Sunday, November 13, 2011

‘நம்ம கிராமம்’ - இணையத்தளங்களுக்கான போட்டி

நேற்று மதியம் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். பேராசிரியர் அஷோக் ஜுன்ஜுன்வாலாவின் RTBI (Rural Technology and Business Incubator) என்ற குழுவின்கீழ், இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் தனக்கென ஒரு இணையத்தளத்தை நடத்துமாறு எப்படித் தூண்டலாம் என்பது தொடர்பான ஒரு முயற்சி இது.

இந்தியாவில் சுமார் 6.5 லட்சம் கிராமங்கள் உள்ளன. இவற்றில் சிலவற்றில் மிகக் குறைவாக 500 மக்களே வசிக்கின்றனர். சிலவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வசதிகளில் நிறைய வேறுபாடுகள். எனவே முதல் முயற்சியாக, ஒரு முன்னோடித் திட்டமாக தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தை எடுத்துக்கொண்டு, அங்கு குறைந்தது 50 கிராமங்களுக்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு இணையத்தளம் உருவாக்கும் போட்டி ஒன்றை நடத்துவது என்று முடிவு செய்தனர்.

ஆர்.டி.பி.ஐ குழுவினர், இந்தப் பகுதியில் உள்ள பொறியியல் அல்லது கலை/அறிவியல் கல்லூரிகள் பலவற்றையும் தொடர்புகொண்டு இந்தப் போட்டி பற்றி விளக்கியுள்ளனர். அதையடுத்து 55 குழுக்கள் உருவாகின. ஒரு குழுவில் 3 பேர். இதில் ஒருவராவது அவர்கள் எந்த கிராமத்துக்காக இணையத்தளத்தை உருவாக்குகிறார்களோ அந்த கிராமத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்.

அதையடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் ஜூம்லா CMS-ல் எப்படி ஓர் இணையத்தளத்தை உருவாக்குவது என்று பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கலை/அறிவியல் கல்லூரி மாணவர்கள் கணினியைப் பயன்படுத்துவதில் புதியவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொறியியல் கல்லூரிகளில்கூட மிகப் பெரிய வசதிகள் இருப்பதாகச் சொல்லிவிட முடியாது.

இப்படி உருவாக்கப்பட்ட 55 தளங்களையும் பரிசீலித்து டிசைன், அதில் உள்ள தகவல்கள், கூகிள் வரைபடத்தில் அவர்கள் ஏற்றியிருக்கும் இடம் சார்ந்த தகவல்கள், படங்கள் போன்றவற்றின் அடிப்படையில் 10 தளங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டியது நீதிபதிகளான எங்கள் பொறுப்பு. இந்தக் குழுவில் ஐஐடி மெட்ராஸ் எலெக்ட்ரிகல், கம்ப்யூட்டர் சயன்ஸ் பேராசிரியர்கள் சிலர், தொழில்துறையிலிருந்து சிலர், ஐஐடி மாணவர் ஒருவர் (கல் செக்) என்று இருந்தோம்.

இந்தத் தளங்கள் யாவுமே இப்போது பொதுவெளியில் கிடையாது. இவை அனைத்துமே ஐஐடி மெட்ராஸ் இண்ட்ரானெட்டில் மட்டுமே உள்ளவை. முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 10 தளங்களுக்கும் மேலும் ஒரு மாதம் அவகாசம் உள்ளது. அந்த நேரத்தில் இவர்கள் தத்தம் தளங்களை மேலும் சீரமைக்கலாம். அடுத்த மாதம் இந்தக் குழுவினர் அனைவரும் தத்தம் தளங்களை முன்வைத்து ஒரு பிரசெண்டேஷன் செய்யவேண்டும். அதில் வெற்றிபெறுவோருக்கு பணப் பரிசு உண்டு.

அந்தக் கட்டத்துக்குப் பிறகு இந்தத் தளங்கள் பொதுப் பார்வைக்குக் கொண்டுவரப்படும் என்று நினைக்கிறேன்.

