Friday, August 29, 2008

காந்தியின் செக்ஸ் பரிசோதனைகள்

காந்தி தனது அரசியல் போராட்டங்களையும் அறப் போராட்டங்களாக, ஆன்மிகப் போராட்டங்களாகப் பார்த்தார். இதுதான் அவரது அடுத்த கட்ட சீடர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. நேரு ஒரு நாத்திகர். படேலோ, ராஜாஜியோ, பிரசாதோ, ஆசாதோ காந்தியின் ஆன்மிக நோக்கங்களை முழுவதுமாகப் புரிந்துகொண்டவர்கள் அல்லர்.

காந்தியின் ஆன்மிகம் இன்னதுதான் என்று விளக்கிச் சொல்லும் திறன் எனக்கு இப்போது இல்லை.

அவர் ஒரு நாத்திகராக ஆரம்பித்தார் என்று புரிகிறது. ஆனால் அவர் இங்கிலாந்து சென்றபோது கிறித்துவ மதத்துக்கு அவரை மாற்ற பலர் அப்போது முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவிலும் பலர் அவரை கிறித்துவ மதத்துக்கு மாற்ற முயன்றுள்ளனர். ஆனால் தன் மதமே தனக்குச் சரியாகப் புரியாத கட்டத்தில் என் மதம் மாறவேண்டும் என்று காந்தி மறுத்துவிட்டு, தன் மத நூல்களை ஆழ்ந்து கற்க விரும்பியுள்ளார். பகவத் கீதை, பைபிள், குர்-ஆன் ஆகியவற்றை அவர் அப்போதுதான் படித்துள்ளார். பின்னர் காந்தி கீதையால் பெரிதும் கவரப்பட்டார். ஆனால் கீதையின் பாரம்பரிய உரைகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தானாகவே கீதைக்கு ஓர் உரை எழுதினார்.

உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக ஒருவர் வைத்துக்கொண்டால் அதனால் ஆன்ம பலம் பெருகும் என்றும் அந்த ஆன்ம பலத்தின் துணையைக் கொண்டு உலகையே மாற்றலாம் என்றும் காந்தி தீவிரமாக நம்பினார்.

உடலைத் தூய்மையாக வைத்திருப்பது என்றால் குடலைத் தூய்மையாக வைத்திருப்பது. உணவுப் பழக்க வழக்கங்களில் காந்தி நிறைய மாற்றங்கள் செய்துபார்த்தார். எளிதாக மலம் கழிக்க ஏதுவான உணவுகளாக பல சோதனைகளைச் செய்திருக்கிறார். அதேபோல் குடலைத் தூய்மையாக வைத்திருக்க அவ்வப்போது உப்பு நீர் எனிமா கொடுத்துக்கொள்வது அவரது வழக்கம். அத்துடன் தனக்குப் பிடித்தமானவர்களுக்கு எனிமா கொடுப்பது காந்தியின் பழக்கம் என்று லூயி ஃபிஷர் எழுதுகிறார். காந்தியிடம் எனிமா பெறுவது என்றால் அவரிடம் தீட்சை வாங்குவதற்கு சமம்.

குடல் தூய்மை போல, மன மலத்தைத் துடைப்பதும் காந்திக்குப் பெரும் சவாலாக இருந்திருக்கிறது. காந்தியைப் பொருத்தமட்டில் அவர் எளிதாக பொய் பேசுவதை வென்றுவிட்டார். காசு, பணம், நகை மீதான ஆசைகளையும் அவர் எளிதாக வென்றுவிட்டார். தன் சொத்து அத்தனையும் தன் பிள்ளைகளுக்கோ மனைவிக்கோ கிடையாது என்று ஆசிரமத்துக்கு எழுதிவைக்கும் மனோபாவம் அவருக்கு இருந்தது. கஸ்தூர்பாவுடன் பண விஷயத்தில் பலமுறை சண்டை வந்திருக்கிறது. தனக்குக் கிடைத்த பரிசுகளையும் தன் குடும்பம் பயன்படுத்தக்கூடாது என்பதில் காந்தி உறுதியாக இருந்தார். சொத்தின் மீது ஆசையில்லை. பொய் சொல்வதில்லை. பிறர் கெடவேண்டும் என்று நினைப்பதில்லை. அப்படியானால் இவரிடம் வேறென்ன கெட்ட பழக்கங்கள் இருக்கக்கூடும்?

செக்ஸ் ஆசை. பெண்ணின் உடல்மீதான ஆசை.

