Friday, May 03, 2013

ஜமின் கொரட்டூர் - நாட்டு நலப்பணித் திட்டம்

ஜூன் 2012-ல் கிண்டி பொறியியல் கல்லூரியின் யூனிட்-11-ஐச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஜமின் கொரட்டூர் என்ற சிற்றூரில் தங்கள் முகாமை நடத்தினர். நாட்டு நலப்பணித் திட்டம் இந்தியாவின் அனைத்துக் கல்வி நிலையங்களிலும் நடக்கும் ஒன்றுதான். ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் ஒரு முகாம் நடத்தவேண்டும். இப்படியாக நாட்டில் பல பத்தாயிரம் என்.எஸ்.எஸ் முகாம்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

மேலே சொல்லப்பட்ட ஜமின் கொரட்டூர் முகாமை சற்று வித்தியாசமாக நடத்தவேண்டும் என்று அந்த யூனிட்டின் மாணவர்கள் விரும்பினர். நான் அவர்களுடன் இணைந்துகொண்டேன். மதுரை சமூக அறிவியல் கழகத்தில் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற திரு. ரெங்கசாமியின் உதவியை நாடிப் பெற்றோம்.

பொதுவான முகாமில் நடக்கும் செயல்களுடன், அந்த கிராமத்தை ஆவணப்படுத்தினால் என்ன என்று யோசித்தோம். ரெங்கசாமி மாணவர்களுக்கு வழிகாட்டினார். பங்கேற்பு முறைமூலம் கிராம மக்களுடன் உரையாடுவது எப்படி, அவர்களிடமிருந்து தகவல்களைப் பெறுவது எப்படி என்று முகாமிலேயே சொல்லிக்கொடுத்தார். ஏழு நாள்கள் அங்கே தங்கியிருந்த மாணவர்கள், ஜமின் கொரட்டூரின் சமூக வரைபடம், வாழ்வாதாரப் பட்டியல், கல்வி, சுகாதாரம், வழிபாட்டுத் தலங்கள், பெரும் பிரச்னைகள் என்று பலவற்றைப் பற்றியும் குறிப்புகள் எடுத்தனர். பல படங்களைப் பிடித்தனர்.

தினம் தினம் இரவு வெகுநேரம் வரை அவர்களுடன் உரையாடிவிட்டே நானும் ரெங்கசாமியும் சென்னை திரும்புவோம். மாணவர்கள் அதிகம் பேசுகிற ரகம் இல்லை. அதாவது கூட்டமாக இருக்கும்போது வாயைத் திறக்கமாட்டார்கள். தனித்தனியாக அல்லது ஓரிருவர் உள்ள குழுக்களாக இருக்கும்போது பேசுவதில் அவர்களுக்குத் தயக்கம் இருப்பதில்லை.

ஆவணப்படுத்தப்பட்ட தகவல்களைக் கொண்டு ஒரு சிறு நூல் ஒன்றைத் தயாரிக்கவேண்டும் என்பது எங்கள் திட்டமாக இருந்தது. மாணவர்கள் இணைந்து எழுதிக் கொடுத்ததை ரெங்கசாமியும் நானும் எடிட் செய்து ஓர் ஆவணத்தைத் தயார் செய்தோம். கடந்த சில மாதங்களுக்குமுன்பாகவே இந்த ஆவணம் முடிந்துவிட்டது என்றாலும் ஏதோ திருப்தி இல்லாமலேயே இருந்தது எனக்கு. ஆனால் நேரம் கடந்துகொண்டே இருந்தது. எனவே, போதும் என்று முடிவு செய்து சில பிரதிகளை மட்டும் அச்சாக்கி எடுத்துக்கொண்டேன்.


நேற்று மாலை அண்ணா பல்கலையில் இந்தப் புத்தகத்தை வெளியிட்டோம். இது விற்பனைக்கான புத்தகம் அல்ல. தனிச்சுற்றுக்கு மட்டுமே. இலவசமாக பிடிஎஃப் கோப்பை வெளியிடப்போகிறோம். இப்போது ஆவணம் தமிழில் உள்ளது. அடுத்து ஆங்கிலத்திலும் இதனைச் செய்ய உள்ளோம். புத்தக வெளியீட்டின்போது அண்ணா பல்கலையின்கீழ் உள்ள அனைத்து என்.எஸ்.எஸ் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பால்ராஜ், கிண்டி பொறியியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் குமார், என்.எஸ்.எஸ் யூனிட் 11-ன் பொறுப்பாளர் திரு. சண்முகம், யூனிட் 3-ன் பொறுப்பாளர் திரு. பாலமுருகன் ஆகியோர் இருந்தனர்.

