Saturday, May 31, 2008

குஜ்ஜார் இட ஒதுக்கீட்டுப் போராட்டம்

இன்று தி ஹிந்துவில் நீனா வியாஸ், குஜ்ஜார்களது போராட்டம் பற்றி ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து பழங்குடியினர் பட்டியலுக்குச் செல்வதால் குஜ்ஜார்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்று விளக்கியுள்ளார்.

ராஜஸ்தானில் குஜ்ஜார்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தனர். ஜாட்கள் அந்தப் பட்டியலில் இல்லை; பொதுப்பட்டியலில் இருந்தனர். அரசியல் ஆதாயங்களுக்காக, பாரதீய ஜனதா கட்சி, ஜாட்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது. அதனால் குஜ்ஜார்கள் தங்களுக்கான இடங்கள் குறைந்துவிடும் என்று நினைத்தனர். நீனா வியாஸின் கட்டுரையைப் படித்தால், அதில் பிற்படுத்தப்போருக்கான இட ஒதுக்கீடு முற்றிலுமாக நிரப்பப்படவில்லை, நிறைய இடங்கள் பாக்கியுள்ளன என்கிறார்.
As for the 27 per cent OBC quota, on average only 4-5 per cent of the slot was filled. This means there is a very large unused OBC quota, which the Gujjars could use to their advantage as they are already in this category.
ஆனால், குஜ்ஜார்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாக வசுந்தரா ராஜே சிந்தியா (பாஜக) வாக்குறுதி அளித்தார். மீண்டும் வியாஸ்:
The figures collected by the Ministry of Personnel, Public Grievances and Pensions are revealing. As on January 1, 2005, the STs filled 4.3 per cent of a 7.5 per cent quota of jobs in the ‘A’ category’ that includes civil service officers and superintendents of police. The OBCs managed only 4.7 per cent of the 27 per cent quota, clearly establishing that there were many more vacancies here if suitable candidates presented themselves.
ஆனால் புள்ளிவிவரம் எப்படி இருந்தாலும், குஜ்ஜார்கள் பழங்குடியினர் அந்தஸ்து பெறுவதிலேயே ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் அங்கே ஏற்கெனவே இருக்கும் 'மீனாக்கள்' இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகச் சொல்கின்றனர்.

மொத்தத்தில் இட ஒதுக்கீட்டைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், அதிலிருந்து பலன்களை எப்படிப் பெறுவது என்பதை அறிந்துகொள்ளாமல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனைச் சரியாகக் கையாளாத பாரதீய ஜனதா கட்சி, இந்த நிலைக்கான முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்.

இதற்கிடையில் குஜ்ஜார் போராட்டம், வன்னியர் போராட்டத்தைப் போன்றே அமைந்துள்ளது வருத்தம் தரத்தக்கது. பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு வன்னியர்கள் தமிழகத்தில் போராடியது இன்று பலருக்கு மறந்துபோயிருக்கலாம். மரங்களை வெட்டி நடுச்சாலையில் போடுதல், பேருந்துகளைக் கொளுத்துதல், சாலைகளுக்கு நடுவில் குழிதோண்டுதல், பொதுச்சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் போன்ற அசிங்கமான முறைகளில் அந்தப் போராட்டம் அமைந்தது. அதனை ஏற்காத அன்றைய தமிழக அரசு, காவல்துறை அடக்குமுறையை ஏவிவிட்டது. ஆனால் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதற்கு 20%-ம் உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.

இன்று குஜ்ஜார்கள் ரயில் தண்டவாளங்களைப் பெயர்த்தெடுக்கிறார்கள். சாலைப் போக்குவரத்தை பாதிக்கிறார்கள். பொதுச்சொத்து பற்றி கவலைப்படுவதில்லை. தாங்கள் எதற்காகப் போராடுகிறோம் என்பதைப் பிற மக்களைப் புரிந்துகொள்ளவைக்கவும் முயற்சி செய்வதில்லை. ‘எனக்கு வேண்டும்; அதனால் தா' அல்லது ‘எனக்குத் தருகிறேன் என்று சொல்லி வாக்கு கொடுத்துவிட்டாய்; எனவே தா' என்றே பேசுகிறார்கள். வன்னியர்களது போராட்டமும் இப்படித்தான் இருந்தது.

இது ஆரோக்கியமான முறை அன்று. முதலில் குஜ்ஜார்கள் தங்களுக்கான தேவை பழங்குடியினர் என்ற அங்கீகாரமா அல்லது வேறு ஏதேனுமா என்று பார்க்கவேண்டும். பழங்குடியினர் என்பதுதான் என்றால் அதனை குடியாட்சி முறைப்படி பெறுவதில் கவனம் செலுத்தவேண்டும். ஆளுக்காள் தண்டவாளத்தைப் பெயர்த்தால் அந்தப் பகுதி வளர்ச்சி பெறாத காட்டுப்பகுதியாகத்தான் இருக்கும்.

