Sunday, February 29, 2004

தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 3

காப்பி முடிந்து, வந்திருந்த சென்னைப் பெரிய மனிதர்கள் ஒருவரோடொருவர் அளவளாவி முடிந்ததும், கேள்வி, பதில்கள் ஆரம்பித்தன. சுத்தமான ஆங்கிலத்தில் (அவ்வப்போது தமிழ்ச் சொற்களைத் தூவி) கேள்விகள் கேட்கப்பட்டன, அப்படியே பதில்களும் வழங்கப்பட்டன. (ஒருசிலர் அபத்தமான ஆங்கிலத்திலும் கேள்விகள் கேட்டனர், அபத்தமாக இருந்தாலும் ஆங்கிலத்தில் கேள்வி கேட்பதே பெருமை என்று நினைத்தனர் போலும்.) முதலில் கேள்விகள் கேட்ட சிலர் இரண்டு நிமிடங்கள் மகாதேவனின் பேச்சைப் புகழ்ந்து கடைசியில் சப்பென்ற கேள்விகளாய்க் கேட்டனர்.

கீழே ஒருசில கேள்விகளையும், பதில்களையும் தொகுத்துள்ளேன்.

1. தமிழ் எண்களுக்கான வரிவடிவம் எப்பொழுது தோன்றியது?

எழுத்துகளுக்கான வரிவடிவம் தோன்றியபோதே எண்களுக்கான வரிவடிவமும் தோன்றியிருக்க வேண்டும். அரிக்கமேடு கல்வெட்டுகளில் எண்களும் காணப்படுகின்றன.

2. இரண்டு 'ர'/'ற' ஏன்?

தொடக்கத்தில் 'ற'வுக்கு 'ர' சத்தம் கிடையாது. [நான் சொல்வது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். -பத்ரி], யாழ்ப்பாணத்தில் உச்சரிப்பதுபோல் 'ட்ர' (?) என்றுதான் இருந்தது, பின்னர் அழுத்தமான 'ர' ஆனது.

3. ஆயிரம் வருடங்களாக அப்படியே இருக்கிறதே தமிழ் [குறளைச் சுட்டிக்காட்டினார் கேள்வி கேட்டவர்: "சொல்லுதல் யார்க்கும் எளிதாம், அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்"], இது தமிழின் தேக்கத்தைக் குறிக்கிறதா (static), இல்லை, தமிழின் தாங்கும் சக்தியைக் (resistance power) குறிக்கிறதா?

இரண்டுக்குமிடையில் உள்ளது. ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகியும் தமிழால் பிறமொழியின் தாக்கத்தைத் தடுக்க முடிகிறது, தூய்மையை நிலைநிறுத்திக்கொள்ள முடிகிறது, சக்தியுடன் இருக்க முடிகிறது. அதன் சமகாலத்திய மொழிகளான வேதிக் சமஸ்கிருதம், லத்தீன், கிரேக்கம் ஆகியவை இன்று அழிந்துவிட்டாலும் தமிழால் இன்னமும் தாக்குப் பிடிக்க முடிகிறது. அதே சமயம் தமிழானது பிறமொழிச் சொற்களை ஒரேயடியாக விலக்கக் கூடாது. கணினித் துறைகளில் (தகவல் தொடர்புத் துறையில்) பல்லாயிரக்கணக்கான சொற்கள் புதிதாக ஆங்கிலத்தில் உருவாக்கப்படுகின்றன, அவற்றை தமிழில் கண்டுபிடித்தல் கடினமாக இருக்கலாம். இந்நிலையில் தமிழ், ஆங்கிலச் சொற்களை அப்படியே உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பழங்காலத்திலும் பல பிராக்ரிதச் சொற்கள் தமிழால் கடன்வாங்கிய சொற்கள் என்று தெரியாத வண்ணம் அழகாக உள்வாங்கப்பட்டிருக்கிறது.

