Sunday, May 25, 2003

தாய்லாந்து கணிணிப் புரட்சி

தாய்லாந்து அரசு தகவல் தொடர்பு தொழில் நுட்பம் எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணத்தோடு குறைந்த விலையில் மக்களுக்கு கணிணிகள் போய்ச் சேர ஒரு புதுமையைப் படைத்திருக்கிறது.

The Hindu (25/03/2003) இல், ஆனந்த் பார்த்தசாரதி எழுதியுள்ள கட்டுரையில், "சின்சமுத்" என்னும் desktop கணிணிகள் வெறும் ரூ. 12,000 த்துக்கும், "சுத்சகோர்ன்" என்னும் laptop கணிணிகள் வெறும் ரூ. 22,000 க்கும் கிடைப்பதாக செய்தி வந்துள்ளது.

இது இந்தியாவில் நடப்பது எந்த நாளோ?

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் படிப்பு நிறுத்தம்

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சில நாட்கள் முன்னர் படிப்பு நிறுத்தல் போராட்டம் நடத்தினர். காரணமாக, தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அரசு அனுமதி தரவிருப்பதைக் காட்டினர். அரசு மருத்துவர்களும் இதற்கு ஆதரவு தந்தனர்.

விளைவு: நடுத்தர, மற்றும் அதற்குக் கீழ் உள்ள மக்களுக்குத்தான் தொல்லை.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி தருவதில் என்ன தவறு? இதனால் மருத்துவப் படிப்பு வியாபர மயமாக்கப்படும், பட்டம் பெற்று வரும் மருத்துவர்கள் தரமில்லாதவர்களாக இருப்பார்கள் என்று வேலை/படிப்பு நிறுத்தம் செய்வோர் கூறுவது சிரிக்கத் தக்கது.

தற்போது தமிழகத்தின் கல்லூரிகளில் 73,875 பொறியியல் இடங்கள் உள்ளன. இவற்றில் அரசு மற்றும் அரசுத் துணையோடு நடக்கும் கல்லூரிகளில் உள்ள இடங்கள் வெறும் 5,870 தான். தனியார் கல்லூரிகளின் இடங்களோ 68,005. ஆனால், மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்த மட்டில், மொத்த இடங்கள் வெறும் 1,255 மட்டுமே! இதில் ஒரே ஒரு தனியார் கல்லூரிதான் அடக்கம், 320 இடங்களோடு. (தகவல்: The Hindu, 24/05/2003)

இந்தத் தொகை, நிச்சயமாக 10,000-த்தையாவது தாண்ட வேண்டும். அப்பொழுதுதான் தேவையான அளவிற்கு மருத்துவர்கள் மாநிலத்திற்குக் கிடைப்பார்கள். அரசினால், இத்தனை கல்லூரிகளைக் கட்ட முடியாது. தனியார் துறையினால் மட்டுமே முடியும். இப்படியிருக்க மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஏன் இந்த முடிவை எதிர்க்க வேண்டும்?

தனியார் கல்லூரிகளின் தரத்தை நிச்சயிக்க வேண்டியது அதற்கான அரசின் துறைகள் மட்டுமே. படிப்பு/வேலை நிறுத்தம் செய்யும் கற்றுக்குட்டி மாணவர்களும் பொறுப்பு இல்லாத மருத்துவர்களும் அல்ல.

Saturday, April 19, 2003

இராக்கில் அடுத்து என்ன நடக்கும்?

ஜார்ஜ் புஷ்ஷும், டோனி பிளேரும் இராக்கில் சரமாரியாக குண்டு போட்டுத்தாக்கி பல இராக்கியர்களுக்கு ஒட்டுமொத்தமாக உலகிலிருந்தே விடுதலை கொடுத்துள்ளனர். சில தேர்ந்தெடுக்கப்பட்ட இராக்கியர்கள் மூலம் கைப்பாவை அரசை நிலைநாட்ட அவர்கள் நினைத்தால் அது நடக்காது என்றே தோன்றுகிறது.

