[நான் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு புத்தகத்திலிருந்து சில பகுதிகள். இந்த டிராஃப்ட் எடிட்டரால் ஏற்றுக்கொள்ளப்படாததால், மீண்டும் மாற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் சுஜாதாவின் குங்குமம் கேள்வி-பதில் (கடைசி) பார்த்ததால் பழைய வெர்ஷனை உடனடியாக இங்கே கொடுக்கிறேன்.
கே: டார்வினின் பரிணாமத் தத்துவத்தையும் பொருளின் அழியாத் தன்மையையும் அறிவியல் உலகம் ஒப்புக்கொண்டபோதே 'கடவுள்' காணாமல்போகிறதே, கவனித்தீர்களா?
சுஜாதா பதில்: கடவுள் காணாமல் போகவில்லை. ட்யூட்டி மாறிவிட்டார். பிரபஞ்சத்தின் ஆரம்ப கணத்திற்கு அவர் தேவைப்படுகிறார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனே 'கடவுள் பிரபஞ்சத்துடன் தாயம் ஆடுவதில்லை' என்றார்.]
****
ஐன்ஸ்டைன் அரசியல் அல்லது பொதுவாழ்க்கையில் தப்பு செய்யலாம். ஆனால் அறிவியலில்?
எந்த ஐன்ஸ்டைன், அறிவியல் உலகையே குலுக்கிய உண்மைகளை, எந்தவித பயமும் இன்றி வெளிப்படுத்தினாரோ, அதே ஐன்ஸ்டைன் குவாண்டம் இயல்பியல் விஷயத்தில் சறுக்கினார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், குவாண்டம் இயல்பியலின் முன்னேற்றத்துக்கு ஐன்ஸ்டைனே, அவருக்குப் பிடிக்காவிட்டாலும்கூட, காரணமாக இருந்தார்.
இந்த குவாண்டம் இயல்பியல் என்பது என்ன? ஏன் ஐன்ஸ்டைனுக்கு அது பிடிக்கவில்லை?
எலெக்ட்ரானை ஜே.ஜே.தாம்சன் கண்டுபிடித்தபின்னர், எர்னஸ்ட் ரூதர்ஃபோர்ட், அணுவின் வடிவம் எத்தகையது என்பதைக் கண்டறிய முற்பட்டார். அவரது சோதனைகளின் முடிவாக, அணுவுக்குள் உட்கரு என்ற பகுதி உள்ளது என்றும், அதனைச் சுற்றி எலெக்ட்ரான்கள் ஒரு வட்டப்பாதையில் சுற்றுகின்றன என்றும் விளக்கினார்.
ஆனால் ரூதர்ஃபோர்டின் மாடலில் சில பிரச்னைகள் இருந்தன. டென்மார்க்கைச் சேர்ந்த நீல்ஸ் போர் அணுவின் வடிவம் எப்படி இருக்கலாம் என்பதற்கு திட்டவட்டமான சில பரிந்துரைகளைக் கொடுத்தார். அத்துடன், ஹைட்ரஜன் அணுவை (ஒரு புரோட்டான், ஒரு எலெக்ட்ரான்) உதாரணமாக எடுத்துக்கொண்டு, சரியான கணித மாதிரியையும் உருவாக்கினார்.
நீல்ஸ் போர், வெர்னர் ஹெய்சன்பர்க், எர்வின் ஷ்ரோடிங்கர், வுல்ஃப்காங் பாலி, பால் டிராக், லூயி டி புராக்லி போன்ற பல இளம் விஞ்ஞானிகள் அணுக்களைப் பற்றிய கொள்கைகளை வெளியிட ஆரம்பித்தனர்.
இவர்கள் அனைவருமே, ஐன்ஸ்டைனை தங்கள் குரு ஸ்தானத்தில் வைத்திருந்தனர். ஐன்ஸ்டைன் தங்களது கொள்கைகளைப் பற்றி என்ன சொல்கிறார், என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ளும் ஆவலோடு இருந்தனர்.
சின்னஞ்சிறு அணுவின் அளவுக்குச் சென்று பார்த்தால், பல விஷயங்களைத் தெளிவாகவும் துல்லியமாகவும் சொல்லமுடியாது என்ற ‘நிச்சயமற்ற கொள்கை’யை ஹெய்சன்பர்க் வெளியிட்டார். அதாவது ஓர் எலெக்ட்ரான் எங்கே உள்ளது என்று துல்லியமாகச் சொன்னால், அது எந்த வேகத்தில் செல்கிறது என்பதைத் துல்லியமாகச் சொல்லமுடியாது. அதன் வேகத்தைத் துல்லியமாகச் சொன்னால், அதன் இடத்தைத் துல்லியமாகக் கணிக்கமுடியாது. இதுதான் ஹெய்சன்பர்க் கொள்கை.