[அவர் ஆங்கிலத்தின் சொன்னதை, கருத்து மாறாமல் தமிழாக்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.]

4. ரொமீலா தாப்பர் 'சிந்து சமவெளி நாகரிக' வரிவடிவம்/மொழி திராவிட வரிவடிவம்/மொழி அல்ல என்று எழுதியிருக்கிறாரே, அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சிந்து சமவெளி நாகரிக வரிவடிவம் இன்னமும் வகையறுக்கப்படவில்லை (decipher). சிந்து வரிவடிவம் படவடிவம் (pictograph). தமிழ் வரிவடிவம் நேர்க்கோட்டு வடிவம் (linear).

5. இப்பொழுதுள்ள தமிழ் வரிவடிவம் பரமேஸ்வரன் என்ற பல்லவ அரசனால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள். நீங்கள் வேறு யாரோலோ என்று சொன்னீர்களே?

இப்பொழுதுள்ள தமிழ் வரிவடிவம் மகேந்திரப் பல்லவனால் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. திருச்சி மலைக்கோட்டையில் உள்ள ஒரு கல்வெட்டில் 'சித்திரகாரப் புலி' என்ற சொற்றொடர் அப்படியே இன்றைய எழுத்துக்கு அருகில் காணப்படுகிறது.

6. தொல்காப்பியம் எந்த வரிவடிவில் முதலில் எழுதப்பட்டது? (இதுதான் கேள்வி, ஆனால் மகாதேவன் ஒருவேளை கேள்வியைச் சரியாகக் கேட்கவில்லையோ என்னவோ, கீழ்க்கண்ட பதிலைத் தந்தார்.)

பனையோலையில் சேமிக்கப்பட்ட எந்த எழுத்துமே முன்னூறு/நானூறு ஆண்டுகளுக்கு மேல் பாதுகாத்து வைக்க முடியாதவை. கொல்கத்தா அருங்காட்சியகம் ஒன்றில் 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஓலைச்சுவடு தொல்காப்பியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

7. உ.வே.சாமிநாதைய்யர் படித்த ஓலைகள் எந்த வரிவடிவத்தில் இருந்தன?

சாமிநாதைய்யர் படித்தவை 15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்லது அதற்குப் பிந்தைய காலத்தைச் சேர்ந்த ஓலைகள். அதற்கு முந்தையதாக் இருந்திருக்க முடியாது. சாமிநாதைய்யரைப் பற்றிச் சொல்கையில் யாரோ ஒரு வெளிநாட்டவர் சொன்ன மேற்கோளைச் சுட்டினார்: "சாமிநாதைய்யர் தமிழுக்குச் செய்த தொண்டை இந்த உலகத்தில், எந்த மொழிக்கும், வேறு யாரும், எந்தக் காலத்திலும் செய்ததில்லை." [அரங்கம் கரகோஷத்தில் அதிர்ந்தது.]

8. தமிழில் வரிவடிவில் மட்டும் ஏன் ख, ग, घ, छ, ज, झ போன்றவை இல்லை?

எந்த வரிவடிவமுமே ஒரு மொழிக்கெனப் பிரத்தியேகமாக உருவாக்கப்படுகிறது. தமிழ் மொழியில் தொடக்கத்திலிருந்தே இந்த சத்தங்கள் கிடையாது, எனவே எழுத்துகள் கிடையாது, எனவே வரிவடிவம் தேவையில்லை. அதனால்தான் அசோகன் பிராமி எழுத்துகளைப் பயன்படுத்தி, தமிழ் பிராமியாக்கும் போது, தேவையற்ற சத்தங்களை/எழுத்துகளை/வரிவடிவங்களை விலக்கிவிட்டு, தேவையானதை மட்டும் வைத்துக்கொண்டனர்.

