Wednesday, February 20, 2008

கொசோவாவும் தமிழ் ஈழமும்

இரண்டு நாள்களுக்குமுன் ஐரோப்பாவில் உள்ள ஒரு பிரதேசமான கொசோவா தன்னிச்சையாக, தான் விடுதலை பெற்ற ஒரு புது குடியாட்சி என்று அறிவித்துள்ளது. இதனை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ரஷ்யா, சீனா, செர்பியா, கிரேக்கம் ஆகிய நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியா கருத்து சொல்லவில்லை. இலங்கை கடுமையாக எதிர்த்துள்ளது. எங்கோ நடக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி இலங்கை ஏன் இவ்வளவு கவலைப்படுகிறது என்பதை நாம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

கொசோவாவின் வரலாற்றை முழுமையாகச் சொல்வது இங்கே நோக்கமில்லை. யூகோஸ்லாவியா என்ற முடியாட்சி முதலாம் உலகப் போருக்குப் பிறகு பல பகுதிகளை உள்ளடக்கி உருவானது. 1943-1946 (அதாவது இரண்டாவது உலகப்போர் காலகட்டம்) சமயத்தில் கம்யூனிசப் புரட்சி ஏற்பட்டது. யூகோஸ்லாவியா என்பது இன்றைய செர்பியா, குரோவேஷியா, ஸ்லோவீனியா, மாசிடோனியா, மாண்டிநீக்ரோ ஆகிய ஐந்து நாடுகளுடன், இப்போது 17 பிப்ரவரி 2008 அன்று விடுதலையை அறிவித்த கொசோவா பகுதியும் சேர்ந்து இருந்த ஒரு நாடு. பல இன மக்கள். பல மொழிகள். இரு பெரிய மதங்கள் - கிறித்துவம், இஸ்லாம். ஆனால் பல்வேறு இன மக்களுக்கு இடையே கிறித்துவமும் பிரிந்தே இருந்தது.

1991 முதற்கொண்டு, கடுமையான உள்நாட்டுப் பிரச்னைகளை அடுத்து செர்பியா, குரோவேஷியா, மாண்டிநீக்ரோ, ஸ்லோவீனியா, மாசிடோனியா ஆகியவை துண்டு துண்டாகப் பிரிந்தன. இதில் குரோவேஷியா, ஸ்லோவீனியா, மாண்டிநீக்ரோ, மாசிடோனியா மக்களை விட்டுவிடுவோம்.

செர்பியா, கொசோவா மக்களை மட்டும் எடுத்துக்கொள்வோம். கொசோவாவுக்கு அண்டை நாடு அல்பேனியா. கொசோவா மக்கள் 90%க்கும் மேலானவர்கள் அல்பேனியர்கள். அல்பேனியா பல ஆண்டுகள் கம்யூனிச சர்வாதிகாரத்தில் இருந்து 1991-க்குப் பிறகு குடியாட்சியாக மாறியுள்ளது. கொசோவா மக்கள் அல்பேனிய இனத்தினர். பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள். வரும் காலங்களில் கொசோவாவும் அல்பேனியாவும் இணைந்து ஒரு புதிய நாடாகலாம்.

ஒருங்கிணைந்த யுகோஸ்லாவியாவில், செர்பியா ஒரு பெரும் மாகாணமாக இருந்தது - ஆனால் அதற்கு ரிபப்ளிக் என்று பெயர். அந்த மாகாணத்தின் உள்ளேதான் கொசோவா ஒரு தன்னாட்சி அதிகாரம் பொருந்திய அமைப்பாக (autonomous council) இருந்தது. யுகோஸ்லாவியா துண்டாடப்பட்டபோது பெரும் குழுக்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிரிய, பிரியமுடியாமல் மாட்டிக்கொண்டவர்கள் கொசோவா அல்பேனியர்கள் மட்டுமே.

