Tuesday, November 08, 2011

புரட்சி, கணிதம், புரட்சி: எவரிஸ்த் கலுவா (1811-1832)

 (அம்ருதா இதழில் இந்த மாதம் வெளியானது)

கணித மேதைகளோ, விஞ்ஞானிகளோ பொதுவாக, தமது ஆராய்ச்சிகளுக்குள்ளே மூழ்கியிருப்பார்கள்; சுற்றி நடக்கும் விஷயங்களில் அவ்வளவாக ஈடுபடமாட்டார்கள் என்பது பொதுக் கருத்து. சில விதிவிலக்குகள் உண்டு. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒரு கட்டத்துக்குப் பிறகு அரசியலில் மிகத் தீவிரமாக மூழ்கிவிட்டார். அதன் விளைவாக உண்மையில் அவருடைய ஆராய்ச்சி பெரிதும் தடைப்பட்டது.

ஆனால், பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் இப்படி பொது விவகாரங்களில் தலையிடுவதில்லை. அவர்களுக்கும் வலுவான கருத்துகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை வெளியே சொல்ல அவர்கள் முற்படுவதில்லை.
எவரிஸ்த் கலுவாவின் வாழ்க்கை அப்படியாக இல்லை. 20 வயது என்பது சாவதற்கான வயதா என்ன? அதுவும் நோய் நொடி வந்து சாகவில்லை இந்த பிரெஞ்சு இளைஞர். ஏழைமையில் சிக்கி, உணவுக்கு வழியில்லாமல் சாகவும் இல்லை. துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கதைக்குப் பின்னர் வருவோம்.

முதலில் எவரிஸ்ட் கலுவா வாழ்ந்த காலத்தையும் அப்போதைய பிரான்ஸையும் பற்றிப் பார்ப்போம். உலகில் முதன்முறையாக, முடியாட்சிக்கு மாற்றாகக் குடியாட்சியைக் கொண்டுவருவதுபற்றித் தீவிரமான விவாதம் எழுந்து அது புரட்சியில் முடிந்தது என்றால் அது பிரான்ஸில்தான். அதற்கு முன்பு வரை எந்த நாட்டிலுமே இந்தமாதிரியான ஒரு தீவிர புரட்சிகரக் கருத்து முன்வைக்கப்படவில்லை. இங்கிலாந்தில் மன்னருக்கும் மக்களுக்கும் இடையில் தொடர்ந்து நடைபெற்றுவந்த போராட்டமும் சமரசமும் காரணமாக அதிகாரம் ஓரளவுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும்கூட இன்று 21-ம் நூற்றாண்டிலும் இங்கிலாந்தில் (பிரிட்டனில்) அரச வம்சம் தொடர்ந்துவருகிறது. பிரெஞ்சுப் புரட்சியோ, மாறாக, அமெரிக்காவுக்குக் குடியாட்சி முறையை அளித்ததோடு உலகெங்கும் குடியாட்சி முறை வரக் காரணமாக இருந்தது.

1792-ல் பிரான்ஸ் ஒரு குடியாட்சி நாடு என்று பிரகடனப்படுத்தப்பட்டு, பதினான்காம் லூயி மன்னன் கில்லட்டினில் வைத்து கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டான். ஆனால் அதற்கடுத்த பல பத்தாண்டுகளில் உண்மையான குடியாட்சி அந்நாட்டு மக்களுக்குக் கிட்டிவிடவில்லை. உடனடியாக அவர்களுக்குக் கிடைத்தது ராபஸ்பியர் என்ற கொடுங்கோலனின் சர்வாதிகார ஆட்சிதான். சில பல குழப்பங்களுக்குப் பிறகு 1799-ல் நெப்போலியன் கைக்கு ஆட்சி வந்தது. ஆனால் மக்களை ஏமாற்றிய நெப்போலியன் தன்னையே ஒரு மன்னனாக முடிசூட்டிக்கொண்டு பிரான்ஸைப் பல்வேறு போர்களுக்குக் கொண்டுசென்று இறுதியில் 1815-ல் வாட்டர்லூ போரில் தோல்வியடைந்து சிறை வைக்கப்பட்டான். பிரான்ஸ் மீண்டும் பழைய முடியாட்சிக்குத் திரும்பியது. பதினெட்டாம் லூயி என்பவன் அரசனான்.

இந்த வரலாற்றுக் கட்டத்தின்போதுதான் எவரிஸ்த் கலுவா பிறக்கிறார். எவரிஸ்த்தின் தந்தை  நிகோலா-கேப்ரியல் குடியாட்சி முறையை ஆதரிப்பவர். லிபரல் கட்சி என்ற கட்சியின் உள்ளூர்த் தலைவர். குழப்பமான அரசியல் சூழ்நிலையில், நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டு எல்பா தீவுக்குத் துரத்தப்பட்டு பதினெட்டாம் லூயி மன்னனாக அமர்த்தப்பட்டபோது நிகோலா-கேப்ரியல் தன் கிராமத்தில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கலுவா, வீட்டிலேயே தன் தாயிடமே கல்வி பயின்று வளர்ந்தார். நெப்போலியன் போர் வெறி பிடித்தவன்தான். ஆனால் போரை ஜெயிக்க அறிவியல் முக்கியம் என்பதை உணர்ந்தவன். அவன் காலத்தில் அறிவியலுக்கும் கணிதத்துக்கும் நிறையச் செலவழிக்கப்பட்டது. லெஜாந்த்ர, லக்ராஞ்ச், கஷி, ஃபூரியே, பாஸ்ஸான் போன்ற மாபெரும் கணித மேதைகள் பிரெஞ்சு அறிவியலை ஆண்ட காலகட்டம் அது.

நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல, ஒவ்வொரு கணித மேதைக்கும் சிறு வயதில் அந்தத் துறையில் செல்வதற்கான உத்வேகத்தைக் கொடுப்பது ஒரு புத்தகமே. ஜியாமெட்ரி பற்றி லெஜாந்த்ர எழுதிய ஒரு புத்தகம் 14 வயதுச் சிறுவன் கலுவா கையில் கிடைத்தது. கணிதப் புத்தகங்களை எளிதாகப் படித்துமுடித்தபின் அடுத்து சுடச்சுட கணிதத் துறையில் வெளியாகும் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிக்க ஆரம்பித்தான் கலுவா.

18, 19-ம் நூற்றாண்டிலேயே இது சாத்தியமாகியிருக்கிறது. இன்று 21-ம் நூற்றாண்டில் நம் இந்தியக் குழந்தைகள் இப்படி மேதைகளின் புத்தகங்களையெல்லாம் படிக்கிறார்களா, புதிதாக வெளியாகும் கணித ஆராய்ச்சிக் கட்டுரைகளையெல்லாம் படிக்கிறார்களா என்று கவனியுங்கள். பள்ளிக்கூட ஆசிரியர்கள் இதற்கெல்லாம் முயற்சி எடுத்தால்தான் இது சாத்தியமாகும்.

