[நான்கு மாத இடைவெளிக்குப்பின் மீண்டும் அம்ருதா மாத இதழில் எழுத ஆரம்பித்துள்ளேன். பிப்ரவரி 2011 இதழில் வெளியான கட்டுரை இது.]
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம், அறிவியல் துறைக்கு மிகுந்த ஊக்கம் தருவதாக இருந்தது. அந்த ஒரு நூற்றாண்டில்தான் நாம் மிகப்பெரும் அறிவியல் பாய்ச்சலைச் செய்தோம். அதன் ஆரம்பக் கட்டங்களில் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்தவர்கள் ஜெர்மனி நாட்டினர். அறிவியலில் மட்டுமல்ல, கணிதம், தத்துவம், இசை, ஓரளவுக்கு இலக்கியம் என அனைத்திலும் அற்புதமான பங்களிப்பைச் செய்தனர். இப்படிப்பட்ட சாதனையுடன்தான் இரு மோசமான உலகப் போர்களை ஆரம்பித்த, எண்ணற்ற யூதர்களைக் கொன்ற அவலங்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
எப்படி ஒரு நாடு மிகச் சிறந்த அறிவியல் அல்லது கணிதப் பாரம்பரியத்தை உருவாக்குகிறது என்று பார்த்தால், அதற்கு ஒரு குறிப்பிட்ட ஆரம்பப் புள்ளி இருக்கும். மிகச் சிறந்த ஒருவர் தோன்றுவார். அவர் மாபெரும் மேதையாக இருப்பார். எங்கிருந்தோ, எப்படியோ தனக்கு முன் நிகழ்த்தப்பட்ட அனைத்துச் சாதனைகளையும் கற்றுத் தேர்ந்துவிடுவார். ஆனால் அவர் தன் வேலையுண்டு, தானுண்டு என்று இருந்துவிட மாட்டார். முதலில் பிஎச்.டி போன்ற பட்டத்தை எளிதாகப் பெறுவார். முனைவர் பட்டம் பெற்றதும், பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணிக்குச் சேர்வார். தன் கற்பிக்கும் திறமையால் அடுத்த தலைமுறை மாணவர்களை உயரத்துக்குக் கொண்டுசெல்வார். அவரிடம் படித்த மாணவர்கள் அருகில் உள்ள கல்வி நிலையங்களில் வேலைக்குச் சேர்வார்கள். அவர்கள், மேலும் சிறந்த மாணவர்களை உருவாக்குவார்கள். இப்படியே அந்த நாட்டில் அந்தத் துறை உச்சத்துக்குச் செல்லும். அது பிற துறைகள்மீதும் தாக்கத்தைச் செலுத்தும்.
பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஜெர்மனியில் தலைசிறந்த கணிதவியலாளர்கள் சிலர் தோன்றினர். இதன் தொடக்கமே கார்ல் பிரெடெரிக் கவுஸ் (1777-1855). கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் கவுஸுக்கு ஒப்பான அல்லது கவுஸைத் தாண்டிச் சென்ற கணித மேதை யாருமே இல்லை என்று சந்தேகத்துக்கு இடமின்றிச் சொல்லிவிடலாம். இவரது தனிப்பட்ட கணிதச் சாதனைகள் ஒன்றுமே இல்லை என்ற அளவுக்கு இவர் உருவாக்கிய மாணவர்களையும் அவர்கள் உருவாக்கிய மாணவர்களையும் சொல்லிவிடலாம். கவுஸிடம் படித்த மாணவர்களிலிருந்து சுருக்கமான பட்டியல் இது: பிரெடெரிக் பெஸ்ஸெல், ரிச்சர்ட் டெடகைண்ட், பெர்ன்ஹார்ட் ரீமான், மாரிஸ் கேண்டார், குஸ்தாவ் கிர்க்காஃப், எர்னஸ்ட் கும்மர், யோஹான் டிரிச்லே, அகஸ்ட் மோபியஸ். இது ஏதோ புரியாத அன்னியப் பெயர்களாகத் தோன்றும். ஆனால் இந்தக் கட்டுரையில் இவர்களது கணித/அறிவியல் சாதனைகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால் இடம் போதாது. இன்று பி.எஸ்சி, எம்.எஸ்சி கணிதம், இயற்பியல் படிப்பவர்கள் இந்தப் பெயர்களைத் தாண்டாமல் செல்லமுடியாது. அடுத்த மாதக் கட்டுரையில் கவுஸும் அவருடைய மாணவர்களும் என்ன செய்தார்கள் என்று விவரிக்கிறேன்.
