Saturday, May 31, 2008

புது செல்பேசி

கேட்ஜெட் விஷயங்களில் நான் அவ்வளவாக நேரம், பணம் செலவு செய்வதில்லை. ஆனால் சில தேவைகள் கருதி நேற்று ஒரு முதலீட்டைச் செய்தேன்.

நோக்கியா E51 என்ற மாடலை வாங்கினேன். இந்திய விலைப்படி, சுபிக்‌ஷாவில் ரூ. 11,256 ஆனது. இந்த செல்பேசியில் GPRS, Bluetooth தவிர Wifi இணைப்பு உள்ளது. அலுவலகம், வீடு போன்ற இடங்களில் வயர்லெஸ் ரவுட்டர் இருந்தால், இந்த செல்பேசியால் அத்துடன் உரையாடமுடியும். இதனால் நல்ல வேகத்திலான இணைய இணைப்பு கிடைக்கும். இன்றைய இந்திய GPRS இணைப்புகள் வேகமற்றவையே.

வலைப்பதிவுகள் என்பவை வெறும் எழுத்துக்களால் ஆனவை மட்டுமல்ல. நிறுத்தி நிதானித்து எழுதுபவை; அங்கும் இங்கும் பார்க்கும் விஷயங்களைப் பற்றி ஓரிரு வாக்கியங்கள்; ஒரு படம், ஒரு ஒலித்துண்டு, ஒரு அசைபடத்துண்டு.

ஒரு நிகழ்ச்சிக்குப் போகிறீர்கள். அங்கே யார் யார் வந்திருக்கிறார்கள் என்று சொல்ல விரும்புகிறீகள். Twitter-ஐப் பயன்படுத்தலாம். ட்விட்டரில் எழுத SMS, உலாவி வழியாக இணையத்தளம், கூகிள்டாக் போன்ற இடைமுகங்களைப் பயன்படுத்தலாம். இந்தியாவில் வோடாஃபோன், ஏர்டெல் இரண்டிலும் SMS வழியாக இயக்கமுடிவதில்லை. எனவே GPRS வழியாக http://m.twitter.com/ சென்று எழுதலாம்.

ட்விட்டரில் இணையம் அல்லது கூகிள்டாக் வழியாகத் தமிழிலும் எழுதலாம். ஆனால் அப்படி எழுதுவதை தமிழ் படிக்க வசதியில்லாத செல்பேசிகளில் படிக்கமுடியாது. கட்டம் கட்டமாக இருக்கும். எனவே இப்போதைக்கு நான் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்போகிறேன்.

அடுத்து, படங்கள். எங்கோ சாலையில் நடக்கும் ஓர் விபத்தைப் பார்க்கிறீர்கள். அல்லது தெருவோரக் கூட்டத்தில் பேசும் அரசியல்வாதியைப் பார்க்கிறீர்கள். சுவரொட்டியைப் பார்க்கிறீர்கள். உடனடியாக அதனைப் படம் பிடிக்கிறீர்கள். GPRS இணைப்பு உள்ள செல்பேசி வழியாக இந்தப் படத்தை flickr தளத்துக்கு அனுப்பமுடியும். இதனையும் http://m.flickr.com/ என்ற முகவரி வழியாகச் செய்யலாம். செல்பேசிக்கு என்றே ஆப்டிமைஸ் செய்யப்பட்ட தளம்.

ட்விட்டர் குறுஞ்செய்திகள், ஃப்ளிக்கர் படங்கள் ஆகியவற்றை உடனடியாக உங்களது வலைப்பதிவில் காணுமாறு செய்யமுடியும். இந்தத் தளங்களிலேயே இதற்கான உதவிகள் உள்ளன. எனது வலைப்பதிவின் வலது பக்கத்தில் இதைத்தான் நான் செய்திருக்கிறேன்.

அடுத்து ஒலித்துண்டு, அசைபடத்துண்டு. பொதுவாக, இவற்றைப் பிடித்தவுடன் உடனடியாக அனுப்பமுடியுமா என்பது ஒரு கேள்வி. உடனடியாக அனுப்பவேண்டுமா என்பது வேறொரு கேள்வி. இவை அதிக இடம் பிடிப்பவை. நல்ல இணைப்பு இல்லாமல் இவற்றை அனுப்புவது கடினம். மேலும் இவற்றை சற்றே எடிட் செய்யவேண்டியிருக்கலாம். நோக்கியா E51-ல் ஒரு மணி நேரத் துண்டுகளாக ஒலியையும், அசைபடங்களையும் சேமிக்கமுடிகிறது. ஒலிப்பதிவு நன்றாகவே உள்ளது. Wav கோப்பாக சேமிக்கமுடிகிறது. ஆனால் ஒரு நிமிடம் என்பது 1 MB. இந்த ஃபோனில் 512 MB சேமிப்பு அட்டை உள்ளதால், இது பெரிய பிரச்னை இல்லை.

