Thursday, September 29, 2005

நிலத்தடி, ஆற்று நீர் பராமரிப்பு

சமீப காலமாக பல இடதுசாரி இயக்கங்களும் கிராமத்து மக்களும் கோக், பெப்சி போன்ற நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதை எதிர்க்கிறார்கள். கேரளாவில் பிளாச்சிமடாவில் தொடங்கிய இந்தப் போராட்டம் இன்று தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் தொடர்கிறது.

பாட்டிலில் தண்ணீரை அடைத்து லிட்டருக்கு ரூ. 12 என விற்கும் நிறுவனங்களுக்கும் கோக், பெப்சி போன்ற கார்போனிக் ஆசிட் பானங்களை வழங்கும் நிறுவனங்களுக்கும் அரசுகள் இலவசமாக நிலத்தடி நீரையோ அல்லது ஆற்றுத் தண்ணீரையோ தானம் செய்வது சரியா என்பது நியாயமான கேள்வி.

மக்கள் கலை இயக்கியக் கழகத்தினர் பல ஊர்களிலும் இதைப் பற்றிப் பேசி வருகிறார்கள். திருச்சியில் புத்தகக் கண்காட்சி நடக்கும் வளாகத்தின் வெளியே (மக்கள் மன்றம், தில்லை நகர்) அவர்கள் சில துண்டுப் பிரசுரங்களை அனைவருக்கும் விநியோகித்த வண்ணம் இருந்தனர். பல கார்ட்டூன்களை வரைந்து வைத்திருந்தனர். ஷரத் ஹக்சரின் புகழ் பெற்ற படமும் அதில் அடங்கும். அத்துடன் தமிழ் நடிகர்கள் கோக் பானத்துக்கான விளம்பரப் படங்களில் நடிப்பதை கேலிச்சித்திரமாக்கி வைத்திருந்தனர்.

கங்கை கொண்டான் கிராமத்துக்கு அருகில் தாமிரவருணி ஆற்றில் இருந்து லிட்டருக்கு ஒண்ணரை பைசாவுக்கு கோக் நிறுவனத்துக்குத் தண்ணீர் தருவதாக தமிழக அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது என்பது அதிர்ச்சி தரும் செய்தி. இதை நாம் அனைவருமே எதிர்த்துப் போராட வேண்டும்.

என்னுடைய கருத்து: கோக், பெப்சி, இன்னபிற ரசாயனத் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு நிலத்தடி நீர், ஆற்று நீர் ஆகியவற்றை இலவசமாகவோ, மேற்படி சொன்னது போல பிச்சைக்காசு அளவுக்கோ உபயோகப்படுத்த உரிமையில்லை என்று சட்டம் கொண்டுவரவேண்டும். ஏனெனில் இந்தியாவின் தண்ணீர் நிலைமை அப்படி இருக்கிறது. தண்ணீர் என்பது பொது மக்களின் அத்தியாவசியப் பயன்பாட்டுக்கும் மட்டும்தான் என்றும், அதற்கு மேலாக விவசாயத்துக்கு மட்டும்தான் (அதிலும் சிறிய விவசாயிகளுக்கு இலவசமாகவும், பெரிய விவசாயிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படவும் வேண்டும்) என்றும் இருக்க வேண்டும்.

ஆனால் அதே சமயம் கோக், பெப்சி போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கவே கூடாதா என்ற கேள்வி எழுகிறது. இரண்டு வகைகளில் இந்த நிறுவனங்கள் இயங்கலாம்:

1. கடலிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வைத்து பானங்கள் தயாரிக்கலாம். சுத்திகரிப்பை அவர்களே செய்யலாம், அல்லது நீரைச் சுத்திகரிக்கும் அரசு அல்லது தனியார் நிறுவனங்களிடமிருந்து விலைக்கு தண்ணீரை வாங்கிக்கொள்ளலாம்.

2. கடலை ஒட்டி தொழிற்சாலைகளை அமைக்கமுடியாத பட்சத்தில், எப்படி மின்சார கிரெடிட் வழங்கப்படுகிறதோ அதைப்போல தண்ணீர் கிரெடிட் வழங்கும் முறை மூலம் இந்தத் தொழிற்சாலைகள் இயங்கலாம். மின்சாரம் கிரிட் மூலமாகப் பாயக்கூடியது. ஆனால் தண்ணீரை அவ்வளவு எளிதாகப் பாய வைக்க முடியாது. அதனால் சர்சார்ஜ் போடவேண்டியிருக்கும். உதாரணத்துக்கு உபரி நீர் கிடைக்கும் ஆற்றுக்குப் பக்கத்தில் கோக் ஆலை அமைக்கப்பட்டாலும், கோக் வேறு ஏதோ இடத்தில் கடலை ஒட்டி நீரைச் சுத்திகரிக்கும் நிலையத்தை அமைத்து, தான் உபயோகப்படுத்தும் அளவுக்கான நீரை கடலிலிருந்து எடுத்து சுத்திகரித்து அரசுக்கு வழங்கவேண்டும். அத்துடன் மேற்படி தண்ணீருக்கு லிட்டருக்கு ஒரு நியாயமான அளவு சர்சார்ஜ் வழங்க வேண்டும். இதை வைத்து அரசு இந்தத் தண்ணீரை மக்களுக்கு வழங்க முற்படலாம்.