இந்தக் கணிதச் சாதனைகள்மீதுதான் இருபதாம் நூற்றாண்டில் ஜெர்மனியின் இயல்பியல் சாதனைகள் கட்டப்பட்டன. அதனைத் தொடங்கிவைத்தவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்த மேக்ஸ் பிளாங்க் (1858-1947). கவுஸைப் போலவே, பிளாங்க் அதி அற்புதமான சாதனைகளை இயல்பியலில் செய்தார். அத்துடன் புதிய தலைமுறை விஞ்ஞானிகள் பலரையும் உருவாக்கினார். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை முடிந்தவரை ஜெர்மனியிலேயே வைத்திருக்க முயற்சி செய்து, அதில் பெருமளவு வெற்றியும் கண்டார்.
இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போவது மேக்ஸ் பிளாங்க், பிலிப் லெனார்ட், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆகியோரைப் பற்றியும் அவர்களுக்கு இடையில் இருந்த அன்பையும் வெறுப்பையும் பற்றி. இந்த மூவருமே இயல்பியலுக்கான நோபல் பரிசு வாங்கியவர்கள். இந்த மூவரில் ஐன்ஸ்டைன் மட்டும்தான் யூதர். மற்ற இருவரும் ஹிட்லர் அண்ட் கோ சொன்னபடி ‘ஆரிய’ இனத்தைச் சேர்ந்தவர்கள்.
கவுஸின் மாணவர் குஸ்தாவ் கிர்க்காஃப் பற்றி மேலே குறிப்பிட்டிருந்தேன். 8-ம், 9-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் புத்தகத்தில் மின்சாரம் பற்றிப் படிக்கும்போது கிர்க்காஃபின் சுற்று (Kirchoff's circuit) என்பதைப் படித்திருப்பீர்கள். இந்தக் கிர்க்காஃபிடம்தான் பிளாங்க் படித்தார். தனது முனைவர் பட்டத்துக்கான ஆய்வறிக்கையை இவர் வெப்ப இயக்கவியல் (தெர்மோடயனமிக்ஸ்) துறையில் செய்தார். பின்னர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார்.
இந்த உலகம், உலகத்தில் உள்ள பொருள்கள் ஆகியவை எப்படி உருவாகியுள்ளன? அவை தொடர்ச்சியானவையா (continuum) அல்லது துண்டு துண்டுகளால் ஆனவையா (discrete) என்பது ஒரு முக்கியமான தத்துவார்த்தக் கேள்வி. இந்தக் கேள்வியை மேலும் நீட்டித்து, உலகில் நாம் உணரும், பார்க்கும் எதுவுமே தொடர்ச்சியா அல்லது துண்டுதுண்டா என்ற கேள்வியை முன்வைக்கலாம்.
உதாரணமாக, கடைக்குச் செல்கிறீர்கள். ஒரு மீட்டர் கயிறு வேண்டும் என்று கேட்கிறீர்கள். கடைக்காரர் வெட்டித்தருகிறார். ஒரு மில்லிமீட்டர் கயிறு அல்லது நூல் வேண்டும் என்றால் அவரால் அவ்வளவு சரியாக வெட்டித்தரமுடியாது. ஒரு மில்லிமீட்டர் என்பது சிறிய ஒரு துணுக்கு. ஆனால், சரியான கருவிகளைக் கொண்டு இதனையும் சாதிக்கலாம். சரி, ஒரு மைக்ரோமீட்டர் (அதாவது மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு) அளவுக்கு என்றால்? அதனையும் ஒருவிதத்தில் செய்துவிடலாம். ஒரு நானோமீட்டர் (மைக்ரோமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு) என்றால்? பிரச்னையை நெருங்கிவிட்டீர்கள் என்று பொருள். ஏனெனில் இப்போது அணு ஒன்றின் அகலத்துக்கு வந்துவிட்டீர்கள். ஓர் அணுவின் அகலம் என்பது 0.1 நானோமீட்டர் முதல் 0.5 நானோமீட்டர். பருத்தியால் ஆன துணி என்றால் அதில் உள்ள ஒரு மூலக்கூறின் அகலம் கிட்டத்தட்ட 5-6 நானோமீட்டராக இருக்கலாம். சரி, ஏதோ ஒரு வகையில் இதனைக்கூடச் சாதித்துவிடலாம்.