கலுவாவை இரண்டு விஷயங்கள் ஈர்க்க ஆரம்பித்தன. ஒன்று தந்தையின் அரசியல். மற்றொன்று கணிதம்.

பதினெட்டாம் லூயிக்குப் பிறகு அவனது சகோதரன் பத்தாம் சார்லஸ் அந்தக் கட்டத்தில் மன்னனாக இருந்தான். ஆனால் மன்னராட்சியை மீண்டும் ஒழிப்பது என்ற ரிபப்ளிகன் (குடியாட்சி) சித்தாந்தம் மாணவர்களை உந்தியது. கலுவா கல்லூரிக்குச் செல்ல முடிவெடுத்தபோது இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று இகோல் பாலிதெக்னீக் என்ற உயர்ந்த கல்விக்கூடம். மற்றொன்று அதைவிடக் கீழே இருந்த இகோல் நார்மால் என்ற கல்லூரி. கலுவா போன்ற புத்திசாலி மாணவனுக்கு ஏற்ற இடம் இகோல் பாலிதெக்னீக் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், கலுவா இளரத்தம். நேர்முகத் தேர்வில் கொஞ்சம் கரடுமுரடாக நடந்துகொண்டான். கணக்குகளைப் படிப்படியாகப் போடாமல் நேராக விடையை எழுதினால் சாதாரண ஆசிரியர் ஒருவருக்குச் சந்தேகம் வரத்தானே செய்யும்? இகோல் பாலிதெக்னீக்கில் இடம் கிடைக்காமல் போகவே இகோல் நார்மாலில் சேர்ந்தான் கலுவா.

இது ஒருவிதத்தில் சோகமே. ராமானுஜனின் கணிதத் திறமையை கும்பகோணம் கலைக்கல்லூரியாலோ பச்சையப்பன் கல்லூரியாலோ புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்கு கேம்பிரிட்ஜ் செல்லவேண்டியிருந்தது. அதேபோலத்தான் அந்தக் காலத்தின் மிகச் சிறந்த கணித மேதைகள் இகோல் பாலிதெக்னீக்கில்தான் வேலை பார்த்தனர். அங்கே சென்றிருந்தால் கலுவா எங்கேயோ போயிருக்கலாம். ஆனால் விதி விடவில்லை.

எனவே அரசியல் பிடித்துக்கொண்டது.

இதற்குச் சற்று முன்னர்தான், கலுவாவின் தந்தை, சில அரசியல் பிரச்னைகளால் தற்கொலை செய்துகொண்டார். இகோல் நார்மாலில் சேர்ந்த கலுவா, ரிபப்ளிகன் எண்ணம் கொண்ட மாணவர்களுடன் சேர்ந்து போராட்டங்களில் இறங்கி புரட்சி செய்யத் தொடங்கினான்.

அப்போது மன்னராக இருந்த பத்தாம் சார்லஸ் நாடு முழுவதிலும் நடத்திய தேர்தலில், இறந்த கலுவாவின் தந்தை உறுப்பினராக இருந்த லிபரல் கட்சி வென்று பெரும்பான்மை இடங்களைப் பெற்றது. அவர்களின் நோக்கமே மன்னராட்சியை ஒழிப்பது. எனவே பத்தாம் சார்லஸ் மன்னர், லிபரல் கட்சியை அடக்கத் தீர்மானித்து, பல சட்டங்களை அறிவித்தார். உடனே நாடு புரட்சியில் மூழ்கியது. அப்போதும் புரட்சிக்கு முன் நின்றவர்கள் மாணவர்கள்தாம். அதிலும் கலுவா பற்றிக் கேட்கவா வேண்டும்?

இகோல் பால்தெக்னீக் மாணவர்கள் தெருவில் இறங்கினர். இகோல் நார்மால் மாணவர்களும் தெருவில் இறங்கி வேலை நிறுத்தம் செய்ய முயன்றனர். ஆனால், பிரச்னை வரக்கூடாது என்று தீர்மானித்த இகோல் நார்மால் இயக்குனர், மாணவர்களை கல்லூரியில் வைத்துப் பூட்டிவிட்டார். கலுவா இதனை எதிர்த்து உள்ளூர்ப் பத்திரிகையில் கடுமையான ஒரு கடிதத்தை வெளியிட்டான். உடனே இயக்குனர் கலுவாவைக் கூப்பிட்டு அந்த ஆண்டோடு கல்லூரியை விட்டு வெளியே போ என்று கல்த்தா கொடுத்துவிட்டார்.

‘போடா நீயும் உன் கல்லூரியும்!’ என்ற கலுவா, அந்த ஆண்டென்ன, அந்த நாளுடன் போகிறேன் என்று வெளியே கிளம்பிவிட்டார். கிளம்பி, ரிபப்ளிகன் எண்ணம் கொண்ட இளைஞர்கள் உருவாக்கிய பீரங்கிப் படையில் சேர்ந்துவிட்டார். ரிபப்ளிகன் படைகளும் மக்களும் நிகழ்த்திய ஜூலை புரட்சியில் பத்தாம் சார்லஸ் தோற்கடிக்கப்பட்டு துரத்தப்பட்டார். பதினெட்டாம் லூயி மன்னரின் ஒன்றுவிட்ட சகோதரனான லூயி பிலிப் என்பவர் மன்னரானார்.

இது ஒரு குழப்பமான காலகட்டம். மக்கள் மன்னர்களை வெறுத்தனர் என்றாலும் மாற்று ஏற்பாடுகள் ஏதும் இல்லை. எனவே யாரோ ஒருவர் மன்னராகிக்கொண்டே இருந்தார். ஆனால் புரட்சிகர மாணவர்கள் தங்கள் புரட்சிகரக் கருத்துகளை முன்வைத்தபடியே இருந்தனர். புது மன்னர் லூயி பிலிப்புக்கு புரட்சிகர மாணவர்களால் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்த அமைச்சர்கள், கலுவா பங்கேற்ற பீரங்கிப் படையைக் கலைத்தனர்.

கலுவாவின் படையில் இருந்த பல அதிகாரிகள், மன்னராட்சியைக் குலைக்கச் சதி செய்தனர் என்று சொல்லி கைது செய்யப்பட்டனர். வழக்கின்போது அவர்கள்மீது குற்றம் ஏதும் இல்லை என்று அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அப்படி விடுவிக்கப்பட்டதைக் கொண்டாட ஒரு விருந்து நடைபெற்றது. அதில் கலுவா நடந்துகொண்ட செய்கையைக் கண்ணுற்ற உளவாளிகள், இந்தப் பையன் மன்னரைக் கொல்லவேண்டும் என்று சொல்கிறான் என்று முடிவுகட்ட, அடுத்த நாள் கலுவா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டான். அந்த வழக்கில் கலுவா பின்னர் விடுவிக்கப்பட்டான்.

