Wednesday, September 22, 2010

அமெரிக்க நிதி நிறுவனங்களின் வீழ்ச்சி: துல்லியமான வரலாறு


(புத்தகம் பேசுது ஜூலை 2010 இதழில் வெளியானது.)

Too Big To Fail: Inside the Battle to Save Wall Street, Andrew Ross Sorkin, Allen Lane, Penguin, 2009

2008-ல் அமெரிக்காவில் வரிசையாக பல நிதி நிறுவனங்கள் சரிந்து விழுந்தன. எண்ணற்ற சிறு சிறு வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கு இடையே, பல பெரிய நிறுவனங்களும் சரிந்து விழுந்தன. பியர் ஸ்டெர்ன்ஸ் என்ற பங்குத் தரகு விற்பனை நிறுவனத்தை அரசின் வற்புறுத்தல் காரணமாக ஜேபி மார்கன் வங்கி விலைக்கு வாங்கியது. லெஹ்மன் பிரதர்ஸ் என்ற பங்குத் தரகு நிறுவனம் திவால் ஆனது. மெரில் லிஞ்ச் நிறுவனத்தை பேங்க் ஆஃப் அமெரிக்கா என்ற வங்கி வாங்கியது.

வாக்கோவியா என்ற வங்கியை வெல்ஸ் ஃபார்கோ என்ற வங்கி வாங்கிக்கொண்டது. மார்கன் ஸ்டேன்லி, கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற மிகப்பெரிய முதலீட்டு வங்கிகள், பொதுமக்களிடமிருந்து பணம் பெறக்கூடிய வங்கிகளாக மாறின. ஏ.ஐ.ஜி என்ற அமெரிக்கக் காப்பீட்டு நிறுவனம் அப்போது தடுமாற ஆரம்பித்தது, இன்றுவரை சரியாகவில்லை. வீட்டுக் கடன் தரும் ஃபேனி மே, ஃபிரெட்டி மேக் ஆகிய இரு நிறுவனங்களிலும் அமெரிக்க அரசு எக்கச்சக்கமான முதலீட்டை உள்ளே கொண்டுவர வேண்டியிருந்தது.

சிடிபேங் முதற்கொண்டு அனைத்து நிதி நிறுவனங்களும் அரசிடமிருந்து பல பில்லியன் டாலர்களை உதவிக்காக வாங்கவேண்டியிருந்தது. ஒரு சிலர் அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுத்துவிட்டாலும், அமெரிக்க அரசு செலவிட்ட அனைத்துப் பணமும் அதற்குத் திரும்பக் கிடைக்குமா என்பது சந்தேகமே என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்த நிறுவனம் அந்த நிறுவனத்தை வாங்கியது என்று மேலே வரிசையாகச் சொல்லியிருந்தேன். அதில் என்ன கஷ்டம் என்று நீங்கள் கேட்கலாம். இது எதுவுமே விரும்பி வாங்கப்பட்டவை அல்ல. உங்கள் பக்கத்து வீடு கடனில் தத்தளிக்கிறது. அவர்கள் நடுத்தெருவில் நிற்கவேண்டியதுதான் என்ற நிலை. அப்போது அந்த வீட்டில் வசிப்பவர்கள் சோறு இன்றித் தள்ளாடுவார்கள் அல்லவா? அதை விரும்பாத அரசு, உங்களை வற்புறுத்தி பக்கத்து வீட்டின் சொத்துகளையும் கடன்களையும் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது. நீங்கள் மறுக்கமுடியாது. வேண்டுமானால், பக்கத்து வீட்டின் கடன்களை ஏற்பதற்காக அரசு உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும்.

இதுதான் நடந்தது. இதனால் எல்லாம் அமெரிக்காவின் நிதிப் பிரச்னை முற்றிலுமாக ஓய்ந்துவிடவில்லை. 2008-ல் நிகழ்ந்த பொருளாதார பூகம்பத்தின் அதிர்வுகள் இன்றும் தொடர்கின்றன. இந்தப் பிரச்னை 2008-க்கு வெகு நாள்கள் முன்னதாகவே, 9/11 எனப்படும் அமெரிக்க ரெட்டை கோபுரத்தின் மீதான தீவிரவாதத் தாக்குதலை ஒட்டி ஆரம்பித்தது என்று சொல்லலாம்.

