Saturday, May 31, 2008

குஜ்ஜார் இட ஒதுக்கீட்டுப் போராட்டம்

இன்று தி ஹிந்துவில் நீனா வியாஸ், குஜ்ஜார்களது போராட்டம் பற்றி ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து பழங்குடியினர் பட்டியலுக்குச் செல்வதால் குஜ்ஜார்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்று விளக்கியுள்ளார்.

ராஜஸ்தானில் குஜ்ஜார்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தனர். ஜாட்கள் அந்தப் பட்டியலில் இல்லை; பொதுப்பட்டியலில் இருந்தனர். அரசியல் ஆதாயங்களுக்காக, பாரதீய ஜனதா கட்சி, ஜாட்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது. அதனால் குஜ்ஜார்கள் தங்களுக்கான இடங்கள் குறைந்துவிடும் என்று நினைத்தனர். நீனா வியாஸின் கட்டுரையைப் படித்தால், அதில் பிற்படுத்தப்போருக்கான இட ஒதுக்கீடு முற்றிலுமாக நிரப்பப்படவில்லை, நிறைய இடங்கள் பாக்கியுள்ளன என்கிறார்.
As for the 27 per cent OBC quota, on average only 4-5 per cent of the slot was filled. This means there is a very large unused OBC quota, which the Gujjars could use to their advantage as they are already in this category.
ஆனால், குஜ்ஜார்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாக வசுந்தரா ராஜே சிந்தியா (பாஜக) வாக்குறுதி அளித்தார். மீண்டும் வியாஸ்:
The figures collected by the Ministry of Personnel, Public Grievances and Pensions are revealing. As on January 1, 2005, the STs filled 4.3 per cent of a 7.5 per cent quota of jobs in the ‘A’ category’ that includes civil service officers and superintendents of police. The OBCs managed only 4.7 per cent of the 27 per cent quota, clearly establishing that there were many more vacancies here if suitable candidates presented themselves.
ஆனால் புள்ளிவிவரம் எப்படி இருந்தாலும், குஜ்ஜார்கள் பழங்குடியினர் அந்தஸ்து பெறுவதிலேயே ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் அங்கே ஏற்கெனவே இருக்கும் 'மீனாக்கள்' இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகச் சொல்கின்றனர்.

மொத்தத்தில் இட ஒதுக்கீட்டைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், அதிலிருந்து பலன்களை எப்படிப் பெறுவது என்பதை அறிந்துகொள்ளாமல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனைச் சரியாகக் கையாளாத பாரதீய ஜனதா கட்சி, இந்த நிலைக்கான முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்.

இதற்கிடையில் குஜ்ஜார் போராட்டம், வன்னியர் போராட்டத்தைப் போன்றே அமைந்துள்ளது வருத்தம் தரத்தக்கது. பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு வன்னியர்கள் தமிழகத்தில் போராடியது இன்று பலருக்கு மறந்துபோயிருக்கலாம். மரங்களை வெட்டி நடுச்சாலையில் போடுதல், பேருந்துகளைக் கொளுத்துதல், சாலைகளுக்கு நடுவில் குழிதோண்டுதல், பொதுச்சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் போன்ற அசிங்கமான முறைகளில் அந்தப் போராட்டம் அமைந்தது. அதனை ஏற்காத அன்றைய தமிழக அரசு, காவல்துறை அடக்குமுறையை ஏவிவிட்டது. ஆனால் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதற்கு 20%-ம் உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.

இன்று குஜ்ஜார்கள் ரயில் தண்டவாளங்களைப் பெயர்த்தெடுக்கிறார்கள். சாலைப் போக்குவரத்தை பாதிக்கிறார்கள். பொதுச்சொத்து பற்றி கவலைப்படுவதில்லை. தாங்கள் எதற்காகப் போராடுகிறோம் என்பதைப் பிற மக்களைப் புரிந்துகொள்ளவைக்கவும் முயற்சி செய்வதில்லை. ‘எனக்கு வேண்டும்; அதனால் தா' அல்லது ‘எனக்குத் தருகிறேன் என்று சொல்லி வாக்கு கொடுத்துவிட்டாய்; எனவே தா' என்றே பேசுகிறார்கள். வன்னியர்களது போராட்டமும் இப்படித்தான் இருந்தது.

இது ஆரோக்கியமான முறை அன்று. முதலில் குஜ்ஜார்கள் தங்களுக்கான தேவை பழங்குடியினர் என்ற அங்கீகாரமா அல்லது வேறு ஏதேனுமா என்று பார்க்கவேண்டும். பழங்குடியினர் என்பதுதான் என்றால் அதனை குடியாட்சி முறைப்படி பெறுவதில் கவனம் செலுத்தவேண்டும். ஆளுக்காள் தண்டவாளத்தைப் பெயர்த்தால் அந்தப் பகுதி வளர்ச்சி பெறாத காட்டுப்பகுதியாகத்தான் இருக்கும்.