தன் மனைவியுடன் உறவு கொண்டிருக்கும் நேரத்தில் தனது தந்தை உயிர் பிரிந்தது காந்தியின் மனத்தை வாட்டிக்கொண்டே இருந்தது. ஆனால் அப்போது காந்தி மகாத்மா ஆகியிருக்கவில்லை. சாதாரணர்தான். பின்னர் காந்தி பாரிஸ்டர் படிப்புக்கு இங்கிலாந்து சென்றபோது அங்குள்ள ஆங்கிலேயப் பெண்களிடம் பழகும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. யாரிடமும் தான் ஏற்கெனவே மணமானவன் என்ற விஷயத்தை அவர் சொல்லவில்லை. ஓரிரு முறை சில பெண்களிடம் நெருக்கமாக இருந்திருக்கும் வேளையில் அதிலிருந்து “தப்பித்து” விட்டதாக எழுதியிருக்கிறார். மேலும் அவர் தனது தாய்க்கு சத்தியம் செய்து கொடுத்திருந்தார். பிற பெண்களைப் பார்க்கமாட்டேன் என்று.

காந்திக்கு இங்கிலாந்து செல்லும் முன் ஒரு குழந்தை. இந்தியா திரும்பியபின் ஒரு குழந்தை. தென்னாப்பிரிக்கா சென்று இரு குழந்தைகள் பிறந்தன. அந்தக் காலகட்டத்தில்தான் காந்தி பிரம்மச்சர்யம் - உடலுறவு இல்லாத நிலை என்பதை நோக்கிச் சென்றுள்ளார். பொதுவாகவே இந்திய முறையில் பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்று நான்கு அடுக்குகள் உள்ளன. காந்தி இருந்த நிலை வானப்பிரஸ்தம் என்றுதான் சொல்லவேண்டும்.

காந்திக்கு செயல் வேறு, மனம் வேறு என்றில்லை. செயலால் அவர் பாலுணர்ச்சி இல்லாதவராக இருந்தாலும் அவரது மனம் அலைபாய்ந்துள்ளது. பல பெண்கள் அவரால் கவரப்பட்டனர். அவரும் சில பெண்களால் கவரப்பட்டிருக்கலாம். ஆனால் தென்னாப்பிரிக்காவில் அவர் இருந்த காலகட்டத்தில் போராட்டமே குறியாக இருந்ததால் அவர் மனம் வேறு பக்கம் சாயவில்லை.

இந்தியா வந்தபின் காந்திக்கு மெடலைன் ஸ்லேட் என்ற பெண் (மீரா என்று தன் பெயரை மாற்றிக்கொண்டவர்) சீடராக வாய்த்தார். ஸ்லேடுடனான உறவு மிகவும் சிக்கலானது. காந்தியின் ஆஸ்ரமத்தில் பல பெண்கள் தங்கியிருந்தனர். நான்கு குழந்தைகள் பெற்ற, 50 வயதுக்கும் மேலான காந்தி உடலுறவற்ற நிலையை மணமான, மணமாகாத இளம் பெண்களிடமும் பரப்பியவண்ணம் இருந்தார். அப்படிப்பட்ட ஒரு சத்தியப் பிரமாணத்தைத்தான் ஜெயபிரகாஷ் நாராயணின் மனைவி பிரபாவதியும் எடுத்துக்கொண்டார். மேலும் பலரையும் காந்தி நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக வற்புறுத்தினார்.

இதற்கிடையில் காந்தி வங்காளத்தைச் சேர்ந்த தாகூரின் உறவுக்காரப் பெண்ணான சரளாதேவி சவுதராணி என்ற பெண்மீது மையல் கொண்டார். இந்தப் பெண், பஞ்சாபைச் சேர்ந்த ராம்புஜ் சவுதுரி என்பவரைத் திருமணம் செய்துகொண்டிருந்தார். ரவுலட் சட்டத்தை எதிர்த்து, ஜாலியன் வாலா பாக் படுகொலைகளை எதிர்த்துப் போராடிய பலர் சிறையில் அடைக்கப்பட்டபோது ராம்புஜ்ஜும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

காந்தி பஞ்சாப் சென்றபோது சரளாதேவியின் வீட்டில் தங்கினார். அங்கு அவர் இருந்த காலத்தில் சரளாதேவியுடனான உறவு நெருக்கமானது. சரளாதேவியைத் திருமணம் செய்வது என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் அந்தத் திருமணம் “உடல் அள்விலானதல்ல, தூய்மையான மன அளவிலானது” என்பது காந்தியின் கருத்து. ஆனால் ராஜாஜி, காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி முதற்கொண்டு பலரும் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். இதனால் சுதந்தரப் போராட்டத்துக்குப் பின்னடைவு ஏற்படும் என்பது இவர்களது கருத்து.

[காந்தி சரளாதேவியுடனான “spritual marriage” பற்றிப் பேசும் காலகட்டத்தில் ராம்புஜ் சிறையிலிருந்து வெளியே வந்து இறந்தும் போயிருந்தார். சரளாதேவி, ராம்புஜ் தம்பதிகளுக்கு ஒரு வளர்ந்த மகன் இருந்தான்.]

