Monday, June 18, 2012

உத்தராகண்டம்

உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட புதிய மாநிலம் உத்தராகண்டம். சென்ற வாரம் முழுதும் இந்த மாநிலத்தில் இருந்தேன். (இமயமலையின் ஒரு குன்றின்மீது ஏறச் சென்றிருந்தோம். அது பற்றி பின்னர் விரிவாக எழுதுவேன்.)

இந்திய மாநிலங்கள் பலவற்றில் சீரான வளர்ச்சி இல்லாத காரணத்தால் ஒரு பகுதியினர் மட்டும் பிரிந்து தனி மாநிலமாக ஆக விரும்புகின்றனர். சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தராகண்ட் ஆகியவை மாநிலங்களாக ஆகியுள்ளன. ஆந்திரத்திலிருந்து தெலங்கானா, மகாராட்டிரத்திலிருந்து நாகபுரி ஆகியவை பிரிய விழைவதையும் மேற்கு வங்கத்திலிருந்து கூர்க்காலாந்து என்ற பகுதி பிரிவதற்காக நடத்திய போராட்டங்களையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.

உத்தரப் பிரதேசத்தினர், உத்தராகண்ட மக்களை ‘பஹாடிகள்’ (மலை ஆசாமிகள்) என்று சற்று கேலியாகவே நடத்துவர் போலும். அப்பகுதி ஒன்றும் தனியாகவெல்லாம் போகக்கூடாது என்று யாரும் போராடவில்லை. இப்போது தெலங்கானா போராட்டத்தில் நடப்பதுபோல இல்லாமல், சத்தமே இன்றி மாநிலம் இரண்டாகப் பிரிந்தது.

பிரிந்த புது மாநிலத்தில் மருந்துக்கும் பகுஜன் சமாஜ் கட்சி அல்லது சமாஜ்வாதிக் கட்சிக் கொடிகளையோ அலுவலகங்களையோ காண முடியவில்லை. அங்கே காங்கிரஸும் பாஜகவும் மட்டும்தான் கண்ணில் தென்பட்டன. இது ஒருவிதத்தில் எனக்கு ஆச்சரியமே. (இப்போது உத்தராகண்டத்தில் தன்னை பலப்படுத்திக்கொள்ள பாஜக எம்.எல்.ஏக்களைக் கடத்தித் தன் வசம் இழுக்கும் நாடகத்தை காங்கிரஸ் செயல்படுத்திக்கொண்டிருக்கிறது.)


மாநிலப் பிரிவினையில், இந்துக்களுக்குப் புனிதமான பெரும்பாலான பகுதிகள் அனைத்தும் உத்தராகண்டத்தில் வந்துவிட்டது. ‘சார் தாம்’ எனப்படும் நான்கு முக்கியப் புனிதத் தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை அனைத்தும் உத்தராகண்ட மலைப்பகுதியில் இருக்கின்றன. இதுதவிர ரிஷிகேஷ், ஹரித்வார் எனத் தொடங்கி எண்ணற்ற இந்துத் தலங்கள் இம்மாநிலத்தில்தான். இதனால் புனித யாத்திரிகர்கள் உத்தராகண்டத்தில் வந்து குழுமுகின்றனர்.

புனித யாத்திரிகர்கள் மட்டுமின்றி, சாகச யாத்திரிகர்களும் வந்து குழுமும் இடமாக ஆகியுள்ளது உத்தராகண்டம். மலை ஏறுதல் (trekking, mountaineering), நதிநீரில் படகு வலித்தல் (rafting), உயரத்திலிருந்து நீருக்குள் குதித்தல், பஞ்சீ ஜம்ப்பிங் போன்ற பல விளையாட்டுகளை இங்கு பார்க்கலாம். ஆன்மிகத் தேடலுடன் பிற தேடல்களுக்காகவும் இந்தியா வரும் பல வெளிநாட்டவருக்கு (முக்கியமாக வெள்ளைத் தோல் ஆசாமிகளுக்கு) இந்த மாநிலம் உகந்த இடமாக உள்ளது. ரிஷிகேஷில் கண்ணில் தென்பட்ட இடமெல்லாம் வெள்ளைக்காரர்கள் நிறையப் பேர் இருந்தனர். சிலர் வேட்டி கட்டி, குடுமி வைத்திருப்போர். சிலர் வெறுமனே முதுகுப் பையுடன் ஊர் சுற்றுவோர். இந்த அளவுக்கு வெள்ளையர்கள் உள்ள ஓர் இந்திய ஊரை நான் இதற்குமுன் கண்டதில்லை.


