Monday, November 07, 2011

அணு விஞ்ஞானி அப்துல் கலாம்!

அப்துல் கலாம் கூடங்குளம் சென்று வந்துள்ளார். அங்குள்ள அணு மின் உலை அபாயமற்றது; வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று சொல்லியுள்ளார். இது கிட்டத்தட்ட எதிர்பார்த்ததுதான். அப்துல் கலாம் அணு மின்சாரத்தின்மீது நம்பிக்கை கொண்டவர். (நானும்தான்.) எனவே அவர் மாற்றாக எதையும் சொல்லியிருக்கப்போவதில்லை.

ஆனால் பிரச்னை, அப்துல் கலாம் ஒரு அணு விஞ்ஞானியா என்பதைப் பற்றியது. அவர் அணு விஞ்ஞானி அல்லர். அப்படி அவர் தன்னை ஒருபோதும் சொல்லிக்கொண்டதில்லை. அவர் ஒரு ஏரோனாட்டிகல் பொறியாளர். ஒரு கட்டத்தில் இந்தியாவின் அணு ஆயுதச் சோதனைத் திட்டத்துக்குத் தலைமை தாங்கியுள்ளார். அது மட்டுமே அவரை அணு விஞ்ஞானி ஆக்கிவிடாது. எனவே ஊடகங்கள் அவரை அணு விஞ்ஞானி என்று அழைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

அப்படியானால், அப்துல் கலாமால் அணு சக்தி பற்றிய விஷயங்களையும் அது தொடர்பான அபாயங்களையும் புரிந்துகொள்ள முடியாது என்றா சொல்வது? இல்லை! நல்ல அறிவியல் புரிதல் கொண்ட எவராலுமே அணு சக்தி, அதன் ஆற்றல், அதன் அபாயங்கள், அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் போன்ற பலவற்றைப் புரிந்துகொள்ள முடியும். மேலும், அணு ஆயுதச் சோதனைத் திட்டத்துக்குத் தலைமை தாங்கிய ஒருவருக்குக் கட்டாயம் இதுபற்றி நல்ல புரிதல் இருந்தாகவேண்டும்.

அந்த மட்டத்தில், அவரை அணு விஞ்ஞானி என்று அழைக்காமல் போகலாமே தவிர, கூடங்குளத்தில் பிறர் சொல்வதுபோல ஆபத்து என்பதெல்லாம் இல்லை என்று அவர் சான்றிதழ் கொடுத்தால் கட்டாயம் ஏற்றுக்கொள்ளலாம் என்பது என் கருத்து.

கலாம் அல்லர் அரசியல்வாதி. அவர் குஜராத் கலவரம் பற்றி என்ன சொன்னார், இலங்கைப் படுகொலை பற்றி என்ன சொன்னார் என்றெல்லாம் கேட்பவர்கள்தான் அரசியல்வாதிகள்! அறிவியல், தொழில்நுட்பம் மூலம் உலகை நல்லபடியாக மாற்றமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கும் கலாம், அது தொடர்பான விவாதங்களில்தான் பங்கெடுக்க விரும்புகிறார் என்பது வெளிப்படை. பிற விஷயங்களில் கருத்து சொல்ல அவர் தயங்குகிறார். எனவே, அதில் அவர் கருத்து என்ன, இதில் அவர் கருத்து என்ன என்று தோண்டிப் பார்க்காமல், அணு சக்தி தொடர்பாக அவர் நியாயமான கருத்தை முன்வைக்கக்கூடியவரா என்பதை மட்டும்தான் பார்க்கவேண்டும்.

அவரை நம்பாதவர்கள், அவரை அரசவைக் கோமாளி என்று சாடுபவர்கள் சாடிவிட்டுப் போங்கள்.

36 comments:

  1. சபாஷ். வழிமொழிகிறேன். என் கருத்தும் இதுவே. அவரை அரசியல்வாதி என்று சொல்லுவது தவறு. ஆனாலும் முற்றிலும் ஆபத்து இல்லை என்று சொல்வது நம்ப முடியவில்லை.

    ReplyDelete
  2. தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஜப்பான் கூட, அணு உலை விபத்தில் மிகவும் தடுமாறியதே!! எந்த தைரியத்தில் நாம் அதை ஆதரிப்பது? ஒரு சில ஐரோப்பிய நாடுகள் கூட, தங்கள் அணு உலைகளை dismantle செய்துள்ளனவே!!!

