Tuesday, May 07, 2013

வெளிக்காற்று உள்ளே வரட்டும்

நேற்று நான் சமயபுரத்தில் உள்ள SRV Matriculation Higher Secondary School என்ற பள்ளியில் நடைபெற்ற ‘வெளிக்காற்று உள்ளே வரட்டும்’ என்ற ஐந்து நாள் பயிலரங்கில் கலந்துகொண்டேன். இணையம், சமூக வலைத் தளங்கள் ஆகியவை பற்றி மாணவர்களிடம் என் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன்.

கடந்த எழு ஆண்டுகளாக இதுபோன்ற பயிலரங்குகள் இப்பள்ளியில் நடைபெறுகின்றனவாம். நான் இப்பள்ளிக்குச் செல்வது இதுவே முதல் முறை.

எஸ்.ஆர்.வி பள்ளி நாமக்கல், ராசிபுரம் பகுதியில் ஏற்கெனவே பிரசித்தமானது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் படிப்பு, படிப்பு என்று உருவேற்றப்பட்டு, மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரங்களாக மாற்றப்பட்டு, பொறியியல், மருத்துவம் ஆகிய துறைகளுக்கு அனுப்பப்படுவது பற்றி நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறேன். அதனாலேயே கொஞ்சம் வித்தியாசமான இந்த முகாம் எனக்கு ஆச்சரியமூட்டியது. இதன் பின்னணியில் ஞாநி, தமிழ்ச்செல்வன், பத்மா ஆகியோர் இருப்பதுதான் காரணம் என்று புரிந்தது.

சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை ஒவ்வோர் ஆண்டும் திட்டமிட்டு நடத்திவருவது ஞாநி, தமிழ்ச்செல்வன், பத்மா ஆகியோர் என்று அறிந்தேன். நேற்று மிகக் குறைவான நேரமே ஞாநியுடன் செலவிட முடிந்தது. இந்நிகழ்ச்சி, எஸ்.ஆர்.வியின் இந்தக் குறிப்பிட்ட சமயபுரம் பள்ளியில்தான் தற்போதைக்கு நடைபெற்றுவருகிறது என்றார் ஞாநி. அதற்கு ஒரு முக்கியக் காரணம் இந்தப் பள்ளியின் முதல்வராக இருக்கும் துளசிதாஸ் என்றும் அவருக்கு படிப்பு, நவீன இலக்கியம், கலை ஆகியவற்றில் இருக்கும் நாட்டமும் ஒரு காரணம் என்றார் ஞாநி.

இந்தப் பள்ளியில் தமிழில் பேசுவது அசிங்கமாகக் கருதப்படுவதில்லை. பள்ளி பொதுவாக ஆங்கில மீடியம். ஆனால் மாணவர்கள் இரு மொழிகளில் எதில் வேண்டுமானாலும் பேசுகிறார்கள். பள்ளி ஆசிரியர்களும் இயல்பாகத் தமிழில் நம்மிடம் பேசுகிறார்கள். ஒருவித pseudo ஆங்கிலத்தில் பேசி நம்மைத் தொல்லை செய்வதில்லை. Most respected and distinguished special guest on the dais என்று ஆரம்பித்து நம்மை நெளிய வைப்பதில்லை. நான் தமிழில்தான் பேசினேன். நேற்று நான் போயிருந்தபோது பங்கேற்ற அறிவியல் பரப்புரையாளர் டி.வி.வெங்கடேஸ்வரன், தந்தி டிவி நிகழ்ச்சி நடத்துனர் ஹரி ஆகியோரும் தமிழில்தான் பேசினர் (அவ்வப்போது ஆங்கிலம் கலப்பதைத் தடுக்க முடிவதில்லை).

சுமார் 3,500 பேர் பயிலும் (கட்டணம் நிச்சயம் மிக அதிகமாகத்தான் இருக்கும்) பள்ளியில் சுமார் 2,000 பேர் அங்கேயே தங்கிப் படிக்கின்றனர். 1,500 பேர் சுற்றுப்பட்ட பகுதிகளிலிருந்து பேருந்தில் வந்து படிக்கின்றனர். அதிலிருந்து சுமார் 100 பேர் மட்டுமே இந்த ஐந்து நாள் முகாமில் பயிற்சி பெற்றனர். பல்வேறு முக்கியப்பட்டவர்கள் வந்து பேசியிருந்தனர் - பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சிவராமன், திருநங்கை பிரியா பாபு, நாடகவியலாளர் பார்த்திபராஜா, குழந்தை நல மருத்துவர் யமுனா, உளவியல் மருத்துவர் குமார்பாபு, எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்தி, மனுஷ்யபுத்திரன், அரசு திரைப்படக் கல்லூரி முதல்வர் சீனிவாசன், சென்னை பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவர் ரவீந்திரன், பத்திரிகையாளர் சு.பொ. அகத்தியலிங்கம், பத்மாவதி, அன்பு ப்ரியவதனை, தந்தி டிவி ஹரிஹரன், எழுத்தாளர் எஸ்.வி. வேணுகோபால், டி.வி.வெங்கடேஸ்வரன், ஞாநி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் வந்து பேசி, பயிலரங்கில் கலந்துகொண்டவர்கள்.