செர்பியர்கள் கொசோவா அல்பேனியர்கள்மீது தொடுத்த இடைவிடாத தாக்குதல்களை, இன அழிப்பு (genocide) என்று கருதி அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகள், 1999-ல் செர்பியா மீது தாக்குதல் நடத்தி, கொசோவாவை ஐ.நா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

செர்பியாவுக்கும் ரஷ்யாவுக்கும் (இது கம்யூனிசம் தொடர்பானதல்ல) பல நூற்றாண்டுகளாக தொடர்ந்த உறவு உள்ளது. செர்பியன் ஒருவன் ஆஸ்திரிய இளவரசனை சுட்டுக் கொன்ற நிகழ்வே முதலாம் உலகப் போருக்குக் காரணமானது. ஆஸ்திரியாவுக்கும் செர்பியாவுக்குமான தகராறு உலகப் போராக மாறியதற்குக் காரணம், செர்பியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும், ஆஸ்திரிய-ஹங்கேரிக்கு ஆதரவாக ஜெர்மனியும் களத்தில் இறங்கியதுதான். செர்பியாவுக்காக கடுமையான போருக்குச் செல்லவும் ஜாரின் ரஷ்யா தயங்கவில்லை. இன்று ஜார் மன்னர் இல்லை. செர்பியா (யூகோஸ்லாவியா), ரஷ்யா இரண்டுமே கம்யூனிசத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டன. ஆனாலும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிகவும் வலுவாக உள்ளது. செர்பியாவிடமிருந்து கொசோவா பிரிந்து போவதை ரஷ்யா ஏற்றுக்கொள்ளவில்லை.

சீனாவுக்கு இதில் என்ன பிரச்னை? ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது? சீனா பல ஆண்டுகளாக தைவானை தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி என்கிறது. தைவானோ, தான் ஒரு சுதந்தர நாடு என்கிறது. கொசோவா தன்னிச்சையாக சுதந்தரப் பிரகடனத்தைச் செய்தால், அதனைப் பிற நாடுகளும் ஏற்றுக்கொண்டால், நாளை அதே தார்மீக உணர்வுடன் தைவானையும் தனி நாடாக ஏற்றுக்கொள்ளவேண்டும். எனவே சீனா, கொசோவாவின் தன்னிச்சைப் பிரகடனத்தை எதிர்க்கிறது.

கிரேக்கம், துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையே சைப்ரஸ் தீவில் இருக்கும் கிரேக்க சிப்ரியாட்டுகள், துருக்கிய சிப்ரியாட்டுகள் தொடர்பாக பிரச்னை உள்ளது. கிரேக்கமும் தன்னிச்சை சுதந்தரப் பிரகடனத்தை இந்தக் காரணத்தால் எதிர்க்கிறது. மேலும் சீனா போலன்றி, கிரேக்க நாடு, பிரச்னை பூமியான பழைய யூகோஸ்லாவியாவுக்கு அண்டை நாடு. யுகோஸ்லாவியா பிரிவினையை அடுத்து உருவான மாசிடோனியா என்ற நாட்டுடனும் கிரேக்கத்துக்கு ஒரு சண்டை உள்ளது. மாசிடோனியா என்ற பெயரை அந்த நாடு எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது கிரேக்கத்தின் கூற்று. கிரேக்க நாட்டில் மாசிடோனியா என்று ஒரு பகுதி உள்ளது. அங்கு மாசிடோனிய மொழிப்பிரிவினர் வாழ்கிறார்கள். நாளை அவர்கள் பிரிந்து மாசிடோனிய நாட்டுடன் சேர விரும்பலாம்.

இந்தியா வாயே திறக்காது. கொசோவாவில் நடப்பது இந்தியாவுக்குச் சிறிதும் விருப்பமில்லாத ஒரு செய்கை. இந்தியாவிலிருந்து பிரிந்துபோக நினைக்கும் பல சிறுபான்மையினருக்கு கொசோவா ஒரு முன்மாதிரியாக அமைந்துவிடக்கூடாதே என்று இந்தியா பயப்படும்.

இலங்கை அரசு, இந்த சுதந்தரப் பிரகடனத்தை எதிர்த்துக் கடுமையான வார்த்தைகளை வெளியிட்டுள்ளது.

