இந்தியாவுக்கு வந்திருக்கும் நடிகையும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நல அமைப்பான UNHCR நல்லெண்ணத் தூதுவருமான ஏஞ்செலினா ஜோலீ இந்தியாவுக்குப் பாராட்டுப் பத்திரம் கொடுத்துள்ளார். [UNHCR Press Release | The Hindu News]
இந்தியா தன்னாட்டு மக்கள் நலனுக்கே நிறைய செய்யவேண்டிய நிலையிலும்கூட, வெளிநாட்டு அகதிகளை அரவணைத்து அவர்களுக்கு வேண்டிய அளவு செய்துள்ளதாக ஜோலீ கூறியுள்ளார்.
இந்திய விடுதலைக்குப் பிறகு நான்கு பெரும் இனக்குழுக்களாக அகதிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். ஒன்று சீன ஆக்ரமிப்பிலிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்த திபெத்தியர்கள். இந்தியா இன்றுவரை திபெத்திய அகதிகளுக்கு இடம் கொடுத்து வந்துள்ளது. எண்ணிக்கையில் இவர்கள் சில பத்தாயிரங்கள் இருப்பார்கள். பர்மா/மியான்மாரில் ராணுவம் ஆட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததும் பலர் இந்தியாவுக்குத் தப்பி வந்தனர். இவர்களும் கிட்டத்தட்ட 50,000க்கு மேல் இருப்பார்கள்.
1970-ல் வங்கதேச அகதிகள் லட்சக்கணக்கில் இந்தியாவுக்கு வந்தனர். இதுதான் இந்தியா சந்தித்த பெரும் நெருக்கடி என்று சொல்லலாம். அதையொட்டியே இந்தியா பாகிஸ்தானுடன் சண்டைக்குச் சென்றது. சண்டைக்குப் பிறகு வங்கதேசத்தவர் பலரும் புதிதாக உருவான வங்கதேசத்துக்குத் சென்றுவிட்டாலும் பலர் இந்தியாவில் தங்கிவிட்டனர். மேலும் பொதுவாகவே இன்றும்கூட வங்கதேசத்தவர் இந்தியாவுக்குள் ஊடுருவல் செய்வதாக இந்தியா புகார் செய்துவருகிறது. பாஜக, சிவசேனை போன்ற கட்சிகள் தில்லி, மும்பை போன்ற இடங்களில் வங்கதேச அகதிகள் இருப்பதாக பிரச்னை எழுப்பியுள்ளனர். இந்திய அரசு வங்கதேச அகதிகளை பிரச்னையாக மட்டுமே கருதுகிறது. அவர்கள் இன்றைய நிலையில் அரசியல் அகதிகள் அல்லர்; பொருளாதார அகதிகள் மட்டுமே. அசாம் பிரச்னை வலுத்ததற்கு வங்கதேச அகதிகள் பெரும் காரணம்.
நான்காவது பெரிய குழு என்றால் அது இலங்கையிலிருந்து தமிழகம் வந்த ஈழத்தமிழர்கள். தொடக்கத்தில் ஓரளவுக்கு இந்தியா இந்த அகதிகளுக்கு உதவிகள் செய்தாலும் இன்று தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகள் கொடுமையான வாழ்வு வாழவேண்டியுள்ளது.
இவர்கள் தனி கேம்ப்பில் அடைக்கப்படுகிறார்கள். அந்தப்பக்கம் ஏதாவது பெரிய மனிதர் - அப்துல் கலாம், மன்மோகன் சிங் ஆகியோர் - வரவேண்டி இருந்தால் அகதிகள் பாடு படு திண்டாட்டம். அகதிகளை எப்படியாவது - அவர்களது விருப்பத்துக்கு மாற்றாக - மீண்டும் இலங்கைக்கே அனுப்பி வைப்பது என்று தீர்மானத்தில்தான் தமிழக அரசும் இதுவரை நடந்துகொண்டுள்ளது.
1951-ம் ஆண்டில் பல உலக நாடுகள் UNHCR convention ஒன்றில் கையெழுத்திட்டார்கள். இதன்படி பல உலக நாடுகள் அரசியல் அகதிகளுக்கு எவ்வகையான புகலிடம் தரவேண்டும், யாரை அரசியல் அகதிகள் என்று ஏற்றுக்கொள்வது போன்ற சில விஷயங்கள் முடிவு செய்யப்பட்டன. ஆனால் இந்தியா இன்றுவரை இதில் கையெழுத்திடவில்லை.
