Sunday, November 12, 2006

சட்டம் ஒழுங்கும் இந்தியர்களும்

இன்று தி ஹிந்து Open Page-ல் இந்தியர்களின் பொது இடங்களில் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பது பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. கட்டுரையாளருடன் முழுதாக ஒத்துப்போகிறேன். முக்கியமாக ஒரு மேற்கோள்:
We Indians revel in breaking laid down rules and get very caustic and frustrated when prevented from doing so. Bring in any rule and within a very short time, ways would have been found to circumvent it. The same attitude can be seen all around us, whether it is driving, one way streets, red signals, railway gates, hunting, paying taxes or appearing in courts.
இவர் குறிப்பிட்ட விஷயங்களைவிட மோசமானது இப்பொழுது தில்லி முதல் சென்னை வரை நடந்துகொண்டிருக்கும் கட்டட ஊழல்.

சென்னையில் CMDA அனுமதி பெறாமல், அல்லது கட்டளையை மீறி பல மாடிக் கட்டடங்களை எழுப்புவது வாடிக்கையாகிவிட்டது. இதில் முன்னணியில் இருப்பது பெரிய பிராண்ட்களாக அறியப்பட்ட தி சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், GRT தங்க மாளிகை, இப்படி எத்தனை எத்தனை எத்தனையோ.

இதைத்தவிர, சர்வசாதாரணமாக CMDA அனுமதி கொடுத்த அளவுக்கு மேல் குறைந்தது ஒரு மாடியையாவது கட்டுவதுதான் வாழ்க்கையின் நோக்கம் என்பதுபோலவே கட்டுமான நிறுவனங்கள் (புரோமோட்டர்கள்) நடந்துகொள்கிறார்கள்.

தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் சில மாடிகளை இடிப்பது இப்பொழுது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதையடுத்து பிற கட்டடங்களும் இடிக்கப்படும் என்று நம்புவோம். ஆனால் விதிகளை, சட்டத்தை மீறிய கட்டடங்கள் தமிழகம் முழுவதும் சில லட்சங்களாவது இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஓரிருவர் தவறு செய்தால் மாட்டிக்கொள்ளலாம் என்பதால், பெரும்பான்மையானவர்கள் ஒன்றுசேர்ந்து சட்டவிரோதத்தை மேற்கொள்கிறார்கள். போக்குவரத்து அதிகமாக இருக்கும் தெருவில் திடீரென்று நடுவில் சென்று கடக்க ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வந்ததும் மக்களுக்கு தைரியம் வந்துவிடுகிறதல்லவா? அதைப்போல. அரசியல்வாதிகள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் கூட்டம் கூட்டமாக சட்டம் ஒழுங்கைக் காற்றில் பறக்க விடுவது இப்பொழுது அதிகரித்துள்ளது.

இதுதான் புது தில்லியில் இப்பொழுது நடந்து வருகிறது.

தில்லியில் பல பகுதிகளில் மக்கள் வசிக்கும் இடங்கள் சட்டத்துக்குப் புறம்பாக வணிக வளாகங்களாக மாற்றப்பட்டன. தில்லி மாநகராட்சி சட்டங்கள், மாஸ்டர் பிளான், பல்வேறு சுற்றுச் சூழல் சட்டங்கள் ஆகியவற்றுக்குப் புறம்பாக இவை நடைபெற்றன. ஒரு சிலருக்கு இந்தச் சட்டங்கள் பற்றித் தெரியாவிட்டாலும் பெரும்பாலானோர், அதிக வாடகைக்காக இந்தக் காரியத்தைச் செய்தனர். மக்கள் வசிப்பதற்கென்று சொல்லி திட்டத்தைக் கொடுத்து, அனுமதி பெற்று, அதன்பின் அங்கு வணிக நிறுவனத்தை நடத்துவது சட்டப்படி குற்றமாகும்.

இந்தக் கட்டடங்களில் கார் ஷோரூம் முதல் உணவகங்கள்வரை, அரசு அலுவலகங்கள் முதல் பல்வேறு தனியார் வணிக நிறுவனங்களின் அலுவலகங்கள், கடைகள் போன்ற பல இயங்கி வந்தன.