இந்த இரண்டும் நியாயமான எண்ணங்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

8 comments:

 1. நியாயமான எண்ணம்...
  நியாயமான பதிவு. நன்றி பத்ரி!

  ReplyDelete
 2. coke ai ethirththu koti pitippavargal ullnaatu bottling companygalai edhirthu kodi pidippathillai. idhu enna kaatugiradhu?

  ReplyDelete
 3. Well said. There must be some kind of restriction on extracting ground water/river water.

  But as you had said, Coke/Pepsi can make their drinks from desalinated sea water or provide water(from desalination plants) to the people. But who is going to monitor the quantity they are using/replacing? And how long will these measures work with greedy politicians out here?

  ReplyDelete
 4. Well said. There must be some kind of restriction on extracting ground water/river water.

  But as you had said, Coke/Pepsi can make their drinks from desalinated sea water or provide water(from desalination plants) to the people. But who is going to monitor the quantity they are using/replacing? And how long will these measures work with greedy politicians out here?

  ReplyDelete
 5. //என்னுடைய கருத்து: கோக், பெப்சி, இன்னபிற ரசாயனத் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு நிலத்தடி நீர், ஆற்று நீர் ஆகியவற்றை இலவசமாகவோ, மேற்படி சொன்னது போல பிச்சைக்காசு அளவுக்கோ உபயோகப்படுத்த உரிமையில்லை என்று சட்டம் கொண்டுவரவேண்டும். //

  நல்ல கருத்து

  //1. கடலிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வைத்து பானங்கள் தயாரிக்கலாம். சுத்திகரிப்பை அவர்களே செய்யலாம், அல்லது நீரைச் சுத்திகரிக்கும் அரசு அல்லது தனியார் நிறுவனங்களிடமிருந்து விலைக்கு தண்ணீரை வாங்கிக்கொள்ளலாம்.//

  குளிர்பான மற்றும் பாட்டில் தண்ணீர் நிறுவனங்கள் கடலிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வைத்து "மட்டுமே"பானங்கள் தயாரிக்கவேண்டும்.


  //2.உதாரணத்துக்கு உபரி நீர் கிடைக்கும் ஆற்றுக்குப் பக்கத்தில் கோக் ஆலை அமைக்கப்பட்டாலும்,....//

  ஆற்றுக்கு பக்கத்தில் ஆலை என்பதே தவறு. இவர்கள் ஆற்றுப் பக்கத்தில் இருக்கவே கூடாது.
  ஆற்று நீர்/ அதனால் வரும் நிலத்தடி நீர் விவசாயத்திற்கும் வியபார நோக்கமற்ற குடி தண்ணீருக்குமே.
  இவர்கள் ஆற்று நீரைத் தொடவே கூடாது.

  .
  பத்ரி உங்களின் கருத்துகளும் எண்ணங்களும் மிக முக்கியமானவை.
  மக்கள் கலை இயக்கியக் கழகத்தினரின் போராட்டங்கள் அவ்வளவாக மக்களைச் சேரவில்லை.

  முக்கியமான பெரிய அரசியல் தலைவர்கள் எல்லாம் இதனைக் கண்டு கொள்வது இல்லை.

  நம்மைப்போல் யாரவது ஏதாவது செய்தால் நல்லது.
  தெருமுனைக் கூட்டங்கள், பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு கூட்டங்கள் இப்படி ஏதாவது

  ReplyDelete
 6. இதுபற்றி மேலும் யோசித்துப் பார்க்கையில் சில பிரச்னைகள் தெரியவருகிறது. இது மாநிலங்களின் பிரச்னை. அதனால் மத்திய அரசு எந்தச் சட்டத்தையும் கொண்டுவரமுடியாது. அதே நேரம் இந்தியாவில் பல மாநிலங்களில் கடல் கிடையாது. அதனால் அந்த மாநிலங்கள் தம் நீர்வளங்களை எப்படிக் காக்கும், எம்மாதிரியான சட்டங்களை இயற்றும் என்று சொல்லமுடியாது.

  கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இதை முன்வைத்து தனிநபர் சட்ட மசோதாக்களை மாநில சட்டசபைகளில் கொண்டுவர முயற்சி செய்யலாம்.

  இன்னமும் யோசிக்கவேண்டும். சிலரிடம் பேசிப் பார்க்கிறேன்.

  ReplyDelete
 7. Dear Badri,
  Nice post on conserving ground and river water. The scarcity and misuse this resource is because of certain things we lack in India
  1. property rights , nobody owns the water resource, so everybody can use it, at the same time noone can stop someone misusing the resource. In economics it is called the 'Tragedy of the Commons'. you can find more information here and how it can be solved.
  http://www.ccsindia.org/people_pjs_water_rights.asp

  http://www.financialexpress.com/fe_full_story.php?content_id=85834

  ReplyDelete
 8. அடுத்த சந்ததியினருக்கு தண்ணீர் இருக்கவேண்டும் என்று நினைக்கும் அனைவரும் சேர்ந்து போராட வேண்டிய போராட்டம்!!

  ReplyDelete