Monday, November 04, 2013

மங்கள்யான்

நாளை (செவ்வாய்க்கிழமை) செவ்வாய் கிரகம் நோக்கிப் பயணப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (இஸ்ரோ) மங்கள்யான் என்ற விண்கலம் தன் இலக்கை வெற்றிகரமாக அடைய வாழ்த்துகிறேன். நாளை விண்ணில் ஏவப்பட்டதும் இந்த விண்கலம் பூமியைச் சுற்றத் தொடங்கும். அப்படியே வேகம் பெற்று, ஒரு கட்டத்தில் பூமியின் ஈர்ப்பு விசையை மீறிக்கொண்டு செவ்வாய் கிரகத்தை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பிக்கும். சுமார் ஒன்பது மாதங்கள் கழித்து செவ்வாயை நெருங்கும் இந்த விண்கலம், செவ்வாயின் ஈர்ப்பால் பிடிக்கப்பட்டு அந்தக் கிரகத்தைச் சுற்றத் தொடங்கும்.

2008-ல், சந்திரயான் விண்கலத்தை இஸ்ரோ சந்திரனை நோக்கிச் செலுத்தியபோது ஒரே பரபரப்பில் சந்திரயான் குறித்துப் பல பதிவுகளை எழுதியிருந்தேன். (அவையெல்லாம் இங்கே).

இப்போது அதிகம் பதிவுகள் எழுதுவதில்லை. ஆனால் மங்கள்யான் பாதையை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருப்பேன். மங்கள்யான் இந்தியத் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இதனை வெற்றிகரமாகச் செய்துமுடித்தால் நாம் சட்டை காலரை தைரியமாகத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம். இந்தியாவை உலக அரங்கில் நிறுவப்போவது அதன் அறிவியல் தொழில்நுட்ப சாதனைகள் மட்டுமே.

7 comments:

  1. உலக அரங்கில் நிறுவப்போவது அதன் அறிவியல் தொழில்நுட்ப சாதனைகள் மட்டுமே

    இந்த சாதனையில் (தொழில்நுட்பம்) சுயசார்பு எத்தனை சதவிகிதம்? கடன் வாங்கியது எத்தனை சதவிகிதம்.

    ReplyDelete
    Replies
    1. எத்தனை கடன் வாங்கினால் என்ன? காசா, பணமா? கடன் வாங்கினால் வட்டியுடன் திரும்பத் தரவேண்டும் என்பதற்கு? தொழில்நுட்பத்தை நான் புரிந்துகொண்டுவிட்டால் போதுமே? நியூட்டன் முதல் நேற்றுவரையிலான உலக அறிவியலாளர்களின் அறிவைக் கடன் வாங்கிக் காப்பியடித்துத்தான் நான் விஷயங்களைத் தெரிந்துகொள்கிறேன். இதில் எங்கிருந்து வெட்கம் வரவேண்டும்? எப்போதும் கப்பரையைத் தூக்கிக்கொண்டு சோற்றுக்குப் பிச்சையெடுப்பவன்தான் வெட்கப்படவேண்டும். அறிவைக் கடன் வாங்குபவன் பெருமையுடனேயே இருக்கலாம். உலகிலேயே அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமே இதுபோன்ற ஒன்றை நினைத்துக்கூடப் பார்க்கமுடியும் என்பது இந்தியாவில் பொறியியல் படித்த எனக்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒன்று.

      Delete
  2. நான் கேட்டது வேறு நீங்க புரிந்து கொண்டது வேறு.

    மங்கள்யான் தொழில்நுட்பம் என்பது முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளின் உழைப்பால் உருவான சுயசார்பா? இல்லை இதில் ரஷ்யா, அமெரிக்கா இவர்களின் தொழில் நுட்ப உதவி உள்ளதா? இல்லை வேறு மற்ற நாடுகளின் பங்களிப்பும் உள்ளதா?

    இனிமேல் பின்னூட்டம் என்பது தெளிவாக எழுதி வைத்து விட வேண்டும் என்பதை உணர்த்திய பதில் இது.

    ReplyDelete
    Replies
    1. வேறு நாடுகளின் பங்களிப்பு நேரடியாக இல்லை. சில பொருள்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்டவையாக இருக்கலாம்.