உத்தராகண்டம், ஆள்வதற்கு மிகக் கடினமான ஒரு மாநிலம். ஏதோ ஒரு வேகத்தில் உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரிந்துவிட்டாலும் இருக்கும் நிதி ஆதாரங்களைக் கொண்டு எப்படித்தான் வெகு வேகமாக முன்னேறப் போகிறார்களோ என்ற கவலை இல்லாமல் இல்லை. மலைகளால் நிரம்பியிருக்கும் இம்மாநிலத்தில் சாலை வசதிகளைச் செய்து தருவது மிகக் கடினம். மலைகளில் பரவியிருக்கும் பல்வேறு கிராமங்களில் மக்கள் தொகையோ சில நூறுகளைத் தாண்டாது. இக்கிராமங்களில் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை அமைக்கவேண்டுமானால் எவ்வளவு கடினம் என்று யோசித்துப் பாருங்கள். பல கிராமங்களிலிருந்து சாலைகளுக்கு வரவேண்டும் என்றாலே ஒற்றையடிப் பாதையில் ஓரிரு மணி நேரங்கள் நடக்கவேண்டியிருக்கும். கடைகள், சந்தை, சினிமா, கல்லூரி என எதை எடுத்தாலும் பல மணி நேரங்கள்.

மலைப் பாதையில் 200 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க கிட்டத்தட்ட 7-8 மணி நேரம் எடுக்கிறது. (உத்தரகாசியிலிருந்து ரிஷிகேஷ் செல்ல கிட்டத்தட்ட இந்த நேரம் ஆனது.) இதனால் ஆகும் எரிபொருள் செலவைக் கணக்கில் எடுங்கள். பெரிய பெரிய பேருந்துகளை இயக்க முடியாது. எல்லாமே சின்னப் பேருந்துகள் அல்லது குவாலிஸ், இன்னோவா, மேக்ஸ் போன்ற வண்டிகள். இவற்றில் ஒண்டிக்கொண்டுதான் மக்கள் பயணம் செய்யவேண்டியுள்ளது.

சாலைகளில் எந்நேரமும் பெரும் கற்கள் வந்து விழலாம். அந்த நிமிடமே போக்குவரத்து ஸ்தம்பித்துப்போகும். மீண்டும் நிலைமையைச் சீராக்க சில நாள்கள் எடுக்கலாம். கோடையில் மலைக்காடுகளில் தீ பிடித்துக்கொள்ளும். சென்ற வாரப் பயணத்தின்போது மூன்று இடங்களில் தீ பற்றி எரிந்துகொண்டிருந்ததைப் பார்த்தோம். திடீர் வெள்ளம், விபத்துகள், உயிர் இழப்பைச் சமாளிப்பது என்று ஏகப்பட்ட இயற்கைப் பிரச்னைகள்.

மனித வளத்தைப் பிற மாநிலங்களைப் போல எளிதில் மேம்படுத்த முடியாது. கல்லூரிகள் குறைவு. பெரும்பாலானோருக்கு தொலைக்காட்சிகள் வீடுகளுக்கு வருவதில்லை; எனவே உலகமே தெரியாது. தொழிற்சாலைகள் குறைவு. அப்படியே வந்தாலும் அவை உள்ளூரின் கனிமச் சுரங்கங்களைக் கொத்தி எடுத்துச் செல்லவே முனையும். கலால் வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால் சில பல தொழிற்சாலைகள் வந்துள்ளன. ஆனால் அவையும் பெரும்பாலும் வெளி மாநிலத் தொழிலாளர்களைக் கொண்டதாகவே இருக்கும்.

இதுபோன்றதொரு மாநிலத்தை முதன்மையான ஒன்றாக மாற்ற வலுவான அரசியல் தலைமை தேவை. ஆனால் சிறு மாநிலங்களுக்கே உரித்தான் நிலையற்ற அரசியல் சூதாட்டத்தைத்தான் நாம் இங்கும் பார்க்கிறோம். வடகிழக்கு மாநிலங்கள், புதுச்சேரி, கோவா, ஜார்க்கண்ட் போல சிறு எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் எந்தப் பக்கமும் தாவத் தயாராக இருக்கிறார்கள். காங்கிரஸ், பாஜக என இரு கட்சியிலும் உட்கட்சிப் பூசல்.