ஆனால் ஒரு பிகோமீட்டர் (நானோமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு) அளவுக்கு எனக்கு ஒரு துண்டு கொடுங்கள் என்று நீங்கள் கேட்டால் யாராலும் இதனைக் கொடுக்கமுடியாது! ஏனெனில், உலகில் இருக்கும் மிகச் சிறிய பொருளே நானோமீட்டர் அளவு கொண்டது. அதனைப் பாதியாகவெல்லாம் வெட்டமுடியாது. அது சிதைந்துபோய்விடும். இதைவிடச் சிறியது என்றால் அது அணுவின் உள்ளே இருக்கும் எலெக்ட்ரான் (மின்னணு). ஆனால் அதன் அகலத்தையெல்லாம் சோதனை செய்து கண்டுபிடிக்கமுடியாது. அந்தச் சிறிய அளவில் இருக்கும் எதுவும் பிழைக்காது. அது அருகில் உள்ள வேறு எந்தப் பொருளிலாவது ஒட்டிக்கொண்டுவிடும். ஆக, இந்த உலகில் மிகச் சிறிய நீள, அகலம் எது என்றால் அது நானோமீட்டர் கணக்கில்தான் இருக்கும்.
இதேபோல எடையையும் சொல்லலாம். உங்களிடம் நிறையக் காசு இருந்தால், ஒரு கிலோ வெங்காயம் வாங்கலாம். ஒரு கிராம் தங்கம் வாங்கலாம். இப்படியே மைக்ரோகிராம் அளவுக்கு எதையாவது வாங்கலாம். இன்னும் இன்னும் குறைவான எடைக்குப் பொருள்களைப் பிரிக்கமுடியும். உலகிலேயே எடை மிகக் குறைவாக உள்ள ஹைட்ரஜன் அணுவின் எடை 1.6735x10-27 கிலோகிராம். அதாவது மிக மிகச் சிறிய ஓர் எடை. இதற்கும் கீழே என்றால் ஓர் எலெக்ட்ரானின் எடை 9.109x10-31 கிலோகிராம். இதற்குக் கீழ் எல்லாம் நீங்கள் கேட்டாலும் கிடைக்காது. எலெக்ட்ரானைத் துண்டாக உடைக்கவெல்லாம் முடியாது.
ஆற்றல் என்பதும் இப்படித்தான் என்ற ஞானம் திடீரென்று பிளாங்குக்கு ஏற்பட்டது. அவர் மின்காந்த அலைகளைக் கொண்டு பல பரிசோதனைகளைச் செய்து வந்தார். ஒவ்வொரு விதமான மின்காந்த அலைகளிலும் எந்தமாதிரியான ஆற்றல் உள்ளது என்பதை ஆராய்ந்தார். மின்காந்த அலைகள் என்பவை நாம் தினம் தினம் பயன்படுத்துபவைதான். வீட்டில் தொலைக்காட்சியின் சானல்களை மாற்றப் பயன்படுத்தும் ரிமோட், மைக்ரோவேவ் அவன், ரேடியோப் பெட்டி, செல்பேசி என அனைத்துமே மின்காந்த அலைகளால் இயங்குபவை. மின்காந்த அலைகள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட பண்பு அவற்றின் அதிர்வெண் எனப்படுவது. ஒரு மின்காந்த அலையில் உள்ள ஆற்றல், அதன் அதிர்வெண்ணுடன் தொடர்புகொண்டது என்பதை பிளாங்க் கண்டுபிடித்தார். அதன் விளைவாக, அவர் கண்டுபிடித்ததுதான் அபாரமான ஒரு கருத்து. அதாவது ஆற்றல் என்பதற்கும் எடை, நீள அகலம் போல ஒரு குறைந்தபட்ச அளவு ஒன்று உள்ளது. அதைவிடக் குறைவான அளவில் ஆற்றல் துண்டைக் கொடுக்க முடியாது. இந்தக் குறைந்த ஆற்றல் துண்டைத்தான் பிளாங்க் ‘குவாண்டா’ என்றார். ‘துண்டு’ என்பதாகத்தான் நாம் இதனைத் தமிழில் ஒருமாதிரி மொழிபெயர்த்தாகவேண்டும்.