இராக்கில் குர்து இனத்தவர் ஒரு பக்கம், அராபியர்களிலேயே ஷியா என்னும் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் (60%) ஒரு பக்கம், சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் மறுபக்கம் என ஒவ்வொருவரும் கூடிய சீக்கிரத்திலேயே ஒருவரை ஒருவர் ஒழிக்கப் புறப்படுவார்களோ என்று பயம் இருக்கிறது. இந்நிலை ஏற்பட்டால், இரான் ஷியாக்களுக்கு ஆதரவாகப் புறப்படலாம். துருக்கியோ குர்துக்களுக்கு எதிராக வட இராக்கில் போர் புரிய உள்ளே நுழையலாம். இராக்கின் சதாம் ஹுஸ்ஸேனின் பாத் கட்சியினைப் பின்பற்றிபவருக்கு ஆதரவாக சிரியா குழப்பம் விளைவிக்களாம். பாலஸ்தீனியருக்கு ஆதரவாக, இஸ்ரேலுக்கு எதிர்ப்பாக பல தீவிரவாதிகள் இராக்கில் உருவாகலாம். இதன் நடுவில், சதாம் ஹுஸ்ஸேனே அல்லது அவரது மகன்களோ, ஆதரவாளர்களோ குட்டையை இன்னும் குழப்பலாம். முன்னால் நாடுகடத்தப்பட்ட சதாம் ஹுஸ்ஸேனின் எதிரிகள் ஆளாளுக்கு தனக்குப் பதவி கிடைக்க்குமோ என்று ஒருவர் காலை ஒருவர் வாரிவிடலாம்.

இத்தனைக்கும் நடுவில், வற்றாத எண்ணைக்கிணறு நமக்கே என்ற ஆசையில் அமெரிக்க எண்ணை நிறுவனங்களும், அய்யோ போய்விட்டதே என்ற வெறியில் ரஷ்ஷிய, ஃபிரென்சு நிறுவனங்களும், ஏதாவது எச்சில் சோறாவது கிடைக்குமா என்று கெஞ்சும் பிரிட்டிஷ் நிறுவனங்களும், புணரமைப்பு என்ற பேரில், பில்லியன் டாலருக்கு அலைமோதும் அமெரிக்க, மற்றும் உலக நிறுவனங்கள் (இந்திய நிறுவனங்கள் உட்பட) என்னென்ன செய்யப்போகிறார்களோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

நாசமாக்குவதுதான் என் வேலை, சுத்தம் செய்யவேண்டியது உன் வேலை என்று அமெரிக்கா கழண்டுகொள்ள, அய்யோ-பாவம் ஐ.நா சபை தன்னால் முடிந்ததைச் செய்யும்.

கோமாளி புஷ்ஷோ, அடுத்து சிரியா என்று பாயத் தயார். பரிதாபம் பிளேர் "இது போதும், விட்டு விடுங்கள், இதற்கு மேல் என்னால் தாக்குப் பிடிக்க முடியாது" என்று ஓடும் நிலைக்குத் தயாராகி விட்டார்.

மாட்டிக்கொண்டு முழிப்பதென்னவோ இராக் மக்கள்.

தொலைதொடர்பு நிறுவனங்கள் - பகுதி 3

செல்லுலார் தொழில்நுட்பம் வளர்ச்சியடைய அடைய, செல்லுலார் சேவை தொடங்குவதற்கான முதலீடு நன்கு குறைந்தது. மேலும் மிகக் குறைவான காலகட்டத்திலேயே இந்தச் சேவையினைத் தொடங்க முடிந்தது. இத்துடன் கூட கையில் எடுத்துச் செல்லும் செல்லுலர் தொலைபேசி அதாவது கைக்கருவியின் (handset) விலையும் நன்கு குறைந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக செல்லுலார் நிறுவனங்கள் prepaid card என்னும் முன்கூட்டியே பணத்தை செலுத்தி உடனடியாகப் பெறக்கூடிய சேவையினைத் தொடங்க ஆரம்பித்தனர். இதன் மூலம், 15ஆ நிமிடத்தில், ஒருவரால் புது (செல்லுலார்) தொலைபேசி இணைப்பைப் பெற முடிந்தது. விண்ணப்பப் படிவங்கள் இல்லை, நெருக்கும் வரிசைகள் இல்லை, காத்திருக்கும் கவலைகள் இல்லை. சில நூறு ரூபாய்கள்தான் SIM கார்டு வாங்க. வெறும் 4000 ரூபாய்தான் கைகருவி வாங்க. அதுவும் கூட சிங்கப்பூரிலிருந்து வரும் நண்பர் வாங்கிக்கொண்டு வந்தாலோ அல்லது பர்ம பஜாரில் வாங்கினாலோ, வெறும் 2500-3000 ரூபாய்தான். இன்னும் சில நூறு ரூபாய்கள் அந்தக் கார்டில் செலுத்திக் கொண்டால், இந்தப் பணம் தீறும் வரையில் பேசலாம், கேட்கலாம். இந்த prepaid card தான் செல்லுலார் சேவையில் பெரும் புரட்சியைக் கொண்டு வந்தது.

