற்சி மையங்கள் உள்ளன. வி.பி.சந்திரசேகர் நடத்தும் 'நெஸ்ட்', ராபின் சிங் நடத்தும் ஒரு மையம், சுரேஷ் குமார், அப்துல் ஜப்பார் போன்ற ரஞ்சிக்கோப்பை விளையாடியவர்கள் நடத்தும் மையங்கள் போன்றவையே. ஆனால் கோடை காலத்தில் (மார்ச் ஆரம்பித்து ஆகஸ்டு வரை) பல பயிற்சி முகாம்கள் எங்கு பார்த்தாலும் முளைக்கும்.

இந்த கிரிக்கெட் பயிற்சியாளர்கள் அனைவரும் எந்தத் தேர்வும் எழுதித் தேர்ந்த பயிற்சியாளர்கள் இல்லை. ஆனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கென்றே தேர்வு நடத்தி அதற்கான சான்றிதழும் வழங்குகிறார்கள். இதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டும் (ECB), கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் (CA), ஒவ்வொரு வருடமும் தங்கள் நாடுகளில் உள்ள கிரிக்கெட் பயிற்சியாளர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி, சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்துகின்றனர்.

இது எதுவும் இந்தியாவில் நடைபெறுவதில்லை.

2. எத்தனை வயதில் தீவிர கிரிக்கெட் பயிற்சி ஆரம்பிக்கப்பட வேண்டும்? எப்படி என் மகன் இந்திய அணியில் சேர முடியும்?

பனிரெண்டு வயதிலிருந்தே தீவிரமான பயிற்சியினை ஆரம்பிக்க வேண்டும். இந்தியாவிற்காக விளையாடக் கனவு கண்டால், முதலில் ஒரு ரஞ்சி அணியில் விளையாட முயற்சி செய்ய வேண்டும். அதற்கு முன்னர் பள்ளிக்கூட அணியில் ஆரம்பிக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு 12 வயதுப் பையன் சென்னையில் ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்...
  • பள்ளிக்கூட அணி
  • சென்னை u-13 அணி
  • தமிழ்நாடு u-13 அணி
  • தமிழ்நாடு u-16 அணி
  • தமிழ்நாடு u-19 அணி ... இந்தியா u-19 அணி
  • தமிழ்நாடு ரஞ்சி அணி [இங்கெல்லாம் இருக்கும் போதே முதல் டிவிஷன் கிரிக்கெட் போட்டிகளில்]
  • கல்லூரி கிரிக்கெட் அணிகள்
  • சவுத் ஸோன் (South Zone) அணி
  • இந்தியா-A அணி
  • இந்தியா அணி
இப்படி ஒரு பெரிய போட்டிக்களம் உள்ளது. u-13 விளையாடாவிட்டால் என்னால் இந்திய அணிக்கு வரமுடியாதா என்ற கேள்வி எழலாம். அப்படியெல்லாம் கிடையாது. ஆனால் கிரிக்கெட்டைத் தீவிரமாக எடுத்துக் கொண்டால் அப்பொழுதிருந்தே தொடங்க வேண்டும். இந்த அணிகளில் தேர்ந்தெடுக்கப்பட முயற்சி செய்ய வேண்டும். 12 வயதிலிருந்தே பயிற்சி மையம் எதிலாவது சேர வேண்டும். பெற்றோர்களில் ஆதரவு வேண்டும். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களின் ஆதரவு வேண்டும். பள்ளிக்கூடத்திலேயே கிரிக்கெட் ஒரு முக்கிய விளையாட்டாகக் கருதப்பட்டு, அதற்கான ஆடுகளம் முதலியவை இருத்தல் வேண்டும்.

தேவையான கருவிகளைப் பெற்றோர்கள் வாங்கித்தர வேண்டும். பேட்ஸ்மேன் என்றால் நல்ல மட்டைகள் மூன்று/நான்கு வாங்கித்தர வேண்டும். காஷ்மீர் வில்லோ (Kashmir Willow) ஒத்துவராது. அதெல்லாம் தெரு முனையில் தட்ட மட்டுமே லாயக்கு. இங்கிலீஷ் வில்லோவால் (English Willow) ஆன - இந்த மட்டை இங்கிலாந்தில் வளர்க்கப்படும் வில்லோ மரங்களிலிருந்து வெட்டி இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது - மட்டை ஒன்று குறைந்தது ரூ. 3000 ஆகும். அதிலேயே நல்ல மட்டையாக வாங்க வேண்டுமானால் (Grade என்று சொல்லுவோம்... Grade I, II, III, IV என்று இருக்கும். Grade I இங்கிலீஷ் வில்லோ மட்டைகள் ரூ. 6000-7000 ஆகிவிடும்.) இன்னமும் அதிகம் செலவாகும். அத்துடன் கால்காப்பு, தலைக்கவசம், மற்ற முக்கியமான இடத்தின் காப்பு, கையுறைகள் (இரண்டு, மூன்று), அனைத்தையும் அள்ளிக்கொண்டு போக ஒரு பை என்று ரூ. 15,000 வரை இழுத்துவிடும். பல நடுத்தர வர்க்கத்தினரால் இதனைச் சமாளிக்க முடியாது. குறைந்த செலவில் ரூ. 3000க்குள் முழு 'கிட்' வாங்கிக் கொடுப்பர். அதில் காஷ்மீர் வில்லோ பேட் மட்டுமே கிடைக்கும்.

இதுமட்டும் போதாது! இயல்பாகவே விளையாடும் திறமை இருக்க வேண்டும். உன்னிப்பாக கவனிக்கும் தன்மை வேண்டும். சாதிப்பேன் என்ற மன உறுதி வேண்டும். உடல் பயிற்சி வேண்டும். நேற்று என்னிடம் பேசிய ஒரு அம்மா, தன் மகன் நன்றாக விளையாடுகிறான், ஆனால் சாப்பாடு சரியில்லை, உடல் பயிற்சி செய்வதில்லை என்றார். மாத்தியூ ஹேய்டனைப் பாருங்கள் - எருமை மாடு போல வளர்ந்துள்ளார்!:-) வலுவான தசைகள் இருந்தால்தான் பந்துவீச்சிற்கும் உதவும், பேட்டிங்குக்கும் உதவும்.

திறமை, பயிற்சி, ஆதரவான பெற்றோர் இருந்தும், இன்னமும் தேவை அதிர்ஷ்டம், சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பது, ஒரு வாய்ப்பு கிடத்ததும் அதை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்வது.

இன்னமும் தொடரும்.

No comments:

Post a Comment