Tuesday, November 14, 2006

பழங்கதை - 1: மதுரை, திருச்சி புத்தகக் கண்காட்சிகள்

எழுத நினைத்து விட்டுப்போனவை சில. பிற்காலத்தில் உபயோகப்படும் என்பதால் சுருக்கமாக.

மதுரையில் செப்டம்பரில் நடந்த புத்தகக் கண்காட்சி வித்தியாசமான முயற்சி. இந்திய மாநிலங்களிலேயே தமிழகத்தைப் போல புத்தகக் கண்காட்சிகள் வேறெங்கும் நடைபெறுவதில்லை. கேரளாவில் அனைத்துப் பதிப்பாளர்களும் கலந்துகொள்வது போன்ற புத்தகக் கண்காட்சி ஏதும் கிடையாது. கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் ஆண்டுக்கு நான்கைந்து இடங்களில் கண்காட்சிகள் நடந்தால் பெரிய விஷயம். பிற மாநிலங்களிலும் அப்படியே.

பல மாநிலங்களிலும் தலைநகரில் குறிப்பிடப்படும்படியான ஒரு கண்காட்சி இருக்கும். கொல்காதா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், தில்லி... ஆனால் தலைநகருக்கு அடுத்த நிலையிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் பெரிதாக ஒன்றையும் நடத்தா. தமிழகத்திலோ பல நகரங்களில் உள்ளூர் ரோடரி, லயன்ஸ் கிளப், பிற சங்கங்கள் ஆகியவற்றின் முயற்சியால் புத்தகக் கண்காட்சி என்ற பெயரில் ஏதாவது ஒன்று நடைபெற்றுவிடும். நெய்வேலி, காரைக்குடி போன்ற இடங்களில் பெரிய தொழிற்சாலை, ஆராய்ச்சிச்சாலை ஆதரவில் புத்தகக் காட்சி நடைபெறும்.

தமிழகத்தில் சென்னையில் நடக்கும் கண்காட்சி மிக முக்கியமான ஒன்று. விற்பனையை வைத்துப் பார்த்தால் கொல்காதா, தில்லி ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது நிலையில் இருக்கும். (மும்பையில் பெரிதாக ஒன்றும் நடப்பதில்லை என்று அறிகிறேன்.) சென்னையில் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சங்கம் (பபாஸி) நடத்தும் மாபெரும் நிகழ்ச்சி இந்தப் புத்தகக் கண்காட்சி; வரும் ஜனவரியில் 30-ம் வருடமாக நடக்க உள்ளது. ஆனால் சென்னையை அடுத்து சரியான முறையில் மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் புத்தகக் காட்சிகள் நடப்பதில்லை.

மதுரையிலும் கோவையிலும் சென்ற ஆண்டு வரை புத்தகக் கண்காட்சி என்று ஒன்று நடந்ததே இல்லை. இந்த ஆண்டு கலெக்டர் உதயசந்திரன் தன் ஆர்வத்தால் மட்டுமே இந்தக் கண்காட்சி நடைபெறக் காரணமாக இருந்துள்ளார். பொதுவாக அதிக அளவு விலையுள்ள நுகர்பொருள்களை விற்கும் கண்காட்சியாக இருந்தால் Event Organization நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு களத்தில் இறங்கிவிடும். பார்க்கும் இடங்களிலெல்லாம் சாம்சுங், எல்ஜி, பெப்சி என்று போட்டி போட்டுக்கொண்டு ஸ்பான்சர்ஷிப் இருக்கும். கடைகளுக்கான வாடகை எக்கச்சக்கம். முழுவதும் குளிரூட்டப்பட்ட வளாகம். கூட்டமும் களைகட்டும்.

ஆனால் புத்தகக் கண்காட்சி நடத்துவது எளிதல்ல. பெரும்பான்மை பதிப்பாளர்கள் சின்னஞ்சிறு நிறுவனங்களை நடத்திவருகிறார்கள். செலவு செய்ய அஞ்சுபவர்கள். வருமானமும் குறைவு. ஆயிரக்கணக்கில் மக்கள் வந்தாலும் தமிழ்ப்புத்தகக் கடைகளில் சராசரியாகச் செய்யும் செலவு ரூ. 150 என்றுதான் இருக்கும். (ஆங்கிலத்தில் இந்தக் காசுக்கு ஒரு புத்தகம்கூடக் கிடைக்காது. தமிழில் தள்ளுபடி போக மூன்று புத்தகங்கள்வரை வாங்கலாம்!)