****

கொசோவா தனி நாடாகலாம் என்றால், அதே லாஜிக்படி, தமிழ் ஈழமும் தனி நாடாகலாம். இரண்டு பகுதிகளிலும் இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. செர்பியர்கள் கொசோவா அல்பேனியர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக மட்டுமே நடத்தியுள்ளனர். இலங்கையில் தமிழர்கள் நிலை அப்படியேதான் உள்ளது. கொசோவா, தமிழ் ஈழம் இரண்டு இடங்களிலும் ஆயுதமேந்திய போராட்டம் பல வருடங்களாக நடந்து வருகிறது.

ஆனால் ஒரு பெரிய வித்தியாசம், கொசோவாவில் பிரதிநிதித்துவக் குடியாட்சி முறை நிலவுகிறது. கொசோவா அல்பேனியர்கள் அனைவரும் - ஒருவர் விடாமல் - செர்பியாவிலிருந்து பிரிந்து தனியாக வாழ விரும்புகிறார்கள். ஆனால் தமிழ் ஈழம் ஒரு சர்வாதிகாரக் கட்டமைப்பின்கீழ் உள்ளது. மக்கள் அனைவருமே விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்று சொல்லிவிட முடியாது. டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி என்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான, ஐக்கிய இலங்கைக்கு ஆதரவான தமிழர் தலைவர்கள் சிலர் உள்ளனர். கொழும்பு நகரில் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் வசிக்கிறார்கள்.

தமிழ் ஈழம் என்று சொல்லப்படும் பகுதியில் - முக்கியமாக கிழக்கு இலங்கைப் பகுதியில் சிங்களர்கள் பலர் குடியேற்றப்பட்டுள்ளனர் - 30%க்கும் மேல். பல இடங்களில் அதற்கும்மேல். ஆனால் கொசோவா 90%-க்கும் மேல் அல்பேனியர்கள் வசிக்குமிடம்.

இன்றைய சர்வதேச அரசியல் சூழலில் கொசோவாவைக் காரணம் காட்டி, தமிழ் ஈழத்துக்கு ஆதரவு திரட்ட முடியாது.

****

ஆனால் தமிழ் ஈழம் தனி நாடாக வேண்டும் என்றால், விடுதலைப் புலிகள் சில செயல்களில் உடனடியாக ஈடுபடவேண்டும். பழைய தவறுகளை வெளிப்படையாகப் பேசி மன்னிப்பு கேட்கவேண்டும். பிற தமிழ் குழுமங்களை அழித்துக்கட்டுவதற்கு பதிலாக அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டு, தமிழ் ஈழம் என்ற தனி நாடு அமைய சேர்ந்து உழைக்க விழைய வேண்டும். தமிழர் குழுக்கள், சிங்கள அரசியல்வாதிகளுடன் கைகோர்ப்பதால் தமிழர்களுக்கு எந்தவித நலனுமில்லை என்றாலும்கூட, ஒரு பக்கம் விடுதலைப் புலிகள் எப்பொழுது வேண்டுமானாலும் சுட்டுக் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தில் பலர் சிங்கள அரசியல்வாதிகளுக்கு அனுசரணையாக இருப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.

இந்த இடத்தில்தான் கொசோவா ஒன்றாக, கட்டுக்கோப்பாக இருந்தது. அதன் விளைவாக, நேடோ நாடுகளின் ஆதரவைப் பெற்றது. கொசோவா தலைமை, தன் இன மக்களையே சுட்டுக்கொன்றதாகவோ, அழித்ததாகவோ எந்த நிகழ்வும் நடந்ததில்லை. இதுதான் தமிழ் ஈழத் தலைமைக்கும் கொசோவா அரசியல்வாதிகளுக்குமான வித்தியாசம்.

[21 பிப்ரவரி 2008: இங்கே பாஸ்னியா பற்றி குறிப்பிட முற்றிலும் மறந்துவிட்டேன். பழைய யுகோஸ்லாவியாவில் பாஸ்னியாவும் ஒரு பகுதி. முஸ்லிம்கள் வாழும் இடம். கொசோவா போலன்றி, பாஸ்னியாவில், செர்பியர்களும் குரோவேஷியர்களும் கணிசமான அளவில் உள்ளனர். பாஸ்னியா-ஹெர்சகோவினா என்றும் அழைக்கப்படும் இந்தப்பகுதியும் ஒரு தனி நாடே.]