ஆனால் அத்துடன் இந்தத் திட்டம் நின்றுவிட்டால் யாருக்கும் உபயோகமில்லை. ஒரு தளம் தினம் தினம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். இந்தத் தளங்களுக்கு யார் உரிமையாளர்? இந்தத் தளத்தில் சர்ச்சைக்குரிய தகவல் இடம் பெற்றால் என்ன ஆகும்? உள்ளூர்ப் பிரச்னைகள் எந்த ரூபத்தில் வெளியே தரப்படும்? சர்ச்சைகள் தாண்டி, இந்தத் தளத்தின்மூலம் இந்த கிராமத்தின் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்? பிறருக்கு என்ன பயன்? இந்தத் தளங்களை வடிவமைத்து உருவாக்கிய கல்லூரி மாணவர்கள் படித்துப் பட்டம் பெற்று வேலை தேடி வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டால் யார் மேற்கொண்டு இதனைப் பராமரிப்பது?

இணையத்தளமா, விக்கியா? கிராமத் தளம் என்பதற்கு எது சரியான தொழில்நுட்பம்? இணையப் பெருவெளியில் இவை துண்டு துண்டாக எங்கோ சிதறியிருக்கவேண்டுமா அல்லது ஏதேனும் ஒரு குடையின்கீழ் இருக்கவேண்டுமா? எந்த அளவுக்கான சுதந்தரத்துடன் இவை இயங்கவேண்டும்? (அதாவது பல்வேறு அரசு அமைப்புகள் இவற்றைக் கைப்பற்ற முயற்சி செய்யுமா? இதில் அரசியல் தலையீடுகள் எப்படி இருக்கும்?) இந்தத் தளங்கள் உள்ளூர் சண்டியர்களை உயர்த்திக் காட்டவென்று கைப்பற்றப்பட்டுவிடுமா?

ஒரு கிராமத்துக்கு ஒரு தளம்தான் இருக்கவேண்டும் என்றில்லை! ஆனால் ஒரு தளமாவது இருக்கவேண்டும். நாங்கள் பார்த்த சில தளங்களை மாணவர்கள் மிக நன்றாகச் செய்திருந்தனர் என்றாலும் பல குறைகள் இல்லாமல் இல்லை. தேர்வு செய்யப்பட்ட தளங்கள் அனைத்துமே தமிழ்/ஆங்கிலம் என்று இரு மொழிகளிலும் இருந்தது நல்ல செய்தி. ஆனால் தமிழ்/ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுத்தின் தரம் குறைவாக இருந்தது. எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் மலிந்திருந்தன. இதுவும் புரிந்துகொள்ளக்கூடியதே. இன்றைய கல்விமுறைமீதான விமரிசனம்தான் இது. கதை சொல்லும் திறனிலும் முன்னேற்றம் தேவை. அழகான வடிவமைப்பு என்பதில் மேலும் தேர்ச்சி தேவை. ஆனால் இதில் பெரும்பாலானோர் முதன்முதலாகக் கணினியைப் பயன்படுத்துபவர்கள் என்பதைக் கவனிக்கவேண்டும். இணையம், மின் வசதி ஆகியவையே மிகவும் சிக்கலான நிலையில்தான் கிராமங்களில் உள்ளன. போட்டி என்ற உந்துதலே இவர்கள் அனைவரையும் மிகுந்த பிரயாசையுடன் இதில் ஈடுபடச் செய்துள்ளது. இடையில் கல்லூரிப் பரீட்சையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி இந்தத் தளங்களுக்குப் பெரும் தேவை இருக்கின்றன என்று சொல்லலாம். மதுரை சமூக அறிவியல் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ரங்கசாமி இதுபற்றிப் பேசிக்கொண்டே இருப்பார். அதனால்தான் என் ட்விட்டர் தகவலைப் பார்த்ததும், இது தொடர்பாக மேலும் விவரங்கள் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். அடுத்த மாத நிகழ்ச்சிக்கு அவரை அழைக்குமாறு ஆர்.டி.பி.ஐ-க்குப் பரிந்துரைக்கிறேன்.

