Tuesday, August 19, 2008

அமர்நாத் -- காஷ்மீர்

வருத்தம்தரத்தக்க வகையில் ஜம்மு காஷ்மீரில் இந்து - முஸ்லிம் கலவரம் பெரிதாவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது.

எந்த ஒரு பிரச்னை என்றாலும் அது பெரிதாக ஒரு பொறி வேண்டும். காஷ்மீரில் அந்தப் பொறியாக அமர்நாத் ஆகியுள்ளது.

இதுநாள்வரையில் காஷ்மீர் முஸ்லிம் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மூன்று நிலைகளை எடுத்திருந்தார்கள்.

(1) இந்தியக் குடியாட்சி அமைப்புக்குள்ளாக இருந்துகொண்டு காஷ்மீரத்துக்குத் தனிச் சலுகைகள் சில வேண்டும் என்பவர்கள். நேஷனல் கான்ஃபரன்ஸ், பி.டி.பி போன்ற கட்சிகள்.

(2) காஷ்மீரம் தனி நிலப்பரப்பு, தேசம். பாகிஸ்தான் மற்றும் ஹிந்துஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னைகளில் காஷ்மீரம் பாதிக்கப்படக்கூடாது. காஷ்மீரம் ஹிந்துஸ்தானத்துக்கும் சொந்தமல்ல, பாகிஸ்தானுக்கும் சொந்தமல்ல. பாகிஸ்தான் கைக்குள் இருக்கும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்/ஆசாத் காஷ்மீர் மற்றும் இந்தியா கையில் இருக்கும் காஷ்மீர் மாநிலம்/இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் ஆகிய இரண்டும் சேர்ந்து அங்குள்ள மக்கள் தங்களது தலைவிதியை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும். (இத்துடன் கூட, வடக்குப் பிராந்தியங்கள், ஜம்மு, லடாக் எல்லாம் சேரவேண்டும் என்ற கனவும் இவர்களுக்கு உண்டு.) ஜே.கே.எல்.எஃப், ஹூரியத் கான்ஃபரன்ஸ் போன்ற அமைப்புகள் இதில் அடங்கும்.

(3) காஷ்மீர் முழுக்க முழுக்க பாகிஸ்தானின் இடம். முஸ்லிம்களின் இடம். இங்கு இந்துக்களுக்கு இடமே இல்லை. இந்திய ராணுவம் ஆக்ரமித்துள்ள பகுதி காஷ்மீர். இவர்களை அழிக்கவேண்டும். இதுதான் பாகிஸ்தான், ஜிஹாதி ஆதரவு பயங்கரவதாக் குழுக்களின் கொள்கை. லஷ்கர்-ஈ-தொய்பா முதற்கொண்டவர்களின் கனவு இது.

ஜம்முவில் வசிக்கும் பெரும்பான்மை இந்துக்கள், இந்தியாவுடன் இருப்பதையே விரும்புகிறார்கள். காஷ்மீரிலிருந்து விரட்டிவிடப்பட்ட பண்டிட் இந்துக்களும் அதையே விரும்புகிறார்கள். லடாக், கார்கில் பகுதியில் உள்ள மக்கள் (பெரும்பான்மை புத்தமதத்தினர்) இந்தியாவுடன் இருப்பதையே விரும்புகிறார்கள்.

வடக்குப் பிராந்தியம் (Northern Territories) இன்று முற்றிலுமாக பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டுவிட்டது. அங்குள்ள மக்கள் காஷ்மீர மொழிகூடப் பேசுவதில்லை.

***

இதுநாள்வரை, ஜம்முவில் இருந்த இந்துக்களுக்கு போராட்டம் நடத்த பொறி ஏதும் இருக்கவில்லை. ஆனால் அமர்நாத் ஷ்ரைன் போர்டுக்கு நிலம் கொடுப்பதை எதிர்த்த காஷ்மீர் பள்ளத்தாக்கு முஸ்லிம் கட்சிகளின், மக்களின் ஆவேசம் ஜம்மு இந்துக்களைப் பெருமளவு பாதித்துள்ளது. அதில் எண்ணெய் ஊற்றுமாறு பாஜக, பிற அமைப்புகள் வெறியை அதிகமாக்கியுள்ளனர். இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களின் பொருளாதார அடிப்படையில் கையை வைக்கும் அளவுக்கு ஜம்முவில் போராட்டம் வெடித்தது. காஷ்மீரில் விளையும் பொருள்களை லாரியில் ஏற்றி இந்தியப் பகுதிக்கு வந்து விற்பதை ஜம்மு இந்துக்கள் தடுத்துள்ளனர்.

