Wednesday, November 09, 2011

ஸ்பாட் ஃபிக்ஸிங் - பாகிஸ்தான் கிரிக்கெட்

மூன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஒன்று சிறைத்தண்டனை அளித்துள்ளது. சல்மான் பட், அப்போது பாகிஸ்தான் கேப்டனாக இருந்தார். அவருக்கு 30 மாதம் சிறைத்தண்டனை. முகமது ஆசீஃபுக்கு 12 மாதம். முகமது ஆமீருக்கு 6 மாதம்.

கிரிக்கெட்டைத் தீவிரமாகப் பார்த்து வருவோருக்கு இந்த வழக்கு ஆதியோடு அந்தமாகப் புரிந்திருக்கும். நான் ஒன்றும் புதிதாகச் சொல்லப்போவதில்லை.

ஆகஸ்ட் 2010-ல் இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தது பாகிஸ்தான் அணி. லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒரு டெஸ்ட் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங் என்ற கெட்ட காரியத்தைச் செய்தார்கள் என்பதுதான் இவர்கள்மீதான குற்றச்சாட்டு. அது என்ன கெட்ட காரியம்?

இங்கிலாந்தில் பெட்டிங் என்பது சட்டபூர்வமானது. எதன்மீதும் பெட் கட்டலாம். ஐஸ்வர்யா ராய்க்கு ஆண் குழந்தை பிறக்குமா, பெண் குழந்தை பிறக்குமா? உலக அழகிப் போட்டியை யார் வெல்வார்? ஐ.பி.எல்.லில் கடைசி நான்கு இடத்தை யார் அடைவார்கள்? இப்படி ஒரு நிகழ்வின் முடிவுமீதான பெட்டிங் என்பது ஒன்று. இது சாதாரண பெட்டிங்.

ஆனால் அது மட்டுமல்ல. சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் சைதை துரைசாமி வென்றுவிடுவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெல்வார்? அதற்கென்று ஒரு ஸ்பெஷல் வகை பெட்டிங் உள்ளது. அதன் பெயர் ஸ்ப்ரெட் பெட்டிங் என்பது. அவர் 5,00,000 - 5,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்று சரியாகக் கணித்தால் உங்களுக்குப் பணம். மாறாக, 7,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்றோ, 2,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்றோ நீங்கள் தவறாகக் கணித்திருந்தால் நீங்கள் பெட் கட்டிய பணம் காலி. இதை கிரிக்கெட்டுக்கு எப்படி எடுத்துச் செல்வது? இந்தியா எத்தனை ரன் வித்தியாசத்தில் ஜெயிக்கும் என்பதுமீதான பெட்டாகப் பாருங்கள்.

இதற்கும் அடுத்த கட்டமாக ஒரு பெட்டிங் உள்ளது. அதுதான் ஸ்பாட் பெட்டிங். ஒரு பெரும் நிகழ்வில் நடக்கும் பலப்பல சிறு நிகழ்வுகள்மீது பெட் கட்டுவது. மொத்தம் எத்தனை நோ-பால்கள் வீசப்படும்? ஆட்டத்தில் முதல் ஓவரை யார் போடுவார்கள்? சச்சின் 100-வது செஞ்சுரியை அடிப்பாரா, மாட்டாரா? சச்சின் கேட்ச் கொடுத்து அவுட் ஆவாரா அல்லது எல்.பி.டபிள்யூ ஆவாரா?

இங்குதான் ‘ஃபிக்ஸிங்’ நடைபெற வாய்ப்புகள் அதிகம். பொதுவாக, ஓர் ஆட்டத்தை வெல்ல அல்லது தோற்க, பலரது ஈடுபாடும் தேவை. ஒற்றை ஆள் மட்டுமே ஒரு கிரிக்கெட் ஆட்டத்தை வெல்வது அல்லது தோற்பது கடினம். பலரைச் சேர்த்துக்கொண்டு கெட்ட காரியம் செய்வது கடினம். யாராவது ஒருவர் லீக் அவுட் செய்துவிட்டால் கோவிந்தா.