      Delete
  3. ஜோதிஜி, பத்ரி - மங்கள்யானின் கருவிகளில் சிலவற்றை முழுவதுமாக இந்தியாவிலேயே வடித்தெடுத்த முனைவுகளில், ஈடுபட்ட ஒரு பெங்களூர் அதிதொழில் நுட்ப முனைவோன் என் நண்பன்.

    இவன் சொல்வது:

    1. இஸ்ரோ விஞ்ஞானிகள் (+அதன் தொழில்நுட்ப வெளிக் கூட்டாளிகள்) ஏறக்குறைய முழுக்கமுழுக்க இதன் தொழில் நுட்பச் சாதனைகளை சாதித்திருக்கிறார்கள்.

    2. வெளி நாடுகளிலிருந்து (ரஷ்ய ஆர்எஃப்எஸ்ஏ உட்பட) நமக்கு கிடைத்த உதவி சொற்பம் என்பது கூட அதிகம். நிறைய முட்டுக்கட்டைகள்தாம் போட்டிருக்கிறார்கள்.

    3. டெலிமெட்ரி தொடர்புக்கு, கொஞ்சம் அமெரிக்கா உதவியிருக்கிறது. (இது ராக்கெட் மேலெழுப்பப்பட்டபின் செய்யப்பட்ட உதவி - பணம் வாங்கிக் கொண்டுதான்); இந்த உதவியில்லாவிட்டாலும் இஸ்ரோ தொலைதூர இயக்க மேலாண்மையை சரியாகவே செய்திருக்கும். அரசியல் + தொழில் நுட்பக் கூட்டுறவுக்காக இதனையும் செய்திருக்கிறோம்.

    4. முட்டுக்கட்டையிடப்பட்ட, அதி ரகசியமான தொழில் நுட்பங்களுக்கு, அதி தீவிரமாக ரிவர்ஸ் எஞ்சினீயரிங் செய்தும் சாதித்திருக்கிறார்கள்.

    5. பலமுறை, பலமுனைகளிலிருந்து சீன / சில முனைகளிலிருந்து பாகிஸ்தானிய/அமெரிக்க தொந்திரவுகளையும், ஊடுருவல்களையும் சமாளித்திருக்கிறார்கள்.

    6, அரசின் பல அமைச்சகங்களிலிருந்து எழுப்பப்பட்ட பிரச்சினைகளையும், அயோக்கிய அறிவுஜீவிகளின் பொய்ச் செய்திப் பரப்பல்களையும் அற்பத்தனத்தையும் மீறி, இதனைச் செய்திருக்கிறார்கள்.

    7. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக அசுர உழைப்பு உழைத்திருக்கிறார்கள். ( நாம் ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட் புளகாங்கிதங்களில் ஈடுபட்டு, தமிழீழத்தை வென்று ஸ்ரீலங்கா தமிழர்களுக்குக் கொடுப்பதில் படு பிஸியாகவே இருந்தோம், அப்போது)

    இவர்கள் சாதித்திருக்கிறார்கள். மெய்யாலுமே!

    எனக்கு உண்மையிலேயே பெருமைதான். :-)

    ReplyDelete
  4. ராமசாமி

    உங்கள் பெயரைப் பார்த்ததும் நீங்களாகத்தான் இருப்பீர்கள் என்று தளத்தை சொடுக்கினால் அஃதே.

    நன்றி. உங்கள் பதிலைப் பார்த்ததும் இதைப் பற்றி கொஞ்சம் விரிவாக உங்கள் தளத்தில் எழுதலாமே?

    நாம் ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட் புளகாங்கிதங்களில் ஈடுபட்டு, தமிழீழத்தை வென்று ஸ்ரீலங்கா தமிழர்களுக்குக் கொடுப்பதில் படு பிஸியாகவே இருந்தோம், அப்போது)

    புதுக்கோட்டையில் உள்ள பிரபல தொழில் நுட்ப கல்லூரியில் அக்கா மகன் படிக்கின்றார். ஆய்வுக்கூடங்கள் என்பது வருடந்தோறும் சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் வரும் போது மட்டும் இல்லாத கருவிகளை வாங்கி வைப்பார்களாம். வருகின்றவர்களுக்கும் சுற்றுலா ( கல்லூரி செலவில்) சுற்றுவதற்கே நேரம் போதாதாம்.

    ReplyDelete