இந்தக் காலகட்டத்தில் கஸ்தூர்பா என்ன நினைத்தார் என்பது பற்றிய தகவல்கள் இல்லை. கடைசியாக காந்தி, சரளாதேவியை மணக்க இயலாது என்று கடிதம் எழுதினார். அன்றிலிருந்து சரளாதேவி காந்தியை எதிர்க்க, வெறுக்க ஆரம்பித்தார். காந்தி அதற்குப்பின் சரளாதேவி பற்றி எங்குமே எழுதவில்லை.

காந்தி உண்ணாவிரதத்தை ஓர் ஆயுதமாக ஆக்கியது இதற்குப் பிறகுதான். உண்ணாவிரதத்தை தன் உடலைத் தூய்மை செய்யும் ஒரு கருவியாகவே காந்தி பார்த்தார். ஆனால் மனத்தைத் தூய்மை செய்யும் கருவி என்னவாக இருக்கும் என்று அவர் தேடியுள்ளார்.

தந்த்ரா முறையில் வழிபடுபவர்களுக்கு “கருவி” ஒன்று தேவை. அந்தக் கருவி, ஓர் இளம் கன்னிப் பெண். அந்தக் கன்னிப் பெண்ணின் மூலமாக மனத்தை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்வது. அதன் ஒரு நோக்கம் முற்றிலும் ஆடையில்லாத ஓர் இளம்பெண்ணைப் பார்க்கும்போதும் ஒருவர் மனத்தில் எந்தவித கிளர்ச்சியும் வராதிருப்பது.

காந்தி உடல் அளவில் பிற பெண்களுடனும் தன் மனைவியுடனும் உறவு கொள்ளாவிட்டாலும், மனத்தளவில் தனக்கு அந்தக் கட்டுப்பாடு இருக்கிறதா என்று சோதிக்க விரும்பினார். அதனால் ஆஸ்ரமத்தில் தன்னைச் சுற்றி பல பெண்களை வைத்திருந்தார். அவர்களுடன் நிறையப் பேசினார். பழகினார். அவர்களைத் தனது சகோதரிகள் என்றும் தான் அவர்களுக்குத் தாய்போல என்றும் சொன்னார்.

“மோகன்தாஸ்” புத்தகத்தில் ராஜ்மோகன் காந்தி, மோகன்தாஸ் காந்திக்கு ஒருவித நரம்பு நோய் இருந்தது என்று குறிப்பிடுகிறார். மிகவும் அழுத்தம் அதிகமான கட்டங்களில் காந்தியின் உடல் தாங்கமுடியாமல் நடுங்க ஆரம்பிக்கும். அப்போது அவர் யாரையாவது அணைத்தவாறு படுத்திருப்பார். இவ்வாறு அவர் அணைத்துக்கொண்டு படுத்தது ஆஸ்ரமத்தில் இருந்த பெண்களில் ஒரு சிலரை. ஆனால் இது வெளிப்படையாக அனைவரும் பார்க்கும் வண்ணம் இருக்கும். கஸ்தூர்பாவும் அதே ஆஸ்ரமத்தில்தான் அப்போது இருந்தார். (“I am taking service from the girls” என்றுதான் காந்தி பலமுறை இதைப்பற்றி கடிதங்களில் குறிப்பிடுகிறார். இவை குஜராத்தி கடிதங்கள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவையா அல்லது ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டவையா என்று நான் ஆராயவில்லை.)

ஆனால் இந்தப் பழக்கத்தை அவரது ஆண் சீடர்களும் தொண்டர்களும் கடுமையாக எதிர்த்தனர். காந்தி அதைப்பற்றி அவ்வளவாகக் கவலைப்படவில்லை. ஆனால் ஓரிருமுறை காந்திக்கு “இரவு வெளிப்பாடு” (nocturnal emission என்று காந்தி இதனைக் குறிப்பிடுகிறார். விந்து வெளியேறுதல்) ஏற்பட்டது. 60 வயதைத் தாண்டியிருந்த காந்தியை இது கடுமையாக பாதித்தது. தனது மனம் தூய்மையாக இல்லையோ என்று காந்தி சந்தேகித்தார். அதனால் பெண்களிடமிருந்து பெறும் “சேவையை” காந்தி நிறுத்திவைத்தார். அவ்வப்போது சேவையைப் பெறுவதும் நிறுத்துவதுமாக இருந்தார். அவரது மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்தது.

