Friday, May 03, 2013

பேராசிரியர் நரசிம்மாச்சாரி - அஞ்சலி (வீடியோ)

பேராசிரியர் நரசிம்மாச்சாரி, சமஸ்கிருதத்திலும் வைணவத்திலும் மிகப்பெரிய அறிஞர். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். சென்னையில்தான் படித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்றார். விவேகாநந்தா கல்லூரியில் சமஸ்கிருதத் துறையில் பாடம் கற்பித்துவந்தார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத் துறையில் சேர்ந்தார். அதன்பின் சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே வைணவத் துறை என்ற துறையைத் தோற்றுவித்து, தான் ஓய்வுபெறும்வரை அந்தத் துறையின் தலைவராக இருந்தார். ஓய்வுபெற்றபின்னும் பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டு இரண்டாண்டுகள் அத்துறையின் தலைவராகவும் அதன்பின் எமரிடஸ் பேராசிரியராக மூன்றாண்டுகளும் இருந்தார்.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் The Oxford Centre for Hindu Studies-ல் வருகைதரு பேராசிரியராக இருந்தார்.

தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் இவர் ஆசுகவித் திறம் பெற்றவராக இருந்தார். (அதாவது இவ்விரண்டு மொழிகளில் எதுபற்றியும் உடனடியாக மரபுக் கவிதைகளை இயற்றும் திறமை பெற்றவர்.) இவருடைய மாணவர்கள்தான் இன்று முக்கியமான பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் சமஸ்கிருதம், வைணவம், வேதாந்தம் ஆகிய துறைகளில் பேராசிரியர்களாக இருந்துவருகிறார்கள்.

இவர் தன் 74வது வயதில் 6 மார்ச் 2013 அன்று உயிர் நீத்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தவர் முனைவர் தாண்டவன்,
வைணவத் துறைத் தலைவர் முனைவர் எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன்,
வைணவத்துறை முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் செயலர் டி.கே.பார்த்தசாரதி
ஆகியோர், முனைவர் நரசிம்மாச்சாரி படத் திறப்பு விழாவின்போது.
23 ஏப்ரல் 2013 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் வைணவத்துறை முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் நரசிம்மாச்சாரியின் பங்களிப்பு பற்றிப் பலரும் பேசினார்கள். துணைவேந்தர் தாண்டவன், நரசிம்மாச்சாரியின் படத்தைத் திறந்துவைத்தார். அந்த நிகழ்வின் வீடியோ சுமார் 2 மணி 41 நிமிடங்களை கீழே யூட்யூப் மூலம் தந்திருக்கிறேன். ஆர்வம் உள்ளவர்கள் முழுமையாகக் கேட்டுப் பாருங்கள். ஒரு மனிதர், தன் துறையில் என்னவெல்லாம் செய்திருக்கிறார், அவருடைய வீச்சு எவ்வளவானதாக இருந்துள்ளது என்பதுபற்றி ஓரளவுக்குப் புரியலாம்.



1 comment:

  1. நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். முழுதும் பார்த்த பின் எழுதுகிறேன். பேராசிரியர் நரசிம்மாச்சாரி அவர்களுக்கு என் வணக்கங்கள். நன்றி, பத் ரி சேஷாத்திரிக்கு.
    இன்னம்பூரான

    ReplyDelete