பார்த்திபராஜாவின் வழிகாட்டுதலில் மாணவர்கள் ஒரு தெருக்கூத்து ஒன்றையும் செய்துகாட்டினர். நான் கலந்துகொண்ட நாளின் சில படங்களையும் வீடியோ துண்டுகளையும் கீழே இணைத்துள்ளேன்.

இதுபோன்ற நிகழ்வுகள் நிச்சயம் ஒருசில மாணவர்களின் ஆர்வத்தையாவது தூண்டும். அவர்கள் பொறியியல், மருத்துவம் ஆகியவற்றைத் தாண்டி கலை, இலக்கியம், பொதுநலச் சேவை, ஆசிரியப் பணி, ஆட்சி நிர்வாகத் துறை ஆகியவற்றையும் பார்க்கத் தூண்டும். வெளியே செல்லும்போது ஒரு மாணவரைப் பார்த்துப் பேசினேன். என்ன படிக்கப்போகிறீர்கள் என்று கேட்டேன். Herpetology என்றார். முதலில் B.Sc Zoology படிப்பாராம். அடுத்து வெளிநாடு சென்று பாம்புகள் பற்றிப் படிப்பாராம். கடந்த ஐந்து ஆண்டுகளாக பாம்புகள் பற்றி நிறையப் படித்து விஷயங்கள் தெரிந்துகொண்டிருக்கிறாராம்.

நேற்று இறுதி விழாவில் சிறப்பு விருந்தினராக ஒருவர் கலந்துகொண்டார். தமிழர் இல்லை. ஆனால் மிக நன்றாக, இயல்பாக, தமிழில் பேசினார். மாணவர்களோடு நன்கு connect செய்தார். சில embargo காரணங்களால் அவர் யார், என்ன பேசினார் என்பதை எழுத முடியாத நிலையில் உள்ளேன். பின்னர் ஒருநாள், சில மாதங்கள் கழித்து, எழுதுகிறேன்.

கேள்வி கேட்கும் மாணவர் ஒருவர்
தந்தி டிவியின் நிகழ்ச்சி நடத்துனர் ஹரிஹரன்
அறிவியல் பரப்புரையாளர் முனைவர் டி.வி.வெங்கடேஸ்வரன்
மாணவர்கள் நடத்திய தெருக்கூத்து
தெருக்கூத்து - இன்னொரு படம்
ஹரிஹரன் பேசும்போது


டி.வி.வெங்கடேஸ்வரன் பேசும்போது


தெருக்கூத்து - தண்ணி வண்டி


தெருக்கூத்து தொடர்கிறது...


9 comments:

