Friday, September 10, 2010

தேவை: உலகில் புதிய அரசியல் சிந்தனை

(5 ஆகஸ்ட் 2010 அன்று எழுதியது)

இந்திய அரசியல்வாதிகளை மட்டுமே பார்த்து வளர்ந்துள்ளோம் நாம். சுதந்தரம் பெற்ற காலத்தில் அப்பழுக்கில்லாதவர்களாக, சுயநலம் அற்றவர்களாக இருந்த அரசியல்வாதிகள் நாளடைவில் மாறத் தொடங்கினர். ஊழல், லஞ்சம், கயமை, சொந்தக்காரர்களும் தானும் அநியாய வழியில் சொத்து சேர்ப்பதை ஊக்குவிப்பது, கொள்கைப் பிடிப்பில்லாத அரசியல், நாடாளுமன்றத்தையும் சட்டமன்றங்களையும் சாக்கடை ஆக்குவது, கட்சித் தாவல், கொலைகளிலும்கூட ஈடுபடுவது என்று மானத்தையே காற்றில் பறக்கவிட்டவர்களைத்தான் நாம் பெரும்பாலும் பார்க்கிறோம்.

இந்திய அரசியல்வாதிகளுக்கு மாறாக வளர்ந்த ஒரு நாட்டின் அரசியல்வாதிகளைப் பார்ப்போம். அதற்குமுன் அமெரிக்கா என்ற நாட்டையே பார்ப்போம். அமெரிக்காதான் இந்திய மத்தியதர வர்க்கத்தின் ஆதர்ச நாடாக இருந்தது. மேல்படிப்பு படிக்க அமெரிக்கா செல்லவேண்டும்; கம்ப்யூட்டர் வேலையா? அமெரிக்கா செல்லவேண்டும்; அங்கு சென்று கிரீன் கார்ட் வாங்கி, இறுதியில் அமெரிக்கப் பிரஜையாகி, பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதி கோயிலுக்குச் சென்று வழிபடவேண்டும். இதுதான் இந்திய இளைஞர்களின் கனவாக இருந்தது; இன்றும்கூட இருக்கிறது. ஆனால் இன்றோ அமெரிக்க இளைஞர்கள், தங்கள் பெற்றோரின் வாழ்க்கையைவிட தங்களது வாழ்க்கை மோசமாக இருக்கப்போகிறது என்ற எண்ணத்துக்கு வந்துள்ளனர்.

இப்போது அமெரிக்க அரசியல்வாதிக்கு வருவோம். அமெரிக்க அரசியல்வாதி இந்திய அரசியல்வாதியைப் போல ஊழல் பேர்வழி கிடையாது. அங்கும் சில கெட்டவர்கள் இருக்கலாம். ஆனால் இங்குபோல அங்கு மலைமுழுங்கி மகாதேவன்கள் கிடையாது. தம் கண்முன்னே தம் நாட்டு இளைஞர்கள் கனவுகளை இழப்பதைப் பார்க்கும் அந்த ஊர் அரசியல்வாதி என்ன செய்வார்?

அமெரிக்க அரசியல்வாதிகள் அனைவருமே வளம் வாய்ந்த பின்னணியில் பிறந்தவர்கள். தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல; அவர்களது சமூகமே வளமான சமூகமாக இருந்திருக்கும். அவர்கள் தனிப்பட்ட முறையில் கஷ்டப்பட்டிருந்தாலும் வாய்ப்புகளுக்குக் குறை இருந்திருக்காது. அவர்கள் பல்கலைக்கழகத்தை அடைந்த கணத்துக்கு மறு கணமே அவர்களது வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும். படிப்பு, படிப்புக்கான கட்டணத்தை சம்பாதிக்கக்கூடிய பகுதிநேர வேலை, படித்தபின் மேற்கொண்டு சட்டம் போன்ற துறைகளில் மேல்படிப்புக்கான வாய்ப்பு, அல்லது அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர்கீழ் பணிபுரிய வாய்ப்பு, பின் அங்கிருந்து வேலை, ஏதேனும் தொகுதியில் நிற்க வாய்ப்பு என்று கிடைத்தபடியே இருந்திருக்கும்.