    ReplyDelete
  3. கூடங்குளம் போய் பாதுகாப்பானது என்று அறிக்கை விடுபவர் ஏன் மகாராஷ்டிராவில் உள்ள ஜாத்தியாப்பூருக்கு சென்று ‘ஆய்வு’ செய்யவில்லை.
    அந்த இடமும் பொருத்தமானது என்று ஏன் அறிக்கைவிடவில்லை. ஏன் அணுமின்சக்தி தேவை என்று அவர் கட்டுரை எழுதலாம்.ஆனால் கூடங்குளம் போய் அங்கே ‘ஆய்வு’ செய்தேன், அவ்வுலைகள் பாதுகாப்பானவை என்று சான்றிதழ் கொடுப்பது அவரது நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. பொதுவாக அணுமின் உற்பத்தி தேவை என்று வாதிடுவதற்கும், ஒரு குறிப்ப்பிட்ட திட்டம் பாதுகாப்பானது என்பதற்கும் வேறுபாடு உண்டு.
    பல்துறை அறிஞர் கொண்ட ஒரு நிபுணர் குழு அப்படி ஒரு அறிக்கை தரலாம்.
    அப்துல் கலாம் தருவது பிரச்சார உத்தி என்றுதான்
    எடுத்துக்கொள்ள வேண்டும்.
    இனி அடுத்து திட்டமிடப்பட்டுள்ள ஒவ்வொரு அணுமின் நிலையத்திற்கு சென்று அவர் ‘ஆராய்ந்து’
    ‘சான்றிதழ்’ தரப்போகிறாரா. இச்சர்ச்சையில் அவர்
    தலையிட்டிருக்க கூடாது.ஏனெனில் அறிவியல்-தொழில்நுட்பம் பற்றிய எத்தனையோ சர்ச்சைகளில் அவர் ஒதுங்கியே இருந்துள்ளார்.இதில் மட்டும் என்ன
    அக்கறை, யாருக்காக இதை செய்கிறார் என்று கேள்வி எழத்தான் செய்யும்.

    ReplyDelete
  4. அவரை கவிஞர் என்று சொல்வதில்லையா, அது போலத்தான்:-)

    Anyway please someone explain, how India is going to dispose its radioactive waste? Recently I saw a Documentary Eternity on the huge underground structure they are constructing in Europe to store all their wastes and to seal it. Whether India with its limited resources can build similar structure?

    ReplyDelete
  5. அணு ஆராய்ச்சிக்கு தன் உடல் மற்றும் உயிரை கொடுத்து, அடித்தளம் அமைத்த, ரேடியும் கண்டுபிடித்த, நோபெல் பரிசு பெற்ற மேடம் கியூரி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு இத்தருணத்தில் நன்றி சொல்ல அனைவரும் கடமை பட்டிருக்கிறோம்.

    ReplyDelete
  6. கலாமின் கருத்து நிச்சயம் மதிப்பு மிக்கது. . .! அதே சமயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் நியாயமானதே. . .! அவர்களின் ஐயப்பாட்டை போக்குவதற்கான வழிமுறைகளையும், அவர்களின் அச்சத்தை தக்க வைக்க நினைப் பவர்களின் இடர்களைய வேண்டிய செயல்முறைகள் தொடர்பான விவாதத்தை முன்னெடுக்க வேண்டும். . .

    ReplyDelete
  7. முதலில் ஒரு விஷயத்தை தெளிவு படுத்த வேண்டும். நிஜ அணு விஞ்ஞானியாக திகழும் ஒருவர் கூடன்குளம் உலை குறித்து சர்ட்டிஃபிகேட் கொடுத்தால், அதுவும் பிரச்சனையானதுதான். அதாவது அணு விஞ்ஞானி என்கிற தகுதி தரும் அதிகாரத்துடன், அவர் கூற்றுக்கு ஏற்படும் அங்கீகாரம் பிரச்சனையானது. அணு விஞ்ஞானியாக இருப்பவர் தனது அறிவு நிலை சார்பின் காரணமாகவே, ஒருபக்க சார்பான அறிக்கை தரமுடியும். ஆகவே அணு விஞ்ஞானியை ஐயம் கொள்ளக் கூடாது என்று சொல்லமுடியாது.

    ஆனால் அதே அணு விஞ்ஞானி, திறந்த மனதுடன், நியாயமான சந்தேகங்களுடன் நேர்மையுடன் அணுகுவாரானால், மிகுந்த சுய விமர்சனத்துடன் அணுகுவாரெனில், இந்த பிரச்சனை குறித்து பேச அவரை விட சிறந்த நபர் இருக்க முடியாது. அப்படி சிலரை கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் கருத்து நான் அறிந்தவரை அணு உலைக்கு முழுக்க எதிராகவே உள்ளது.

    கலாம் விஷயம் வேறு; எந்த வகை விஞ்ஞானியாகவும் செயல்பட்டிராத ஒருவரை, அணு விஞ்ஞானியாக்கி, இங்கே அதிகாரபூர்வமான ஒரு கூற்று மக்களின் முன்வைக்கப்படுகிறது. இதன் உள்நோக்கம் குறித்து சந்தேகமே இல்லாமல் உறுதியாக சொல்லமுடியும். இது போராட்டக்காரர்களை சாதுர்யமாக பலம் இழக்க செய்யும் உத்தியும் ஆகும்.