இதனை ஐன்ஸ்டைன் ஏற்க மறுத்தார்.
நியூட்டனின் இயக்கவியலில் எந்த ஒரு பொருளையும் காண்பித்து, தொடக்கத்தில் அந்தப் பொருளின் இடம், அதன் வேகம், அதன்மீது இயங்குகின்ற விசைகள் ஆகியவற்றைச் சரியாகச் சொன்னால், பிறகு எந்தக் கணத்திலும் அந்தப் பொருள் எங்கே இருக்கும் என்பதைச் சொல்லிவிடலாம்.
ஏதாவது ஒரு செயல் நடக்கிறது என்றால், அதற்கான காரணம் என்ன என்பதைச் சரியாகச் சொல்லிவிட முடியும் என்பதே அந்தச் சமயத்தில் விஞ்ஞானிகளின் எண்ணமாக இருந்தது. இதற்கு causality - காரணவாதம் என்று பெயர். காரணமே இல்லாமல் ஒரு செயல் நடக்கமுடியாது. ஒரு குறிப்பிட்ட விசை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட பொருள் குறிப்பிட்ட இடத்திலிருந்து குறிப்பிட்ட இடத்தை நோக்கி, குறிப்பிட்ட வேகத்தில் செல்லமுடியாது. இதுதான் அப்போதைய எண்ணம்.
நியூட்டனின் இயக்கவியலை முழுதும் ஏற்காவிட்டாலும், இந்தக் காரணவாதத் தத்துவத்தை ஐன்ஸ்டைன் முற்றிலுமாக ஏற்றுக்கொண்டார். நியூட்டனின் இயக்கவியலில் இருந்த காலம், வெளி தொடர்பான கருத்துக்களை மட்டுமே மாற்றி அமைத்தார். ஆனால் காரணவாதத்தை அவர் தொட முயற்சி செய்யவில்லை.
ஆனால் ஹெய்சன்பர்க், போர் கூட்டணியினர் காரணவாதத்தைக் கேள்விக்கு உள்ளாக்கினர். மிகச்சிறு துகள் ஒன்றை நோக்கும்போது அது எங்கே இருக்கிறது என்றே சொல்லமுடியாது; அது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதற்கு என்ன நிகழ்தகவு (probability) என்பதை மட்டுமே சொல்லலாம் என்றனர்.
நிகழ்தகவு என்ற சொல் ஐன்ஸ்டைனைப் பாடுபடுத்தியது. அவரால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இங்குதான் அவர் ‘கடவுள் தாயக்கட்டை விளையாடுவதில்லை’ என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தினார். (இங்கே கடவுள் என்ற சொல்லை அவர் எந்தப் பொருளில் பயன்படுத்தினார் என்பதை விடுத்து, ஐன்ஸ்டைன் இறை நம்பிக்கையாளர் என்று சிலர் அவசரமாகச் சொல்லிவிடுகிறார்கள்.)
‘ஒரு பொருள் எங்கே இருக்கும் என்பதை காசைச் சுண்டி பூவா, தலையா போட்டுப் பார்த்து முடிவு செய்யமுடியாது. அது எங்கே இருக்கவேண்டும் என்பதை அதன்மீது இயங்கும் விசைகள் தெளிவாகக் குறிப்பிட்டுவிடும்’ என்பது ஐன்ஸ்டைனின் கருத்து.
ஐன்ஸ்டைனின் தாயக்கட்டை கமெண்டுக்கு எதிர்வினையாக போர், ஐன்ஸ்டைனைப் பார்த்துச் சொன்னார்: ‘ஐன்ஸ்டைன், கடவுள் எதைச் செய்யலாம், செய்யக்கூடாது என்பதை நீ சொல்லாதே!’ (உடனே நீல்ஸ் போரும் இறை நம்பிக்கையாளர் என்று நாம் சொல்லிவிடக் கூடாது.)
இங்கு உருவான இடைவெளி விரிந்துகொண்டே போனது. ஷ்ரோடிங்கர், ஹெய்சன்பர்க் இருவரும் தனித்தனியாக, குவாண்டம் இயல்பியலில் அடைப்படையை வேவ் ஃபங்ஷன் என்பதாக வடிவமைத்தனர்.