இந்தியா அகதிகளுக்கு என்று விசேஷமாக ஒன்றும் செய்வதில்லை. இந்தியாவில் ஏழைகள் பலர் இருக்கிறார்களே, அவர்கள்தான் முக்கியம் என்று கதையடித்துத் தப்ப முடியாது. இந்தியாவில் ஏழைகள் முக்கியம் என்று சொல்லி, விமான நிலையங்கள், ஆறு லேன் சாலைகள் போன்றவை கட்டப்படாமல் இல்லை. அகதிகள் பராமரிப்பு என்பது நாகரிகமான நாடுகள் செய்யவேண்டிய அடிப்படையான விஷயம்.
பர்மா, ஆஃப்கன், வங்கதேச, திபெத் அகதிகள் இந்தியாவில் சந்தோஷமாக இல்லை. அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்கூடக் கிடையாது. ஆனால் இவர்கள் எல்லோரையும் விடப் பாவப்பட்டவர்கள் ஈழத்தமிழ் அகதிகள்.
உயிரைப் பணயம் வைத்து தோணியில் ஏறி வரும் மக்களுக்கு இந்தியா கொடுப்பது ஜெயில் தண்டனையைப் போன்ற ஒன்றுதான்.
ஏஞ்செலினா ஜோலி UNHCR அதிகாரிகளிடம் பேசி உண்மையைத் தெரிந்துகொள்ளட்டும். இந்திய மந்திரி ஆனந்த் ஷர்மாவும் வெட்கம் கெட்டு பாராட்டுகளைப் பெறுவதற்குப் பதில், தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகள் நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளட்டும்.
===
அகதிகளுக்கு என்ன செய்யவேண்டும்?
1. அவர்கள் இந்தியா வந்த உடனேயே, அரசியல் காரணங்களுக்கான அகதி என்பதை உறுதி செய்துகொண்டு (பர்மா, இலங்கை அகதிகள் இன்றைய நிலையில் அரசியல் அகதிகள்தாம்!) அவர்கள் கண்ணியத்துடன் உயிர்வாழ சுகாதாரமான, வசதியான தாற்காலிக இடம் கொடுக்கப்பட வேண்டும். இந்த உதவித்தொகை, இடம் ஆகியவை 6 மாதங்கள் வரை கொடுக்கப்படலாம். அதற்குப்பின் அவர்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ வழி காட்டவேண்டும்.
அப்படி அரசியல் அகதி இல்லை, பொருளாதார அகதி என்றால், மீண்டும் அவர்களது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிடலாம்.
2. அனுமதிக்கப்பட்ட அகதிகளுக்கு 'diplomatic papers' - ஏதாவதோர் அடையாள அட்டை கொடுத்து, அவர்களுக்கு இந்தியாவில் எந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதி வழங்கி, எங்கு வேண்டுமானாலும் வேலை தேடிக்கொள்ள அனுமதி தர வேண்டும்.
3. எந்த மாநிலத்தில் அவர்கள் தங்கினாலும் ரேஷன் கார்டுகள் வழங்கி, குறைந்த விலையில் நியாய விலைக்கடைகளில் அவர்கள் பொருள்களைப் பெற அனுமதி வழங்க வேண்டும்.
4. இந்தியாவில் எந்த இடத்திலும் எந்தக் கல்விக்கூடத்திலும் அகதிக் குழந்தைகள் கல்வி பயில முழு உரிமை கொடுக்கவேண்டும்.
5. அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவ வசதிகள் எவ்வாறு இந்தியர்களுக்கு வழங்கப்படுகிறதோ, அதேபோன்ற வசதிகள் அகதிகளுக்கும் வழங்கப்படுதல் வேண்டும்.
6. எந்த இடத்திலும் வீடு வாங்க, சொத்துகள் வாங்க உரிமை கொடுக்கவேண்டும். அவர்கள் சொத்துக்களை விற்கும்போது அந்தப் பணத்தை வேறு கரன்சிகளில் மாற்றி எடுத்துச் செல்ல அனுமதி தரவேண்டும்.