நீண்ட அசைபடப் பதிவு தேவையா என்றும் பார்க்கவேண்டும். செல்பேசி கேமராவில் அசைபடப் பதிவு சுமாராகத்தான் வரும். மிக உயர்ந்த ரக செல்பேசி, ஜூம் கேமரா இருந்தால்தான் நன்றாக இருக்கும். சில முக்கியமான காட்சிகளைப் பிடித்து, அத்துடன் வெறும் படம், ஒலித்துண்டு ஆகியவற்றோடு சேர்த்து ஒரு பதிவுக்குள் கொண்டுவரலாம்.

ஒலி சேமிப்புக்கென பெரு நிறுவனங்கள் நல்ல சேவை எதையும் கொடுப்பதில்லை. நான் archive.org என்ற தளத்தில்தான் எனது நீண்ட ஆடியோ துண்டுகளைச் சேர்க்கிறேன். Wav கோப்புகளை audacity என்ற மென்பொருள் கொண்டு, வேண்டிய மாற்றங்களைச் செய்து, mp3 கோப்புகளாக மாற்றி, ourmedia.org என்ற தளத்தின் வாயிலாக, archive.org-ல் சேர்க்கிறேன். Ourmedia தளத்தில் SpinXpress என்ற மென்பொருள் கிடைக்கும். இதைக்கொண்டு டெஸ்க்டாப்பிலிருந்து நேரடியாக ஒலிப்பதிவுகளை archive.org தளத்துக்கு அனுப்பமுடியும்.

அசைபடங்களைப் பொருத்தமட்டில் Youtube.com எளிதாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு தளம். http://m.youtube.com/ வழியாக செல்பேசிமூலமும் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம். அது பேண்ட்விட்த்தைப் பொருத்தது.

***

தனியாக, பவர்பாயிண்ட் பிரசெண்டேஷன்களை இணையத்தில் கொண்டுவருவதுபற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். இவற்றையும் சேர்த்துப் பார்த்தால் வலைப்பதிவுகளில் என்னவெல்லாம் செய்யமுடியும் என்று நீங்கள் யூகிக்கலாம்.

***

நோக்கியா E51-ல் (பிற செல்பேசிகளிலும்கூட) fring என்ற சேவையைச் சேர்த்துக்கொள்ளலாம். இதன்மூலம் பல மெசஞ்சர் சேவைகளை இயக்கலாம். ஆனால் இதற்கு நான் பயன்படுத்தியவரை wifi இணைப்பு தேவையாக உள்ளது.

***

இந்தச் சேவைகளை வெறும் விளையாட்டாகப் பயன்படுத்தாமல் உபயோகமாக நிறையச் செய்யமுடியும்.

இதில் எதைப்பற்றியேனும் விரிவாக விளக்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றினால், கேளுங்கள். எழுதுகிறேன்.

6 comments:

 1. //இவற்றைப் பிடித்தவுடன் உடனடியாக அனுப்பமுடியுமா என்பது ஒரு கேள்வி. உடனடியாக அனுப்பவேண்டுமா என்பது வேறொரு கேள்வி.//

  ஹி.... ஹி... நல்ல கேள்வி

  ReplyDelete
 2. பத்ரி - கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் இதன் தம்பி (முன்னால் பிறந்தாலும் செயல்திறனில் தம்பிதான்) E50 வாங்கினேன் (இல்லை ஏர்டெல்லில் இருக்கும் அண்ணாவிடமிருந்து சுட்டேன்). இன்னும் காண்ட்ராக்டில் இருப்பதால் அதிலேயே தங்கியிருக்கிறேன். இன்னும் இதுதான் அளவில் சிறிய Blackberry ஃபோன் என்று நினைக்கிறேன்.

  என்னுடைய மாக் லாப்டாப்பின் isync வழியே அற்புதமாக Sync ஆகிறது. இதை powerpoint remote ஆகப் பயன்படுத்துவதைப் பார்த்து பலர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள் (கிறார்கள்). நல்ல ஃபோன்.

  ReplyDelete
 3. தெளிவான படம் - wi-fi - வீடியோ - ஒடியோ என ஐபோன் நல்ல தெரிவாக இருக்கிறது. இந்தியாவில் உத்தியோகப் பற்றற்ற முறையில் கிடைப்பதாக அறிந்தேன். இணைய வாசிப்பிற்கு அப்பிளின் சபாரி உலாவியுடனான பெரிய திரை - கணணித் திரையில் வாசிக்கும் உணர்வைத் தருகிறது. அதிலும் முழு இணையப் பக்கத்தின் குறித்த பகுதியைக் கூட touch முறையில் முன் நகர்த்தி (zoom in) தெளிவாக பார்க்க முடியும்.