இதனால் உடனடியாக ஹூரியத் அமைப்புக்குத் தோன்றியது இந்தப் பழங்களை ஏன் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியின் முஸாஃபராபாத்துக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்பதே. இது மக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்னை என்பதால் பி.டி.பியும் இதனை ஆதரித்தது. நேஷனல் கான்ஃபரன்ஸால் இதனை எதிர்க்கமுடியாத நிலை.

இதன் விளைவாக, காஷ்மீர் முஸ்லிம்கள், ஜம்மு இந்துக்கள் என இரண்டு குழுக்களும் முற்றிலும் எதிர்-எதிராகப் பிரிந்து போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. நேஷனல் கான்ஃபரன்ஸ், பி.டி.பி கட்சிகள் குழப்பமான நிலைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் காஷ்மீரில் எந்த ஆதரவும் இல்லை. பாகிஸ்தான் அரசாங்கத்திலும் அவர்களுக்கு ஆதரவு இல்லை. இன்று வீரியத்தைக் காட்டாவிட்டால், இந்திய காஷ்மீர் பகுதியில் உள்ள மக்களும் அவர்களைக் கண்டுகொள்ளமாட்டார்கள்.

இதற்கிடையில், ஜம்மு பகுதியில் நடக்கும் போராட்டத்தை அடக்கமுடியாத இந்திய அரசு, முஸாஃபராபாத் பகுதிக்குச் சென்று பொருட்களை விற்பதையும் தடை செய்து, காஷ்மீர் முஸ்லிம் மக்கள்மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தி பலரைக் கொன்றுள்ளது. இதனால் காஷ்மீர் முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் இந்திய அரசு மேலும் அன்னியமாகியுள்ளது.

அமர்நாத் விவகாரத்தில் நேஷனல் கான்ஃபரன்ஸ், பி.டி.பி செய்த குழுப்பத்தால் ஏற்பட்டதே இத்தனையும் என்பது என் கருத்து. அமைச்சரவை முடிவின்படி, நிலத்தை அமர்நாத் ஷ்ரைன் போர்டுக்குக் கொடுப்பதால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஹூரியத் போன்றவர்கள் கொஞ்ச நாள் போராடியிருப்பார்கள். பிறகு பிசுபிசுத்துப்போயிருக்கும். ஜம்மு இந்துக்களை இப்படி வெறுப்பேற்றுவதற்கான வாய்ப்பு ஒன்று ஏற்படாமல் இருந்திருக்கும்.

இதில் பல விஷயங்கள் வெறும் அடையாளச் செய்கைகள்தான். “அமர்நாத் ஷ்ரைன் போர்டுக்கு நிலம் கிடையாது. ஆனால் அமர்நாத் யாத்ரீகர்களுக்கு எல்லா வசதிகளையும் காஷ்மீரி முஸ்லிம்கள் செய்துகொடுப்பார்கள்” என்பதுபோல ஹூரியத், ஜே.கே.எல்.எஃப் போன்றோர் பேசுவது அபத்தமாக உள்ளது. காஷ்மீர் பயங்கரவாதிகள் காஷ்மீர் பண்டிட்களை அடித்துத் துரத்தியது பற்றி மேலோட்டமாக மட்டுமே பேசும் அமைப்புகளின் கையில் காஷ்மீர் தனி நாடு மாட்டினால் அதில் இந்துக்களின் நிலை எப்படியிருக்கும் என்று ஜம்மு இந்துக்கள் நன்றாகவே உணர்வார்கள். அதனால்தான் அமர்நாத் பிரச்னை ஜம்முவில் இப்படி பூதாகாரமாக வெடித்துள்ளது.