    கலாம் அரசியல்வாதி என்பதற்கு அவர் கேரியர் வரலாற்றில் இருந்தே உதாரணங்களை தரமுடியும். அவர் ஈழம் பற்றி பேசினாரா, குஜராத் பற்றி பேசினாரா என்பது இந்த பிரச்சனையில் சரியான வாதம் அல்ல; அதை நான் எழுப்பவில்லை. எழுப்பியவர்களுடன் முரண்படுகிறேன். நாட்டின் முன்னுதாரண தலைசிறந்த விஞ்ஞானியாக கலாமை முன்வைக்கும் கோமாளித்தனத்தை நம் சமூகம் இத்தனை ஆண்டுகளரா? செய்துவருவதற்கு எதிராக என்றாவது அவர் விளக்கம் தந்திருக்கிறார். நானும் கூட தன்னை விஞ்ஞானி என்று அழைத்து கொள்ளாத அளவில் அவர் குறைந்த பட்ச நேர்மையானவர் என்று நினைத்தேன். ஆனால் இன்றய டெகான் க்ரோனிகிளில் ' As a scientist and technician..' என்று அவரே அழைத்துக் கொள்ளும் செய்தி வந்துள்ளது.

    அறிவுபூர்வமான வாதங்களுடன் குறிப்பிட்ட பிரச்சனையை பற்றி மிகச்சிலர் பேசும் போது அதை முற்றிலும் புறக்கணித்துவிட்டு அரசும், எலீட் சமூகமும் முன்னேறிவிடும். மக்கள் போராட்டம் என்று மாறிய பிறகு எல்லாவகை அரசியல் ரெடோரிக் வாதங்களும் வரும்; துரதிர்ஷ்டவசமாக வேறு வழியில்லை. ஆனால் இப்போது அதே அரசும் எலீட் சமூகமும் அறிவு பூர்வம் கம்மியாக இருப்பதை பற்றி குறைபட்டு கொள்வார்கள். அந்த பதிவையும் அப்படிபட்ட ஒரு குரலாகத்தான் பார்க்கிறேன். அறிவுபூர்வம் கம்மியாக இருப்பது தீவிர பிரச்சனைதான்; ஆனால் அறிவுபூர்வ அணுகுமுறை சிலரால் கடத்தப்படுவது எல்லா சந்தர்ப்பங்களிலும் மிக தீவிர பிரச்சனை.

    ReplyDelete
  8. பிரபு ராஜதுரை, கலாமை கவிஞர் என்றாலும், யாரும் தேசத்தின் ஆதர்ச்ச கவிஞராக, காலமை போல கவிஞனாவேன் என்று சொல்லவில்லை. மாறாக சினிமாவில், குழந்தை பாடல்களில், சிறுகதைகளில் கலாமைபோல விஞ்ஞானியாவதை ஆதர்ச இலக்காக கொள்கிறார்கள். மேலும் விஞ்ஞானி என்கிற அதிகாரத்துடன் அவர் முன்வைக்கும் கூற்றுக்களுக்கான அங்கீகாரம் சார்ந்தே பிரச்சனை.

    ReplyDelete
  9. நல்ல பதிவு . திரு . அப்துல் கலாமின் கருத்துகள் வரவேற்கப்பட வேண்டியவை .

    @ திரு . அனானிமஸ் : நண்பரே , நீங்கள் அப்துல் கலாமின் வருகையை யாருக்கோ திருப்தி தருகிற வருகை என்று சொல்லுகிறீர்கள் . போராட்ட குழு தலைவரின் ( திரு உதயகுமார் ) வருகை யாரை திருப்தி செய்ய பயன்பட்டது ..? நாடு போற்றும் ஒரு உன்னத குடிமகன் மக்கள் அச்சப்படும் போது அது குறித்து ஆய்வு செய்வது தவ்று கிடையாது . தான் பிறந்த தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக கூட அவர் கூடங்குளம் வந்திருக்கலாம் அல்லவா ....?

    @ prabu Rajadurai : I encourage your constructive question.
    // Anyway please someone explain, how India is going to dispose its radioactive waste? //

    kindly refer one article written by Mr.Irudhayam on this

    http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_15.html

    ReplyDelete
  10. \\ஒரு கட்டத்தில் இந்தியாவின் அணு ஆயுதச் சோதனைத் திட்டத்துக்குத் தலைமை தாங்கியுள்ளார். அது மட்டுமே அவரை அணு விஞ்ஞானி ஆக்கிவிடாது.\\ அவரை அணு விஞ்ஞானியாக்கியத்தில் பெரும்பங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக்கையே சாரும்.

    \\கூடங்குளத்தில் பிறர் சொல்வதுபோல ஆபத்து என்பதெல்லாம் இல்லை என்று அவர் சான்றிதழ் கொடுத்தால் கட்டாயம் ஏற்றுக்கொள்ளலாம் என்பது என் கருத்து.\\ கலாம் கொஞ்சம் நல்ல மனிதர் தான் ஆன போதிலும், நவீன அறிவியல் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கே உரிய ஒரு சில குணங்கள் அவருக்கும் உள்ளது. அதில் ஒண்ணுதான் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளால் உண்டாகும் தீங்கை மூடி மறைப்பது. தற்போதைக்கு கலவரத்தை மட்டுப் படுத்த அவர் இவ்வாறு பேசலாம், மனதளவில் அவருக்கே தெரியும் இது மக்களுக்கு சவக்குழி என்று.