  ReplyDelete
 4. சுமார் ஆறேழு வருடங்களாக நோக்கியா 1100 மாடலை உபயோகப்படுத்தி வந்த நான் அண்மையில் தான் iPhone-க்கு மாறினேன்.

  4GB Capacity உள்ள போன் ebay-யில் $ 360க்கு கிடைத்தது. 8 GB, 16 GB எல்லாம் இருக்கிறது. அதையெல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு தசாவதாரம், குசேலன் படமா பார்க்கப் போகிறோம்?

  நீங்கள் சொல்வது மாதிரி நல்ல உபயோகம் தான்.

  முக்கியமாக wi-fi உள்ள இடங்களில் fring போன்றவற்றை உபயோகிக்க முடிகிறது. யாகூ, கூகுள், ஹாட்மெயில், POP3 போன்ற Emailகளை இதில் பதிவிறக்கும் செய்து படிக்கலாம். அப்படியே பதிலும் அனுப்பலாம். இல்லாத இடங்களில் மூலமாக பயன்படுத்திக் கொள்ளலாம். எத்த‌னை வித‌மான‌ ஈமெயில் அக்க‌வுண்ட்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம் என்ப‌தில் எந்த‌வித‌ க‌ட்டுப்பாடும் இல்லை என்று நினைக்கிறேன்.


  நான் இர‌ண்டு ஜி‍மெயில், ஒரு POP3, ஒரு யாகூ ஆகியவற்றை அதில் படித்துக் கொண்டிருக்கிறேன்.

  PDF பைல்கள் படிக்கலாம்.

  Youtube பார்க்கலாம்.

  இன்னும் நிறைய வசதிகள் உள்ளன.

  நீங்கள் iphone-க்கு பதிலாக நோகியா வாங்கியதற்கு எதுவும் காரணங்கள்?

  ReplyDelete
 5. நான் ஒரு சில மாதங்களாக zyb.com மூலமாக கம்ப்யூட்டரையும், தொலைபேசியையும் contacts book இணைத்து பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.

  ஆனால் இந்த வசதி இன்னும் iphone-க்கு இல்லை. இப்போதைக்கு ஐ-போனில் ஸபாரி பிரவுசர் மூலமாக நேரடியாக தளத்தினுள் நுழைந்து நம் Contact-‍களை பார்த்துக் கொள்ள வேண்டியது தான்.

  ReplyDelete
 6. மாயவரத்தான்: இந்தியாவில் சட்டபூர்வமாக ஏர்டெல்/வோடஃபோன் மூலம் கிடைக்கும் ஐஃபோன்கள், ரூ. 20,000-க்கும் மேல். இல்லாவிட்டால் அமெரிக்காவில் வாங்கி இந்தியாவில் உடைத்துப் பயன்படுத்தவேண்டும். அது எனக்கு ஏற்புடையதல்ல.

  இரண்டாவது, ஐஃபோனின் எடை, நோக்கியா E51-ஐவிட இருமடங்கு. டிஷர்ட் பாக்கெட் கனத்து, கீழே தொங்கும். உண்மைதான், திரை பெரிது. தொடுதொழில்நுட்பம் மிக அருமையாக வந்துள்ளது. ஆனால் ஆப்பிளுக்கு அமெரிக்காவை விட்டால் வெளி நாடுகளுக்கு சேவை வழங்குவது பற்றி துளியும் தெரியாது. ஆனால் நோக்கியா அப்படியல்ல.

  வெங்கட் சொல்வதுபோல், குவிக் ஆஃபீஸ் (பிரசெண்டேஷன் முதல் பலவற்றையும் செய்யலாம்) மிகவும் உபயோகமாக உள்ளது. எனது பவர்பாயிண்ட் பிரசெண்டேஷன் எல்லாவற்றையும் இதிலிருந்தே இனி செய்யப்போகிறேன். இதிலும் பிடிஎஃப் கோப்புகளைப் படிக்கலாம்.

  தமிழ் யூனிகோடை இதில் புகுத்துவது எளிது. நான் இன்னமும் அந்த வேலையில் இறங்கவில்லை. ஆனால் ஆப்பிள் ஐபாடில் முடியுமா என்று தெரியவில்லை.

  சுருக்கமாகச் சொல்வதானால்:

  1. எடை மிகக் குறைவு. மெலிதானது.
  2. நோக்கியாவுக்கு இந்தியா புரியும்; ஆப்பிளுக்குப் புரியாது.
  3. சட்டபூர்வமான ஐபாட் விலை இந்தியாவில் இப்போதைக்கு அதிகம்.

  ReplyDelete