நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு இருக்கவேண்டும் என்பது தொடர்பான மசோதா, மாநிலங்கள் அவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
ஏற்கெனவே தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக மக்களவையில் சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தொகுதிகள் தனித்தொகுதிகள் அல்லது சிறப்புத் தொகுதிகள் (Reserved Constituencies) எனப்படும்.
பெண்களுக்கென இட ஒதுக்கீட்டைக் கொண்டுவரும் மசோதாவைப் பல கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. முக்கியமாக ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜவாதிக் கட்சி ஆகியவை. காங்கிரஸ், பாஜக இரண்டும் பெரும் முயற்சி எடுத்து இந்த மசோதாவை முன்வைக்கவில்லை. இப்போது கடுமையான விலைவாசி ஏற்றத்தால் ஆளும் கட்சிக்குப் பிரச்னை இருப்பதாலும், தேர்தல்கள் சீக்கிரமே வரவிருப்பதாலும் பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா முன்னுக்கு வந்துள்ளது.
சில கட்சிகள், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்று கோருகின்றன. இது தேவையில்லை என்பது என் கருத்து. இதற்கு இரண்டு காரணங்கள்.
(1) இப்போதுள்ள தனித்தொகுதி அல்லாத இடங்களில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது. பெண்களுக்கான தொகுதிகளுக்கு மட்டும் ஏன் இந்த இட ஒதுக்கீடு தேவை?
(2) ஓர் இடத்தில் நிற்பதற்கு கல்வித் தகுதி முதல் வேறு எந்தத் தகுதியும் எதிர்பார்க்கப்படுவதில்லை. யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். அனைத்து கட்சிகளுமே சமூக நீதியில் ஆர்வம் செலுத்தும் கட்சிகளாகவே உள்ளன. ஒரு தொகுதியில் முஸ்லிம் ஒருவரைத் தேர்தலுக்கு நிற்கவைக்க ஒரு கட்சி விரும்பினால் அதே தொகுதியில் முஸ்லிம் பெண் ஒருவரை நிற்கவைப்பதில் அவர்களுக்குப் பிரச்னை ஏதும் இருக்கப்போவதில்லை.
எனவே இந்த ஒதுக்கீட்டுக்குள் உள் ஒதுக்கீடு என்பது சட்ட வரைவைக் குழுப்படி செய்து, சட்டத்தை இயற்றவிடாமல் செய்யும் ஒரு செயல் என்றே எனக்குத் தோன்றுகிறது.
இப்போதிருக்கும் தனித் தொகுதிகளில் மட்டும் மூன்றில் ஒரு பங்கை தனி+பெண் (தனித்தனி) தொகுதிகள் என்று வரையறுத்தால் போதுமானது. அரசியல் சட்டம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமே நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் இட ஒதுக்கீட்டை அளித்துள்ளது. பிற வகுப்பினருக்கு கட்சி அரசியல், பொதுமக்கள் ஆதரவு ஆகியவற்றால் தானாகவே இடங்கள் கிடைத்துவிடும் என்றே அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் உணர்ந்திருந்தனர். இன்றைய நிலையும் அதுதான். எந்த மாநில சட்டமன்றங்களையும் நாடாளுமன்றத்தையும் எடுத்துக்கொண்டு பார்த்தாலும் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என அனைவருமே தேர்தலில் நிற்கவைக்கப்படுகிறார்கள், ஜெயிக்கிறாகள்.
***
நாடாளுமன்ற மாநிலங்கள் அவைத் தேர்தலில் 33% இட ஒதுக்கீட்டை எந்த அடிப்படையில் செய்யப்போகிறார்கள் என்பது குழப்பமானது!
தேர்தல் ஆணையம், கட்சிகள் 33% இடங்களில் பெண்களை நிறுத்திவைக்கவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கலாம் என்று யோசனை சொல்லியுள்ளதாம். இது சரியானதாகத் தோன்றவில்லை. இப்படி இருந்தாலும், ஒரு பெண்கூட ஜெயிக்காமல் போக வாய்ப்புள்ளது. ஒரு கட்சி பெண் வேட்பாளரை நிறுத்தும் இடத்திலெல்லாம் அடுத்த கட்சி, ஆண் வேட்பாளரை நிறுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஏதோ சில காரணங்களால் எல்லா இடங்களிலும் ஆண்களே ஜெயிக்கும் நிலை ஏற்படலாம்.
எனவே நோக்கம், குறைந்தது 33% பெண்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும் என்றால், 33% தொகுதிகளை பெண்களுக்கு மட்டும் என்றாக்குவதே.
***
நாடாளுமன்ற இடங்களை அப்படியே வைத்திருப்பதா அல்லது அதிகமாக்குவதா? அதிகமாக்குவதால் பெரும் நன்மை ஏதும் இருக்காது என்றே நினைக்கிறேன். கல்விக்கூடங்களில் இடம் அதிகமாக்குவதற்கும் இதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. அனைவரும் படிக்கவேண்டும் என்று விரும்புவது இயற்கை. சொல்லப்போனால் 100% கல்லூரிப் படிப்பு என்ற நிலையை இந்தியா அடையவேண்டும் என்று கனவு காண்பதுகூட ஏற்கத்தக்கது. ஆனால் அனைவரும் ஒருமுறையாவது நாடாளுமன்ற உறுப்பினராகவேண்டும் என்பது நினைக்கவே அபத்தமாக உள்ளது. அதனால் மேலும் பல இடங்களை அதிகப்படுத்தி எப்படியாவது ஆண்களுக்கு ‘காம்பன்சேஷன்' தரவேண்டும் என்று நாம் நினைக்கவேண்டியதில்லை.
***
அடுத்தவர்களை பாதிக்கும் விஷயத்தில் சர்வசாதாரணமாக முடிவுகளை எடுக்கும் நமது பிரதிநிதிகள், தங்களை ஒன்று பாதிக்கப்போகிறது என்றால் எந்த அளவுக்குப் பதறுகிறார்கள் என்று பாருங்கள்! 33% இட ஒதுக்கீடு ஏற்பட்டால், பல ஆண் உறுப்பினர்களது தொகுதிகள் பெண் தொகுதிகளாக மாறும். பாதுகாப்பான தொகுதி (அதாவது எளிதாக வென்றுவிடலாம் என்ற தொகுதி) கிடைக்காமல் பல கிழங்கள் தடுமாறும். அதனால்தான் இந்த அளவு எதிர்ப்பு இந்த மசோதாவுக்கு உள்ளது.
மன்மோகன் சிங் அரசு இந்த மசோதாவைச் சட்டமாக்க எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும். எனது தார்மீக ஆதரவு இதற்குக் கட்டாயம் உண்டு.
பெங்களூர் இலக்கியத் திருவிழா
2 hours ago
தமிழகத்தில் ஊராட்சி தேர்தல்களில்
ReplyDeleteபொது
எஸ்.சி
பெண்கள்
எஸ்.சி பெண்கள்
என்று தானே ஒதுக்கீடு உள்ளது
யாராவது தெளிவு படுத்த முடியுமா