ஆனால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதுபோல், காந்தி அடுத்தகட்டப் பரிசோதனைக்குச் சென்றார். தனது பேத்தியான 18 வயது மனுவுடன் ஆடையின்றி சேர்ந்து படுத்துக்கொண்டு தனது ‘மனத் தூய்மையை' நிலை நாட்டப் பார்த்தார். மனுவிடம் காந்தி தொடர்ச்சியாக பிரம்மச்சரியத்தைப் பற்றிப் பேசிவந்திருக்கிறார். கடிதத்தில் எழுதியபடி இருந்திருக்கிறார். இந்த சோதனை காந்தி நவகாளியில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் போராடும் கட்டத்தில், காந்தியின் 77வது வயதில், நடந்தது.

தனது மனம் பாலுணர்ச்சியின்றித் தூய்மையாக இருந்தால் தன்னால் இந்து-முஸ்லிம் ஒற்றுமையைக் கொண்டுவரமுடியும் என்று காந்தி நம்பினார் என்றே தோன்றுகிறது.

சுற்றிலும் வன்முறை நடக்கும்போது தன்னைத்தான் காந்தி நொந்துகொண்டார்.

***

இன்று காந்தியைப் பற்றிப் படிக்கும்போது இந்த விஷயங்கள் மிகவும் நெருடுகின்றன. அன்றே நேரு முதல் பிற அனைவருக்கும் இது நெருடலாகவே இருந்தது. “கருவி”களாகப் பயன்பட்ட பெண்களின் நிலையைப் பற்றி காந்தி நினைத்துப் பார்த்தாரா என்பது தெளிவாக விளங்கவில்லை.

காந்தி தன்னைச் சுற்றி இருந்த பெண்களின் வாழ்க்கையில் நிறையவே குறுக்கிட்டார். ஒரு கட்டத்தில் மெடலைன் ஸ்லேட் காந்தியிடம் சண்டை போட்டுக்கொண்டுதான் வெளியேறிப் போனார். அதிலும் ஸ்லேடின் மண ஆசை குறுக்கிட்டது. ஸ்லேட், பிருத்விராஜ் சிங் என்ற இந்திய தேசியப் படையில் சிப்பாயாக இருந்து அஹிம்சை வழிக்கு மாறிய ஒருவரை மணம் செய்ய விரும்பினார். காந்தி இதனை ஏற்கவில்லை. பின்னர் பிருத்விராஜும் தனக்கு ஸ்லேட்மீது காதல் இல்லை என்று சொல்லிவிட்டார்.

காந்தி, ஒரு பக்கம் தன் பேத்தி மனு பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று விரும்பினார். அதே நேரம் காந்தி, தன் உதவியாளர் பியாரேலாலும் மனுவும் மணந்துகொள்ளவேண்டும் என்றும் விரும்பினார். கடைசியில் இந்தத் திருமணமும் நடக்கவில்லை.

***

காந்தி, அவராகவே சில ஆன்மிக முறைகளை வகுத்துக்கொண்டு அதன்படி நடக்க முற்பட்டார். அரசியல் இல்லாவிட்டால், அவரே ஒரு குருவாகி, இந்துமதத்தின் ஒரு புதுப் பிரிவைத் தோற்றுவித்திருக்கலாம். அல்லது முற்றிலும் புதிய மதம் ஒன்றை அவர் தோற்றுவித்திருக்கலாம்.

நல்ல வேளை. அது நடக்கவில்லை.

22 comments:

  1. நான் 'சத்யசோதனை'யை முன்பின் படித்திருக்காததால், காந்தியைப் பற்றிய இத்தகவல்கள் எனக்கு முற்றிலும் புதியது. நன்றி.

    வெளிப்படையாக சொல்லி விடுவதாலோ அல்லது செய்ததாலேயே, தவறில்லை என்றாகிவிடாது.

    கொஞ்சம் 'மனக் கட்டுப்பாடு' இல்லாதிருந்திருந்தால், 'காந்தியானந்தா' ஆகியிருப்பார் போல.

    ஒருவேளை, ஆசிரமம் ஆரம்பித்தாலே இவ்வாறெல்லாம் செய்யத் தோன்றுமோ?

    ReplyDelete
    Replies
    1. "காமம் என்பது வாழ்க்கையின் ஒரு முக்கியமான அங்கம். ...... ‘consenting adults’ – அதாவது ஒருவரை ஒருவர் விரும்பி, மற்றவர்களுக்குத் தொந்திரவு கொடுக்காமல், உறவு கொள்ளுதல் என்பதை யாராலும் குறை சொல்ல முடியாது – அதற்கு முகாந்திரமே இல்லை. அது அவர்கள் சம்பந்தப்பட்ட, தனிப்பட்ட விஷயம்."

      படித்தது .

      Delete
  2. மத்தவங்களால போற்றப்படுகிற, ஐகான்கள் எல்லாருமே இப்படி ஏன் எளியவர்களால் நேரடியா புரிந்து கொள்ள முடியாதபடி இருக்கிறாங்க?

