மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா என்ற அமைப்பின் தலைவர் ராஜ் டாகரே கடந்த சில தினங்களாக செய்தியில் அடிபடுகிறார். ராஜ் டாகரே, சிவ சேனைக் கட்சியின் நிறுவனர் பால் டாகரேயின் தம்பி மகன். பால் டாகரேயின் சொந்த மகன் உத்தவ் டாகரே. கட்சியை சொத்தைப் போலப் பங்குபோடும்போது, தம்பி மகனுக்கு ஒன்றும் கிடையாது; எல்லாம் சொந்த மகனுக்குத்தான் என்று பால் டாகரே சொன்னதால், ராஜ் டாகரே தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்துவிட்டார்.
'மண்ணின் மைந்தருக்கு மட்டுமே மாநிலத்தில் வேலை' என்பது பல பிராந்தியக் கட்சிகளின் வாக்குவாதமாக இருந்துவந்துள்ளது. சிவ சேனை, இதனை முன்வைத்துப் பல போராட்டங்களை நடத்தியுள்ளது. மும்பையில் குஜராத்திகள், தமிழர்கள் புகுந்துள்ளனர் என்றும் அவர்களைத் துரத்தவேண்டும் என்றும் வெளிப்படையாகப் பேசியவர் பால் டாகரே. அதை முன்வைத்துதான் அவர் தன் கட்சியையே ஆரம்பித்தார். பின் கொஞ்சம் அடக்கி வாசிக்கலானார். அவருக்கு அடுத்து கையில் கிடைத்தது இந்துத்துவா. அதனால் 'மண்ணின் மைந்தன்' விஷயத்தை அவர் இப்போதைக்கு விட்டுவைத்துள்ளார்.
ஆனால், புதிதாகக் கடையைப் பரப்பியுள்ள ராஜ் டாகரே, பெரியப்பாவின் சரக்கை தூசு தட்டி எடுத்து விற்க முனைந்துள்ளார்.
எப்படி தமிழகம், ஆந்திரம் பிரிவினை வந்தபோது சென்னை யாருக்குப் போவது என்று சண்டை வந்ததோ, அதைப்போன்றே மொழிவாரி மாகாணப் பிரிவினை போது மும்பை நகரை என்ன செய்வது என்ற பிரச்னை எழுந்தது. குஜராத், மஹாராஷ்டிரா என்ற இரண்டு மாநிலங்களுக்கும் இல்லாமல், அந்த நகரை ஒரு யூனியன் பிரதேசமாக அறிவிக்கலாம் என்றும்கூட சிலர் கருதினர். பல போராட்டங்களுக்குப் பிறகு, மும்பை மஹாராஷ்டிர மாநிலத்தின் தலைநகராக இருக்கும் என்று முடிவானது.
சென்னையில் பிற மொழி பேசுபவர்கள் எண்ணிக்கையில் குறைவு. தமிழ் பேசுபவர்கள் பெரும்பான்மை. மும்பையிலோ, மராத்தி பேசுபவர்கள் குறைவு. ஹிந்தி பேசுபவர்களே அதிகம். மும்பைக்கு வந்துசேரும் குஜராத்திகள், தமிழர்கள் என அனைவருமே ஹிந்தி கற்றுக்கொண்டு பேசுகிறார்கள். பிஹார், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எப்போதுமே ஹிந்தி பேசுபவர்களே. பாலிவுட் சினிமா, முழுக்க முழுக்க ஹிந்தி பேசும் சினிமா. இதனால் மாநிலத்தின் தலைநகராக இருக்கும் மும்பை, மராத்தி மொழியின் தலைநகராக இல்லை. மராட்டியர் கலாசாரத்தின் தலைநகராகவும் இல்லை. மராத்தி புத்தகங்களின் தலைநகராகவும் இல்லை. அந்த வேலையைச் செய்கிறது பூனா நகரம். இதனால் மும்பையில் ஒருவித நெருக்கடி நிலவுகிறது.
பெங்களூருவில் நிலவும் நெருக்கடியும் இந்த வகையைச் சார்ந்ததே. பெங்களூருவில் ஒரு புத்தகக் கண்காட்சி நடந்தால் அங்கு கன்னடப் புத்தகங்களைவிட தமிழ்ப் புத்தகங்கள் அதிகமாக விற்கின்றன. மும்பை நகரில் மராத்தி புத்தகங்களை விற்பதற்கு ஏதேனும் கடை இருக்கிறதா என்று தேடிப் போகவேண்டும். மும்பை மாநகரில் மராத்தி மீடியத்தில் பாடம் சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் ஏதேனும் இருக்கின்றனவா என்று கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கலாம்.