    ReplyDelete
  11. மருந்து ஆராய்சிகளுக்கு எதிராக எவ்வளவு குரல்கள் எழுகின்றன.கர்ப்ப பை புற்று நோய் தடுப்பு ஊசிகள் ஆராய்ச்சி மூன்றாம் உலக நாடுகளிலும் ,இந்தியாவின் படிப்பறிவு குறைவாக உள்ள மக்களிடம் நடத்த படுவது ஏன்.ஜப்பானில் நடந்தது போல ஒரு மருந்தினால் பலர் இறந்த பிறகு அந்த மருந்தை உபயோகிக்க மற்றவர் (மாற்று மருந்து,வழி இருக்கும் போது)முன் வருவாரா
    அதனால் பல கோடி மக்களுக்கு நன்மை ஏற்படும் என்றாலும் ஒத்து கொள்ளாத மக்களிடம் அவற்றை திணிக்க கூடாது எனபது தானே நடைமுறை.
    கூடங்குளம் நிலையத்துக்கு ஆதரவாக உள்ளவர்கள் எதனை பேர் அவர்கள் வீட்டு மாடியில் செல் போன் tower வைக்க தயார்.அப்படி அவர்கள் தயாரானால் அவர்கள் கூடங்குளம் அருகில் வசிக்கும் மக்களை பார்த்து நாட்டுக்காக தியாகம் செய்யுங்கள் என்று சொல்லலாம்.

    ReplyDelete
  12. அவசரத்தில் என் பின்னூட்டத்தில் சில எழுத்துப்பிழைகள். குறிப்பாக

    /நாட்டின் முன்னுதாரண தலைசிறந்த விஞ்ஞானியாக கலாமை முன்வைக்கும் கோமாளித்தனத்தை நம் சமூகம் இத்தனை ஆண்டுகளரா? செய்துவருவதற்கு எதிராக என்றாவது அவர் விளக்கம் தந்திருக்கிறார். /

    என்பது

    'நாட்டின் முன்னுதாரண தலைசிறந்த விஞ்ஞானியாக கலாமை முன்வைக்கும் கோமாளித்தனத்தை நம் சமூகம் இத்தனை ஆண்டுகளாக செய்துவருவதற்கு எதிராக என்றாவது அவர் விளக்கம் தந்திருக்கிறார?' என்று இருக்க வேண்டும்.

    ReplyDelete
  13. ROSAVASANTH said...
    // நானும் கூட தன்னை விஞ்ஞானி என்று அழைத்து கொள்ளாத அளவில் அவர் குறைந்த பட்ச நேர்மையானவர் என்று நினைத்தேன். ஆனால் இன்றய டெகான் க்ரோனிகிளில் ' As a scientist and technician..' என்று அவரே அழைத்துக் கொள்ளும் செய்தி வந்துள்ளது. //

    ROSAVASANTH,

    அப்துல்கலாம் ' As a scientist and technician..' என்று கூறியதில் தவறேதும் இல்லை.

    விஞ்ஞானிக்கும், அனுவிஞ்ஞானிக்கும் வித்தியாசம் உள்ளது. பத்ரி தெளிவாகத்தான் எழுதியுள்ளார் நீங்கள் உங்களையே குழப்பிக்கொள்கிறீர்கள்.

    சென்னை CLRI, பெங்களூர் Silk Board பக்கம் போயிபாருங்க அங்கு நிறைய scientist இருப்பாங்க.

    ReplyDelete
  14. badri ,fyi read this op-ed of Dr.Kalam

    http://www.thehindu.com/opinion/op-ed/article2601471.ece

    ReplyDelete
  15. I am with you Badri in this.
    I see the vicious venoem spewing people behind this. All these people who are against koodunkulam must be less tha 20 yo coz.,(oth physically and or mentally) they were are not there when the project was started??.. why not fight for other genuine causes?
    Surya

    ReplyDelete
  16. suppurathinam@gmail.comMon Nov 07, 07:37:00 PM GMT+5:30

    இன்னொரு சுனாமி வராதுண்ணு என்ன சார் நிச்சயம்...ஜப்பானை விடவா இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரமாதம்!!!!!!