வாடகை குறைவாகத்தான் கிடைக்கும் என்பதால் Event Organizers-ஐ வைத்து நடத்தமுடியாது. தன்னார்வலர்களை வைத்துத்தான் நடத்த வேண்டும், அல்லது பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் சேர்ந்து நடத்தவேண்டும். மதுரை கலெக்டர், பபாஸியை வற்புறுத்தி மதுரை கண்காட்சியை நடத்த வைத்தார். கண்காட்சி வளாகத்தை வாங்கிக் கொடுப்பதிலிருந்து கண்காட்சிக்குத் தேவையான விளம்பரங்களை ஊர் முழுதும் செய்வது, கல்லூரிகளைத் திரட்டி கண்காட்சிக்கு வரவழைப்பது, கலை நிகழ்ச்சிகளை நடத்துவது, குறும்படங்கள் காண்பிப்பது போன்ர பலவற்றையும் ஏற்றுக்கொண்டார். பபாஸி தாற்காலிக கட்டடத்தை எழுப்பி, பதிப்பாளர்களை வரவழைத்து, வாடகை வசூலித்து செலவு போக மீதத்தை வைத்துக்கொள்ளலாம்.

மதுரையில் முதன்முதலாக நடந்துள்ள புத்தகக் கண்காட்சி மிகுந்த வரவேற்பைப் பெற்றது என்றுதான் சொல்வேன். தொடர்ச்சியாக அடுத்த சில வருடங்கள் நடந்தால் - அதுவும் இதே செப்டம்பர் மாதம் முதல் இரண்டு வாரங்களில் - பொதுமக்களின் ஈடுபாடும் அதிகரிக்கும். பபாஸி இப்பொழுதைக்கு வரும் ஆண்டுகளிலும் காட்சியைத் தொடர்ந்து நடத்தத் தீர்மானித்துள்ளது என்று நினைக்கிறேன். இப்பொழுதிருக்கும் கலெக்டர் தொடர்ந்தால் நிர்வாகத்தின் ஒத்துழைப்பும் அதிகமாக இருக்கும். வேறொருவர் பணிமாறினால் என்ன ஆகும் என்பதைச் சொல்ல முடியாது.

-*-

திருச்சியில் 20-வது வருடமாக, ரோட்டரி கிளப் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் உதவி ஏதும் கிடையாது. பபாஸியின் உதவியும் கிடையாது.
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையைப் போல ரோட்டரி கிளப்பிடம் அதிகமாகத் தன்னார்வலர்களும் கிடையாது. இந்தக் குறைபாடுகளால் திருச்சி கண்காட்சி - நிறைய பொடென்ஷியல் இருந்தாலும் - சோபிப்பதில்லை. இந்த வருடம் அக்டோபரில் நடந்த கண்காட்சியில் மிகச் சில பதிப்பாளர்களே பங்குகொண்டனர். முதல் முறையாக செயிண்ட் ஜோஸப் கல்லூரியில் அரங்கு அமைத்திருந்தனர். இதற்கு முந்தைய வருடங்களில் தில்லை நகர் மக்கள் மன்றம் என்ற சிறிய இடத்தில் நடந்து வந்தது.

20 வருடங்களாக நடந்து வருவதால் திருச்சியில் அடுத்த சில வருடங்களிலும் இந்தக் கண்காட்சி தொடர்ந்து நடக்கும். ஆனால் கலெக்டர், பபாஸி ஆகியோரையும் சேர்த்து இழுக்காவிட்டால், பலன் மிகக் குறைவாகத்தான் இருக்கும்.

1 comment:

  1. மதுரை புத்தக கண்காட்சி புத்தகப்பிரியர்களுக்கு கிடைத்தை இன்னொரு சித்திரைத் திருவிழா என்றுதான் சொல்ல வேண்டும். பதிப்பகம் பதிப்பகமாக சென்று புத்தகம் தேர்வு செய்து வாங்கியது மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைந்தது. சில படைப்பாளிகளை காணும் வாய்ப்பும் கிடைத்தது. ஆகஸ்ட்-செப்டம்பரில் விடுப்பு எடுத்ததால் இந்த முறை கலந்து கொள்ள முடிந்தது.

    பதிவுக்கு நன்றி பத்ரி

    ReplyDelete