ஆனால் ராஜ் டாகரே இதுபோன்ற கலாசார விஷயங்களைப் பற்றிக் கவலை கொள்வதாகத் தெரிவதில்லை. உத்தரப் பிரதேசத்திலிருந்தும் பிஹாரிலிருந்தும் பிழைக்க வழிதேடி வந்துள்ள ஏழைகளிடம் தன் கோபத்தைக் காண்பிக்கிறார். மராத்தியர்களின் வேலைகளைத் திருடுவதாகக் கோபிக்கிறார்.
ஆனால் இது மஹாராஷ்டிரத்தில் மட்டும் நடக்கும் தனிப்பட்ட நிகழ்ச்சி இல்லை. சில மாதங்களுக்குமுன் அசோமில் பிஹாரிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடைபெற்றது. பெங்களூருவில் நேற்றுகூட கன்னட ரக்ஷண வேதிகே என்ற காட்டுக்கூட்டம் கர்நாடகத்தில் கன்னடிகர்களுக்கு மட்டுமே ரயில்வே கடைநிலை வேலைகள் ஒதுக்கப்படவேண்டும் என்று ரகளையில் ஈடுபட்டு பொருள்களுக்குச் சேதம் விளைவித்துள்ளது.
ராஜ் டாகரேயின் குண்டர் குழு, பால் டாகரேயின் குண்டர் குழுவைப் போன்றதே. தலைவர் சொல்லிவிட்டார் என்றால் மூளையைத் தூரக் கழற்றிவைத்துவிட்டு தெருவில் இறங்கி கற்களை வீசுவது. கையில் கிடைத்த ஆள்களை அடித்து துவம்சம் செய்வது. இந்த வகை அரசியலை பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் பின்பற்றி வருகின்றனர். மேலே குறிப்பிட்ட கன்னட ரக்ஷண வேதிகே, சிவ சேனை, முற்காலத்திய வன்னியர் சங்கம், பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் (பஜ்ரங் தள், வி.எச்.பி) போன்றவை. இதனாலேயே இந்த அமைப்புகளின் தலைவர்களை எப்படிக் கைது செய்வது என்று தெரியாமல் அரசுகள் பயந்து நடுங்கியுள்ளன. இந்த பயமே இந்த குண்டர் கூட்டங்களுக்கு ஒருவிதத்தில் தைரியத்தைக் கொடுத்துள்ளன.
ராஜ் டாகரே 'வெறுப்பை உமிழும் பேச்சுக்காக' கைது செய்யப்படுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. பிணையில் வெளியே வந்து தொடர்ந்து இப்படியே பேசிக்கொண்டிருப்பார். தெருவில் வன்முறை செய்யும் ஒவ்வொரு ஆசாமியையும் பத்து வருஷத்துக்கு ஜெயிலில் போட்டால் போதும். ராஜ் டாகரே நாளை கூப்பிட்டால் எவனும் தெருவில் இறங்கி வன்முறை செய்ய வரமாட்டான். பொதுச் சொத்துக்கு நாசம் விளைவிக்கும் எவரையும் மிகக் கடுமையான காவலில், பிணையே கொடுக்காமல், பல ஆண்டுகள் வைத்திருக்கவேண்டும். அது ஒன்றின்மூலம்தான் இதை ஒடுக்கமுடியும்.
அடுத்து, இந்த 'மண்ணின் மைந்தர்' பிசினஸ். இதைப் பற்றிப் பேசுவதை யாரும் தடுக்க முடியாது. பேச்சுரிமை என்ற அடிப்படையில் இதைப்பற்றிப் பேச எல்லோருக்கும் உரிமை தரப்படவேண்டும். இப்படிப் பேசியதற்காக யாரையும் கைது செய்தல் கூடாது என்பது என் கருத்து. அபத்தமான உளறல்களும் நமது குடியாட்சி முறையில் இடம்பெறுதல் அவசியம். தமிழ் தேசியம் போன்ற கருத்துகளும் ஒருவகையில் ராஜ் டாகரே பேசுவதோடு ஒத்துப்போகும் விஷயம்தான்.
இங்கு நாம் எதிர்க்கவேண்டியது சக மனிதர்கள்மீது நடத்தப்படும் வன்முறையையும் அனுமதியின்றி நடத்தப்படும் தெருப் போராட்டங்களையும் மட்டுமே.
[ராஜ் டாகரே, பால் டாகரேயின் தம்பி மகனாம். தங்கை மகன் என்று நினைத்து எழுதிவிட்டேன்.]