ஆண்டுக்கு சில ஆயிரம் பேர் மட்டுமே போகும் அமர்நாத் அவ்வளவு முக்கியமான விஷயமே இல்லை. ஆனால் அதனால் உணர்வுகள் பாதிக்கப்பட்டு, கோபம் குமுறி வெளிப்படும்போது அது ஏற்படுத்தும் நிகழ்வுகள் அசாதாரணமானவை. ஜம்மு இந்துக்கள், காஷ்மீர் முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தை, பொருளாதாரத்தை நாசமாக்குகிறார்கள் என்று பிரச்னை அடுத்த கட்டத்துக்குப் போகிறது.

சிறு பொறியிலிருந்துதான் பெரும் நெருப்பு உருவாகிறது.

ஜம்மு இந்துக்களுக்குப் போராட ஒரு துரும்பு கிடைத்துவிட்டது. இதனால் காஷ்மீர் பயங்கரவாதிகள் ஜம்முவைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது மேலும் அதிகரிக்கும். பதிலுக்கு ஜம்மு இந்துக்கள் தங்களுக்கு இடையில் வசிக்கும் முஸ்லிம்களைக் குறிவைப்பார்கள்.

இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் என் கருத்தில் பி.டி.பியும் நேஷனல் கான்ஃபரன்ஸும்தான். இதன் பலனாக இவர்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது என்று நினைக்கிறீர்கள்? ஒன்றும் இல்லை. இவர்களது அபத்தமான போராட்டத்தால் ஹூரியத் கான்ஃபரன்ஸுக்குத்தான் நன்மையே. காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து பி.டி.பியும் நேஷனல் கான்ஃபரன்ஸும் காணாமல் போகப்போகிறார்கள். பிரச்னை வெகு எளிதாக்கப்பட்டு இரு துருவ நிலைக்கு எடுத்துச் செல்லப்படும். காஷ்மீர் முஸ்லிம்கள் எதிர் ஜம்மு இந்துக்கள்.

இதில் ஜம்மு பகுதியில் காங்கிரஸும் பயங்கரமாக பாதிக்கப்படும். பாஜக முன்னிலைக்கு வரும். அடுத்து மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், காஷ்மீர் பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்படுவதற்குபதில் கடும் பின்னடைவு ஏற்படும். மேலும் ஏகப்பட்ட உயிர்ச்சேதம்.

***

சில அதிரடி நடவடிக்கைகள்:

1. ஆர்டிகிள் 370-ஐ நீக்குதல்.
2. ஜம்மு, லடாக்கைத் தனி மாநிலமாக, பிற இந்திய மாநிலங்களுக்குச் சமமாக ஆக்குதல்.
3. பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, இந்திய காஷ்மீர் + பாகிஸ்தான் காஷ்மீரை இணைத்து, ஐ.நா அமைதிப்படையைக் கொண்டுவந்து சுய நிர்ணய உரிமையைக் கொடுத்தல்.
4. வடக்குப் பிராந்தியங்கள் மீதான இந்தியாவின் உரிமையை ரத்து செய்து, அதனை முழுக்க முழுக்க பாகிஸ்தான் தன்னுடைய பகுதியாகக் கருத சம்மதம் தெரிவித்தல்.

இதுதான் நேற்று பதவியிலிருந்து விலகிய முஷரஃப் முன்வைத்தது. அவரது காலத்துக்குப் பிறகாவது இது நிறைவேறினால் அமைதி நிலவலாம்.

9 comments:

  1. Amarnath was identified by a Muslim Shepherd and Hindu Chauvinists created the Siva Abode story. Natural formation to religion and influenced hatred was in the making since 1932?

    Based on Point No 3 as solution, you are saying they should be given self rule? On the contrary, Point No 4 says, Northern region (which part clarify in districts?) should be part of Pakistan's Kashmir? They still dont account POK in their budget! Absolute Warlords rule there. No growth would come there.

    Splitting Jamma and Ladakh was put forth by Nehru himself, I am told. M J Akbar article. Very poor barren land, economy suffers. Now atleast based on Summer and Winter cycles, people migrate or economy adjusts.

    I dont see anything spelt out in the book by Musharaf in these lines (4 points) you have quoted!

    For India, it would be a pride issue, based on the Kings accession in 1948, earlier agreeing on the Pakistan rule while Radcliffe was splitting.