ராபர்ட் கால்டுவெல் தென்மொழிகளின் இலக்கணத்தை (?) எழுதும்போது எப்படி மெல்லினத்தை அடுத்து வல்லினம் வரும்போது சத்தம் மாறுகிறது (பால், அம்பு) என்று எழுதியுள்ளார். ஆனால் இதுகூட ஏற்க முடியாததாக இருக்கலாம். மலையாளத்தில் 'அம்பு' என்னும் தமிழ்ச்சொல் இன்றும் கையாளப்படுகிறது. அம்மொழியில் இப்பொழுது 'प', 'ब' என்னும் இரு சத்தங்களும் தரக்கூடிய எழுத்துகள் இருந்தாலும், அழுத்தமான 'ப' வே கையாளப்படுகிறது. எனவே தொடக்கத்தில் தமிழர்கள் வல்லினத்தை, எங்கு வந்தாலும் அழுத்தமாகவே உச்சரித்தார்கள் என்றும் கூடக் கருதலாம்.

கிரந்த எழுத்துகள், கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தமிழல்லா சத்தங்களைக் குறிக்கப் பயன்பட்டது.

9. ['Madras Musings' முத்தையா என்று நினைக்கிறேன் இந்தக் கேள்வியைக் கேட்டது. அவரது முகம் எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை. ஆனால் கேள்வி கேட்டபோது 'இப்படி நான் Madras Musings'இல் எழுதியிருந்தேன் என்றார். பேச்சைக் கேட்க வந்த வேறு யாராவதுதான் சொல்ல வேண்டும் இவர் யாரென.] தமிழில் மட்டும் ஏன் இன்னமும் நாகரியில் இருக்கும் மற்ற சத்தங்கள் வரவில்லை? எப்பொழுது நாம் இந்த நிலையை மாற்றப்போகிறோம்? தமிழர்கள் கொடுமையாக 'Brigitte Bardot" என்னும் பெயரை 'பிரிகெட்டி பார்தாத்' என்று கொலை செய்கின்றனர்! [இப்படியாகக் குமுதத்தில் வந்ததாம்]

[இந்த அபத்தமான கேள்விக்கும் பொறுமையாகப் பதில் சொன்னார் மகாதேவன்.] தமிழர்கள் பிறமொழியைக் கொல்வதைவிட மோசமானது தமிழர்கள் தமிழையே கொலை செய்வது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே தெரியும். எனவே இன்றைய நிலையில் இதுவே கவலையை அதிகரிக்க வைக்கிறது. வேண்டிய இடத்தில் 'ஃ' போன்றவற்றை 'ப'வுக்கு முன்னால் போட்டு 'f' என்னும் சத்தம் வருமாறு செய்துகொள்கிறோம். அதுபோல் தேவைப்பட்டால் மற்ற குறியீடுகளையும் கொண்டுவரலாம்.

10. பலுசிஸ்தானில் தமிழ் போன்றதொரு மொழி இருக்கிறதாமே?

ஆம். அங்கு பிராஹுயி என்றொரு மொழி - இப்பொழுது கிட்டத்தட்ட மறைந்தே விட்டது. அம்மொழியில் 'ஒண்ணு', 'ரெண்டு', 'மூணு' என்றுதான் எண்கள் இருக்கும். ஏக், தோ, தீன் என்று இல்லை. உறவுகள், உடல் உறுப்புகள் ஆகியவற்றுக்கு தமிழ்ச் சொற்களைப் போன்றே இருக்கும். நமக்கு ஒன்றுவிட்ட உறவே இந்த மொழி.

11. நான் தற்பொழுது மதிவாணன் என்பவர் எழுதிய புத்தகத்தைப் படித்து வருகிறேன். அதில் அவர் சிந்து சமவெளி வரிவடிவம், மொழி ஆகியவை தமிழிலிருந்து வந்தது என்கிறார். உங்கள் கருத்து?