7. பிற நாடுகளுக்குப் பயணம் செய்ய அவர்களுக்கு முழு உரிமை கொடுக்கப்படவேண்டும்.
8. முக்கியமாக "usual suspects" என்று சொல்லி எதற்கெடுத்தாலும் அவர்களை ஜெயிலுக்குக் கொண்டுபோய் விசாரணை செய்வது போன்ற அபத்தமான, அபாண்டமான செயல்களைச் செய்யாதிருக்க வேண்டும்.
9. 1951 ஐ.நா கன்வென்ஷனில் கையெழுத்திட வேண்டும்.
அதற்குப்பின் ஏஞ்செலினா ஜோலீயைக் கூப்பிட்டு விழா எடுக்கட்டும்.
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
12 hours ago
நல்ல கட்டுரை. பிரான்ஸ் போன்ற நாடுகள் அகதிகளை நடத்தும் நிலையோடு ஒப்பிடும்போது இந்தியாவின் நிலை படுமோசம். ஈழ அகதிகளின் நிலை பற்றி விடுதலைச்சிறுத்தைகள் எம்.எல்.ஏ ரவிக்குமாரின் ஆய்வறிக்கையைப் படியுங்கள். கண்ணீர்தான் வரும். சொந்த மக்களையே அகதிகள் போல் நடத்தும் தேசத்திடமிருந்து வேறு எதை எதிர்பார்க்கமுடியும்?
ReplyDeleteநல்லதொரு பதிவு
ReplyDelete// 5. அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவ வசதிகள் எவ்வாறு இந்தியர்களுக்கு வழங்கப்படுகிறதோ, அதேபோன்ற வசதிகள் அகதிகளுக்கும் வழங்கப்படுதல் வேண்டும்.//
ReplyDeleteவழங்கப்பட்டுக்கொன்டிருக்கிறது....
இது தவிர, அவர்களின் குழந்தைகளுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 2001 வரை Bachelor quota வழங்கப்பட்டது.
//4. இந்தியாவில் எந்த இடத்திலும் எந்தக் கல்விக்கூடத்திலும் அகதிக் குழந்தைகள் கல்வி பயில முழு உரிமை கொடுக்கவேண்டும்.//
ஆனால் Master Degree பயில Indian Citizen ஆக இருக்க வேண்டும் !!!!
பொதுவாக ஒரு நாளைக்கு ஒரு சட்டை போடலாம் ஆனால் இவர்கள் மீது உள்ள என்ற "அகதி" என்ற சட்டை பல வருடங்களாகவே கழட்டப்படாமல் இருக்கிறது.
ReplyDeleteமனிதனை மனிதனாக பாவிக்காத வரைக்கும் இங்கு என்ன? எந்த இடத்திலும் இந்த அவல நிலை தான்.
//இந்திய அரசு வங்கதேச அகதிகளை பிரச்னையாக மட்டுமே கருதுகிறது. அவர்கள் இன்றைய நிலையில் அரசியல் அகதிகள் அல்லர்; பொருளாதார அகதிகள் மட்டுமே. அசாம் பிரச்னை வலுத்ததற்கு வங்கதேச அகதிகள் பெரும் காரணம்.//
ReplyDeleteமதிப்பிற்குரிய திமி ஐயா,
வங்கதேசத்திலிருந்து அங்குள்ள மதவெறியால் மானமிழந்து வீடிழந்து நிலமிழந்து ஓடி வந்து இன்று அகதிகளாக இருக்கும் சக்மா ஜூமா பௌத்த வனவாசிகள் இதர இந்துக்கள், இவர்களெல்லாம் உங்கள் கண்களில் படவே மாட்டார்களா? உங்கள் போலி-மதச்சார்பற்ற அடிப்படைவாத பார்வையில் அவர்களுக்கெல்லாம் மனிதர்களே கிடையாதோ? Disgusted at such போலி மனிதாபிமான பாவ்லாக்கள்!
அன்புடன்
காஃபீர் அரவிந்தன் நீலகண்டன்
Badri,
ReplyDeleteI translated few sections of this post for Global Voices Online on account of World Refugees Day.
It could be read here:
http://www.globalvoicesonline.org/2007/06/22/tamil-blogosphere-sri-lankan-tamil-refugees-in-india
French translation here:
Blogosphère tamoul: Les réfugiés tamouls sri-lankais en Inde
-Mathy