    ReplyDelete
  17. எங்க வீட்டு/பிளாட்டு மாடியில இருக்கிற செல் டவரால வியாதி வரும்னு(உண்மையோ பொய்யோ ) ரிப்போர்ட் படிச்சிட்டு எடுக்க சொன்னா ,அது நல்லது தான் பழைய டவரால ஆயிரத்துல ரெண்டு பேருக்கு நோய் வரலாம்,புது தொழில் நுட்ப டவரால லட்சத்துல ரெண்டு பேருக்கு தான் வரும் என்று அப்துல் கலாமோ அமாவாசையோ வந்து சொல்றதால என்ன பிரயோசனம் .
    அப்துல் கலாம் சொல்றதால nuclear liability பில் கண்ணை மூடிட்டு பல லட்சம் கோடி நட்ட ஈடு தருவேன் என்று கையெழுத்து போடுவார்களா.ஏதாவது விபத்து ஏற்பட்டால் 1500 கோடிக்கு மேல் தர மாட்டோம் என்று தானே இழுபறி .அதை பத்தி வல்லரசு கணவர்(கனவு காண கத்து கொடுத்தவர் ) என்ன சொல்றார்.
    வைக்கும் போது மாதம் பத்தாயிரம் சும்மா இருக்கிற இடத்துக்கு தரானே என்று குஷியாக இருந்தது,கூடங்குளத்தில் அரசு வேலை கிடைக்கும்,நில மதிப்பு ஏறும்,lodge ஹோட்டல் கட்டி சம்பாதிக்கலாம் என்று ஆரம்பத்தில் அவ்வளவு எதிர்ப்பு இல்லை.
    இப்போ ஜப்பானை பார்த்த பிறகு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்றால் தான் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம்.
    ஏன் மூவாயிரம் கோடி செலவு செய்த பிறகு இல்லாத ராமர் பாலம்,பவழ பாதுகாப்பு வந்து சேது சமுத்திர திட்டத்தை கிடப்பில் போடவில்லையா
    telengana வேண்டும் வேண்டாம் என்ற போராட்டத்தினால் இதுவரை ஐம்பதினாயிரம் கோடி நட்டமாம்.கூடங்குளம் எல்லாம் பிசாத்து.
    எது எதையோ ஆஸ்பத்திரி ஆக்குற அம்மா கூடங்குளத்தையும் nuclear medicine ஆஸ்பத்திரி ஆக்கிட்டா போச்சு.கதிரியக்கத்தால் வருகிற வியாதிகள்,தீர்க்கப்பட கூடிய வியாதிகள் பற்றி ஆராய்ச்சி ,மருத்துவம் எல்லாம் செய்யலாம்.
    ஸ்பெஷல் எகோநோமிக் ஜோனோ,அணு மின் நிலையமோ,மாட்டு கறி,தோல் தொழில்சாலையோ எங்கு வைக்க படுகிறதோ அந்த இடத்தில் இருக்கும் மக்களின் விருப்பமும் சம்மதமும் முக்கியம்.பிரதமரோ முன்னாள் சனாதிபதியோ என்ன நினைத்தால் அவர்களுக்கு என்ன
    மக்களை கேட்காமல் தோல் தொழிற்சாலைகள் ,சாய பட்டறைகள் வைத்து பல நதி நிலைகளை,கிராமங்களை இழந்தது போதாதா.

    ReplyDelete
  18. அப்துல் கலாம் விஷய்ம் தெரிந்தவர். மக்களுடன் நெருங்கிப் பழகுபவர்.மக்களுக்குப் புரிகின்ற மொழியில் பேசுபவர். கூடங்குளம் பற்றிப் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் பேசியிருக்கிறார். படித்தவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நீண்ட அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
    அணுச்கதி என்றால் என்ன என்று தெரியாவர்கல் போராட்டம் நடத்தினால் அது நியாயம். ஆனால் அணுசக்தி பற்றி நன்கு அறிந்த அப்துல் கலாம் கூடங்குளம் பற்றிப் பேசினால் அவருக்கு அருகதை இல்லை என்று வாதம். இது விசித்திரமாக இருக்கிறது.
    ஜப்பானிலேயே என்று நீட்டி முழக்குபவர்கள் இருக்கிறார்கள். விபத்துக்குள்ளான புகுஷிமா அணுமின் நிலையன் மிக்ப் பெரிய தனியார் நிறுவத்தினால் நடத்தப்படுவதாகும். தனியார் நிறுவனங்களில் சில சமயங்களில் அசட்டு சிக்கனம் பிடிப்பார்கள். விரைவில் மூடப்பட இருக்கிற அணுமின் நிலையத்தில் போய் எதற்கு வீணாகப் பணம் செலவிட வேண்டும் என்ற போக்கும் இருந்த்து.அமெரிக்காவுக்குத் தெற்கே கடலுக்கு அடியில் எண்ணெய் கிணறு தோண்டிய போது அக் கிணற்றை சரியாக மூட முடியாமல் போனதால் கடலில் பெரும் எண்ணெய் கலந்து பெரிய பிரச்சினை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் அரசுக்கும் அமெரிக்க அரசுக்கும் மோதல் கட்டம் உருவாகியது. இப் பிரச்சினைக்கு மேலே கூறியது போல தனியார் நிறுவனம் அசட்டு சிக்கனம் பிடித்ததே காரணம்.
    ஆக்வே ஜ்ப்பானில் நடந்தது போல இங்கே நடக்காது என்ப்தற்கு என்ன உத்தரவாதம் என்று கேட்பது அர்த்தமற்றது.

    ReplyDelete
  19. அப்துல்கலாம் அனு விஞ்ஞானி அல்ல. வேறு யார் சொன்னால் கூடங்குளம் அனு உலை பாதுகாப்பானது என்று அனுசக்தி எதிர்ப்புக் கூட்டத்தினர் ஒப்புக்கொள்வார்கள் ?

    உண்மை என்னவென்றால் அவர்கள் மேரி க்யூரி உயிர்த்தெழுந்து வந்து சொன்னாலும் எதையும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை.

    இதில் ஏதோ உள்ளரசியல் உள்ளது. இதை வைத்து வாடிகன் என்னமோ திட்டம் போடுகிறது...இந்த அனு உலை எதிர்ப்பு எல்லாம் சால்ஜாப்பு போல் தான் தெரிகிறது. பாதிரிகள் இப்படி ஊரைத் திரட்டி 20 ஆண்டுகளுக்கு முன் நடத்தவேண்டிய பிரச்சனையை இன்று நடத்துகிறார்கள் என்றால் அதில் என்னமோ இலாபம் இந்த பாதிரிகளுக்கு உள்ளது. அதை வெட்ட வெளிச்சமாக பட்டவர்த்தனமாக எந்தப் பத்திரிக்கைக்காரனும் துப்புத் துலக்கிச் சொல்ல பயப்படுகிறான்.