இந்தக் கருத்து வெளியானது 1900-ல். இந்தக் கருத்து அறிவியல் உலகில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது. பிற்காலத்தில் குவாண்டம் மெக்கானிக்ஸ் என்ற துறைக்கே ஒருவிதத்தில் இதுதான் வித்திட்டது. இந்தக் கண்டுபிடிப்புக்காக மேக்ஸ் பிளாங்குக்கு 1918-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கினார்கள்.
பிலிப் லெனார்ட், ஜெர்மானியப் பெற்றோருக்கு ஹங்கேரியில் பிறந்தவர். முனைவர் பட்டம் பெற்றது ஜெர்மனியில். அங்கேயே வேலையும் செய்ய ஆரம்பித்தார். மின்சாரத்தைப் பாய்ச்சும்போது உலோகங்களிலிருந்து மின்னணுக்கள் வெளியாகும். இதனை கேதோட் கதிர்கள் என்போம். இது தொடர்பான பல கண்டுபிடிப்புகளை லெனார்ட் நிகழ்த்தியிருந்தார். அதற்காக இவருக்கு 1905-ம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதாவது மேக்ஸ் பிளாங்க் நோபல் பரிசு வாங்குவதற்கு முன்னரேயே லெனார்டுக்கு நோபல் கிடைத்திருந்தது. கேதோட் கதிர்கள் தொடர்பான ஆராய்ச்சியின்போதுதான் ஒளி அலைகள் (அவையும் மின்காந்த அலைகளே) ஒரு சில பொருள்களின் (முக்கியமாக உலோகங்களின்) மேற்பரப்பில் படும்போது அந்தப் பரப்பிலிருந்து மின்னணுக்கள் வெளிப்படுகின்றன என்பதை இவர் கண்டுபிடித்தார்.
இதைத்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எடுத்துக்கொண்டு மேற்கொண்டு ஆராய முற்பட்டார். 1905-ல் ஐன்ஸ்டைனுக்கு அகடமிக்ஸ் சார்ந்து ஒரு வேலை இல்லை. சுவிட்சர்லாந்தின் காப்புரிமை வழங்கும் அலுவலகத்தில் ஓர் எழுத்தராக வேலை செய்துவந்தார் அவர். ஆனால் 1905-ல் ஆராய்ச்சி இதழ் ஒன்றில் அவர் வரிசையாக நான்கு கட்டுரைகளை வெளியிட்டு, இயல்பியல் உலகையே அதிரச் செய்தார்.
அதில் ஒன்றுதான் லெனார்ட் கண்டுபிடித்த ஒளி அலைகள் மின்னணுக்களை வெளிப்படுத்தும் நிகழ்வை ஆராய்ந்தது. லெனார்டின் கண்டுபிடிப்பையும் மேக்ஸ் பிளாங்கின் கண்டுபிடிப்பையும் ஒன்றாகப் பார்த்த ஐன்ஸ்டைன், ஒளி அலைகள் ஆற்றல் துணுக்குகளாக (ஃபோடான்) பரவுகின்றன என்றார். இந்த ஆற்றல் துண்டுகள் ஒரு பரப்பின்மீது மோதும்போது, அதனிடம் உள்ள ஆற்றல் மேற்பரப்பில் உள்ள ஒரு மின்னணுவுக்கு மாறுகிறது. உடனே மின்னணு அந்தப் பரப்பிலிருந்து பிய்த்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட வேகத்தில் வெளியேறுகிறது.
இந்தக் கருதுகோளின் அடிப்படையில்தான் ஐன்ஸ்டைனுக்கு 1921-ல் நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. அவர் செய்த வேறு எத்தனையோ விஷயங்களுக்காக ஐன்ஸ்டைனுக்கு நோபல் கொடுத்திருக்கலாம். உதாரணத்துக்கு, ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கை அந்தக் காலத்தில் சர்ச்சைகளுக்கு உள்ளானதாக இருந்தது. எனவே அதனைவிடுத்து, ஒளிமின் விளைவை ஐன்ஸ்டைன் விளக்கியதற்காக நோபல் பரிசைக் கொடுத்தனர்.