இதன்படி, எந்தப் பொருளும் எந்த இடத்தை வேண்டுமானாலும் வியாபிக்கலாம். ஆனால் சில இடங்களில் அவை காணப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. ஓர் அணுவில், ஓர் எலெக்ட்ரான் மட்டும் இருந்தால், அந்த எலெக்ட்ரான் எங்கெல்லாம் இருக்கமுடியும் என்பதைக் கண்டுபிடிக்கலாம். ஓர் அணுவில் ஒன்றுக்கும் மேற்பட்ட எலெக்ட்ரான்கள் இருந்தால் அவை ஒவ்வொன்றும் எங்கே இருக்கலாம் என்ற நிகழ்தகவுப் பரவலைக் கண்டுபிடிக்கலாம். ஆனால், அதற்கும் மேலாகச் சென்று இந்தக் கணத்தில் இந்தக் குறிப்பிட்ட புள்ளியில்தான் எலெக்ட்ரான் உள்ளது என்பதைச் சொல்லமுடியாது.
இதுதான் குவாண்டம் இயல்பியலின் அடிப்படை.
அடுத்து, ஒரு பொருள் ஒரே நேரத்தில் எடையுடன்கூடிய, ஒரு குறிப்பிட்ட கொள்ளளவை வியாபிக்கக்கூடிய துகளாக உள்ளது; ஓர் ஆற்றல் அலையாகவும் உள்ளது என்ற கருத்து (பொருளின் இரட்டைத் தன்மை).
இந்தக் கருத்தையும் ஐன்ஸ்டைன் ஏற்றுக்கொள்ளவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், ஒளி என்பது குவாண்டம் துண்டுகளாக உள்ளது என்பதை வெளியிட்டவரே ஐன்ஸ்டைன்தான். அதன் பின்னரே ஒளி, ஒரே நேரத்தில் துண்டாகவும் அலையாகவும் திகழ்கிறது, இரட்டைத் தன்மையுடையதாக உள்ளது என்ற கருத்து பரவியது.
அதைப்போன்றேதான், துகள்களும் இரட்டைத் தன்மையுடையன என்று டி புராக்லி போன்றோர் சோதனைமூலம் நிரூபித்தனர்.
***
புரட்சிகரமான கருத்துகளை வெளியிட்ட ஐன்ஸ்டைனாலேயே மேலும் புரட்சிகரமான கருத்துகளை ஏன் வரவேற்க முடியவில்லை?
வயதானது ஒரு காரணம். ஐன்ஸ்டைன் அறிவியலைவிட்டு அரசியலில் ஈடுபட்டது மற்றொரு காரணம்.
இளையவர்களிடமிருந்து மிகவும் தள்ளிப்போய்விட்டதனால் அவரால் புரட்சிகரமான கருத்துக்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. புரிந்துகொள்ள மறுத்தார் அவர்.
பதிலுக்கு, குவாண்டம் இயல்பியல் தவறானது என்பதை நிரூபிக்க, அவர் பல ‘சிந்தனைச் சோதனைகளை’ உருவாக்கினார். சிந்தனைச் சோதனைகள் என்றால் ஒரு பரிசோதனைச் சாலையில் சென்று செய்துபார்க்கும் சோதனைகள் கிடையாது. மனத்துக்குள்ளாகவே செய்து பார்க்கக்கூடியவை.
ஐன்ஸ்டைன் ஒவ்வொரு சோதனையாகச் சொல்லச்சொல்ல, போர் அவற்றை மறுத்து, அவை எங்கே தவறாகின்றன என்று விளக்கினார். அதன் பின்னும், ஐன்ஸ்டைன் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.
***
ஐன்ஸ்டைன் போருக்கு எதிரான தனது கருத்துகளால் பழைமைவாதி அமெரிக்கர்களால் வெறுக்கப்பட்டார். ஐன்ஸ்டைன், கடவுள் நம்பிக்கை இல்லாதவர். பல இடங்களின் ஐன்ஸ்டைன் கடவுளை நம்புபவர்போலச் சித்திரிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் தனது கடவுள் சம்பந்தமான கொள்கைகளைத் தெளிவாகச் சொல்லியுள்ளார். மிக முக்கியமாக தான் கடவுள் என்று குறிப்பிடுபவர், ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையையும் தீர்மானிக்கும் ஒருவர் கிடையாது என்று தெளிவாகச் சொல்லியுள்ளார்.
