தி இந்தியன் எக்ஸ்பிரஸில் ஷேகர் குப்தா: Yes, Chief Minister
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைமை ஆசிரியர் ஷேகர் குப்தா இந்திய அரசாட்சி முறையில் ஏற்பட்டிருக்கும் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய ஆழமானதொரு கண்ணோட்டத்தை முன்வைக்கிறார். கடந்த சில வருடங்களில் மாநில முதல்வர்களின் பலம் வெகுவாக அதிகரித்துள்ளது என்கிறார். இதைப் பலரும் கவனிக்கவில்லை என்றும் சொல்கிறார்.
உண்மைதான். ஷேகரின் கட்டுரையைப் படிக்கும் முன்னால் இந்த விஷயத்தைப் பற்றி நான் இப்படி யோசிக்கவில்லை.
1. கூட்டணிக் கட்சிகளாலான ஆட்சி - இதற்கு மாற்று இனி அடுத்த 20 ஆண்டுகளுக்காவது இல்லை என்று தோன்றுகிறது.
2. பலமான மாநிலக் கட்சிகள் - பல மாநிலங்களில் இன்று இதுதான் நிலை
3. ஆர்டிகிள் 356ஐத் தன்னிஷ்டத்துக்குப் பயன்படுத்த முடியாத மத்திய அரசு - ஏனெனில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம்...
இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து மாநில முதல்வர்களை சூப்பர் ஸ்டார்களாக மாற்றியுள்ளது. மத்திய அரசு பெரும்பாலும் புதிய கொள்கைகளை முன் நிறுத்தவும், மாநில அரசுகள் அவற்றை நடைமுறைப்படுத்தவும் என்று நிலைமை மாறியுள்ளது. மாநில அரசுகள் நேரடியாக அந்நிய நேரடி முதலீடுகளைப் பெற விழைகிறார்கள். மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது.
இதில் பாதிக்கப்படுவது திறமையுள்ள காங்கிரஸ் மாநில முதல்வர்கள்தான். கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருப்பவர்கள் எந்த நேரத்திலும் திறமையானவர்களைக் கவிழ்க்க முடியும் என்ற நிலை இன்றும் காங்கிரஸில் உள்ளது. ஷேகர் சொல்வதைப் போல காங்கிரஸும், கொஞ்சம் பாஜகவும் கூட மாநில முதல்வர்களின் முக்கியத்துவத்தை உணராவிட்டால் அதி வேகமாக அழிந்துபோவார்கள்.
கவளம்
8 hours ago
நல்லது. ஆனால் இன்னும் போதாது. மாநில சுய ஆட்சி. மத்தியில் கூட்டாட்சி. அது சரியான இந்தியா.
ReplyDeleteஅருள்
பத்ரி,
ReplyDelete1. முதலில் SHEKHAR GUPTA என்பதை ஷேகர் குப்தா என்று எழுதுவது செயற்கையாகத் தெரிகிறது. சேகர் என்பது தமிழர்களிடத்திலும் பரவலாக புழங்கும் பெயர்.ஆங்கிலத்திலிருந்து அப்படியே ஒலிபெயர்க்க வேண்டுமென்றால் 'ஷேகர் குப்டா' என்று தான் எழுதவேண்டும். 'சொல்' என்பதுகூட 'ஷொல்' உச்சரிப்படும் வறட்டுத்தனத்திற்கு நீங்களும் துணைபோக வேண்டாம். நான் தனித்தமிழ்வாதியல்ல. ஒரு வார்த்தை ஏற்கனவே தமிழ்ப்படுத்தப்பட்டிருக்கும்போது அதை பயன்படுத்துவது தான் முறை.
2. கூட்டணி ஆட்சி பரிசோதனையை தேசிய முன்னணி அரசின் மூலம் துவக்கிவைத்த வி.பி. சிங்கை முதலில் பாராட்ட வேண்டும். இடையில் ஏற்பட்ட நரசிம்மராவின் சிறுபான்மை அரசிலும் தொடர்ந்திருக்க வேண்டியது அவரது சாதுர்யத்தால் நடக்கவில்லை. கூட்டணி அரசு நிலையற்றது என்ற வாதத்தை தவறென நிரூபித்த வாஜ்பாயையும் இதை சாதித்துக் காட்டியதற்காக பாராட்ட வேண்டும்.
3. இந்தியாவுக்கு இருகட்சி ஆட்சி முறைதான் சிறந்தது என்று ஓயாமல் வாதிட்டு வந்த சோ ராமசாமி போன்ற அரசியல் வல்லுநர்கள் கண்முன்னாலேயே கூட்டணி அரசுகள் தொடர்வது வேடிக்கையானது.
4. மாநிலங்களூக்கு அதிகாரப் பரவல் என்பது இப்போதைய கூட்டணி நிர்ப்பந்தங்களால் கிடைக்கும் சலுகை என்பது மாறி உண்மையாகவே அரசியலமைப்புச் சட்டச் சீர்த்திருத்தங்கள் மூலம் நடக்கும்போதே இதைப் பற்றி சிலாகித்து பேசமுடியும். 356வது விதி பயன்படுத்தப்படாததற்கு இப்படிப்பட்ட நிர்ப்பந்தங்களே காரணம்.