பெரும் சவால்தான்!

17 comments:

  1. << வடகிழக்கு மாநிலங்கள், புதுச்சேரி, கோவா, ஜார்க்கண்ட் போல சிறு எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் எந்தப் பக்கமும் தாவத் தயாராக இருக்கிறார்கள்.
    இதற்கு என்னதான் தீர்வு? எதிர் கட்சி ஆளும் கட்சி என்ற பாகுபாடே இல்லை.

    ReplyDelete
  2. இந்துக்கள் புனிதமாக மதிக்கும் கங்கை நதியை காக்க உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் சுவாமி நிகமானந்த் என்பவர் கடந்த பா.ஜ.க. ஆட்சியில் 115 நாள் தொடர் உண்ணாவிரதம் இருந்து, கடைசியில் உயிரையும் துறந்தார். புனித நதியைக் காக்க ஒரு சாமியார் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தபோது, "இந்து தர்மத்தை" பாதுகாக்கும் பா.ஜ.க. ஆட்சி என்ன செய்து கொண்டிருந்தது தெரியுமா? எச்.எஸ்.சி.பி.எல் நிறுவனத்தின் அதிபரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியமான உறுப்பினருமான பூமேஷ் குமாரை பத்திரமாகப் பாதுகாத்தது. கங்கை நதி அழியக் காரணமாக இருக்கும் கனிமச் சுரங்கம்,மணல் அள்ளும் கொள்ளையை அமோகமாகச் செய்து வருபவர்தான் இந்த பூமேஷ் குமார். பாரத் மாதா கி ஜே!

    ReplyDelete
    Replies
    1. கணிமங்களை வைத்துக்கொண்டு தானும் முன்னேறாமல் அடுத்தவனையும் முன்னேற விடாமல் இருப்பது தான் சாலச்சிறந்த வாழ்க்கைமுறை போல.

      மலைவாழ் மக்கள் எல்லாம் மலையிலேயே எந்த வித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் வாழவேண்டும். சிலர் மட்டும் சென்னை மும்பை நகரத்தில் சுகமாக ஏ.சி அறையில் இருக்கவேண்டும்.

      Delete
  3. தலைவரே கொஞ்சமாவது ஊரை பற்றி தெரிந்து கொண்டு எழுதுங்கள்.மொத்த உத்தர்[ரதேசதிர்க்கும் முதல்வராக இருந்த கோவிந்த் பள்ளப் பந்த்,பஹுகுணா .என் டி திவாரி எல்லாம் உட்டர்கண்டை சார்ந்தவர்கள்.அங்கு ராஜபுத்திரர்களும் பிராமணர்களும் அதிகம்.உட்டர்ப்ரதேச அரசியல் முலாயம், மாயா கைக்கு வந்தவுடன் போராடி தனி மாநிலம் வாங்கி விட்டனர்.போட்டி பிராமணர்களுக்கும் ராஜபுத்திரர்களுக்கும் தான்.பிராமணர் கந்தூரி கட்சி ஜெயித்தாலும் உட்கட்சி ராஜபுதிரர்களால் தோற்க்கடிக்கப்பட்டார்..ராஜபுத்திரர் ராவத் ,கொஷியாரி போன்றவர்கள் தலைவர்களாக இருந்து கட்சி ஜெயிக்கும்.ஆனால் எங்கிருந்தோ திடீரென்று நித்யானந்த,திவாரி,கந்தூரி ,பஹுகுண என்று பிராமணர்கள் முதல்வர் ஆகி விடுவார்கள்.உட்டர்கண்டில் பழங்குடிகள் ஒரு குறிப்பிட்ட சதவீதம். SC /ST /OBC ஒதுக்கீடு கூட 37 சதவீதம் உண்டு.ஆனால் கேள்வி கேட்க்கும் நிலைக்கு,இல்லை தலைவர் ஆகும் நிலைக்கு அவர்கள் வர வெகு காலம் ஆகும்.மலைகளை தவிர்த்து ஹரித்வார்,ரிஷிகேஷ் போன்ற சமதள இடங்களில் பஹுஜன் சமாஜ் கட்சிக்கு செல்வாக்கு அதிகம்
    ராணுவத்தில் அவர்களின் சதவீதம் வெகு அதிகம்.அவர்களுக்கு என்றே கர்ஹ்வால் ரெஜிமென்ட் ,குமான் ரெஜிமென்ட் ,கர்ஹ்வால் ஸ்கௌட் என்று மூன்று பிரிவுகள் உண்டு. இந்தோடீபெடன் போர்டர் போலீசிலும் அவர்களின் பங்கு அதிகம்.செழிப்பான பூமி
    மூட நம்பிக்கைகள் அதிகம் நிறைந்த சாதி வெறி அதிகம் உள்ள (பா ஜ க ,காங்கிரஸ் கோலோச்சுவதன் காரணம் )ஊர்.