ஐன்ஸ்டைனைப் பொறுத்தமட்டில், கடவுள் என்பவர் இயற்கையும் இயற்கை உருவான, இயங்குகின்ற விதிகளும்.
ஐன்ஸ்டைனின் இந்தக் கொள்கைகளுக்கு அமெரிக்காவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஒண்டவந்த இடத்தில் தனது கடவுள் மறுப்புக் கொள்கைகளைப் பற்றி இந்த ஆள் சொல்கிறானே என்று அமெரிக்கக் கிறித்துவர்கள் குறைபட்டுக்கொண்டனர்.
அமெரிக்காவின் கொள்கைமுழக்கம், ‘In God, we trust’ என்பது. எனவே அமெரிக்காவின் குடியுரிமையைப் பெற்ற ஒருவர் கடவுளுக்கு எதிராகப் பேசக்கூடாது, அது அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று சிலர் சொன்னார்கள்.
***
[சுஜாதா, கடவுள் பிரபஞ்சத்தின் ஆரம்பகணத்துக்குத் தேவைப்படுகிறார் என்கிறார். அதுவும் உண்மை கிடையாது. அதைப்பற்றி வேறொரு சமயம்.]
மதுரை புத்தகக் காட்சியில் இன்று இருப்பேன்
3 hours ago
//நான் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு புத்தகத்திலிருந்து சில பகுதிகள்//
ReplyDeleteஎன்ன மாதிரியான புத்தகம் என சொல்லமுடியுமா?
இதில் இன்னொரு வேடிக்கை என்ன என்றால், ஐன்ஸ்டைனுக்கு கிடைத்த நோபல் பரிசு, அவர் (ஒளியை போட்டான் என்று சொல்லி)குவாண்டம் இயற்பியலின் முன்னேற்றத்திற்கு உதவியதற்காக. அவரது Theory of Relativityக்காக அல்ல.
ReplyDelete//[சுஜாதா, கடவுள் பிரபஞ்சத்தின் ஆரம்பகணத்துக்குத் தேவைப்படுகிறார் என்கிறார். அதுவும் உண்மை கிடையாது. அதைப்பற்றி வேறொரு சமயம்.]//
ReplyDeleteநான் ஒரு முறை 'சாட்'ல் பேசிக்கொண்டிருந்த பொழுதும், அவர் இதையே சொன்னது நினைவில் இருக்கிறது, பிரபஞ்சத்தின் ஆரம்பக்கணத்தைத் தவிர்த்து அத்தனையையும் அறிவியல் கொண்டு நிரூபித்துவிட முடியும். மிஞ்சுவது ஆரம்பகணம் ஒன்று தான் என்று.
ஐன்ஸ்டீனின் அந்த மேற்கோள் பற்றி நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள், ஆனால் இது பாரதியின் 'மெல்லத் தமிழினி சாகும்' கதை தான். :)
//மிக முக்கியமாக தான் கடவுள் என்று குறிப்பிடுபவர், ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையையும் தீர்மானிக்கும் ஒருவர் கிடையாது என்று தெளிவாகச் சொல்லியுள்ளார்.
ReplyDeleteஐன்ஸ்டைனைப் பொறுத்தமட்டில், கடவுள் என்பவர் இயற்கையும் இயற்கை உருவான, இயங்குகின்ற விதிகளும்.//
ஐன்ஸ்டைனை துணைக்கொள்ளும் ஆத்திகர்களுக்கு நல்ல பதில்.
‘கடவுள் தாயக்கட்டை விளையாடுவதில்லை’ என்ற ஐன்ஸ்டைனின் வாக்கியத்தை நன்றாக விளக்கியுள்ளீர்கள்.நன்றி.
//ஒளி என்பது குவாண்டம் துண்டுகளாக உள்ளது என்பதை வெளியிட்டவரே ஐன்ஸ்டைன்தான். அதன் பின்னரே ஒளி, ஒரே நேரத்தில் துண்டாகவும் அலையாகவும் திகழ்கிறது, இரட்டைத் தன்மையுடையதாக உள்ளது என்ற கருத்து பரவியது.//
ReplyDeleteஐன்ஸ்டைன் நோபல் பரிசு பெற்றது அவரது இரண்டாவது கருத்தோலையான
போட்டோ எலக்டிரிக்
(photoelectric effect, or the release of electrons from metal when light shines on it )
ஐன்ஸ்டீன், மேக்ஸ் ப்லேன்க் என்பவரின் அன்றைய எண்ணங்களைத் தான் தனது ஆய்வுக்கு பயன்படுத்தியதாகச் சொல்லுகிறார்கள்.