இதனை எதிர்த்து அந்தப் பகுதி மக்கள் சிலர் தில்லி மாநகராட்சிக்கு பலமுறை புகார் கொடுத்தும் மாநகராட்சி புகார்களை அலட்சியப்படுத்தியது. லஞ்சப் பணம் பெற இது ஒரு நல்ல வாய்ப்பு என்று மாநகராட்சி ஊழியர்கள் விட்டிருக்கலாம். நிர்வாகச் சீர்குலைவுக்கு அடுத்த கட்டமாக மக்கள் நல அமைப்புகள் நீதிமன்றத்துக்குப் போகவேண்டி இருந்தது. தில்லி உயர் நீதிமன்றத்தை அடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

16 பிப்ரவரி 2006-ல் உச்ச நீதிமன்றம் இந்தப் பொதுநல வழக்கில் தீர்ப்பு ஒன்றைக் கொடுத்தது. அதன்படி, 30 நாள்களுக்குள் சட்டத்துக்குப் புறம்பாக வணிக நடவடிக்கைகளைச் செய்யும் நிறுவனங்கள் அந்த இடத்தைக் காலி செய்ய வேண்டும். அவ்வாறு தாமாகவே செய்யாவிட்டால் தில்லி நகராட்சி அந்த வணிக இடங்களுக்கு சீல் வைக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள 'வசிப்பவர் நலச் சங்கங்களின்' பிரதிநிதிகள் இந்த சீல் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பப்பட வேண்டும்.

நியாயமாக தில்லி அரசு என்ன செய்திருக்க வேண்டும்? மக்கள் பெருமளவில் தவறு செய்துள்ளனர்; அந்தத் தவறை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்கள் சட்டத்தை மதித்து நடக்குமாறு செய்யவேண்டியது நிர்வாகத்தின் பணி. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

எப்படி ஒரு மாதத்துக்குள் இந்த இடங்களில் உள்ள சட்டமீறிகளைத் துரத்துவது, இதனால் பலர் பாதிக்கப்படுவார்களே என்று தில்லி அரசு பயங்கொண்டது. இது நியாயமான பயம்தான் என்றாலும் இத்தனை வருடங்களாக சட்டத்தை மீறுபவர்களை ஊக்குவித்துவிட்டு இப்பொழுது என்ன செய்வது என்று தடுமாறுவது எந்த விதத்தில் நியாயம்?

29 மார்ச் 2006 முதல் சீல் வைப்பது தொடங்க வேண்டும். ஆனால் 24 மார்ச் 2006 அன்று வணிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க உச்ச நீதிமன்றம் சீல் தொடங்கும் தினத்தை 30 ஜூன் 2006 வரை தள்ளி வைத்தது.

இந்த இடைவெளியை நியாயமான முறையில் பயன்படுத்திக்கொள்ள வணிகர்களும் தயாராக இல்லை; மக்கள் பிரதிநிதிகளும் தயாராக இல்லை. 28 மார்ச் 2006 அன்று தில்லி வளர்ச்சிக் குழுமம் (Delhi Development Authority - DDA) தில்லி மாஸ்டர் பிளானை மாற்றி அமைப்பதாக ஓர் ஆணையைக் கொண்டுவந்தது. மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்கக் கேட்டுக்கொண்டது. உச்ச நீதிமன்றம் ஒரு மேற்பார்வைக் குழுவை நிறுவி மத்திய அரசை இந்த மேற்பார்வைக் குழுவிடம் முழு விவரங்களைச் சமர்பிக்கச் சொன்னது - 28 ஏப்ரல் 2006 அன்று.

மேற்பார்வைக் குழு அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டபின்னர் தன் அறிக்கையை 4 மே 2006 நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்தது. உச்ச நீதிமன்றம் அதைப் பற்றிய விவாதத்தைத் தொடங்குவதற்கு முன், 11 மே 2006 அன்று மத்திய அரசு தன் விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

ஏன்?

ஏனெனில், நீதிமன்றம் வழியாக இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு பதில் தனக்கு இருக்கும் சட்டம் உருவாக்கும் அதிகாரத்தைக் கொண்டு மோசமான ஒரு சட்டத்தை உருவாக்கி மக்கள் சில சட்டங்களுக்குப் புறம்பாக நடந்துகொள்ளலாம் என்ற உரிமையைக் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. 12 மே 2006 அன்று மக்களவையிலும் 15 மே 2006 அன்று மாநிலங்கள் அவையிலும் Delhi Laws (Special Provision) Bill, 2006 தாக்கல் செய்யப்பட்டு, 19 மே 2006 அன்று குடியரசுத் தலைவர் அதில் கையெழுத்திட, அன்றே இது சட்டமானது.