    ReplyDelete
  4. உட்டர்கந்து மாநிலத்தில் ஆட்சிகள் ஒருமுறை கூட கவிழவில்லை. முதலில் பா ஜ க வும் பின்பு காங்கிரேச்சும் அதற்க்கு பின்பு பா ஜ க வும் முழுதாக ஆட்சி செய்தது. கடைசி ஆறு மாதங்கள் இல்லை ஒரு வருஷம் ராஜபுத்திர தலைவர்களை முதல்வர் ஆக்குவார்கள்.சத்பால் மகாராஜ்,பஹுகுணா,ராவத், கொஷியாரி, திவாரி, போக்ஹ்ரியால் கந்தூரி என அனைத்து தலைவர்களும் பிராமண ,ராஜபுத்திரர்கள் தான். காங்கிரஸ் ஒப்புக்கு நம்மூரில் கிருபாநிதியை பா ஜ க தலைவராக கையெழுத்து போட சொன்னது போல யச்பால் ஆர்யா என்பவரை தலைவராக வைத்திருந்தது.வருக்கு பின்னால் ஒரு வர கூட இருக்க மாட்டார். ராஜபுத்திரர் ராவதிர்க்கு பின்னால் 17 எம் எல் ஏக்கள் ஆனால் பிராமணர் பஹுகுணா பின்னால் சாதி. அதனால் அவர் முதல்வர். சென்ற முறையும் ராவத் தான் ஆவார் என்று எதிர்ப்பார்த்தார்கள் ஆனால் கட்சி விட்டு வெளியில் சென்று மறுபடியும்வந்த என் டி திவாரி திடீரென்று முதல்வர் ஆனார்.
    கட்சியில் பழம் தின்று கொட்டை போட்ட கொஷியாரி கட்சியை எப்படியாவது செய்க்க வைப்பார் என்று நித்யானந்த சுவாமியை தூக்கி விட்டு ஆறு மாதம் முதல்வராக ஆக்கப்பட்டார்.ஆனால் அடுத்த முறை பா ஜ க செயித்த போது அறுவது வயதிற்கு மேல் அரசியலுக்கு வந்த கந்தூரி முதல்வர். ராஜ்நாதின் உறவினர் தோற்றதற்கு கந்தூரி தான் காரணம் என்று ராஜபுத்திரர் ராஜ்நாத் சிங்க் கோவம் கொண்டு கண்டூரியை தூக்கி விட்டு போக்ரியாலை முதல்வர் ஆக்கினார். இந்த கூத்துக்களுக்கு மக்களையோ,சிறு மாநிலத்தையோ குறை சொல்வது சரியா

    ReplyDelete
    Replies
    1. வந்துட்டாருய்யா....எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்!

      Delete
    2. That man, Mr. Poovannan, wrote elaborately with lots of details and U anonymous, u don't even have the guts to put your name but you riducule at him.

      Mr. Badri you demean your blogs and insult serious commentors by publishing the comments of such silly, anonymous characters.

      Delete
    3. Who looks "Yellaam therintha Yekaambaram" ? Badri or Ponvannan ? To me it is Badri.

      Delete
    4. badri wrote this after or during his visit to uttarkhand.
      mr. poovannan is writing from his desk in chennai or interior TN. Perhaps he has not visited Uttarkhand at all in his life. Mr. Viswam and Mr. Pandian and all other proxies of poovannan can just STFU.

      the same anonymous.

      Delete
    5. Mr. the same "smart" anonymous,
      a high school student would know that just beacause a gentleman named Badri has visited Uttarkhand, whatever he writes about it need not be right. You don't even seem to know Mr.Ponvannan but it doesn't prevent your from making "wise" comments about him. I don't know which part of universe u r living, but today in the communication age in planet earth, one could get lot of details about a place from his desktop and cross-check them too.