பிரச்னையின் ஆரம்பம் அமெரிக்க வாழ்க்கைமுறையிலும் அவர்களது அரசியலிலும் இருக்கிறது. கடன் வாங்கியாவது பணம் செலவழித்து, விரும்பிய பொருளை வாங்கிக் குவிக்கும் ஒரு ‘அமெரிக்கக் கனவு’ அவர்களுடையது. தன் சக்திக்கு மேற்பட்டு பொருளை நுகரவேண்டும் என்று மக்கள் ஒருபக்கம் விரும்ப, பெரும் நிறுவனங்களோ அதற்கு விளம்பரம், சிறப்புச் சலுகை என்று தூபம் போட்டன. மற்றொரு பக்கம் அரசாங்கமோ, பொருளாதார வளர்ச்சி என்பதே பொதுமக்கள் தம் இஷ்டத்துக்குப் பொருள்களை வாங்கிக் குவிப்பதால் ஏற்படுவது என்ற எண்ணத்தில், சேமிப்பை ஊக்குவிக்காமல், செலவை ஊக்குவித்தது.

9/11 தாக்குதலை அடுத்து அமெரிக்கப் பொருளாதாரம் தடுமாறும் என்று பயந்த அமெரிக்க மத்திய வங்கி (ஃபெட்) தலைவர் ஆலன் கிரீன்ஸ்பான், வட்டி விகிதத்தைக் குறைத்துக்கொண்டே வந்தார். வட்டி குறைந்தால், நீங்கள் வங்கியில் வாங்கும் கடனுக்கு வட்டி குறையும். அதே நேரம் உங்கள் வங்கி வைப்புக்கும் வட்டி குறையும். எனவே பணத்தை வங்கியில் வைத்துப் பூட்டுவதற்கு பதில், செலவு செய்யலாம் என்று தோன்றும். இல்லாத பணத்தையும் குறைந்த வட்டிக் கடனுக்கு வாங்கிச் செலவு செய்யத் தோன்றும்.

நிறுவனங்கள், தனியார்கள் என அனைவரும் அதைத்தான் செய்தனர். அவர்களுடன் சேர்ந்து அமெரிக்க அரசும் அதே காரியத்தைச் செய்தது. அமெரிக்கா என்ற நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை மிக அதிகம். அதாவது அவர்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்கும் பொருள்கள் அதிகம்; வெளி நாடுகளுக்கு விற்கும் பொருள்களோ குறைவு. இந்த வித்தியாசத்தை ஈடுகட்ட அமெரிக்க அரசு கடன் பத்திரங்களை (டிரெஷரி பில்) வெளியிடும். இந்தக் கடன் பத்திரங்களை இந்தியா முதற்கொண்டு, சீனா, ரஷ்யா, பிரேசில், அரபு நாடுகள், ஜப்பான் ஆகியவை வாங்கிக் குவிக்கும். ஆக, அமெரிக்க அரசு, உலக நாடுகளிடமிருந்து கடன் வாங்குகிறது; அமெரிக்க மக்கள் அமெரிக்க வங்கிகளிடமிருந்து கடன் வாங்குகிறார்கள். அமெரிக்க நிறுவனங்கள் உலகம் எங்கும் கடன் வாங்குகிறார்கள்.

ஆனால் அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரங்களின் வட்டியை ஆலன் கிரீன்ஸ்பான் குறைத்துக்கொண்டே வந்தார். இதனால் இந்தப் பத்திரங்களை வாங்கிய உலக நாடுகள், உலக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வருமானம் அதிகம் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் அமெரிக்க நிதி நிறுவனங்கள் CDO என்ற புதிய நிதிப் பத்திரத்தை உருவாக்க ஆரம்பித்தன. அமெரிக்காவில் வீட்டுக் கடன்கள் என்பது பெரிய பிசினஸ். அனைவரும் சொந்தமாக வீடு வைத்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்க அரசே வீட்டுக் கடன்களைக் கடுமையாக ஊக்குவித்தது. அப்படி உருவாக்கப்பட்ட வீட்டுக்கடன் நிறுவனங்கள்தான் ஃபேனி மே, பிரெட்டி மேக் ஆகியவை.