மதிவாணன் என் நண்பர். அவரை நன்கு அறிவேன். அவர் அவரது குருநாதர் தேவநேயப் பாவாணர் கருத்தையே எழுதி வருகிறார். தேவநேயப் பாவாணர் தமிழ்தான் உலகின் முதல் மொழி, முதல் வரிவடிவம், அதிலிருந்துதான் உலக மொழிகளே கிளைத்து வந்தன என்ற எண்ணம் கொண்டவர். அவர் கொள்கைகளைப் பின்பற்றினால்தான் மதிவாணன் சொல்வதை ஒருவர் ஒத்துக்கொள்ள முடியும். மற்றபடி இந்தக் கூற்றுக்கு எந்தவித ஆதாரமும் கிடையாது.

12. [படு உளறலாக ஒருவர் எழுந்து கேட்ட கேள்வி இது.] தொலைக்காட்சியில் பேசுவது மட்டமாக உள்ளது என்கிறீர்கள். நம் பிள்ளைகளே இப்படித்தான் பேசுகின்றனர். இதற்குக் காரணம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தமிழில் 'ண', 'ள', 'ற', 'ழ' போன்ற எழுத்துகளை ஒழித்து விட்டார். அதனால்தான் தமிழ்க் குழந்தைகளால் தமிழை ஒழுங்காகப் பேச முடிவதில்லை. [நிசமாகவே இப்படித்தான் பேசினார் இந்த 'அறிஞர்'.]

[பொறுமையாகக் கேட்ட மகாதேவன்] எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தபோது நான் அவரிடம் வேலை பார்த்துள்ளேன். அவர் மொழி அறிஞர் கிடையாது. ஆனால் ஒருசில மொழியறிஞர்கள் (குழந்தைசாமி போன்றவர்கள், நானும் உட்பட) சொன்னதைக் கேட்டு செயல்படுத்தக் கூடிய அரசியல் பலம் அவரிடம் இருந்தது. அவர் கொண்டுவந்தது ஆகார, ஐகார மெய்களில் ஒருசில சீர்திருத்தங்கள். நீங்கள் சொல்வது போல் ஒருசில தமிழ் எழுத்துகளை அவர் ஒழித்துவிடவில்லை.

நான் தினமணி ஆசிரியராக ஆனவுடன் செய்த முதல் காரியம் சீர்திருத்தத் தமிழ் எழுத்துகளை தினமணியில் அச்சிட வைத்ததே. என் உதவி ஆசிரியர்கள் இதனை வெகுவாக எதிர்த்தனர். [அவரது அப்பொழுதைய உதவி ஆசிரியர்களுல் ஒருவரான திருப்பூர் கிருஷ்ணன் அரங்கில் இருந்தார்.] ஆனால் நான் கணினி இயக்குபவர்களிடம் போய் உதவி ஆசிரியர்கள் எப்படி எழுதிக்கொடுத்தாலும் சீர்திருத்தப்பட்ட எழுத்துகளையே அச்சுக்கோருங்கள் என்று சொல்லிவைத்தேன்.

இதனை எதிர்த்தும், ஆதரித்தும் பல கடிதங்கள் வந்தன. இந்தச் சீர்திருத்த எழுத்துகள் 'பெரியார் எழுத்துகள்' என்று பெயரிடப்பட்டதால் ஒருவர் 'விடுதலைக்கு ஆசிரியராக வேண்டியவர் தினமணிக்கு ஆசிரியராக வந்துள்ளார்' என்று எழுதினார். அந்தக் கடிதத்தையும் வெளியிட்டோம். பலர் பெரியார் எழுத்துகளைக் கொண்டுவருவதால் தினமணியின் விற்பனை பாதிக்கப்படும் என்றனர். இவர்கள் தினமணியைப் படிப்பது 'தஞ்சைப் பிராமணர்கள்' மட்டுமே என்று நினைத்திருந்தனர் போலும். அப்படி விற்பனை குறைந்தாலும், நான் என் நிலையை மாற்ற மாட்டேன், தினமணிதான் வேறு ஆசிரியரை அமர்த்திக் கொள்ள வேண்டி வரும் என்று சொன்னேன். ஆனால் சில மாதங்களிலேயே விற்பனை 15,000 பிரதிகள் அதிகமானது.