    ReplyDelete
  20. அன்பார்ந்த அனானி நண்பருக்கு,

    தாங்கள் கொடுத்துள்ள சுட்டியிலுள்ள விபரங்கள், திருப்தியளிக்கவில்லை. அந்த பதிவிற்கு மற்றொருவர் அளித்துள்ள எதிர்வினைகளுக்கு பதிலில்லை. எது எப்படியிருப்பினும், எட்டர்னிட்டி என்ற நான் கூறியுள்ள ஆவணபடத்தைப் பார்க்கவும்...அது மாதிரியான ஒரு பூமிக்கடியிலான சேமிப்பு கிடங்கை நம்மால் தனியாளாக கட்ட முடியாது. அந்த கிடங்கில் அணுக்கழிவு 1 லட்சம் ஆண்டுகளுக்கு பாதுகாக்கப்பட வேண்டுமாம். எனவே மனிதகுல வரலாற்றில் அதிககாலம் நீடித்திருக்கும் கட்டுமானம் அதுவாகத்தான் இருக்க முடியுமாம். இப்போது விவாதம் இப்படி ஒரு கிடங்கு உள்ளது என்று எதிர்கால சந்ததிகளுக்கு எச்சரிக்கை குடுக்க வேண்டுமா இல்லையா என்பதாம்...சரி, நீங்கள் குறிப்பிட்ட பதிவில் கூறியுள்ளது போல அணுக்கழிவு மேலாண்மை இவ்வளவு எளிது என்றால், ஐரோப்பியர்கள் ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும்?

    You can read about this underground structure here
    http://en.wikipedia.org/wiki/Olkiluoto_Nuclear_Power_Plant#Onkalo_waste_repository

    ReplyDelete
  21. "The final cost is expected to be €3 billion ($4.1 billion). But since the 1970s the Finnish government has been collecting a clean-up fund from the generating companies via a levy on the price of nuclear power, which is already over €1.7 billion and will be used to fund the final disposal"
    http://articles.cnn.com/2010-11-12/world/finland.nuclear.waste_1_nuclear-waste-disposal-canisters?_s=PM:WORLD

    Whether India can execute a similar project?

    ReplyDelete
  22. நாய் கடிக்கு தொப்புல சுத்தி ஊசி போடுவாங்களே முன்னே அது ஒரு ஐஞ்சு ரூபாய்க்கு கிடைக்கும்.இப்ப நாய்கடிக்கு போடற ஊசி இருநூத்தி ஐம்பது ரூபாய் ஒன்னு.முதல்ல சொன்ன ஊசியும் அதே வேலை தான் செய்யும் ஆனா நூத்துல ஒருத்தருக்கு பக்க வாதம் வரலாம் ஊசியால ரெண்டாவதுல ஆயிரத்துல ஒன்னு .இப்ப அரசு ஆஸ்பத்திரியில கூட அத போடறதில்ல
    அதே போல தானே சூரிய சக்தியும் அணு சக்தியில இருந்து மின்சாரம் எடுக்குறதும்.இதுல அணு மின்சாரத்தை ஆதரிக்கிறவங்க முக்கால்வாசி பேரு 250 ரூபாய் ஊசிய விட 2000 ரூபாய் ஊசி போட்டுகிரவங்க என்ன அதுல இன்னும் பக்க விளைவு குறைவு.காசு கம்மின்னு ஏன் யாரும் தனக்கோ தன குழந்தைக்கோ ஐஞ்சு ரூபாய் ஊசி போடறதில்லே.சூரிய சக்தில இருந்து மின்சாரம் எடுத்தா விலை அதிகம் அதனால சில பேர் செத்தாலும் பரவாயில்லை,பல பேர் பாதிக்கபட்டாலும் பரவாயில்லை என்று சொல்வது சரியா
    ஒன்னும் கொழப்பம் வராதுன்னா பல லட்சம் கோடி நட்ட ஈடு தருவேன் என்று நிறுவனங்கள் ஒத்து கொள்ளுமா.nuclear liability bill 500 கோடியில் இருந்து 1500 கோடிக்கே நிறுவனங்கள் தயங்குவது ஏன்.

    ReplyDelete
  23. அணு உலைகளால் ஒரு ஆபத்தும் இல்லையெனில் ஏன் சோனியா தனது இல்லத்தருகே ஒரு அணு உலையை நிறுவி செயல் பட வைக்க கூடாது?அப்படியாவது மக்கள் பயத்தை போக்கலாமே?செய்ய மாட்டார்கள் ஏன் என்று அவர்களுக்கும் தெரியும் மின்சாரம் வேண்டுமென்று அணு உலைகளை முட்டாள்தனமாக ஆதரிக்கும் கோபிநாத் வால் பிடிக்கும் மிடில் க்லாசுக்கும் தெரியும்!மிடில் கிளாசுக்கு என்ன வந்தது?கூடங்குளம் மக்கள் செத்தால் என்ன?தென் தமிழகம் அழிந்தால் என்ன?தன வூட்டு ஏசி ஓடணும் அம்புட்டுதேன்!