வீட்டுக் கடன்கள் பலவகை. கட்டாயமாகக் கையில் பணம் கிடைத்துவிடும் என்ற வகைக் கடன்கள் சில. நல்ல சம்பளம் பெறுபவர்களுக்குக் கொடுக்கப்படும் கடன்கள் இத்தகையவை. ஆனால் இங்கு ஆரம்பித்து நாளடைவில் கடன் பெறத் தகுதியற்ற பலருக்கும் வீட்டுக் கடன்கள் தரப்பட்டன. காரணம் CDO என்ற கருவிதான். அமெரிக்க அரசுக் கடன் பத்திரங்கள் அதிக வட்டி தராத நிலையில், பல்வேறு வீட்டுக் கடன்களைச் சேர்த்து ஒரு குவியலாக்கி, அவற்றிலிருந்து பல துண்டுகளை எடுத்து, அந்தத் துண்டுகளை ‘கடன் பத்திரங்கள்’ என்ற பெயரில் விற்க ஆரம்பித்தனர். நீங்கள் இந்தப் பத்திரம் ஒன்றை வாங்கினீர்கள் என்றால், மாதாமாதம், ஒரு ஆயிரம் பேர் கட்டும் வீட்டுக் கடன் EMI-யிலிருந்து ஒரு பகுதி உங்களுக்கு வந்துவிடும். இது மிகவும் பாதுகாப்பான பத்திரம் என்று கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்கள் சான்றிதழ் வழங்கின. பாதுகாப்பும் அதிகம், வட்டியும் அதிகம் என்பதால் அமெரிக்க நிறுவனங்கள் பலவும் உலக நாடுகள் முதற்கொண்டு பல அமைப்புகளும் இந்தப் பத்திரங்களை வாங்க ஆரம்பித்தன.

ஆனால் விரைவில் இந்தப் பத்திரங்கள் தீர்ந்துவிடும் நிலை ஏற்பட்டது. எல்லா வீட்டுக் கடன்களையும் இப்படிப் பத்திரமாக்கி விற்றுவிட்டால் பிறகு என்ன ஆகும்?

மேலும் மேலும் வீட்டுக் கடன்களை உருவாக்கினால்தான் இந்தப் பத்திரங்களை மேலும் உற்பத்தி செய்யலாம்; அவற்றை விற்று லாபம் சம்பாதிக்கலாம். உடனே பல புதிய நிறுவனங்கள் முளைத்தன. அவற்றைக் கட்டுப்படுத்த யாரும் இல்லை. தெருவில் போவோர், வருவோருக்கெல்லாம் வீடு வேண்டுமா, கடன் வேண்டுமா என்று கேட்க ஆரம்பித்தார்கள். ஒரு வீடு வைத்திருப்போரை நான்கு வீடுகள் வாங்கச் சொன்னார்கள். இந்தியாவில் ஒரு வீடு வாங்கக் கடன் கேட்டால், வீட்டின் விலையில் 75%-தான் உங்களுக்குக் கடனாகத் தருவார்கள். ஆனால் அமெரிக்காவில் வீட்டின் விலையைப் போல 110% கடன் தருவதாகச் சொன்னார்கள்! ஏனெனில் வீட்டின் விலை வாங்கிய ஒரு வருடத்தில் மேலே ஏறிவிடுகிறதாம்! கடன் பெறுபவர் வேலையில் இருக்கிறாரா, சம்பளம் வாங்குகிறாரா என்றெல்லாம் கவலைப்படாமல் கடன் கொடுக்கப்பட்டது.

இப்படிக் கடன் வாங்கியவர்கள் ஒரு கட்டத்தில் வாங்கிய பணத்தை எல்லாம் செலவழித்துவிட்டு, வீட்டுக் கடனுக்கான மாதாந்திரத் தொகையைக் கட்ட முடியாமல் வீட்டை திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் ரியல் எஸ்டேட் மார்க்கெட் விழுந்தது. ஏகப்பட்ட வீடுகள்; வாங்கத்தான் ஒருவரும் இல்லை. இதனால் CDO பத்திரங்களை வாங்கியவர்களுக்குப் பணம் வருவது நின்றுபோனது. இதனால் அமெரிக்க நிதிச் சந்தை ஆட்டம் கண்டது. அத்துடன் உலக நிதிச் சந்தையுமே ஆட்டம் கண்டது.