இட ஒதுக்கீட்டின் ஆதரவாளர்களுக்கு இப்போது நடக்கும் போராட்டம் வருத்தம் தரவைக்கும் ஒன்று.

11 comments:

  1. //என்பதுதான் என்றால் அதனை 'குடியாட்சி முறைப்படி' பெறுவதில் கவனம் செலுத்தவேண்டும்.//

    எப்படி ?
    இது நடக்கிற காரியமா ?

    ReplyDelete
  2. நடக்கிற காரியம்தான். இந்தியாவில் பல போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஒரு குறிப்பிட்ட குழுக்கள் தங்கள் தேவைகளை முன்வைக்கின்றன. வேறு பலருக்கு அது ஏற்புடையதாக இல்லை. அது ஹொகேனகல் குடிநீர் திட்டமாக இருக்கலாம்; குஜ்ஜார் இட ஒதுக்கீடாக இருக்கலாம்; 27% பிறபடுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடாக இருக்கலாம்; பெண்களுக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற இடங்களில் 33% இட ஒதுக்கீடாக இருக்கலாம்; தெலுங்கான தனி மாநிலப் போராட்டமாக இருக்கலாம்.

    எல்லாவற்றுக்கும் தண்டவாளத்தைப் பெயர்ப்பேன், சாலையை உடைப்பேன் என்று போனால் என்ன ஆகும்?

    குடியாட்சி முறையில், பெரும்பான்மை மக்களை ஒரு கருத்தை ஏற்கவைக்கவேண்டும். அதற்கேற்றார்போல சட்டத் திருத்தங்கள், அரசியலமைப்புச் சட்ட மாற்றங்கள் செய்யவைக்கவேண்டும். நீதிமன்றங்கள் அவற்றை ஏற்குமாறு செய்யவேண்டும். மொத்தத்தில் ஒரு குழுவினரது தேவை நியாயமானதுதான் என்று பெரும்பான்மை மக்களுக்குப் புரியவைக்கவேண்டும்.

    தண்டவாளங்களைப் பெயர்ப்பதால் அது நடக்காது. நான் குஜ்ஜார்களை நேரில் சந்தித்ததில்லை. ஆனால் அவர்களது வேண்டுகோளை, அவர்கள் நடந்துகொண்ட விதத்தால், முற்றிலுமாக நிராகரிக்கமட்டுமே எனக்குத் தோன்றுகிறது. இதை ஒரு வாழ்வா, சாவா போராட்டமாகக் காண்பிக்கிறார்கள். தேவையின்றி தெருவில் இறங்கி 25 உயிர்கள் போவதற்குக் காரணமாக இருந்திருக்கிறார் குஜ்ஜார் மக்கள் தலைவர். இதுபோன்ற போராட்டங்கள் நாட்டுக்கும் நல்லதல்ல, அவரது மக்களுக்கும் நல்லதல்ல.

    ReplyDelete
  3. பத்ரி சார், நீங்கள் ஒரு முக்கிய மான விஷயத்தை மறந்து விட்டீர்கள்

    விபரம் : http://payanangal.blogspot.com/2008/06/blog-post.html

    //எல்லாவற்றுக்கும் தண்டவாளத்தைப் பெயர்ப்பேன், சாலையை உடைப்பேன் என்று போனால் என்ன ஆகும்?//

    இதில் நான் உடன்படுகிறேன்

    அவர்கள் போராடும் முறை தவறு

    ஆனால் கோரிக்கை முட்டாள்தனமானது அல்ல
    விபரம் : http://payanangal.blogspot.com/2008/06/blog-post.html

    ReplyDelete
  4. பிற்ப்ட்டோர் இட ஒதுக்கீடு ஒரு மோசடி. அதை உண்மையிலேயே பிற்பட்டோருக்கும் அதாவது சமூகத்தின் அடித்தட்டில் இருப்போருக்கும்,
    முதல்தலைமுறையாக கல்வி கற்போருக்கு மட்டும் கிடைக்குமாறு
    மாற்ற வேண்டும்.இதில் சாதி,மத
    பாகுபாடு கூடாது. இதை பத்ரி,
    புருனோ ஆதரிப்பார்களா?.இங்கு
    தலைமுறைகளாக ஒபிசி டாக்டர் மகன்/மகள் என்று தொடர்ந்து இட ஒதுக்கீட்டில் பலன் பெறுகிறார்கள்.
    இதையெல்லாம் ஒழிக்க வேண்டும்.

    குஜ்ஜார் வாழும் இடங்களில் அடிப்படை வசதிகள், கல்வி வசதி
    இல்லை. அதை முதலில் தர வேண்டும். ST,SC பிரிவுகளிலும்
    ஒரு சில பிரிவினரே பெரும்பயன்
    அடைகின்றனர்.அவர்களை அப்பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்.