எனவேதான் ஸ்பாட் ஃபிக்ஸிங் எளிது. உதாரணமாக, ஒரு கேப்டனை மட்டும் கைக்குள் போட்டுக்கொண்டால் போதும். யார் முதல் ஓவரை வீசுவது என்பதைத் தீர்மானிப்பது கேப்டன் மட்டும்தான். அதேபோல ஒருவருக்கு அடுத்து யார் பேட்டிங் செய்யப் போகவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதும் கேப்டன்தான். எனவே கேப்டனுக்குக் கொஞ்சம் பைசாவைத் தள்ளிவிட்டு, நாம் சொல்கிற ஆளை முதல் ஓவர் வீசச் சொன்னால், அதை முன்கூட்டியே தெரிந்திருப்பதால் பெட்டிங்கில் பணத்தைப் போட்டு நல்ல காசு பார்க்கலாம். சரி, மேலும் மேலும் கெட்ட காரியங்கள் செய்யவேண்டும் என்றால்? அதையும் கேப்டனே பார்த்துக்கொள்வார். அவருக்கு நல்ல கனமாகப் பைசல் செய்துவிட்டால் போதும்.

உதாரணமாக, முதல் ஓவர் வீசும் ஒரு பந்துவீச்சாளரை அழைத்து, அடுத்தடுத்து மூன்று நோ-பால் வீசு என்று சொல்லி, அவருக்குக் கொஞ்சம் தனியாக செட்டில் செய்துவிட்டால் முடிந்தது.

நீங்கள் 18 வயதுதான் ஆனவர் என்றால் உங்களுக்கு தென் ஆப்பிரிக்காவின் ஹன்ஸி குரோன்யேவைத் தெரிந்திருக்காது. அற்புதமான விளையாட்டு வீரர். மிக நன்றாக பேட்டிங் செய்வார். சுமாராகப் பந்துவீசி சில விக்கெட்டுகளையும் கைப்பற்றுவார். எல்லா தென்னாப்பிரிக்க வீரர்களையும் போல மிக அருமையாக ஃபீல்டிங் செய்வார். அணியில் கேப்டன் ஆனார். தென்னாப்பிரிக்க அணியை உச்சத்துக்குக் கொண்டுசென்றார். ஒரு நாள் போட்டிகளில் நெருப்புபோல் விளையாடுவார்கள். மிகவும் தெய்வ பக்தி கொண்ட கிறிஸ்தவர்.

ஆனால், அவர் இந்த ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஒரு பெரும் முன்னோடி என்று தெரியவந்ததும் உலகே அதிர்ந்துபோனது. நீதிமன்றத்தில் அவரே இதனை ஒப்புக்கொண்டார். கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டார். பின்னர் மர்மமான முறையில் ஒரு விமான விபத்தில் பலியானார்.

சல்மான் பட் அதே காரியத்தைத்தான் செய்திருக்கிறார். ஆனால் காரியம் முடிந்தவுடனேயே பிடிபட்டுவிட்டார். ஏனெனில் நடந்தது ஒரு ‘ஸ்டிங்’ ஆபரேஷன். இந்தக் கெட்ட காரியர்கள் எல்லோருமே ஒரு தரகர் மூலமாகத்தான் பணம் பெறுவார்கள். அப்படிப்பட்ட ஒரு தரகரை ட்ராப் செய்ய முடிவெடுத்தது நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் என்ற பத்திரிகை. இதில் நகைமுரண் என்னவென்றால் இந்தப் பத்திரிகையே ஒரு கழிசடைப் பத்திரிகை. ரூப்பர்ட் மர்டாக்கின் இந்தப் பத்திரிகை செய்யாத கெட்ட காரியமே கிடையாது. வேறு ஒரு சர்ச்சையில் (ஃபோன் ஹேக்கிங்) சிக்கிய இந்தப் பத்திரிகை இப்போது மூடப்பட்டுவிட்டது.

இந்தப் பத்திரிகையின் நிருபர் ஒருவர் மஸர் மஜீத் என்ற தரகருக்குப் பணம் கொடுத்து அவரோடு பேசியவற்றையெல்லாம் ரகசியமாக டேப் செய்துவிட்டார். இந்தத் தரகர், சல்மான் பட்டை அழைத்து பாதிப் பணத்தை அவரிடம் கொடுத்து, மூன்று நோ-பால்கள் வீச ஏற்பாடு செய்தார். அதே மாதிரி நடந்தது. உடனே நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் நிருபர் இந்த விஷயத்தைத் தன் பத்திரிகையில் எழுத, ஸ்காட்லண்ட் யார்ட் இதை கிரிமினல் கேஸாகப் பதிவு செய்து, விசாரணை நடத்த, இறுதியில் மூன்று பாகிஸ்தான் வீரர்கள்மீதும் வழக்கு தொடுத்து, நடத்தி, தண்டனை கொடுத்து, ஜெயிலுக்கும் அனுப்பிவிட்டார்கள். (இந்திய நீதிமன்றங்கள்தான் தண்டம். பிற நாடுகளில் அப்படியல்ல!)