இட ஒதுக்கீட்டின் ஆதரவாளர்களுக்கு இப்போது நடக்கும் போராட்டம் வருத்தம் தரவைக்கும் ஒன்று.

புது செல்பேசி

கேட்ஜெட் விஷயங்களில் நான் அவ்வளவாக நேரம், பணம் செலவு செய்வதில்லை. ஆனால் சில தேவைகள் கருதி நேற்று ஒரு முதலீட்டைச் செய்தேன்.

நோக்கியா E51 என்ற மாடலை வாங்கினேன். இந்திய விலைப்படி, சுபிக்‌ஷாவில் ரூ. 11,256 ஆனது. இந்த செல்பேசியில் GPRS, Bluetooth தவிர Wifi இணைப்பு உள்ளது. அலுவலகம், வீடு போன்ற இடங்களில் வயர்லெஸ் ரவுட்டர் இருந்தால், இந்த செல்பேசியால் அத்துடன் உரையாடமுடியும். இதனால் நல்ல வேகத்திலான இணைய இணைப்பு கிடைக்கும். இன்றைய இந்திய GPRS இணைப்புகள் வேகமற்றவையே.

வலைப்பதிவுகள் என்பவை வெறும் எழுத்துக்களால் ஆனவை மட்டுமல்ல. நிறுத்தி நிதானித்து எழுதுபவை; அங்கும் இங்கும் பார்க்கும் விஷயங்களைப் பற்றி ஓரிரு வாக்கியங்கள்; ஒரு படம், ஒரு ஒலித்துண்டு, ஒரு அசைபடத்துண்டு.

ஒரு நிகழ்ச்சிக்குப் போகிறீர்கள். அங்கே யார் யார் வந்திருக்கிறார்கள் என்று சொல்ல விரும்புகிறீகள். Twitter-ஐப் பயன்படுத்தலாம். ட்விட்டரில் எழுத SMS, உலாவி வழியாக இணையத்தளம், கூகிள்டாக் போன்ற இடைமுகங்களைப் பயன்படுத்தலாம். இந்தியாவில் வோடாஃபோன், ஏர்டெல் இரண்டிலும் SMS வழியாக இயக்கமுடிவதில்லை. எனவே GPRS வழியாக http://m.twitter.com/ சென்று எழுதலாம்.

ட்விட்டரில் இணையம் அல்லது கூகிள்டாக் வழியாகத் தமிழிலும் எழுதலாம். ஆனால் அப்படி எழுதுவதை தமிழ் படிக்க வசதியில்லாத செல்பேசிகளில் படிக்கமுடியாது. கட்டம் கட்டமாக இருக்கும். எனவே இப்போதைக்கு நான் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்போகிறேன்.

அடுத்து, படங்கள். எங்கோ சாலையில் நடக்கும் ஓர் விபத்தைப் பார்க்கிறீர்கள். அல்லது தெருவோரக் கூட்டத்தில் பேசும் அரசியல்வாதியைப் பார்க்கிறீர்கள். சுவரொட்டியைப் பார்க்கிறீர்கள். உடனடியாக அதனைப் படம் பிடிக்கிறீர்கள். GPRS இணைப்பு உள்ள செல்பேசி வழியாக இந்தப் படத்தை flickr தளத்துக்கு அனுப்பமுடியும். இதனையும் http://m.flickr.com/ என்ற முகவரி வழியாகச் செய்யலாம். செல்பேசிக்கு என்றே ஆப்டிமைஸ் செய்யப்பட்ட தளம்.

ட்விட்டர் குறுஞ்செய்திகள், ஃப்ளிக்கர் படங்கள் ஆகியவற்றை உடனடியாக உங்களது வலைப்பதிவில் காணுமாறு செய்யமுடியும். இந்தத் தளங்களிலேயே இதற்கான உதவிகள் உள்ளன. எனது வலைப்பதிவின் வலது பக்கத்தில் இதைத்தான் நான் செய்திருக்கிறேன்.

அடுத்து ஒலித்துண்டு, அசைபடத்துண்டு. பொதுவாக, இவற்றைப் பிடித்தவுடன் உடனடியாக அனுப்பமுடியுமா என்பது ஒரு கேள்வி. உடனடியாக அனுப்பவேண்டுமா என்பது வேறொரு கேள்வி. இவை அதிக இடம் பிடிப்பவை. நல்ல இணைப்பு இல்லாமல் இவற்றை அனுப்புவது கடினம். மேலும் இவற்றை சற்றே எடிட் செய்யவேண்டியிருக்கலாம். நோக்கியா E51-ல் ஒரு மணி நேரத் துண்டுகளாக ஒலியையும், அசைபடங்களையும் சேமிக்கமுடிகிறது. ஒலிப்பதிவு நன்றாகவே உள்ளது. Wav கோப்பாக சேமிக்கமுடிகிறது. ஆனால் ஒரு நிமிடம் என்பது 1 MB. இந்த ஃபோனில் 512 MB சேமிப்பு அட்டை உள்ளதால், இது பெரிய பிரச்னை இல்லை.