    ReplyDelete
  24. @பத்ரி
    குஸ்ஹ்வந் சிங்கின் பாகிஸ்தான் செல்லும் ரயில் NHM தளத்தில் வாங்க முடியவில்லை.உதவி செய்யவும்!அது வெளியாகி விட்டதா?உயிர்மையில் விளம்பரம் வருகிறதே!!

    ReplyDelete
  25. இப்படி இவர் அடித்த ஜால்ராவை பயன்படுத்திக்கொண்டு அமெரிக்காவுடன் அடிமை ஒப்பந்தம் போட பட்டது.அதே பாணியை இப்போதும் கையாள்கிறது காங்கிரசு!!ஒரு வேலை இவர் கண்ட கனவில் அணு உலைகள் பாதுகாப்பாக தெரிந்திருக்கலாம்!!கனவை விட்டொழியுங்கள்!!நிஜத்தில் வாடும் மனிதனை பாருங்கள் அய்யா!!

    ReplyDelete
  26. ராஜா: பாகிஸ்தான் போகும் ரயில் - இன்னும் சில நிமிடங்களில் நீங்கள் ஆர்டர் செய்யமுடியும். இன்றுதான் வேர்ஹவுஸுக்கு வருகிறது. நாளை முதல் விற்பனைக்குத் தயார். நீங்கள் ஆன்லைனில் இன்று ஆர்டர் போட்டால், நாளைக்கு பேக் செய்து அனுப்பிவிடுவோம். அடுத்த ஒரிரு தினங்களில் உங்களை கைகளுக்கு வந்து சேர்ந்துவிடும்.

    ReplyDelete
  27. @பத்ரி சேஷாத்ரி
    மிக்க நன்றி. :)

    ReplyDelete
  28. அனு உலைகளால் ஆபத்து வருமா வராதா என்றால் அதற்கு பதில் இந்த சிம்பிள் கேள்வியில் உள்ளது.

    காரில் சென்றால் விபத்து நேருமா நேராதா ?

    நீங்கள் எவ்வளவு பாதுகாப்பாக கார் ஓட்டுகிறீர்களோ அதைப் பொருத்தது. அதே போல் தான் அனு உலையும்.

    மிடில் கிளாஸ் ஏ.சி ஓடனும் என்பதற்காக மட்டுமா அனு உலை வேண்டும் ? கூடங்குள மக்களின் வீட்டில் ஏ.சி/டி.வி/பிரிட்ஜ்/கிரைண்டர்/மிக்ஸி/வாஷிங் மெஷின் இருந்தால் அவன் அனுபவிக்க மாட்டானா ? இப்பொழுது தான் எல்லாமே எலவசமா கொடுக்குறாங்களே...

    அனு உலை எதிர்ப்பாளர்கள் எல்லாம் வீட்டில் லாந்தர் விளக்கு வைத்துக்கொண்டு இருட்டில் காலத்தை ஓட்டுங்கள். சோனியா என்ன, வாஜ்பாயி, அப்துல்கலாம் எல்லாம் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் அனு உலை வைத்து அதில் அரிசி பொங்கிக்கொள்வார்கள்.

    ReplyDelete
  29. நல்ல வேளை. கலாம் பார்ப்பானாக இல்லாமல் போனார். இல்லாவிட்டால் அவரை தமிழினத் துரோகி என்று திட்டி இருப்பார்கள்.

    ReplyDelete
  30. ஏதோ என்னால முடிஞ்ச ஐடியா...
    1 அணு உலைகள் ஆபத்து இல்லன்னு சொல்ற அப்துல் கலாம் அவர்களை கூடன்குளத்துலையே குடி வைக்கலாம்.
    2 அமைச்சர்கள் - இவங்களை தொகுதியிலேயும் பார்க்க முடியல.அமைச்சர் அலுவலகத்துலயும் பார்க்க முடியல. அம்மா கோர்ட்டுக்கு போகும்போது மட்டும் தான் வரிசை கட்டி நிக்கறாங்க. பேசாம இவங்க எல்லோரையும் கூடன்குளத்துலேயே அம்மா நகர் -னு ஒன்னு உருவாக்கி அங்கே இருந்து வீடியோ conference (அம்மா ஸ்டைல்-ல) மூலம் சட்டசபை நடத்தலாம். (எங்க இருந்தாலும் இவங்க ஒன்னும் பேசப் போறதில்லை ங்கிறது வேற விஷயம்)
    3 அணு உலை வேணும் னு சொல்ற அறிவு ஜீவிகள் எல்லோரும் அங்க போயி குடி இருக்கலாமே (நெட்டும் போனும் இருந்துட்டா எங்கே இருந்து வேணும்னாலும் blog எழுதலாம். publications - யையும் run பண்ணலாம்) :-(
    இத்தனை பேர் அங்கே குடி ஏறிட்டா அந்த மக்களுக்கும் அணு உலை ஆபத்து இல்லங்கிறது புரிஞ்சு போராட்டத்தை வாபஸ் வாங்கிடுவாங்களே

    ReplyDelete
  31. http://mobile.reuters.com/article/idUSL01764654?irpc=932
    Vatican says nothing wrong with nuclear power
    Wed, Aug 01 08:57 AM EDT

    ROME, Aug 1 (Reuters) - Nuclear power should be considered a useful energy source, a senior Catholic cardinal said on Wednesday, criticising countries like Italy which have banned the technology on principal.