பின்னர் பாஸ்டில் தினக் கொண்டாட்டத்தின்போது தனது பீரங்கிப்படைச் சீருடையை அணிந்துகொண்டு துப்பாக்கிகளுடன் கலுவா கலந்துகொண்டான். தடைசெய்யப்பட்ட படையின் சீருடையை அணிந்தது, ஆயுதங்கள் வைத்திருந்தது ஆகியவற்றுக்காக கலுவா மீண்டும் கைது செய்யப்பட்டு, சில மாதங்களைச் சிறையில் கழித்தபின் விடுதலை செய்யப்பட்டான்.

இதெல்லாம் புரட்சி, அரசியல், போர், சிறை பற்றியது. ஆனால் நாம் கணித மேதைகளைப் பற்றியல்லவா பேசுகிறோம்? இந்தப் பையன் கணிதத்தில் என்ன சாதித்தான் என்பது பற்றிப் பார்க்கவேயில்லையே? ஆச்சரியம் என்னவென்றால் இவன் புரட்சி செய்துகொண்டிருக்கும்போது கணிதம் செய்ய எப்படி நேரம் கிடைத்தது என்பதுதான்.

குவாட்ராடிக் ஈக்வேஷன் - இருபடிச் சமன்பாடு என்பது பள்ளிக்கூடக் கணிதத்தில் வரும் ஒன்று.


என்ற சமன்பாட்டைத்தான் இருபடிச் சமன்பாடு என்போம். இந்தச் சமன்பாட்டில் x-ன் விடை என்ன என்பதை a, b, c ஆகியவற்றைக்கொண்டு எழுதலாம்.

கொஞ்சம் கணிதம் தெரிந்தவர்கள் இதன் விடையை


என்று எழுதிவிடுவார்கள். சரி, முப்படிச் சமன்பாட்டுக்கான (அதாவது a x3 + b x2 + c x + d = 0) விடைகளையும் இப்படியே எழுதிவிட முடியுமா? நான்குபடிச் சமன்பாட்டுக்கு? ஐந்துபடிச் சமன்பாட்டுக்கு?

கலுவா ஒரு டீனேஜ் பையனாக இருக்கும்போதே இதனை அழகாகக் கையாண்டார். அவர் கல்லூரியில் சேர்வதற்கு முன்னதாகவே இது தொடர்பாக அவர் இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி அறிவியல் அகாடெமிக்கு அனுப்பினார். கட்டுரைகளை ஆராய்ந்த கஷி, இரண்டு கட்டுரைகளையும் ஒன்றாக்கி, சில மாற்றங்களைச் செய்தால் பிரசுரிக்கலாம் என்று சொல்லியிருந்தார். பின்னர் கலுவா, கஷி சொன்னபடி மாற்றங்கள் செய்து அனுப்பிய கட்டுரை, ஃபூரியே கைக்குக் கிடைத்தது. ஆனால் அடுத்த சில நாள்களிலேயே ஃபூரியே இறந்துவிட, இந்தக் கட்டுரை தொலைந்துபோனது.

கலுவா பின்னர் அதிகாரபூர்வ வழிகளை நம்பவே இல்லை. புரட்சி நடந்தபோதும், பின்னர் சிறையில் இருந்தபோதும் அவர் கணித ஆராய்ச்சியில் தன் நேரத்தைச் செலவிட்டார். நான்குபடிகளைத் தாண்டிய எந்த பலபடிச் சமன்பாட்டுக்கும், அதன் கெழுக்களைக் கொண்டு விடைகளை எழுதிவிட முடியாது என்ற மிக முக்கியமான கருத்தை அவரது ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டின.

20 வயதே முடிந்திருந்த கலுவா பட்டம் ஏதும் பெறவில்லை. எந்த வேலையும் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால் ஏதோ காதல் விவகாரத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறார்போலத் தெரிகிறது. அத்துடன் அவரது அரசியல் சார்பும் அவருக்குச் சாதகமாக இல்லை. அந்தக் காலத்தில் ‘ஜெண்டில்மேன்’ என்போர் தமது கௌரவத்துக்கு இழுக்கு வந்துவிட்டால் ‘ஒண்டிக்கு ஒண்டி’ என்ற ட்யூயல் சண்டைக்கு எதிராளியை அழைப்பார்கள். ஆளுக்கு ஒரு துப்பாக்கி (அதற்கு முந்தைய காலத்தில் வாள்) எடுத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட தூரம் சென்று ஒருவரை ஒருவர் குறிபார்த்துச் சுடவேண்டும். செத்தவர் செத்தார், பிழைத்தவர் பிழைத்தார்!

இந்தக் காதல் விவகாரம் காரணமாக, அந்தப் பெண்ணின் அப்போதைய காதலனை எவரிஸ்த் கலுவா ட்யூயலுக்கு அழைத்தார். குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய நாள், கலுவாவுக்குத் தான் பிழைக்கப்போவதில்லை என்று தெரிந்திருக்கவேண்டும். அவசர அவசரமாக, தனது கணிதக் கண்டுபிடிப்புகளையெல்லாம் தாள்களில் எழுதத் தொடங்கினார். அந்தக் குறிப்புகளின் இடையே மார்ஜினில், ‘நேரம் போதவில்லையே, நேரம் போதவில்லையே’ என்று அவர் எழுதியதும் இருக்கிறது. எழுதி முடித்து, அவற்றைத் தன் நண்பருக்கு அனுப்பிவிட்டு, காலையில் ட்யூயலுக்குப் போனார். எதிராளி சுட்ட குண்டு கலுவாவின் வயிற்றில் பாய்ந்தது. அடுத்த நாள் அவர் உயிரை விட்டார். அப்போது அவருக்கு 20 வயதே நிரம்பியிருந்தது. கணித உலகம் ஒரு மாபெரும் மேதையை இழந்திருந்தது.

Monday, November 07, 2011

அணு விஞ்ஞானி அப்துல் கலாம்!

அப்துல் கலாம் கூடங்குளம் சென்று வந்துள்ளார். அங்குள்ள அணு மின் உலை அபாயமற்றது; வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று சொல்லியுள்ளார். இது கிட்டத்தட்ட எதிர்பார்த்ததுதான். அப்துல் கலாம் அணு மின்சாரத்தின்மீது நம்பிக்கை கொண்டவர். (நானும்தான்.) எனவே அவர் மாற்றாக எதையும் சொல்லியிருக்கப்போவதில்லை.