வாய்ப்புகள் எக்கச்சக்கமாகக் கிடைத்த சில தலைமுறைகளைச் சேர்ந்த தலைவர்களால், வாய்ப்புகள் இல்லாத ஒரு சமூகத்துக்கு எப்படி வழிகாட்ட முடியும்?
இங்குதான் அவர்கள் மகாத்மா காந்தியை உற்று நோக்கவேண்டும். காந்தி வாழ்நாள் முழுவதும் வாய்ப்புகள் இல்லாத மக்களுக்குத் தலைவராக இருந்தார். தென் ஆப்பிரிக்காவில் அவர், கிட்டத்தட்ட அடிமைகளாக இருந்த இந்திய சமூகத்தின் தலைவராக இருந்தார். படிப்பறிவு இல்லாத ஒரு கூட்டத்தின் தலைவராக இருந்தார். மனத்தில் துளிக்கூட நம்பிக்கை இல்லாத கூட்டத்தின் தலைவராக இருந்தார். இந்தியா வந்தும் அதே நிலைதான். சுதந்தரமா, அதெப்படி சாத்தியம் என்று மக்கள் நினைக்கும் கட்டத்தில், படிப்பறிவற்ற, கூழ் மட்டுமே குடிக்கும் வறுமையில் உழன்ற, இடுப்பில் ஒரு துண்டுக்கு மேல் உடுத்த வழியற்ற ஒரு கூட்டத்துக்கு அவர் தலைமை வகித்தார். சாதித்தும் காட்டினார்.

அவர் எப்படிச் சாதித்தார் என்பதற்கான ப்ளூ பிரிண்ட், அவரது புத்தகமான ‘தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம்’ என்பதில் உள்ளது. முதல் தேவை, ஆதரவற்றவர்களுடன் சேர்ந்து அவர்களது வாழ்வை வாழ்வது. மாடமாளிகையில் இருந்தபடி சாதாரணர்களுக்கு வாழ்க்கையைப் பெற்றுத் தரமுடியாது. அடுத்த தேவை, எதிர்காலம் பற்றிய தெளிவான ஒரு சிந்தனை. இன்றைக்கு அமெரிக்கர்களின், ஐரோப்பியர்களின் முக்கியத் தேவை, ஆடம்பரங்களையும் கன்ஸ்யூமரிசத்தையும் ஒழித்து கடின உழைப்புடன் சேமிப்பை அதிகரிப்பது. தெளிவான பொருளாதாரச் சிந்தனையோடு கொஞ்சம் ஆன்மிகத் தெளிவும் சுயம் மீதான நம்பிக்கையும் அவர்களுக்குத் தேவை.

இதையெல்லாம் சொல்லும்போது, இந்தியர்களாகிய நாம், அறிவுச் செருக்குடன் உலகுக்கு அறிவுரை சொல்வதாக நினைக்கக்கூடாது. நம் நாட்டின் பிரச்னைகள் முற்றிலும் வேறானவை. நம் நாட்டில் எண்ணற்ற ஏழைகள் அடுத்த வேளை சோறுக்கு வழி இல்லாமல் இருக்கின்றனர். படிப்பறிவின்மை, இன்றும் நம் நாட்டில் தலைவிரித்தாடுகிறது. ஊழலும் லஞ்சமும் எங்கும் பரவியுள்ளன. விழுமியங்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல் பணத்தின்பின் அலைவதை நம் மக்கள் குறியாக வைத்துள்ளனர். இவற்றைப் போக்க நமக்கு வேறு மாதிரியான தலைவர்கள் தேவை. அதை நாம் உணரும் அதே நேரம், அமெரிக்காவின் தேவை என்ன என்பதையும் தெரிந்துகொள்ள முயற்சி செய்வதே நம் நோக்கம்.

நாளைய உலகில் நாமும் நன்றாக இருக்கவேண்டும். அமெரிக்காவும் நன்றாக இருக்கவேண்டும்.

2 comments:

  1. //தேவை, எதிர்காலம் பற்றிய தெளிவான ஒரு சிந்தனை. இன்றைக்கு அமெரிக்கர்களின், ஐரோப்பியர்களின் முக்கியத் தேவை,ஆடம்பரங்களையும் கன்ஸ்யூமரிசத்தையும் ஒழித்து// V. good analysis. Our Citizen Badri போயி இந்திய René Descartes வந்தாச்சி

    ReplyDelete
  2. //இந்திய அரசியல்வாதிகளை மட்டுமே பார்த்து வளர்ந்துள்ளோம் நாம். சுதந்தரம் பெற்ற காலத்தில் அப்பழுக்கில்லாதவர்களாக, சுயநலம் அற்றவர்களாக இருந்த அரசியல்வாதிகள் நாளடைவில் மாறத் தொடங்கினர்.//

    அப்படியா

    1950களிலேயே யாரோ ரானுவ அமைச்சர் ராஜினாமா செய்தாராமே... ஏன்

    அப்புறம் நேருவிற்கும் பெரோஸ் காந்திக்கு எல்.ஐ.சி தொடர்பாக என்ன தகராறு

    ReplyDelete