சுந்தரமூர்த்தி: நான் ஹிந்தியிலிருந்து ஒலிபெயர்ப்பு செய்தேன். அதைப்பற்றி மேலும் பேசினால் விஷயம் வேறு பக்கமாகப் போய்விடும் என்பதால் இங்கு தவிர்க்கலாம்.
ReplyDelete----
நீங்கள் எதிர்பார்ப்பது போல அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் இப்பொழுது வரும் என்று தோன்றவில்லை. மத்தியில் உள்ள பலமான கட்சி என்னதான் கூட்டணி ஆட்சி தேவை என்றாலும் கூட ஆர்ட்டிகிள் 356ஐ ஒழிப்பேன் என்று சொல்லாது. இப்பொழுது திமுகவையே எடுத்துக்கொள்வோமே? அதிகபட்சமாக 356ஆல் அடிவாங்கிய கட்சி. ஆனாலும் அதை ஒழித்தால்தான் நிம்மதி என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படவில்லை அந்தக் கட்சி.
அருள் சொல்வதுபோல மாநிலத்தில் சுயாட்சி வேண்டுமானால் இன்னமும் சில அமைப்பு மாற்றங்கள் தேவை. முக்கியமாக மாநில வருமான வரி. மத்திய வருமான வரி விகிதம் குறைந்து மாநில அரசு நேரடியாக வசூலிக்கும் வருமான வரி அதிகரிக்க வேண்டும். திட்டக்குழுவிடம் மாநில அரசுகள் கையேந்தி நிற்பது குறைக்கப்படவேண்டும்.
திட்டக்குழு என்பதே தேவையா என்று புரியவில்லை.
---
ஆனால் முக்கியமாக ஒரு மாநிலத் தனிக்கட்சியின் முதல்வர் செய்வது போல அல்லாமல் காங்கிரஸ் போன்ற கட்சியின் முதல்வர் எதையெடுத்தாலும் மேலிடம் என்று ஜால்ரா போடும் நிலைமைதான் (சில) மாநிலங்களின் உரிமையைக் குறைக்கிறது. அது மாற பெருங்கட்சிகளின் மனநிலை மாற வேண்டும். சோனியா, ராஹுல் காந்தி என்று குடும்ப ராஜ்ஜியம் இருக்கும் வரையில் அங்கும் பிரச்னைகள் இருக்கும்.
தற்போதைய வளர்ச்சி நிலையையும் அரசியல் முதிர்ச்சியையும் வைத்து நாட்டின் மாநிலங்களை ஒரு வாதத்திற்காக மூன்றாக பிரிக்கலாம்.
ReplyDelete(1) சுற்று எல்லையில் அமைந்தவை : (மஹா,குஜ,பஞ்,ஹஇ, ஹிமாச்,தநா,கேர,ஆந்தி,கர்,டெல்லி);
(2) மத்திய மாநிலங்கள்: (மபி,உபி,ஜார்கண்ட், சட்டிஸ்கார், ஒரிஸ்,மேவங்,அஸ்,ராஜஸ்...);
(3) சிறப்பு நிலை மாநிலங்கள்: வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர், அந்தமான்-நிக்கொபார்.
இவற்றில் வகை (1) மாநிலங்களுக்கு வெளிவிவகாரம், நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார தொலைநோக்குப் பார்வை, பெருந்துயர்துடைப்புப் பணிகள் இவைதவிர நடுவண் அரசின் உதவி எத்துறையிலும் தேவையில்லை. இவற்றை முடிந்த அளவு சுதந்திரமாக செயல் படுத்த அநுமதித்தால் அவை உலக அளவில் போட்டியிடக்கூடியவை. பத்ரி சொன்ன வரிவிதிக்கும், பிரிக்கும் உரிமை முக்கியமானது.
வகை (2) மாநிலங்களுக்கு இன்னும் கொஞ்சம் கைபிடித்து வழிகாட்டல் தேவையிருக்கிறது. அவற்றிலிருந்து வகை (1) மாநிலங்கள் பெறும் கச்சாப்பொருள்களுக்கு (கனிமங்கள், காட்டுப்பொருள்கள், பெட்றோலியம், ... ) உலக விலை கொடுத்தாலே பெரிய மானியங்களுக்கு அவை நடுவண் அரசை கெஞ்சிக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஆனால் அவை சமுதாய மேம்பாட்டில் வகை (1) மாநிலங்கள் செய்ததை (இலவச கல்வி, மகளிர்-மழலையர் இலவச பொதுமருத்துவம், இட ஒதுக்கீடு, ..) இன்னும் 20 ஆண்டுகளுக்காவது செய்ய வேண்டியிருக்கிறது.
வகை (3) மாநிலங்கள் தற்போதைக்கு ஏதாவது உடனடியாக வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டங்கள் இல்லாவிட்டால் நாட்டின் பொது கருத்துநிலையிலிருந்து தூரம் சென்றுவிடும். ராணுவத்தை வைத்து பிரச்சினைகளை சமாளிக்காமல் மக்களை நம்பினால் தீர்வு உண்டு.
அருள்