    Regards
    Ramesh

    ReplyDelete
  2. India should wage a war and reclaim what is now called as
    PoK.Pakistan should not poke
    its nose in J&K.J&K is an
    integral part of India.India
    should not give up its rights.

    ReplyDelete
  3. //
    இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் என் கருத்தில் பி.டி.பியும் நேஷனல் கான்ஃபரன்ஸும்தான்.
    //

    தவறு. அத்தனை பிரச்சனைக்கும் காரணம் இஸ்லாம் என்ற மத்திய கிழக்கு மனித விரோத அரசியல் ஆதிக்கக் கொள்கை.

    //
    இதன் பலனாக இவர்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது என்று நினைக்கிறீர்கள்?
    //

    இதன் காரணமாக நீங்கள் சொல்வது போல்...

    //
    3. பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, இந்திய காஷ்மீர் + பாகிஸ்தான் காஷ்மீரை இணைத்து, ஐ.நா அமைதிப்படையைக் கொண்டுவந்து சுய நிர்ணய உரிமையைக் கொடுத்தல்.
    4. வடக்குப் பிராந்தியங்கள் மீதான இந்தியாவின் உரிமையை ரத்து செய்து, அதனை முழுக்க முழுக்க பாகிஸ்தான் தன்னுடைய பகுதியாகக் கருத சம்மதம் தெரிவித்தல்.

    //

    இரண்டும் நடந்தாலே போதும். அது இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளுக்கு இந்திய ஜனநாயகம் செய்யும் தியாகமாக இருக்கும். அதைத் தான் அந்த அடிப்படைவாத அமைப்புகளும் விரும்பும். இன்று வடக்குப் பகுதி, நாளை கஷ்மீர் முழுதும் பின்னர், ஜம்மு மற்றும் லடாக்...என்று போயிக்கொண்டே இருக்கும். PoK முதல் அனைத்துப் பகுதியும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அதில் இருக்கும் மக்கள் வாழக்கூடிய பகுதிகளை பட்டா போட்டு இந்திய ராணுவத்திலிருன்து ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கே வழங்க வேண்டும். அதை அவர்கள் சொந்தக்காரர்கள் முதல் இந்திய நாட்டுப்பிரஜைகள் யாருக்கு வேண்டுமானாலும் விற்க உரிமை இருக்க வேண்டும்.

    ஹுரியத் போன்ற அடிப்படை வாத அமைப்பினர் முசப்பராபாத் போகவேண்டும் என்றால் தாராளமாக டிக்கட் வாங்கிக்கொண்டு போகட்டும். கஷ்மீர் இந்தியாவின் அங்கம். அதை பிரிக்க நினைப்பவர்களுக்கு தீனி போடும் விதத்திலான தீர்வுகளை சொல்லுவதில் பலனில்லை.

    ReplyDelete
  4. Perhaps this should help in getting your views a "right" balance.

    http://acorn.nationalinterest.in/2008/08/18/why-giving-in-to-kashmir-fatigue-is-not-a-good-idea/

    Your view points:

    3. பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, இந்திய காஷ்மீர் + பாகிஸ்தான் காஷ்மீரை இணைத்து, ஐ.நா அமைதிப்படையைக் கொண்டுவந்து சுய நிர்ணய உரிமையைக் கொடுத்தல்.
    4. வடக்குப் பிராந்தியங்கள் மீதான இந்தியாவின் உரிமையை ரத்து செய்து, அதனை முழுக்க முழுக்க பாகிஸ்தான் தன்னுடைய பகுதியாகக் கருத சம்மதம் தெரிவித்தல்.

    are precisely the "Fatigue" that is discussed in the above link.

    ReplyDelete
  5. Here is a link about the communalism in the Indian context and applies to Kashmir.

    http://www.sabrang.com/research/comopr.pdf

    Just heard Arundhati Roy, the famous Malayalam origin author, who wrote the child exploitation things in her 'God of small things', talking about seccesionism of Kashmir, which was rebutted by Mr Singhvi Congress Spokesperson, threatening to throw her in jail for that ir-responsible act of speech (which I feel is protected under our Constitution as a non-inciting speech, duh - Freedom of Speech). He also said that there are laws in the IPC which clearly demarcates, even talking about Splitting a country for peace (but not taking over - Sikkim or splitting other countries - Bangladesh). He cites the case of BODO, ULFA, Tamil Militants.