    ரெண்டாங்கிளாஸ் பாடபுத்தகம் தொடக்கம், இந்தப் பதிவு வரை, காந்தி பற்றிய செய்திகள், புதுசு புதுசா ஏதேதோ விஷயங்களை சொல்லிகிட்டு இருக்கு...

    எனக்கு என்ன தோணுதுன்னா, மகாத்மாவா ஆகிறது கஷ்டம்தான், ஆனா, மகாத்மாவாக நிலைச்சு இருக்கறது இன்னும் கஷ்டம்.

    ReplyDelete
  3. அன்புள்ள பத்ரி , இந்த பதிவை என்னுடைய மலயாளம் ப்ளோகில் பரிபாஷை செய்து ப்ரசுரிக்க விரும்புகிறேன் . சம்மதம் எனில் எனக்கு மின்னஞ்சல் அணுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் ,
    K.P.Sukumaran,
    Bangalore
    kpsuku@gmail.com

    ReplyDelete
  4. மிக நல்லத் தேவையானத் தகவல்களை உள்ளடக்கிய பதிவு.

    யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு நபர்தான் காந்தி தாத்தா என்று நான் எண்ணுகிறேன்.. தனது பேத்தியுடனேயே தனது சோதனையை நடத்தும் அளவுக்கு அவருக்கிருக்கும் சிலேக மனநிலை யாருக்கும் வராது.. அதனை அனுமதித்த அந்தப் பேத்தியைப் போலவும், வேறு பேத்தியையும் காண முடியாது.

    அனைவருக்கும் யுக புருஷராக கண்ணில் தெரிந்ததால் அவருடைய இது போன்ற அனைத்துப் பரிசோதனைகளும் ஒன்றுமில்லாததாகிவிட்டது. இப்போது நிஜம் வெளியே வர வர.. சட்டென்று அவரைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்களை ஏற்க மறுக்கிறது மனம்..

    நன்றி பத்ரி ஸார்..

    அந்த "மோகன்தாஸ்" என்ற புத்தகத்தை மொழி மாற்றம் செய்யுங்கள்.. ஆவலாக உள்ளது.

    ReplyDelete
  5. காந்தியை அஹிம்சா வாதியாகவும், சுதந்திர போராட்ட வீரராகவும் பார்த்த எமக்கு, இந்த தகவல் மிகவும் புதியதாக உள்ளது. முற்றும் துறப்பது என்பது முடியாத காரியம் போலும்!

    ReplyDelete
  6. பத்ரி

    அற்புதமான படைப்பு மகாத்மா தனது வாழ்வில் இத்தனைக்கும் பிறகுதான் முழுமை பெற்றிருக்ககூடும் என்று தோன்றுகிறது, அவரின் சோதனைகள் முழுமை பெற்றிருந்தால் ஒருவேளை நீங்கள் சொன்னது போல் இன்னொரு மதம் உருவாகி இருக்கலாம் ஆனால் தீன் இலாஹி யின் அற்பாயுள் தெரிந்துதான் அவர் ஒரு மதமாக இதனை முன்னிருத்தாமல் போயிருக்கலாம் என்று தோன்றுகிறது

    ReplyDelete
  7. அன்புள்ள பத்ரி, காந்தியின் செக்ஸ் பரிசோதனைகள் என்ற உங்கள் பதிவை இப்போதுதான் படித்தேன். அருமையான பதிவு. நீங்கள் எதைப்பற்றி எழுதினாலும் யார் மனமும் புண்படாதவாறு எழுதுகிறீர்கள். அது மிகவும் பாராட்டத்தக்கது. கொஞ்சம் கிண்டலும் உங்களுக்குக் கூடிவந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. "அவ்வப்போது சேவையைப் பெறுவதும் நிறுத்துவதுமாக" என்பதில் அது தொனிக்கிறது!

    சரளாதேவி, மீரா, மனு இவர்களுடனான காந்தீய சோதனைகள் அதிர்ச்சியூட்டக் கூடியவையாகவே இருந்தன. மகாத்மாவின் மறுபக்கத்தை ஓரளவுக்கு வெளிக்கொண்டு வந்தகட்டுரையாக உங்களதைப் பார்க்கலாம்.

    "இந்திய முறையில் பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்று நான்கு அடுக்குகள் உள்ளன" என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்தியா முழுமைக்கும் எல்லா மக்களிடமும் பரவலாக இருந்த ஒரு விஷயமல்லவே அது? 'பிராமணர்களுடைய முறையில்' என்றிருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும் என்று கருதுகிறேன்.

