Sunday, November 13, 2011

ரஜினியின் பன்ச் தந்திரம் - ராஜ் டிவியில்

இன்றுமுதல் ரஜினியின் பன்ச் வசனங்கள் - தொழிலுக்கு வாழ்க்கைக்கும் - ராஜ் டிவியில் தொடராக ஆரம்பிக்கிறது. முதல் மூன்று எபிசோட் ஞாயிறு காலை 12 மணிக்குத் தொடங்கி வெளியாகும். இந்த கர்ட்டன் ரெய்சருக்கு அடுத்து ஷோ ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அன்று வெளியாகும் என்று அறிகிறேன். இந்த நிகழ்ச்சி, பி.சி.பாலசுப்ரமணியன், ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் எழுதி கிழக்கு பதிப்பகம் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ள புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. (புத்தகத்தை வாங்க: தமிழில் | ஆங்கிலத்தில்)


‘நம்ம கிராமம்’ - இணையத்தளங்களுக்கான போட்டி

நேற்று மதியம் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். பேராசிரியர் அஷோக் ஜுன்ஜுன்வாலாவின் RTBI (Rural Technology and Business Incubator) என்ற குழுவின்கீழ், இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் தனக்கென ஒரு இணையத்தளத்தை நடத்துமாறு எப்படித் தூண்டலாம் என்பது தொடர்பான ஒரு முயற்சி இது.

இந்தியாவில் சுமார் 6.5 லட்சம் கிராமங்கள் உள்ளன. இவற்றில் சிலவற்றில் மிகக் குறைவாக 500 மக்களே வசிக்கின்றனர். சிலவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வசதிகளில் நிறைய வேறுபாடுகள். எனவே முதல் முயற்சியாக, ஒரு முன்னோடித் திட்டமாக தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தை எடுத்துக்கொண்டு, அங்கு குறைந்தது 50 கிராமங்களுக்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு இணையத்தளம் உருவாக்கும் போட்டி ஒன்றை நடத்துவது என்று முடிவு செய்தனர்.

ஆர்.டி.பி.ஐ குழுவினர், இந்தப் பகுதியில் உள்ள பொறியியல் அல்லது கலை/அறிவியல் கல்லூரிகள் பலவற்றையும் தொடர்புகொண்டு இந்தப் போட்டி பற்றி விளக்கியுள்ளனர். அதையடுத்து 55 குழுக்கள் உருவாகின. ஒரு குழுவில் 3 பேர். இதில் ஒருவராவது அவர்கள் எந்த கிராமத்துக்காக இணையத்தளத்தை உருவாக்குகிறார்களோ அந்த கிராமத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்.

அதையடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் ஜூம்லா CMS-ல் எப்படி ஓர் இணையத்தளத்தை உருவாக்குவது என்று பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கலை/அறிவியல் கல்லூரி மாணவர்கள் கணினியைப் பயன்படுத்துவதில் புதியவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொறியியல் கல்லூரிகளில்கூட மிகப் பெரிய வசதிகள் இருப்பதாகச் சொல்லிவிட முடியாது.

இப்படி உருவாக்கப்பட்ட 55 தளங்களையும் பரிசீலித்து டிசைன், அதில் உள்ள தகவல்கள், கூகிள் வரைபடத்தில் அவர்கள் ஏற்றியிருக்கும் இடம் சார்ந்த தகவல்கள், படங்கள் போன்றவற்றின் அடிப்படையில் 10 தளங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டியது நீதிபதிகளான எங்கள் பொறுப்பு. இந்தக் குழுவில் ஐஐடி மெட்ராஸ் எலெக்ட்ரிகல், கம்ப்யூட்டர் சயன்ஸ் பேராசிரியர்கள் சிலர், தொழில்துறையிலிருந்து சிலர், ஐஐடி மாணவர் ஒருவர் (கல் செக்) என்று இருந்தோம்.

இந்தத் தளங்கள் யாவுமே இப்போது பொதுவெளியில் கிடையாது. இவை அனைத்துமே ஐஐடி மெட்ராஸ் இண்ட்ரானெட்டில் மட்டுமே உள்ளவை. முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 10 தளங்களுக்கும் மேலும் ஒரு மாதம் அவகாசம் உள்ளது. அந்த நேரத்தில் இவர்கள் தத்தம் தளங்களை மேலும் சீரமைக்கலாம். அடுத்த மாதம் இந்தக் குழுவினர் அனைவரும் தத்தம் தளங்களை முன்வைத்து ஒரு பிரசெண்டேஷன் செய்யவேண்டும். அதில் வெற்றிபெறுவோருக்கு பணப் பரிசு உண்டு.