இதுதான் சீட்டுக் கட்டு மாளிகை சரிய ஆரம்பித்த நேரம். ஒவ்வொரு நிறுவனமும் தங்களது இருப்புக் கணக்கைப் பார்க்க ஆரம்பித்தபோது இந்த வீட்டுக்கடன் பத்திரங்களால் பெரும் ஓட்டை இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். பெரும் ஓட்டை என்றால் பல பில்லியன் டாலர். இந்த ஓட்டையை எப்படி அடைப்பது?

இந்தக் குழப்பம் அவர்களை ஆட்கொண்ட செப்டெம்பர் 2008 முதற்கொண்டு தினம் தினம் என்ன நடந்தது என்பதை ஆண்டிரூ ராஸ் சார்கின் அற்புதமாக விளக்குகிறார். கோல்ட்மேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, மெரில் லிஞ்ச், லெஹ்மன் பிரதர்ஸ், பியர் ஸ்டெர்ன்ஸ், பேங்க் ஆஃப் அமெரிக்க, சிடிபேங்க், வெல்ஸ் ஃபார்கோ, வாக்கோவியா, ஏ.ஐ.ஜி, ஃபேனி மே, ஃபிரெட்டி மேக் போன்ற நிறுவனங்கள் ஒரு பக்கம். இந்தப் பிரச்னையில் சிக்காத வாரன் பஃபெட் போன்ற முதலீட்டாளர், சீனா, ஜப்பான், கொரியா நாடுகளின் வங்கிகள் அல்லது அரசின் முதலீட்டு அமைப்புகள் ஆகியோர் ஒரு பக்கம். அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் நிதி அமைச்சர் ஹென்றி பால்சன், அவரது ஆலோசகர்கள், ஃபெட் தலைவர் பால் பெர்னாங்க், மத்திய வங்கியின் முக்கிய ஆளுநர்கள், நாடாளுமன்ற செனட்டர்கள், ரெப்ரசெண்டேடிவ்கள் ஒரு பக்கம். இந்த நிதிச் சிக்கலால் பயந்து நடுங்கும் பொதுமக்கள் மற்றொரு பக்கம்.

நிறுவனம் என்றால் அந்த நிறுவனத்தை நடத்தும் தலைமை நிர்வாகிகள், ஒவ்வொரு நிறுவனத்தின் இயக்குனர் குழுமம், அவர்களுக்கு இடையே நடக்கும் போராட்டங்கள், ஒவ்வொரு நிறுவனத்தின் உள்ளே வேலை செய்யும் முக்கியமானவர்களின் எண்ண ஓட்டங்கள், அவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றை பல நேர்முகங்கள் மூலம் சேகரித்து, நடந்தது நடந்தபடியே ஒப்பிக்கிறார் சார்கின். பாரதப் போர் நடக்கும்போது சஞ்சயன் திருதராஷ்டிரனுக்கு அளித்த நேர்முகம் போல உள்ளது இந்தப் புத்தகம்.

புத்தகம் எந்தவிதக் கருத்தையும் முன்வைப்பதில்லை. இது சரியா, தவறா, யார் நல்லவர், கெட்டவர் என்று எதையும் சொல்வதில்லை. ஆனால் சமீப காலத்தில் நடைபெற்றுள்ள மிக முக்கியமான பொருளாதார நிகழ்வு ஒன்றைத் துல்லியமான வரலாறாக மாற்றிக் கொடுத்துள்ளது இந்தப் புத்தகம். இதைப் படிப்போர் நிகழ்வுகளை சரியான முறையில் அலசி, யார் செய்தது சரி, யார் செய்தது தவறு என்று முடிவெடுத்துக்கொள்ளலாம்.

ஒரு செய்திப் பத்திரிகையாளர் தினசரிச் செய்தியில் எதைத்தரவேண்டும் என்பதற்கு நியூ யார்க் டைம்ஸ் நிருபர் சார்கினின் இந்தப் புத்தகம் ஒரு உதாரணம். ‘Too Big to Fail’ - அதாவது இந்த நிதி நிறுவனங்கள் மிகப் பெரியதாகிவிட்டன; எனவே வீழ்ச்சி அடைய வாய்ப்பே இல்லை என்ற இறுமாப்புடன் வலம் வந்துகொண்டிருந்தவர்களுக்கு மரண அடி கிடைத்தது 2008-ல். எந்தப் பெரிய அளவை அடைந்தாலும் வீழ்ச்சியைத் தடுக்க முடியாது. அதுவும் எக்கச்சக்கமான லாபத்தைத் தேடி ரிஸ்க்கியான வியாபாரங்களிலும் நிதிப் பேரங்களிலும் ஈடுபடும் நிறுவனங்களால்... என்ற உண்மையை முகத்தில் அடித்தாற்போல நமக்குப் புரியவைக்கிறது இந்தப் புத்தகம்.