ஆனால் பிரச்னை, அப்துல் கலாம் ஒரு அணு விஞ்ஞானியா என்பதைப் பற்றியது. அவர் அணு விஞ்ஞானி அல்லர். அப்படி அவர் தன்னை ஒருபோதும் சொல்லிக்கொண்டதில்லை. அவர் ஒரு ஏரோனாட்டிகல் பொறியாளர். ஒரு கட்டத்தில் இந்தியாவின் அணு ஆயுதச் சோதனைத் திட்டத்துக்குத் தலைமை தாங்கியுள்ளார். அது மட்டுமே அவரை அணு விஞ்ஞானி ஆக்கிவிடாது. எனவே ஊடகங்கள் அவரை அணு விஞ்ஞானி என்று அழைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

அப்படியானால், அப்துல் கலாமால் அணு சக்தி பற்றிய விஷயங்களையும் அது தொடர்பான அபாயங்களையும் புரிந்துகொள்ள முடியாது என்றா சொல்வது? இல்லை! நல்ல அறிவியல் புரிதல் கொண்ட எவராலுமே அணு சக்தி, அதன் ஆற்றல், அதன் அபாயங்கள், அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் போன்ற பலவற்றைப் புரிந்துகொள்ள முடியும். மேலும், அணு ஆயுதச் சோதனைத் திட்டத்துக்குத் தலைமை தாங்கிய ஒருவருக்குக் கட்டாயம் இதுபற்றி நல்ல புரிதல் இருந்தாகவேண்டும்.

அந்த மட்டத்தில், அவரை அணு விஞ்ஞானி என்று அழைக்காமல் போகலாமே தவிர, கூடங்குளத்தில் பிறர் சொல்வதுபோல ஆபத்து என்பதெல்லாம் இல்லை என்று அவர் சான்றிதழ் கொடுத்தால் கட்டாயம் ஏற்றுக்கொள்ளலாம் என்பது என் கருத்து.

கலாம் அல்லர் அரசியல்வாதி. அவர் குஜராத் கலவரம் பற்றி என்ன சொன்னார், இலங்கைப் படுகொலை பற்றி என்ன சொன்னார் என்றெல்லாம் கேட்பவர்கள்தான் அரசியல்வாதிகள்! அறிவியல், தொழில்நுட்பம் மூலம் உலகை நல்லபடியாக மாற்றமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கும் கலாம், அது தொடர்பான விவாதங்களில்தான் பங்கெடுக்க விரும்புகிறார் என்பது வெளிப்படை. பிற விஷயங்களில் கருத்து சொல்ல அவர் தயங்குகிறார். எனவே, அதில் அவர் கருத்து என்ன, இதில் அவர் கருத்து என்ன என்று தோண்டிப் பார்க்காமல், அணு சக்தி தொடர்பாக அவர் நியாயமான கருத்தை முன்வைக்கக்கூடியவரா என்பதை மட்டும்தான் பார்க்கவேண்டும்.

அவரை நம்பாதவர்கள், அவரை அரசவைக் கோமாளி என்று சாடுபவர்கள் சாடிவிட்டுப் போங்கள்.

Sunday, November 06, 2011

ஏ.கே ராமானுஜனின் ராமாயணக் கட்டுரை - 1

(யாரிடமும் இதனை மொழிபெயர்க்க அனுமதி வாங்கவில்லை. துண்டு துண்டாக இந்தக் கட்டுரையைத் தமிழில் மொழிபெயர்த்துப் போடப்போகிறேன். உங்கள் வாசிப்பு அனுபவத்துக்காக...)

முன்னூறு ராமாயணங்கள்: மொழிபெயர்ப்பு தொடர்பாக ஐந்து எடுத்துக்காட்டுகளும் மூன்று சிந்தனைகளும்
ஏ.கே.ராமானுஜன்

எத்தனை ராமாயணங்கள்? முன்னூறு? மூவாயிரம்? சில ராமாயணங்களின் இறுதியில், ‘எத்தனை ராமாயணங்கள்தான் உள்ளன?’ என்ற கேள்வி ஒன்று கேட்கப்படும். சில கதைகளில் அதற்கான பதிலும் இருக்கும். இதோ ஒன்று.

ஒரு நாள் ராமர் அரியணையில் அமர்ந்திருக்கும்போது அவருடைய மோதிரம் கீழே விழுந்துவிட்டது. அது பூமியைத் தொட்டதும், தரையைத் துளைத்துக்கொண்டு உள்ளே சென்று மறைந்துவிட்டது. போயே போய்விட்டது. அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான அனுமன், அவருடைய காலடியில்தான் இருந்தான். ‘என் மோதிரம் தொலைந்துவிட்டது. கண்டுபிடித்து எடுத்துவா’ என்று ராமர் அனுமனிடம் சொன்னார்.

அனுமனால் எத்தனை சிறிய துளைக்குள்ளும் புகுந்து செல்ல முடியும். மிக மிகச் சிறியதாகவோ, மிக மிகப் பெரியதாகவோ தன் உடலை ஆக்கிக்கொள்ள முடியும். எனவே, தன் உடலைக் குறுக்கிக்கொண்டு அந்தத் துளைக்குள் சென்றான்.

அவன் கீழே கீழே போய் பாதாளத்தில் விழுந்தான். அங்கே பல பெண்கள் இருந்தனர். ‘அதோ பார், சின்னக் குரங்கு! மேலேயிருந்து விழுந்துள்ளது’ என்று சொல்லி, அவனைப் பிடித்து ஒரு தட்டில் வைத்தனர். பாதாளத்தில் வசிக்கும் பூதங்களின் அரசனுக்கு மிருகங்களைத் தின்பதில் பிரியம் அதிகம். எனவே அனுமன், அவனுக்கான உணவாக, காய்கறிகளுடன் சேர்த்து அனுப்பிவைக்கப்பட்டான்.

பாதாளத்தில் இதெல்லாம் நடந்துகொண்டிருந்தபோது, ராமர் பூமியில் தன் அரியணையில் அமர்ந்திருந்தார். அப்போது வசிஷ்டரும் பிரம்மனும் அவரைக் காண வந்தனர். ‘உன்னுடன் தனிமையில் பேசவேண்டும். அதனை யாரும் கேட்கக்கூடாது, நம் பேச்சுக்கு இடையூறும் வரக்கூடாது. ஒப்புக்கொள்வாயா?’ என்றனர்.

‘சரி, பேசுவோம்’ என்றார் ராமர்.