"Einstein used the very recent ideas of Max Planck to explain the phenomenon. That is, he explained it in terms of quanta, or packets of energy"
இது மட்டுமல்ல, ஒளி குவான்டம் துண்டுகளாக உள்ளது என்பதை முழுவதுமாக
அறிந்து தனது சோதனைக் கூடங்களில் மேக்ஸ் ப்ளேங்க் தான் எனவும் கூறப்படுகிறது.
energy did not flow in a steady continuum, but was delivered in discrete packets Planck later called quanta. That explained why, for example, a hot iron poker glows distinctly red and white. Planck, a conservative man, was not trying to revolutionize physics at all, just to explain the particular phenomenon he was studying. He had tried to reconcile the facts with classical physics, but that hadn't worked. In fact, when people refer to "classical physics" today, they mean "before Planck." He didn't fully appreciate the revolution he had started, but in the years that followed, scientists such as Albert Einstein, Niels Bohr, and Werner Heisenberg shaped modern physics by applying his elegantly simple, catalytic new idea.
என்ன வித்தியாசம் ? மேக்ஸ் பிளேங்க் ற்கு ஏதோ ஒன்று புலப்பட்டிருக்கிறது. ஆனால், தான் கண்டுபிடித்தது (அல்லது, உணர்ந்தது) புரட்சிகரமானது என்பதை அவர்
பொருட்படுத்தவில்லை. காரணம் அவரும் ஒரு பழைமைவாதி. தான் கண்டுபிடித்த இக்கருத்தை க்ளாசிகல் பிஸிக்ஸின் உண்மைகளோடுச் சேர்த்துப் பார்த்தார். ஆனால் அது சரியாக வரவில்லை. அப்படியே விட்டுவிட்டார். பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அடித்தது யோகம் (ஐன்ஸ்டைனையும் சேர்த்துத்தான்).
இது இருக்கட்டும். ஐன்ஸ்டைன் ஆத்திகர் அல்ல. ஆனால் நாத்திகரும் அல்ல என்பது போலத்தான் தோன்றுகிறது. agnostic என்று சொல்லலாமா ? தான் அறிந்தவனவற்றிற்கு அப்பால், தான் அறியாதவை இருக்கும் சாத்தியக்கூறுகளையும்
suggest செய்தார் என்பதை விட ஒரு படி மேலே போய்
அப்படிப்பட்ட "அறியாதனவற்றை " அறியும் தருணம் வரும் வரை அவை இல்லை எனச்சொல்ல இயலாது எனவும் சொன்னார். HE WAS NOT A NON BELIEVER BUT A BELIEVER IN THINGS HE SAID HE was able to verify. But rarely he denied existence of things outside his own realm of knowledge or beyond knowledge existing then in mankind.
இதுவும் இருக்கட்டும். Laws of motion எல்லாம் விவரித்திருக்கிறீகள். 1960லேயே என்னோட physics புரொபசர் என் மர மண்டையிலே செதுக்கப்போய் தோல்வி அடைந்த கதைதான் அது. ஆனால்,இன்று அந்த zeno's paradox
க்கு ஒரு முழுமையான தீர்வு இருப்பதாகச் சொல்கிறார்களே...? நிசமாவா ?
சுப்புரத்தினம்.
தஞ்சை.
http://anewworldeveryday.blogspot.com
http://arthamullavalaipathivugal.blogspot.com
Reasoning appadingara trapla maatati, you can easily identify yourself with GOD too.
ReplyDeletewith regards
manikandan
அது என்ன புத்தகம்? இயற்பியல் குறித்த அறிவியலா? அல்லது தத்தவமா? ஒரு ஆர்வம்தான்.
ReplyDeleteமீண்டும் குவாண்டம் எந்திரவியல் பற்றி நடந்த சர்ச்சைகளை நினைவுட்டி விட்டீர்கள்.
ஜன்ஸ்டைன் நோபல் பரிசு பெற்றது ஜியோடெசிக் பற்றிய கோட்பாட்டிற்கும் அது தொடாபுடைய ஈர்ப்பால் புலம் வளைவது பற்றிய கோட்பாட்டிற்கும் என்று நினைவு.
சிக்கலான புள்ளியை தொட்டுள்ளீர்கள். அதை எளிமையாகவும் சொல்லியுள்ளீர்கள்.