    அன்புடன்
    ரூமி

    ReplyDelete
  8. நான் உங்களுடைய முந்தைய பதிவு ஒன்றில் குறிப்பிட்ட William Shirer ன் புத்தகத்தில் வில்லியம் காந்தியிடம் பெண்களுடன் நிர்வாணமாக இரவில் படுப்பதைப்பற்றி கேட்டதைப்பற்றி எழுதியிருக்கிறார். அதற்கு காந்தியின் பதில் மலுப்பலாகவே இருந்திருக்கிறது. வில்லியமும் காந்தியின் சீடராகவே இருந்ததினால் அதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை.

    RSS தனி கூட்டங்களில் காந்தியின் இந்த உடல் அரசியல் இன்றளவிலும் தீவிரமாக பேசப்படுவதை நானறிவேன்.

    மேலும் கூடுதல் தகவலாக, காந்தி பெரும்பாலும் இரண்டு பெண்களுடன் படுக்கும் பழக்கத்தையே கொண்டிருந்தார் (நீங்கள் ஒரு பெண் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்). அதற்கு அவர் சொன்ன காரணம், இரண்டு பெண்கள் இருந்தால் மனம் இன்னும் அதிக கட்டுப்பாட்டுடன் இயங்கும் என்பதேயாகும்!

    சத்திய சோதனை எழுதியபிறகு, கஸ்தூரிபாவுடன் ஏற்பட்ட சண்டைகளுக்கு இந்த பெண் உடல் அரசியலும் காரணம் என்றும் கூறக்கேட்டிருக்கிறேன். பெரும்பாலான சண்டைகள் காந்தி கஸ்தூரிபாவை அறைவதில் தான் முடியுமாம்.

    தனது ம்னைவி முதற்கொண்டு காந்தி தன் பயன்படுத்திய பெண்களின் நிலை பற்றி எங்கும் குறிப்பிடாதது ஒரு நெருடல் தான்.


    >>>>>தன் மனைவியுடன் உறவு கொண்டிருக்கும் நேரத்தில் தனது தந்தை உயிர் பிரிந்தது

    தன் தந்தை உயிர் ஊசலாடும் நிலை அறிந்தும் கர்பஸ்த்திரியான தன் மனைவியுடன் உறவு கொண்டார் என்பதே இன்னும் துல்லியமாக இருக்கும்!



    -டைனோ

    ReplyDelete
  9. //தனது பேத்தியான 18 வயது மனுவுடன் ஆடையின்றி சேர்ந்து படுத்துக்கொண்டு தனது ‘மனத் தூய்மையை' நிலை நாட்டப் பார்த்தார். இது, காந்தியின் 77வது வயதில் நடந்தது.//


    இதைப்பார்க்கையில், ஈ.வெ.ரா வின் இரண்டாம் திருமணம் மிகவும் கெளரவமானதும் தைரியமானதும் ஆகும்.

    ReplyDelete
  10. பத்ரி அவர்களுக்கு

    பெரும்பாலும் ராஜ்மோஹன் காந்தியின் அண்மைக்காலப் புத்தகத்தை வைத்து எழுதியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. அந்தப் புத்தகத்தை இப்போதுதான் படித்தேன்.

    காந்தியின் பிரம்மச்சரியம், பாலுறவுப்
    பரிசோதனைகள் பற்றிய ஆய்வுநோக்கில் கட்டுரைகள் தமிழில் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன.

    ராமாநுஜம் என்ற விமரிசகர் எழுதிய
    காந்தியின் உடலரசியல் - பிரம்மச்சர்யமும் காலனீய எதிர்ப்பும் என்ற புத்தகம் கடந்த ஆண்டே வந்துவிட்டது. அதன் சில பகுதிகள் கீற்று இணைய தளத்தில் இருக்கின்றன.
    http://www.keetru.com/ungal_noolagam/sep07/ramanujam.php

    இதுபற்றி ஜமாலன் கடந்த ஆண்டே
    தம் வலைப்பக்கத்தின் எழுதியிருக்கிறார்.
    http://jamalantamil.blogspot.com/2007/10/blog-post_28.html

    அது திண்ணை வலைத்தளத்திலும் வந்திருக்கிறது.
    http://www.thinnai.com/?module=displaystory&story_id=60711222&format=html

    இதை ஒட்டி ”புராதனத்தாயாக விரும்பிய நவீனத்தந்தை” என்ற கட்டுரையை தீராநதி ஏப்ரல் இதழில் எழுதியிருக்கிறார் ஜமாலன்.
    http://jamalantamil.blogspot.com/2008_04_01_archive.html

    தவிர, சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன்பே காந்தியின் பாலுறவுப் பரிசோதனைகள் என்ற ஆங்கில ஆய்வுக்கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்திருப்பதாக, தம்முடைய பதிவில் கூறுகிறார், எழுத்தாளர் நாகார்ஜுனன். அவர் பதிவில் கட்டுரை இருக்கிறது.

    http://nagarjunan.blogspot.com/2008/05/blog-post_08.html

    அதை அப்போது ஜூனியர் போஸ்ட் ஆசிரியராக இருந்த ஞாநி, அதில் மறுபிரசுரம் செய்தார் என்றும் நாகார்ஜுனன் கூறுகிறார்.