இது பிலிப் லெனார்டுக்குப் பொறுக்கவில்லை. அவர் ஏற்கெனவே 1905-லேயே நோபல் பெற்றிருந்தாலும், ஒளிமின் விளைவே தானே கண்டுபிடித்ததாகவும் அதனைத் தான் முழுமையாக விளக்கிவிட்டதாகவும் நினைத்துக்கொண்டிருந்தார். அதன் பரிசு வேறு ஒருவனுக்கு, அதுவும் ஒரு யூதனுக்குப் போய்ச் சேர்ந்தது அவருக்குக் கோபத்தை அளித்தது.
இதற்கிடையில் மேக்ஸ் பிளாங்க், ஐன்ஸ்டைனை ஜெர்மனிக்கு அழைத்து வந்திருந்தார். மிக அதிகச் சம்பளம் கொடுத்து அவருக்கு ஒரு நல்ல வேலையை வாங்கித் தந்திருந்தார். ஜெர்மனியில் ஐன்ஸ்டைன் இருந்த காலகட்டத்தில்தான் அவர் சார்பியல் தத்துவத்தை மேலும் விரிவாக்கி விளக்க முற்பட்டிருந்தார். ஏற்கெனவே 1905, 1906 ஆண்டுகளில் அவர் சிறப்புச் சார்பியல் தத்துவம் என்பதை விவரித்திருந்தார். அதனை மேலும் விரிவாக்கி, பொதுச் சார்பியல் தத்துவத்தையும் பின்னர் 1915-ல் வெளியிட்டிருந்தார்.
ஆனால் லெனார்ட் போன்ற பல ஜெர்மன் விஞ்ஞானிகள் ஐன்ஸ்டைனின் தத்துவத்தை ஏற்கவில்லை. சாதாரணமாக, அறிவியலுக்குள்ளாக இருக்கவேண்டிய தர்க்கம் வேறு தளங்களுக்குப் பரவியது. முதலாம் உலகப்போரைத் தொடங்கி, மிக வேகமாக வெற்றிப்பாதையில் சென்றுகொண்டிருந்த ஜெர்மனி, பின்னர் பிரிட்டன், பிரான்ஸின் எதிர்த் தாக்குதலைச் சமாளிக்கமுடியாமல் தோற்றுப்போனது. ஜெர்மனியின் அரசர் பதவியைத் துறந்தார். ஜெர்மனிமீது கடுமையான அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் ஜெர்மனியின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஜெர்மனியின் அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் யூதர்களே என்ற யூத வெறுப்பு அந்நாட்டில் பரவியது. அடால்ஃப் ஹிட்லரின் கட்சி இதனை எங்கும் பரப்பியது. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிறுசிறு கூட்டணி அரசுகள் கவிழ, ஹிட்லர் ஆட்சியைப் பிடித்தார்.
ஹிட்லரின் ஆட்சியின்கீழ், லெனார்ட் போன்றவர்கள் யூத வெறுப்பை அறிவியலுக்குள் கொண்டுவந்தனர். ஐன்ஸ்டைன் போன்றவர்கள் ஜெர்மனியின் இளைஞர்களைத் தவறான பாதைக்குக் கொண்டுசெல்லவே சார்பியல் தத்துவம் போன்ற குப்பைகளை முன்வைக்கிறார் என்றார் லெனார்ட். ஊரெங்கும் கூட்டங்களைக் கூட்டி, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து ஐன்ஸ்டைனைத் தாக்கினார். ஐன்ஸ்டைன் இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
மேக்ஸ் பிளாங்க் இந்த நிகழ்வுகளால் மனம் வருந்தினார். ஆனால் அவரால் என்ன செய்யமுடியும்? ஜெர்மனியே நாஸிகளால் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் அவர் மீண்டும் மீண்டும் ஐன்ஸ்டைனை ஜெர்மனியிலேயே இருக்குமாறு கெஞ்சிக்கொண்டிருந்தார். எல்லாம் சரியாகிவிடும் என்று சமாதானம் செய்தபடி இருந்தார்.
