பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனர் பழனியப்பச் செட்டியார் 1-9-2005 அன்று காலமானார்.
தமிழ்ப் பதிப்புலகில் நிறைய சாதித்தவர்களுள் முக்கியமானவர் பழனியப்பச் செட்டியார்.
பழனியப்பாவின் தந்தையார் மெய்யப்பச் செட்டியார், பிற நாட்டுக்கோட்டை செட்டியார் குடும்பங்களைப் போலவே பர்மாவில் வியாபாரம் செய்துவந்தார். மூன்று வகுப்புகள் வரை தான் பிறந்த ராயவரத்தில் படித்த பழனியப்பா, ஆறாவது வரை பர்மாவில் படித்தார். ஏழாவது சிதம்பரத்தில். எட்டாவது முதல் பள்ளி இறுதிவரை கடியாபட்டியில்.
படிப்பு முடித்ததும் மலேசியாவுக்கு அனுப்பி வியாபாரம் செய்யவைக்க அவரது தந்தையார் விரும்பினாலும் அதை ஏற்காமல் பழனியப்பா தமிழகத்திலேயே வியாபாரம் செய்ய விரும்பினார். தனது தாயாரிடம் பெற்ற ரூ. 4,000 முதலாக வைத்து திருச்சியில், செயிண்ட் ஜோசப் கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் பழனியப்பா பிரதர்ஸ் என்ற எழுதுபொருள் கடையை 1941-ல் தொடங்கினார். கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்கள், அழிப்பான், காகிதம் போன்றவற்றை விற்பனை செய்தார்.
அதைத் தொடர்ந்து பாடப் புத்தகங்கள் அல்லாத பிற புத்தகங்களை முதன்முதலாக திருச்சியில் அறிமுகப்படுத்தி விற்கத் தொடங்கினார். தொடர்ந்து தமிழில் பாடநூல்களைத் தாமே அச்சிட்டுக் கொண்டுவரத் தொடங்கினார்.
செயிண்ட் ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளியில்தான் ஐயன்பெருமாள் கோனார் என்பவர் தமிழாசிரியராக இருந்துவந்தார்.
கோனார், 1937-ம் ஆண்டு முதல், பதினோராவது வகுப்புக்கு "எக்ஸ்பிளனேட்டரி தமிழ் நோட்ஸ்" என்ற பெயரில் ஒரு தமிழுரை எழுதி முதலில் தாமாகவும் பின் சில பதிப்பாளர்கள் மூலமும் வெளியிட்டு வந்தார். ஆனால் 1943-44(?) சமயத்தில் கோனாருக்கும் பதிப்பாளருக்கும் பண விஷயத்தில் பிரச்னை. இதனால் கோனார் பிரிந்து பழனியப்பா பிரதர்ஸ் மூலமாக கோனார் உரைகளைப் பதிப்பிக்க முடிவு செய்தார்.
தொடர்ந்து பழனியப்பா ஆங்கிலப் பாடத்துக்கும் நோட்ஸ் கொண்டுவந்தார். ஆனால் நாளடைவில் கோனார் தமிழுரை - கோனார் நோட்ஸ் தமிழகம் முழுவதும் பெரியதொரு பிராண்ட் ஆனது. ஒவ்வொரு வகுப்புக்கும் தமிழ்ப் பாடத்துக்கு உரை வந்தது. பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்துக்குப் பெரும் செல்வத்தை ஈட்டித்தந்தது.
பழனியப்பா பிரதர்ஸ் 1946-ல் சென்னைக்குப் பெயர்ந்தது. 1969-ல் ஐயன்பெருமாள் கோனார் இறந்தார்.
கோனார் உரைகளைத் தவிர, பழனியப்பா பிரதர்ஸ் பல குழந்தைப் புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். குழந்தைப் பதிப்பகம் என்ற பெயரில் நிறுவி, குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவை (பால்ய கால நண்பர்) ஆசிரியராகக் கொண்டு பல புத்தகங்களைக் கொண்டுவந்தனர்.