நீண்ட அசைபடப் பதிவு தேவையா என்றும் பார்க்கவேண்டும். செல்பேசி கேமராவில் அசைபடப் பதிவு சுமாராகத்தான் வரும். மிக உயர்ந்த ரக செல்பேசி, ஜூம் கேமரா இருந்தால்தான் நன்றாக இருக்கும். சில முக்கியமான காட்சிகளைப் பிடித்து, அத்துடன் வெறும் படம், ஒலித்துண்டு ஆகியவற்றோடு சேர்த்து ஒரு பதிவுக்குள் கொண்டுவரலாம்.

ஒலி சேமிப்புக்கென பெரு நிறுவனங்கள் நல்ல சேவை எதையும் கொடுப்பதில்லை. நான் archive.org என்ற தளத்தில்தான் எனது நீண்ட ஆடியோ துண்டுகளைச் சேர்க்கிறேன். Wav கோப்புகளை audacity என்ற மென்பொருள் கொண்டு, வேண்டிய மாற்றங்களைச் செய்து, mp3 கோப்புகளாக மாற்றி, ourmedia.org என்ற தளத்தின் வாயிலாக, archive.org-ல் சேர்க்கிறேன். Ourmedia தளத்தில் SpinXpress என்ற மென்பொருள் கிடைக்கும். இதைக்கொண்டு டெஸ்க்டாப்பிலிருந்து நேரடியாக ஒலிப்பதிவுகளை archive.org தளத்துக்கு அனுப்பமுடியும்.

அசைபடங்களைப் பொருத்தமட்டில் Youtube.com எளிதாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு தளம். http://m.youtube.com/ வழியாக செல்பேசிமூலமும் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம். அது பேண்ட்விட்த்தைப் பொருத்தது.

***

தனியாக, பவர்பாயிண்ட் பிரசெண்டேஷன்களை இணையத்தில் கொண்டுவருவதுபற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். இவற்றையும் சேர்த்துப் பார்த்தால் வலைப்பதிவுகளில் என்னவெல்லாம் செய்யமுடியும் என்று நீங்கள் யூகிக்கலாம்.

***

நோக்கியா E51-ல் (பிற செல்பேசிகளிலும்கூட) fring என்ற சேவையைச் சேர்த்துக்கொள்ளலாம். இதன்மூலம் பல மெசஞ்சர் சேவைகளை இயக்கலாம். ஆனால் இதற்கு நான் பயன்படுத்தியவரை wifi இணைப்பு தேவையாக உள்ளது.

***

இந்தச் சேவைகளை வெறும் விளையாட்டாகப் பயன்படுத்தாமல் உபயோகமாக நிறையச் செய்யமுடியும்.

இதில் எதைப்பற்றியேனும் விரிவாக விளக்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றினால், கேளுங்கள். எழுதுகிறேன்.

Wednesday, May 21, 2008

இரு புத்தகங்கள்: சென்னை + இலங்கை

Oxygen Books என்னும் பதிப்பு வாயிலாக இந்த வாரம் நாங்கள் வெளியிட்டிருக்கும் நான்கு புத்தகங்களில் இரண்டு பற்றி இங்கே:

1. Madras: Tracing the Growth of the City since 1639 by KRA Narasiah

சென்னை என்று இன்று நாம் அழைக்கும் நகரத்தின் கடந்த சில நூற்றாண்டு வரலாறு இந்தப் புத்தகத்தில் உள்ளது. நரசய்யா தமிழில் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் வாயிலாக 2006-ல் வெளியான புத்தகம் 'மதராசபட்டினம்'. இதனை ஆங்கில மொழியாக்கமாக இல்லாமல், நரசய்யாவே மீண்டும் ஆங்கிலத்தில் புதிதாக எழுதியிருக்கிறார். நிறைய திருத்தங்கள், மாற்றங்களுடன் செறிவாக எழுதப்பட்டுள்ளது.

2. Heroes or Villains: Sri Lanka circa 2007 by N Sathiya Moorthy

2006, 2007-ம் வருடங்களில் சென்னை அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் சத்திய மூர்த்தி, இலங்கை அரசு, ராணுவம், விடுதலைப் புலிகள், இந்திய அரசு, தமிழக அரசு, தமிழகக் கட்சிகள், இலங்கைக் கட்சிகள், புலி எதிர்ப்பாளர்கள், மனித உரிமை போன்ற பலவற்றைப் பற்றி கொழும்புவிலிருந்து வெளியாகும் The Daily Mirror பத்திரிகையில் எழுதிய கருத்துப் பத்திகளில் தொகுப்பு.