      Mr. Badri few weeks ago when I gave info about Sonia citing dr.S.Swamy's article 'do you know your sonia' you "authoritatively" said it was a cheap-gossip and your blogs are meant for civilized discussions on serious issues. What about this "smart" anonymous' comment // proxis of ponvannan can just STFU// . Kudos to you Mr.Badri for your first-rate work !

      Delete
    6. So, its true that poovannan et. al., has never visited uttarakhand! இதுக்கு பேரு தான் போட்டு வாங்குறது பாஸ்!

      உங்க உத்தரகாண்டின் அறிவின் அளவு நீங்கள் படிக்கும் செய்தியாளரின்/புத்திஜீவியின் எழுத்தின் வீச்சு வரை தான்.
      அறிவியல் புனைவு எழுதும் எழுத்தாளருக்கும், ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளன் எழுதுவதுக்கும் வித்தியாசம் இருக்கு தலைவா. இதெல்லாம் உங்கள மாதிரி ஒண்றையணா தமிழ் இடது சாரி அறிவுஜீவிகளுக்கு புதுசு...ஆகவே உங்களுக்கெல்லாம் உங்கள் ஒரிஜினல் இடத்தைக் காட்டினால் உங்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.

      முதலில் பெரிய அறிவாளி மாதிரி எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாக பேசுவதை நிறுத்தவும். பின்னர் மரியாதை தானாக வரும்.

      STFU எல்லாம் உங்கள் "வலைத் தளச்"சுரக்காய் அறிவு-ஜீவி வாய்க்கு ரொம்ப மரியாதையான வார்த்தை.

      அந்த அனானியின் பெயர்: விஜய்.

      Delete
    7. R.P.Feynman, one of my heroes, famously wrote, "Ordinary fools are all right; you can talk to them, and try to help them out. But pompous fools--guys who are fools and are covering it all over and impressing people as to how wonderful they are with all this hocus pocus--THAT, I CANNOT STAND! An ordinary fool isn't a faker; an honest fool is all right. But a dishonest fool is terrible!"

      Delete
    8. விசுவம்,

      இது பூவண்ணனுக்குத் (அடுத்தது உங்களுக்கும்) தான் மிகக் கச்சிதமாகப் பொருந்தும்!

      ஏதோ பத்ரி சேஷாத்ரி உத்தரகாண்டம் மாநிலத்தைப் பற்றி ஒரு பதிவு போட்டால் அதில் வந்து, அங்கே அவன் சரியில்லை, இவன் ஜாதிக்காரனை உட்காரவைக்கிறார்கள், பார்ப்பானர்கள் சதி செய்கிறார்கள் என்பது மாதிரியான அதிமேதாவித்தனமான "Self righteous Pompous foolish blabber" செய்தது பூவண்ணன். அதுவும் தனது ஏட்டுச்சுரக்காய் அறிவை வைத்துக்கொண்டு!. அதை ஆதரித்தது நீங்கள்.

      உங்களுக்கெல்லாம் என்ன நினைப்பு ?

      உங்களைத் தவிற மற்ற அனைவருக்கும் மூளையே இல்லை என்றா ?

      Delete
    9. இவ்வளோ பேச்சு ஓடியிருக்கு .பாக்கவே இல்லையே
      ஐயா சாமி நான் உட்டர்க்ஹாந்து மாநிலத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் பணியில் இருந்தவன்.
      அதற்க்கு முன்பாக தனியாக பிரிந்த முதல் சில வருடங்களுக்குள் இரண்டு முறை சில மாதங்கள் மவுண்ட் கமேத் ,மற்றும் த்ரிஷூல் மலை ஏறும் குழுக்களில் ஒருவனாக சில இடங்களில் சுற்றி இருக்கிறேன்.அவர்களோடு தங்கி இருக்கிறேன் .தாய் தந்தையரை அழைத்து கொண்டு பத்ரிநாத்,கேதர்நாத் எல்லாம் சுற்றி இருக்கிறேன்.
      இதனால் எல்லாம் தெரியும் என்று அர்த்தமில்லை. ஆனால் தப்பிருந்தால் அது ஒரு honest முட்டாள் தப்பு.

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
  5. இந்த மாதிரி சிறிய மாநிலங்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஒட்டுகள் குறைவு என்பது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்குகிறது.இதை போன்ற விஷயங்களால்தான் இந்த மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன.
    எனது தளம்:
    spraymythoughts.blogspot.in

    ReplyDelete
  6. pl. start your travelogue on uttarkhand we know that you
    can write travelogues as good as mr jeyamohan so pl start

    ReplyDelete