அந்தக் கட்டத்துக்குப் பிறகு இந்தத் தளங்கள் பொதுப் பார்வைக்குக் கொண்டுவரப்படும் என்று நினைக்கிறேன்.

ஆனால் அத்துடன் இந்தத் திட்டம் நின்றுவிட்டால் யாருக்கும் உபயோகமில்லை. ஒரு தளம் தினம் தினம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். இந்தத் தளங்களுக்கு யார் உரிமையாளர்? இந்தத் தளத்தில் சர்ச்சைக்குரிய தகவல் இடம் பெற்றால் என்ன ஆகும்? உள்ளூர்ப் பிரச்னைகள் எந்த ரூபத்தில் வெளியே தரப்படும்? சர்ச்சைகள் தாண்டி, இந்தத் தளத்தின்மூலம் இந்த கிராமத்தின் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்? பிறருக்கு என்ன பயன்? இந்தத் தளங்களை வடிவமைத்து உருவாக்கிய கல்லூரி மாணவர்கள் படித்துப் பட்டம் பெற்று வேலை தேடி வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டால் யார் மேற்கொண்டு இதனைப் பராமரிப்பது?

இணையத்தளமா, விக்கியா? கிராமத் தளம் என்பதற்கு எது சரியான தொழில்நுட்பம்? இணையப் பெருவெளியில் இவை துண்டு துண்டாக எங்கோ சிதறியிருக்கவேண்டுமா அல்லது ஏதேனும் ஒரு குடையின்கீழ் இருக்கவேண்டுமா? எந்த அளவுக்கான சுதந்தரத்துடன் இவை இயங்கவேண்டும்? (அதாவது பல்வேறு அரசு அமைப்புகள் இவற்றைக் கைப்பற்ற முயற்சி செய்யுமா? இதில் அரசியல் தலையீடுகள் எப்படி இருக்கும்?) இந்தத் தளங்கள் உள்ளூர் சண்டியர்களை உயர்த்திக் காட்டவென்று கைப்பற்றப்பட்டுவிடுமா?

ஒரு கிராமத்துக்கு ஒரு தளம்தான் இருக்கவேண்டும் என்றில்லை! ஆனால் ஒரு தளமாவது இருக்கவேண்டும். நாங்கள் பார்த்த சில தளங்களை மாணவர்கள் மிக நன்றாகச் செய்திருந்தனர் என்றாலும் பல குறைகள் இல்லாமல் இல்லை. தேர்வு செய்யப்பட்ட தளங்கள் அனைத்துமே தமிழ்/ஆங்கிலம் என்று இரு மொழிகளிலும் இருந்தது நல்ல செய்தி. ஆனால் தமிழ்/ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுத்தின் தரம் குறைவாக இருந்தது. எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் மலிந்திருந்தன. இதுவும் புரிந்துகொள்ளக்கூடியதே. இன்றைய கல்விமுறைமீதான விமரிசனம்தான் இது. கதை சொல்லும் திறனிலும் முன்னேற்றம் தேவை. அழகான வடிவமைப்பு என்பதில் மேலும் தேர்ச்சி தேவை. ஆனால் இதில் பெரும்பாலானோர் முதன்முதலாகக் கணினியைப் பயன்படுத்துபவர்கள் என்பதைக் கவனிக்கவேண்டும். இணையம், மின் வசதி ஆகியவையே மிகவும் சிக்கலான நிலையில்தான் கிராமங்களில் உள்ளன. போட்டி என்ற உந்துதலே இவர்கள் அனைவரையும் மிகுந்த பிரயாசையுடன் இதில் ஈடுபடச் செய்துள்ளது. இடையில் கல்லூரிப் பரீட்சையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி இந்தத் தளங்களுக்குப் பெரும் தேவை இருக்கின்றன என்று சொல்லலாம். மதுரை சமூக அறிவியல் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ரங்கசாமி இதுபற்றிப் பேசிக்கொண்டே இருப்பார். அதனால்தான் என் ட்விட்டர் தகவலைப் பார்த்ததும், இது தொடர்பாக மேலும் விவரங்கள் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். அடுத்த மாத நிகழ்ச்சிக்கு அவரை அழைக்குமாறு ஆர்.டி.பி.ஐ-க்குப் பரிந்துரைக்கிறேன்.