    So much for our 61st year of freedom.

    http://en.wikipedia.org/wiki/Kashmir

    I am praying for peace to the higher powers.

    ReplyDelete
  6. //
    இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் என் கருத்தில் பி.டி.பியும் நேஷனல் கான்ஃபரன்ஸும்தான்.
    //

    இந்த கருத்தை நான் ஆமோதிக்கிறேன். ஜம்மு-காஷ்மீரில் நடப்பது அரசியல். குலாம் நபி அசாதின் பேட்டி இங்கே:

    http://www.rediff.com/news/2008/aug/10inter.htm

    முஃப்தி முகமது சயீதின் பதவி ஆசையும் அரசியல் சூழ்ச்சியும் தான் இன்று அங்கு நடக்கும் சம்பங்களுக்கு வித்து.

    ReplyDelete
  7. நாட்டை இனிமேலும் பிரிக்க வேண்டாம்..இந்தியத்தாய்க்கு தலை இல்லாமல் இருந்தால் நினைத்து பார்க்கவே வேதனையாக உள்ளது..

    இந்த பிரச்சினையை மத்தியில் ஆளும் காங்கிரஸ் மற்றும் தேர்தலை நோக்கி இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் இதை வழக்கம்போல் பயன்படுத்திக்கொல்லாமல் காஸ்மீர் மற்றும் ஜம்மு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.

    இதை பற்றி தோழர் அசுரனின் கருத்தை இங்கே சமர்ப்பிக்குறேன்..

    பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது - அமர்நாத் யாத்திரை

    அமர்நாத் பிரச்சினையை வைத்து பார்ப்பனிய மதவெறி பிசினிஸ் செய்ய முடிவு செய்த பார்ப்பனிய பயங்கரவாதிகளுக்கு ஏமாற்றத்தை தரும் வகையில் இருந்தது அமர்நாத் யாத்தீரை சுமுகமாக நடந்தேற வகை செய்த காஸ்மீர் முஸ்லீம்களின் நடவடிக்கை.

    இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் சில கேள்விகள் எழுகின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் என்று காஸ்மீரைச் சேர்ந்த காஸ்மீர் சுயநிர்ணய உரிமைக்காக போராடுபவர்களையும் சேர்த்தே குறிப்பிடுகின்றன RSS உள்ளிட்ட பார்ப்பன மத வெறி பயங்கரவாத அமைப்புகள். ஒரு மாநிலம் விட்டு இன்னொரு மாநிலத்தில் நக்சல்பாரிகள் போராடுவதையே ஏதோ நாடு விட்டு நாடு ஊடுருவல் செய்தது போல பேசுவார்கள் இந்த மத வெறி பயங்கரவாதிகள். ஆனால் காஸ்மீரைச் சேராத, உ பியைச் சேர்ந்த தினேஸ் பார்தி போன்ற சாமியார் பயங்கரவாதிகள் ஜம்முவில் இருந்து கொண்டு வெறி கிளப்பும் பிரச்சாரம் செய்து வன்முறையை தூண்டி வருவதை இவர்கள் என்ன பெயரிட்டு அழைப்பார்கள் என்று தெரியவில்லை.

    இவர்கள் அகராதியில் எல்லாவற்றுக்கும் இரட்டை அர்த்தம் இருப்பது போல மேலே குறிப்பிட்டவற்றுக்கும் கூட இரட்டை அர்த்தம் இருக்கும்.

    பார்ப்பன மத வெறி கும்பல் வெளிப்படையாகவே மத வெறி கிளப்பி போராடி வருவதை வெறுமே ஏதோ உரிமைக்கான போராட்டமாக சித்தரித்த ஊடகங்கள், காஸ்மீரிகளின் தேசிய இன உரிமை அடிப்படையிலான எதிர்ப்பு போராட்டத்தை பிரிவினைவாதமாகவும்/மத வெறியாகவும் சித்தரித்தனர். 6 முஸ்லீம்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிற்பாடும் அமர்நாத் யாத்திரையை சுமூகமாக நடந்தேற வகை செய்த காஸ்மீரிகளோ மிகத் தெளிவாகவே இது மதவெறி போரட்டமல்ல என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

    ஜம்முவோ அல்லது காஸ்மீரோ, சட்ட ஒழுங்க மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது காஸ்மீர் அரசு.