மேற்படி சட்டத்தை ஆதரவாகக் கொண்டு, 20 மே 2006 அன்று மத்திய அரசு பிறப்பித்த கட்டளைப்படி, 1 ஜனவரி 2006க்குப் பிறகு தில்லியில் எந்தக் கட்டடத்தையாவது சீல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் சொல்லியிருந்தால் அதை அடுத்த ஒரு வருடத்துக்குச் செயல்படுத்த வேண்டாம். ஏற்கெனவே ஏதேனும் கட்டடங்கள் சீல் செய்யப்பட்டிருந்தால் அதை நீக்கி மீண்டும் தன்னிஷ்டத்துக்கு மக்கள் நடந்து கொள்ளலாம். அடுத்த ஒரு வருடத்துக்கு!

அரசின் இந்தப் போக்கை எதிர்த்து 23 மே 2006 அன்று உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.

29 செப்டம்பர் 2006 அன்று கிடைத்த தீர்ப்பில், Delhi Laws (Special Provision) Act, 2006 சட்டப்படி செல்லுபடியாகுமா என்று சந்தேகம் உள்ளது என்றும் அதைத் தீர்மானிப்பதற்கு முன்னால் அந்தச் சட்டத்தின்படி யாரும் தப்பிக்க முடியாது என்றும், சீல் வைப்பது தொடரும் என்றும் முடிவானது. ஆனால் சீல் வைப்பது 31 அக்டோபருக்குப் பிறகு தொடங்கும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதற்குப் பின்னும் சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி சீல் வைப்பதிலிருந்து நழுவ தில்லி நகராட்சி முயற்சி செய்தது. வணிகர்களும் பெரும் கூட்டமாக தகராறு செய்தனர். அரசியல் கட்சிகள் - பாஜக, காங்கிரஸ் - இரண்டும் வணிகர்களுக்கு ஆதரவு கொடுத்தது. பத்திரிகைகளைப் படிக்கும்போது என்னவோ நீதிமன்றம் கொடூரமாக நடந்துகொள்வது போல ஒருவருக்குத் தோன்றிவிடும். அரசு, தில்லி சட்டமன்றம், தில்லி மாநகராட்சி, வணிகர்கள் என்று அனைவருக்கும் எதிராகத் தீர்ப்பு சொல்லிய நீதிமன்றம் யாருக்கு ஆதரவாக இந்தத் தீர்ப்பைச் சொல்லியுள்ளது என்றே அனைவரும் சந்தேகம் கொள்வார்கள்.

ஆனால் வசிப்பவர் நலச் சங்கங்கள் ஒன்று சேர்ந்து, தங்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கத்தான் இந்த வழக்கையே எழுப்பினர். அவர்களது உரிமைகளைத்தான் நீதிமன்றம் இப்பொழுது பாதுகாத்துள்ளது.

இங்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் வணிகர்கள் முதல் அரசு வரை அனைவருமே சட்டத்துக்குப் புறம்பாக பல விஷயங்கள் நடந்துள்ளன என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். குறிப்பிட்ட சட்டம் பழமையானது, தவறானது, மாற்றப்பட வேண்டியது என்றுகூட இவர்கள் சொல்லவில்லை. சட்டம் தன் பாட்டுக்கு இருக்கட்டும், நாங்கள் எங்கள் இஷ்டத்துக்கு நடந்து கொள்வோம் என்ற வணிகர்களின் நடைமுறையும், அதற்கு மக்கள் பிரதிநிதிகள் கொடுக்கும் ஆதரவும்தான் நம்மை திகிலடையச் செய்கிறது.

இந்த சீல் வைப்பில் சிறு வணிகர்கள் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாமல் நீதிமன்றம் நடந்துகொண்டுள்ளது. 200 சதுர அடிக்குள் இருக்கும் மளிகைக் கடைகள், பிற அத்தியாவசிய சேவை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. பெரும் பெரும் கடைகளைத்தான் இப்பொழுது சீல் வைக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

நவம்பர் 2006 சீல் வைப்பது துணை ராணுவ உதவியுடன் நடக்க ஆரம்பித்துள்ளது. இனியும் தப்பிக்க முடியாது என்ற நிலை வந்தபின்னர்தான் பலர் மீண்டும் தங்கள் இடங்களை வசிக்கும் இடங்களாக மாற்றும் வேலையில் இறங்கியுள்ளனர்.