12 comments:

  1. Thanks for the succinct summary of the book.

    A small word on the 'too big to fail'. What you have referred to in your post is the moral hazard. Actually it refers to those entities whose failure will be disastrous to an economy. Anyhow both (moral hazard and too big to fail)refer to the same coin, but different sides.

    Thanks again for the wonderful summary

    Regards

    R Gopi

    ReplyDelete
  2. Awaiting eagerly books of this kind in tamil.
    Hope you do the needful.
    Thanks and regards.
    Selvam.

    ReplyDelete
  3. //மற்றொரு பக்கம் அரசாங்கமோ, பொருளாதார வளர்ச்சி என்பதே பொதுமக்கள் தம் இஷ்டத்துக்குப் பொருள்களை வாங்கிக் குவிப்பதால் ஏற்படுவது என்ற எண்ணத்தில், சேமிப்பை ஊக்குவிக்காமல், செலவை ஊக்குவித்தது.//

    இந்தியாவிலும் 1990க்ளுக்கு பிறகு இந்த போக்கு ஆரம்பித்தது

    நல்ல காலம் முற்றும் முன்னர் அடுத்த வீட்டில் சூடு பட்டதை பார்த்து விட்டோம்

    ReplyDelete
  4. அருமையான கட்டுரை.இது போல மேலும் எதிர் பார்க்கிறோம்.

    ReplyDelete
  5. ராஸ் சார்கினின் நியுயார்க் டைம்ஸ் டீல் புக் என்கிற தினசரி நியுஸ்லெட்டர் மகா பிரசித்தம். அதன் வாசகன் என்கிற முறையிலும், ராஸ் சார்க்கினை தொடர்ச்சியாக வாசிப்பவன் என்கிற முறையிலும் இந்த புத்தகத்தில் முக்காலே முழுவாசி ராஸ் சார்க்கினின் தினசரி வேலை. நியுயார்க்கின் பெரிய உணவுவிடுதிகளில், பார்களில் ராஸ்கினை பெரு நிறுவனங்கள், இன்வெஸ்ட்மெண்ட் பேங்கர்கள் போன்றவர்களோடு பார்க்க முடியும். அங்கே இருந்து தான் இந்த புத்தகம் வந்திருக்கக்கூடும்.

    அடுத்தவாரம் அமெரிக்காவில் "WallStreet:Money Never Sleeps" ரிலீஸாக போகிறது. இது 1984ல் வந்த பிரசத்தி பெற்ற "Wall Street" படத்தின் இரண்டாம் பாகம். மைக்கேல் டக்ளஸ் கார்டன் கெகோவாக வந்து சொல்லும் "Greed is Good" என்பது ஒரு பிரபலமான வசனம். விஷயம் என்னவெனில், ஆலிவர் ஸ்டோன் இந்த படத்தின் இயக்குநர் ராஸ் சார்க்கினோடு அமர்ந்து விஷயங்களை கேட்டுக் கொண்டு தான் இந்த படத்தினை இயக்கி இருக்கிறார்.

    இத்தனைக்கும் ராஸ் சர்க்கின் 30களில் இருக்ககூடிய கொஞ்சம் ஸ்மார்ட்டான ஒரு பையன் ;)

    ReplyDelete
  6. பிற்சேர்க்கை: இந்த புத்தகத்தினை விட அமெரிக்க நிதி சீர்குலைவு வீழ்ச்சியினை தெள்ளத் தெளிவாக சொல்லும் இன்னொரு புத்தகம் Bailout Nation: How Greed and Easy Money Corrupted Wall Street and shook the world economy - எழுதியவர்: Barry Riholtz.