7 comments:

 1. நல்ல பதிவு. அப்படியே பழைய யுகோஸ்லோவிய வரைபடமும் தற்போதைய நாட்டு எல்லைகள் படமும் போட்டிருந்தால் முழுமையாக இருக்கும். அதே போல இலங்கை படமும்.

  ReplyDelete
 2. ரஷ்யா செர்பியாவின் உறவு தொன்றுதொட்டுவருவதென்பதுடன், பால்கன் பகுதியில் தற்போது ரஷ்யாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரே நாடு செர்பியாதான். ரஷ்யாவிற்கும் இதே பிரிவினைவாதம் பேசும் பிரச்சனை செசன்யாவின் உருவில் உள்ளது. அதோடு கூட, இந்த நிகழ்வின் டைமிங். அடுத்த வாரம் அதிபர் தேர்தல் இங்கே நடக்கவிருக்கும் வேளையில் ஏற்கனவே தகுடுதத்தங்கள் மூலம் பூடினின் கையாளே வெற்றிபெறுவார் என்று கட்டியம் சொல்லியாகிவிட்டது. பூடினின் தற்போதைய பிரதான பிரச்சார ஆயுதம் மேற்கும் நேட்டோவும் நமக்கெதிராக சதி செய்கிறார்கள் என்பதே. இந்த சுப வேளையில் ரஷ்யர்களின் பழமையான நண்பர்களான செர்பியர்களை அவமானப்படுத்துவதன் மூலம், 1999-ல் நடந்த யுத்தமே ரஷ்யர்களுக்கு மறக்காத போது, அமெரிக்கா மெத்வதெவ்/பூடின் கூட்டணிக்கு ஆதரவாக மிக ஸ்ட்ராங்கான பிரச்சாரத்தை நடத்திவைத்துள்ளது.

  நீங்கள் பதிவில் சொன்னபடி ஸ்பெயின், சீனா, நெதர்லாந்து, இந்தியா, கீரீஸ் உட்பட பலநாடுகளிலும் ஒலித்துவரும் பிரிவினைவாத குரல்களுக்கு பலம் சேர்த்துள்ளது இந்த சுதந்திரம்.

  ஐ.நா சபையினை மீறி ரஷ்யாவிற்கு செக் வைக்கவேண்டிய அவசியம் அமெரிக்காவிற்கு இருக்கலாம். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏன் வந்தது என்பது புரியவில்லை. பிரிவினை என்று வரும்போது இரு சாராருமே ஒப்புக்கொண்டால் மட்டுமே அப்பிரிவினை சாத்தியமாகும் என்ற சர்வதேச உடன்படிக்கையை தூக்கி குப்பையில் போட்டு இப்படி அவசரகதியாக சுதந்திரம் தர வேண்டிய நிர்பந்தமும் 1999-க்கு பிறகு இல்லை. கோசவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் மிகவும் முற்போக்கானவர்கள். ஏனையவர்களின் மதச்சுதந்திரமும் பாதுகாக்கப்படும்/பட்டும் வந்திருக்கிறது. முஸ்லீம்களுக்கு ஐரோப்பாவில் மற்றொரு நாடு என்ற panic modeஇல் சில செய்திநிறுவனங்கள் இதனை திரிப்பது விஷமத்தனமானது.

  ரஷ்யா இந்த விஷயத்தில் சாதுர்யமாக தன் சமீபத்திய எதிரியான ஜியார்ஜியாவை இழுக்க முயற்சிக்கிறது. ஜியார்ஜியாவின் இரு பிரதேசங்கள் ரஷ்ய ஆதரவு கொண்டவை. ஜியார்ஜியாவிலிருந்து பிரிய ஆர்வத்துடன் இருப்பவை. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சென்ற வாரம் ஒரு பேட்டியில் கோசவர்களுக்கு சர்வதேச உடன்படிக்கைகளை மீறி சுதந்திரம் வழங்கப்பட்டால், ஜியார்ஜியாவிலிருந்து பிரியத்துடிக்கும் பிரதேசங்களுக்கு உதவுவது பற்றி ரஷ்யா சிந்திக்கும் என்று பத்த வைத்திருக்கிறார்.