‘நாம் பேசிக்கொண்டிருக்கும்போது யாராவது உள்ளே வந்தால் அவர்களுடைய தலை துண்டிக்கப்படவேண்டும் என்று ஓர் உத்தரவைப் போடு’ என்றனர்.

‘சரி, அப்படியே ஆகட்டும்’ என்றார் ராமர்.

வாயிலைக் காக்க யார் நம்பகமான ஆசாமி? மோதிரத்தை எடுக்க அனுமன் கீழே போயிருக்கிறான். லட்சுமணனைவிட வேறு யாரையும் ராமன் அதிகமாக நம்புவதில்லை. எனவே லட்சுமணனை அழைத்து வாயிலருகே நிற்கச் சொன்னார். ‘யாரையும் உள்ளே அனுமதிக்காதே’ என்று ஆணையிட்டார்.

லட்சுமணன் வாயிலில் நிற்கும்போது விஸ்வாமித்திரர் அங்கே வந்து, ‘ராமனை உடனே பார்க்கவேண்டும். மிக மிக அவசரம். ராமன் எங்கே?’ என்று கேட்டார்.

‘உள்ளே போகாதீர்கள். அவர் சிலருடன் மிக முக்கியமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்’ என்றான் லட்சுமணன்.

‘என்னிடமிருந்து ராமன் அப்படி எதை மறைக்கப் போகிறான்? நான் உடனே உள்ளே போகவேண்டும்’ என்றார் விஸ்வாமித்திரர்.

‘அப்படியானால் நான் உள்ளே போய் அவருடைய அனுமதியைப் பெற்று வருகிறேன்’ என்றான் லட்சுமணன்.

‘சரி, போய்க் கேட்டுவிட்டு வா!’

‘ராமன் வெளியே வரும்வரை நானே உள்ளே போக முடியாது. கொஞ்சம் பொறுங்கள்.’

‘உடனே உள்ளே போய் நான் வந்திருப்பதை அறிவிக்காவிட்டால், என் சாபத்தினால் அயோத்தி ராஜ்ஜியத்தையே எரித்துச் சாம்பலாக்கிவிடுவேன்’ என்றார் விஸ்வாமித்திரர்.

லட்சுமணன் யோசித்தான். ‘நான் உள்ளே போனால் நான் சாகவேண்டும். ஆனால் நான் போகாவிட்டால், இந்த முன்கோபக்காரர் ராஜ்ஜியத்தையே எரித்துவிடுவார். அனைத்து மக்களும் அனைத்து உயிரினங்களும் செத்துப்போவார்கள். எனவே நான் ஒருவன் மட்டும் உயிர் துறப்பது சிறந்தது.’

எனவே, உள்ளே சென்றான்.

‘என்ன விஷயம்?’ என்றார் ராமர்.

‘விஸ்வாமித்திரர் வந்திருக்கிறார்.’

‘உள்ளே அனுப்பிவை.’

விஸ்வாமித்திரர் உள்ளே சென்றார். அதற்குள் பிரத்யேகப் பேச்சுகள் முடிவடைந்திருந்தன. ‘இந்தப் பூவுலகில் நீ வந்த வேலை முடிந்துவிட்டது. ராமாவதாரத்தை விடவேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த உடலை விடுத்து, வானுலகம் வந்து கடவுள்களுடன் சேர வா’ என்று ராமரிடம் சொல்வதற்காகத்தான் பிரமனும் வசிஷ்டரும் வந்திருந்தனர்.

இதற்குள் லட்சுமணன் ராமரிடம், ‘அண்ணா, நீ என் தலையை வெட்டவேண்டும்’ என்றான்.

‘ஏன் தம்பி? எங்கள் பேச்சுதான் முடிந்துவிட்டதே? மேலே சொல்வதற்குத்தான் எதுவும் இல்லையே? எனவே உன் தலையை ஏன் வெட்டவேண்டும்?’ என்றார் ராமர்.

‘அப்படி நீ செய்யக்கூடாது. நான் உன் தம்பி என்பதால் நீ என்னை விட்டுவிட்டதாக ஆகிவிடும். அது உன் பெயருக்கு இழுக்கல்லவா? உன் மனைவி என்பதற்காக சீதையை விட்டுக்கொடுத்தாயா? அவளைக் காட்டுக்கு அனுப்பினாயே. என்னையும் நீ தண்டிக்கவேண்டும். நான் கிளம்புகிறேன்’ என்றான் லட்சுமணன்.

லட்சுமணன், விஷ்ணுவின் படுக்கையான ஆதிசேஷனின் அவதாரம். அவனுடைய நேரமும் முடிந்திருந்தது. அவன் நேராக சரயு நதிக்குச் சென்று ஆற்றில் இறங்கி மறைந்தான்.

லட்சுமணன் தன் உடலை விடுத்ததும், ராமர் உடனேயே வீடணன், சுக்கிரீவன், இன்னபிற தொண்டர்கள் அனைவரையும் அழைத்தார். தன் இரட்டை மகன்களான லவனுக்கும் குசனுக்கும் பட்டாபிஷேகம் செய்துவைத்தார். பின்னர் அவரும் சரயு நதியில் இறங்கினார்.

இது நடந்துகொண்டிருக்கும்போது அனுமன் பாதாளத்திலேயே இருந்தான். பூத அரசனிடம் அவனை எடுத்துச் சென்றபோது, அவன் தொடர்ந்து ராம, ராம, ராம என்று ராம நாமத்தை ஜபித்துக்கொண்டிருந்தான்.

‘நீ யார்?’ என்றான் பூத அரசன்.

‘அனுமன்.’

‘அனுமனா? நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்?’

‘ராமரின் மோதிரம் துளைக்குள் விழுந்துவிட்டது. அதை எடுத்துப்போக வந்திருக்கிறேன்.’

பூத அரசன் சுற்றும் முற்றும் பார்த்து ஒரு தட்டைக் காண்பித்தான். அதில் பல ஆயிரம் மோதிரங்கள் இருந்தன. அவை அனைத்தும் ராமரின் மோதிரங்கள். அரசன் அந்தத் தட்டை அனுமனிடம் கொண்டுவந்து கொடுத்து, ‘உங்களுக்கு வேண்டிய ராமரின் மோதிரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றான்.

ஆனால் அந்த மோதிரங்கள் அனைத்தும் ஒரேமாதிரியாக இருந்தன. அனுமன் குழம்பிப்போனான். ‘இவற்றில் எது அந்த மோதிரம் என்று எனக்குத் தெரியவில்லையே’ என்றான்.