-*-

சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் இன்ன பிறர் இன்னமும் தெருவில் இறங்கி போராடவில்லை. தாங்கள் செய்தது முழுக்க முழுக்க நியாயம்தான் என்று இதுவரை சொல்லவில்லை.

ஒருவேளை நாளை இது நடந்தாலும் நடக்கலாம்.

-*-

இதற்கிடையில் இப்பொழுது ஒன்பதாம் அட்டவணை (நீதிமன்றங்களின் பார்வையிலிருந்து தப்பிக்கும் குறுக்கு வழி) தொடர்பான வழக்கு ஒன்றும் உச்ச நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இதுவரையில் ஒன்பதாம் அட்டவணையில் Delhi Laws (Special Provision) Act, 2006-ஐ வைக்க முடிவு செய்யவில்லை என்று தெரிய வருகிறது. ஆனால் சொல்ல முடியாது... அடுத்து செய்தாலும் செய்யலாம்.

நாம்தான் சட்டத்தை மதிப்பவர்கள் கிடையாதே! மத்திய அரசு முதற்கொண்டு.

3 comments:

  1. "பத்திரிகைகளைப் படிக்கும்போது என்னவோ நீதிமன்றம் கொடூரமாக நடந்துகொள்வது போல ஒருவருக்குத் தோன்றிவிடும்"

    It is because the media thinks that the affected "looks like one of us"

    "இதற்கிடையில் இப்பொழுது ஒன்பதாம் அட்டவணை (நீதிமன்றங்களின் பார்வையிலிருந்து தப்பிக்கும் குறுக்கு வழி) தொடர்பான வழக்கு ஒன்றும் உச்ச நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது"

    Patha Vachiteengale Badri :-))

    ReplyDelete
  2. ஒரு வலைப்பதிவாளரின் கருத்து

    http://sujaiblog.blogspot.com/2006/11/honking-in-no-honking-zone.html
    I was wondering- can’t we even follow one single rule in this country? At least those that are so easy and simple to implement?

    ReplyDelete
  3. இதை படிக்கும் போது சமீபத்தில் சென்னை சாலையில் இருசக்கர வாகனத்தில் போகும் போது சில சிகப்பு விளக்குகளுக்கு "யாரும்" மதிப்பு கொடுக்காமல் சர் சர் என்று போய்கொண்டிருந்தது.அரசாங்க பேருந்தும் கூட.நான் அதற்கு மரியாதை கொடுத்து நின்றால் மறு நாள் பத்திரிக்கையில் புகைப்படம் வந்திருக்கும்.
    கட்டுமானத்துறை பற்றி.
    பல மாடிகள் எந்த வித அப்ரூவல் இல்லாமல் கட்டுவதை பற்றி சொல்கிறீர்கள்.சென்னையில் பல கட்டிடங்கள் முறையான பொறியாளர்கள் டிசைன் இல்லாமல் கட்டப்படுகிறது.ஆமாம், இவர் இவர் தான் டிசைன் செய்யவேண்டும் ஏதாவது குழுமத்தை அரசு சொல்லியுள்ளதா?எதற்கு கேட்கிறேன் என்றால்,எனக்குதெரிந்தவரிடம் "இந்த கட்டிடத்தை இவர் டிசைன் செய்யலாம்" என்று ஏதாவது அத்தாட்சி இருக்குமா என்றேன்.அவருக்கு தெரிந்து இல்லை என்றார்.கட்டிட அஸ்திவாரமே சரியில்லை என்கிற போது ....??நினைத்தாலே பயமாக இருக்கிறது.ஒரு நில நடுக்கம் போதும்..90% கட்டிடங்கள் காலியாவதற்கு.
    சிஙகையில் "Professional Board" என்று உண்டு. இதில் இருப்பவர்கள் எல்லோரும் தங்களை நிருபித்தபிறகுகே அவர்களுக்கு இந்த இடம் கிடைக்கும்.
    கட்டும் கட்டிடத்தின் டிசைன் முழுவதும் இவர்கள் பொருப்பில்.தப்பிக்க முடியாது.

    இதெல்லாம் படிக்கும்/கேள்விப்படும் போது "அன்னியன்" மாதிரி ஆள் தேவையோ என்று கூட தோன்றுகிறது.

    "வன்முறையில் நம்பிக்கை இல்லாத போதும்."

    ReplyDelete