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
11 hours ago
"இந்த 'மண்ணின் மைந்தர்' பிசினஸ். இதைப் பற்றிப் பேசுவதை யாரும் தடுக்க முடியாது. பேச்சுரிமை என்ற அடிப்படையில் இதைப்பற்றிப் பேச எல்லோருக்கும் உரிமை தரப்படவேண்டும். இப்படிப் பேசியதற்காக யாரையும் கைது செய்தல் கூடாது என்பது என் கருத்து. அபத்தமான உளறல்களும் நமது குடியாட்சி முறையில் இடம்பெறுதல் அவசியம்."
ReplyDeleteஆனால் அவை தானே இதனை பிரச்சனைக்கும் காரணம்.அது மட்டும் இன்றி இது இந்திய ஒற்றுமையை பாதிக்கும் விஷயமும் கூட ...
//இங்கு நாம் எதிர்க்கவேண்டியது சக மனிதர்கள்மீது நடத்தப்படும் வன்முறையையும் அனுமதியின்றி நடத்தப்படும் தெருப் போராட்டங்களையும் மட்டுமே.//
ReplyDeleteபொது சொத்துக்களை சேதப்படுத்துவதும் எதிர்க்கப்படவேண்டியது தானே ?????
புரூனோ: நிச்சயமாக. அதற்கும் சேர்த்து கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும்.
ReplyDeleteஅழிப்பான்: எனக்கு இந்த ‘இந்திய ஒற்றுமையை பாதிக்கும்' விஷயம் என்பதில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. நாலு பேர் பேசுவதால் இந்தியாவின் ஒற்றுமை பாதிக்கப்படும் என்றால் இந்தியாவின் ஒற்றுமை என்பது கண்ணாடி போல உடைபடக்கூடிய ஒரு விஷயமா என்ன? பேச்சு வேறு, அதனை அடுத்து செயலில் இறங்குவது வேறு. பேச்சைக் கேட்டு செயலில் இறங்குபவன் முட்டாள், ஆபத்தானவன். அவன் தடுக்கப்படவேண்டும். பேசுவதை அனுமதித்தலே - அது எத்தனை மோசமான ஹேட் ஸ்பீச் ஆக இருந்தாலும்சரி - ஒரு குடியாட்சிக்கு அழகு.
ராஜ் தாக்ரேவின் கருத்தகள் தவறானதே. யாரும் அவர் பேசுவதை தடுக்கவில்லையே. ஏல்லா ஊடங்களும் அதனை தலையங்கமாகத்தான் போட்டுவருகின்றனர். இந்திய ஒருமைபாடு கண்ணாடி போன்றதே. டி.வி. ஷொ முதல் நடிகையை பப்ளிக்கா முத்தம் கொடுக்கும் வரை அனைத்துக்குமே எதிர்ப்புக்கள் தீவிரமுறையிலேயே இருக்கிறது. ‘எதையும் பேசவிடுங்கள்' என்ற விரிந்த நோக்கத்திற்கு ‘நாகரீகமாக எதிர்ப்பு தெரிவியுங்கள்' என்ற எண்ண விரிவாக்கமும் தேவை.
ReplyDeleteவிஷத்தைக் கக்கும் ராஜ் தாக்கரேயின் கருத்துக்களை மாறி மாறி ஒளிபரப்பிய டிவி சேனல்களை என்ன சொல்வது? ராஜ் தாக்கரேயின் பிதற்றல்களையெல்லாம் தலைப்புச் செய்திகளாக வெளியிட்ட பத்திரிகையுலகத்தை என்னவென்பது?
ReplyDeleteவிஷயத்தை ஊதி ஊதி பெரிசாக்க நினைக்கும் ஊடகங்களைத்தான் ராஜ் தாக்கரே போன்றோர் நம்புகின்றனர். ஒரு அறிக்கை விட்டால் போதும், மற்றதை ஊடகங்கள் பார்த்துக்கொள்ளும் என்று விட்டுவிடுகிறார்கள் தாக்கரேக்கள்.
//ராஜ் டாகரே 'வெறுப்பை உமிழும் பேச்சுக்காக' கைது செய்யப்படுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. பிணையில் வெளியே வந்து தொடர்ந்து இப்படியே பேசிக்கொண்டிருப்பார். தெருவில் வன்முறை செய்யும் ஒவ்வொரு ஆசாமியையும் பத்து வருஷத்துக்கு ஜெயிலில் போட்டால் போதும். ராஜ் டாகரே நாளை கூப்பிட்டால் எவனும் தெருவில் இறங்கி வன்முறை செய்ய வரமாட்டான்.//
ReplyDeleteஏன், அதற்குப் பதில் டாகரேயை 10 வருஷத்துக்கு ஜெயிலில் போட்டால் அடுத்து எந்த அரசியல்வாதியும் வனமுறையைத் தூண்ட மாட்டானே!
சரவணன்