***

இதில் நாம் கேட்கவேண்டிய கேள்விகள் பல உள்ளன.

1. பாகிஸ்தானிகள் மட்டும்தான் கெட்ட காரியம் செய்கிறார்களா? பிற நாட்டவர்கள்?
2. கிரிக்கெட் என்றாலே சூதாட்டம்தானா? டிவி பார்க்கும் நாமெல்லாம் மடையர்களா? இந்திய அணியில் என்னவெல்லாம் நடக்கிறது என்று யாருக்குத் தெரியும்?
3. பெட்டிங், மேட்ச் பிக்ஸிங் ராக்கெட் எந்த அளவுக்கு விளையாட்டுப் போட்டிகளில் புரையோடிப் போயுள்ளது? இதனைச் சுத்தம் செய்வது சாத்தியம்தானா?
4. இதற்குப் பேராசை மட்டும்தான் காரணமா? நேர்மை, கண்ணியம் போன்றவையெல்லாம் இன்று காற்றில் பறக்கவிடப்படுவது ஏன்?
5. கிரிக்கெட்டில் மட்டும்தான் நேர்மை போன்றவை அவசியமா? தனி வாழ்வில்? தொழில்துறையில்? அரசியலில்?

10 comments:

  1. அண்ணா .இதற்குபதில்: கிரிக்கெட் தவிர வேறு விளயாட்டுகளை புறக்கணிப்பதால் தான் இந்த வினை. பெட்டிங் பற்றி நான் அரைகுறையாகதான் கேள்வி பட்டுள்ளேன். அதன் முறைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளீர்கள். இது சம்பந்தமாக எதாவது புத்தகம் எழுதிகிறீங்களா.............

    ReplyDelete
  2. பாகிஸ்தான் குடிமகன்களான இந்த வீரர்களுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் தண்டனை விதிக்கலாமா? (குற்றம் இங்கிலாந்தில நடந்து இருந்தாலும்). அதாவது தூதரக முறைப்படி எதாவது அனுமதி பாகிஸ்தானிடம் இருந்து வாங்கப்பட்டதா?

    ReplyDelete
  3. எந்த நாட்டுக் குடிமக்களையும் வேறு எந்த நாடும் சிறையில் அடைக்கலாம். குற்றம் நடந்துள்ள நாட்டில் உள்ள சட்டம் ஒழுங்குத் துறைக்கு இந்த அதிகாரம் உண்டு. குற்றம் நடந்துள்ளது இங்கிலாந்தில். சல்மான் பட், ஆசீஃப், ஆமீர் போன்றோர் இங்கிலாந்தில் முன்னமேயே கைது செய்யப்பட்டுவிட்டனர். அதன் பின்னர்தான் பிணையில் வெளியே இருந்தனர். வழக்கு நடப்பதற்கு முன்னமேயே ஐசிசி அவர்களைத் தடை செய்திருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தடை செய்திருந்தது.

    ReplyDelete
  4. //(இந்திய நீதிமன்றங்கள்தான் தண்டம். பிற நாடுகளில் அப்படியல்ல!)//

    the above comment is totally unwarranted and unsubstantiated. Our judicial system is just under-staffed and over-burdened with frivolous litigations (eg. jaya's 109 adjournments in DA case). Would appreciate if you could delete these comments

    ReplyDelete
  5. இ.சி.ஆர்.: நான் என் கருத்தை எழுதியிருக்கிறேன்.

    அதனை அழிக்கப்போவதில்லை.

    நீங்கள் உங்கள் கருத்தை எழுதுங்கள். அதை substantiate செய்யுங்கள்.