பழனியப்பாவின் முதல்மகன் காந்தி மருத்துவராக அமெரிக்காவில் இருந்ததனால் அங்கு சுற்றுப்பயணம் செய்து இந்தியா திரும்பிய பழனியப்பா, 1960களில் இன்சுலின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தொடங்கலாமா, டிஸ்போஸபிள் சிரிஞ்ச் உற்பத்தி செய்யலாமா என்றெல்லாம் யோசித்திருக்கிறார். ஆனால் அவை ஏதும் நடக்கவில்லை.
ஆனால் பழனியப்பா விடவில்லை. அவரும் பிறரைப் போல ஒரு கல்யாண மண்டபம் கட்டி வாடகைக்கு விடுவது அல்லது வட்டிக்கு விட்டுப் பணம் சம்பாதிப்பது என்று இருந்திருக்க முடியும். ஆனால் புத்தகப் பதிப்புத் துறையைத் தவிர வேறு ஏதேனும் பொறியியல் தொழில் துறையில் எப்படியாவது காலூன்றி விடவேண்டும் என்று நினைத்தார். அதன் விளைவாக உருவானதுதான் ஏஷியன் பேரிங் லிமிடெட் (Asian Bearing Limited). கிழக்கு ஜெர்மன் தொழில்நுட்பத்தில் பேரிங்குகளை உருவாக்கும் தொழிற்சாலையை தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டமான தர்மபுரியில் 1982-ல் அமைத்தார். அதில் பங்குதாரராக தமிழக அரசின் TIDCOவையும் உள்ளே இழுத்தார்.
தமிழகத் தொழில் துறையிலும் புத்தகப் பதிப்புத் துறையிலும் திறமையான முன்னோடியாக இருந்தவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
2 hours ago
அஞ்சலி செலுத்துவோம்.
ReplyDeleteநானும் அனைத்தையும் அறிவேன்.அவர்தம் இழப்பில் துயருறும் உள்ளங்களோடு நாமும் இணைந்து கொள்கிறோம்.
ReplyDeleteநல்ல பதிவு. நன்றி பத்ரி. முக்கியமாக இவருடைய தொழில்நுட்ப முனைப்புகளை அறியத்தந்ததற்கு!
ReplyDelete-மதி
பத்ரி,
ReplyDeleteபழ. நெடுமாறன் பழனியப்பா பிரதர்ஸ் உரிமையாளரின் மகன் என்று எங்கோ படித்ததாக நினைவு. அதுபற்றி உங்கள் பதிவில் குறிப்பெதுவும் இல்லையே! நான் படித்தது தவறாகவோ அல்லது என் நினைவுக் கோளாறாகவோ இருக்கலாம்.
சுந்தரமூர்த்தி: பழ.நெடுமாறனுக்கும் பழனியப்பா பிரதர்ஸ் உரிமையாளர்களுக்கும் உறவின் முறைத் தொடர்பு ஏதும் இல்லையென்றே நினைக்கிறேன் - எனக்குத் தெரிந்த வரையில்.
ReplyDeleteBadri
ReplyDeleteThanks for the detailed information on
Palaniappa Chettiyar.
சுந்தரமூர்த்தி, பழனியப்பா என்ற பெயர்தான் உங்களைக் குழப்பியிருக்கிறது. நெடுமாறனின் தந்தை
ReplyDeleteபழனியப்ப பிள்ளை மதுரையில் விவேகானாந்த அச்சகத்தினை நிறுவியவர்.விவேகானாந்தா நாட்காட்டி, திருநெல்வேலி பஞ்சாங்கம் அவர்களால் அச்சிடபட்டவை.இவை தென் மாவாட்டங்களில் மிகவும் பிரபலம். இப்போதும் அதே அச்சகத்தில்தான் இவை அச்சாகின்றனவா என்பதை நானறியேன்