 1. பதிவுக்கு நன்றி பத்ரி. சில கூடுதல் தகவல்களும் திருத்தங்களும்: முகாமில் பங்கேற்றோர் 100 மாணவர் அல்ல. 200 பேர். ஆண் 100 பெண் 100. வருட இறுதி கோடை முகாமுக்கு முன்னதாக இவர்களுக்கு ஆண்டு முழுவ்தும் மாதந்தோறும் ஒரு நாள் வெவ்வேறு தலைப்பில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. ஆண்டு தொடக்கத்தில் எல்லா ப்ளஸ் ஒன் மாணவர்களிலும் விருப்பமுடையோர் அனைவரும் கலந்துகொள்ளக் கூடிய எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றில் பங்கேற்றோரில் இருந்து தேர்வு செய்ய்ப்பட்டவர்கள் இவர்கள். சமயபுரத்தில் பள்ளி தொடங்கிய ஏழாண்டுகளாக இந்த முகாம் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இது தவிர, பள்ளியின் எல்லா மாணவர்களுக்குமாக கனவு மெய்ப்பட என்ற தலைப்பில் மாதாந்தர நிகழ்வுகளில் படைப்பாளிகளும் பல துறை அறிஞர்களும் உரையாடுகின்றனர். சமூகத்தின் அறிஞர்களைப் போற்றும் மன நிலை மாணவப் பருவத்திலேயே வரவேண்டுமென்பதற்காக அறிஞர் போற்றுதும் என்ற தலைப்பில் ஆண்டு தோறும் தமிழின் மூத்த, இளம் படைப்பாளிகளுக்கு விருதுகளும் ( பணமும்) மாணவர் முன்னிலையில் வழங்கப்படுகின்றன. ஆண்டு தோறும் பள்ளிக்குள் மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோருக்குமாக நடத்தப்படும் புத்தகத் திருவிழாவில் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு நூல்கள் விற்பனையாகின்றன. விடுதிகளில் மாணவர்களின் துளிர் என்ற சூழல் அமைப்பும் , நாட்டு நடப்பு குறித்து விவாதிக்கும் குழு நிகழ்வுகளும் தொடர்ந்து செயல்படுகின்றன. ஒவ்வொரு வகுப்பறையிலும் சிறு நூலகம் உள்ளது. இப்படி டெக்ஸ்ட் புக்கல்லாத பல்வேறு கலை, இலக்கிய, சமூக நிகழ்வுகல் ஆண்டு முழுவதும் இங்கே உள்ளன. ஐ.நாவின் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் பத்து வாழ்க்கை திறன்களையும் ஆண்டு முழுவதற்குமான் பாட வேளையாக ( வாரம் ஒரு மணி நேரம் வீதம்) நடத்தும் ஏற்பாடு இங்கே மட்டுமே உள்ளது. இதற்கான தனி நூலை பத்மா பள்ளியின் மாணவர்கள், ஆசிரியரகளுடன் ஒரு மாதம் இருந்து விவாதித்து அதன் பின் எழுதி, அந்த நூலை அடிப்படையாகக் கொண்டு கற்பிக்க ஆசிரியர்களுக்குத் தனி பயிற்சியும் அளித்தார். தமிழ்ச்செல்வன், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் பள்ளிக்கென்றே தொகுத்த கதை, கவிதை நூல்களை இப்பள்ளி வெளியிட்டுள்ளது. முதல்வர் துளசிதாசனின் கனவை படிப்படியாக இங்கே செய்ல்படுத்துவதில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் ஊழியர்களின் சலியாத உழைப்பும் முக்கியமானவை. பள்ளி நிர்வாகிகள் முன்னாள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்பதும், இந்த மாற்று முயற்சிகளை ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களும் உணர்ந்து ஏற்று செயல்படுத்துவதில் உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதும் முக்கியமான அம்சம். இந்தப் பள்ளியின் கட்டண விகிதங்கள் இது போன்ற வகை சார்ந்த இதர பள்ளிகளின் கட்டணத்தை விடக் கூடுதல் இல்லை. நிர்வாகம் அளிக்கும் பெரும் சமபளச் சலுகையுடன் சுமார் 20 சதவிகிதம் மாணவர்கள் உள்ளனர்.

  இந்த முயற்சிகளில் நானும் தமிழ்ச்செல்வனும் பத்மாவும் தொடர்ந்து சந்திக்கும் முக்கியமான ஒரே பிரச்சினை, மானவர்களிடையே பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசி உரையாடுவதற்கான் கருத்தாளர்களைக் கண்டுபிடிப்பதிலேயேயாகும். தமிழில் துறை சார்ந்த ஆழமான அறிவும் புலமையும் உடைய பெரும்பாலோருக்கு, மாணவர்களுக்கு விளங்கும் விதத்திலும் சுவையாகவும் அதைப் பகிர்வதற்கான திறமை ( கம்யுனிகேஷன் ஸ்கில்) இல்லை. அந்த ஸ்கில் உடைய பலருக்கு அது மட்டுமே இருக்கிறது. விழுமியங்களோ , புலமையோ இல்லை. எனவே இப்படிப்பட்ட முயற்சிகளை பள்ளியில் இருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களிடம் கொண்டு செல்ல் எல்லா பள்ளிகளும் அரசும் முன்வந்தால், நம்மிடம் போதுமான சரியான கருத்தாளர்கள் இல்லை என்பது பெரும் சிக்கலாகும். அன்புடன் ஞாநி

  ReplyDelete
 2. *** சில embargo காரணங்களால் அவர் யார், என்ன பேசினார் என்பதை எழுத முடியாத நிலையில் உள்ளேன். ***

  எப்படியும் ஊருக்கே (அதாவது சமயபுரம்) தெரிந்த விஷயம்! ஒன்றும் ரகசியம் இல்லையே! சும்மா சொல்லுங்க!