    எதையெல்லாம் நீக்கினால், இந்திய நீதிமன்றங்கள் உலகத் தரத்துக்குப் போகும் என்று எனக்குச் சொல்லுங்கள். முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கை எடுத்துக்கொள்ளுங்கள். அது எவ்வளவு வேகமாக, தெளிவாக எடுத்தாளப்பட்டது, நீதி தரப்பட்டது என்பதை ஆராயுங்கள். அதற்கு இணையான ஒரு இந்திய வழக்கை எடுத்துக்கொண்டு அதைப் பற்றி ஆராய்ந்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். பிறகு பார்க்கலாம்.

    ReplyDelete
  6. சச்சின் கூட ஒரு முறை ,தான் விளையாட சிரமப்பட்ட பவ்லர்கள் யார் என்று கேட்கும் போது குரோனியேவை குறுப்பிட்டிருந்தார்.இதுல கொடுமையான விஷயம் அந்த பிக்சிங் விஷயத்தில் சிக்கிய நிக்கி போயே மற்றும் கிப்ஸ் எங்க இந்திய போலிஸ் தங்கள கைது பண்ணுமோனு கொஞ்ச நாள் இந்திய சுற்றுப் பயணங்களயே தவிர்த்தனர் ஆனா இப்ப அதெல்லாம் என்ன ஆச்சுனு தெரியல?!

    ReplyDelete
  7. //அதனை அழிக்கப்போவதில்லை.

    நீங்கள் உங்கள் கருத்தை எழுதுங்கள். அதை substantiate செய்யுங்கள்//

    I respect you man.

    ReplyDelete
  8. ராபின் சிங்Thu Nov 10, 11:37:00 AM GMT+5:30

    என்ன பத்திரியாரே ..... ஸ்பாட் ஃபிக்சிங் மேட்ச் முடிவுகளை பாதிப்பதில்லை .... சும்மா நாலு நோ பால், ஒரு பவுலிங் சேன்ஞ், ஒரு பேட்டிங் வரிசை மாற்றம், ரெண்டு ஓவர் த்ரோ .... இப்பிடி இண்டு இடுக்குல நாட்டையோ, ஆட்டத்தையோ பாதிக்காம காசு பாக்குறாங்க ...இதுல உங்களுக்கு என்னா கவல??..... நீங்க தான் 5 ஆயிரம் கோடி, 6 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரத்துல அமுக்கப்பட்டிருந்தாலும் நாட்டையோ, தொலைதொடர்பையோ பாதிக்காது ..... அது நாட்டுக்குக் கேடில்லை நல்லதுன்னு ராசாவையே போற்றிப் புகழும் மகாராசாவாச்சே .... நீங்க போய் ஏன் இந்த அல்ப்ப ஸ்பாட் ஃபிக்சிங்குக்கு கவலைப்பட்டு, 4 பாராகிராப் எழுதி, டயத்த வேஸ்ட் பண்ணிக்கிட்டு .... அந்த நேரத்துல நாலு புத்தகத்துக்கு புரூஃப் பாக்கலாம்ல !!!

    ReplyDelete
  9. ராபின் சிங் தமிழில் எழுதியிருக்கிறார். புனைப்பெயரோ? நிற்க.


    ஸ்பாட் பிக்சிங் பேட்டிங் மூலம் இவ்வளவு காசு பார்க்க முடிகிறதே - அதுவும் சட்ட பூர்வமாக, அதாவது வருமான வரி செலுத்தி சம்பாதிப்பது!

    எப்படிங்க, எப்படி - கிரிகெட் ரசிகர்கள் அதிகமா? கிரிகெட் வெறியர்கள் அதிகமா?? இல்லை இதை எல்லாம் தாண்டி கிரிகெட் ''பெட்டிங்கில்'' தோற்கும் 'அசடுகள்' அதிகமா???

    ஏன் இந்த சந்தேகம் என்றால் பெட்டிங்கை ஒரு வியாபாரமாக நடத்துபவர்கள் தங்களுக்கு சாதகமாக நிலை ஏற்படுத்த இப்படி விளையாடுபவர்களை கைக்குள் போட்டுக்கொள்ள ''அட்வான்ஸ்'' போட்டு அள்ள முடிகிறதே!!

    ReplyDelete
  10. sir...book fair nadakkuma?jan 2012 la 4 week endkkum ticket book panni iruken sir...tirupur to chennai...plz reply...nadanthal ungalai angu santhikiren...offer la niraya book en sister moolama vankiten sir...thanks...

    ReplyDelete