    ஆனால் சில நூறு பேர் போராடுகிற பார்ப்பன மத வெறி கும்பலை ஒடுக்க ராணுவத்தால் முடியவில்லை என்பது விந்தையாக இருக்கிறது.

    இவர்கள் சட்ட ஒழுங்கை பாதுகாப்பது குறித்த மிரட்டலை எப்போது விடுகிறார்கள்? பார்ப்பன மத வெறி கும்பலின் பொருளாதார முற்றுகையை எதிர்த்து காஸ்மீர் பழத் தோட்டக்காரர்கள் உள்ளிட்ட வியாபாரிகள் முசாபரபாத் சலோ என்றூ போராட தொடங்கிய உடனே பேசுகிறார்கள்.

    முசாபரபாத் சலோ அறிவிக்கப்பட்டவுடன் அதன் தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்படுகின்றனர். போராட்டம் அதனை மீறி லட்சக்கணக்கானவர்கள் அணி திரள நடக்கிறது.

    ஆனால், காஸ்மீர் மீது பொருளாதார முற்றுகையை நடத்தி வரும் தலைவர்கள் யாரும், வேற்று மாநிலத்தைச் சேர்ந்த வெறி கிளப்பும் பிரச்சாரம் செய்து வரும் தினேஸ் பார்த்தி போன்ற சாமியார்கள் உள்ளிட்டு கைது செய்யப்படவில்லை. ஒரு சில முறை அடையாள கைது செய்யப்பட்டு உடனே விடுவிக்கப்படுகிறார்கள். சட்ட ஒழுங்கு இப்படித்தான் பாதுக்காக்கப்படுகிறது. பிள்ளை இப்படித்தான் கிள்ளி விடப்படுகிறது.

    பொருளாதார முற்றுகை செய்து வரும் பார்ப்பன பயங்கரவாதிகளை ஒடுக்க துப்பில்லாத அரசு, பழ வியாபாரிகளிடம் பின்வருமாறு பேசுகிறது,

    "ஆப்பிள் கொண்டு செல்பவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படுமாம்(இதனையும் அரசு இன்று வரை செய்யவில்லை) அல்லது பழங்களை ராணுவம்/அரசு வாங்கிக் கொள்ளுமாம் இதனை மீறி நஸ்டமானது நிரூபிக்கப்பட்டால் இழப்பீடு வழங்குமாம்"

    இதுதான் தொட்டிலை ஆட்டுவது என்பது. சில நூறு பார்ப்பன மத வெறி கும்பலை ஒடுக்கி பொருளாதார முற்றுகையை உடைக்க விருபாதவர்கள், அதனை ஏற்றுக் கொள்ளச் சொல்லி காஸ்மீர் வியாபாரிகளை மிரட்டுகிறார்கள்.

    விசயம் சுலபம்,

    காஸ்மீர் இந்தியாவுடன் ஒரு மாநிலமாக சேர்ந்திருப்பதாக காட்டப்படுவது என்பதே பல்வேறு சர்வதேச, உள்நாட்டு நிலைமைகளினால்தான் சாத்தியமாகி உள்ளது. இதுவே சட்டப்பூர்வமானது அல்ல. எனவேதான் காஸ்மீருக்கு மற்ற மாநிலங்கள் போல அல்லாமல் சிறப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று காஸ்மீரில் நிலம் வேளி ஆட்களால் வாங்கப் படமுடியாது என்ற சட்டம்.

    காஸ்மீரின் இந்த சிறப்பு அந்தஸ்த்தை சந்தர்ப்பவாதமாக ஒழிப்பது என்பதுதான் ஆளும் வர்க்கத்தின் நோக்கம். அதற்க்கு இந்த அமர்நாத் பிரச்சினை வழி வகுக்கிறது என்பதால்தான் பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும் வேலையை அரசும், ஆளும் பார்ப்பனிய கும்பலும் செய்து வருகிறார்கள்.