இன்னமும் தேவை உகர, ஊகார சீர்திருத்தம். [மேற்கொண்டு என்னுடைய தமிழ் இணையம் 2003இல் குழந்தைசாமி பேசியதைப் பற்றிய குறிப்புகளைப் பார்க்கவும்.]

----

'சத்தியபுத்தோ' என்பது 'சத்யாவின் மகன்' என்று பிற்காலத்தில் வந்த ஒருவரைக் குறித்திருக்குமோ என்று பார்வையாளர் ஒருவர் அபத்தமாக ஜோக் அடிக்க, கேள்வி-பதில் நிகழ்ச்சி முடிந்தது.

தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 2

இதன்மூலம் மகாதேவனின் முடிவு:

- அசோகன் பிராமி வரிவடிவத்தைப் பின்பற்றியே தமிழ் பிராமி வரிவடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.

- இதனை சமண முனிவர்கள், மதுரை அரசனின் (பாண்டியன்) ஏற்பாட்டின் பேரில் செய்துள்ளனர் என்று சொல்லலாம். அதிகபட்சமான கல்வெட்டுகள் மதுரையைச் சுற்றிக் கிடைத்துள்ளன. சமணர் குகைகள் என்று கருதப்படும் இடங்களில் கிடைத்துள்ளன. இந்தக் கல்வெட்டுகளுக்கும், காஞ்சி/பிறவிடங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் வரிவடிவத்திற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. (இரண்டு வேறுபட்ட வரிவடிவங்கள் தமிழ்க் கல்வெட்டுகளில் காணக் கிடைக்கின்றன.)

- அசோகன் பிராமி தமிழுக்கு வந்தது போலவே, தேவநாகரியாக மாறியுள்ளது.

- அசோகன் பிராமி, தக்காணப் பிராமியாக மாறி, அதிலிருந்து கன்னட, தெலுங்கு வரிவடிவங்கள் உருவாகியுள்ளன.

- தமிழ் பிராமி, கிட்டத்தட்ட கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வட்டெழுத்தாக மாற்றம் அடைந்துள்ளது. அப்பொழுதுதான் பனையோலையில், இரும்பு எழுத்தாணி கொண்டு எழுதப்பட்டது.

- கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்கள் தமிழகத்தை ஆளுகைக்குள் கொண்டுவந்தபோது, கிரந்த எழுத்தாக மாறிய தக்காணப் பிராமியைக் கொண்டுவந்தனர். சோழர்கள், பல்லவர்களுக்குக் கீழ் இருந்து தமிழகம் முழுவதையும் ஆட்சி செய்தபோது இந்த கிரந்த வழித் தமிழெழுத்து, வட்டெழுத்தை முழுவதுமாக அழித்து விட்டு கோலோச்ச ஆரம்பித்தது. அதன் வழியே (பின்னர் வீரமாமுனிவர் வழியாக மாற்றத்துடன்) இன்று நம்மிடையே உலவி வருகிறது.

- கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் வட்டெழுத்து முற்றிலுமாய் அழிந்துவிட்டது.

- கி.பி. பதினாலாம் நூற்றாண்டில் கிரந்த எழுத்து, மலையாள எழுத்தாக மாற்றம் கொண்டது.

- வரிவடிவங்கள் மாறினாலும், மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதே தொடர்போடு உள்ளது. இந்தக் கல்வெட்டுகளில் கிட்டத்தட்ட 75% சொற்களை இன்றைய தமிழர்களால் புரிந்து கொள்ள முடியும். (சில கல்வெட்டுகளைப் படித்துக் காட்டினார்.) மீதமுள்ள 25% சொற்கள் பிராக்ரித் தழுவலாக உள்ளது.

- கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, பிராக்ரித்துக்குப் பதில் சமஸ்கிருதக் கலவை அதிகமாக வருகிறது. [அரையர்/அரசர் என்பது பிராக்ரித வழிச் சொல் என்றும், இராசர்/ராஜன் என்பது சமஸ்கிருத வழிச்சொல் என்றும் குறிப்பிடுகிறார்.]

- குகைக் கல்வெட்டுகளில் சமணர்களைப் பற்றியே காணப்படுவதாகவும், புத்தர்கள், ஆஜீவகர்கள் பற்றி எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை என்றும் சொன்னார். [இதன் பொருள் எனக்கு விளங்கவில்லை.]

- ஒருசில தமிழ்க் காசுகள் எகிப்து, அலெக்சாண்டிரியா போன்ற இடங்களில் (அமெரிக்கத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்குக்) கிடைத்துள்ளது என்றும் அவற்றின் தேதி கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு என்றும், அதில் காணப்படும் எழுத்துகள் தமிழ் பிராமி என்றும் ஆதாரங்கள் உள்ளன என்றார்.

- தொல்காப்பியத்தில் மிகத் தெளிவாகப் புள்ளி எழுத்துகள் (மெய்), தமிழ் எழுத்துகள் 12+18=30 என்று சொல்லப்படுவதாலும், இது பல காலமாக இருக்கிறது என்று அழுத்தமாகச் சொல்வதாலும் தொல்காப்பியத்தின் காலம் கி.பி. 2-3ஆம் நூற்றாண்டு என்று தான் கருதுவதாகச் சொன்னார்.

- இப்படிப்பட்ட கூற்றைத் தமிழ் அறிஞர்கள் விரும்பமாட்டார்கள் என்றும், ஆனால் தன்னுடைய கண்டுபிடிப்பு கல்வெட்டியலை மட்டுமே சார்ந்திருப்பதாகவும், இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்கள் தன் கூற்றை நிரூபிப்பதாகவும் சொன்னார்.

- அசோகன் பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், அதற்கு முந்தைய கல்வெட்டுகள் எதுவும் இந்தியாவில் இதுவரை கிடைக்கவில்லை என்றும், அசோகருக்கு முந்தைய காலத்தில் கல்வெட்டுகள் இல்லாமல் துணியில் எழுதியிருக்கலாம் (அதாவது அசோகர் காலத்தைய பிராமி வடிவம் அதற்கு முந்தையதாக இருந்திருக்கலாம், ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை...), அழிந்துபோயிருக்கலாம் என்றும் சொன்னார்.

- கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்திகளைக் கொண்டு பதிற்றுப்பத்தின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று கொள்ளலாம்.

- "சத்தியபுத்தோ அதியமான் நெடுமான் அஞ்சி" (ஔவையாரின் நண்பர், தகடூர் அரசர், நெல்லிக்காய் வள்ளல்) என்று ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சத்தியபுத்தோ என்னும் பாலி மொழி யாரைக் குறிக்கும் என்று ஒரு புதிர் பல நாட்கள் இருந்ததாகவும், அது அதியமானையே குறிக்கும் [சத்திய புத்தோ -> சத்திய புத்திரன் -> சத்திய மகன் -> அதிய மான்] என்றும் சொன்னார்.

பேச்சு ஒரு மணி நேரம் நிகழ்ந்தது. அதன்பின், அருமையான காப்பி இருக்கையிலேயே அனைவருக்கும் வழங்கப்பட்டது. காலையில் வந்திருந்த அனைவருக்கும் காலையுணவும் (இலவசமாக) வழங்கப்பட்டதென அறிந்தேன்!

தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 1

தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள்

இன்று சென்னை டி.டி.கே. சாலை டாக் செண்டரில் (Tag Centre), ஐராவதம் மகாதேவன் "Twin Puzzles in Tamil Epigraphy" என்ற தலைப்பில் பேசினார். இந்தப் பேச்சு, அவரது புத்தகம் "Early Tamil Epigraphy. From the Earliest Times to the Sixth Century A.D." முன்வைத்த கருத்துகளின் சுருக்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

நான் உள்ளே நுழையும்போது பேச்சு ஆரம்பித்திருந்தது. இந்த இயல் எனக்கு முன்பின் அறிமுகமில்லாதது. நான் இன்னமும் மகாதேவனின் புத்தகத்தைப் படிக்கவில்லை. (வாங்கவேண்டிய பட்டியலில் உள்ளது.) பேச்சு தமிழ் கல்வெட்டுகளைப் பற்றி இருந்தாலும், ஆங்கிலத்திலேயே அமைந்திருந்தது. தினமணியின் முன்னாள் ஆசிரியரால் நிச்சயம் தமிழிலேயே இந்த உரையை ஆற்றியிருக்க முடியும். கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் பெரும்பாலோரும் தமிழர்களே. ஒரேயொரு வெளிநாட்டவர் இருந்தார். அவர்கூட 'வட்டெழுத்து' என்பதை நன்கே உச்சரித்தார்.

---

கல்வெட்டுகளைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களுக்கு எனக்குத் தெரிந்த வகையில் ஒரு சிறு அறிமுகம். பண்டைத் தமிழர்கள் கல்வெட்டுகளில் பொறித்துள்ள எழுத்துகளை நம்மால் இன்று படித்துப் புரிந்து கொள்ள முடியாது. இந்த வரிவடிவத்தில் ஒவ்வொரு குறியீடும் என்ன எழுத்தை/சத்தத்தைக் குறிக்கிறது என்பதை ஆராய்ச்சிகளின் மூலம், பல கல்வெட்டுகளைப் படிப்பதன் மூலம் கண்டுபிடிப்பதுதான் epigraphy எனப்படும் இயல் - கல்வெட்டியல் என்று நானாகப் பேர் கொடுத்துள்ளேன். தமிழில் என்ன சொல் கையாளப்படுகின்றதென்று தெரியவில்லை. இந்தக் கல்வெட்டுகள் ஒருசிலவற்றின் படங்கள் Frontline இதழின் இந்தக் கட்டுரையில் காணக்கிடைக்கிறது.

இனி மகாதேவனின் உரைக்கு வருவோம்:

* 1906ஆம் வருடத்தில் கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த வெங்கய்யா என்பவர், மேட்டுப்பட்டி என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளைப் பார்த்துவிட்டு இதில் எழுதப்பட்டிருப்பது 'பிராக்ரித்' மொழியாக இருக்குமோ என்று நினைத்தார்.

* பின்னர் அவரது மாணவரான கிருஷ்ண சாஸ்திரி, 1919 வாக்கில் இந்தக் கல்வெட்டுகளில் திராவிட மொழிகளின் தாக்கம் இருக்கிறது, ஒருவேளை தமிழாக இருக்கலாம் என்று சொன்னார்.

* 1924இல் சுப்பிரமணிய அய்யர் தன் ஆராய்ச்சியின் முடிவாக இந்தக் கல்வெட்டுகள் பிராக்ரித் ஆக இருக்க முடியாது, ஏனெனில் இவற்றில் 'ள', 'ற', 'ண', 'ழ' போன்ற எழுத்துக்கள் காணக்கிடைக்கின்றன, நாகரி/பிராக்ரித் மொழியில் வரும் இரண்டாவது/மூன்றாவது/நான்காவது 'க', 'ச' க்கள் (ख, ग, घ, छ, ज, झ போன்றவை) இல்லை என்று கண்டுபிடித்தார். ஆனால் அதே நேரத்தில் 'தந்தை' என்னும் சொல் 'தாநதய' (?) என்று எழுதப்பட்டிருந்தது என்றும் கண்டார்.