இந்த prepaid முறை வரும் முன்னர் எந்த வகையில் தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டு வந்தன? Fixed Line, அதாவது கம்பிகள் மூலம் வழங்கப்படும் தொலைபேசியும் சரி, Mobile அதாவது செல்லுலார் தொலைபேசியும் சரி, முதலில் இணைப்பு பெறுபவரின் முகவரியை சரிபார்க்க வேண்டியிருந்தது. அதற்கு வங்கிக் கணக்கிருப்புப் புத்தகம், ரேஷன் கார்டு அல்லது பாஸ்போர்ட் தேவை. அதன் பிறகு, விண்ணப்பம் பூர்த்தி செய்து இணைப்பு வாங்க வேண்டும். இணைப்பு வாங்கும் போது deposit தொகையாக கிட்டத்தட்ட ரூ. 3000 செலுத்த வேண்டும் (நீங்கள் பேசிவிட்டு கட்டணத்தைச் செலுத்தாது ஓடிவிட்டால் நிறுவனங்களுக்கு இது மட்டுமாவது மிச்சம்!). அதன் பிறகு செல்லுலார் தொலைபேசியானால் கைக்கருவி வாங்க வேண்டும், கம்பி இணைப்பானால் சில, பல மாதங்களுக்குப் பிறகு உங்களது வீட்டிற்கு தொலைபேசித்துறையின் ஊழியர் இணைப்புத் தருவார், ஓர் தொலைபேசிக்கருவியும் கொடுப்பார். ஒவ்வொரு மாதம் முடிந்த பின்னும் (அல்லது இரு மாதத்திற்கு ஒருமுறை) நீங்கள் உபயோகித்த நிமிடங்களுக்கான bill வீடு வந்தடையும். கம்பி இணைப்பாக இருந்தால், DoT தொலைபேசிக் கட்டணம் செலுத்துமிடத்தில், கால்கடுக்கக் காத்திருந்து, பணம் கட்டி, (சில்லரை இல்லை என்று எரிந்து விழும் ஊழியரிடம் திட்டு வாங்கி), ஒரு சில நாள் தாமதமானால் கம்பி இணைப்பு அறுக்கப்பட்டு, ஊரெல்லாம் அலைந்து திரிந்து, லஞ்சம் அழுது இணைப்பை மீண்டும் பெற வேண்டியிருக்கும். செல்லுலார் தொலைபேசியானால் மாதக்கடைசியில் chequeஐ அவர்களது கட்டிடத்தில் இருக்கும் பெட்டியில் போட்டு விட்டு வந்தால் போதும்.

இந்த prepaidதான் தொலைபேசி இணைப்புகளில் பெருவாரியான எண்ணிகையில் உள்ளது இப்போதும். கிட்டத்தட்ட 70 விழுக்காடு இணைப்புகள் prepaid என்ற முறையில்தான் விற்கப்படுகின்றன.

கடந்த ஒரு வருடத்தில், கிட்டத்தட்ட 60 லட்சம் செல்லுலார் தொலைபேசி இணைப்புகள் கொடுகப்பட்டுள்ளன, நாடு முழுவதும்.

இதைப்பற்றிய மற்ற செய்திகளை பின்னர் பார்ப்போம்.

Sunday, February 16, 2003

இராக் போர்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இப்பொழுது நடந்து கொண்டிருப்பதால் வேலை பளு அதிகமாக உள்ளது. தொலைதொடர்பு நிறுவனங்கள் பற்றிய எண்ணங்கள் தொடரும் - சிறிது கால இடைவெளிக்குப் பிறகு.

அமெரிக்காவும், பிரிட்டனும் இராக் மீது போர் தொடுத்தே தீறுவேன் என்று ஏகாதிபத்திய அறிக்கை வெளியிட்டுக்கொண்டிறுந்தாலும், மற்ற நாடுகள், முக்கியமாக ஃபிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகள் அதை எதிர்த்திருப்பது வரவேற்கத் தகுந்தது. இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இதையே வலியுறுத்தியிறுப்பதும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால், இதையெல்லாம் விட மேலாக, 5 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட அமெரிக்க மக்களே நியூயார்க் நகரில் போர் எதிர்ப்பு மாநாடு நடத்தியிருப்பது பெருமகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. இன்னும் ஒரு சில அமெரிக்கர்கள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு தன்னாதிக்கமாக இராக் மீது போர் தொடுக்க அதிகாரம் இல்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட செனேட் (Senate) மற்றும் கீழவையின் (House of Representatives) அனுமதி இல்லாமல் அவர் இந்த விஷயத்தில் இயங்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளனர்.

இதனால் தேவையில்லாத போர் நடக்காது என்று நம்புவோம். இராக் அதிபர் சத்தாம் ஹுஸைன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு இடம் கொடுத்து தன் நாட்டில் உள்ள பொது அழிவு ஆயுதங்களை ஒட்டுமொத்தமாக அழித்தல் அவருக்கும், அவரது நாட்டு மக்களுக்கும், பிற நாட்டு மக்களுக்கும் மிகவும் நல்லது.