    ReplyDelete
  5. க்ரீமி லேயர் என்பதை “பணத்தின் அடிப்படையில் வைக்காமல், தந்தை / தாயின் கல்வி / வேலையின் அடிப்படையில் வைக்க வேண்டும் என்பது தான் நான் 2006லிருந்து கூறி வருவது

    அதாவது வட்டாச்சியர் அலுவலக தட்டச்சரின் மகன் தட்டச்சர் வேலைக்கு பொது பிரிவில் தான் போட்டியிட வேண்டும். ஆனால் அதே பையன் மருத்துவ நுழைவு தேர்வு அல்லது ஐ.ஏ.ஏஸ் என்றால் இடப்பங்கீடு வழங்கலாம்

    இது தான் நான் பல வருடங்களாக கூறி வருவது

    மேலும் என் கருத்தை அறிய என் பதிவை பாருங்கள்

    ReplyDelete
  6. புரூனோ: நன்றி. உண்மைதான். கிரீமி லேயர் என்பது தமிழகத்தில்தான் இல்லை. பிற மாநிலங்களில் அல்லது மத்திய அரசு வேலைகளில், படிப்பில் உண்டு.

    ஆனால் அதை மட்டுமே கருத்தில்கொண்டு அனைவரும் தங்களுக்கு SC/ST என்ற முத்திரை வேண்டும் என்று கேட்கத் தொடங்கினால் என்ன ஆகும்?

    இதையும் ஒரு காரணமாக வைத்தே இட ஒதுக்கீடு பெறுவோர் பலரும், கிரீமி லேயர் என்பதே இருக்கக்கூடாது என்கின்றனர். கிரீமி லேயர் என்பது நீங்கள் சொல்வதைப் போல ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு மாதிரி என்றெல்லாம் செய்வதில் நடைமுறைச் சிக்கல் இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் மேலும் சிந்தனையைச் செலுத்தினால்தான் இதைப்பற்றி தெளிவாக என்னால் எழுதமுடியும்.

    வெகு நாள்களாக கிரீமி லேயர் பற்றி எழுதவேண்டும் என்று இருக்கிறேன். பார்ப்போம்.

    ReplyDelete
  7. //ஆனால் அதை மட்டுமே கருத்தில்கொண்டு அனைவரும் தங்களுக்கு SC/ST என்ற முத்திரை வேண்டும் என்று கேட்கத் தொடங்கினால் என்ன ஆகும்?//

    கண்டிப்பாக பிரச்சனை வரும் :( :(

    //கிரீமி லேயர் என்பது நீங்கள் சொல்வதைப் போல ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு மாதிரி என்றெல்லாம் செய்வதில் நடைமுறைச் சிக்கல் இருக்கும் என்று நினைக்கிறேன்.//

    குறைந்த பட்சம், தாய் அல்லது தந்தையின் வேலைக்கு / படிப்பிற்கு விண்ணப்பிக்கும் பொழுது அந்த மாணவனை பொது வகுப்பினராக கருதலாம்.

    இதில் மற்றுமொரு பலனும் உண்டு :) :)

    ReplyDelete
  8. //கிரீமி லேயர் என்பது நீங்கள் சொல்வதைப் போல ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு மாதிரி என்றெல்லாம் செய்வதில் நடைமுறைச் சிக்கல் இருக்கும் என்று நினைக்கிறேன்.//

    குறைந்த பட்சம் தாய்/தந்தையின் படிப்பு /வேலைக்கு விண்ணப்பிக்கும் பொழுது அந்த மாணவனை பொது வகுப்பினராக கருதலாம்.

    ReplyDelete
  9. //ஆனால் அதை மட்டுமே கருத்தில்கொண்டு அனைவரும் தங்களுக்கு SC/ST என்ற முத்திரை வேண்டும் என்று கேட்கத் தொடங்கினால் என்ன ஆகும்?//

    விரைவில் குழப்பம் காத்திருக்கிறது

    ReplyDelete
  10. This may help shed some light on the subject to the torch bearers of Social justice system

    ReplyDelete
  11. //This may help shed some light on the subject to the torch bearers of Social justice system//

    வஜ்ரா அளித்த சுட்டியில் பல தவறான கருத்துகள் உள்ளன

    இது போன்ற ஆதாரமற்ற கருத்துகள் குறித்து என் பதிவில் விபரமாக எழுதியுள்ளேன்.

    ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கவும்

    இடப்பங்கீட்டில் பொருளாதாரத்தை முதன்மை படுத்துவது எவ்வளவு பெரிய அபத்தம் என்றும் அது இடப்பங்கீட்டின் நோக்கத்தை நீர்த்துப்போக செய்யும் என்றும் அப்படி நீர்த்துப்போவதற்காகத்தான் இது போன் இடப்பங்கீட்டு எதிர்ப்பாளர்கள் பொருளாதாரத்தை முதன்மை படுத்துகிறார்கள் என்றும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது

    வஜ்ரா அவர்களுக்கு என் இடுகைகள் குறித்த சந்தேகங்கள் இருந்தால் என் பதிவின் மறுமொழியில் கேட்கலாம்

    ReplyDelete