  சரவணன்

  ReplyDelete
 3. கருத்தாளர்கள் இல்லை என்று ஞாநி கருதலாம்.உண்மை சிக்கலானது.கருத்தாளர்கள் என்று ஞாநி கருதும் சிலரை விட பலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது ஞாநி போன்றவர்களுக்கு தெரியாது, ஞாநி போன்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரியாது.இதற்கு அடிப்படையான காரணம் என்ன என்பதை ஞாநி யோசிக்க வேண்டும்.அறிஞர்கள்,விபரமறிந்தவர்கள் பலரை அணுகி பேசி பழகி அவர்களை இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ப்பது ஏன் அவசியம் என்று விளக்கிச் சொன்னால் பலர் ஆர்வம் காட்டக் கூடும்.அதற்கு முதலில் தமிழ்நாட்டில் எந்தத்துறைகளில் யார் என்ன எழுதுகிறார்கள்,செய்கிறார்கள் என்பது தெரிய வேண்டும்.
  பல்கலைகழகங்களில்,ஆய்வு நிலையங்களில் என்னதான் நடக்கிறது என்பதை அறியும் ஆர்வம் இருக்க வேண்டும்.அத்துடன் ஆங்கிலத்தில் பரவலாக வாசிக்கவும் வேண்டும்.தினசரி,வார,மாத இதழ்களுக்கு அப்பால் ஆங்கிலத்தில் என்னனென்ன வெளியாகின்றன என்பதை கவனிக்க வேண்டும்.இதை செய்தால் சென்னையில் இருக்கும் பலர் சர்வதேச அளவில் செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் ஆனால் அவர்களுக்கும் தமிழ்ச்சூழலுக்கும் தொடர்பே இல்லை என்பதை புரிந்து கொண்டு அந்த இடைவெளியை குறைக்க முயலலாம்.யார் இதை செய்வது.
  முயன்றால் ஐஐடி,அடையாறு பகுதியிலேயே கருத்தாளர்கள் பலரை அடையாளம் காண முடியும்,அவர்களை தமிழ்ச் சூழலுக்கு அறிமுகம் செய்ய முடியும்.இல்லாவிட்டால் இது முப்பது/இருபது நபர்களை மட்டும் வைத்து இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டே இருக்கலாம்.

  ReplyDelete
 4. anonymous அவர்களே, நீங்கள் சொல்லுவது போல பல விபரமறிந்தவர்களிடம் நான்கு ஆண்டுகளாகக் கேட்டுக் கேட்டு புதிது புதிதாகப் பலரை அழைத்து முயற்சித்துக் கொண்டேதான் இருக்கிறோம். இதுவரை மொத்தமாக 600 பேர் வரை எங்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். அதில் இந்த நோக்கத்துக்கு உகந்த சரியான 30 பேர் என்பதே சிக்கல்தான். வந்த யாரும் புலமை இல்லாதவர்கள் அல்ல. பெரும் புலமையும் அறிவும் உலகத்தரமும் உடைய பலர் வந்தனர். அவர்களால் 16 வயது மாணவர்களுக்குப் புரியும் ஆங்கிலத்திலோ, தமிழிலோ பேசவே முடியவில்லை என்பதே கசப்பான உண்மை. தங்களால் இது இயலவில்லை என்பது கூட அவ்ர்களில் பலருக்கு உறைப்பதில்லை. சிறப்பாகப் பேசியதாகக் கருதிக் கொண்டு போகிறவர்கள் உண்டு. நாங்களும் அயராமல் தொடர்ந்து தேடுகிறோம். இங்கே இதைப் பதிந்ததே அந்த தேடலுக்கு உதவும் என்பதால்தான். உங்களுக்குத் தெரிந்த தகுதியான கருத்தாளர்கள் பட்டியல் இருந்தால் தயவுசெய்து gnanisankaran@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவுங்கள். அழைத்து முயற்சிப்போம். நன்றி. ஞாநி.

  ReplyDelete
 5. பொன்.முத்துக்குமார்Fri May 10, 08:20:00 PM GMT+5:30

  ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி இது போன்ற நிகழ்வுகளை நடத்துவதே தமிழகத்தில் அதிசயம்தான்.

  ஞாநி குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 6. Praises to Gnani to conduct such workshops and Badri to write about it. BTW, Badri, it should be "dais". Its a common mistake many of us do, probably because it can also be pronounced as "dias".

  ReplyDelete
  Replies
  1. Thanks. Corrected. Found another spelling mistake also and corrected the same.

   Delete
 7. அருமையான பகிர்வுகள்..
  மாணவர்களுக்கு சிறப்பாகப்பயனளிக்கும் நிகழ்வுகள்..பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..

  ReplyDelete