‘இங்கு எத்தனை மோதிரங்கள் உள்ளனவோ, அத்தனை ராமர்கள் இருந்துள்ளனர். நீங்கள் பூமிக்குத் திரும்பும்போது ராமர் அங்கே இருக்க மாட்டார். ராமரின் இந்த அவதாரம் நிறைவு பெற்றுவிட்டது. ராமாவதாரம் நிறைவு பெறும்போது அவருடைய மோதிரம் கீழே விழுந்துவிடும். நான் அவற்றைச் சேகரித்து வைத்துக்கொள்வேன். நீங்கள் இப்போது போகலாம்’ என்றான் பூத அரசன்.

எனவே அனுமன் விடைபெற்றுச் சென்றான்.

ஒவ்வொரு ராமருக்கும் ஒரு ராமாயணம் உள்ளது என்பதைக் குறிப்பிடவே இந்தக் கதை பொதுவாகச் சொல்லப்படுகிறது.(1) கடந்த இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளில், எத்தனை ராமாயணக் கதைகள் புழக்கத்தில் உள்ளன; தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் அவற்றின் செல்வாக்கின் வீச்சு எவ்வளவு என்பது ஆச்சரியம் தரக்கூடியது. ராம காதை எவ்வளவு மொழிகளில் உள்ளது என்பதே வியக்க வைப்பது: அசாமி, பாலினீஸ், வங்காளி, கம்போடியன், சீன, குஜராத்தி, ஜாவனீஸ், கன்னடம், காஷ்மிரி, கோடானீஸ், லாவோஷியன், மலாய், மராத்தி, ஒரியா, பிராக்ருதம், சம்ஸ்கிருதம், சந்தாலி, சிங்களம், தமிழ், தெலுங்கு, தாய், திபெத்தியன் ஆகியவற்றுடன் பல மேற்கத்திய மொழிகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்! கடந்த பல நூற்றாண்டுகளில் இந்த மொழிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட விதத்தில் ராம காதை சொல்லப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் மட்டும் 25 அல்லது அதற்கும் மேற்பட்ட கதைகள், பல்வேறு வகைகளில் (காவியம், புராணம்...) சொல்லப்பட்டிருக்கிறது. இவற்றுடன், செவ்வியல் வடிவிலும் நாட்டார் வடிவிலுமாகச் சேர்த்து, நாடகம், நாட்டியம், பிற நிகழ்கலைகள் என்று பார்த்தால் ராமாயணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகிவிடும். இவற்றுடன் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள், முகமூடி நாடகங்கள், பொம்மலாட்டம், நிழலாட்டம் என்று தெற்காசிய, தென்கிழக்காசிய கலாசாரங்களில் இருப்பனவற்றையும் சேர்க்கவேண்டும். (2) ராமாயண ஆராய்ச்சியாளரான கேமி பல்க், 300 விதமான ராமாயணங்களைக் குறிப்பிடுகிறார். (3) முன்னதாக, 14-ம் நூற்றாண்டில்கூட, கன்னடக் கவிஞரான குமாரவியாசன், பூமியைத் தாங்கிக்கொண்டிருக்கும் சர்ப்பம் ராமாயணக் கவிகளின் பாரத்தைத் தாங்காமல் முனகுவதாகக் கேள்விப்பட்டு, மகாபாரதத்தை எழுதுவது என்று முடிவெடுத்தார். இந்தக் கட்டுரையில் நான் பயன்படுத்தியிருக்கும் ஏகப்பட்ட தகவல்களுக்காக, பல அறிஞர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும். இந்தத் தகவல்களை, எனக்காகவும் பிறருக்காகவும், ஒருவிதத்தில் ஒழுங்குபடுத்த முனைகிறேன். அதன்மூலம், எப்படி வெவ்வேறு கலாசாரங்களிலும் மொழிகளிலும் மதப் பின்னணியிலும் புழங்கும் இந்த நூற்றுக்கணக்கான கதையாடல்கள் ஒன்றோடு ஒன்று உறவுகொண்டுள்ளன என்பதையும் எது மொழியாக்கத்தின்போது அப்படியே கையாளப்படுகிறது, எது மொழியாக்கத்தின்போது சற்றே மாற்றப்படுகிறது, எது முற்றிலுமாக, தலைகீழாக மாறுகிறது என்பதையும் எடுத்துக்காட்ட முற்படுகிறேன்.

===
1. I owe this Hindi folktale to Kirin Narayan of the University of Wisconsin.

2. Several works and collections of essays have appeared over the years on the many Ramayanas of South and Southeast Asia. I shall mention here only a few which were directly useful to me: Asit K. Banerjee, ed., The Ramayana in Eastern India (Calcutta: Prajna, 1983); P. Banerjee, Rama in Indian Literature, Art and Thought, 2 vols. (Delhi: Sundeep Prakashan, 1986);J. L. Brockington, Righteous Rama. The Evolution of an Epic (Delhi: Oxford University Press, 1984); V. Raghavan, The Greater Ramayana (Varanasi: All-India Kashiraj Trust, 1973); V. Raghavan, The Ramayana in Greater India (Surat: South Gujarat University, 1975); V. Raghavan, ed., The Ramayana Tradition in Asia (Delhi: Sahitya Akademi, 1980); C. R. Sharma, The Ramayana in Telugu and Tamil: A Comparative Study (Madras: Lakshminarayana Granthamala, 1973); Dineshchandra Sen, The Bengali Ramayanas (Calcutta: University of Calcutta, 1920); S. Singaravelu, "A Comparative Study of the Sanskrit, Tamil, Thai and Malay Versions of the Story of Rama with special reference to the Process of Acculturation in the Southeast Asian Versions," Journal of the Siam Society 56, pt. 2 (July 1968): 137-85.

3. Camille Bulcke, Ramkatha : Utpatti aur Vikas (The Rama story: Origin and development; Prayag: Hindi Parisad Prakasan, 1950; in Hindi). When I mentioned Bulcke's count of three hundred Ramayanas to a Kannada scholar, he said that he had recently counted over a thousand in Kannada alone; a Telugu scholar also mentioned a thousand in Telugu. Both counts included Rama stories in various genres. So the title of this paper is not to be taken literally.

Saturday, November 05, 2011

தோற்கடிக்க முடியாதவன்

நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் இருந்தது. பொதுவாக லைவ் தொலைக்காட்சிக்குச் செல்லும்போது ஒப்பனையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒப்பனை அறை ஒன்று உள்ளது. ஒப்பனைக் கலைஞர்களும் உள்ளனர். நமக்கு மேக்கப் போடாமல் விடமாட்டார்கள்.

கண்ணுக்குக்கீழ் கருமையைப் போக்க ஏதோ மாவைப் பூசினார். முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டார். புருவத்தைச் சீராக்கினார்.

நான் சிரித்தேன். ‘நான் என்ன சினிமாக்காரனா? எனக்கு எதற்கு இந்த மேக்கப் எல்லாம்? இதனால் என்ன பிரயோஜனம்?’ என்றேன்.