    Weighing into a debate that sharply divides environmentalists, many of whom see nuclear as unsustainable and unsafe, Cardinal Renato Martino said nuclear power could be part of a balanced energy mix, alongside "forms of clean energy".

    "With maximum safety requirements in place for people and the environment, and with a ban in place on the hostile use of nuclear technology, why should the peaceful use of nuclear technology be barred?" Martino, the Pope's justice minister, told Vatican Radio.

    While Iran's nuclear programme has highlighted concerns about proliferation of nuclear weapons, many countries in Europe have chosen not to have nuclear power plants due to concerns about the environment and potential accidents.

    Martino said such a policy might be counterproductive.

    "Excluding nuclear energy because of a preconceived principle or for fears of disasters could be a mistake and in come cases could have paradoxical effects.

    "One should think of Italy, which abandoned the production of nuclear energy in 1987 but which imports the same type of energy from France," said Martino, a former papal envoy to the United Nations.

    Italians voted in a referendum to ditch nuclear power in the wake of the 1986 Chernobyl disaster. Supporters of nuclear power say it could be used as a way of reducing reliance on fossil fuels which emit greenhouse gases blamed for global warming.

    Pope Benedict on Sunday marked the fiftieth anniversary of the International Atomic Energy Agency by calling for "progressive and agreed nuclear disarmament and to favour the peaceful and assured use of nuclear technology for real development".

    ReplyDelete
  32. தம்பி ஐயங்காரே! உமக்கு இந்தி(யாவின்) மீது பற்று iyyar kalamukkum அதாம் பற்று நீங்கள் சொல்வீர் நல்லது என்று.... பயன் அடைவது வடநாட்டுகாரன் பாதிக்கப்படுவது தமிழுனா?

    ReplyDelete
  33. கலாம் ஒரு உன்னத மனிதர். அவரை விமர்சிக்க தகுதி வேண்டும். தன் வாழ்வை நாட்டிற்காக அர்ப்பணித்தவர். உதயகுமார் என்ன செய்தார்?.தென்மாவட்டங்களில் எந்த தொழிற்சாலைகளும் வருவதில்லை.வருவதையும் நாம் விரட்டிவிட்டால் பிழைப்புக்கு எப்போதும் ஒடிக்கொண்டெ இருக்க வேண்டுமா என்ன?உயிர் மீது அத்தனை பயமா?

    ReplyDelete
  34. கூடங்குளத்தில் அனு மின் நிலையம் இயங்காமல் போனால் நாளைக்கே கர்நாடகத்திலோ, ஆந்திராவிலோ அனு மின் நிலையம் வரலாம். அதே அனு மின்சாரத்தை கூடங்குளத்துக்காரர்களும் பயன்படுத்தத்தானே போகிறார்கள் ? அப்பொழுதும் இதே அறச்சீற்றத்துடன் கரண்டு கனெக்ஷன் வேண்டாம் என்று போராடுவார்களா ?

    இந்தியாவின் எகானமி 10 டிரில்லியனாம், இந்த இமாலயப் பொருளாதாரத்தின் மின் தேவையை அனு உலை இல்லாமல் எப்படி பூர்த்தி செய்வது ?

    ReplyDelete
  35. அணு மின் நிலையத்தை எதிர்ப்பவர்கள் இத்தனை வருஷங்கள் எங்கே போயிருந்தார்கள் ? ஏராளமான கோடி மக்கள் வரிப்பணத்தை அதில் கொட்டி முடிக்கும் வரை இவர்கள் ''மன்மோகன்சிங் ஆக''- வாய் மூடி மௌனியாக- இருக்கும்படி இவர்களிடம் யார் உத்தரவு இட்டிருந்தார்கள் ? கூடங்குளம் இடத்தை தேர்ந்தெடுக்கும்வரை அல்லது அங்கே இந்த மாதிரி உலை வரப்போகிறது என்ற உண்மை வரும்வரை யாருக்குமே தெரியாதா ? திட்டம் தீட்டிய கட்சி எது ? அப்போது எதிக்கட்சிகள் யாருமே இல்லையா ? கூடங்குளத்தை மையமாக வைத்து அதைச்சுற்றி ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பித்தது யார் ?

    ReplyDelete
  36. கூங்குளம் எதிப்பாளர்கள் செல் போன் உபயோகிக்காமல் இருக்கத் தயாரா? உதயகுமார் தமிழ்நாட்டில் செல் போன் டவர்களே இருக்ககூடாது என்றும் போராடுவாரா? தினமும் மிக மோசமான கார் விபத்துகள் நடக்கின்றன. தமிழ் நாட்டில் கார்களே இருக்ககூடாது என்றும் போராடுவாரா?

    ReplyDelete