சாரு நிவேதிதாவின் நாவல் - எக்ஸைல்

சாரு நிவேதிதாவின் நாவல் ‘எக்ஸைல்’ கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளிவருகிறது.


புத்தகத்தை முன்பதிவு செய்ய: https://www.nhm.in/shop/978-81-8493-204-1.html

Friday, November 11, 2011

உத்தப்புரம் கோவில் நுழைவு: மகிழ்ச்சியும் அதிர்ச்சியும்

இன்று காலை தி ஹிந்து செய்தித்தாளில் பார்த்த ஒரு செய்தி மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் அதிர்ச்சியையும் அளித்தது. செய்தியைவிட இரண்டு படங்கள் கதையைத் தெளிவாகச் சொல்கின்றன.

உத்தப்புரம் கிராமத்தில் தலித்துகள் தங்கள் பகுதிகளுக்குள் நுழையக்கூடாது என்பதற்காக ஒரு சுவரையே எழுப்பியிருந்தனர் ஆதிக்க சாதியினர். கம்யூனிஸ்டுகள் முன்னின்று நடத்திய பலத்த போராட்டங்களுக்குப் பின், நிர்வாகம் தலையிட்டு அந்தச் சுவரை உடைத்துத் தள்ளியது. இப்போது அதே கிராமத்தில் முத்தாலம்மன் கோவிலில் தலித்துகள் நுழைந்து வழிபாடு நடத்தியுள்ளனர். அப்படி உள்ளே நுழைந்த தலித்துக் குடும்பங்களின் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சிதான் முதல் படம்.


அதே செய்தியில் தென்பட்ட அடுத்த படம்தான் அதிர்ச்சியைக் காண்பிக்கிறது. ஆதிக்க சாதி மக்களின் முகத்தில் தென்படும் அதிர்ச்சி, பதட்டம் இரண்டையும் அந்தப் படம் பயங்கரமாகக் காட்டுகிறது.

இந்த நிலையில் அந்த கிராமத்தில் தலித்துகளின் நிலை எப்படி இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக்கூடாதே என்று பயமாகவும் இருக்கிறது.

Wednesday, November 09, 2011

ஸ்பாட் ஃபிக்ஸிங் - பாகிஸ்தான் கிரிக்கெட்

மூன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஒன்று சிறைத்தண்டனை அளித்துள்ளது. சல்மான் பட், அப்போது பாகிஸ்தான் கேப்டனாக இருந்தார். அவருக்கு 30 மாதம் சிறைத்தண்டனை. முகமது ஆசீஃபுக்கு 12 மாதம். முகமது ஆமீருக்கு 6 மாதம்.

கிரிக்கெட்டைத் தீவிரமாகப் பார்த்து வருவோருக்கு இந்த வழக்கு ஆதியோடு அந்தமாகப் புரிந்திருக்கும். நான் ஒன்றும் புதிதாகச் சொல்லப்போவதில்லை.

ஆகஸ்ட் 2010-ல் இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தது பாகிஸ்தான் அணி. லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒரு டெஸ்ட் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங் என்ற கெட்ட காரியத்தைச் செய்தார்கள் என்பதுதான் இவர்கள்மீதான குற்றச்சாட்டு. அது என்ன கெட்ட காரியம்?

இங்கிலாந்தில் பெட்டிங் என்பது சட்டபூர்வமானது. எதன்மீதும் பெட் கட்டலாம். ஐஸ்வர்யா ராய்க்கு ஆண் குழந்தை பிறக்குமா, பெண் குழந்தை பிறக்குமா? உலக அழகிப் போட்டியை யார் வெல்வார்? ஐ.பி.எல்.லில் கடைசி நான்கு இடத்தை யார் அடைவார்கள்? இப்படி ஒரு நிகழ்வின் முடிவுமீதான பெட்டிங் என்பது ஒன்று. இது சாதாரண பெட்டிங்.