    ReplyDelete
  11. //அரசியல் இல்லாவிட்டால், அவரே ஒரு குருவாகி, இந்துமதத்தின் ஒரு புதுப் பிரிவைத் தோற்றுவித்திருக்கலாம். அல்லது முற்றிலும் புதிய மதம் ஒன்றை அவர் தோற்றுவித்திருக்கலாம்.//

    ஒரு அரசியல் தலைவராக இல்லாமல் இதை செய்திருந்தால் அடி வாங்கியிருப்பார் !!!

    (என் கருத்து தான்)

    --

    ஆனால் இவை அனைத்தையும் வெளிப்படையாக செய்தார் என்பதில் தான் காந்தியின் honesty இருக்கிறது

    ReplyDelete
  12. கல்யாண்: சுட்டிகளுக்கு நன்றி. நான் இணையத்தில் தேடியபோது கீழ்க்கண்ட சுட்டியைக் கண்டுபிடித்தேன்.

    http://www.class.uidaho.edu/ngier/gandtantric.htm

    காந்தி ஒரு தாந்திரிகரா? Nicholas F. Gier, Professor Emeritus, University of Idaho (ngier@uidaho.edu)

    ReplyDelete
  13. காந்தியை "மகாத்மா" என்று சொல்வது சர்ச்சைக்குரிய ஒன்று. பாலுறவு என்றில்லை, பல விஷயங்களில் அவர் சர்ச்சைக்குரிய ஒருவராகவே இருந்திருக்கிறார். காங்கிரஸ் மாநாட்டுக்கு முன்பாக பகத்சிங்கைத் தூக்கில் இடும்படி ஆங்கிலேய அரசைக் கேட்டுக்கொண்டது, தாழ்த்தப்பட்ட மக்களை ஹரிஜனங்கள் என்று அழைத்தது, வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்தது, காங்கிரஸ் இயக்கத் தலைவர் தேர்தலில் நேதாஜி போட்டியிட்டதை விரும்பாதது, குளிர்ப் பிரதேசமான லண்டனுக்கு அரை நிர்வாணமாகச் சென்றது. . . என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும் "இந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் இருக்கிறது" என்ற காந்தியின் மேற்கோள் எனக்கு மிகவும் பிடித்தமானது.

    ReplyDelete
  14. if Gandhi were a client for psychoanalysis, his behaviour would seem quite neurotic, even masochistic. all the tremors that got better on snuggling up with nubile nudes is preposterous! If Gandhi does it, it's a part of his "experiments with truth" but if a common man had done it, it would be chastised as sexual abuse and perversion! ஆலை இல்லாத ஊரில் .....யார் யாரோ மஹாத்மா ஆகலாமோ?!

    ReplyDelete
  15. //if a common man had done it, it would be chastised as sexual abuse and perversion! //

    ஒரு அரசியல் தலைவராக இல்லாமல் இதை செய்திருந்தால் அடி வாங்கியிருப்பார் !!! என்ற என் கருத்து சரி தான் போலிருக்கிறது :) :)

    ReplyDelete
  16. //ஆனால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதுபோல், காந்தி அடுத்தகட்டப் பரிசோதனைக்குச் சென்றார். தனது பேத்தியான 18 வயது மனுவுடன் ஆடையின்றி சேர்ந்து படுத்துக்கொண்டு தனது ‘மனத் தூய்மையை' நிலை நாட்டப் பார்த்தார். மனுவிடம் காந்தி தொடர்ச்சியாக பிரம்மச்சரியத்தைப் பற்றிப் பேசிவந்திருக்கிறார். கடிதத்தில் எழுதியபடி இருந்திருக்கிறார். இந்த சோதனை காந்தி நவகாளியில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் போராடும் கட்டத்தில், காந்தியின் 77வது வயதில், நடந்தது.//

    இதிலிருந்து காந்தி எப்பொழுதும் செக்ஸ் மீது அதீத விருப்பம் கொண்டவராக இருந்திருக்கிறார்.