  எப்படியோ ஐ.நா சபையை இழுத்து மூடிவிட்டு சொத்துகளையும் ஏலம்விட்டு உறுப்பினர்களுக்கு பிரித்துக்கொடுத்துவிட்டால், எல்லாருக்கும் நலம்.

  ReplyDelete
 3. //இந்தியா வாயே திறக்காது. கொசோவாவில் நடப்பது இந்தியாவுக்குச் சிறிதும் விருப்பமில்லாத ஒரு செய்கை. இந்தியாவிலிருந்து பிரிந்துபோக நினைக்கும் பல சிறுபான்மையினருக்கு கொசோவா ஒரு முன்மாதிரியாக அமைந்துவிடக்கூடாதே என்று இந்தியா பயப்படும்.//

  முற்றிலும் உண்மை இங்கே ஒருவர் தனி தமிழ்நாடு கேட்டு கொண்டிருக்கிறார்.
  பிறகு ஏன் காஸ்மீர் தன்னை தனி நாடாக அறிவித்து கொள்ள முடியாது


  வால்பையன்

  ReplyDelete
 4. எனக்கு தனி t.கல்லுப்பட்டி வேண்டும். அதுக்காக நான் ஆயுதம் ஏந்திப் போராடுவேன்.

  ReplyDelete
 5. நல்ல பதிவு.

  மீண்டும் அமெரிக்க ரஷ்ய பனிப்போர் தொடங்கப்போவதற்காண அரிகுறிகள் என்று நினைக்கிறேன். ஜார்ஜியாவைப்பற்றிய ரஷ்ய அமைச்சரின் கருத்து இதையே காட்டுகிறது.தன்னிச்சையாக இப்படி ஒருநாடு அறிவிக்கும் என்பதெல்லாம் கண்துடைப்பு. பெரியண்ணனின் கடைக்கண் அசைவுக்குப்பிறகுதான் இத்தகைய முடிவை அறிவித்திருக்கிறார்கள். இனி ரஷ்யாவும் தன் விளையாட்டைத்தொடங்கும்.ஏற்கனவே புடின் ராணுவசோதனைகளை தொடங்கிவிட்டார்.ஈரானுக்கும் ரஷ்யாவுக்குமான தொடர்புகள் வலுவடைந்துவிட்டன.இவர்களின் பனிப்போர் தொடங்கதேவையான பொருளாதார பலமும் இப்போது ரஷ்யாவுக்கு உள்ள்து. இனி வேடிக்கை பார்க்கவேண்டியதுதான்.

  ReplyDelete
 6. //டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி என்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான, ஐக்கிய இலங்கைக்கு ஆதரவான தமிழர் தலைவர்கள் சிலர் உள்ளனர். கொழும்பு நகரில் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் வசிக்கிறார்கள்.//

  நீங்கள் கூறுவதுப் போன்று ஐக்கிய இலங்கைக்கு ஆதரவான (ஆதரவு போன்ற நிலையில் தமது இருப்பிற்காக) சிலர் உள்ளனர்.

  ஆனால் இவர்கள் தலைவர்களாக அல்ல, தமிழின விரோதிகளாக.

  தமிழர்களைப் பொருத்தமட்டில் இவர்கள் இந்தியாவில் எட்டையப்பன் போன்று, காக்கை வன்னியன் போன்று காலத்தால் நிலைத்து பெயர் பெற்றுவிட்ட அழியாத கறைளாகவே மனதில் பதிந்து விட்டவர்கள்.

  //தமிழ் ஈழம் என்று சொல்லப்படும் பகுதியில் - முக்கியமாக கிழக்கு இலங்கைப் பகுதியில் சிங்களர்கள் பலர் குடியேற்றப்பட்டுள்ளனர்//

  குடியேறியுள்ளனர் என்பது பிளையானது. தமிழர்களின் சொத்துடமைகளை அழித்து திட்டமிட்டே தமிழர்களின் நிலங்களில் சிங்களவர்களை குடியேற்றி வருகின்றது இலங்கை அரசு.

  இதனால் தான் இந்தப்போராட்டமே.

  ReplyDelete