ஒரு கட்டத்தில் ஐன்ஸ்டைனுக்கு தன் உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்பது தெரிந்துவிட்டது. எண்ணற்ற யூத விஞ்ஞானிகள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்; கைது செய்யப்பட்டனர். ஐன்ஸ்டைனின் உலகப் பிரபலம் காரணமாகவே அவர் அதுவரையில் விட்டுவைக்கப்பட்டார். 1933-ல் அமெரிக்காவில் சில சொற்பொழிவுகள் தருவதற்காக ஐன்ஸ்டைன் சென்றிருந்தார். அப்போது ஹிட்லர், யூதர்கள் பல்கலைக்கழகங்களிலும் பிற அரசு உத்தியோகங்களிலும் வேலை செய்யத் தடை விதித்து ஓர் அரசாணையை வெளியிட்டார். அதைக் கேள்விப்பட்ட ஐன்ஸ்டைன், அமெரிக்காவிலேயே தங்கிவிட்டார். வாழ்க்கை முழுதும் போரை வெறுத்த, அகிம்சையை ஆதரித்த ஒருவராகவே ஐன்ஸ்டைன் இருந்தார். அதனால்தான் மகாத்மா காந்தியை அவர் ஆராதித்தார்.
மேக்ஸ் பிளாங்கின் மூன்றாவது மகன் எர்வின் பிளாங்க், ஹிட்லரைக் கொல்லச் சதி செய்து, அதில் சிக்கி, 1945-ல் நாஸிகளால் கொல்லப்பட்டார். மனம் உடைந்த பிளாங்க் இரண்டு ஆண்டுகள் கழித்து, 1947-ல் மரணமடைந்தார். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்றுவிட, நேச நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஜெர்மனியில், 1945-ல் பிலிப் லெனார்ட் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். லெனார்டும், 1947-ல் இறந்துபோனார்.
இன்று அறிவியல் உலகம், மேக்ஸ் பிளாங்கையும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனையும் மட்டும்தான் ஞாபகத்தில் வைத்துள்ளது.
Politics of Science. அருமையான கட்டுரை! முடிந்தால் பெயர்களை தமிழில் கொடுக்க முயற்சியுங்கள்!
ReplyDeleteராமதுரை எழுதியது
ReplyDeleteஇருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட முன்னேற்றப் பாய்ச்சலையெல்லாம் சுருக்கிக் கொடுத்திருக்கிறீர்கள்.அணுசக்தித் தொடர்பாக அப்போது ஏற்பட்ட முன்னேற்றங்களை ஹிட்லர் யூத விஞ்ஞானம் என்று கேலி செய்தார்.ஏராளமான மேதைகள் (யூத மதத்தைச் சேர்ந்தவர்கள் ) தப்பித்தோம் பிழைத்தோம் என ஜெர்மனியிலிருந்து தப்பி ஓடி இறுதியில் அமெரிக்காவுக்குப் போய்ச் சேர்ந்தனர். அது அமெரிக்காவுக்கு சாதகமாகப் போய்விட்டது.ஹிட்லரின் யூத எதிர்ப்பு வெறியால் தான் ஜெர்மனியால் அணுகுண்டைத் தயாரிக்க முடியாமல் போய் விட்டது. அது நம்முடைய நல்ல வேளை.
ராமதுரை
நல்ல கட்டுரை
ReplyDeleteI am confused. I cant appreciate this article, because it is from a person who is vehment towards spectrum scam to defy that. At the same time I cant refrain myself to write this. Good article from not a Great person. But still I love it. I think Great persons always do great things. But How Spectrum article come from this person. I am confused
ReplyDelete//Spectrum article come from this person.//
ReplyDeleteஅலைக்கற்றை நூலை நீங்கள் முழுவதும் படித்தீர்களா
//அலைக்கற்றை நூலை நீங்கள் முழுவதும் படித்தீர்களா//
ReplyDeleteNo. Never. He already narrated the way he is going to write there. It it deserved to be pamphlet for the DMK workers during Election compaign. Nothing more Nothing Less. Any Way I am not DMK person. And Never be. So Its for me waste of time and money.