* பின்னர், பட்டிப்ரோலு (ஆந்திரம்) என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளைப் படிக்கையில் மெய் எழுத்துகள், அகர, ஆகார மெய்கள் ஆகியவற்றைக் குறிக்க நீட்டல் கொம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிந்தனர். [படமில்லாமல் இதனை விளக்குதல் கடினம், ஆனால் அந்தப் படங்களை இப்பொழுது இங்கு வரைய முடியாத நிலையில் உள்ளேன்.]

* K.G. கிருஷ்ணன் என்பவர் 1960களில் அரச்சாளூர் கல்வெட்டுகளைப் படிக்கையில் அங்கு புள்ளி வைத்த மெய் எழுத்துகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். இந்தக் கல்வெட்டுகள் கி.பி ஒன்றாம் நூற்றாண்டின் இறுதியைச் சேர்ந்தவை என்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாம். இந்தக் கல்வெட்டுகள் புள்ளி இல்லாத மெய்யெழுத்துகள் உள்ள மேற்சொன்ன கல்வெட்டுகளுக்குப் பிந்தைய காலமாக கண்டறியப்பட்டுள்ளன.

* சாதவாகன காசுகள் ஒரு பக்கம் பிராக்ரித் மொழியிலும், மற்றொரு பக்கத்தில் தமிழ் (புள்ளி எழுத்துக்களுடனும்) இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் காசுகள் வழங்கப்பட்டது கி.பி. 1-3 நூற்றாண்டுகளுக்குட்பட்டவை.

* இந்த ஆரம்பகால வரிவடிவங்கள் அசோகர் காலத்து பிராமி வரிவடிவங்களைப் பின்பற்றியுள்ளன. ஆனால் பிராக்ரித்தில் இருந்த, தமிழில் இல்லாத வரிவடிவங்கள் விலக்கப்பட்டு, பிராக்ரித்தில் இல்லாத 'ள', 'ற', 'ண', 'ழ' ஆகிய எழுத்துகளுக்கான புது வரிவடிவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அப்படிப் புது வரிவடிவங்கள் சேர்க்கப்படும்போதும், ஏற்கனவே இருக்கும் 'ல', 'ன', 'ர' ஆகியவற்றின் குறியீடுகளை எடுத்து, அவற்றினை நீட்டித்தது போல் உள்ளது.

ஆம்பூர் திசைகள் கூட்டம்

நேற்று வீடு வந்து சேர்கையில் இரவு பத்து மணி. முந்தைய த்ரிஷா பதிவு பார்த்திருப்பீர்கள். அது எதற்காக செய்யப்பட்டது என்றும் அனைவருக்கும் புரிந்திருக்கும்! மாணவர்களை இப்படி பள்ளி ஆசிரியர்கள் ஊக்குவிக்காததால்தான் அவர்களும் படிக்கமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள்!

கிட்டத்தட்ட மூன்று மணிநேரம், நூறு மாணவர்கள் சின்ன அறையில் இடுக்கிப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து இணையத்தின் சாத்தியங்கள், தமிழில் எழுதுவது எப்படி என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மொத்தம் அந்தக் கல்லூரியில் படிப்பவர்கள் 900 மாணவர்களே. இந்தக் கணினிப் பட்டறை நடந்துகொண்டிருந்தபோது கவிதைப் பட்டறையும் இணையாக வேறிடத்தில் நடந்துகொண்டிருந்தது.

இன்று காலை ஐராவதம் மகாதேவனின் ஒரு பேச்சுக்குப் போயிருந்தேன். மதியம் முடிந்தவரை எழுத முயற்சிக்கிறேன்.

Saturday, February 28, 2004

ஆம்பூரில் மாணவர்கள் திரிஷா மீது ஜொள்ளு

ஆம்பூர் மஸ்ருல் உலூம் கல்லூரி மாணவர்கள் திரிஷா மீது மிகுந்த காதலினால் அந்தப் படத்தை இந்த வலைப்பதிவில் போட்டே தீரவேண்டும் என்று அடம் பிடித்தனர்.