    ஒவ்வொரு பிரச்சினைக்கும் மக்கள் திரள் வழி பாதை ஒன்று இருக்கும் அதிகாரத்துவமான சந்தர்ப்பவாத பாதை ஒன்று இருக்கும். சந்தர்ப்பவாத பாதையையே ஆளும் கும்பல் எப்பொழுதும் செய்து வருகிறது. சந்தர்ப்பவாதமோ எப்பொழுதுமே திருப்பி ஆப்படிப்பதாகவே வரலாற்றில் அனுபவங்கள் உள்ளன. காஸ்மீரின் பழைய வரலாறே இதற்க்கு சான்று. காஸ்மீரின் அன்றைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் பாகிஸ்தான் எதிர்ப்பு அம்சத்தை நேரு சந்தர்ப்பவாதமாக பயன்படுத்திக் கொண்டார். இந்திராவோ தனது பாசிச நடவடிக்கையின் மூலம் மேலும் காஸ்மீரை அன்னியமாக்கினார். இதோ இன்று வரை இந்திய ஆளும் கும்பலின் அதிகாரத்துவ சந்தர்ப்பவாத நடவடிக்கைகள் இன்னும் இன்னும் பிரச்சினைகளை வீரியமாக்கி வருகின்றது.

    அமர்நாத் ஒரு பிரச்சினையாக உருவானது என்பதும் இன்று நேற்று நடந்தது அல்ல. திட்டமிட்டே இந்த யாத்திரையை பார்ப்பனிய பயங்கரவாதிகள் தமக்கான அரசியல் தளமாக வளர்த்தெடுத்துள்ளனர். ஆரம்ப காலங்களில் முஸ்லீம்களாலேயே நிர்வகிக்கப்பட்டு வந்த யாத்திரையை பிறகு இதற்கென்றே ஒரு இந்து அமைப்பை ஏற்படுத்தி பார்ப்பன மயப்படுத்தினர். குறிப்பாக ஒரு இந்துவே இந்த அமைப்பிற்க்கு தலைவராக இருக்க வேண்டும் என்றும், அவர் ஆளுநராகவும் இருக்க வேண்டும் என்றும் வகை செய்ததன் மூலம் இந்த யாத்திரையின் மதச்சார்பின்மையை ஒழித்துக் கட்டினர் ஆளும் கும்பல். ஒரு சாதாரண யாத்திரையை தமது மத வெறி பிரச்சாரத்திற்க்காகவும், அகண்ட பாரத திட்டத்திற்க்காகவும் வலுவே ஊதிப் பெருக்கி பூதமாக்கியுள்ளனர் பார்ப்பன மதவெறி கும்பல்.

    இப்போழுது நடைபெறும் காஸ்மீரிகளின் எதிர்ப்புகூட இந்திய அரசின் மீது நம்பிக்கையின்றி இருக்கும் காஸ்மீரிகளை இன்னும் நம்பிக்கையிழக்கச் செய்யும் வகையில் அதன் சிறப்பு சலுகையின் மீது செய்யப்பட்டுள்ள தாக்குதலுக்கான எதிர்வினையாகவே செய்யப்படுகிறது.

    நம்பிக்கையின்மையை/பயத்தை விதை, அதனால் விளையும் எதிர்வினையை வைத்து அவதூறு பிரச்சாரம் செய், பிரச்சாரத்தின் மூலம் பெரும்பான்மையை திரட்டு, சிறுபான்மை ஆளும் கும்பலின் அதிகாரத்தை தக்கவை, மீண்டும் நம்பிக்கையின்மையை/பயத்தை விதை.

    இதுதான் பார்ப்பன பயங்கரவாதிகளின் தந்திரமாக உள்ளது. பார்ப்பன பயங்கரவாதிகள் என்று இங்கு குறிப்பிடும் பொழுது RSS, BJP என்று சுருக்கி வரம்பிடாமல் ஒட்டு மொத்த இந்திய ஆளும் கும்பலின் வர்க்க இயல்பை குறிப்பிட்டே இங்கு சொல்லப்பட்டுள்ளது.