‘இல்ல சார், வயசை ஒரு 15 வருஷமாவது குறைச்சுக் காட்டும்’ என்றார்.

‘அது எனக்கு எதுக்கு? வயசு ஆகிட்டுத்தானே இருக்கு? முன்னாடி தலை எல்லாம் நரைக்க ஆரம்பிச்சாச்சே’ என்றேன்.

‘வேணும்னா அதை மாத்திடலாமா?’ என்றார்.

‘வேண்டாம், வேண்டாம். நான் ரஜினி மாதிரி’ என்றேன்.

‘அவரேகூட சினிமால நரைச்ச தலையோட வந்தா நீங்க ஏத்துப்பீங்களா?’ என்றார்.

‘சினிமால எப்படி வந்தாலும் நிஜ வாழ்க்கைல நரைச்ச முள்ளு தாடி, பாதி வழுக்கை ரேஞ்சில தைரியமா வராரே? அந்த மாதிரி யாரால முடியும்? கமலால முடியுமா?’ என்றேன்.

‘கமல், ரஜினி ரெண்டு பேருக்குமே நான் மேக்கப் போட்டிருக்கேன் சார்’ என்றார்.

‘ஓ, அப்படியா? அப்ப ஏன் சினிமாவ விட்டுட்டு இப்பிடி டிவிக்கு வந்திருக்கீங்க?’ என்றேன்.

‘சினிமால ஹீரோ, கேமராமேன், டைரெக்டர் இப்படி கொஞ்சம் பேருக்கு மட்டும்தான் சார் பணம். மத்தவங்களுக்கு, தினசரி பேட்டா இல்லாட்டி வாழ்க்கை ஓடாது சார். அதுவும் பேட்டாகூடக் கட்டாயமாக் கிடைக்கும்னு சொல்லமுடியாது. குடும்பம்னு வந்தாச்சு சார், இனிமேயும் சினிமால லோல்பட முடியாதுன்னு விட்டுட்டேன்.’

‘யாரோட எல்லாம் சினிமால வொர்க் பண்ணிருக்கீங்க?’

‘கமல், ரஜினி, விக்ரம், அஜித்னு தமிழ் ஹீரோக்கள் எல்லாரோடையும் வொர்க் பண்ணிட்டேன் சார். கமல்கிட்டேருந்துதான் வேலையே ஆரம்பம்.’

‘இந்த நடிகர்கள் எல்லாம் எப்படி?’

‘ஒவ்வொர்த்தர் ஒவ்வொரு மாதிரி சார். ஆனா அஜித் மாதிரி வராது சார்.’

‘ஏம்ப்பா அப்படிச் சொல்றே?’

‘அவர் ஒருத்தர்தான் சார் மனுஷனை மனுஷனா மதிக்கிறவர். மத்தவங்க மோசம்னு எல்லாம் சொல்லலை சார். ஆனா என்னவோ அஜித் ஒருத்தர மட்டும்தான் சார் இந்த மாதிரி நான் பார்த்திருக்கேன். அவர மாதிரி இன்னொருத்தர் இனிக் கிடைப்பாரான்னு தெரியலை சார். முந்தி ஜெனரேஷன்ல ஆக்டருங்க எப்படி இருந்தாங்கன்னு எனக்குத் தெரியாது சார். ஆனா இந்த ஜெனரேஷன்ல அஜித் மாதிரி ஒரு நல்ல மனிதர் யாருமே கிடையாதுன்னு சொல்வேன் சார்!’

‘அதெப்படி அப்பா அவ்வளவு ஆழமாச் சொல்லறே? அப்படி என்ன பண்ணிருக்கார்?’

‘கூட வேலை செய்யற டெக்னீஷியன்ஸை மனுஷனா வேற யாரும் மதிச்சு நான் பார்த்ததில்லை சார். மங்காத்தா பட ஷூட்டிங் மொத நாள். இந்த ஃபால்ஸ் சீலிங் போடற போர்டை வெச்சு சுவர் மாதிரி அலங்காரம் பண்ணி, அதைத் தேச்சு தேச்சு, பொடி பொடியா உதிர்ந்து இருக்கும். அந்தப் பொடி அவர் மேல விழுந்து ஒரே அழுக்கா இருக்காரு ஆர்ட்ல செட் போடற ஒருத்தர். அஜித் அங்க உள்ள வந்து நேராப் போயி அந்த ஆளைத் தொட்டு, அப்படியே தன் கை அழுக்காறதையும் கவனிக்காம, கையைக் குலுக்கி நலம் விசாரிச்சாரு சார்.’

‘அது பெரிய விஷயமாப்பா?’

‘இல்ல சார். இங்க ஏர்போர்ட்டுக்கு முன்னாடி பழைய பின்னி மில்லுல ஷூட்டிங் சார். 14 நாள் நடந்துச்சு. சாப்பாடு சரியா இல்லை. மொத நாள் மோசமான சாப்பாடு. புரடக்‌ஷன்ல சரியாப் பாத்துக்கல. அடுத்த நாள் லைட் பாய்கிட்டப் பேசிக்கிட்டிருக்கறப்ப அவருக்குத் தெரிஞ்சிடுச்சு. உடனே அன்னிக்கு வீட்டுல மட்டன் பிரியாணிக்கு ரெடி பண்ணிக்கிட்டு வந்துட்டாரு. மட்டன் பீஸ் எல்லாம் வீட்டுலயே தயார் பண்ணிக் கொண்டுவந்துட்டாரு. அரிசி ஒரு கிலோ 190 ரூபாய் சார். அவரே சமையல் பண்ணாரு.’

‘என்னப்பா விளையாடற? அவரே சமையல் பண்ணாரா, இல்லை ஆளுகளை வெச்சு சமைச்சாரா?’

‘இல்லைங்க, அவரே சமையல். ஃப்ரீயா இருந்த டெனீஷியன்களைக் கூட்டு வெங்காயம், தக்காளி வெட்டித் தரச் சொன்னாரு. அவரே அரிசியை சோம்பு, பட்டை எல்லாம் போட்டு சமைச்சு, அப்புறம் மட்டனைச் சேர்த்து பிரியாணி செஞ்சாரு.’

‘அப்புறம் என்ன ஆச்சு?’

