Wednesday, April 03, 2013

புத்த தம்மம்

நான் வளர்ந்தது நாகப்பட்டினத்தில். நான் அங்கு வசித்த காலம்வரை நாகை புத்த மத மையமாக ஒருகாலத்தில் விளங்கியது என்பதை நான் அறிந்திருக்கவே இல்லை. சில ஆண்டுகளுக்குமுன் சென்னை அருங்காட்சியகத்துக்குச் சென்றிருந்தேன். முதன்மை நோக்கம், அங்கு இருக்கும் நடராஜர் வெண்கலச் சிற்பங்களைப் பார்ப்பதுவே. அற்புதமான திருவாலங்காட்டு நடராஜரையும் காளையின்மீது சாய்ந்த நிலையில் (காளை இல்லை) இருக்கும் வெண்கல அர்தநாரியையும் பார்த்தபின் சுற்றிவரும்போது திடீரெனக் கண்ணில் பட்டன பல்வேறு வெண்கல புத்தர்கள். அனைத்தும் சோழர் வெண்கலச் சிலைகள். அனைத்தும் (அல்லது கிட்டத்தட்ட அனைத்தும்) நாகப்பட்டினத்தின் சுற்றுப்புறங்களில் கண்டெடுக்கப்பட்டவை.

பொன்னியின் செல்வன் கதையில் நாகையின் புத்த விகாரை பற்றிப் படித்திருப்பீர்கள்.

10,11-ம் நூற்றாண்டுகளில் சோழ தேசத்தில் நன்றாகப் பரவியிருந்த புத்தமதத்துக்குப் பிறகு என்ன ஆனது? எங்கே போனது? கவனியுங்கள். இது பக்தி இயக்கம் பரவிய காலகட்டத்துக்குப் பிறகான காலகட்டம்.

சில ஆண்டுகளுக்குமுன் அஜந்தா குகைகளின் புத்தச் சிற்பங்களையும் ஓவியங்களையும் காணச் சென்றிருந்தேன். மிக அற்புதமான ஓவியங்கள். அவைபோன்று இந்தியாவில் வேறு எங்கும் இல்லை எனலாம். போதிசத்வ பத்மபானி, போதிசத்வ அவலோகிதேஸ்வரா ஆகிய உலகப்புகழ் பெற்ற ஓவியங்களைத் தவிர கணக்கற்ற முழுக்கதை ஓவியங்கள் அஜந்தாவில் உள்ளன. புத்தரின் வாழ்க்கையிலிருந்து; பல்வேறு புத்த ஜாதகக் கதைகளாக. சரியான வழிகாட்டுதல் இன்றி இந்த ஓவியங்கள் சொல்லும் கதைகளை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. சிபி ஜாதகம், மகா கபி ஜாதகம், மகா ஜனக ஜாதகம், சிம்ஹல அவதானம் என்று எதையுமே நீங்கள் பள்ளிக்கூடத்திலோ வேறு எங்குமோ படித்திருக்க மாட்டீர்கள். இந்தியாவின் ஒரு பெரும் பாரம்பரியம் நமக்கு வெகு அருகில், ஆனால் நம் கைக்குக் கிடைக்காமலேயே இருக்கிறது.

அஜந்தா சென்றுவந்தபின் நான் இலங்கையில் சில புத்தத் தலங்களுக்குச் சென்றுவந்தேன். அனுராதபுரம், பொலனருவ, சிகிரியா, தம்புள்ள, கண்டி ஆகிய இடங்களுக்குச் சென்றுபார்த்தேன். அஜந்தா பற்றியும் புத்த புராணக் கதைகள் பற்றியும் ஓரளவு புரிதல் ஏற்பட்டிருந்ததால் இந்த இடங்களில் உள்ள சிலைகள், ஓவியங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அஜந்தா போலல்ல இலங்கையின் புத்தக் கோவில்கள். அவை வழிபாட்டில் உள்ளவை.

இன்று இந்தியாவில் புத்தமதச் சின்னங்களைத் தேடிச் சென்றால் அவை அனைத்துமே அழிந்துபோன இடங்களாகவே இருக்கும். தமிழகத்துக்குள்ளோ, காஞ்சிபுரம் அல்லது நாகப்பட்டினத்தில் தேடினால்கூட இன்று எதுவுமே கிடைக்காது. ஏன், சென்னை அருங்காட்சியகத்திலேயே அமராவதிச் சிற்பங்கள் உள்ள பகுதி பூட்டப்பட்டிருக்கிறது - பல ஆண்டுகளாக.

இந்நிலையில் தமிழகத்தில் புத்தமதத்தின் வேர்கள் பற்றித் தேடவேண்டியது அவசியமாகிறது.

அம்பேத்கரின் ‘புத்தரும் அவரது தம்மமும்’ என்ற நூலை இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன். புத்தர் ஏன் அரச பதவியை விடுத்து சந்நியாச வாழ்க்கையை வாழச் சென்றார் என்பதற்குச் சொல்லப்படும் காரணங்களை அம்பேத்கர் மறுக்கிறார். மூப்பு, சாவு, நோய் ஆகியவற்றைக் காண்பிக்காமல் ஓர் இளவரசனை வளர்த்துவிட முடியாது என்பது அம்பேத்கரின் வாதம். அம்பேத்கர் சித்தார்த்தனை உயரத் தூக்குகிறார்.