Saturday, May 17, 2008

90% சாமியார்கள் பொறுக்கிகளே - கேரள அமைச்சர்

கடந்த சில நாள்களாக கேரளத்தில் இருக்கிறேன். இங்கே சந்தோஷ் மாதவன் என்கிற சுவாமி அம்ருதானந்த சைதன்யா என்கிற ‘சாமியார்' வேடம் போட்ட பரதேசி, பணம் திருட்டு, ஏமாற்று, சிறு பெண்களை நாசம் செய்தது, அவர்களை வைத்து ‘பலான படங்கள்' தயாரித்தது ஆகியவற்றில் மாட்டி, இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்று காலை செய்தியின்படி, நெஞ்சுவலி என்று சொல்லி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

கேரள தேவஸ்வம் போர்ட் அமைச்சர் சுதாகரன், 90% சாமியார்கள் (Godmen) பொறுக்கிகள் என்று சொல்லப்போக, உடனே ஒரு பிரச்னை எழுந்துள்ளது. சபரிமலை அர்ச்சகர்கள் பிரதிநிதி ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

90% என்பது சரியான புள்ளிவிவரமாக இல்லாமல் இருக்கலாம். அது 80% ஆகவும் இருக்கலாம்; 99% ஆகவும் இருக்கலாம். ஆனால் கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டு பொறுக்கித்தனம் செய்பவர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கம் என்பதை தமிழகத்தில் இருக்கும் அனைவரும் அறிவர். கொலை, திருட்டு, நிலம் அபகரிப்பு, பாலியல் வன்முறைகள், அரசியல் விளையாட்டுகள் என்று கடவுளின் அடியார்கள் ஈடுபடுவது எதனால் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

கடவுளின் தீவிர அடியார்களாக, பிரதிநிதிகளாக, பீடாதிபதிகளாக இயங்குபவர்கள்தான் வெகு சீக்கிரமாக கடவுள் நம்பிக்கை இழக்கிறார்கள். சாதாரணனைவிட சங்கராச்சாரிகள்தான் கடவுள் அவநம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள்தான் ‘தீய செயல்கள்' செய்தாலும் தமக்கு ஒன்றுமே ஆவதில்லை என்பதை முதலில் தெரிந்துகொள்பவர்கள். இப்பிறவியில் செய்யும் பாவங்களுக்கு மறுபிறவியில் தண்டனை கிடைக்கும் என்னும் கருத்தாக்கத்தை சீக்கிரமாகத் தூக்கி எறிபவர்களும் அவர்களே. உடனே இப்பிறவியின் சந்தோஷங்களுக்காக வாழ ஆரம்பிக்கிறார்கள். இறைவனடியார் வேடம் சாதாரணர்களை ஏமாற்றத் தோதாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். அதற்குப் பிறகு என்ன? சித்து விளையாடல்களில் இறங்கவேண்டியதுதான்.

Saturday, May 10, 2008

NHM Converter Online

ஒரு தமிழ் எழுத்துக் குறியீட்டிலிருந்து இன்னொன்றுக்கு மாற்ற, இணையம் வழியாக இயங்கும் ஒரு சேவையை New Horizon Media நிறுவனம் இன்று அறிமுகம் செய்கிறது. இனி இணையம் வழியாகவே இலவசமாகவே இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம். வேண்டுமென்றால், இந்த வேலையைச் செய்யும் மென்பொருளைத் தரவிறக்கி, உங்களது கணினியிலிருந்தும் செய்துகொள்ளலாம். அந்த மென்பொருளை முன்பே, New Horizon Media அறிமுகம் செய்திருந்தது.

இந்தச் சேவையைப் பயன்படுத்த நீங்கள் செல்லவேண்டிய முகவரி software.nhm.in என்பது. இந்தத் தளத்தில் Services->NHM Converter என்ற மெனுவைத் தேர்ந்தெடுங்கள்.

நேரடியாக NHM Converter இணையச் சேவையைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் இந்தச் சுட்டியை அழுத்தவேண்டும். இந்த மென்பொருள் சேவையைப் பற்றிய ஒரு பிரசண்டேஷன் இதோ.



இந்தப் புதிய தள டிசைனில், வலைப்பதிவு சேவை சேர்க்கப்பட்டுள்ளது. புது மென்பொருள்கள், சேவைகள் ஆகியவை பற்றிய தகவல்களை நாங்கள் இங்கே அளித்துக்கொண்டே இருப்போம். உங்களது கருத்துகளை இப்பொதைக்கு வலைப்பதிவின் பின்னூட்டங்கள் வாயிலாக நீங்கள் கொடுக்கலாம். விரைவில் Forum ஒன்றும் சேர்க்கப்படும்.