ஆனால் அது மட்டுமல்ல. சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் சைதை துரைசாமி வென்றுவிடுவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெல்வார்? அதற்கென்று ஒரு ஸ்பெஷல் வகை பெட்டிங் உள்ளது. அதன் பெயர் ஸ்ப்ரெட் பெட்டிங் என்பது. அவர் 5,00,000 - 5,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்று சரியாகக் கணித்தால் உங்களுக்குப் பணம். மாறாக, 7,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்றோ, 2,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்றோ நீங்கள் தவறாகக் கணித்திருந்தால் நீங்கள் பெட் கட்டிய பணம் காலி. இதை கிரிக்கெட்டுக்கு எப்படி எடுத்துச் செல்வது? இந்தியா எத்தனை ரன் வித்தியாசத்தில் ஜெயிக்கும் என்பதுமீதான பெட்டாகப் பாருங்கள்.

இதற்கும் அடுத்த கட்டமாக ஒரு பெட்டிங் உள்ளது. அதுதான் ஸ்பாட் பெட்டிங். ஒரு பெரும் நிகழ்வில் நடக்கும் பலப்பல சிறு நிகழ்வுகள்மீது பெட் கட்டுவது. மொத்தம் எத்தனை நோ-பால்கள் வீசப்படும்? ஆட்டத்தில் முதல் ஓவரை யார் போடுவார்கள்? சச்சின் 100-வது செஞ்சுரியை அடிப்பாரா, மாட்டாரா? சச்சின் கேட்ச் கொடுத்து அவுட் ஆவாரா அல்லது எல்.பி.டபிள்யூ ஆவாரா?

இங்குதான் ‘ஃபிக்ஸிங்’ நடைபெற வாய்ப்புகள் அதிகம். பொதுவாக, ஓர் ஆட்டத்தை வெல்ல அல்லது தோற்க, பலரது ஈடுபாடும் தேவை. ஒற்றை ஆள் மட்டுமே ஒரு கிரிக்கெட் ஆட்டத்தை வெல்வது அல்லது தோற்பது கடினம். பலரைச் சேர்த்துக்கொண்டு கெட்ட காரியம் செய்வது கடினம். யாராவது ஒருவர் லீக் அவுட் செய்துவிட்டால் கோவிந்தா.

எனவேதான் ஸ்பாட் ஃபிக்ஸிங் எளிது. உதாரணமாக, ஒரு கேப்டனை மட்டும் கைக்குள் போட்டுக்கொண்டால் போதும். யார் முதல் ஓவரை வீசுவது என்பதைத் தீர்மானிப்பது கேப்டன் மட்டும்தான். அதேபோல ஒருவருக்கு அடுத்து யார் பேட்டிங் செய்யப் போகவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதும் கேப்டன்தான். எனவே கேப்டனுக்குக் கொஞ்சம் பைசாவைத் தள்ளிவிட்டு, நாம் சொல்கிற ஆளை முதல் ஓவர் வீசச் சொன்னால், அதை முன்கூட்டியே தெரிந்திருப்பதால் பெட்டிங்கில் பணத்தைப் போட்டு நல்ல காசு பார்க்கலாம். சரி, மேலும் மேலும் கெட்ட காரியங்கள் செய்யவேண்டும் என்றால்? அதையும் கேப்டனே பார்த்துக்கொள்வார். அவருக்கு நல்ல கனமாகப் பைசல் செய்துவிட்டால் போதும்.

உதாரணமாக, முதல் ஓவர் வீசும் ஒரு பந்துவீச்சாளரை அழைத்து, அடுத்தடுத்து மூன்று நோ-பால் வீசு என்று சொல்லி, அவருக்குக் கொஞ்சம் தனியாக செட்டில் செய்துவிட்டால் முடிந்தது.

நீங்கள் 18 வயதுதான் ஆனவர் என்றால் உங்களுக்கு தென் ஆப்பிரிக்காவின் ஹன்ஸி குரோன்யேவைத் தெரிந்திருக்காது. அற்புதமான விளையாட்டு வீரர். மிக நன்றாக பேட்டிங் செய்வார். சுமாராகப் பந்துவீசி சில விக்கெட்டுகளையும் கைப்பற்றுவார். எல்லா தென்னாப்பிரிக்க வீரர்களையும் போல மிக அருமையாக ஃபீல்டிங் செய்வார். அணியில் கேப்டன் ஆனார். தென்னாப்பிரிக்க அணியை உச்சத்துக்குக் கொண்டுசென்றார். ஒரு நாள் போட்டிகளில் நெருப்புபோல் விளையாடுவார்கள். மிகவும் தெய்வ பக்தி கொண்ட கிறிஸ்தவர்.