சண்முகம், பாலமுருகன், பால்ராஜ், பத்ரி, குமார்
நிகழ்ச்சியின்போது மாணவர்கள் சரவணன், புவனேஷ்வர், காவ்யா, செந்தில் ஆகியோர் பேசினர். இவர்களில் சரவணன் மேடையில் பேசிப் பழகியவர். ஆனால் எனக்கு மிக மிக மகிழ்ச்சியைக் கொடுத்தது பிற மாணவர்கள் சரளமாக, பயமின்றி, தெளிவாகப் பேசியது.


காவ்யா, சரவணன், சதீஷ், புவனேஷ்
என் நோக்கம் இதுதான். வரும் ஆண்டுகளில் மேலும் பல என்.எஸ்.எஸ் அமைப்புகள் இதுபோன்ற திட்டத்தில் ஈடுபட்டால் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களை முறையாக ஆவணப்படுத்த முடியும். அடுத்து, கிராமங்களின் பிரச்னைகளைத் தெளிவாக எடுத்து முன்வைத்தால், அவற்றுக்கான தீர்வுகளைப் பலராலும் கொடுக்க முடியும். இது கல்வியில், சுகாதாரத்தில், அடிப்படைக் கட்டுமானத்தில், வாழ்வாதாரத்தில் என்று பலதரப்பட்ட துறைகளில் இருக்கும். இவை அனைத்திலும் மாணவர்களே பெரும் பங்காற்ற முடியும்.

அடுத்த மாதமும் பல முகாம்கள் நடக்க உள்ளன. அவைமூலம் மேலும் பல கிராமங்களை ஆவணப்படுத்த முயற்சி செய்வோம்.

6 comments:

  1. கோடிக்கணக்கில் செலவழித்தும், பெரிய பேராசிரியர்கள் பங்கெடுத்தும் நீங்கள் வெளியிட்ட புத்தகம் மாதிரி ஒன்றை யாரும் உருவாக்கவில்லை. இதை ஒரு மாதத்திற்கு முன் பூமணியின் அஞ்ஞாடி பற்றி எழுதியபோது இப்படிக் குறிப்பிட்டிருந்தேன் ஆண்டியையும் கருப்பியையும் பிடித்தாட்டிய கிறுக்கு அவரையும் பிடித்து ஆட்டுவதை உணர்ந்த இன்னொரு சந்தர்ப்பம். ஆண்டியைவிட பத்ரி இன்னும் மோசமான கிறுக்கு என்பதை பூந்தமல்லிக்கருகிலுள்ள ஜமீன் கொரட்டூர் என்ற கிராமத்தில் அவர் College of Engineering, Guindy, NSS மாணவர்களுடன் செலவிட்ட நேரத்தையும், மற்றதையும் சொல்லலாம். ஆண்டியை மற்றவர்கள் குறிப்பட்டது மாதிரி, வேலைவெட்டி இல்லாதவரா பத்ரி. ஒரு பிரியம். சமூக ஆர்வம்.

    அஞ்ஞாடி கதைப்படி ஆண்டி இறந்துவிட்டார்தாம். ஆனால் ஆண்டியைப் போன்ற ஆத்மாக்கள், ஊரெல்லாம் “நல்லது விதைத்துக் கொடுக்க” நம்மிடையே இருக்கின்றார்கள். கொஞ்சம் கண்ணைத் திறந்து பார்த்தால் பல ஆண்டிகளை நாம் பார்க்கலாம். விதைத்துச் செல்வதில் மட்டும் அவர்களுக்கு அலாதிப்பிரியம். அறுவடையை நாம் அனுபவித்துக்கொள்ளலாம்.
    விதைத்தது நீங்கள். உங்களுடன் சேர்ந்து பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சி

    ReplyDelete
  2. Dear Mr.Badri Seshadri,
    I do not know you, but have seen you in a THF meeting. I congratulate you on this commendable Initiative and shall gladly participate in any manner suitable and practical. I mail this from the UK. I am likely to visit Chennai in the near future.

    Innamburan@gmail.com


    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    ReplyDelete
  3. நல்ல விஷயம், சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    சிவா கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete
  4. Dear Badri,

    Hoping to see the report soon. A very important and excellent work by the student NSS volunteers, Mr. Rengasamy, you and everyone involved in this work.

    Best Regards,
    -Vijay

    ReplyDelete
  5. அருமையான ஐடியா. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. Great effort! Instead of printing or publishing it as a PDF, would it be better if you put it online as an editable wiki? Information can be updated, edited, added and corrected with time; and good formats can serve as templates for future documentations. Collectively they can become a hyperlinked meta document.

    ReplyDelete