‘மொத நாள், எங்க யாருக்குமே பீஸ் கிடைக்கல சார். வெறும் சோறு மட்டும்தான். புரடக்‌ஷன்ல ஆளுங்க வந்து பீஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. டிஃபன் கேரியர்ல அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. அதுவும் அவரோட காதுக்கு அடுத்த நாள் போயிருச்சு. ஒருத்தரக் கூப்பிட்டு பிரியாணி எப்படி இருந்துச்சுன்னு கேட்டாரு. அவர் வந்து, ‘நல்லா இருந்துச்சு சார், ஆனா பீஸ்தான் கிடைக்கல. எங்களுக்கு யாருக்குமே கிடைக்கலை’னு சொன்னாரு. அன்னிக்கு அவரே திரும்ப பிரியாணி பண்ணினதுமே, புரடக்‌ஷன் மேனேஜரைக் கூப்பிட்டுச் சொல்லிட்டாரு: ‘இன்னிக்கு டிஃபன் பாக்ஸ் கட்டற வேலை எல்லாம் கிடையாது. ஏ, பி, சி அப்பிடின்னு எந்த வித்தியாசமும் இல்லாம, எல்லாரும் இங்கியே உக்கார்ந்து சேர்ந்து சாப்பிடட்டும்.’ அன்னிக்குத் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிஞ்சதும் அவரேதான் சார் யூனிட்டுல உள்ள அத்தனை பேருக்கும் பிரியாணி செஞ்சு போடுவாரு. ஒவ்வொரு நாளும் டேஸ்டு அதிகமாகிக்கிட்டே போச்சு சார்.’

‘அப்புறம்?’

‘அப்புறம் ஷூட்டிங்குக்கு ஹைதராபாத் போனோம் சார். அங்க சமையல் செய்ய முடியாதுங்கறதுனால, அவரோட சொந்தக் காசுல, கிரீன் பாவர்ச்சின்னு ஒரு ஹோட்டல் சார். அதுலேர்ந்து அத்தனை பேருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுத்தாரு. ஒரு பிரியாணிய நாலு பேர் சாப்பிடலாம். ஹைதராபாத்ல ஷூட்டிங் முடியறவரை அங்கேருந்துதான் சாப்பாடே.’

‘சாப்பாடு மட்டும்தானா?’

‘இல்ல சார். தீபாவளி சமயத்துல ஒவ்வொருத்தருக்கும் 3,000 ரூபாய்க்கு வெடி, ஆளுக்கு 500 ரூபாய் கேஷ் கொடுத்தாரு சார். அப்புறம் பொங்கல் சமயத்துல ஒவ்வொரு டெக்னீஷியனுக்கும் கால் பவுன் தங்கத்துல மோதிரம் வாங்கிப் போட்டாரு சார். வருஷப் பொறப்புக்கு...’

இப்படித் தொடர்ந்துகொண்டே போனார். கமல், ரஜினி போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் பலருக்கு உதவி செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினார். ஆனால் அஜித் அளவுக்குத் தான் யாரையுமே பார்த்ததில்லை என்றார்.

செட்டில், உடல் நலம் சரியில்லாமல் யாரேனும் வேலைக்கு வரவில்லை என்றால் உடனே தன் மேனேஜரை அனுப்பி, என்ன விஷயம் என்று தெரிந்துகொண்டு, உடல் நலக் குறைவுக்கு ஏற்றார்போலப் பணம் அனுப்பிவைப்பாராம். கூட வேலை செய்வோரை அண்ணே என்றுதான் அழைப்பாராம்.

மேக்கப் கலைஞரின் குரல் தழுதழுத்தது.

Tuesday, November 01, 2011

ரங்கநாதன் தெரு கடைகளுக்கு சீல்

சென்னை, ரங்கநாதன் தெருவில் முறையற்றதாகப் பல கடைகள் இயங்கிவருகின்றன. தெரிந்தே வரம்புகளைமீறி, அதிக மாடிகள் கொண்ட கட்டடங்களைக் கட்டுவது, போவோர் வருவோருக்கான பாதையை மறித்து பொருள்களை ஏற்றி இறக்கும் வண்டிகளைக் கொண்டுவருவது, வாகன நிறுத்தங்களைச் செய்துதராது இருப்பது, தீக்கு எதிரான பாதுகாப்பு ஏதும் இல்லாதது, நெரிசல்-தள்ளுமுள்ளு (ஸ்டாம்பீட்) பிரச்னைகளிலிருந்து மக்களைக் காக்க வழிமுறைகளைச் செய்யாதிருப்பது என்று பல முறைகேடுகள்.

அவ்வப்போது சென்னை பெருநகரக் குழுமம் சீல் வைக்கிறேன் என்பார்கள். பெட்டிகள் கைமாறியோ, கோர்ட்டுக்குப் போயோ அந்தக் கெடு நகர்த்தப்படும். இப்போது சீல் வைத்திருக்கிறார்கள் கடைகளுக்கு. 25 கடைகள் என்கிறது ரிப்போர்ட்.

அந்தக் கடைகளில் வேலை செய்வோருக்கு அடுத்த மாதம் சம்பளம் கிடைக்குமா கிடைக்காதா என்பதை முன்வைக்கிறது ஹிந்து பத்திரிகையில் ஒரு கட்டுரை. இந்தமாதிரி இரக்கத்தைத் தூண்டும் விதமாகவா, திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யலில் கலப்பது தொடர்பான செய்தி எழுதப்படுகிறது? குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைக்கும் இடங்களில் இதேமாதிரியான இரக்கம் எடுபடுமா? ஐயோ பாவம் குழந்தைகள், இங்கு கிடைக்கும் பணம்கூட இல்லாமல் அவர்கள் பிச்சை எடுக்கத்தான் போகவேண்டியிருக்கும் என்று சொல்கிறோமா?

இப்படி எங்கெல்லாம் முறைகேடாக நிறுவனங்கள் இயங்குகின்றனவோ, அங்கெல்லாம் ஏழைகள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற முதல்வர்தான் தலையிடவேண்டும் என்ற கூப்பாடு எழுகிறது. இம்மாதிரியான அபத்தமான வேண்டுகோள்களுக்குத் தலைசாய்க்காமல், மிகவும் கடுமையுடனும் கண்டிப்புடனும் இவர்களிடம் நடந்துகொள்ளவேண்டும்.

சட்டம் என்றால் கிள்ளுக்கீரை என்று நடந்துகொள்கிறார்கள் இவர்கள். இவர்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கப்படவேண்டும். அப்படி நடக்குமா என்பதில் எனக்கும் பிறரைப்போலவே சந்தேகம் உள்ளது. ஏதோ சில பேட்ச் அப் நடந்து, விதவிதமான செட்டில்மெண்ட் முடிந்து, மீண்டும் பழையபடி ஜாம் ஜாம் என்று பிசினஸ் நடக்கும் என்று அனைவரும் பேசிக்கொள்கிறார்கள். இம்முறையும் அப்படியே நடந்தால் அது மிகவும் சோகமான ஒன்றாக இருக்கும்.