வெங்கட்ரமணன் / ஜமாலன்: புத்தகம் ஐன்ஸ்டைன் வாழ்க்கையையும் அவரது அறிவியலையும் பற்றியது. பாபுலர் சயன்ஸ் வெரைட்டி. அதனால் நிறைய எளிமைப்படுத்தவேண்டியுள்ளது.
ReplyDeleteஎனக்கும் தத்துவத்துக்கும் காத தூரம்.
மோகன்தாஸ்: சுஜாதா மட்டுமல்ல, வேறு பலரும் தங்களது கடைசி காலத்தில் (முக்கியமாக இந்தியர்கள்), தங்களது விஞ்ஞானப் புரிதலை மெய்ஞானம் என்று சொல்லப்படும் ஒன்றோடு குழப்பி, ஊரில் உள்ள எல்லோரையும் குழப்பிவிடுகிறார்கள். வயதாகி நோய்வாய்ப்படும்போது, மூளைத்திறன் குறைந்து, மனத்துக்கு இதமாக ஏதேனும் தேவைப்படுகிறது. It is very unfortunate.
ReplyDeleteசுஜாதாவின் ‘கடவுள்' புத்தகம் பல இளைஞர்களைச் சென்றடைகிறது என்று தெரிந்துகொண்டேன். இலக்கியச் சிந்தனை கூட்டங்கள் நடக்கும் ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் சென்ற சனிக்கிழமை நடந்த சுஜாதா இரங்கல் கூட்டத்தில் பேசிய பலருள், சுஜாதாவின் தாக்கத்தைப் பற்றி தேவக்கோட்டை வா. மூர்த்தியின் மகன் (20 வயது இருக்கும்?) மிக நன்றாகப் பேசினார். அவரை சுஜாதாவின் ‘கடவுள்' புத்தகம் மிகவும் ஆகர்ஷித்துள்ளது.
'கடவுள்' பற்றி நிறைய எழுதவேண்டும் என்று நினைத்துக்கொள்கிறேன். பார்ப்போம்.
சுப்புரத்தினம்: பிளாங்க், ஐன்ஸ்டைன் உறவு மிக முக்கியமானது. சந்தேகமில்லாமல், பிளாங்கின் சில கருத்துகளால் ஈர்க்கப்பட்டுத்தான், ஐன்ஸ்டைன் ஒளி ஆராய்ச்சியில் புகுந்தார். ஆனால் ஐன்ஸ்டைன் செய்ததை பிளாங்கின் வெறும் நீட்சி என்று சொல்லிவிட முடியாது.
ReplyDeleteபிளாங்க் + ஐன்ஸ்டைன் பற்றி அடுத்து எழுதுகிறேன்.
சுப்புரத்தினம்: ஐன்ஸ்டைன் மட்டுமல்ல, அடுத்து வந்த போர், ஹெய்சன்பர்க், ஷ்ரோடிங்கர் போன்ற பலரும் தனித்தனியாக, முழுமையான புது அறிவியல் தத்துவங்களை வெளியிட்டனர். பிளாங்க் செய்தார், இவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது என்றெல்லாம் சொல்லக்கூடாது. அதனால் பிளாங்கைக் குறைத்து மதிப்பிடவில்லை.
ReplyDelete===
Zeno's paradox. கணிதத்தின்படி, இதில் என்றுமே பிரச்னை இருந்ததில்லை. ஆனால் இன்ஃபினிட்டி, ஃபைனைட் விஷயங்களைப் போட்டுக் குழப்பிக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. இதில் என்னைப் பொறுத்தமட்டில் சுவாசரசியமான விஷயம், இதைப்பற்றி 2300 வருஷங்களுக்கு முன்னால் ஒரு நாட்டினர் மண்டையைக் குழப்பிக்கொண்டிருந்தார்கள் என்றால் அவர்களது கணித அறிவு அந்த அளவுக்கு உயர்ந்து வளர்ந்திருந்தது என்பதைக் காட்டுகிறது.
இதற்கு முற்றுமுழுதான ப்ரூஃப் கண்டுபிடித்துள்ளார்களா, இல்லையா என்பதைவிட, அதுகூடத் தேவையா என்பதுதான் கேள்வியாக இருக்கவேண்டும். இந்த பாரடாக்ஸ்(கள்) வருவதற்குக் காரனம் மொழியின் போதாமையே என்றுதான் நான் நினைக்கிறேன்.
eagerly expecting your book
ReplyDelete