    இவர்களை (ஆசிரமம் நடத்துபவர்கள்) போன்றவர்கள் தான் பெரும்பாலும் பாலுணர்ச்சியின் மீது அதிகமாக நாட்டம் கொண்டு தவறான பாதையில் பயனிக்கிறார்கள்.சாமனிய மக்கள் தங்கள் வேலைகள், குடும்பம், பிள்ளை குட்டிகளை மற்றும் தன் மனைவியின் மீது அக்கறை, செக்ஸ் ஆசையை வைத்திருப்பார்கள்.ஆனால் இவர்களைப் போன்றவர்கள்தான் பல பெண்களை அழைத்து ஆசிரமம் நடத்துகிறேன் என்கிற பெயரால் பல பெண்களால் கவரப்பட்டு பாலுணர்ச்சிப் பற்றி அதிகம் சிந்திப்பவர்களாகவும் அதனால் தவறாக நடக்க முயல்வதும் நடக்கிறது அதிலிருந்து காந்தியாலும் தப்பிக்க முடியவில்லை இது தான் உண்மை.

    பெண்கள் அதிகமாக இருந்தாலே அங்கு ஆண்களுக்கு கிளர்ச்சி என்பது இயல்பு அல்லது ஆண்கள் அதிகமாக் இருக்குமிடத்தில் பெண்களுக்கு கிளர்ச்சி என்பது இயல்பு இது இயற்கையான விஷயம்.

    நம்மால் லுங்கி அல்லது சார்ட்ஸ் போட்டு படுத்தால் தான் தூக்கம் வரும்.இருந்தாலும் மேலாடை இல்லாமல் தூங்கலாம் அதில் ஒன்றும் தெரியாது.இடுப்பிற்கு கீழே ஏதாவது அணியாமல் தூங்குவதென்பது யாரும் இல்லாத போது கூட சிரமமாக இருக்கும் ஆனால் இவரோ ஆடையின்றி எவ்வாறு தூங்கினார் என்று புரியவில்லை. அவருக்கு 77 வயதிலும் கூட செக்ஸ்ஸின் மீது நாட்டம் அல்லது ஏதோ ஒரு தனியாத ஆசை இருந்துள்ளது.

    இதனால் பல பெண்கள்களுக்கு இடையூராக இருந்திருக்கலாம் அல்லது மோசமாக நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது, இதெல்லாம் காந்தியோட ஆசிரமம் என்பதால் மறைக்கப்பட்டிருக்கலாம்.

    காந்தி என்பவர் அகிம்சை வாதத்தை பயன்படுத்தி சுதந்திரத்தை வாங்கிதந்தார் அதனால் அவர் மதிக்கப்படவேண்டியவரே ஒழிய மற்ற படி அவருடைய கொள்கைகள் நேருவால் கூட ஏற்றுகொள்ள முடியவில்லை அவருடைய சாகாக்கலாளும் சரியாக அங்கிகாரம் செய்யப்படவில்லை, இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் அவர் மதிக்கப்படுகிறார் என்றால் அகிம்சைவாதமும் அதில் பெற்ற வெற்றி இந்தியாவின் சுதந்தரமும் தான்.

    ReplyDelete
  17. பெண் ஆசை யாரை விட்டது

    ReplyDelete
  18. no body can be the perfect man because opinion differs.hunger and sex are two basic needs of the humanbeings, a man should know to suppress this feelings to be a part of a community,this is what the civilizations is all about.any maladaptations in the process would lead to revolts , wars and any uncivilized things the history has witnessed.the saints starting form the christ,buddha,nabi,to gandhi had lived a life ,to conquer that feelings as a role model to a more civilized man kind, gandhi's inner life is as transparent as his outer life ,he neither concealed any thing nor tried to do so,he was always in the path to win that two feelings which can make the man , a social animal in to a real wild animal. of course opinion will certainly differ, even the mighty christ discovered his girl friend in recent times.........

    ReplyDelete
  19. ////காந்தி உண்ணாவிரதத்தை ஓர் ஆயுதமாக ஆக்கியது இதற்குப் பிறகுதான். உண்ணாவிரதத்தை தன் உடலைத் தூய்மை செய்யும் ஒரு கருவியாகவே காந்தி பார்த்தார். ஆனால் மனத்தைத் தூய்மை செய்யும் கருவி என்னவாக இருக்கும் என்று அவர் தேடியுள்ளார்.////
    நிச்சியமாக நல்ல பதிவு நண்பரே

    ReplyDelete
  20. Ganthi might be a good person..but he was not a good leader of our country..
    because of him we are suffering of religious issues.
    IF NO GANTHI NO PROBLEMS IN INDIA..
    IF NO GANTHI HINDUS HAPPY..
    IF NO GANTHI NO PAKISTAN..

    IF NO GANTHI PEACEFUL INDIA..

    ReplyDelete
  21. காந்தி சிறு வயதிலேயே திருமணம் புரிந்து இப்போதைய இளைஞர்கள் 30,35-ல் அனுபவித்தை அனுபவித்தவர்.
    இந்தியில் இலவசமாகவும் தமிழில் ரூ.500/-கையெழுத்து போட கேட்டவர் தான் காந்தி.

    ReplyDelete