ஆனால், அவர் இந்த ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஒரு பெரும் முன்னோடி என்று தெரியவந்ததும் உலகே அதிர்ந்துபோனது. நீதிமன்றத்தில் அவரே இதனை ஒப்புக்கொண்டார். கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டார். பின்னர் மர்மமான முறையில் ஒரு விமான விபத்தில் பலியானார்.

சல்மான் பட் அதே காரியத்தைத்தான் செய்திருக்கிறார். ஆனால் காரியம் முடிந்தவுடனேயே பிடிபட்டுவிட்டார். ஏனெனில் நடந்தது ஒரு ‘ஸ்டிங்’ ஆபரேஷன். இந்தக் கெட்ட காரியர்கள் எல்லோருமே ஒரு தரகர் மூலமாகத்தான் பணம் பெறுவார்கள். அப்படிப்பட்ட ஒரு தரகரை ட்ராப் செய்ய முடிவெடுத்தது நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் என்ற பத்திரிகை. இதில் நகைமுரண் என்னவென்றால் இந்தப் பத்திரிகையே ஒரு கழிசடைப் பத்திரிகை. ரூப்பர்ட் மர்டாக்கின் இந்தப் பத்திரிகை செய்யாத கெட்ட காரியமே கிடையாது. வேறு ஒரு சர்ச்சையில் (ஃபோன் ஹேக்கிங்) சிக்கிய இந்தப் பத்திரிகை இப்போது மூடப்பட்டுவிட்டது.

இந்தப் பத்திரிகையின் நிருபர் ஒருவர் மஸர் மஜீத் என்ற தரகருக்குப் பணம் கொடுத்து அவரோடு பேசியவற்றையெல்லாம் ரகசியமாக டேப் செய்துவிட்டார். இந்தத் தரகர், சல்மான் பட்டை அழைத்து பாதிப் பணத்தை அவரிடம் கொடுத்து, மூன்று நோ-பால்கள் வீச ஏற்பாடு செய்தார். அதே மாதிரி நடந்தது. உடனே நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் நிருபர் இந்த விஷயத்தைத் தன் பத்திரிகையில் எழுத, ஸ்காட்லண்ட் யார்ட் இதை கிரிமினல் கேஸாகப் பதிவு செய்து, விசாரணை நடத்த, இறுதியில் மூன்று பாகிஸ்தான் வீரர்கள்மீதும் வழக்கு தொடுத்து, நடத்தி, தண்டனை கொடுத்து, ஜெயிலுக்கும் அனுப்பிவிட்டார்கள். (இந்திய நீதிமன்றங்கள்தான் தண்டம். பிற நாடுகளில் அப்படியல்ல!)

***

இதில் நாம் கேட்கவேண்டிய கேள்விகள் பல உள்ளன.

1. பாகிஸ்தானிகள் மட்டும்தான் கெட்ட காரியம் செய்கிறார்களா? பிற நாட்டவர்கள்?
2. கிரிக்கெட் என்றாலே சூதாட்டம்தானா? டிவி பார்க்கும் நாமெல்லாம் மடையர்களா? இந்திய அணியில் என்னவெல்லாம் நடக்கிறது என்று யாருக்குத் தெரியும்?
3. பெட்டிங், மேட்ச் பிக்ஸிங் ராக்கெட் எந்த அளவுக்கு விளையாட்டுப் போட்டிகளில் புரையோடிப் போயுள்ளது? இதனைச் சுத்தம் செய்வது சாத்தியம்தானா?
4. இதற்குப் பேராசை மட்டும்தான் காரணமா? நேர்மை, கண்ணியம் போன்றவையெல்லாம் இன்று காற்றில் பறக்கவிடப்படுவது ஏன்?
5. கிரிக்கெட்டில் மட்டும்தான் நேர்மை போன்றவை அவசியமா? தனி வாழ்வில்? தொழில்துறையில்? அரசியலில்?