8 comments:

  1. மிக்க நன்றி.ஏற்கெனவே இந்த முயற்சியைத் தொடங்கிவிட்டோம்.தினம் தினம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளல்,சர்ச்சைக்குரிய தகவல்கள்,மக்களுக்கு என்ன நன்மை,பிறருக்கு என்ன பயன்,அரசியல் தலையீடுகள்,உள்ளூர் சண்டியர்களின் தலையீடு இதெல்லாம் பதிலளிக்கப்படவேண்டிய கேள்விகள்தாம்.இருப்பினும் இதெற்கெல்லாம் சரியான பதிலுக்கு காத்திராமல், கிராம வாழ்வியலை ஆவனப்படுத்துவது மிக முக்கியம்.பல பிரச்சினைகளை பங்கேற்பு பதிவுகளின் மூலம் (எதை வெளியிடுவது)(Participatory Blogging) தீர்க்கலாம்.
    எங்களுடைய மாணிக்க நகர் வலைபூ (http://manikkanagar.blogspot.com/)மக்களால் அவர்கள் செல் போன் மூலம் பார்க்கப்பட்டது.
    நாம் வலைப்பூக்கள் தொடங்க தொடங்க அதுவே நல்வழியைக் காட்டி நம்மை வழிநடத்தும்.15.5.2011 அன்று நீங்கள் வேம்பார் வந்துசென்ற பிறகு செய்த முயற்சிகளின் பலனாக மன்னார் வளைகுடா வாழ்க்கை,PAD பணியாளர் ஆவணங்கள், மாணிக்க நகர் கிராம வலைபூ என்று 10000 பேரை சென்றடைந்திருக்கின்றோம்.
    தயவு செய்து IIT பேராசிரியர்களிடம் சொல்லுங்கள் அவர்கள் செய்யும் வேறெந்தப் பணியைவிடவும் இம் முயற்சி பெரிய அளவில் சமூக மாற்றூருவாக்கதிற்கு துணைநிற்கும். ஏனெனில் ஒவ்வொரு கிராமமும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள ஏங்கிக் கொண்டிருக்கின்றது.இந்த எக்கத்திற்கு வடிகால் தேவை.

    ReplyDelete
  2. ////ஒரு முன்னோடித் திட்டமாக தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தை எடுத்துக்கொண்டு, அங்கு குறைந்தது 50 கிராமங்களுக்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு இணையத்தளம் உருவாக்கும் போட்டி ஒன்றை நடத்துவது என்று முடிவு செய்தனர்.////சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த எங்களூர் புதுவயல் கிராமம் அதில் உண்டா ?

    ReplyDelete
  3. புதுவயல் இருந்தது. இரண்டாம் சுற்றுக்கு வெற்றி பெற்றதா இல்லையா என்பதை நான் இங்கே சொல்ல முடியாது. நிகழ்ச்சி நடத்துனர்கள் முறையாக அந்தந்தக் குழுவினருக்குத் தகவல் சொல்வார்கள்.

    ReplyDelete
  4. நன்றி. தளம் என்பது ப்ளாகா? அல்லது தனி இணைய தளமா?. நன்றி.

    ReplyDelete
  5. தளம் என்பது ப்லாக்.

    ReplyDelete
  6. ஏற்கனவே அரசு பதிவேடுகளில் இருக்கும் தகவல்களை இணையத்தில் பதிவாக்குவதில் உள்ள நடைமுறை பயன்கள் என்ன ? அப்பகுதி மக்களின் வாழ்க்கையில் இது மாற்றங்களை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா? புற்றீசல் போல பெருகி வரும் ப்ளாக்குகளில் இது போன்றவை தங்கள் நோக்கத்தை அடைய - தங்களுக்கான கவனத்தைப் பெற - இருக்கும் சிக்கல்களை எதிர் கொள்ளல் எங்கனம் ? கோவையிலிருக்கும் ஒரு பொறியியல் கல்லூரி ஆசிரியன் நான். உத்வேகமுள்ள ஒரு மாணவர் குழுவை இது போன்ற சமூகத்திற்கு பயன் தரும் செயல்களில் - ப்ரோஜக்ட்களில் - ஈடுபடுத்த விரும்புகிறோம். எங்களுக்கு தர ஆலோசனைகள் ஏதேனும் உள்ளனவா ? மிக்க நன்றி.

    ReplyDelete
  7. பிளாகர் இருக்கையில் ஜூம்லாவெல்லாம் எதற்கு? மேலும் கிராமங்களுக்கு டெக்ஸ்டைவிட, ஃபோட்டோ, ஆடியோ, வீடியோ போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும்.

    சரவணன்

    ReplyDelete
  8. இதை விட உருப்பிடியாக நான் கருதுவது; www.egovernments.org
    இதை தமிழ் நாட்டுக்கு கொண்டு வருவது - பழைய அரசில் முயற்சிகள் பலன் தரவில்லை - டைம் டு மார்க்கெட் வேகமாய் இருக்கும் ..

    ReplyDelete