    சில விசயங்கள் தெளிவு படுத்தப் பட வேண்டியுள்ளது,

    #1) காஸ்மீர் மக்கள் ஏற்கனவே இந்திய அரசின் மீது நம்பிக்கையின்றி வெறுப்பில் இருக்கும் போது அவர்களை வென்றெடுக்கும் நடவடிக்கைகளை எடுக்காவிடிலும் பரவாயில்லை மாறாக இது போன்ற சந்தர்ப்பவாதமாக செயல்படுவது யாருக்கு நஸ்டம் என்பதை இந்தியாவின் மீது அபரிமிதமாக காதல் கொண்ட, மக்களுக்காக பேசுவதாக கூறிக் கொள்ளுபவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

    #2) காங்கிரசுக்கும், RSSக்கும் பெயரில்தானே வித்தியாசம்? இரண்டிலும் இருக்கும் ஆட்கள் பிரமுகர்கள் எல்லாம் ஒரே சமூக பொருளாதார அடிப்படை கொண்டவர்கள்தானே? எனவேதானே இரண்டு கட்சியை சேர்ந்தவர்களின் நோக்கமும், செயல்பாடுகளும் எந்த காலத்திலும் முரன்பட்டதேயில்லை? விசயம் இப்படியிருக்க போலி கம்யுனிஸ்டு பாசிஸ்டுகளான CPM கும்பல் வேறு ஏதோ கதை கட்டி காங்கிரஸுக்கு புனித கோமணம் கட்டுவது ஏன்?

    #3) காஸ்மீர் பிரச்சினையின் அரசியலை வெளிப்படையாக பேசாமல் அமைதியாக இருங்கள், அமைதியாக இருங்கள் என்று மட்டும் கூச்சலிடுவதன் மூலம் CPM, Panthers Party உள்ளிட்டவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? அணு ஒப்பந்தத்தை நானும் எதிர்த்தேன் என்று பேர் வாங்கிக் கொண்டது போல நானும் நல்லவந்தான் என்ற விளம்பரம் செய்வதுதான் நோக்கமா? அத்வானியும் இதேயேதான் சொல்ல(மட்டும்) செய்கிறார்? அணு ஒப்பந்தத்திலும் கூட இருவரும் இதே போலத்தானே செய்தனர்?

    #4) நேரு மற்றும் குறிப்பாக இந்திராவின் பாசிச நடவடிக்கைகள் காஸ்மீரில் தலையிடாத வரை காஸ்மீர் மதச் சார்பின்மையின் இலக்கணமாக இருந்ததன் ரகசியம் என்ன?

    #5) ஹஜ் யாத்திரைக்கு மட்டும் சலுகை கொடுப்பதாக பொய் சொல்லும் சில பார்ப்பன பயங்கரவாத பெருந்தகைகள் கும்பமேளாக்கள், அமர்நாத் யாத்திரை, கைலாஸ் மானசரோவர் யாத்திரை உள்ளிட்ட பல்வேறு இந்து மத விழாக்களுக்கு கொடுக்கப்படும் அரசு சலுகைகளை மற்றும் கோடிக்கணக்கிலான செலவுகள் குறித்த விவரங்களை எந்த இடத்தில் மறைத்து வைத்துள்ளனர் என்று தெளிவுபடுத்தலாம். மதங்கள் எதற்க்கும் சார்பின்றி இருப்பதுதான் மதச் சார்பின்மை என்ற அர்த்தம் போய் எல்லா மதத்திற்க்கும் சார்ப்பாக இருப்பதே மதச் சார்பின்மை என்ற போலி மதச்சார்பின்மை சந்தர்ப்பவாதம் ஆட்சி செய்வதே இந்த கேலிக் கூத்திற்க்கெல்லாம் அடிப்படையா?

    ReplyDelete
  8. //
    I am praying for peace to the higher powers.
    //

    Where are they ? China ?

    The guys who quotes sabrang website is by all means totally uninformed about sabrang or mentally retarded as the sabrang guys themselves.

    Sabrang and its related websites are run by people like teesta setalvad and others who refuse to divulge their source of funds even after allegations of ISI funding.

    ReplyDelete
  9. படிக்கும் பகுதியின் width எந்த அளவிற்கு பெரியதோ அந்த அளவிற்கு வாசகன் ஒருவனுக்கு எரிச்சல் ஏற்படாமல் இருக்கும். உங்கள் பிளாகின் post section width ரொம்பவும் சிறியது...

    ReplyDelete