இளவரசன் சித்தார்த்தன் சாக்கியக் குலக்குழுவைச் சேர்ந்தவன். சாக்கிய சங்கத்தின் உறுப்பினன். சாக்கியர்களுக்கும் அவர்களுக்கு அருகிலேயே வசிக்கும் கோலிய குலக்குழுவுக்கும் பிரச்னை. என்ன பிரச்னை? தண்ணீர்ப் பிரச்னை. தமிழகம்-கர்நாடகம், தமிழகம்-கேரளம் போன்று ஓர் ஆற்றின் நீரைப் பங்கிடுவது குறித்த பிரச்னை. கோலியர்களை அடித்து நொறுக்க விரும்புகிறார்கள் சாக்கியர்கள். சித்தார்த்தன் மட்டும் எதிர்க்கிறான். வாக்கெடுப்பு நடக்கிறது. சித்தார்த்தனின் வாதங்கள் தோற்கின்றன. போர் என்று முடிவாகிறது. அப்போதும் அதனை ஏற்க மறுக்கிறான் சித்தார்த்தன். அதனால் சாக்கிய சங்கத்தின் விருப்பத்தின்படி ராஜ்ஜியத்தைத் தியாஜம் செய்துவிட்டு சந்நியாசியாகச் செல்கிறான் சித்தார்த்தன்.

நாட்டைவிட்டுச் செல்லும் சித்தார்த்தனை அவனுடைய மக்கள் தடுக்கிறார்கள். தாங்களும் கூடவருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர்களை மீண்டும் தத்தம் வீடுகளுக்குச் செல்லுமாறு சொல்லும் சித்தார்த்தன் அவர்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்றைத்தான். சண்டை வேண்டாம். சாக்கிய சங்கத்தை வற்புறுத்தி, சண்டையை எதிர்க்குமாறு அம்மக்களிடம் சொல்கிறான். மக்கள் மனம் திருந்தி, போரை விடுத்து, தமக்குள்ளாகத் தண்ணீரைப் பங்கிட்டுக்கொண்டு சச்சரவுகளை சுமுகமாக arbitration முறையில் தீர்த்துக்கொள்ள ஒரு முறை ஏற்படுமானால், அதனால் தன் தியாகத்துக்கு உண்மையிலேயே பலன் இருக்கும் என்கிறான். பின்னர் அப்படியே நடந்தது என்பதை சித்தார்த்தன் வேறு சில சந்நியாசிகளிடமிருந்து தெரிந்துகொள்கிறான்.

தண்ணீர்ப் பங்கீடு தொடங்கி பல ஆயிரம் பிரச்னைகள் நம்மிடையே இன்று உள்ளன. சுமுகமான முறையில் இவற்றைத் தீர்க்க புத்த தம்மம் உதவும் என்றால், அதற்காகவும் புத்த தத்துவத்தைத் தமிழகத்தில் தேடிக் கண்டடையவேண்டிய தேவை இருக்கிறது.

உங்கள் ஒருநாள் கருத்தரங்கு சிறக்க வாழ்த்துகள்.

[Philosophical Revisit to Buddhism in Tamil Nadu என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகம் இன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் கருத்தரங்கை வாழ்த்திப் பேசியதின் தமிழ் வடிவம்.]

6 comments:

  1. புத்தர் என்ற வார்த்தைய கேட்டதும் மனசுல ஏதோ ஒருவித வெறுப்பு தான் வருகிறது.

    ReplyDelete
  2. 7/8 வது சரித்திர பாடங்களில் நாகையும் & புத்த மத விபரங்கள் படித்ததாக ஞாபகம் ஆனால் ஊரில் கண்ணில் படுகிற மாதிரி எதுவும் இல்லாததால் அவ்வளவாக மனதில் பதியவில்லை.குறைந்த பட்சம் ஒரு விஹாரம் இருந்திருந்தால் அதன் மூலம் சரித்திர நிகழ்வுகளை தெரிந்துகொண்டிருக்கலாம்.

    ReplyDelete
  3. பொடியனாய் உங்கள் நாட்டில் வசித்திருந்த போது கேட்ட செவி வழி கதை ஒன்று. நாகைப்பட்டினத்திற்கு தென்மேற்கே 25, 26 மைல் தொலைவில் திருமீயச்சூர் - போழக்குடி இடைப்பட்ட வயல் ஒன்றில் 50 களில் புத்தர் சிலை, புதைந்தது, கிடைத்தது. வயல் உரிமையாளர் பேரளம் பொன்னுசாமி ஐயர்க்கு அது வழியாக புதையல் கிடைத்து பெரும் பணக்காரரானார்.

    ReplyDelete
  4. "சென்னை அருங்காட்சியகத்திலேயே அமராவதிச் சிற்பங்கள் உள்ள பகுதி பூட்டப்பட்டிருக்கிறது - பல ஆண்டுகளாக." ஏன் என கேட்க முற்பட்டீர்களா?

    ReplyDelete
  5. நாகப்பட்டினம் பௌத்த விகாரம் சைவ மன்னர்களான சோழப் பேரரசர்களால் போஷிக்கப்பட்டது. அது ஏசு சபை பாதிரிகளால் அழிக்கப்பட்டது.

    ReplyDelete
  6. புத்தர் என்ற வார்த்தைய கேட்டதும் மனசுல ஏதோ ஒருவித வெறுப்பு தான் வருகிறது.

    ReplyDelete