    ReplyDelete
  7. அமெரிக்காவில் 2008 ல் ஏற்பட்ட பொருளாதார நொடிவுக்கு மூல காரணம் பற்றி மிகத் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.கடன் சுமை இல்லாது நிம்மதியான வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதே சில தலைமுறைகளுக்கு முன்னர் ஒரு லட்சியம் இருந்தது. இப்போதோ கை நிறைய சம்பாதிக்கும் புதிய தலைமுறையினர் வீட்டுக் கடன், கார் கடன் கிரெடிட் கார்ட் கடன் என பல கடன்களின் சுமையால் அழுத்தப்பட்டவர்களாக வாழ்க்கை நடத்துகின்றனர்.
    அமெரிக்க வங்கிகளுடன் ஒப்பிடுகையில் இந்திய வங்கிகள் நேர்மாறாக அளவுக்கு மீறி உஷார்போக்கைக் காட்டுபவை. சொத்து ஜாமீன் காட்டினாலும் போதாது. ஷூரிடி கையெழுத்தும் வேண்டும் என்றும் கேட்கிற நிலை உள்ளது. திறமையாகத் தொழில் நடத்துவோரின் திறமையை நம்பி அவர்களுக்கு கடன் அளிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டாலும் அது முழு அளவில் கையாளப்படுவது கிடையாது.எது எப்படியோ எல்லா விஷயங்களிலும் கண்மூடித்தனமாக அமெரிக்காவை முன்னுதாரணமாகக் கொள்வது தவறு என்பது தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது.
    ராமதுரை

    ReplyDelete
  8. a nice review. Will definetly buy this book. I was reading the book by Mr.Mohammed Yunus on Micro finance ( So late but still ). Where he has written his views on World bank.

    Even in India the general mentality of the middle class is changing and most of us have loan on our flat. This is completely different to my mother-in-laws's attitude of not having loan. Her mantra is "with out having loan even if you eat less, it is better".
    What kind of social impact we will have on our spending only time will tell....
    Ganesh

    ReplyDelete
  9. அமித் அகர்வால் சுட்டிக் கொடுத்த இந்த சலனப்படம் இந்த சீட்டுக்கட்டு மாளிகைச் சரிவை தெளிவாய் விளக்குகிறது!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete
  10. கூகிள் அட்சென்ஸ் மூலம் சம்பாதிப்பது எப்படி என நான் தமிழில் எழுதுகிறேன்.. விருப்பம் இருந்தால் பாருங்கள்
    http://adsensetricksdon.blogspot.com/

    ReplyDelete
  11. // இந்தியாவிலும் 1990க்ளுக்கு பிறகு இந்த போக்கு ஆரம்பித்தது

    நல்ல காலம் முற்றும் முன்னர் அடுத்த வீட்டில் சூடு பட்டதை பார்த்து விட்டோம்

    //

    சென்ற காங்கிரஸ் அரசில் நிதி அமைச்சர் பொறுப்பு வகித்த ப.சி முழு நாணய மாற்று விகிதம் கொண்டு வரப் பார்த்தார்.கம்யூனிஸ்ட் அதை எதிர்த்தாங்க.கம்யுனிஸ்ட் ஆதரவில் அரசாங்கம் இருந்ததால் ப.சியால் ஒன்னும் செய்ய முடியலை. இல்லாவிட்டால் அதை அறிமுகம் செய்திருப்பார்.நாமும் 2008 சுழலில் மாட்டி இருப்பொம். எனக்குத் தெரிந்து கம்யூனிஸ்ட்டுகளால் இந்த தேசத்திற்கு நிகழ்ந்த ஒரே நன்மை அதுதான்.

    ReplyDelete
  12. What has convertibility on capital account got to do with the sub prime crisis? Convertibility is important. it will strengthen the rupee. it is unfortunate that major debates on public issues suffer from absence of clear analysis and are clouded by philosophical overtones.

    Additionally Communists have done a great service to keep india's capitalism under check. They are useful as a brake (in opposition) and useless as an accelerator (in rule).

    The concept of 'too big to fail' is not about banks being arrogant about being big. The concept is about a bank being so big that if it fails it will take down the economy with it and therefore because of its size, the tax payer is better off to protect it from failing than let it fail. This is a specious argument that Bush bought to bail out the big investment banks. Unfortunately it creates a moral hazard whereby these banks can take adventurous bets; enjoy superior rewards for the higher risk and yet pass on losses to tax payer. In other words, profits are private and losses are public.

    ReplyDelete